பிடல் காஸ்ட்ரோ: ஒரு மாய பிம்பம் வரலாறான கதை

பிடல் காஸ்ட்ரோ
பிடல் காஸ்ட்ரோ

வெற்றி பெற்றவர்களால் கட்டமைக்கப்படும் மாய பிம்பங்களை நம்பி அவர்களை நாயகர்களாகப் போற்றுவதும் வரலாற்றுப் பீடத்தில் ஏற்றுவதும் உலகில் காலம் காலமாக நடந்து வருகிறது. இந்தியாவில் இதற்கு மிகச் சரியான உதாரணம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்றால், உலக அளவில் மிகப் பொருத்தமான உதாரணம் கியூப முன்னாள் சர்வாதிகாரி பிடல் காஸ்ட்ரோ.

தனது 90-வது வயதில் கடந்த 2016, நவ. 25-இல் முதுமை காரணமாக காஸ்ட்ரோ மரணமடைந்தார். உலகின் நீண்டநாள் ஆட்சியாளரும், கம்யூனிஸ்ட்களின் உலகத் தலைவரும், அமெரிக்காவின் நெடிய பகையை வென்ற மகத்தான வீரருமான காஸ்ட்ரோ மறைந்ததாக உலக ஊடகங்கள் கண்ணீர் சிந்தின. அதில் இந்திய ஊடகங்களும் சளைக்கவில்லை. அமெரிக்காவை தொடர்ந்து எதிர்த்தவர்; அதன் சூழ்ச்சிகளைத் தாண்டி கியூபா எனும் சிறுதீவில் ஆட்சியை நிலைநிறுத்திக் காட்டியவர் என்பதுதான் அவர் மீதான பாராட்டுகளின் பொதுவான அம்சம்.

இறந்தவரை கண்ணியக் குறைவாக விமர்சிப்பது மரபல்ல என்பது பொதுவான ஓர் அபிப்பிராயம். தவிர, மாய பிம்பங்களால் தன்னை வடிவமைத்துக் கொண்ட சர்வாதிகாரியான பிடல் குறித்த உண்மையான பதிவுகள் அனைவருக்கும் கிட்டுவதில்லை. எனவே, அவரைப் போற்றுவது தொடர்கிறது.

சர்வாதிகாரியாயினும், கியூபாவில் கல்வி, சுகாதாரத்தில் சில அடிப்படை முன்னேற்றங்களுக்கு அவர் வித்திட்டார். அதனை கம்யூனிஸ ஆட்சியாளராக அல்லாமல், கியூப தேசியவாதியாகவே அவரால் செய்ய முடிந்தது. இருப்பினும், திமுக தலைவர் அவ்வப்போது திராவிட அரசியல் பேசுவது போல பிடல் காஸ்ட்ரோவும் அவ்வப்போது பொதுவுடமை பேசி உலக ஆதரவாளர்களை கிளுகிளுக்க வைப்பது வழக்கம்.

1926 ஆக 13-இல் கியூபாவில் பிறந்த பிடல், அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். கியூபாவில் சர்வாதிகார ஆட்சி நடத்திய புல்ஜென்ஸியா பாடிஸ்டோவின் அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிய பிடல், ஒரு கட்டத்தில் (1953) அரசுக்கு எதிராக ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டு கைதானார். இரண்டாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையான  அவர் மெக்சிகோ தப்பிச் சென்றார். அரசுக்கு எதிரான போராளியான அவர் இரண்டாண்டுகளில் எவ்வாறு விடுவிக்கப்பட்டார் என்பது இன்னமும் விடை தெரியாத புதிர்.

மெக்சிகோ சென்ற பிடல் அங்கு மற்றொரு புரட்சியாளர் சே குவேராவை சந்தித்தார். இருவரும் இணைந்து கொரில்லா படைகளை தயார் செய்தனர். அவர்கள் கியூபாவுக்குள் பிரவேசித்து பாடிஸ்டா அரசுக்கு எதிரான கொரில்லா போராட்டங்களை 1956 முதல் 1959 வரை நடத்தினர். சோவியத் ரஷ்யாவின் உதவி அவர்களுக்கு துணைபுரிந்தது. அதன் விளைவாக பாடிஸ்டா அரசு வீழ்ந்தது. 1959, பிப். 16-இல் பிடல் தலைமையில் புதிய அரசு அமைந்தது.

fidel-1959
ஆயுதப் புரட்சியின் வெற்றியைக் கொண்டாடும் பிடல் காஸ்ட்ரோ (1959)

அந்த அரசை உடனடியாக அங்கீகரித்த நாடு எது தெரியுமா? அமெரிக்கா! அந்த அளவுக்கு பிடலின் அரசுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்க உதவியும் இருந்தது. ஆனால், வரலாற்றில் பாடிஸ்டாவை அமெரிக்கா ஆதரித்ததாகவே தொடர் பிரசாரம் இடதுசாய்வு எழுத்தாளர்களால் பரப்பப்படுகிறது.

ஆனால் சோவியத் ரஷ்யா உதவியுடன், பிடல் கியூபாவில் அமைத்த அரசை கம்யூனிஸ அரசாக அறிவித்தவுடன் அதை முறியடிக்க அமெரிக்கா பல முயற்சிகளில் ஈடுபட்டது. அது அந்தக் காலகட்ட பனிப்போரின் தொடர்ச்சி. அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக பிடல் இயங்கியதால் அவரது அரசை வீழ்த்தவும் நாட்டின் பொருளாதாரத்தை முடக்கவும், பொருளாதாரத் தடைகளை விதித்தல், மிரட்டல் போக்கு,  கொலை முயற்சி உள்ளிட்ட சதிகளில்   அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டது. ஆனால், ரஷ்ய ஆதரவுடன் அவற்றை மீறி ஆட்சியில் தொடர்ந்தார் பிடல். அதுவே அவரை நாயக அம்சம் கொண்டவராக மாற்றி இருக்கிறது. ஆனால், பிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ 638 முறை முயன்றது என்று எழுதுவது, உள்ளபடியே நல்ல நகைச்சுவையாகத்தான் இருக்க முடியும்.

இப்போது காஸ்ட்ரோவுக்கு செவ்வணக்கம் செலுத்துவதாகக் கூறிக்கொண்டு இந்திய நகரங்களில் கம்யூனிஸ்ட்கள் இரங்கல் ஊர்வலம் நடாத்தி இருக்கிறார்கள். அதில், கம்யூனிஸ்ட் அல்லாத பலரும் விவரம் புரியாமல் பங்கேற்றிருக்கிறார்கள். இதுபோன்ற இரங்கல் ஊர்வலத்தை கியூபாவில் பிடல் தவிர்த்து வேறெவருக்குமே நடத்த முடியாது என்ற ஜனநாயக உண்மை தெரிந்தால் அவர்கள் அதிர்ந்து போவார்கள்.

நட்புக்கு துரோகம்?

பிடல் காஸ்ட்ரோவின் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவர் அர்ஜெண்டினா நாட்டு கம்யூனிஸப் போராளி சே குவேரா. சே இல்லையேல், பிடல் கியூபா அதிபர் ஆகியிருக்க முடியாது. ஆனால், சேவின் மரணத்துக்கு பிடலே காரணமானார். அது ஒரு நட்பு கசந்து துரோகம் ஆனதன் கதை.

சேவும் பிடலும்...
சேவும் பிடலும்…

சே குவேரா (1928- 1967), அர்ஜெண்டினாவில் பிறந்தவர். கம்யூனிசப் பாதையில் ஆயுதப் புரட்சி நடத்துவதில் நம்பிக்கை கொண்டவர். 1965-இல் மெக்சிகோ தப்பியோடிய காஸ்ட்ரோ, அங்கு சேவைச் சந்தித்தார். சோவியத் பாணி கம்யூனிச அரசியலில் கொண்டிருந்த நம்பிக்கை, இருவரையும் ஒருங்கிணைத்தது. அவர்களுக்கு சோவியத் அரசின் உதவியும் கிடைத்தது.

மெக்சிகோவில் கொரில்லா படையை உருவாக்கிய அவர்கள் கியூபாவில் நுழைந்து ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றினர் (1959). காஸ்ட்ரோ சேவை கியூப மத்திய வங்கியின் தலைவராக நியமித்தார்; 1961-இல், தனது அரசில் அமைச்சராகவும் நியமித்தார். ஆனால், சேவின் ஆளுமை பிடலை விடப் பெரிதாக இருந்ததால் நண்பர்களிடையே கசப்பு நேரிட்டது.

1965-இல் அல்ஜீயர்ஸ் நகரில் நடைபெற்ற ஆப்ரோ – ஆசிய மாநாட்டில் பேசிய சே குவேரா, சோவியத் ரஷ்யாவைக் கண்டித்துப் பேசினார். அமெரிக்காவின் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்துக்கு சோவியத் துணைபோவதாக அவர் குற்றம் சாட்டினார்.  அதுவே, காஸ்ட்ரோ- சே இடையிலான உறவு முறிவதற்கான அரசியல் காரணம் ஆனது.

அதே ஆண்டில்தான் கிரெம்லின் மாளிகையுடன் புதிய ஒப்பந்தத்துக்கு பிடல் தயாராகி வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. சோவியத் அரசும் சேவின் கண்டனத்தை ரசிக்கவில்லை. ஆக, ஒரே நேரத்தில் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு வல்லரசு நாடுகளின் எதிர்ப்பையும் சே சம்பாதித்துக் கொண்டார்.

நண்டர்களிடையே பிளவு வலுத்தவுடன், சே நாகரிகமாக அரசிலிருந்து விலகிக் கொண்டார் (1964). மேலும் பல நாடுகளில் புரட்சி நடத்த விழைவதாகக் கூறி காங்கோ சென்றார். ஆனால், அங்கு அவரது கொரில்லா யுத்தம் தோல்வி அடைந்தது. எனவே தாய்நாடான அர்ஜெண்டினா செல்ல அவர் விரும்பினார்.

ஆனால், கியூபா திரும்பிய அவருக்கு, அங்கு உருவாக்கப்பட்டிருந்த பொலீவிவப் புரட்சிக்கான ஆயத்தங்கள் வியப்பை ஏற்படுத்தின. பிடலின் ஆணையை ஏற்று 1966-இல் பொலீவியா சென்றார் சே. ஆனால், அவருக்கு உதவ வேண்டிய படைகளின் இணைப்பை பிடல் துண்டித்துக் கொண்டார். இது அமெரிக்காவால் பரப்பப்படும் ஒரு சதிக் கோட்பாடு என்று இடதுகள் பிடலை நியாயப்படுத்துவதை இன்றும் காண முடிகிறது.

உண்மையில், பொலீவியாவில் கம்யூனிஸப் புரட்சிக்கு சாத்தியமில்லை என்று 1965-இல் பிடல் காஸ்ட்ரோவே கூறி இருக்கிறார். “1950-இல் செய்யப்பட்ட நிலச் சீர்திருத்தங்களால் நன்மை அடைந்த பொலீவிய விவசாயிகள் அங்கு கம்யூனிச அரசுக்கான ஆயுதப் புரட்சியை ஆதரிக்க மாட்டார்கள்’ என்று சொன்ன அதே காஸ்ட்ரோ, தனது நெருங்கிய சகாவை ஏன் பொலீவியாவில் கொரில்லா புரட்சிக்கு அனுப்பினார்?

சே - கொல்லப்பட்ட பிறகு...
சே – கொல்லப்பட்ட பிறகு…

ஏனெனில், சே குவேராவுக்கு கிடைத்துவந்த உச்சகட்ட வரவேற்பு பிடலை பொறாமைப்பட வைத்தது; தனது அதிகாரத்துக்கான போட்டியாளராக அவரைக் கண்டுகொண்டார் பிடல். ஒரே உறையில் இரு வாள்களுக்கு இடமில்லை என்பதை உணர்ந்த பிடல், அவரை திட்டமிட்டு பொலீவியா அனுப்பியதுடன், அவருக்குத் தேவையான உணவு, மருத்துவ உதவிகளையும் துண்டித்துக் கொண்டார்.

அதனால்தான், லாஹிகுவேரா கிராமத்தில் பொலீவியப் படைகளால் சூழப்பட்டபோது ஆதரவற்ற நிலையில் தவித்த சே, சுட்டுக் கொல்லப்பட்டார் (1967).

சேவின் இறுதி முடிவுக்கு அவரை நிர்பந்தித்து அனுப்பியவர் பிடல் தான். ஆயினும் அவரது கதாநாயக அம்சத்தை மட்டும் சுவீகரித்துக் கொண்ட பிடல், தனக்கு நிகராக வேறெவரும் உருவாகாமல் ராணுவ ஆட்சியைத் தொடர்ந்தார். இறுதிக்காலத்தில் வயோதிகத்தால் பாதிக்கப்பட்டபோதும் கூட, தனது சகோதரரிடம் தான் ஆட்சியை ஒப்படைத்தார் அவர். ஒருவேளை கம்யூனிஸம் என்பது உறவுகளுக்குள் மட்டுமே மலர்வதோ என்னவோ?

1969 முதல் 2008 வரை கியூபாவின் அசைக்க முடியாத அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ, உடல்நலக் குறைவால் ஆட்சியை தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார். இப்போது அங்கு ரவுலின் ஆட்சி தொடர்கிறது. கியூப கம்யூனிசக் கட்சியின் செயலாளராகவும் 1961 முதல் 2011 வரை இருந்தவர் காஸ்ட்ரோ. கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் முடிசூடா மன்னராக காஸ்ட்ரோ இருந்திருக்கிறார். அவரது ஆட்சி முழுமையான ராணுவ ஆட்சி. அங்கு எதிர்க்கட்சிகளே இல்லை; இருக்கவும் முடியாது. அவரைத்தான் நமது ஜனநாயக நாட்டில் இருந்துகொண்டு புகழ்ந்து மாய்கிறார்கள், இடதுகள்.

காஸ்ட்ரோவின் ஆட்சியில் கியூபா மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர்கள் ‘பீலா’ விடுகிறார்கள். உண்மை என்ன?

எந்த ஒரு இடதுசாரி ஆட்சியாளரைப் போலவே, காஸ்ட்ரோ சர்வாதிகாரியாக விளங்கினார். கரும்பு விளைச்சலில் சாதனை படைத்துவந்த கியூபாவில் காஸ்ட்ரோ ஆட்சிக் காலத்தில் சர்க்கரை இறக்குமதி செய்ய வேண்டி வந்தது என்ற ஒரு தகவல் போதும், அவரது ஆட்சியை மதிப்பீடு செய்ய. அது மட்டுமல்ல, 1969 முதல் 1998 வரை கியூபாவில் கிறிஸ்துமஸ் கொண்டாடத் தடை விதித்திருந்தார் காஸ்ட்ரோ! இந்தியாவில் கிறிஸ்தவர்களின் உரிமைகளைக் காக்கப் போராடுவதாக நீலிக் கண்ணீர் வடிக்கும் டோழர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

fidel-castro-3
பிடல்- 2016

காஸ்ட்ரோவின் ஆட்சியில் அவரது அரசியல் எதிரிகள் கொடூரமாக வேட்டையாடப்பட்டனர். சுமார் 10,000 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தவிர 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். தலைநகர் ஹவானாவில் எதிர்க்குரல் எங்கேனும் கேட்டால், ஊரகக் கிராமங்களில் குளக்குகள் (காஸ்ட்ரோவின் கட்சியினர்) பேயாட்டம் போடுவார்கள். அது அச்சத்தின் குடியரசு. அமெரிக்கா என்ற எதிரியை முன்னிறுத்தி, கம்யூனிஸம் என்ற கனவை நடைமுறைப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு காஸ்ட்ரோ நடத்திய அராஜகம்.

காஸ்ட்ரோவின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து தப்ப கள்ளத் தோணியேறி அமெரிக்கா சென்றவர்கள் பல லட்சம். அவர்களில் பலர் நடுக்கடலில் கியூப்ப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் மிகவும் குறிப்பிடத் தக்கது 1994 ஜூலை 13-இல் நடைபெற்ற டக்போட் படுகொலை. கியூபாவிலிருந்து சிறு படகில் புளோரிடாவுக்குத் தப்பியோடிய பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 37 பேர் நடுக்கடலில் எந்த முன்னெச்சரிக்கையுமின்றி சுட்டு வீழ்த்தப்பட்டனர். மரியா வார்லேட் (Maria Werlau ) என்ற ஆய்வாளர் தொகுத்த கியூப ஆவணங்கள், காஸ்ட்ரோவின் படுகொலைகளை உலகிற்கு அறிவிக்கின்றன.

இலங்கைத் தமிழர்களுக்காக ரத்தம் கொதிக்கும் நமது டோழர்களுக்கு, டக்போட் படுகொலை தூசுக்கு சமம். அவர்களைப் பொருத்த வரை, சோஷலிஸக் கட்டுமானத்தில் இதுபோன்ற பலிகள் அவசியம். இடதுசாரிகள் ஆள நேர்ந்தால் என்னவாகும் என்பதற்கு மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்கள் அபாயமான உதாரணங்களை ஏற்கனவே அள்ளி வழங்கி இருந்தாலும், உலக அளவில், அதுவும், அவர்களது நாயகனின் ஊரிலிருந்தே கிடைக்கும் உதாரணம் மேன்மையானது அல்லவா?

இத்தனைக்குப் பிறகும் அவரது சர்வாதிகாரத்தை கியூப மக்கள் ஏற்றது ஏன்? அதில்தான் காஸ்ட்ரோவின் தந்திரம் இருக்கிறது. வரலாற்று ரீதியாக அமெரிக்காவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது அண்டை நாடான கியூபா. அந்த உணர்வலைகளைப் பயன்படுத்தி, கியூப தேசிய உணர்வை கிளர்ந்தெழச் செய்ததும், கறுப்பின மக்களின் ஆட்சியாளராக (ஆப்ரோ-கியூபன்ஸ்) தன்னை அவ்வப்போது அறிவித்துக் கொண்டதும் காஸ்ட்ரோவின் புத்திசாலித்தனம். பாடிஸ்டோவின் ஊழலால் மிரண்டுகிடந்த கியூபாவில் சில அடிப்படை சீர்திருத்தங்களால் நிம்மதி அளித்ததும் காஸ்ட்ரோவின் சாதனை. தவிர எதிர்ப்போரை எந்தக் கருணையுமின்றி நசுக்கியதால், அங்கு உண்மையான ஜனநாயகம் மலரவே இல்லை. அங்கு ஒற்றைகட்சி சர்வாதிகார ஆட்சியே நிலவுகிறது. அங்குள்ள மக்கள் நிதர்சனத்தில் காஸ்ட்ரோவை முழுமையாக ஏற்றார்களா என்பது, தற்போதைய ரவுலின் ஆட்சியும் முற்றுப் பெற்றால்தான் தெரியும்.

உறவினர்களே தப்பியோட்டம்!

பிடல் காஸ்ட்ரோவின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் ரகசியமானது. அவரது தனிப்பட்ட வாழ்க்கை தூய்மை அற்றது. புரட்சியாளர் என்ற பிம்பத்தால் பெண்களை போகப் பொருளாக அணுகுவது அவருக்கு மிக எளிதாக இருந்தது.

பிடலுடன் ரவுல் காஸ்ட்ரோ
பிடலுடன் ரவுல் காஸ்ட்ரோ

காஸ்ட்ரோவின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலும் வெளியுலகத் தொடர்பை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. பலர் பிடலுடன் கொண்ட கருத்து வேறுபாட்டால் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டார்கள். சிலர் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டார்கள்.

பிடலின் குடும்பத்தினரில் வெளியுலகுக்கு பரிச்சயமானவர்கள் அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ (தற்போதைய கியூப அதிபர்), மற்றொரு சகோதரர் ரமன் காஸ்ட்ரோ, மூத்த மகன் ஃபிடலிட்டோ (அணு விஞ்ஞானி) ஆகிய சிலர் மட்டுமே. ஆனால், அவருக்கு அதிகாரப்பூர்வமாக 5 மனைவிகளும், 9 பிள்ளைகளும் உள்ளனர். உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் மொத்தம் 12 பேர். அவர்களில் பலர் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

பிடல் காஸ்ட்ரோவின் சகோதரிகளில் ஒருவரான ஜுவானா, அவரை  ‘ராட்சதன்’ என்று விமர்சிக்கிறார். பிடலின் கொள்கைகளுடன் முரண்பட்டதன் காரணமாக அமெரிக்காவின் புளோரிடாவுக்கு ஜுவானா நாடுகடத்தப்பட்டார். பிடலுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக (கடைசிக் காலம் வரை) அவருடன் ஜுவானா பேசவில்லை. இவர்தான் பல வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி பேட்டியில்,  “பிடல் மனிதாபிமானம் இல்லாதவர்; அவர் ஒரு ராட்சதன்”  என்று கூறினார்.

கியூப சிறையில் 22 ஆண்டுகளைக் கழித்த வாலடேர்ஸ் என்ற அரசியல் கைதியின் வாக்குமூலம் 1986-இல் நூலாக வெளியானபோது (The Cuban Solzhenitsyn – Valladares, 1986) ஜனநாயக உலகம் அதிர்ந்தது. ‘இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்’ என்பதற்கு மிகச் சரியான உதாரணம் காஸ்ட்ரோவின் அரசு. அவரது பொய் மூட்டைகளை தவிடுபொடியாக்கும் மற்றொரு ஆவணம், ரொனால்டு ஏரினாஸ் எழுதிய  ‘இரவுக்கு விழும் முன்’ என்ற நூல் (Before Night Falls – Reinaldo Arenas, 1993). இந்நூல் பின்னர் திரைப்படமாகவும் வெளியாகி உலகை கம்யூனிஸம் குறித்த மறுசிந்தனைக்குள்ளாக்கியது.

ஆனாலும், ஹிட்லரின் கோயபல்ஸ் போல கியூப அதிபரின் பிரசார சாதனங்கள் தொடர்ந்து மாய பிம்பங்களைப் பரப்பின. அவற்றை அடியொற்றி, உலகிலுள்ள இடதுசாய்வு எழுத்தாளர்களும் காஸ்ட்ரோ புராணக் கதைகளைப் பரப்புகின்றனர். அதன் காரணமாகவே ஜனநாயக உலகில் போற்றப்படும் ஒரே சர்வாதிகாரி என்ற சிறப்பை காஸ்ட்ரோ அடைந்திருக்கிறார்.

காஸ்ட்ரோவின் மறைவு ஒருவகையில் இடதுசாரிகளின் கனவுலகப் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. ஸ்டாலின் நடத்திய கொடுங்கோலாட்சியும் மாவோவின் ஜனநாயகப் படுகொலையும்,  இப்போது உலகம் அறிந்த உண்மைகளாகிவிட்டன. பொதுவுடைமை என்ற மகத்தான கனவைத் தேக்கி, சர்வாதிகார ஆட்சியை நோக்கி உலக நாடுகளை அழைத்துச் சென்ற கம்யூனிஸம் காலாவதியாகிவிட்டது. அதன் எச்சமாக இருந்த கியூபாவும் முதலாளித்துவப் பாதைக்கு சிறிது சிறிதாக்த் திரும்பி வருகிறது. சீனா, வட கொரியா, லாவோஸ், வியட்நாம் நாடுகளிலும் பெயரளவிலேயே கம்யூனிச ஆட்சி, அதுவும் சர்வாதிகார ராணுவ ஆட்சியாகவே நடைபெறுகிறது. இந்நிலையில் கம்யூனிஸ நட்சத்திரங்கள் உதிர்வதும், மக்கி மண்ணாவதும் உலகில் புதிய அரசியல் விழிப்புணர்வுக்கு வழிகோலும்.

‘டெலிகிராப்’ பத்திரிகை குறிப்பிட்டிருப்பது போல, “மூன்றாம் உலக நாடுகளின் சோஷலிசத் தலைவரான பிடல் காஸ்ட்ரோவின் மரணம், 20-ஆம் நூற்றாண்டில் கம்யூனிஸத்தின் முடிவாகவும் உள்ளது’’ எனில் மிகையில்லை.

 

 

 

 

9 Replies to “பிடல் காஸ்ட்ரோ: ஒரு மாய பிம்பம் வரலாறான கதை”

  1. Communism is nothing but empty vessel making lot of noise.and these communist want to sell that in market but people in this world rejected.

  2. அண்ணா, மிகவும் தேவையான தகவல்கள் அடங்கிய, அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்.

  3. கம்யூனிசம் என்ற அரசியல் கருத்தியல் சர்வாதிகார ஆட்சிமுறையை ஏற்படுத்தி மக்களுடைய சமூகப்பொருளாதார அரசியல் மற்றும் ஆன்மிக சுதந்திரத்தைக்கட்டுப்படுத்தக்கூடியது. கிஞ்சித்தும் மனித நேயம் இல்லாத அரசியல் சித்தாந்தம் அது.பிடல் கேஸ்டிரோ என்ற கியூப சர்வாதிகாரியைப்பற்றி ஸ்ரீ சேக்கிழார் எழுதியுள்ளக்கட்டுரை அவரைப்பற்றி இடதுசாரி அரசியல் வாதிகளும் ஊடகக்காரர்களும் புனைந்து வைத்திருக்கின்ற மாயபிம்பத்தைத் தகர்த்தெரிகின்றது.சேக்கிழாரின் நற்பணித்தொடரட்டும்.

  4. //ஸ்டாலின் நடத்திய கொடுங்கோலாட்சியும் ………….//

    இதெல்லாம் உண்மையல்ல என்று எப்பொழுதோ நிரூபணம் ஆனா ஒன்று. ஸ்டாலின் மீதான அவதூறுகளை “ஸ்டாலின் மீதான குருஷேவின் பொய்கள்” என்கிற நூலின் வாயிலாக மறுக்க முடியாத ஆதராத்துடன்(ருஷ்ய அரசு ஆவணங்களின் அடிப்படையில்) குரோவர் பர் என்கிற அமெரிக்கர் வலதுசாரிகள் மற்றும் அடிப்படைவாதிகளின் ஸ்டாலின் மற்றும் கம்யூனிசம் மீதான விஷமத்தனமான பிரச்சாரங்களை கட்டுடைத்து விட்டார். இன்னும் காலாவதியான பொய்களையே எவ்வளவு நாள் திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருப்பீர்களோ.

  5. Thank you very much for bringing truth in light.

    There is one more argument that Cuba do not have private schools & hospitals and all get adequate education and decent medical services at affordable cost. Is it true?

  6. இங்கு இன்னொரு லிங்கையும் தருகிறேன் – அது திரு தாயுமானவன் அவர்களுக்கு இன்னும் வலு சேர்க்கும் –
    https://www.mariosousa.se/LiesconcerningthehistoryoftheSovietUnion.html

    ஆனால் எனக்கு என்ன ஒன்று புரியவில்லை என்றால் – அந்த நாட்டில் வாழ்ந்த மக்களுக்கு நேரிடையாகவே இதெல்லாம் – அதாவது இந்த purge, labour camp கொடுமைகள் எதுவும் நடக்கவில்லை என்று தெரிந்திருக்குமே. பின் எதற்காக கம்யூனிசத்தை தூக்கி எறிந்தார்கள்? அவர்கள் மட்டுமல்ல – கம்யூனிச நாடு சொர்க்கமாயிற்றே – பின் என் கிழக்கு ஜெர்மனியர்கள் பெர்லின் சுவரை தண்டி குதிக்க முயன்றார்கள் ? ( ஒரு வேளை அதுவும் பொய் என்றால் ) என் அந்த சுவரை தகர்த்தெறிந்தார்கள் ?

    திரு தாயுமானவன் கொடுத்த விவரத்தில் ‘ ருஷ்ய அரசு ஆவணங்களின் அடிப்படையில்’ என்று கூறுகிறார்.
    நான் கொடுத்துள்ள லிங்கில் ஒரு கம்யூனிஸ்ட் எழுதியிருக்கிறார். சுத்தம் !!!
    ( வட கொரியாவில் வாழும் மக்கள் கம்யூனிசத்தை உள்ள மகிழ்சியோடு ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள் என்று
    தாராளமாக ஏற்றுக் கொள்கிறேன். கம்யூனிச நாடுகளில் கொடுமைகள் எதுவும் நடக்கவில்லை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டதே !!!)

  7. 900000 பெண்களைக் கற்பழித்தவர் இந்த ஃபிடல் காஸ்ட்ரோ என்று படித்தேன், அது உண்மை என்றால் இவர் எப்படி உண்மையான ஹீரோ ஆவார்?

  8. திரு ஜோசப் சஹாயராஜ்! ஒரு சைபர் குறைச்சி போட்டிட்டீங்களே சார். கொஞ்சம் கூட்டிப் போடுங்க. தாராள மனசாப்போகும்

  9. இட்டுக் கட்டுவதை கட்டுக்கதை என்பார்கள். இது ஒரு நல்ல கட்டுக்கதை. இவையெல்லாம் ஏற்கெனவே முறியடிக்கப்பட்ட பொய்கள்தாம். பொய்யைத் திரும்பதிரும்பச்சொல்லி இயன்றவர்கள் வரை நச்சுக்கருத்தை விதைக்கிற ஒரு வலதுசாரி வடிவ எழுத்து இது. இதற்கான பதில்கள் மிகப்பழையவை. உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் பக்க இணையத்தளங்களிலும் அவற்றைப் பெறமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *