”விமானம் இன்னும் இரண்டு மணி நேரம் தாமதமாகும். மும்பை விமானநிலையத்தில் ட்ராஃபிக் அதிகமானதால்…” என்று எதையோ சப்பைக்கட்டுக் கட்டிக்கொண்டிருக்க, கல்கத்தா விமானநிலையத்தில் சோர்வுடன் அமர்ந்திருந்தேன். மெம்பர்ஷிப் என்பதன் பயன், வயிறு வாடாமல் சோறு கிடைக்கும். மெல்ல நடந்து லவுஞ்சில் அமர்ந்தேன். கூட்டம் மெல்லமெல்ல சேர்ந்து, நாற்காலிகள் அமர்வதற்குக் கிடைப்பது அரிதாயின.
எக்ஸ்க்யூஸ்மீ என்றபடி அருகில் அமர்ந்தார் அவர். டீ ஷர்ட்டை மீறி தொந்தி மெலிந்த உடலுக்கு பொருத்தமில்லாமல் இருந்தது. முப்பது வயதுதான் இருக்கும். அதற்குள் ஒரு அயர்வு, வயோதிகக் களை மெல்லப்படர்ந்திருந்தது. சரவணன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். டெல்லியில் இருப்பவர்.
லெமூரியா பற்றி ஏதோ பேச்சு வந்தது. அப்படி ஒரு கண்டம் இருந்திருக்க சாத்தியமில்லை என்று சொன்னதில் முகம் வாடினார்.
“நாம ரொம்ப பழைய இனம்னு கொஞ்சம் சந்தோசப்பட்டிருந்தேன் சார். இல்லைங்கறீங்களே?”
“பழைய இனமாகவே இருக்கட்டும். என்ன சொல்ல வர்றீங்க.? நமது அடையாளங்கள் லெமூரியாவுல இருந்ததுன்னா? அதுனால , பிற மனிதர்களை விட, என்ன இப்ப வளர்ந்திருக்கோம்? “
“நம்ம மரபு .. அது பழசு சார்”
“மரபுன்னு எதைச் சொல்றீங்க?” என்றேன். தற்சமயம் மிகவும் வெறுக்கப்படும், தவறாக பயன்படுத்தப்படும் சொற்களில் இதுவும் ஒன்று.
”உதாரணமா நம்ம பழக்கங்கள். வீட்டுல பெரியவங்க வந்தா, எழுந்து நிக்கறது, வணக்கம் சொல்றது..”
“பழக்கங்கள் மட்டுமே மரபு இல்லை. சரவணன். அது ஒரு வெளிப்பாடு. சமூகத்தின் ஒட்டுமொத்தச் சிந்தனையின் வழி வந்த விழுமியங்கள்தாம் நாம் தேடவேண்டியது. அவற்றைக் கைக்கொள்கிறோமா, அடுத்த சந்ததிகளுக்கு அனுப்பி வைக்கிறோமா? அதுதான் முக்கியம்”
“இயற்கையோடு ஒன்றி வாழுதல் நம்ம முன்னோர்கள் சொன்ன ஒன்று. இப்ப பாருங்க, கழிவுகளை அகற்றுவது பெரும் பிரச்சனையாகப் போயிறுச்சு.. முந்தியெல்லாம் கால்வாய் பக்கம் ஒதுங்குவோம். கழிவுகள் கம்போஸ்ட் ஆகும், இல்ல பன்னி திங்கும். அதனோட கழிவு, வயலுக்கு உரம். இப்ப எங்க? வீட்டுக்கு வீடு இந்த டாய்லெட் கட்டி வைக்கறது எல்லாம் சரியில்ல”
சற்றே திகைத்துப் போனேன் “ மன்னிக்கணும். இது மரபு இல்லை. வாய்க்கால் பக்கம் ஒதுங்கும் பழக்கம் , சுகாதாரத்திற்கு பெரும் சவாலாக இருந்தது. அன்று அதுதான் சாத்தியப்பட்டது. இன்று அதனைத் தாண்டி வரச் சிந்திப்பது , செயலாற்றுவது என்பதுதான் மரபு தந்த வளர்ச்சிச் சிந்தனை. பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவில, கால வகையினனானே” இதுதான் மரபு”
அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார் “ இல்ல சார். இயற்கையைத் தாண்டி செய்கிற எதுவும் திருப்பி அடிக்கும். செயற்கை உரங்களால…”
“அதைத்தாண்டி எப்படிப் போவதுன்னு சிந்திப்பதுதான் மரபுங்கறேன்” என்றேன் வலியுறுத்தி. “நமது மரபு என்பது எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளச் சொல்வதல்ல. கேள்வி கேள் என்கிறன உபநிஷத்துகள். பயமற்றிரு என்கின்றன பழம் நூல்கள். என்னை அப்படியே பின்பற்று, கேள்வி கேட்காதே என்று அவை சொல்லவில்லை. “
“எல்லாரும் கேள்வி கேட்டா என்ன ஆகும்?! ஒண்ணும் நடக்காது. ஒரு தலைவர் இன்றி எதுவும் நடந்துவிட முடியாது”
“இந்த நாட்டின் மரபு ஜனநாயகத்துவமானது. தலைவர்கள் வேண்டும். ஒரேயொரு தலைவர் இல்லை. அத்தனை தலைவர்களும் சமூகத்தை கண்ணுக்குத் தெரியாத கட்டமைப்பு ஒன்றின் சிந்தனையாக்கத்தில் செலுத்தவேண்டும். தனி உறுப்பினர்கள் கட்டமைப்ப்பின் பொதுப்பயனுக்கு உழைக்கவும், அப்பொதுஉழைப்பின் பயனை நுகரவும் வேண்டும். இந்த பொதுக் கட்டமைப்பின் செங்கற்கள் , பொதுச் சிந்தனைகள், நீங்கள் சொன்ன விழுமியங்கள். கட்டமைப்பு – கலாச்சாரம், மரபு”
“இது சாத்தியமில்லை. சமூகக் கட்டமைப்பு கண்முன் தெரியவேண்டும்,. அது சட்டம், குழு ஒழுங்குக் கட்டுப்பாடு, மரபு. தலைவர்கள் இன்றி இது சாத்தியமில்லை. சீனாவைப் பாருங்க”
“சீனா” என்றேன் அயர்வோடு “ இப்படிப்பட்ட பொதுக்கட்டமைப்பில் இருந்த ஒரு பெரும் கலாச்சாரம். கலாச்சாரப் புரட்சி என்பதன் பின் அதன் கட்டுமானம் உடைந்து, வெளியே இருக்கும் மதிள்கள், சாலைகள் உறுதியாயிருக்கின்றன. உள்ளே வீடுகள் வெறுமையாயிருக்கின்றன. தலைவர்கள் நம்மைத் தூண்ட முடியுமே தவிர , ஜனநாயகத்தில் அவர்களால் புது மரபை உண்டாக்க முடியாது. அப்படி முயன்றால் அது பெரும் அழிவைத்தான் தேடித்தரும்.”
“இதற்கு ஆதாரங்கள் இருக்கா சார்?” என்றார் சரவணன் சற்றே ஆவேசமாக.
“குழும உளவியல் என்பது நீட்சேயில் தொடங்கி, ப்ராய்டு மூலம் வளர்ந்து இன்றைய உளவியலில் பெருமளவில் பேசப்படுகிற ஒன்று. அதில் ஒரு கோட்பாடு இவ்வாறு செல்கிறது “ குழும சிந்தனை என ஒன்று அமையும்போது, அதன் எல்லைகள் குழுமத்தால் வகுக்கப்பட்டு, தனி உறுப்பினர்களின் ஆழ்மனத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றன. தலைவர்கள் இல்லாது போயினும், குழும சிந்தனைகளால் வடிவாக்கப்பட்ட ஒரு பிரதி , குழுமத்திற்குக் கிடைக்கிறது, அது வழிநடத்தும். இந்த சிந்தனைவடிவாக்கப் பிரதியின் ஒரு பிம்பம் நாம் கடைப்பிடிக்கும் மரபு. “
அவர் சற்றே சிந்தித்தார் “ அப்ப நான் சொன்ன மரியாதை நிமித்தங்கள்? அவை மரபில்லையா? அதுவும் அந்த சிந்தனை செயலாக்கத்தின் விளைவுதானே?”
”அதுவே மரபல்ல. வணக்கம் எனச் சொல்வது ஒரு மரபு சார்ந்த செயல். அது கைகள் கூப்பியபடி செய்தல், ஒரு கையை மார்பில் வைத்து லேசாகத்ட் தலை குனிதல் எனப் பல வகையில் மாறும். ஒவ்வொரு மாற்றத்தின் பின்னும் ஒரு காரணம் நிற்கும். அதன் மூலம் ஏன்? எனக் கேட்கப்பட்டு, சமூகத்தின் ப்ரக்ஞையில் சேர்க்கப்படும். காலவெள்ளத்தில் சில அடித்துப் போகும். சில மாறுபடும். இந்த மாற்றம் சிந்திக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவேண்டும். அது மரபின் சட்டவடிவை இளக்கவோ, இறுக்கவோ செய்யும். முக்கியமாக இதில் காணப்படவேண்டியது, என்ன செயல்/ சிந்தனை மற்றும் அதன் தேவை. உதாரணமாக கை கூப்பிய வணக்கம், இது நமது மரபின் செயல். இதனை விடுத்து கை குலுக்குவது எந்த இடத்தில் தேவை என்பதை நம் சிந்தனை, தனது குழும சிந்தனையில் பொருத்திப்பார்க்கிறது. வீட்டில் வந்திருக்கும் பெரியவர் என்றால் மரபின் வழி நடக்கத் தூண்டவும், அலுவலகத்தில் வந்திருக்கும் வெளிநாட்டவர் என்றால் கை குலுக்கும் செயலைத் தூண்டவும் சிந்தனை தூண்டுகிறது.. இதேதான் உணவுப்பழக்கம், பிறரிடம் உரையாடல் விதம் என்பதும்”
“நீங்கள் சொல்வதை முழுதும் ஏற்க முடியவில்லை. குழுமச் சிந்தனையின் ஆழமான தாக்குதல் பற்றி எனக்கு அதிகம் தெரியாது” என்றார் அவர் சிந்தனை வயப்பட்டவாறே. நான் சொல்வதை ஏற்க ஒரு தயக்கம், ஈகோவால் வந்திருக்கலாம். புத்தகங்களில் மிக எளிமையானதாக டேனியல் கோல்மேனின் Vital Lies & Simple Truth என்பதைப் பற்றி அவரிடம் சொன்னேன். குறித்துக்கொண்டிருக்கையில் டெல்லி விமான அழைப்பு வந்துவிட ,விடைபெற்றார்.
விமானங்கள் எத்திசையில் பறப்பினும், இறஙகினும், சில வழிமுறைகளை அனைத்தும் கடைப்பிடித்தே ஆகவேண்டும். அது விமான மரபு.