வெகுதொலைவில் அலைகள் மடேர்மடேரென்று கரையில் மோதும் ஓசை கேட்டது.
மணிமேகலை உறக்கம் கலைந்து எழுந்தாள்.
சில்லென்று காற்று வீசிக்கொண்டிருந்தது. முதலில் தான் எங்கிருக்கிறோம் என்று சுற்றுமுற்றும் பார்த்தாள். அலையின் ஓசை, அவள் கடலுக்கு அருகில் இருப்பதைத் தெரிந்தது. புகார் நகரின் கடலா? அப்படித் தெரியவில்லை. அலைகள் வீசியடிக்கும் வேகத்தில் சிப்பிகள் தரையில் உழுபட்டு முத்துகளைக் கொட்டிக் கிடத்தியிருந்தன. செம்பவளக் கற்களுடன் சந்தனம், அகில்போன்ற மரங்களையும் அலைகள் உருட்டித் தள்ளுவதால் அந்த இடம் மணம்மிக்கதாக விளங்கியது. ஞாழல்மரங்கள் கிளைகளைக் கீழே தரைவரை பரப்பிநின்றன. வண்டுகள் வட்டமிடும் — ஆம்பல் மலர்களும், குவளை மலர்களும் பூத்திருந்த ஆழமான நீர்நிலை ஒன்று இருந்தது. வளைந்த புன்னைமரம் கிளைகளைப் பந்தல்போலப் பரப்பியிருந்தது. தாழைப் புதரின் மடல்கள் விரிந்து மணம் பரப்பிக்கொண்டிருந்தன. நிலவொளி நெடுகிலும் வெண்மணலைப் பரப்பியதுபோல இருந்தது. தான் படுத்திருந்த இடம் முழுவதும் மலர்கள் நிறைந்த ஒரு மலர்ப்படுக்கையைப்போல மலர்கள் சொரிந்து கிடப்பதைக் கண்டாள் மணிமேகலை.
‘என்ன இடம் இது? இதற்கு முன்னேபின்னே பார்த்த இடம்போல இல்லையே? இங்குள்ள காட்சிகள் புதிதாகத் தோன்றுகின்றனவே? ஏன் இந்தத் தோற்ற மயக்கம்?’ என்று தடுமாறும் எண்ணத்துடன் மணிமேகலை எழுந்தாள். இறந்தபின்பு சுற்றத்தினர்களையும், நண்பர்களையும் விட்டுவிட்டு மறுபிறவியில் புது இடத்தில் பிறந்ததுபோலிருந்தது மணிமேகலைக்கு.
தூரத்தில் பெருங்கடலின் நடுவிலிருந்து கதிரவன் மேலெழும்பிக் கதிரைப் பரப்புவதைக் கண்டாள். இது என்ன இடம்? புகாரில் இப்படி ஒரு இடத்தைப் பார்த்த ஞாபகம் இல்லையே? ஒருவேளை நேற்று சுதமதியுடன் வந்துசேர்ந்த உவவனத்தின் ஒரு பகுதியோ?
இந்த நினைப்பு வந்ததும் மணிமேகலை மடமடவென்று சுற்றுமுற்றும் பார்த்தாள். இல்லை, இது உவவனம் இல்லை. அப்படியானால் இது என்ன இடம்? சுதமதி உடன் இருந்தாளே.
“சுதமதி!“ என்று கூவினாள்.
அவளுடைய கூவல் கடற்பிரதேசக் காற்றில் கரைந்ததே தவிர, சுதமதி வரவில்லை. அங்குமிங்கும் அலைந்து சிலமுறை சுதமதியை அழைத்தாள். சுதமதி வரவில்லை. மணிமேகலை தடுமாறத் தொடங்கினாள்.
“பகல் பொழுது வருவதால் மாதவிக்கொடியானது மலர்களுடன் மயங்குமே. ஐயோ! என் அன்னை மாதவியும் அல்லவா இன்னும் என்னைக் காணாது கலங்குவாள்?’ என்று மணிமேகலை வாய்விட்டுப் புலம்பத் தொடங்கினாள்.
முந்தையதினம் நடந்த நிகழ்ச்சிகள் மனத்திரையில் சித்திரம்போல மெல்லமெல்ல எழுந்தன.
“என்ன இது? நேற்று தோன்றிய பெண்தெய்வம் செய்த வஞ்சகச் செயலா இது? சுதமதி! ஒளிபொருந்திய வளைக்கரம் கொண்டவளே! நீ எங்கிருக்கிறாய்? என்ன சுதமதி இவ்வளவு நேராமாகக் கூப்பிடுகிறேன் எங்கே போய்த்தொலைந்தாய், சுதமதி!“ என்று கூப்பிட்டாள்.
சுதமதி வரவில்லை. “சுதமதி என்னை மேலும் அச்சப்படுத்தாமல் வா. இந்தத் தனிமை என்னை அளவுக்கதிகமாகப் பயமுறுத்துகிறது. என் கண்ணில்லையா, வந்துவிடு!“ என்று கெஞ்சினாள்.
பதிலொன்றும் வராத்தால், மணிமேகலை அந்தக் கடற்கரையில் நடக்கத் தொடங்கினாள்.
அலையைத் தொட்டுவிடும் வண்ணம் பறக்கும் பறவைகள், சரேலென்று தரையில் வந்து அமர்ந்தன. அருகில் பெரிய சிறகுகளையுடைய நீர்ப்பறவைகள் வந்து அமர்ந்தன. தண்ணீரில் மூழ்கி மீன்களைப் பிடிக்கும் சில்லை எனும் பறவைகளும், ஒடுங்கிய இறக்கைகளை உடைய முழுவல் பறவைகளும் மணற்பரப்பில் வந்து அமர்ந்தன. அவற்றின் நடுநாயகமாக அன்னப்பறவை ஒன்று அமர்ந்திருந்தது. அதைப் பார்த்தால், போர்ப்பாசறை ஒன்றில் அரசன் நடுவில் அமர்ந்திருக்க, அவனைச் சுற்றி படைத்தளபதிகளும், நட்பு மன்னர்களும் அமர்ந்திருந்தைப்போல மனிமேகலைக்குத் தோன்றியது.
நீர்நிலைகளையும், அவற்றைச் சுற்றிக் குன்றுபோலக் குவிந்துகாணப்படும் மணற்குவியல்களையும் கண்டாள். ஆனால் எங்கும் சுதமதியைக் காணவில்லை.
மணிமேகலையின் கூந்தல் காற்றில் அவிழ்ந்து முதுகில் புரண்டது. பயத்தில் அவள் அரற்றத்தொடங்கினாள். வாய்விட்டு அழத்தொடங்கினாள். துன்பத்தில் மாட்டிக்கொண்ட தனது நிலையை நினைத்து ஏங்கிப் புலம்பத்தொடங்கினாள்.
“தந்தையே! நீங்கள் எதற்காக என் தாய் மாதவியைச் சந்தித்தீர்கள்? இருவரும் ஒருவரையொருவர் ஏன் விரும்பினீர்கள்? எதற்காக என் மற்றொரு தாயான கண்ணகியுடன் நீங்கள் பின்னர் மதுரைநகர் வீதிகளில் அலைய நேரிட்டது? ஏன் கொலைவாளால் குத்தப்பட்டு இறந்தீர்கள்? இப்போது என் நிலையைப் பாருங்கள்! எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதுகூடத் தெரியாமல் இப்படி ஓரிடத்தில் வந்து தவிக்கிறேன்,“ என்று அழுதாள்.
எவ்வித முன்னறிவிப்புமின்றி அந்த இடம் ஒளிபெறத் தொடங்கியது. மணிமேகலையின் முன்பிருந்த நிலத்தில், வெடித்து முளைத்ததைப்போல — ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்பது முழ அளவுடன், சிற்ப சாத்திரங்கள் கூறும் இலக்கணம் வழுவாது, மின்னும் பளிங்கு கற்களினால் செய்யப்பட்ட தாமரைப்பீடம் ஒன்று தோன்றியது.
புத்தபிரானுக்கு என்று வடிவமைக்கப்பட்ட பத்மபீடிகை அது. மரங்கள் அதன்மீது மணமில்லாத மலர்களைச் சொரிவதில்லை. பறவைகள் அதன்மேல் அமர்ந்து சப்தம் எழுப்பவோ, எச்சமிடவோ செய்யவில்லை. தேவர் தலைவன் இந்திரனால் புத்தபெருமானுக்கென்று சிறப்புடன் செய்துகொடுக்கப்பட்ட பீடிகை அது. அதன் முக்கியமான சிறப்பு என்னவென்றால், அதனைக் காண்பவர்களுக்குத் தங்களது முந்தையப் பிறப்புகளை நினைவுபடுத்தும் தன்மையேயாகும்.
அந்தப் பீடத்திற்கென்று ஒரு வரலாறு உண்டு. ஒருமுறை கீழ்த் திசையில் இருக்கும் நாகநாட்டை ஆண்டுவந்த நாகமன்னர்கள் இருவர் இந்தத் தீவிற்கு வந்து, அந்தத் தீவு தமக்கே உரியது என்று சண்டையிட்டுக்கொண்டனர். முடிவில் அந்தச் சண்டையானது உக்கிரமான பெரும்போரில் கொண்டுவிட்டது.
அங்கு தோன்றிய புத்தர்பிரான், “என்னுடைய தீவிற்காக நீங்கள் இருவரும் இத்தனை வலிய போர் நிகழ்த்தவேண்டிய அவசியம் என்ன?“ என்று பல அறநெறிகளை இந்தப் பீடத்தில் அமர்ந்துதான் கூறினார். பல அறவோர்களால் பெரிதும் புகழப்படும் பத்மபீடம் அது. அத்தகைய சிறப்புமிக்க பத்மபீடமே அங்கு தோன்றியது.
*** *** ***
மிக மிக அருமை. இத்தனை நாளாய் உங்கள் அடுத்த episode காத்திருந்தேன். ஆஹா என்னவொரு அருமையான இயற்கை வருணணை….! அந்த அழகான இடத்திற்கு வாசிப்பவரை அழைத்து செல்வதை போல் உள்ளது.
அருமையான பதிவு வருணனையும் சிறப்பு நானே அங்கு வசிப்பது போல் ஓர் உணர்வு சிறப்பு மிக்க நன்றி
அருமையான பதிவு.வருணனையும் அழகாக உள்ளது.ஆர்வத்துடன் படிக்கத் முடிகிறது.செய்யுளை வாசிப்பது போல் உள்ளது. மிக்க நன்றி