மணிபல்லவத் தீவில் ஒரு பெரிய மரத்தின்கீழே புற்களையும் இலைகளையும் பரப்பிய மணிமேகலா தெய்வம், மணிமேகலையின் துயில் கலைந்து விடாமல் அவளை மெதுவாகக் கிடத்தி, மெதுவாகத் தட்டிக்கொடுத்துவிட்டு, வான்வழியே மீண்டும் அந்த இடத்தைவிட்டு அகன்றது.
உதயகுமாரன் அரண்மனையில் பள்ளியறையிலிருந்து எழுந்தான். பொழுது புலரத்தொடங்கியிருந்தது. முந்தையதினம் அருந்திய தென்னையின் தேறல் அவனுக்கு இன்னும் மயக்கத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. சாமரம் வீசிக்கொண்டிருந்த காவலர்களை அகன்று செல்ல உத்தரவிட்டான். சிந்தையில் மணிமேகலையின் எழில் உருவம் வந்துபோந்தது.
“என்ன ஒரு வனப்பு அவளுக்கு! எட்டிவிடும் தூரத்தில் இருந்தாள். ஆனால் தொடமுடியாமல் போய்விட்டதே!” என்றெண்ணி, கால்களைத் தரையில் உதைத்தான். அலங்கார ஆடியின்முன் நின்று, தனது சிகையைக் கோதிவிட்டுக்கொண்டான். அடியில் தெரிந்த தனது உருவத்தைக் கண்டு,” உதயகுமாரா! ஏக்கமடையாதே. எங்கு போய்விடுவாள், உன் மணிமேகலை? எத்தனைநாள் அவளால் பளிங்குமண்டபத்திற்குள் அடைந்துகிடக்க முடியும்? இன்றைய பொழுது பறந்தால், பறவை கூண்டைவிட்டு வெளியில் வரத்தானே செய்யும்? அப்போது இந்த வல்லூறின் கையில் சிக்காமலா போய்விடும்?” என்று எக்களித்தான்.
‘உதயகுமாரா‘என்று ஒரு பெண்குரல் அழைப்பதுபோலக் கேட்டது.
“என்னை என் படுக்கையறையில்வந்து பெயர் சொல்லி அழைக்கும் பெண் யாராக இருக்கும்?” என்று கண்ணாடியில் பார்த்தான். ஒருவரையும் காணாது வியந்துபோன இளவரசன் திரும்பினான்.
ஆகாயவெளியில் ஒரு பெண் உருவம் மிதந்துகொண்டிருந்தது. அதுதான் தன்னை அழைத்தது என்பதை உதயகுமாரன் உணர்ந்துகொண்டான். ஒரு அமானிட உருவத்தைக் கண்ணுற்றதும் அவன் நெற்றி வியர்த்தது. வார்த்தைகள் தடுமாறின.
“அஞ்சவேண்டாம் மன்னர் மகனே! நான் மணிமேகலா தெய்வம். நான் சொல்வதைக் கேள். ஓர் அரசனின் செங்கோல் நிலைமாறினால் ஒன்பதுகோள்களும் தத்தம் நிலையிலிருந்து மாறிவிடும். மழை தான் பெய்யவேண்டிய பருவங்களில் முறையாகப் பெய்யாது பொய்த்துவிடும். மழை வளம் குன்றினால் இந்த உலகில் உயிர்களுக்கு வாழ வழி ஏது? மன்னுயிர்கள் வாடினால் மன்னற்கு அழகாமோ? மக்கள் உயிர் மன்னனின் உயிர் அல்லவா? எனவே உயிரினும் ஓம்பப்பட வேண்டிய ஒழுக்கத்திலிருந்து விலகாமல் மாதவியின் புதல்வியும், இளம்வயதில் துறவறம் பூண்டவளுமான மணிமேகலைமீது நீகொண்ட மோகத்தைக் கொன்றுவிடு,”” என்றது.
உதயகுமாரன் மறுபேச்சு பேசுவதற்குமுன்பு மணிமேகலா தெய்வம் காற்றில் மறைந்து உவவனம் புகுந்தது.
சுதமதி ஒரு கல்லால் செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்துகொண்டிருந்தாள்.
மணிமேகலா தெய்வம் அவள் அருகில் சென்று மெதுவாக அவளைத் தட்டி எழுப்பியது. உறக்கம் நீங்கி எழுந்த சுதமதி, தனது முன்னாள் காற்றில் அசைந்தபடி நிற்கும் பெண்தெய்வத்தைக் கண்டாள்.
விஞ்சகனுடன் வான்வெளியில் பறந்து சென்றவள்தான் என்றாலும் உறக்கம் களைந்த நிலையில் கண்முன் தோன்றும் உருவம் காற்றில் அசைவதைக் கண்டு கொஞ்சம் திடுக்கிட்டுப்போனாள். கண்கள் அச்சத்தில் அலைந்தன.
“அச்சம் வேண்டாம் சுதமதி. என் பெயர் மணிமேகலா. பெண்தெய்வம். இந்த ஊரில் எடுக்கப்படவிருக்கும் இந்திரவிழாவைக் காண்பதற்காக வந்திருக்கிறேன். நேற்று நீயும் மாதவியும் என்னைப் பார்த்தீர்களே. மாதவியின் மகள் மணிமேகலை இந்த நாட்டின் அரசகுமாரன்மூலம் அடைந்த இன்னல்களை மணிமேகலை சொல்லக் கேள்விபட்டேன். அறிந்துகொண்டேன். அவளை உதயகுமாரன் கைகளிலிருந்து காப்பாற்ற முடிவுசெய்தேன். ஆளரவமற்ற தீவு ஒன்று இந்த நகரின் தென்திசையில் முப்பதுயோசனை தூரத்தில் உள்ளது. மணிபல்லவம் என்பது அதன் பெயர். அந்தத் தீவில் மணிமேகலையைக் கொண்டுவிட்டு வந்திருக்கிறேன்.”
சுதமதி மணிமேகலா தெய்வத்தை விழுந்து வணங்கினாள்.
“உந்தன் கருணையை எப்படிப் போற்றுவேன் தாயே? மணிமேகலைக்கு நல்ல ஒரு புகலிடம் அளித்துள்ளீர்கள். இந்த நன்றியை நான் எங்கனம் மறப்பேன்? அவள் மீண்டும் இங்கே வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதா தாயே?” என்று வினவினாள்.
“சுதமதி! மணிமேகலை ஏழு நாட்கள் அந்த மணிபல்லவத் தீவில் இருப்பாள். தனது பிறப்பின் இரகசியம் அறிந்துகொள்வாள். தனது முற்பிறப்பின் இரகசியமும் அவள் அறிய நேரிடும். அதன்பிறகு தனது உருவத்தை மறைத்துக்கொண்டு இங்கே வருவாள். பிறருக்கு அவள் தெரியமாட்டாளே தவிர உன் கண்களுக்குத் தெரிவாள். ஹ்ம்! அவள் திரும்பி வரும் நல்லநாளில் என்னவெல்லாம் நடக்கப்போகிறது தெரியுமா?”
“என்னவெல்லாம் நடக்கப் போகிறது தாயே? தீங்கு எதுவும் நேராதே?”
“பொறுத்திருந்து பார் சுதமதி. எனக்கு நீ ஒரு உதவி செய்யவேண்டும். நேற்றிலிருந்து உன்னையும் மணிமேகலையையும் காணாது மாதவி அங்கே வருந்திக்கொண்டிருக்கிறாள். நீ அவளிடம் சென்று, மணிமேகலை என்னுடைய பாதுகாப்பில் மணிபல்லவத் தீவில் இருக்கும் சேதியைக் கூறு. அவளுக்கு ஏற்கனவே என்னைப்பற்றித் தெரியும். இந்தப் புகார்நகரின்கண் மணிமேகலா என்ற பெண் தெய்வம் உலாவுந்தது என்பதை அறிந்த கோவலன் என்னைப்பற்றி மாதவியிடம் கூறியிருக்கிறான். இதன் பொருட்டே இருவரும் தங்கள் புதல்விக்கு என் பெயரைச் சூட்டியுள்ளனர். அன்றிரவு நான் மாதவியின் கனவில் தோன்றி, ’நீ பெற்றிருப்பது சாதாரணப் பெண்மகவு இல்லை. இவள் வளர்ந்து பெரியவளானதும் காமத்தைவென்று, இந்த உலகிற்கு நன்மையளிக்கவல்ல மிகப்பெரிய பெண்துறவியாக விளங்குவாள்!’ என்று கூறினேன். இவற்றையெல்லாம் மாதவிக்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்து. எல்லாம் நல்லதாகவே முடியும்”,” என்று கூறிவிட்டு அந்தப் பெண்தெய்வம் காற்றில் மறைந்தது.
மணிமேகலா தெய்வம் கிளம்பிச் சென்றதும், மணிமேகலையின் வாழ்வில் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று அவளுடைய அமைதியைக் குலைத்துக்கொண்டிருப்பதை எண்ணி சுதமதி மனம் வெதும்பி நின்றாள்.
பொழுது புலரத் தொடங்கிவிட்டது. அதன் அடையாளங்கள்தான் எத்தனை? எத்தனை?
அதிகாலையில் நடனப்பள்ளியில் மாணவிகள் தத்தம் ஆசிரியர்களிடம் நடனம்பயில்வதற்கு வகுப்புகளைத் துவக்கிவிட்டனர். மாணவிகள் அரைமண்டியிட்டு, அபிநயம்செய்து ,தங்கள் கரங்களை தாமரை மலர்களைப்போல விரித்து ஆசிரியர்களுக்கு வணக்கம்செய்தனர். அவர்கள் ஆடுவதால் சலங்கைகளின் ஜல் ஜல் ஓசை கேட்கத் தொடங்கியது. இசைக்கருவிகளான யாழ், குயிலுவக் கருவிகள் முதலியன முழங்கத் தொடங்கின. யாழின் இசையுடன் பெண்கள் பாடும் பாடலும் இணைந்து ஒலித்தது.
முந்தைய இரவுகளில் பரத்தையர்பின்னால் சென்றதைப் பொறுக்காமல் கணவன்மாருடன் ஊடல்கொண்டு, வழக்காடி, நள்ளிரவிற்கு மேல் ஊடல்நீங்கிய மகளிர் விடிகாலையில் கண்கள் அயர்ந்தமையால், விழியாமல் தத்தம் கணவன்மார்களின் தழுவலில் மரனையில் படுத்துகிடந்தனர்.
முதல்நாள் மாலைமுழுவதும் ஆட்டமும் பாட்டமுமாக சிறுதேர் இழுத்து விளையாடிய சிறுவர்கள் அனைவரும் உடல் அசதியில் உறங்கிக் கிடந்தனர். தளர்நடை புரியும் இளம்பாலகர்கள் மார்பில் ஐம்படைத் தாலியணிந்து உறங்கும் அழகே தனிதான். அப்படியே எவ்வளவு நேரம்தான் தூங்கவிடுவது? வேம்பும் வெண்சிறுகடுகும் சேர்த்து அரைத்த கடிப்பகை என்றழைக்கப்படும் கலவையை இல்லக் காவல்பெண்கள் பாலகர்கள் தலையில் பூசினர். காற்று-கருப்பு அண்டாது என்பது அவர்களது நம்பிக்கை. தூக்கத்தில் அசையும் பாலகர்களுக்கு நறுமணம்வீசும் அகிற்புகையைக் காட்டினர்.
கோவில்மாடங்களில் வாழும் புறாக்களும், நீர்நிலைகளில் வாழும் நீர்ப்பறவைகளும், பொழில்களில் வாழும் பறவைகளும், மாலைப்பொழுதில் கொட்டமடித்த கூச்சலெல்லாம் அடங்கி, தத்தம் இடங்களில் உறங்கிக்கொண்டிருக்கும், வைகறைக்கு முந்தைய இடையாமம் அது.
விடியலின் அடையாளம் துவங்கியதால் அரண்மனையில் நாழிகைக் கணக்கிடும் கருவிகள்மூலம் நேரத்தைக் கணக்கிட்டுச் சொல்வோர் ஏற்படுத்திய ஓசையையும், யானைக் கொட்டாரங்களில் விடிகின்றபொழுதில் வேண்டிய உணவு கிடைக்காமல் பசியினால் யானைகள் எழுப்பிய பிளிறலின் ஓசையையும், தேரோடும் பெரிய வீதிகளிலும், சின்னச்சின்ன முடுக்குச் சந்துகளில் இரவுக்காவலர்கள் எழுப்பிய துடியொலியையும், பொங்கும் ஓசையை ஏற்படுத்தும் கடலினுள் கட்டுமரங்களில் சென்று மீன்தொழில் செய்யும் பரதவர்கள் கடலிலிருந்து மீண்டுவந்ததும் சென்ற களைப்பு நீங்க தொப்பி எனப்படும் நெல்லிலிருந்து எடுக்கப்படும் ஒருவகைக் கள்ளை அருந்தி தம்மை மறந்து பாடும் பாடலின் ஓசையையும், மகப்பேறு முடிந்து சில நாட்களே ஆன பெண்கள் புதல்வர்களை ஈன்றதால் ஏற்படும் புனிறு எனப்படும் தீட்டு அகல்வதற்காகப் காப்பிற்காகத் தலையில் வேம்பின் கடிப்பகையையும், வெண்கடுகின் கடிப்பகையையும் பூசிக்கொண்டு பின்னால் காவல் மகளிர் தூபம் போட்டுக்கொண்டுவர குளங்களில் சென்று இடையாமத்தில் குளிக்கும் ஓசையையும், பகைமை பாராட்டும் பகைவர்கள் இல்லாமல் புலிகளின் கூட்டத்திற்கு நிகராக உள்ள படைவீர்கள் பூதம் உறையும் நான்கு சந்து கூடும் சதுக்கம் எனப்படும் இடத்தில் ‘மன்னவன் வாழ்க’ என்ற பெரும் கோஷத்துடன் பலியிடுவதற்காக எழுப்பிய ஓசையையும், மகப்பேறுகொண்ட மகளிர், எதற்கும் சொல்பேச்சு கேளாத பாலகர்கள், முதன்முறையாகச் சூல்கொண்ட பெண்கள், ஆறாத புண்களையுடையோர் ஆகியோரது துன்பத்தைத் தீர்க்கும்பொருட்டு மந்திரவாதிகள் அந்தந்த மன்றங்களில் உள்ள பேய்கள் அவர்கள்கொண்ட துயரத்தை ஏற்றுக்கொள்வதற்காக நின்றவண்ணம் எறிகின்ற பலியினைப் போடும்போது முழங்கும் பலத்த ஓசையையும் கேட்டு, மயிற்பீலியின் காம்புகளைப்போன்ற பற்களின் வரிசையை உடைய சுதமதி கலங்கிப்போய், பூசியதுபோலக் காணப்படும் அந்த இடையாம இரவுநேரத்தில் உவவனத்தை விட்டு நீங்கினாள்.
மணிமேகலா தெய்வம் கூறிய சக்கரவாளக் கோட்டதிற்குள் நுழைந்ததும் சுதமதி சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒரு பெரிய கம்பமும், அந்தக் கம்பத்தில் ஒரு கம்பத்தெய்வமும் இருப்பதைக் கண்டாள். மை எழுதப்பட்ட சுதமதியின் கண்கள் மயங்கின. அப்போது அந்தக் கம்பத்தெய்வம் வருவதை உரைக்கும் த்பஈயம் கூறத் தொடங்கியது.
“முற்பிறவியில் அசோதர நகரத்தின் மன்னன் இரவிவர்மன் என்பவனுடைய ஒரே மகளாக இருந்தவளே! புரவிப் படையைகொண்ட கச்சைய நகரத்தின் அரசன் துச்சயன் என்பவனின் துணைவியே! முற்பிறவியில் உன் உடன்பிறந்தவாளன தாரை என்பவள் யானையின் காலடியில் வீழ்ந்து மரணம் அடைந்ததை அறிந்து, அதைப் பொறுக்கமாட்டாமல் உயிர் துறந்தாய். இப்பிறவியில் காராள தேசத்தைச் சேர்ந்த கௌசிகன் என்ற அந்தணனின் புதல்வியே! உன் முற்பிறவியில் தமக்கையான தாரை இப்பிறவியில் மாதவியாகவும், உன் இளைய சகோதரி இலக்குமி மணிமேகலையாகவும் பிறந்திருக்கின்றனர். சுதமதி கேள். இன்னும் ஏழு நாட்களுக்குள் மணிபல்லவம் சென்றுள்ள உன் முற்பிறவித் தங்கையான இலக்குமி, தனது பிறப்பின் இரகசியங்களை அறிந்துகொண்டு இங்கு மீண்டும் இதைப்போன்ற ஓர் இடையாமத்தில் வருவாள். கவலை வேண்டாம்.”” என்றது.
மணிமேகலை பிரிந்ததால் நெஞ்சம் நடுங்கும்வண்ணம் துயரமடைந்திருந்த சுதமதி வெளியில் வந்தாள். டியலுக்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கின.
இரவுக்காவலர்கள் உறங்கச் சென்றனர். பஞ்சுபோன்ற மலரணையில் துயிலும் ஆடவரும், பெண்களும் விழித்துக்கொள்ளத் தொடங்கினார்கள். வலம்புரிச் சங்குகள் பொருள் எதுவுமில்லாமல் ஒலிஎழுப்பின.
*** *** ***