அமெரிக்க அதிபர் அரசியல் – 4

7.  அதிபரின் வாரிசுகள்

 “அதிபரின் வாரிசுகளா?  அவருடைய மனைவி/கணவர், மக்கள்தானே அவரது வாரிசுகள்?  இதைப்பற்றி அமெரிக்க அரசியல் அமைப்பு ஏன் பேசவேண்டும்?” என்ற குழப்பம் தோன்றுகிறதா?

குழம்பவே வேண்டாம்!  அரசியல் அமைப்பு அமெரிக்க அதிபரின் குடும்பவாரிசுகளைப்பற்றிப் பேசவில்லை.  அமெரிக்க அதிபர் செயலிழந்துவிட்டாலோ, அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டாலோ, அவர் பதவியிலிருக்கும்போது இறந்துவிட்டாலோ என்னசெய்வது?  யார் அதிபராகப் பதவியேற்பார்கள் என்று தெரிந்துகொள்ள்வேண்டாமா?  அதைத்தான் அரசியலமைப்பு சொல்கிறது.

“இதைப்பற்றி அரசியல் அமைப்பு எதற்குச் சொல்லவேண்டும்? அதிபருக்குப்பிறகு துணை அதிபர்தானே?” என்று கேலிசெய்யத் தோன்றுகிறதல்லவா!

துணை அதிபர் என்று ஒருபதவி இருந்தால்தானே அவர் அதிபருக்குப்பிறகு அவரது பதவியை ஏற்கமுடியும்? எனவே அதைப்பற்றிச் சொல்லவேண்டாமா?  அது போகட்டும், ஏடாகூடமாக நடக்கக்கூடாதது நடந்து, அதிபரும், துணை அதிபரும் ஒரேசமயத்தில்…

அப்படி நடந்தால், அனைவரும் சிண்டைப்பிய்த்துக்கொண்டு நிற்கக்கூடாது, உள்நாட்டுக்குழப்பம் விளையக்கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்த அமெரிக்கத்தந்தையர் இதையும் சிந்தித்துப்பார்த்து, அமெரிக்க அரசியல் அமைப்பில் எழுதிவைத்துவிட்டனர்.

அமெரிக்க அரசியல் சாசனம், பிரிவு 2, பகுதி 1, உட்பகுதி 1 கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

செயலாற்றும் உரிமை[அதிகாரம்] அமெரிக்க ஒருங்கிணைந்த நாடுகளின் அதிபரிடம் அளிக்கப்படும்.  அவர் அப்பதவியை நான்கு ஆண்டுகள் வகிப்பார், மேலும், அவர் ஒரு துணைத்தலைவருடன் அதே காலத்திற்குக் தேர்ந்தெடுக்கப்படுவார்:[1]

ஒவ்வொரு மாநிலங்களும் அதனுடைய சட்டமன்றம் சொல்வதற்கேற்ப அந்த மாநிலத்தின் பிரதிநிதிகளும், செனட்டர்களும் சேர்ந்த எண்ணிக்கையுடைய வாக்காளர்களை[எலெக்டர்கள்] நியமிக்கலாம், ஆனால், அம்மாநிலத்தின் செனட்டர்களோ, பிரதிநிதிகளோ, அமெரிக்க ஒருங்கிணைந்த நாட்டிலுள்ள இலாபமீட்டும் அறக்கட்டளைகளில் பதவிவகிக்கும் எவரேனுமோ, வாக்காளர்களாக நியமிக்கப்படக்கூடாது என்று இரண்டாம் உட்பிரிவு கூறுகிறது.[2]

electoral college

இதிலிருந்து அமெரிக்க அதிபர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல், மாநிலங்களால் நியமிக்கப்பட்ட வாக்காளார்[எலெக்டர்]குழாத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதும், அதோடு பதவியில் உள்ளவர்களும், பசையுள்ளவர்களும் உட்புகுந்து, தங்களுக்கு வேண்டியவர்களை வாக்காளர்களாக நியமித்துவிடக்கூடாது என்பதிலும் அமெரிக்கத்தந்தையர் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது.

ஒரொரு மாநிலத்தின் வாக்காளர்குழாத்தில் எத்தனைவாக்காளர்கள் இருக்கவேண்டும் என்பதை அரசியல் அமைப்பு தீர்மானித்துவிட்டது.  அந்த வாக்காளர்குழாம் அதிபராகத் தேர்தலுக்குநிற்கும் எவருக்குச் செல்லவேண்டும் என்பதை அம்மாநிலத்தின் வாக்காளர்கள்[வாக்களிக்கும் மக்கள்] தங்கள் வாக்குகள்மூலம் தீர்மானிக்கிறார்கள்.

தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல இருக்கிறது என்று தோன்றலாம். அது ஏன் அப்படித் தீர்மானிக்கப்பட்ட்து என்பது முன்பகுதிகளில் விளக்கப்பட்டது.

அதிபரின் வாரிசுகளைப்பற்றிச் சொல்லும்முன்னரே, அவரை எப்படிப் பதவியிலிருந்து நீக்குவது என்பதை முதலில் சொல்லுகிறது, அரசியல் அமைப்பின் இரண்டாம்பகுதியின் நான்காம் பிரிவு:

[நாட்டுத்]துரோகம், லஞ்சஊழல், அல்லது மற்ற பெருங்குற்றங்களும், சிறுகுற்றங்களும் செய்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு, அது உறுதியாக்கப்பட்டால், அமெரிக்காவின் அதிபர், துணைத்தலைவர், மற்ற குடியாட்சி அதிகாரிகள் அப்பதவியிலிருந்து விலக்கப்படுவர்.[3]

நன்றி:  familypedia.wikia.com

[அமெரிக்க அதிபரி ஆன்ட்ரூ ஜாக்ஸனை பதவிநீக்கம்செய்யமுயல்வது பற்றிய கேலிப்படம்] 

பழைய[மாஜி] அமெரிக்க அதிபர் பில் க்லின்ட்டனை வழக்குமன்றத்தில் பொய்யுரைத்தார் என்று அப்போதிருந்த பிரதிநிதிசபை குற்றம்சாட்டி உறுதிசெய்தது [impeached]. ஆயினும், அதை செனட்டும் உறுதிசெய்யாததால், பில் க்லின்ட்டன் பதவிநீக்கம் செய்யப்படவில்லை.[4],[5],[6]

அதற்குப் பிறகு வந்த பன்னிரண்டாவது திருத்தம் ஒரு முக்கியமான ஷரத்தைக் கொணர்ந்தது.  அமெரிக்க அதிபரும், துணை அதிபரும் ஒரே மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது என்பதுதான் அது.[7]  இதன்மூலம் ஒரு மாநிலத்திடமே அமெரிக்காவின் செயலாற்றும் உரிமை குவிந்துவிடக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது.

autoஅதிபரின் வாரிசுகளைப் பற்றிச் சொல்லப்போவதாகச் சொல்லிவிட்டு — ஊருக்குப்புதிதாக வருபவர்களை நேர்வழியில் போகுமிடத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்க்காமல் இழுத்தடிக்கும் ஒருசில ஆட்டோ-டாக்சி ஓட்டுனர்களைப்போல [ஆட்டோ/டாக்சி ஓட்டுனர்கள் மன்னிக்க; இது தமிழகத்தில் மட்டும் நடக்கவில்லை, இந்தியவின் மற்ற மாகாணங்களிலும், உலகின் பலநாடுகளிலும் நடக்கிறது!] எங்கெங்கோ இழுத்தடிக்கப்படுவதுபோல உணரவேண்டாம்.  அமெரிக்க அரசியல் அமைப்பைப்பற்றி அறியவிரும்புவர்களுக்கு அதை நன்றாகச் சுட்டிக்[ற்றி]காட்ட வேண்டுமல்லவா!

சொல்ல எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம் அரசியல் அமைப்பின் இருபதாம் திருத்தத்தில் சொல்லப்பட்டதால், ஒவ்வொரு திருத்தமாக இழுத்தடிக்க —  மன்னிக்க – ஒவ்வொன்றாகச் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அமெரிக்க அதிபராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.  அதாவது, நவம்பர் இரண்டாம் செவ்வாய்க்கிழமை அதிபர் தேர்தல் முடிந்து இன்னார் புதிய அதிபர் என்றும் தெரிந்துவிட்டது.  அதென்ன நவம்பர் மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை என்று மனதுள் கேள்வி எழுகிறதா?  அப்பொழுதான் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவேண்டும் என்பது விதி — இல்லையில்லை, சட்டம்!  தேர்தல் முடிந்தபின்வரும் ஜனவரி இருபதாம் தேதி அதிபர் பதவி ஏற்பார்.  அதற்குள் அவர் இறந்துவிட்டால் என்ன செய்வது? அவரது வாரிசு யார்?

அதைத்தான் இருபதாம் திருத்தம் சொல்கிறது:

அதிபரின் பதவிக்காலம் துவங்குமுன்னர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இறந்துவிட்டால், துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் [அமெரிக்க]அதிபராவார்.[8]

அமெரிக்க அதிபராக இருமுறையே தேர்ந்தெடுக்கப்படலாம் என்று இருபத்தியிரண்டாம் திருத்தம் சொல்கிறது.  இத்திருத்தம் 1947ல் கொண்டுவரப்பட்டு, 1951ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  அமெரிக்க அதிபர் எத்தனைமுறை தேர்ந்தெடுக்கப்படலாம் என்பது அரசியல்சாசனத்தில் முதலில் வரையறுக்கப்படாவிட்டாலும், முதல் அமெரிக்க அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் முதலானோர் தானாகவே இருமுறைக்குப்பின் போட்டியிடவில்லை.  எழுத்திலில்லாத இம்முறை கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளாக அமெரிக்க அதிபர்களால் கடைப்பிடிக்கப்பட்ட்து.

ஆயினும், அமெரிக்கா பொருளாதாரத்தில் மிகவும் பின்னடைவு அடைந்தபோது அதை மீட்டெடுத்தவர் என்பதாலும், இரண்டாம் உலகப்போர்க்காலத்தில் சிறந்தமுறையில் அமெரிக்காவை வழிநடத்திச்சென்று வெற்றிக்கு அடிகோலியவர் என்பதாலும், மூன்றாம்முறை தேர்தலுக்கு நின்ற பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர்காலத்திற்குப்பின்னர், மற்ற அதிபர்கள் கைப்பிடித்த இருமுறை பதவிக்காலமே சிறந்த ஒன்று என்றும், மக்களாட்சி நடந்துவரும் ஒரு நாடு தனிமனிதர் ஒருவரால் பல பத்தாண்டுகள் ஆளப்படக்கூடாது என்பதாலும், அதிபர் பதவியை இருமுறையோடு கட்டுப்படுத்தும் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

ஒருவழியாக அமெரிக்க அதிபரின் வாரிசுகளைச் சுட்டிக்காட்டும் இருபத்தைந்தாம் திருத்தத்திற்கு வந்துசேர்ந்துவிட்டோம். நிச்சயமாக வண்டி வேறுவழியில் செல்லாது, வாருங்கள்!

பிரிவு 1:  [அமெரிக்க] அதிபர் அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ, விலகினாலோ, இறந்தாலோ, துணைத்தலைவர் அதிபராவார்.

பிரிவு 2:  துணைத்தலைவர் பதவி காலியானால் {அவர் நீக்கப்பட்டாலோ, விலகினாலோ, இறந்தாலோ என்று புரிந்துகொள்ளவும்] அதிபர் ஒரு துணைத்தலைவரை நியமிப்பார். சட்டமன்றத்தின் இருபிரிவுகளும் அதை உறுதிசெய்யதபின் அவர் பதவியேற்பார்.

அமெரிக்கத் துணைத்தலைவர் செனட்டின் தலைவர்.  அவரை செனட்டின் ‘பிரசிடென்ட் ப்ரோ டெம்ப்போரே [President Pro Tempore]’ என்றழைக்கிறார்கள்.  பிரதிநிதிசபையின் தலைவர் ‘ஸ்பீக்கர் ஆஃப் த ஹவ்ஸ்’ என்றழைக்கப்படுகிறார்.  எனவே, துணைத்தலைவருக்கு அடுத்தபடி அதிகாரம் பெற்றவர் ‘ஸ்பீக்கர் ஆஃப் த ஹவ்ஸ்’தான்.

ஒருவேளை, அமெரிக்க அதிபரும், துணைத்தலைவரும் ஒரே சமயத்தில் விபத்துக்குள்ளாகிச் செயலிழந்துவிட்டால், ‘ஸ்பீக்கர் ஆஃப் த ஹவ்ஸ்’ அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்பார்.

ஒருவழியாக அமெரிக்க அதிபர்பற்றிய நெளிவுசுளிவுகளை ஓரளவு அறிந்துகொண்டோம்.  அடுத்தபடி, தேர்தலுக்குச் செல்வோம்.

8.  கட்சி வேட்பாளர்கள்

அமெரிக்க அதிபர் பதவிக்குவர என்னென்ன தகுதிகள் வேண்டும் என்றும், அதிபர் எப்பொழுது பதவிநீக்கம் செய்யப்படுவார், அதை எப்படிச் செய்வது, அவர் பதவியிலிருந்து நீங்கினாலோ, நீக்கப்பட்டாலோ, நீங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலோ, பதவியிலிருக்கும்போது இறந்தாலோ அவரது பதவிக்கு யார் வருவார்கள் என்றும் அறிந்துகொண்டோம்.

அப்படி அமெரிக்க அதிபர் பதவிக்குத் தேர்தலுக்குநிற்பவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அப்படி நடக்கும் தேர்தலில் மற்றநாடுகளுக்கும், அமெரிக்காவுக்குமுள்ள வேறுபாடு என்ன என்பதையும் கண்டுகொண்டோம்.

தேர்தல் என்றாலே பல அரசியல் கட்சிகள் இருக்கும்; எனவே, ஒவ்வொரு கட்சியிலிருந்தும் வேட்பாளர்கள் அப்பதவிக்குப் போட்டியிடுவார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே!

இந்தியாவைப் பொறுத்தவரை கட்சிமேலிடம் யார் அக்கட்சியின் வேட்பாளராக நிற்கவேண்டும் என்பதை முடிவுசெய்கிறது.  மற்றநாடுகளிலும் அப்படியே!  இப்படிச் செயல்படுவது, போட்டியிடவிரும்பும் பலரில், அல்லது சிலரில் சிறந்தவரை, வெற்றிபெறும்வாய்ப்பு உள்ளவரை, அக்கட்சி முடிவுசெய்ய உதவுகிறது என்பது கொள்கையளவில் உண்மையாகும்.  ஆனால், கட்சிச் செயலகத்தின் நான்கு சுவர்களுக்குள் என்னநடக்கிறது என்பதை நாம் ஊகித்தாலும், அதைப்பற்றி இங்கு விவாதிக்கவேண்டிய அவசியமோ, அதைத் தெரிந்துகொள்ளவேண்டிய ஆவலுமோ இங்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்புக்கு அப்பாற்பட்டது.

ஆகையால், அமெரிக்க அரசியலுக்குத் திரும்பிவருவோம்…

பிரித்தானியக் கட்சிகள்

ஆஸ்திரேலியக் கட்சிகள்

மக்களாட்சி நிலவும் எந்தநாட்டிலும் ஒருசில நாடளாவிய கட்சிகளும், பல பிராந்தியக் கட்சிகளும் உண்டு.  பிரிட்டனிலும், ஆஸ்திரேலியாவிலும் கிட்டத்தட்ட பதினேழு கட்சிகள் உள்ளன.  அவற்றில் பிரிட்டனைப் பொறுத்தவரை கன்செர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் முக்கியமான இரண்டு கட்சிகள்.  இவைதான் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன.  ஆஸ்திரேலியாவில் தற்பொழுது கூட்டணி ஆட்சி [இந்தியாவைப்போல] நடந்துவருகிறது.  அக்கூட்டணியில் உள்ள இரண்டு பெரிய கட்சிகள் லிபரல் பார்ட்டி ஆஃப் ஆஸ்திரேலியாவும், லிபரல் நேஷனல் பார்ட்டி ஆஃப் க்வீன்ஸ்லாந்தும் ஆகும்.  இதில் லிபரல் நேஷனல் பார்ட்டி ஆஃப் க்வீன்ஸ்லாந்து தமிழ்நாட்டின் திமுக, அதிமுக போன்ற பிராந்தீயக் கட்சி.  எதிர்க்கட்சி ஆஸ்திரேலியன் லேபர் பார்ட்டி.

 

அமெரிக்கக் கட்சிகள்

குடியரசுக் கட்சியும்[Republican party], மக்களாட்சிக் கட்சியும் [Democratic party]

அமெரிக்காவிலும் இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஐந்து நாடளாவிய கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சி உள்பட முப்பத்தியொன்று உதிரிக்கட்சிகளும் உள்ளன.  இவற்றில் பெரியவை டெமக்ராடிக் [ஜனநாயக, அல்லது மக்களாட்சி] கட்சியும், ரிபப்லிகன் [குடியரசு] கட்சியும் ஆகும்.  சிறிய கட்சிகளில் குறிப்பிடத் தகுந்தவை லிபர்டேரியன் கட்சி, க்ரீன் கட்சி.

  பிரபலமான அமெரிக்க அதிபர்களில் ஆபிரஹாம் லிங்கன், ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் புஷ் ஆகியோர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்; பிராங்க்லின் ரூஸ்வெல்ட், ஜான் கென்னடி, பில் க்லின்ட்டன், பராக் ஒபாமா ஆகியோர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

 

இதுபோக சுயேச்சையாக நின்று பதவிக்கு வருவபர்களும் உண்டு.  சுயேச்சையாக வெற்றிபெற்றவர்கள் பொதுவாக பெரிய கட்சிகளான இரண்டில் ஒன்றுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவது வழக்கமாக இருந்துவருகிறது.  அவர்கள் அதை முன்னமேயே அறிவித்தும் விடுவார்கள்.

அமெரிக்காவில் எந்தக்கட்சி வேட்பாளரையும் கட்சி மேலிடம் முடிவுசெய்வதில்லை.  அந்தந்தக் கட்சியைச் சார்ந்த மக்களே தீர்மானிக்கிறார்கள்.

வியப்பாக இருக்கிறதா?  ஆனால், அதுதான் உண்மை!  உதாரணமாக ஒரு மாநில ஆளுநர்[கவர்னர்] பதவிக்குப் போட்டியிட ஜனநாயகக் கட்சியின்சார்பாக நான்குபேரும், குடியரசுக் கட்சியின்சார்பாக மூன்றுபேரும் முடிவெடுத்துத் தேர்தல் ஆணையத்தில் மனுக்கொடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்..

“அதுகிடக்கட்டும்!  அமெரிக்க அதிபர் வேட்பாளரைப்பற்றிச் சொல்லாமல், மாநில ஆளுநரைப்பற்றி ஏன் சொல்கிறீர்?” என்று கேட்கிறீர்களா?  முதலில் சுலபமானதைச் சொன்னால், பின்பு கடினமானதைச் சொல்லலாம் என்றுதான்..

“இவ்வளவு குழப்பமான அரசியல் என்றால், யாரைய்யா ஓட்டுப்போடுவார்கள்?  கேட்கவே தலைசுற்றல் வருகிறது.” என்று அலுத்துக் கொள்கிறீர்களா?

வாஸ்தவம்தான்.

அதனால்தான் இங்கு இந்த கட்சிவேட்பாளர் தேர்தலில் அதிகமானவர் கலந்துகொள்வதில்லை.  அப்படி நினைத்து, இந்த ஆண்டு, அமெரிக்க அதிபர் கட்சி வேட்பாளர் தேர்தலுக்கு அரிசோனாவில் மாநிலம் முழுவதற்கும் அறுபதே ஓட்டுச்சாவடிகளே திறக்கப்பட்டன.  நினைப்புக்குமாறாக நிறையப்பேர் வாக்களிக்கவந்ததால், மணிக்கணக்காக [சில இடங்களில் ஐந்துமணிக்கும் மேலாகவே] வரிசையில் நிற்கவேண்டிவந்து, விசாரணைக்கமிஷன் அமைக்கவேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது![i]அரிசோனா கவர்னை டக் டூசி இந்நிலைமை ஏற்கத்தக்கதல்ல என்று பொங்கியெழுந்துள்ளார்.[ii]

அதுபோகட்டும், விஷயத்திற்கு வருவோம்:  ஓட்டுரிமையுள்ள வாக்காளர் அனைவரும் வாக்காளராகப் பதிவுசெய்யும்போது தாங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கவேண்டும். அரசு ஊழியர்களும் கட்சியில் இருக்கலாம், தடையில்லை.  இதற்காக கட்சிக்கு சந்தா எதுவும் செலுத்தவேண்டியதில்லை.  கட்சிவேட்பாளர் தேர்தலில் கலந்துகொள்ளவே இக்கேள்வி கேட்கப்படுகிறது.  எக்கட்சியையும் சாராதவர் என்றால் ‘சுயேச்சை’ என்றும் பதிந்துகொள்ளலாம்.  சில மாகாணங்களில் சுயேச்சை என்று பதிந்துகொண்டால், எக்கட்சி வேட்பாளர் தேர்ந்தலிலும் வாக்களிக்க இயலாது.

ஆனால் அரிசோனாவில், சுயேச்சைகள் எக்கட்சி வேட்பாளருக்குவேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.  ஆனால், ஒரு கட்சியைச்சேர்ந்தவர் என்று பதிந்தால் அக்கட்சி வேட்பாளர்களுக்குமட்டுமே வாக்களிக்க அனுமதி உண்டு.  இதைப் பாதி-திறந்த, அல்லது பாதி-மூடிய கட்சித் தேர்தல் [semi-open, or semi-closed primary] என்கிறார்கள்.  ஆயினும், அமெரிக்காவில் இருபத்தியிரண்டு மாநிலங்களில் கட்சிசார்பு பற்றிக் கேட்பது இல்லை.  இந்த மாகாணங்களில் திறந்த வேட்பாளர்தேர்வு [open primary]  நடைபெறுகிறது.[iii]

ஏன் இந்தக் குழப்பம் என்கிறீர்களா?  அதது, அந்தந்த மாநில உரிமையாகும்.  இவை பின்னால் மாற்றப்படவும் வாய்ப்பிருக்கிறது.  இந்த விஷயத்தில் ஒவ்வொரு மாநிலமும் தன்னுரிமை பெற்றிருக்கிறது.

இப்படிக் குழப்பினால் யாரும் ஓட்டுப்போட வரமாட்டார்கள் என்றுதான் “வராதோர் வாக்கு [absentee ballot]” என்றொன்று இருக்கிறது.  ஒட்டளிக்கப் பதிவு செய்துகொள்ளும்போதே, நமது முகவரியைக் கொடுத்து, வராதோர் வாக்குரிமை வேண்டும் என்று குறிப்பிட்டால், தேர்தலுக்குக் கிட்டத்தட்ட இருபது நாள்களுக்கு முன்னதாகவே வாக்குச்சீட்டு நம்மைத்தேடி நம் வீட்டிற்கே வரும்.  நமது வாக்கை அதில் குறித்து, அஞ்சலில்சேர்த்தால், அது தேர்தலகத்திற்கு  போய்ச்சேர்ந்துவிடும். தேர்தலன்று எந்த ஓட்டுச்சாவடிக்கும் செல்லவேண்டாம், வரிசையிலும் நிற்கவேண்டாம்.

“அட ராபணா, இப்படிச் செய்தால் வாக்கு ஊழல் நடக்காதா?  வேட்பாளர்கள் கையூட்டு அளித்து வாக்கைச் சேகரித்து வெற்றிபெற்றுவிட்டால்…?” என்ற கேள்வி எழத்தான் செய்யும்.  அதற்குக் கடுமையான தண்டனை உண்டு.  இவ்வித ஊழல்கள் நடந்ததாக இதுவரை செய்தி வரவில்லை.

இந்த முதல்நிலை வாக்கெடுப்புமூலம் கட்சி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அடுத்தபடியாக, அதிபர் தேர்தல் முதல்நிலை வாக்கெடுப்புபற்றியும், அதுபற்றிய சுவையான தகவல்களையும் தெரிந்துகொள்வோம்.

[தொடரும்]

பின்குறிப்புகள்:

[1]   The executive Power shall be vested in a President of the United States of America. He shall hold his Office during the Term of four Years, and, together with the Vice President, chosen for the same Term, be elected, as follows: —Article 2, Section 1, Clause 1 of the US Constitution.

[2]   Each State shall appoint, in such Manner as the Legislature thereof may direct, a Number of Electors, equal to the whole Number of Senators and Representatives to which the State may be entitled in the Congress: but no Senator or Representative, or Person holding an Office of Trust or Profit under the United States, shall be appointed an Elector —Article 2, Section 1, Clause 2  of the US Constitution.

[3]   The President, Vice President and all civil Officers of the United States, shall be removed from Office on Impeachment for, and Conviction of, Treason, Bribery, or other high Crimes and Misdemeanors — Article 2, Section 4, of the US Constitution.

[7]   The Electors shall meet in their respective states and vote by ballot for President and Vice-President, one of whom, at least, shall not be an inhabitant of the same state with themselves; … — — Amendment 12 of the US Constitution.

[8]   If, at the time fixed for the beginning of the term of the President, the President elect shall have died, the Vice President elect shall become President — — Amendment 20, Section 3 of the US Constitution.

[i]    https://www.washingtonpost.com/opinions/arizonas-shameful-voting-delays-highlight-a-wider-problem/2016/03/24/cacb5baa-f1f8-11e5-85a6-2132cf446d0a_story.html

In Maricopa County, the largest in the state with about 4.2 million people and home to Phoenix, officials reduced the number of places to vote from 200 in 2012 to 60 on Tuesday. That’s one polling place for every 21,000 voters.

Greg Stanton, Mayor of Phoenix, requested a federal investigation into misconduct allegations.

[ii]   “It’s unacceptable that many of them (Arizona voters) had to battle incredibly long lines. Our election officials must evaluate what went wrong and how they make sure it doesn’t happen again.”  —  Arizona Governor Doug Ducey

[iii]   https://www.governing.com/blogs/politics/Arizonas-Semi-Closed-Primary.html

States in which independents are free to vote in any party’s primary have semi-closed primaries. Generally, states with open primaries do not have registration by party. The voter registration form simply doesn’t ask the question about party. 22 states are like that.

One Reply to “அமெரிக்க அதிபர் அரசியல் – 4”

  1. சிறந்த விளக்கக் கட்டுரை. ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *