பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16

தன்னை நோக்கிய மணிமேகலையைப் பார்த்து, “என் உரையாடல்  சலிப்பூட்டுவதாக இருக்கிறதா  பெண்ணே?” என்று கேட்டார் அறவண அடிகள்.

“சலிப்பூட்டவில்லை அடிகளே. மலைப்பூட்டுகிறத!. மக்கள் நலன்கருதித் தொடங்கும் செய்கைகள்கூட எத்தனை இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது?“

“நீ அப்படி மலைப்படையக் கூடாது என்பதற்காகத்தான் உன்னிடம் சொல்கிறேன்,”  என்று அறவண அடிகள் அவளைப் பார்த்து முறுவலித்தார்.

தன் மகளை முற்றும் அறிந்த ஒரு துறவியிடம்தான் சேர்த்திருக்கிறோம் என்பதில் மாதவிக்கும் அமைதி ஏற்பட்டது.

ஆவலை அடக்க முடியாத சுதமதி, “ஆபுத்திரன் கதை அதன்பிறகு என்னவாயிற்று?” என்று கேட்டாள்.

“குளிர்ந்த சீதோஷண நிலையை உடைய தவள மலை என்ற மலையுச்சியில் நற்றவம் செய்யும் மண்முகன் என்ற பெயருடைய முனிவரின் குடிலில் தனது மறுபிறவியில் ஒரு பசுவாகப் பிறந்தது.” என்றார்.

“அட!“ என்றாள் சுதமதி.

“இதற்கே ஆச்சரியப்பட்டால் எப்படி? அந்தப் பசுவிற்குக் கொம்பும், குளம்பும் பொன்னில் அமையப்பெற்றிருந்தன, தெரியுமா சுதமதி?” என்றார் அறவண அடிகள்

“ஆஹா!“ என்றாள் சுதமதி.

“உன்னைப்போல்தான் அந்த ஊர் மக்கள் அதன் அதிசயமான குளம்புகளையும், கொம்புகளையும் பார்த்து இது சாதாரணப் பசு இல்லை, தெய்வப்பசு என்று வணங்கத் தொடங்கினர். இன்னும் ஓர் அதிசயம், கேள். தான் கன்று ஈனுவதற்கு முன்பே மன்னுயிர்க்கு எல்லாம் பால்சுரந்து அளிக்கத் தொடங்கியது.

“அந்தப் பசுவின் வயிற்றில் ஒருவன் பிறப்பான். அவன் பிறப்பால் மழைவளம் செழிக்கும், மன்னுயிர்கள் பாதுகாக்கப்படும் என்பதை முக்காலத்தையும் நன்குணர்ந்த மண்முகன் முனிவர், உணர்ந்தார். அவன் மற்ற மானிடப் பிறப்பினைப்போல கர்ப்பவாசமாகக் குடல் சுற்றிக் கிடவாமல் ஒரு பொன்முட்டையில் வந்து தோன்றுவன் என்பதையும் தனது தவநெறியால் அறிந்தார்.

“ஆபுத்திரன் நல்லவன். மன்னுயிர்களின் பசிப்பிணி அறிந்து அவர்கள் பசியைத் தனது அமுதசுரபியின் திறன்கொண்டு மாற்றியவன். தன்னைப் பிறந்தவுடன் பாலூட்டி வளர்த்த பசுச் செய்த உதவியை மறவாதவன். இந்திரன் செய்த சதியினால் கொள்வார் எவருமின்றி அமுதசுரபி செயலற்றுப் போய் அதனைப் பொறுக்காமல் மணிபல்லவத்தில் உயிர் நீத்தவன். மீண்டும் பிறவியெடுத்த அதே பசுவின் வயிற்றில் நாவல்மரங்கள் ஓங்கிய இந்தத் தீவினில் ஆள்வோரும் வாழ்வோரும் வணங்கும்படி வந்து தோன்றினான். வைகாசி திங்களில் மற்ற மீன்கள் சென்ற பின்னர்ப் பதின்மூன்றாம் விண்மீனாகிய வைகாசி விண்மீன் நாளான முழுநிலவு தோன்றும் நாளன்று அதாவது புத்த பெருமான் தோன்றிய அதே பொன்னாளில் இப்பூவுலகில் வந்து பிறந்தான்.”

“நல்லவர்களின் பிறப்பு மட்டும்தான் இப்படி அமையும்,“ என்றாள் மாதவி.

“கொளுத்தும் கோடைப்பருவமான வைகாசித் திங்களில் மழைபெய்து பார்த்திருக்கிறோமா? அவன் பிறந்த அன்று சோவென்று மழை கொட்டித்தீர்த்தது. மேலும்பல நல்ல நிமித்தங்களின் அறிகுறிகள் தோன்றின. மக்கள் மனம் மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தது. சக்கரவாளக் கோட்டத்திலுள்ள துறவிகளுக்கு ஒரே பரவசம். கோட்டத்தில் உள்ள கம்பக் கடவுளிடம் அதன் காரணத்தைக் கேட்கலாம், அவள் அறியாத சேதி இராது என்று கிளம்பிப் போனார்கள். கந்துத்தூணில் இருந்த அந்தப் பாவைதெய்வம் சும்மா இராமல், ‘எல்லாம் அறவண அடிகள் அறிவார், போய்க்கேளுங்கள்!’ என்று கூறிவிட்டது. அன்று தொடங்கி, கேட்கும் ஒவ்வொருவருக்கும் ஆபுத்திரன் கதையைச் சொல்லி சொல்லி என் வாய் கிழிந்துவிட்டது “ என்றார் அறவண அடிகள்.

மணிமேகலை சிரித்தாள்.

“பாவம் அடிகளே நீங்கள்!“ என்றாள் சுதமதி.

“என்ன செய்வது? ஒரு நிலைக்குப் பிறகு இவற்றையெல்லாம் பார்த்தால் ஆகாது.”

“ஆனால், அதன் பறகு ஆபுத்திரனுக்கு நேர்ந்தது வேறு மாதிரியாகப் போனது.” என்றார் அறவண அடிகள்.

“சொல்லுங்கள், சொல்லுங்கள் என்ன நடந்தது?” என்றாள் சுதமதி, ஆவலுடன்.

சாவகத்தீவின் அரசன் பூமிசந்திரன் ஒருநாள் மண்முகன் முனிவரின் குடிலுக்குச் சென்றான். அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினான். முனிவர் அவன் தேடி வந்த காரணம் குறித்துக் கேட்டார். ‘எனக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் புத்திரபாக்கியம் இல்லை. உங்களிடமுள்ள பொன்குளம்புப் பசுவின் வயிற்றில் பொன்முட்டை ஒன்றிலிருந்து ஆண்சிசு ஒன்று பிறந்தது என்று ஊரெல்லாம் பேச்சாக உள்ளது. நீங்கள் மனம் இரங்கி எனக்கு அந்தக் குழந்தையைக்  கொடுத்தால் பிள்ளைப்பேறு இல்லாத நான். அவனுக்கு ஒரு நல்வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கமுடியும். நான் வளர்த்தால் அவன் மன்னர்மகன் ஆகிவிடுவான். அனுமதி அளியுங்கள்,’ என்று வேண்டி நின்றான்.

“வேந்தன் தன் செங்கோல் திரிந்து அருளாட்சி செய்ய மறந்தாலும், தர்மங்களின் தலைவன் இந்திரனுக்கு வேள்விகள்மூலம் போய்ச்சேரவேண்டிய அவிர்பாகம் போய்ச் சேராவிட்டாலும் மக்களின் உயிர் காக்கும் காவிரி பொய்த்துவிடும். இது மக்களின் நம்பிக்கை.  நாட்டில் வற்கடம் என்ற பெரிய பஞ்சம் ஏற்படும். அப்படி ஒரு பஞ்சம் காவிரி பூம்பட்டினத்தில் இப்போது நிலவுகிறது, ஆயிழை மணிமேகலை! அதிமான மக்கள் பசியால் வாடுகின்றனர். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்து உண்ட தேவர்கள், எஞ்சிய அமுதை அந்த அமுதக்கலசத்திலேயேவிட்டு வைத்ததைப்போல, அள்ளி வழங்கும் அட்சயபாத்திரமான அமுதசுரபியை நீ இன்னும் பயன்படுத்தாமல் வைத்திருக்கிறாய்.” என்றார்.

மணிமேகலை தனது தாயார் மாதவியுடன்  அடிகளின் பாதங்களில் விழுந்து வணங்கினாள்.

“நிச்சயமாக இந்த ஊரில் உள்ளோர் பசிப்பிணியை இந்த அமுதசுரபிமூலம் தீர்க்கிறேன் ஐயனே! விடை கொடுங்கள்,“ என்றாள்.

அறவணஅடிகளும் அவளுக்கு நல்லாசிகள்கூறி  வழியனுப்பிவைத்தார்.

மணிமேகலை தாயுடனும், தோழியுடனும் புகார்நகரின் பெரிய வீதிகளில் துறவிக்கோலம் பூண்டு தனது கையிலிருந்த அமுதசுரபி என்னும் திருவோட்டுடன் அலையத்தொடங்கினாள்.

ஹோய்ய் என்ற கூப்பாடுடன் அந்த நகரத்தில் உள்ள சிறுவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர்.

“தள்ளிப் போங்கள்,” சுதமதி விரட்டினாள். அவள்  கையை  ஓங்கியதும் சிறுவர்கள் மேலும் அதிகமாகக் கூச்சலிட்டனர்.

“எதற்காக இப்படி எங்களைத் துரத்திவந்து கூச்சல் போடுகிறீர்கள்?” என்று சுதமதி  சீறினாள்.

“சுதமதி!  அவர்களை ஒரு பொருட்டாக மதித்தால்தான் அவர்களுக்கு விடலைத்தனம் அதிகமாகும்.  விடு,” என்று மாதவி சுதமதியை அடக்கினாள்.

“அவர்களை விரட்டலாம். இவர்களை என்ன பண்ணுவது?” என்று மணிமேகலை சுட்டிக் காட்டிய இடத்தில் நான்கைந்து காமுகர்களும், பரத்தையரும் நின்றிருந்தனர். அதில் ஒரு காமுகன் மணிமேகலையைப் பார்த்துக் கீழ்த்தரமான சைகை ஒன்றைக் காண்பித்தான்.

“பெண்கள் ஒன்று வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கவேண்டும்.  அல்லது காமக்கிழத்திகளாக இருக்க வேண்டும். ஒன்று பத்தினி; மற்றொன்று பரத்தை. இரண்டும் இரு உச்சநிலைகள். இவற்றின் நடுவில் கல்வியும், கவிதையும், மென்மையும், மேன்மையும் உள்ள பெண்கள் உண்டு என்பதை உணராமலே போகும் குடிவகை. சை என்ன வாழ்க்கை அம்மா, இந்தப் பெண்ணின் வாழ்க்கை?”

“அதற்குள் சலிப்பா மணிமேகலை?  இன்னும் எவ்வளவு இருக்கிறது?”

“உனக்கென்ன அம்மா? தந்தையின் பாதுகாப்பில் இருந்துவிட்டு எதுவும் வேண்டாம் என்று சமயப் பற்றுக்கொண்டுவிட்டாய். சனாதன மதத்தில் பெண்களின் உயரியநிலை பத்தினிநிலை. அது உனக்கும் எனக்கும் ஒருநாளும் கிடைக்கப்போவதில்லை. என்மீது கவியும் கணிகையின் மகள் என்ற நிழலும் என்னைவிட்டு நீங்கப்போவதில்லை. என் நிழலைக்கூட முகர்ந்து துரத்தும் அரசகுமாரனை என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே அம்மா?” என்று வருந்தினாள் மணிமேகலை.

மகளுக்கு மறுமொழிகூற வார்த்தைகள் இன்றி மாதவி மருகினாள்.

ஆனால் பெண்ணாகப் பிறந்து உரியபருவத்தில் காதல் மணம்கொண்டு இல்லறதர்மத்தை வளர்ப்பதற்கு வழியின்றிப் பிச்சைப்பாத்திரத்தைக் கையில் ஏந்தி ஒரு பெண்துறவியாக வலம்வரும் மணிமேகலையின் நிலையைகண்டு மனம்வருந்தும் மக்களும் அங்கு இருந்தனர்

‘இது என்ன அதிசயம்? அரசகுமாரன் மணிமேகலையை விரும்பி அலைந்தான். இவள் ஏழுநாட்கள் போன இடம் தெரியவில்லை; எங்கே இருந்தாள் என்பதும் தெரியவில்லை. இப்போது பார், துறவிக்கோலம் பூண்டு, கைகளில் திருவோடு ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாளே…என்ன கொடுமையான கோலம் இது?’ என்று அவளுக்காகக் கண்ணீர் உகுக்கும் பெண்களும் இருந்தனர்.

“உன் கடமை என்ன மணிமேகலை? பிச்சைப்பாத்திரம் ஏந்தி பத்தினிப்பெண்டிரிடம் அன்னம் வாங்குவது. கேலிபேசுபவர்கள், வம்புபேசுபவர்கள், வருத்தம்தெரிவிப்பவர்கள் கூறும் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாதே. வாழ்ந்தாலும் பேசுவார்கள்; தாழ்ந்தாலும் பேசுவார்கள். இவர்களுக்கு வம்பு பேசவேண்டும்; வேறு எதுவும் வேண்டாம்.” என்றபடி மாதவி மற்ற இருவரையும் அழைத்துக்கொண்டு இல்லறதர்மம் ஓம்பும் பெண்கள் நிறைந்த மாடவீதிக்குச் சென்றாள்.

உயர்ந்த மாடங்கள் நிறைந்த வீதி அது. வாசலில் நீர் தெளித்து அழகாகக் கோலமிட்டு மஞ்சள் தடவி எல்லா இல்லங்களும் அடிசில் மணம் கமழ இருந்தன. மாதவி ஓர் இல்லத்தின் வாயிலில் போய் நின்றாள்.

“அம்மா!“ என்று கூவி அழைத்தாள்.

Image result for manimekalai story in tamilதுறவின் மிகக்கடினமான செயல், தான் என்பதை அறவே துறந்து, பசிக்கு உணவுவேண்டி, வேற்று இல்லத்தின்முன் நின்று, அம்மா உணவளியுங்கள் என்று அழைப்பதுதான். மாதவியின் கண்களில் நீர் நிறைந்தது. தான் பிச்சை எடுக்கிறோம் என்ற நினைப்பு மணிமேகலை முகத்தில் சிறிதும் இல்லை. மாறாக முகத்தில் புன்னகை மலர, “அம்மா! பத்தினிப் பெண்கள் இடும் பிச்சை, பெரும்பிச்சைகளில் சிறந்த பிச்சை. புண்ணியவதி. சோறு போடம்மா” என்று வேண்டிநின்றாள்.

அப்போது அந்த இல்லத்திலிருந்து ஒரு மாது வெளியில் வந்தாள்.

“நீ சொல்வது உண்மைதான் மணிமேகலை. இருப்பினும் தூய நீருடைய குளத்திற்கு அழகாய்ப் பூத்து நிற்கும் தாமரை மலர்தானே தனி அழகு? அதைப்போல, இந்த வீதி பத்தினிப்பெண்டிர் நிறைந்ததுதான் என்றாலும் அந்த இல்லத்தில் உள்ள ஆதிரை என்ற மாது பத்தினி பெண்களின் நடுவில் தனித் தன்மையும் பெருமையும் வாய்ந்தவள். அவள் இல்லத்திற்குச் சென்று உன் முதல் பிச்சையைப் பெற்றுக் கொள்,“ என்று ஆதிரையை அந்த மாது பரிந்துரைத்தாள்.

அவ்வாறு கூறியவள் பெயர் காயசண்டிகையாகும். அவளுடைய சொந்த ஊர் வடதிசையில் உள்ள விஞ்சை என்ற பெரிய நகரமாகும். வானில் பறந்துசெல்லும் ஆற்றல்கொண்ட இந்தக் காயசண்டிகை ஒருமுறை தென்திசையில் பொதிகை மலைச்சாரலில் ஒரு சிறிய ஆற்றின் கரையில் இருந்த முனிவரின் சாபத்தால் எப்போதும் எரியும் அக்னிபோன்ற பசியைத் தன் வயிற்றில்கொண்டவள்.

One Reply to “பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16”

  1. சத்தியபிரியன் அவர்களே,
    உங்களுடைய பதிவுகளுக்காக காத்திருக்கிறன். தினமும் மின்னஞ்சலை ஆவலுடன் பார்த்து உங்கள் பதிவின்றி ஏமாற்றமடைகிறேன். உங்களுடைய கட்டுரையில் உள்ள சொல்லாட்சி கண்டு வியக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *