மார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையே

மார்கழிமாதத் திருவாதிரை நாள்வரப் போகுதையே
மனதைப்புண்ணாகப் பண்ணாமலொருதரம் போய்வாவென்று சொல்லையே
கட்டையிருக்கையில் சிதம்பரம் போய்நான் காணவேணுமையே
கசடனாகிலும் ஆசைவிளையுதுன் காலுக்குக் கும்பிடையே.

– நந்தனார் சரித்திரக் கீர்த்தனை (கோபாலகிருஷ்ண பாரதியார்)

தில்லையிலும் திருவாரூரிலும் நிகழும் திருவாதிரைத் திருநாள் விழாவினைக் காணும் புண்ணியம் சிவனடியார்களுக்குப் பெரும் பேறாகும்.‘ஊனாலும் உயிராலும் உள்ளபயன் கொளநினைவார்” தில்லைத் தரிசனையைத் தவறாது மேற்கொள்வர். ஊன் என்றது உடம்பினை. உடம்பின்றி உயிரும் உயிரின்றி உடம்பும் பயன் பெறா. எனவே, உயிரும் உடம்பும் கூடிய இப்பிறப்பின் உறுதிப்பயன் தில்லைத் தரிசனம் என உறுதிகொண்டு அந்தப் பயனைக் கொள நினைந்து திருநாவுக்கரசு நாயனார் திருப்புலியூர் மருங்கணைந்தார் எனத் தெய்வச் சேக்கிழார் மொழிந்தார். இதனையே நந்தனார் தம் மொழியில் உடம்பாகிய இந்தக் கட்டை இருக்கும்போதே இப்பிறப்பின் பயனை நான் அடைந்துவிட வேண்டும் என ஆசை விளைகிறது என்றார்.

ஊனும் உயிரும் சேர்ந்திருந்தால்தான் பயன் விளையும் என்றாலும் இரண்டையும் தனித்தனியே கூறியதற்குக் காரணம் உண்டு. உயிர் இயக்கியவழியே உடம்பு இயங்கும் என்றாலும் யாத்திரை மேற்கொளல், தலங்களில் உழவாரப்பணி செயல், திருப்பதிகம் ஓதுதல் முதலிய திருப்பணிகளை மேற்கொளல், ஆகியன உடலால் கொள்ளும் பயன்கள்; தில்லையம்பலக் கூத்தினைக் கண்களிப்பக் கண்டவுடன் பேரானந்தம் அடைவது உயிர் அடையும் பயன்.

அகண்டாகார சிவம் அம்பலத்தில் நடிக்க உருவம் வேண்டுமே. அந்த உருவத்தினைச் சித்தாந்த சாத்திரங்களும் தோத்திரங்களும் கூறுகின்றன.உண்மை விளக்கம் என்னும் சித்தாந்த சாத்திரம் பஞ்சாக்கரம் எனும் திருவைந்தெழுத்தே கூத்தனின் வடிவம் என்று கூறுகின்றது. தில்லையம்பலக் கூத்தனின் இந்த நடனம் உயிர்கள் இம்மை இன்பத்தைப் பெறவும் பக்குவமுற்ற ஆன்மாக்கள் வீடுபேறு பெறவும் இடைவிடாது நடைபெறுகின்றது. அதனால் அந்தக் கூத்து அநவரத தாண்டவம் எனப்படும்.

ஆன்மாக்கள் உலக இன்பம் பெறும் பொருட்டு இறைவன் ஆடும் கூத்து ஊனநடனம் என்றும், ஆன்மாக்கள் வீடுபேறு பெற ஆடும் நடனம் ஞான நடனம் எனவும் கூறப்படும்.

உயிர்களுக்குப் போகம் விளைவிக்க முதல்வன் மாயாலோகமாகிய தத்துவ வெளியில், திரோதான சத்திமன்றத்தில் ஊன நடனம் ஆடுகின்றான். போகம் வேண்டுவோர் கூத்தனுடைய திருவடியிலிருந்து மேனோகித் தரிசிக்க வேண்டும். திருவைந்தெழுத்தில், ந- திருவடியில், ம- திருவயிற்றில், சி- திருத்தோளில், வ- திருமுகத்தில், ய- திருமுடியில் எனத் தரிசிக்க வேண்டும்.

ஞான நடனம் ஞானாகாசமாகிய பரவெளியில் ( சிற்றம்பலம்= சித் + அம்பலம். சித்து- ஞானம் , அறிவு. சிதம்பரம்= சித்+ அம்பரம். அம்பரம்- ஆகாயம் அல்லது வெளி) உலகபோகங்களில் உவர்ப்பு உற்று வீடுபேற்றினை விரும்புவோர் தில்லையம்பலக் கூத்தினை ஞான நடனமாகத் தரிசிக்க வேண்டும் அக்கூத்திற்கு முதல்வன் கொண்ட வடிவம் உடுக்கை ஏந்திய கரம்- சி, வீசுகரம்- வ, அபயவரத கரம்- ய, தீ அகலை ஏந்திய கரம்- ந, முயலகனாகிய ஆணவமலத்தை அழுத்திய திருத்தாள் – ம. வீசுகரம் குஞ்சித பாதமாகிய தூக்கிய திருவடியைச் சுட்டிக் காட்டும். அந்தத் தூக்கிய திருவடியைத்தான் பிறவிப் பெருங்கடல் கடக்கும் பெரியோர் புணையாகப் பற்றிக் கொள்வர். “தில்லையுள் சிற்றம் பலத்துநட்டம், ஆட வெடுத்திட்ட பாதமன் றோநம்மை யாட்கொண்டதே” என அப்பர் பெருமான் முதல் “தூக்கிய திருவடி துணையென நம்பினேன்” எனத் தமிழ்த் தியாகராஜ சுவாமிகள் முதலிய அனைவரும் துதித்தது இந்தத் தூக்கிய திருவடியைத் தான்.

அப்பர் பெருமான் திருக்கூத்தினைக் கண்டு களிக்கச் செல்லுகின்றார். பெருமான் சந்நதியில் ஓலக்கச் சூளைகள் (தேவலோக அரம்பையர்) தள்ளி நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். கடைவாயிலைப் பற்றிக்கொண்டு தொல்லை வானவரீட்டம் திரண்டு நிற்கின்றது. பெருமானின் முன்னிலையில் பிரமனும் திருமாலும் ஏதெமைப் பணிகொளுமாறது கேட்போம் எனப் பணிந்து நிற்கின்றனர். இப்படிப் பெரியவர்களெல்லாம் சூழ்ந்து நிற்கும்போது பெருமானின் முன்பு வந்து இறைஞ்சுவது எங்ஙனமோ என அப்பரடிகளின் மனம் மருகுகின்றது., பெருமானின் திருக்குறிப்பு என்னோ என ஏங்குகின்றது.

அடியவனின் ஏக்கம் பெருமானுக்குத் தெரியாதோ? அம்பலம் உயர்ந்த மேடை. அவனுடைய கூத்தினை எல்லாப் பக்கத்திலிருந்தும் அடியவர்கள் காணலாம். சேய்ம்மையில் நின்று ஏங்கும் அப்பர் பெருமானைக் கண்ட கூத்தப்பிரானின் அபயகரமான கவிந்த கை ‘என்று வந்தாய்’ என்னும் திருக்குறிப்பினைக் கட்டுகின்றது. பெரியோர்கள் வாயாற் கூறாத போதிலும் கவித்த கையினை அசைத்து,”வாழ்க, நீநன்றாக இருக்கின்றாயா’’ என வாழ்த்துவர்.. பெருமானின் கவித்தகையும் அத்திருக்குறிப்பினைக் கொண்டு இலங்குவதைக் கண்டு களித்த அப்பர் பெருமான், பிற அடியவர்களுக்கு அக்குறிப்பினைச் சுட்டிக் காட்டி, தில்லையுட் சிற்றம்பலத்துள் பெருமானின் அத்திருக்குறிப்பைக் கண்டு தொழுமின்கள் என ஆற்றுப்படுத்துகின்றார்.

“ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லைக்
கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம்பலத்துநட்டம்
என்றுவந் தாயென்னும் எம்பெரு மான்றன் திருக்குறிப்பே.”

கூத்தப் பெருமான் அப்பர் பெருமானின் கண்ணின் வழி கருத்தில் புகுந்தான். அவன் திருமுடியிற் சூடிக் கொண்ட ஊமத்தம்பூவும், செங்கதிர், வெண்கதிர் செந்தீயாகிய முக்கண்களின் பார்வையும், புன்முறுவலும், துடிகொண்ட கையும், திருமேனிமேற் துதைந்த வெண்ணீறும், மாதொரு பாகமும், அரையிற் தரித்த பாய்புலித்தோலும் ஆகியன அவர் நெஞ்சிற் புகுந்து நிலைகொண்டன. பெருமானின் உண்மையை மறுத்துப் புறனுரைக்கும் மாற்றுச் சமயத்தில் வாழ்நாளில் பெரும்பகுதியை வீணாக்கிய பாவியாகிய என்னெஞ்சில் இவை குடிகொண்டவாறு என்னே! இது பெரு வியப்பு! இது பெருமானின் பேரருளே! என அப்பர் பெருமான் இறைஞ்சினார்.

“முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த வெண்ணீறும் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித் தோலுமென் பாவிநெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை யம்பலக் கூத்தன் குரைகழலே”

கூத்தப் பெருமானின் வளைந்த அழகிய புருவங்களும் கோவைப் பழம்போன்று சிவந்த வாயிதழில் குமிண் சிரிப்பும்கங்கை நீராற் குளிர்ந்த சடையும், பவளம்போற் சிவந்த திருமேனிமேற் பால் போல் வெளுத்த திருநீறும் பேரின்பம் தரும் தூக்கிய திருவடியும் காணப் பெற்றமையால் பெறுதற்கரிய பிறவியைப் பெற்ற பயனைப் பெற்றதாக அப்பர் உணர்ந்தார். ‘இக்கூத்தினைக் காணப் பெற்ற இவ்வுடலன்றோ எனக்குப் பயன்பட்ட உடல். இவ்வுடலைத் தந்த பிறப்பன்றோ எனக்கு உண்மையான பிறப்பு. இக்கூத்தினைக் கண்கொண்டு காண மனித்தப் பிறவியும் வேண்டுவதே என்று கூதப் பெருமானைப் பாடினார்.

“குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே”

“வேண்டின் வேண்டுக பிறவாமை’ எனப் பெரியோர்கள் பிறவாமையை வேண்ட, அப்பர் பெருமான் பிறப்புக்கு அஞ்சாமல், தில்லைத் திருக்கூத்தினைக் காணும் பேறு கிட்டுமாயின் மனித்தப் பிறவியும் வேண்டுவதே என்றார். ,

இடையில் அப்பர் பெருமானுக்கு ஒரு ஐயம் வந்தது. தில்லைத் தரிசனம் பிறவியைக் கொடுக்குமோ? தில்லைச் சிற்றம்பலம் இப்பிறவியில் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய அன்னம் (சோறு) முதலிய பொருள்களைக் கொடுக்கும். மறுமையில் பொன்னுலகு (சுவர்க்கம்) முதலிய பதங்களையும் மீட்டும் பிறவி எடுக்காத வீட்டுலகையும் தரும். என்றாலும், இந்தப் பூவுலகில் என் அன்பு மேலும் மேலும் பெருகி இன்புறுவதற்கு ஏதுவாகத் தில்லையம்பலக் கூத்தினைத் தரிசிப்பதற்குப் பிறவியைத் தருமோ? எனக் கேட்கின்றார்.

“அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் ஏலும் இப்பூமிசை
என்னன் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே”

தில்லையம்பலக் கூத்தினை ஒருமுறை தரிசித்தாலே மறுபிறவியில்லை. பிறவியில்லையெனில் மன்றுளாடும் மாணிக்கக் கூத்தினைக் கண்டு இன்புறும் பேறும் இல்லை. ‘என்று வந்தாய் என்னும் திருக்குறிப்பை’க் காட்டும் திருநடனக் காட்சி தரும் இன்பத்தைக் காட்டிலும் வீட்டின்பம் மிக்கதா?

அப்பர் பெருமானின் இந்த வினாவுக்கு விடை பகருகிறார், உமாபதி சிவம், தம்முடைய கோயிற் புராணத்தில். கோபம் கொண்ட ஒருவர்,’ நான் இனி மறந்துங்கூட உம்முடைய வீட்டுக்கு வரமாட்டேன்’ என்று பிணங்கிச் செல்லுவதுபோலத் தில்லையம்பலக் கூத்தினைக் கண்டபின் பிறவாமையால் யாது பயன்? மீண்டு வந்து பிறந்தாலும் தில்லைக் கூத்தப் பிரானின் திருநடனம் கண்டு கும்பிட்டு இறவாத பேரின்பம் பெறலாமே என்கிறார்.

“மறந்தாலும் இனியிங்கு வாரோமென் றகல்பவர்போல்
சிறந்தார நடமாடுந் திருவாளன் திருவடி கண்டு
இறந்தார்கள் பிறவாத இதிலென்னபயன்? வந்து
பிறந்தாலும் இறவாத பேரின்பம் பெறலாமால்”

ஆதிரை நன்னாளில் அம்பலவாணனின் அருள் ஞான நடனத்தைக் கண்ணாறக் கண்டு களித்து,ஐயன் ஆடும் அருள் விளையாட்டில் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் அடைந்துய்வோமாக.

*****

5 Replies to “மார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையே”

 1. திருவாதிரைத்திருநாளாம் இன்று, காலை வேளையில் படிப்பதற்க்கு – இல்லையில்லை – பிரார்த்தனை செய்யும் வகையில் ஒரு அற்புதமான கட்டுரையை படித்தேன்.

  நன்றி நன்றி நன்றி.

 2. Good Tamil. Matter great. Masterly explanation of Lord Shiva’s cosmic dance. The author’s erudition is sparkling in every word of this article.

  தொண்டரிப்பொடியாழ்வாரின் ”பச்சைமாமலை போல் மேனி” என்ற பாடலை நினைவுபடுத்துகிறது. நான் திருவரங்கனின் இத்திருமேனியைக் கண்டுகளிக்கும் பேறை விட இந்திரலோகம் போய் ஆளும் பதவி கிடைத்தாலும் வேண்டேன் எனப்தாக அப்பாடல் நிறைவு பெறும்.

  //‘இக்கூத்தினைக் காணப் பெற்ற இவ்வுடலன்றோ எனக்குப் பயன்பட்ட உடல். இவ்வுடலைத் தந்த பிறப்பன்றோ எனக்கு உண்மையான பிறப்பு. இக்கூத்தினைக் கண்கொண்டு காண மனித்தப் பிறவியும் வேண்டுவதே// என்று அப்பர் பெருமான் சொன்னதாக பேராசிரியர் எழுதுவதும், நிறைவாக உமாபதி சிவம் சொன்னதாகக் இவ்வுலக வாழ்வின் பயனே சிவநடனத்தைக் கண்டுகளிப்பதே என்று – கூறியதும் எனக்கு வியப்பைத் தருகின்றன. காரணம். அச்சாவதாரத்திருமேனிகளில் ஆழ்வார்கள் ஆழ்ந்தார்கள் என்ப. இங்கும் அப்படி ஒரு நிகழ்ச்சி இருக்கின்றது போலும்.

  Good. Very Good. A fantastic essay and a great delight to Saivites if only they know Tamil. This Prof is a great gift to your mag. Catch him tightly.

 3. இனியதொரு கட்டுரையைத் திருவாதிரை நாளன்று வழங்கியமைக்கு மிக்க நன்றி, முனைவர் ஐயா, அவர்களே!

 4. தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி .

  மார்கழித் திருவாதிரை நன்னாளில் அருமையான பதிவு தந்த அய்யா அவர்களுக்கு ஏராளம் நன்றிகள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *