பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை — மணிமேகலை 10

பத்மபீடத்தைக் கண்டதும் மணிமேகலை தன்னையறியாமல் தனது காந்தள்மலர்போன்ற கரங்களைத் தலைக்குமேலாகக் குவித்து வணங்கினாள். நெஞ்சம் உருகி அவள் சிந்திய கண்ணீர் மார்பில் விழுந்து அவளுடைய முலைகளை நனைத்தது. ஒருவிதப் பரவசநிலையுடன் மெல்ல அடியெடுத்து அந்தப் பீடத்தை மூன்றுமுறை சுற்றிவந்தாள். மின்னல்கொடி மேகத்திலிருந்து தரையில் வீழ்ந்ததுபோல தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து மணிமேகலை அந்தப் பீடத்தை வணங்கினாள். அப்போது புத்தமதநெறியில் ஒழுகிய பிரம்மதருமன் என்ற அருந்தவ முனிவன் ஒருவன் அவளுடைய முற்பிறவியில் கூறியது நினைவில் எழுந்தது. தன் எதிரில் அந்த அருந்தவ முனிவன் நிற்பதுபோன்ற தோற்றம் அவள் சிந்தையில் எழுந்தது.

“வணங்குவதற்குரிய அறிய தவநெறியாளனே! உறுதியான மெய்ப்பொருளை உணர்ந்தவனே. அவந்திநாட்டு மன்னனிடம், காயங்கரை ஆற்றங்கரையில் நீ கூறிய அத்தனையும் சொன்னவண்ணமே நடந்ததைத் தெளிவாக அறிந்துகொண்டேன். அந்த மன்னன் உன்னிடம் அறநெறிகளைக் கேட்டசமயம் நீ கூறியது எனக்கு நினைவில் உள்ளது. ‘நாவல்மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள இந்த ஜம்புத்தீவில் அன்றைய தினத்திலிருந்து ஏழாவது நாளில் பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்படும். பெரிய பூமியை ஆளும் அரசனே! இந்தப் பூமியில் வசிக்கும் மக்கள் நடுங்கும்படியான மிகப்பெரிய பூகம்பமாக அது இருக்கும். அப்போது இந்த இடமும், இதனைச் சுற்றி நானூறு யோசனை தூரம்வரையுள்ள இடங்களும், அந்தப் பெரிய நிலநடுக்கத்தால் மண்ணில் புதையுண்டு போகும்,’ என்று கூறினீர். அதனைச் செவியுற்ற அரசனும், மக்களையெல்லாம் தத்தம் ஆடு, மாடுகளைக் காப்பாற்றி, அந்த  நகரத்தை விட்டு நீங்கும்படி  முரசறிவித்துச் செய்திசொன்னான். அரசனும் தனது கடல்போன்ற சேனையுடன் இடவயம் என்ற அந்த நகரத்தை விட்டு விலகி வடதிசையில் உள்ள அவந்தி தேசத்தைநோக்கிப் புலம்பெயர்ந்தான். அவ்வாறு பெரும் சேனையுடன் பயணம் மேற்கொள்ளும்போது காயங்கரை என்ற பெரிய ஆற்றின் கரையில் ஒரு பூவனத்தில் தனது சேனையுடன் இளைப்பாறினான். அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வந்த நேரம் — அண்ணலே, நீ கூறியவண்ணமே அந்த நகரம் ஒரு பெரிய நிலநடுக்கத்தில் இந்தப் பூமிக்குள் புதைந்துபோனது. இதனைக் கேள்விப்பட்ட மன்னரும், அவனுடைய மக்களும் மிக்க அதிசயித்து, உன்னை மனதாரத் துதித்து, உனது அருட்பாதங்களில் விழுந்து வணங்கினர். நீ அவர்களுக்கு அருளுரை  வழங்கினாய்!”” என்றாள்.

அவளுக்கே வியப்பாக இருந்தது. ஏதோ ஒரு மானிடத் திறனுக்கு அப்பாற்பட்ட ஒன்று தன்னைப் பேசவைப்பதாக உணர்ந்தாள்.

மேலும் தொடர்ந்தாள்.

“நினைவிருக்கிறதா, அய்யனே? அசோதரம் என்னும் பட்டிணம் ஒன்று உண்டு. எப்போதும் கடல் அலைகளின் பேரரவம் அந்த நகரில் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்த நகரத்தை இரவிவர்மன் என்ற மன்னன் ஆட்சிபுரிந்துவந்தான். அவனுக்கு அமுதபதி என்ற ஒரு மனைவி. கொள்ளை அழகு அவள். செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட மென்மையான பாதங்களை உடையவள். அவளுடைய மணிவயிற்றில் இலக்குமி என்ற பெயருடன் நான் மகளாகப் பிறந்தேன். அதே சமயம் அத்திபதி என்றொரு அரசன் இருந்தான். அவன் சித்திபுரம் என்ற நாட்டையாண்டு வந்த சீதரன் என்னும் அரசனின் மகள் நீலபதியை திருமணம் புரிந்துகொண்டான். அவர்கள் இருவருக்கும் இராகுலன் என்ற பெயரில் ஒரு புதல்வன் பிறந்து வலிமையுடன் வளர்ந்துவந்தான். இலக்குமிக்கு மணப்பருவம் எய்தியவுடன், சித்திபுர மன்னன்மகன் இராகுலனை மணமகனாக மணம்பேசினர். காலைக்கதிரின் ஒளிக்கீற்றுபோல மின்னும் இராகுலனை முந்தைய பிறவியில் இலக்குமியாகப் பிறந்த நான் மணம்புரிந்து அவனுடைய நாட்டை அடைந்தேன். எங்கள் இல்லறவாழ்வு இனிதாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் ஒருநாள் உன்னைக் கண்டு வாழையடிவாழையாகத் தொழப்பட்டு வணங்கப்படும் உங்கள் திருவடிகளில் பணிந்தோம். அப்போது  நீங்கள் சொன்னது நினைவில் இருக்கிறதா, பெருமானே?” என்று கேட்டாள் மணிமேகலை.

அன்று அவர் சொன்னது நினைவில் எழுந்தது.

இன்னும் பதினாறு நாட்கள்தான் உன் கணவன் உயிருடன் இருப்பான். அவன் காலம் வரும்போது திட்டிவிடம் என்ற கொடிய நஞ்சுடைய பாம்பினால் தீண்டப்பட்டு உயிர்துறப்பான். உடனே நீயும் அவனுடன் உடன்கட்டை ஏறி தீயில் உயிரை விடுவாய். பழவினையின் காரணமாக நடைபெற இருக்கும் செயல்கள் எதுவும் உனக்கு இந்த ஊரில் இல்லாததால், காவேரமன்னனின் மகளாகப் பிறந்த காவேரிநதி கன்னி நதியாகக் கடலில் கலக்கும் காவேரிப்பட்டிணம், புகார் என்று பெயர்களுள்ள ஊரில் பிறப்பாய்,’ என்று கூறினீர்களே, நினைவிருக்கிறதா?”

“ ‘அப்போது உனக்கு ஒரு பெரிய இடர் நேரிடும். அந்தத் துயரை நீக்கும்பொருட்டு உன்னுடைய குலதெய்வமான மணிமேகலா தெய்வம், உன்னைத் தொலைவில் உள்ள தீவு ஒன்றில் கொண்டுவைத்து உன்னுடைய துன்பத்தைத் தீர்க்கும்,’ என்று என்னிடம் கூறினீர்கள். நினைவிருக்கிறதா?”

“ ‘நாகநாட்டு  மன்னர்கள் இருவரும் அங்கு வந்த புத்தபிரானின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் ஒழிந்த அந்நாளில் முற்பிறப்பு இரகசியங்களைக் கூறும் பத்மபீடம் தோன்றும்.’ என்றீர்கள். அந்த புத்தபீடத்தின்முன் வந்து நிற்கும்போது, என்னுடைய முந்தைய பிறவி குறித்த இரகசியம் எனக்கு வெளிப்படும்,’ என்றீர்கள். இப்போது  எனக்கு முற்பிறவி  முழுவதும் தெளிவாகத் தெரிந்துவிட்டது.” என்றவள் சிறிது நேரம் அமைதியுடன் இருந்தாள்.

அதேநேரம், அந்த பிரும்மதருமன் என்ற முனிவன் காயங்கரை ஆற்றின் அருகில் கூறிய வேறு ஒன்றும் நினைவில் மின்னி மறைந்தது.

“என்னுடைய மறுபிறவி குறித்துத் தெளிவாகக் கூறிய உங்களிடம், ‘திட்டிவிடம் என்ற பாம்பு தீண்டி இறந்த என் முந்தைய பிறவியின் கணவன் இராகுலன் என்னுடைய மறுபிறப்பில் எவராகப் பிறப்பார்,’  என்று கேட்டேன். அதற்கு நீங்கள் கூறியது நினைவில் இருக்கிறதா? அதற்கு நீங்கள், ‘இந்தத் தீவினில் ஒரு பெரிய தெய்வம் தோன்றி, உன்னுடைய கணவன் இராகுலன் உன்னுடைய மறுபிறவியில் எவராகப் பிறந்துள்ளார் என்று கூறும்,’ என்றீர்களே, அந்தத் தெய்வம் எப்போது தோன்றும்?” என்றாள்.

மணிமேகலையின் உடல் சிலிர்த்தது. இதென்ன இப்படி ஒரு நினைவு? முற்பிறவியில் இராகுலன் என்ற அரசகுமாரன் தன் கணவனாக அமையப்பெற்று கொடிய நாகம் தீண்டி இறந்து விட்டான், அவன் மனைவியாகிய தானும் அவனுடன் தீயில் வீழ்ந்து மாய்ந்து. மணிமேகலை என்ற பெயருடன் காவிரி பூம்பட்டிணத்தில் பிறந்திருக்கிறோம் என்றால், இராகுலனும் மறுபிறவி எடுத்திருக்க வேண்டுமே, அவன் யாராக இருக்கும் என்ற ஐயம் அவளுக்கு எழுந்தது.

அப்படி ஒருவன் இந்த நகரத்தில் பிறந்திருந்தால் அவனிடம் தனது இப்போதையத் துயரைச் சொல்லி உதயகுமாரணிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டாள். அப்படி ஒரு தெய்வம் தோன்றி தனது இன்னலுக்கு ஒரு விடிவு பிறக்காதா என்று ஏங்கிய மணிமேகலையின் கண்களில் நீர் வழிந்தது.

பின்குறிப்பு: நாவலந்தீவில் [இந்தியாவில்] இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு நிகழ்ந்த, நிலநடுக்கம் குறித்த தகவலை இந்தக் காதை கூறுகிறது. புத்தமதத்தின் மறுபிறவித் தத்துவத்தை அடிக்கோடிட்டுச் சொல்லவேண்டும் என்ற சீத்தலை சாத்தனாரின் ஆர்வம் சற்று மேலோங்கித் தெரிந்தாலும், கதை மணிமேகலை என்ற பெண்ணை மையப்படுத்தி அமைந்திருப்பதால், அவளுடைய முந்தையபிறப்பில் அவளுடைய கணவன் இப்போது யாராகப் பிறந்திருக்கிறான் என்பதைக் கூறும்போது, பெண்களின் பருவத்தில் ஏற்படும் உடல் மாற்றங்களின் போக்கிற்கு அந்தப் பெண்கள் காரணமாக மாட்டார்கள் என்ற மிகப்பெரிய மனிதாபிமானப் போர்வையைப் போர்த்தும் அந்த இலாவகம் போற்றுதற்குரியது.

***   ***   ***

2 Replies to “பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை — மணிமேகலை 10”

  1. அருமையாக செல்கிறது தொடர். கதை நேரில் காண்பது போல் விரிகின்றது. ஸ்ரீ சத்தியப்பிரியன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக. மணிமேகலையின் இந்தப்பகுதி அடியேன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்ததாக ஒரு நினைவு.அடுத்தபகுதியை விரைவில் எதிர்பார்க்க்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *