கல்யாணச் சாப்பாடு!
[தனிமனிதர் உரிமையைப் பாதுகாக்கவேண்டி, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.]
சிறுவர்கள் என்றாலே சண்டை இருக்கும், சேர்தலும் இருக்கும். நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் தெருச்சிறுவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. சிறுவர்குழாத்திற்கு தலைவர்களும் இருப்பார்கள். அத்தலைவர்களான சிறுவர்கள்தான் அக்குழாத்தில் யார் இருக்கவேண்டும், யார் நீக்கப்படவேண்டும் என்பதையும் தீர்மானிப்பார்கள்.
தீர்மானம் எடுக்கப்படும் காரணங்கள் பெரும்பாலும் பைசாப்பெறாத விஷயங்களாகவே இருக்கும். சான்றாக, விளையாட டென்னிஸ் பந்து கொண்டுவரவில்லை, விளையாட்டு முடிவதற்குள் கிளம்பிச்செல்வது, தேர்வுக்குப் படிக்கிறேன் என்று ஊர்சுற்ற வராமலிப்பது, தனியார் தோட்டத்தில் சுவரேறிக்குதித்து மாங்காய்பறித்துத் தின்ன மறுப்பது போன்ற குழாத்தின் மேன்மைக்கு இழுக்கை உண்டாக்கும் மிகமுக்கியமான காரணங்களாகவேயிருக்கும்.
இந்தக் காரணங்களைக்கூறி, அது மிகவும் தவறு என்று குழாத்திற்கு அறிவித்து, இப்படி குழாத்தின் மேன்மைக்கு ஊறுவிளைவித்ததால் — குழுவிலிருந்து நீக்கப்படவேண்டும் என்றமுடிவையும் குழுத்தலைவனான சிறுவனே அறிவிப்பான். அதை எதிர்த்தால், நீக்கப்படவேண்டிய சிறுவனுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தால் — எதிர்ப்பவர்களும் சேர்த்து குழுவிலிருந்து நீக்கப்படுவார்கள்.
எங்கள் குழுவின் தலைவன் என் வயதொத்த ஜிட்டு என்ற, என்வீட்டுக்குப் பக்கத்துவீட்டுச் சிறுவன். அந்தவீட்டில் மொத்தம் மூன்று சிறுவர்கள். எங்களைவிட மூன்று வயது பெரிய பெரியண்ணன் இந்தக் குழாத்தின் முடிவு எதையும் ஏற்றுக்கொள்ளமாட்டான். அவன் எல்லோருடனும் பேசுவான், யாருடனும் சண்டைபோடமாட்டான். தலைமையை அவன் ஏற்றுக்கொள்ளாததால் ஜிட்டு தலைவனான்.
அதை ஏன் யாரும் எதிர்க்கவில்லை?
அவன்வீட்டில்தான் தெருச்சிறுவர்கள் அனைவரும் லூட்டியடிப்போம். பெரியவர்கள் யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள். அவர்கள்வீட்டில்தான் நாங்கள் விரும்பிப்படிக்கும் அம்புலிமாமா, தினத்தந்தி, பேசும்படம், கலை, குமுதம், காதல் போன்ற பத்திரிகைகள் வாங்கப்படும். இவையெதுவும் தெருவிலுள்ள இந்துமதாபிமான சங்கத்திலோ, அருகிலுள்ள படிப்பகங்களிலோ இருக்காது. நாங்கள் அவற்றை முதன்முதலில் படிப்பதை வீட்டிலுள்ள பெரியவர்கள் யாரும் தடுக்கமாட்டார்கள், நாங்கள் படித்துக்கொண்டிருக்கும்போது தாங்கள் படிக்கவேண்டும் என்று எங்கள் கையிலிருந்து பிடுங்கமாட்டார்கள்.
இப்படிப்பட்ட சலுகை இருக்கும்போது ஜிட்டு எங்கள் சிறுவர் குழாத்தின் தலைவனானதில் வியப்பேதுமில்லை.
ஒரு சிறுவன் குழாத்திலிருந்து நீக்கப்படும்போதே, எத்தனை நாள்களுக்கு நீக்கப்படுகிறான் என்றும் சொல்லப்படும். சிலசமயம் காலவரம்பின்றியும், குழாமிலிருந்து நீக்கப்படுவதும் உண்டு. அப்படி நீக்கப்பட்டவர்களை — அவர்களது எதிர்கால நன்நடத்தைகளைக் கண்டு, மனமிரங்கி — ஜிட்டுவாகக் குழாத்தில் சேர்த்துக்கொண்டால்தான் உண்டு.
சிவகங்கையிலிருக்கும் என் தந்தைவழிப் பாட்டனாரின் வீட்டுக்கு விடுமுறை நாள்களைக் கழிக்கச்செல்வது மிகவும் நிம்மதியைத் தரும் ஒரு நல்ல மாற்றமாகவேயிருக்கும். ஏனெனில், அங்கு ஜிட்டுமாதிரி ஒரு தலைவனும் கிடையாது, சண்டை-சேர்த்தியோ, காய்-பழமோ கிடையாது. அங்கு கிட்டு, ராமு, சின்னச்சாமி, தங்கரத்தினம் என்ற பல நண்பர்கள் என் வருகைக்காகக் காத்துக்கொண்டிருப்பார்கள். கோலிக்குண்டு, கபடி, ஐஸ்பாய் போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்வோம். அல்லது, சிவன் கோவில் படிக்கட்டுகளில் அமர்ந்து அரட்டையடித்துக்கொண்டிருப்போம்.
சிலசமயம், உடசா ஊருணியில் குளிப்பதும் உண்டு. அது ஆழமில்லாத ஊருணி என்பதால் எங்களைப்போன்ற சிறுவர்களால் லூட்டி அடித்து விளையாடமுடியும். பெரியவர்கள் எங்களை விரட்டமாட்டார்கள்.
தங்கரத்தினத்திற்கு செண்பகம், காமாட்சி என்று இரண்டு தமக்கையர் உண்டு. அவர்களும் என்னிடம் மிகவும் அன்பாக இருந்ததால் தங்கரத்தினம் சிவகங்கையில் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பனாக இருந்தான்.
இப்படியிருக்கும்போது, காரைக்குடியில் ஒருநாள் ஜிட்டு நாங்கள் விளையாடும் என்னுடைய டென்னிஸ் பந்தை ஒளித்துவைத்துத் தரமுடியாது என்று சொன்னான். நான் தந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், பந்தைத் திருப்பித்தந்துவிட்டு, என்னைக் காலவரையின்றி எங்கள் குழாமிலிருந்து நீக்கிவிட்டான்.
அது நடந்து சில நாள்களிலேயே, தங்கரத்தினத்தின் தந்தைக்குக் காரைக்குடியில் வேலை கிடைத்து, நான் இருந்த தெருவிற்கே அவன் குடும்பத்துடன் குடிவந்தது அளவுகடந்த மகிழ்ச்சியைத் தரத்தான் செய்தது. குழாத்திலிருந்து தனித்துவிடப்பட்ட எனக்கு தங்கரத்தினம் ஒரு தோழனாக அமைந்தான். ஆயினும், அந்த மகிழ்ச்சி விரைவிலேயே நீடிக்காமல் போனது.
காரணம்…
சைனிக் ஸ்கூல் தேர்வுக்காக நான் ஒருவாரம் சென்னைக்குப் போகநேர்ந்தது. அச்சமயம், தங்கரத்தினம் தனித்துவிடப்பட்டான். அவன் அம்மா அதைப்பார்த்ததும் மனமுருகி, ஜிட்டுவைப் பார்த்து, தங்கரத்தினத்தை விளையாடச் சேர்த்துக்கொள்ளச்சொன்னர்கள். ஜிட்டுவும் அதற்கு ஒப்புக்கோண்டான். தங்கரத்தினத்தினத்திற்கு ஒரு நிபந்தனைவிதித்தான். அவனும் அதற்கு ஒப்புக்கொண்டான்.
திரும்பிவந்த நான் தங்கரத்தினத்தை விளையாட அழைக்கப்போனால், அவன் ஜிட்டு குழாத்துடன் விளையாடிக்கொண்டிருப்பதைக்கண்டு திடுக்கிட்டேன்.
அவனை விளையாட அழைத்தேன். அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டான்.
எனக்குப் பெருத்த ஏமாற்றம்.
இருப்பினும் எனக்கு ஏற்பட்ட தனிமை பள்ளி அரையாண்டுத் தேர்வில் என் வகுப்பில் என்னை முதல்மாணவனாக வரவைத்தது.
எப்படியோ என் பாட்டிக்கு விஷயம் தெரியவே, அவர்கள் ஜிட்டுவின் அம்மாவிடம் பேசினார்கள்.
விளைவு…
ஜிட்டு தனது காலவரையற்ற சண்டையை வெற்றிகரமாக வாபஸ் வாங்கிக்கொண்டான். ஜிட்டுவே பழம் விட்டுவிட்டான், ஆகையால் தங்கரத்தினத்தினத்துடன் பழையபடி சேர்ந்து பழகலாம், விளையாடலாம் என்று எதிர்பார்த்த என்னை ஏமாற்றமே எதிர்கொண்டது.
“இனிமேல் உன்னுடன் சேரமாட்டேன் என்று நான் ஜிட்டுவுக்கு சத்தியம் செய்துகொடுத்துவிட்டேன். நான் சத்தியத்தை மீறமாட்டேன். எப்போதும் உன்னுடன் காய்தான்!” என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டான். ஜிட்டுவே தனது நிபந்தனையைத் திரும்பப்பெற்றபோதும், தங்கரத்தினம் மனம் மாறவில்லை.
ஒரு நல்ல நண்பனை இழந்த ஏமாற்றம் எனக்கு. நாய் தனியேசென்று தனது காயத்தை நக்கிக் குணப்படுத்திக்கொள்வதுபோல, எதிலும் கலந்துகொள்ளாமல் நானுண்டு, எனது படிப்புண்டு என்று தனித்திருந்து என் இதயப்புண்ணை எண்ணங்களால் நக்கிப்பார்த்து — தங்கரத்தினமும் நானும் சிவகங்கையிலும் காரைக்குடியிலும் நட்புடன்பழகிய நாள்களை எண்ணியெண்ணிப் பார்த்து — அது ஒரு கனவாகவே இருந்துவிட்டுப்போகட்டும் என்று மெதுவாகத் தன்னிலைக்குத் திரும்பிவந்து, ஜிட்டு குழாத்தின் நிழலில் குளிர்காயத்துவங்கினேன்.
இச்சமயத்தில் தங்கரத்தினத்தின் அக்கா செண்பகத்தின் திருமண நாளும் வந்தது. தெருவிலிருக்கும் குடும்பங்கள் அனைவரும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டன. காலைச் சிற்றுண்டியிலிருந்து மதிய உணவுவரை தங்கரத்தினத்தின் அக்கா திருமணத்தில்தான்.
என் பாட்டியும், அம்மாவும் என்னை உடனழைத்தும் நான் அங்கு வரமறுத்தேன்.
“தங்கரத்தினம் ஏதாவது சொல்வான். எதற்கு வம்பு? நான் வரமாட்டேன்!” என்று சொல்லி, பழையமுதை எடுத்துப்போட்டுக்கொண்டு சாப்பிட்டேன்.
என் பாட்டியிடம் தலையலங்காரம் செய்துகொள்ள என்வீட்டிற்கு வந்த செண்பகமும், அவளது அன்னையும், நான் பழையமுது உண்ணுவதைப்பார்த்து, “ஏன் இப்படிச் செய்கிறாய், எங்கள் வீட்டுக்கல்யாணத்தில் சாப்பிடாமல்?” என்று என்னைக் கடிந்தார்கள்.
“வந்தால் தங்கரத்தினம் ஏதாவது சொல்வான். எதற்கு வம்பு? நான் வரமாட்டேன்!” என்று கீறல்விழுந்த கிராமஃபோன் தட்டுமாதிரி, மீண்டும் மறுத்துவிட்டு, எழுந்து, தட்டை அலம்பிவைத்துவிட்டுப் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமானேன்.
செண்பகத்தின் கண் கலங்கிவிட்டது.
“தங்கரத்தினம் என்ன பெரிய இவனா? நீ என் தம்பிடா. என் கல்யாணத்துக்கு வந்து நீ சாப்பிடாட்டா எனக்கு மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும். நீ வரத்தான் வேணும்,” என்று வற்புறுத்தினாள்.
நான் அரைமனதுடன் ஒப்புக்கொண்டு, “மத்தியானம் சாப்பிட வர்றேன்.” என்று பள்ளிக்குக் கிளம்பிவிட்டேன்.
மதிய இடைவேளையில் வீட்டில் புத்தகப் பையை வீசிவிட்டு, ஜிட்டு குழாத்துடன் திருமணப் பந்தலுக்கு நடந்தேன்.
அங்கு போடப்பட்டிருந்த கட்டிலில் கூந்தல் பனையைப் பிய்த்து ஊதல் செய்து, பீ, பீ என்று ஊதிக்கொண்டிருந்த தங்கரத்தினம், என்னைப் பார்த்ததும், “சண்டைக்காரா! வெக்கமில்லாமல் என்வீட்டுக்கு ஏண்டா சோறுதிங்க வந்திட்டே?” என்று முழங்கினான்.
எனக்கு நாக்கைப் பிடுங்கிக்கொள்ளலாம்போல இருந்தது. அதேசமயம், தங்கரத்தினத்தை அங்கேயோ புரட்டிப்போடு ரெண்டு சாத்துசாத்தி எங்கள் குழாம் எல்லோர் முன்னாலும் அவன் செய்த அவமானத்திற்குப் பதிலடி கொடுக்கவேண்டும்போல இருந்தும் ஏனோ கையாலாகாதவனாகிப்போய், வீட்டுக்கு ஓடிவந்துவிட்டேன்.
இந்தவிவரம் விலாவாரியாக என் பாட்டியிடம் ஜிட்டுவால் தெரிவிக்கப்பட்டது.
சாப்பிட்டுக்கொண்டிருந்த என் பாட்டி பாதியிலேயே எழுந்து ஓடிவந்தார்கள்.
அவர்களைக் கண்டதும் எரிமலையாக வெடித்தேன்.
“இதற்குத்தான் நான் அங்கே வரமாட்டேன்னு சொன்னேன். இப்ப திருப்தியா, சந்தோஷமா?”
அதற்குமேல் சொற்கள் கிளம்பவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.
பசி வயிற்றைக் கிள்ளியது.
“பழையதையாவது போட்டுத்தொலை, பாட்டி. தின்னுட்டு ஸ்கூலுக்குத் தொலையறேன்,” என்று என் பாட்டியிடம் எனது கையாலாகாத்தனத்திற்கு வடிகால் தேடினேன்.
பாட்டி கையைப்பிசைந்தார்கள், உதட்டைப்பிதுக்கினார்கள்.
“என்ன பாட்டி, பழையதுகூட இல்லையா? காசுகொடு, அம்பாள் கஃபேயில நாலு இட்லியாவது வாங்கித் தின்னுட்டுப் போறேன்.” என் குரலில் சூடேறியது.
“ராஜம்கிட்டே சொல்லி சாப்பாடு கட்டி எடுத்துண்டு வரேண்டா. சித்த பொறுத்துக்கோ!”
பாட்டி ராஜம் என்று சொன்னது தங்கரத்தினத்தின் தாய்தான். எனவே, அப்படிச் சொன்னது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தாற்போலிருந்தது.
“காசு தரமுடியாதுன்னா போ! நான் நாலு டம்ளர் தண்ணியைக் குடிச்சுட்டு ஸ்கூலுக்குப் போறேன். திரும்பிவரத்துக்குள்ளயாவது எதையாவது பண்ணிவை. அந்தப் பயவீட்டிலேந்து எதை நீ கொண்டுவரவும் கூடாது. அவன் வீட்டு வாசப்படியையும் நீ இனிமே மிதிக்கக்கூடாது, சொல்லிட்டேன். மீறி அங்கே போனீனா, நான் உங்கிட்டப்பேசவே மாட்டேன். அம்மாவுக்கும் அதே பேச்சுதான்.”
வாசலில் காலடிச்சத்தம் கேட்டது. எட்டிப்பார்த்த பாட்டியின் முகம் மலர்ந்தது.
என் அப்பா, வேலை காரணமாக திருப்பத்தூர் சென்றவர், திரும்பிவந்திருந்தார்.
“வாங்கோ, மாப்பிளே. இவனை ஓட்டலுக்குக் கூட்டிண்டுபோயி நாலு இட்லி வாங்கிக்கொடுங்களேன். சோதனையா, இன்னிக்குக் கை நிறஞ்சு இருக்கு.” என்று தன் கையில் காசு இல்லாததை மறைமுகமாகத் தெரிவித்தார்கள்.
அப்பா ஏன் என்று கேட்கவே, பாட்டி தயங்கித் தயங்கி விஷய்த்தைச் சொன்னார்கள்.
எப்பொழுது வெளியூர் சென்றுவந்தாலும் என்னை ஓட்டலுக்குக் கூட்டிச்செல்லும் என் அப்பா ஏனோ அப்பொழுது முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
“என்ன மாப்பிளே இப்படி? பாவம் பசிலே இருக்கறவனுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்கமாட்டேன்னா எப்படி?” பாட்டியின் குரலில் பணிவுகலந்த விரட்டல் இருந்தது.
“இவன் அந்தத் திமிர்பிடிச்சவன் வீட்டுக்குத் திங்கப்போகாம இருந்திருக்கணும். இல்லே, போனான். ஒண்ணுக்கும் உதவாத அந்தப்பய சொன்னான்னா, நீயாடா நாயே சோறு போடறே அப்படீன்னு கேட்டுட்டு, அங்கேயே தின்னுட்டு வந்திருக்கணும். ரெண்டுலே ஒண்ணையும் செய்யாம, பொட்டச்சிமாதிரி திரும்பிவந்திருக்கான்.
“ஒருபொழுது பட்டினிகிடக்கட்டும். அப்பத்தான் கோழைத்தனம் போகும்.” என்று விடுவிடென்று வெளியே நடந்து சென்றுவிட்டார்.
நான் சாப்பிடாததனால் அன்று அப்பாவும் அன்று மதிய உணவு உண்டிருக்கமாட்டார் என்று நான் உறுதியாக இன்றும் நம்புகிறேன். அநீதிக்கு எதிராகத் துணிந்து நிற்க, நெஞ்சில் வலுவுடன் இருக்கவேண்டிய நிலை வரும்பொழுதெல்லாம் அன்று நடந்த நிகழ்ச்சியையும், எனது கையாலாகாத்தனத்தையும், என் தந்தையின் அறிவுரையையும் நினைவுக்கு கொண்டுவருகிறேன்.
[கையாலாகாத்தனம் தொடரும்]
***