தொடர்ச்சி..
மேரு என்ற மலை குறித்த ஆய்வு இன்னும் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. படிமங்கள் உருவகங்கள் என்று நோக்கில்தான் மேருவைப் பார்க்கவேண்டும். மந்திரமலை என்றும் மேருவைக் கூறுவார்கள். மேருவை அச்சாகக்கொண்டு ஒருபுறம் தேவர்களும், மறுபுறம் அசுரர்களும் பாற்கடலைக் கடைய, பாற்கடலிலிருந்து பலவித ஐஸ்வரியங்களும், கூடவே கொடிய ஆலகால விடமும் வந்தது என்னும் புராணக்கதை ஓர் உருவகக்கதை என்றுதான் கொள்ளவேண்டும்.
ஆரியர்-திராவிடர் என்று வகுப்புவாதத்திற்கு அடிகோலிடுவதுபோல மேருவின் வடதிசையிலிருந்து அதனைக் கடைந்தவர்கள் தேவர்கள் எனவும், தென்திசையிலிருந்து கடைந்தவர்கள் அசுரர் என்றும் உருவகப்படுத்தபட்டனர். திவ் என்ற வேர்ச் சொல்லிலிருந்து தோன்றிய வார்த்தைகளே தெய்வம், தேவர் போன்றவை. இங்கே திவ் என்ற சொல்லிற்கு சமஸ்கிருதத்தில் ஒளி என்று அர்த்தம். ஒளி என்றுமே சிவப்புநிறம். எனவே தேவர்கள் சிவந்த நிறமுடையவர்கள் என்றானது.
அதேபோல, சுரா என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததுதான் அசுரா என்ற சொல்லும். சுரா என்றால் மீண்டும் வெளிச்சம் என்று பொருள். அ-சுரா என்றால் ஒளியற்றவன், இருளில் உள்ளவன் என்று பொருள். எனவே அசுரர்கள் அனைவரும் கருப்பு நிறமுடையவர்கள் என்ற தீர்மானத்திற்கு வந்திருக்கவேண்டும். இந்த மேருமலையைப் பற்றிய குறிப்புகள் மணிமேகலையில் உள்ளன.
சம்பு என்ற பெண்தெய்வம் மேருமலையின் தென்பகுதியில் உள்ள மக்களைக் காக்கும் பொருட்டு நகர்ந்துவந்து நாவலந்தீவு என்ற பெரிய நிலப்பகுதியில் ஒரு சம்பு மரத்தின் அடியில் (சம்பு-ஜம்பு-நாவல்மரம்) அமர்ந்துகொண்டுவிட்டாள் என்கிறது மணிமேகலை. நாவலந்தீவு என்பது தீபகற்பமாய்ப் பெரிய நிலப்பரப்புடன் விளங்கும் பாரததேசத்தைக் குறிக்கிறது. ‘பாடல்சால் சிறப்பிற் பரதத்து ஓங்கிய,’ என்று சென்ற காதையில் கூறப்படுவதிலிருந்து பாரதம் ஓர் ஒருங்கிணைந்த தேசமாகவே இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இனி காதைக்குள் நுழைவோம்.
நாவல்மரம் ஓங்கி வளர்ந்த அந்த நாவலந்தீவில் இருக்கும் சம்பாதி என்ற நகரில் மிகச்சிறப்பாக தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு விழா எடுக்கப்பட்ட நேரம். ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.
ஒருபுறம் அறிஞர்களின் பட்டிமண்டபம்; மறுபுறம் யாழிசை கூத்துகள்; இன்னொருபுறம் பரதநடனத்தில் தேர்ந்த கணிகையர்களின் ஆடல் நிகழ்ச்சிகள். உள்ளூர் மக்களுடன் பலமொழிகள்பேசும் மக்களும் திரண்டுவந்து நெருக்கடியுடன் விளங்கும் நேரம். இளவட்டங்கள் கணிகையர் வீதிகளுக்கு வருவதும், இடுப்புக் கச்சத்தில் கட்டியிருக்கும் கிழிகளைத் திறந்து பொன்கழஞ்சுகளை வாரியிறைத்து நடனநங்கைகளை அனுபவிப்பதும் என்று அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது.
கணிகையர் வீதிக்கு ஒரு முடிசூடா இராணிபோல விளங்கிய சித்திராபதி தனது மாளிகையின் மாடத்திலிருந்து வெளியில் எட்டிப்பார்த்தாள். ஒவ்வொரு இல்லத்தின் முன்பும் தோரணங்களும் அலங்காரப் பந்தல்களும் விளங்கிநின்றன. ஒவ்வொரு வாயிலின் முன்பும் இரண்டு மூன்று புரவிகளாவது கம்பத்தில் கட்டிவைக்கபட்டிருந்தன. அகிலின் நறுமணம், குங்கிலியத்தின் நறும்புகை, அத்தரின் நறுமணம் என்று அந்த வீதியே நறுமணம் வீசிக்கொண்டிருந்தாலும் கடும்தேறலின், தலையைக் கிறுகிறுக்கவைக்கும் நெடியும் அடிக்காமலில்லை.
“ச்சை, என்ன ஓர் அருமையான வாய்ப்பு. எங்கே போய்த் தொலைந்தாள் மாதவியும், அவள் அருமை மகள் மணிமேகலையும்?’ என்று உள்ளே கணன்ற தன் பெருமூச்சை நிறுத்த சித்திராபதி பிரயாசைப் பட்டுக்கொண்டிருந்தாள்.
“வசந்தமாலா!“
சித்திராபதியின் குரல் மாளிகையின் உள்ளே இடியென இறங்கியது.
பாரிஜாதமலர்களை ஊசி நூலில் கோர்த்துக்கொண்டிருந்த வசந்தமாலை என்ற பெண் பதறியபடி மேல்மாடத்திற்கு ஓடிவந்தாள்.
சித்திராபதி மொத்தக் கணிகையர் வீதிக்கும் அதிபதி. அவள் பேச்சைக் கேட்டுதான் எவரும் உள்ளே நுழையமுடியும்; குறிப்பிட்டக் கணிகையை அணுகமுடியும். பாட்டும், தாளமும், நடனமும் அவள் சொல்லும் வண்ணமே பாணர்களைக்கொண்டு வடிவமைக்கப்படும் – இசைக்கப்படும் — பாடப்பெறும்.
ஒவ்வொரு கணிகையின் திறமைக்கு ஏற்ப அவள் நடனத்திற்கும், அவளுக்கும் விலையை நிர்ணயிப்பது சித்திராபதி. ஆணாகப் பிறந்தால், யாழிசைத்து பெரும் செல்வந்தர்களை அணுகி, அவர்களைக் கணிகையர்வீதிக்குக் கூட்டிக்கொண்டுவரும் பணி ஒப்படைக்கப்படும். பெண்ணாகப் பிறந்துவிட்டால் இளமை உள்ளவரை அவள் பிற ஆடவர்கள் முன்னால் ஆடியும், பாடியும் அவர்களை மகிவிழ்ப்பதையும் தவிர வேறு நினைப்பே அவர்களுக்கு இல்லாமல் செய்துமுடிப்பதில் சித்திராபதி சாமர்த்தியம்மிக்கவள். அவள் உத்தரவின்றி எந்தக் கணிகையும் அந்த நகரத்தைவிட்டு ஓரடிகூட எடுத்துவைக்கமுடியாது.
அப்படியொரு பெயருடனும், செல்வாக்குடனும் திகழும் சித்திராபதியின் மகளும், நாட்டிய சாத்திரத்திலும் அழகிலும் விஞ்சுவதற்கு வேறொறு பெண் இல்லையென்று கருதும் மாதவி, தனது சுகபோக வாழ்வைத் துறந்து பௌத்த மதத்தில் ஒரு பிக்குணியாகச் சேர்ந்துவிட்டாள் என்பதைக் காதுகொடுத்துக் கேட்கமுடிகிறதா?
‘வீதியில் உள்ள பெண்களிடம் சாயும் உன் ஜம்பம் உன் பெண்ணிடம் எங்கேடியம்மா போயிற்று?’ என்று மற்ற கணிகையர் முகத்திற்கு நேராக இன்னும் கேட்கவில்லை. ஆனால் கொல்லென்று முதுகுக்குப்பின்னால் பேசுவது நன்றாகக் கேட்கிறது.
“சொல்லுங்கள், அம்மா,”” என்றாள் வசந்தமாலை.
“எங்கேடி உன் தோழி?“
“யாரைக் கேட்கிறீர்கள், தாயே?””
“ம். என்னிடமே உன் நடிப்புத் திறனைக் காட்டதே! என் மகள் மாதவியும், அவள் அருமை மகள் மணிமேகலையும் எங்கே?””
“அருகில் உள்ள மலர்வனம் சென்றிருக்கின்றனர், தாயே!“
“போ! போய் அவர்களிடம் சொல். ஊருக்கெல்லாம் வெற்றிலை-பாக்கு வைக்கும் சித்திராபதியின் மகள் துறவறம் பூண்டுவிட்டாள் என்று ஊர்கூடிச் சிரிப்பதைச் சொல்லிவிட்டு வா”!”
“இப்போதே, அம்மா”,” என்று தப்பிப்பிழைத்தால் போதும் என்று வசந்தமாலை கிளம்பினாள்.
மலர்வனத்தில் ஒரு முருக்கைமரத்தின் நிழலில் மாதவி அமர்ந்திருந்தாள். பேதைப்பெண். நற்சிந்தனைகளைக்கொண்ட ஒரு பெண் தனியாகக் கணிகையர்வீதியில் நிம்மதியாக வாழ இயலாது என்பதற்குச் சான்றாக விளங்குபவள். சிறுபிராயத்திலிருந்து இவளும் தானும் தோழிகள் என்பது, வசந்தமாலைக்கு மேலும் அவள்பால் இரக்கத்தை ஏற்படுத்தியது.
கோவலனைக் கண்ட பின்பு வேறு எந்த ஆணையும் திரும்பிப்பார்க்காமல் ஒரு பத்தினிவாழ்க்கை வாழ்வதற்கு அவள்பட்ட இன்னல்கள் எத்தனை? உடலால், மனதால் சித்திராபதியிடம் அவள் பெற்றுக்கொண்டவை எத்தனை? அத்தனைக்கும் தான் ஒருத்தி மட்டும்தான் சாட்சி. எத்தனை இரவுகள் பிரிந்த கோவலனுக்காக உறங்காமல் அழுதிருக்கிறாள்?
“ஒருவனுக்காக இரவு முழுவதும் விழித்திருந்து அழுவதற்குப்பதிலாக, பலருக்காக இரவுமுழுவதும் விழித்திருந்து சிரிக்கலாமே “ என்று எத்தனை இரவுகள் சித்திராபதி குத்தலாகப் பேசியிருக்கிறாள்?
மாதவியின் உறுதியும், கற்பின் திண்மையுமதான் அவளை உறுதிகுலையாமல் வைத்திருக்கிறது. அவள்பூண்ட தவக்கோலம் அவள்மேனியை உருக்குலையச் செய்திருந்தாலும் அவள் உள்ளத்தைத் திண்மையுடன் வைத்திருக்கிறது.
வசந்தமாலை மாதவியின் அருகில்சென்று அமர்ந்தாள். ஒரு மெல்லிய புன்னகை மாதவிமுகத்தில் தவழ்ந்தது. வசந்தமாலைக்கு மாதவியின் தோற்றம்கண்டு சிரிப்பு தோன்றவில்லை. நெடுமூச்சு விட்டாள்.
“என் தாய் உன்னை அனுப்பினாளா?“ என்று கேட்டாள் மாதவி.
“ஆமாம்,“ தலையைக் கவிழ்த்தபடி வசந்தமாலை பதில் சொன்னாள்.
“என்ன சேதி? நான் கணிகையர் வீதி பக்கமே வருவதில்லை என்ற வழக்கமான குற்றச்சாட்டுதானே?“
“ ஆமாம் மாதவி. ஊரெல்லாம் சித்திராபதியின் மகள் ஒரு புத்தத் துறவியாக ஆகிவிட்டாள் என்று அலர் தூற்றுகிறது.“
“வம்பு பேசுவர்களுக்குத் தெரியுமா என் மகள் ஒரு பத்தினிக்குப் பிறந்தவள் என்று? எனக்கொன்றும் கவலையில்லை. நான் புத்தமடங்களில் என் வாழ்வைக் கழித்துவிடுவேன். அதோ பார்! பூச்செடிகளில் மலர்பறித்துக்கொண்டிருக்கும் — மங்கைப்பருவத்தை அடையாத என் மகளைப் பார். ஒரு பளிங்குக்கல்லினைப்போல மாசுமருவற்ற மனமும் உடலும்கொண்ட அந்தப் பேதைப்பெண்ணைப் பார். அவளுடன் கணிகையர் வீதியில்வந்து நான் தங்கினால் அவள் சீரழிந்துவிடமாட்டாளா? பிறகு நானும் கோவலனும் வாழ்ந்த வாழ்விற்குப் பொருள் ஏது, வசந்தமாலை?”
மாதவியுடன் திரும்பாவிட்டால் சித்திராபதி தன்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள் என்று அஞ்சிய வசந்தமாலை, மாதவியிடம் நீண்ட உரையாற்றினாள்.
“வேந்தன்முன்பு ஆடப்படும் வேத்தியல் கூத்தும், பொதுமக்கள்முன்பு ஆடும் பொதுக்கூத்தும் நன்குகற்றவள் நீ. இசையும், எழுவகைத் தூக்குகளும், தாளக்கட்டும், யாழ்வகைகளும், அவற்றின் பண்வகைகளும் கற்றுத் தேர்ந்தவள் நீ. பல மொழிகளில் பாடல்வகைகள் அறிந்தவள் நீ. மத்தளமும், வேய்ங்குழலும் கற்றவள் நீ. அவை மட்டுமா? நன்றாகப் பந்துவிளையாடுபவள் நீ. நாவில் நீர் ஊறும்வண்ணம் பலவித உணவுப் பதார்த்தங்கள் உனக்குச் சமைக்கத்தெரியும். நறுமணப்பொடிகலந்த நீரில் நன்கு நீராடத்தெரிந்தவள். பள்ளியறையில் என்னவிதமான அலங்காரம் செய்துகொள்ளவேண்டும் என்பதை நன்கு அறிந்தவள் நீ. ஒழுங்கமைவுடன்கூடிய பருவமாற்றங்களை உடையவள். உடலின் பல்வேறு உறுப்புகளால் செய்யும் அறுபத்துநான்கு கரணங்களை அழகாக அபிநயம்பிடிக்கத்தெரிந்தவள் நீ. மற்றவர் மனதில் இருப்பதை அறிந்து இதமான வார்த்தைகளைப் பேசத்தெரிந்தவள் நீ. மற்றவர்முன்பு தோன்றாமல் இருக்கத் தெரிந்தவள் நீ. ஓவியம்தீட்டுவதில் வல்லவள் நீ. மாலைதொடுக்கத்தெரிந்தவள் நீ. ஒவ்வொரு பொழுதிற்கும் ஏற்ப அழகாக அலங்காரம்செய்துகொள்பவள் நீ. சோதிடம் தெரியும் உனக்கு. கணிகையர்களுக்கு என்று இயற்றப்பட்ட நன்னூலில் கூறியுள்ள அனைத்தும் அறிந்தவள் நீ. இத்தனை அளவிற்கு ஒரு கணிகைக்கு உரியவற்றைத் தெரிந்துகொண்டுள்ள நீ துறவறம் பூண்டால் பார்க்க நன்றாகவா இருக்கிறது? ஒருத்தர், இரண்டுபேர் என்றால் போகிறது என்று இருக்கலாம் ஆனால் ஊரிலுள்ள கற்றோர் அனைவரும் உன்னுடைய இத்தகைய செயலுக்காக ஏளனமாகப் பேசுவதை கேட்கச்சகிக்க முடியவில்லை, மாதவி.“
மாதவி தோழியை நிமிர்ந்துபார்த்தாள். வசந்தமாலை ஒரு கணிகையின் நிலையிலிருந்துதான் பேசுகிறாள்.
“உனக்குப் புரியாது, வசந்தா. என்னுடைய காதல்மணாளன் தான் செய்யாத குற்றத்திற்காக மதுரையம்பதியில் தனது இன்னுயிரை இழந்தார் என்பதைக் கேட்டபின்னரும் அவருடன் இறக்காமல் உயிருடன் இருக்கிறேன். அப்போது இவர்கள் பேசாத இகழுரைகளையா இப்போது பேசப்போகிறார்கள்? அப்போதே என்னுடைய நாணம் என்னைவிட்டுப் போய்விட்டது, வசந்தா. காதலன் இறந்தால், ஒன்று — பெண்கள் துன்பம் என்னும் நெருப்பு உள்ளே வாட்ட அந்த வெப்பம் தாளாது உயிரை விடுவார்கள் – அல்லது, நெருப்புமூட்டச்செய்து, குளிர்ந்தநீர் நிறைந்த பொய்கையில் நீராடுவதைப்போன்று நெருப்பில் உயிர் துறப்பர். அவ்வாறும் செய்ய இயலாதவர்கள் விதவைக்கோலம் பூண்டு, விரதவாழ்க்கை வாழ்வார்கள். கண்ணகியின் நிலையை யோசித்துப் பார்த்தாயா? இவை எவற்றையும் கைக்கொள்ளாமல், கணவன் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும், அந்தச் செய்தியை கேட்கப் பொறாதவளாய்க் கூந்தலை விரித்துப்போட்டு, அழுதழுது கண்ணீரால் நனைந்துபோயிருந்த முலைகளில் ஒன்றைத் திருகியெடுத்து, அந்த முலையை எறிந்து, மதுரை நகரை எரித்துத் தன் கற்பின்திண்மையை இந்த உலகிற்குப் பறைசாற்றியவள். சொல்லு, வசந்தா, சொல்லு. அப்படிப்பட்ட கற்பின் தெய்வம் கண்ணகியின் மகளான இந்த மணிமேகலை கணிகையர் வீதியில் வாழ வேண்டுமா?”
“இது எந்தவகை அறம்? ஒரு பெண்ணின் கற்பு இன்னொரு பெண்ணின் கற்பையும் காப்பாற்றுமா? இதோ காப்பாற்றிக்கொண்டிருக்கிறதே!
“அதுமட்டுமில்லை வசந்தா. இதோ இந்தத் தவநெறியில் வாழும் பெரியோர் தங்கிய இடத்திற்கு நானும் என் மகளை அழைத்துவந்துவிட்டேன். அறவண அடிகளின் பாதங்களில் வீழ்ந்து நான் அடைந்த கொடுமையான துயரைக் கூறி அழுதேன். அதற்கு அவர் பிறப்பின்மீது பற்றுடையவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பதும், பிறப்பின் பற்றறுத்தவர்கள் பிறவாமை என்ற நிலையில் பேரின்பம் அடைவார்கள் என்றும் கூறியருளினார். அதன்பிறகு நான்குவகையான நெறிகளைப் போதித்தார். கள், காமம், கொலை, பொய், களவு என்ற ஐவகைக் குற்றங்களின் தன்மைகளைக் கூறினார். இவற்றை விலக்குவதே பிறப்பற்ற நிலைக்குக் கொண்டுவிடும் என்ற பேருண்மையை எனக்கு அருளினார். இப்படிப்பட்ட ஒரு நல்ல வாழ்விலிருந்து மீளும் உத்தேசம் எனக்கு இல்லை என்பதை என் தாயிடம் போய்ச் சொல்!“ என்று திட்டவட்டமாகப் பதிலிறுத்தாள் மாதவி.
மாதவி ஒரு கிடைத்தற்கரிய மாணிக்கம். அதனை இந்தத் துறவறம் என்ற கடலில் வீசிவிட்டு வருவதற்கு வசந்தமாலைக்குச் சிறிதும் மனமில்லை. இருப்பினும் வேண்டாவெறுப்பாக, வசந்தமாலை அந்த இடத்தைவிட்டு அகன்றாள்.
பின் குறிப்பு: சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் நடனத்திற்கு குறிப்பாக கணிகையர் நிகழ்த்தும் நிருத்தியங்களுக்குக் குறிப்புகள் பலவுள்ளன. அவற்றை முறைப்படி வழிவழியாக அடுத்த தலைமுறைக்குக்கொண்டு செல்லும் நிகழ்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை. ஓலைகளைப் படிஎடுப்பது என்பது தீவிரமாகக் கைமேற்கொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது. இந்தக் காதையில் சாத்தனார் நடனத்திற்கு நன்னூல் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். ஒரு கணிகையாக இருப்பதற்கு என்னவெல்லாம் கற்றிருக்கவேண்டும் என்ற பட்டியலைப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. ‘ பாடைப் பாடலும்’ என்ற கூற்றின்மூலம் பிறமொழியில் உள்ள பாடல்களும் இசைக்கப்பட்டு பாடப்பட்டுள்ளன என்பது தெரிகிறது.
(தொடரும்)
‘ஊர் அலர் உரைத்த காதை’ என்று இருக்க வேண்டும்
அருமையாக நகர்கின்றது.
மணிமேகலை இவ்வளவு நன்றாக இருக்குமா? சத்யப் பிரியன் தனது வார்த்தை சித்துகளால், என்னை கவர்ந்து விட்டார்.
கணிகையர் என்ற பெயருக்குத்தான் உயர்ந்த மதிப்பை மனிதர்கள் கொடுப்பதில்லை. ஆனால் அந்நிலையில் வாழ்ந்தோர் எத்தனை கலைகளைக் கற்றுணர்ந்தவராக இருந்திருக்கின்றனர் என எண்ணும்போது வியக்க வைக்கின்றது.
தான் பெற்ற மகளை கண்ணகியின் மகள் எனக் குறிப்பிடும் மாதவியின் மனம் எப்பேர்ப்பட்டது என்பதும் புரிகிறது
அருமையான பதிவூ. சொற்களை கையாளும் விதம் ரசிக்கத்தக்கது.