நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நாம் பலதடவை கையாலாகாதவர்களாகி நின்றிருக்கிறோம். அந்தசில நிகழ்வுகள் – நம் அடிமனத்தில் ஆழமாகப் புதைந்துபோனாலும், அவ்வப்போது, திரும்பத்திரும்ப மேலெழுந்துவந்து நம்முள் ஒரு ஏக்கத்தை, நமது கையாலாகாத்தனத்தை நமக்கு உணர்த்தி, குற்ற உணர்வை அதிகமாக்கி நிற்கத்தான் செய்கின்றன. அப்படி அவை நமது கையாலாகத்தனத்தை உணர்த்தும்போது, நமக்குள் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதையும், மீண்டும் நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா, கையாலகாதவர்களாகிப்போகாமல் ஏதாவது செய்திருக்கமாட்டோமா என்றும் தோன்றும். சிறிது சிந்தித்தவுடன், நம்மால் அந்தச் சந்தர்ப்பத்தில் அப்படித்தான் நடந்துகொண்டிருக்க இயலும், ஏனெனில் வேறுவிதமாக நடந்துகொள்ளும் வலிமையோ, திறமையோ நம்மிடம் இருக்கவில்லை என்றும் நம்மை நாமே சமாதானம் செய்துகொள்வோம். இருப்பினும், அந்நிகழ்ச்சிகள் கொதிக்கும் நீரிலிருந்து கிளம்பும் குமிழிகளாக வருவதை நம்மால் தடுக்க இயலாது.
என் வாழ்வில் நடந்த அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை—என்னைக் கையாலாகாதவனாக ஆக்கி, பச்சாதாபமடையவைத்திருக்கும் உண்மை நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்கிறேன். உங்களுக்கும் அப்படி ஏதாவது நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தால் – என்னைப்போல உங்களையும் பச்சாதாப்படவைத்த, குற்ற உணர்வில் புழுங்கவைத்த அந்நிகழ்வுகள் மனிதவாழ்வின் இயற்கை என்றெண்ணி அமைதிகொள்ளுங்கள்…
… அம்மாதிரியான முதல் நிகழ்வு என் ஆறாம்வயதில் நிகழ்ந்தது.
சைக்கிள் ரிம்மை ஒரு குச்சியால் தட்டிக்கொண்டு, உதடுகளிலிருந்து காற்றை வெளியேற்றி, கார் ஓடுவதுபோன்ற ஒரு சத்தத்தை உண்டாக்கியதாகக் கற்பனை செய்துகொண்டு, சிலமுறை பார்த்து மயங்கிப்போன ‘ப்ளிமத் சேவாய்’ காரை ஓட்டும் பெருமையுடன், வீதியை வலம்வந்துகொண்டிருந்தேன் – கழுதைகூட பொதிசுமக்க மறுக்கும் புடைபுடைக்கும் வெய்யிலில்.
என் கவனத்தைக் கவர்ந்தது நடுவீதியில் படுத்துக்கிடந்த அந்த மாடு.
அது தனியாகப் படுத்திருந்தால், ஒருகணம்கூட அதற்குமேல் அந்த மாட்டைப் பார்த்திருக்கமாட்டேன். எனது ப்ளிமத் சேவாயை [அதுதான் என் சைக்கிள் ரிம்மை] ஓட்டிக்கொண்டு அந்த வாயில்லா ஜீவனைக் கடந்துசென்றிருப்பேன்.
அந்த ‘வாயில்லா ஜீவன்’ கழுத்தில் கட்டப்பட்ட நுகத்தடியுடன், நுகத்தடி இணைக்கப்பட்ட வண்டியுடன் படுத்திருந்தது. அதன் அருகில் அதன் தோழனான இன்னொரு ‘வாயில்லா ஜீவன்’ கடனேயென்று நின்றுகொண்டிருந்தது.
“சனியனே, எந்திரு. நீ இப்படி சண்டித்தனம்செய்தால், நான் சந்தைக்கு எப்படிப் போகுறதிங்குறேன்?” என்று அந்த மாட்டை மாட்டடி அடித்துக்கொண்டிருந்தார் வண்டியோட்டி. அவரது கவலை அவருக்கு.
வண்டியில் ஏற்றப்பட்டிருக்கும் சுமை வைக்கோல் ஏற்றிவரும் இக்கால லாரிகளில் நிரம்பிவழிவதுபோல – ஆனால், சுமை வைக்கோல்போர் அல்ல – நிரம்பிவழிந்திருந்தது.
நான்கு மாடுகளால்கூட அந்த வண்டியை இழுக்கமுடியாமா என்பதே கேள்விக்குறியாக இருக்கும்போது, இவ்வளவுதூரம் அந்த வண்டியை அந்த மாடுகள் இரண்டும் எப்படி இழுத்துவந்தன என்பதைப் பார்த்தால் வியப்பாகவே இருந்தது.
வண்டியோட்டி அடித்தது போதாதென்று, மாட்டைப் பலமாக உதைத்து, அதன் வாலைத்தூக்கி, அதற்குக்கீழே இருக்கும் மென்மையான பாகத்தில் தார்க்குச்சியினால் இரண்டு-மூன்று முறை முழுபலத்துடன், நாக்கைத் துருத்திக்கொண்டு, ஆவேசத்துடன் குத்தினார்.
அந்த இடங்களிலிருந்து செந்நிறக் குருதி கசிந்தது.
என் தங்கை அழுதாலே பொறுக்காமல், “பாப்பாவைத் தூக்கு, அம்மா!” என்று முறையிடும் என்னால் அதைக் காணச்சகிக்கவில்லை. முறுக்குமீசையுடன், சிறிது சிவந்த கண்களுடன், தெற்றுப்பற்களுடன் இருந்த வண்டியோட்டியைப் பார்த்தால் எனக்கு ஐயனார்போலப் பயமாகத்தான் இருந்தது.
என்னையுமறியாமல் என் சைக்கிள் ரிம் கையைவிட்டு நழுவித் தரையில் விழுந்தது. செயலற்று நின்றேன்.
“மாட்டை அடிக்காதீங்க ஐயா,” என்று கதறவேண்டும்போல இருந்தது. பயத்தில் உதடுகள் ஒட்டிக்கொண்டதால் குரல் எழவில்லை.
துயருரும் அந்த வாயில்லா ஜீவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆறுதல் சொல்ல என் உள்ளம் துடித்தது.
ஆயினும், நான் செயலற்று நின்றேன்.
அதன் கண்ணிலிருந்து கரியதாக நீர்பெருகித் தரையில் சொட்டியது. அப்படியும் இலேசாக அசைந்துகொடுத்ததே தவிர, அந்த மாடு எழுந்திருக்கவில்லை. என்ன அலுப்போ, களைப்போ, அயர்ச்சியோ அதற்கு!
உள்ளங்காலில் முள்குத்தினால் நம்மால் பொறுக்கவியலாது. மென்மையான பின்பாகத்தில் இரத்தம்கசியக் குத்தப்பட்டும், துடிக்காமல் வெறுமனே அசைகிறதே அந்த வாயில்லா ஜீவன்?
அது பொறுமையா, அல்லது, இப்படி அடியும், உதையும், குத்தலும் தாங்கியதால் ஏற்பட்ட மரப்பா?
அந்த மாட்டின், தாய், தந்தை, அக்கா இவர்களுடன் அந்த மாட்டைச் சம்பந்தப்படுத்திக் கண்டகண்ட கெட்டவார்த்தைகளால் திட்டியவாறே கீழே குதித்தார், வண்டியோட்டி.
என்னைப் பார்த்தவுடன், “தம்பி, இங்கே உனக்கென்ன வேலை? போ, போ!” என்று கடும்சொற்களால் அதட்டிவிட்டு, தொண்டையைச் செருமிக்கொண்டு, குனிந்து அந்த வாயில்லா ஜீவனின் இருகண்களிலும் வாயில் குதப்பிக்கொண்டிருந்த செக்கச்செவேலென்ற புகையிலைச் சாற்றை உமிழ்ந்தார் வண்டியோட்டி.
என் கண்கள் இரண்டும் எரிந்தன.
இதயத்தை யாரோ கசக்கிப்பிழிவதுபோல இருந்தது. மூச்சுத் திணறியது. அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டேன்.
மாடு எழுந்தது. தார்க்குச்சியால் அதைக் குத்தியவாறு விரட்டினார் வண்டியோட்டி.
மாடு தள்ளாடியவாறே அடியெடுத்து வைத்தது. வண்டி மெல்ல நகர்ந்தது.
பிழியப்பிழிய அழுதேன் நான் – என் கையாலாகாத்தனத்தை எண்ணி.
கிங்காங்கைப் புரட்டிப்போடும் தாராசிங்காக நான் இல்லையே என்றெண்ணி.
இன்றும், எந்தவொரு மாட்டுவண்டியைப் பார்த்தாலும் இந்நிகழ்வே என் கண்முன் வந்துநிற்கிறது. என் கையாலாகாத்தனத்தையும், அந்த வாயில்லா ஜீவனையும், இரத்தம்சொட்டும் மென்மையான அதன் பின்பாகத்தையும், அதன் கண்ணிலிருந்து வழிந்து தரையில் சிந்திய கரிய நீரையும், அதன் கண்களில் உமிழப்பட்ட புகையிலைச் சாறையும், அது வழியும்போது அந்த வாயில்லா ஜீவன் தன்னை நொந்துகொண்டு இரத்தக்கண்ணீர் வடிப்பதுபோன்ற தோற்றமும், மெல்ல எழுந்திருந்து தள்ளாடித் தள்ளாடி வண்டியை இழுத்துச்சென்றதையும் நினைவுக்குக் கொண்டுவந்து என்னுள் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
ஒருசில சமயம் நான் என்னை அந்த வாயில்லா ஜீவனைப்போல உணர்ந்து, அதுபட்ட வேதனையை அனுபவிக்கிறைன்.
இது என் கையாலாகாத்தனத்திற்கு இறைவன் தொடர்ந்து அளித்துவரும் தண்டனையா?
[கையாலாகாத்தனம் தொடரும்]
Sir, your love for the cattle reflects the simplicity of oyour soul.