ஆபுத்திரன் நாடு அடைந்த காதை – மணிமேகலை 25

சித்ராபதி அரண்மனைக்குச் செல்ல ஆயத்தமானாள். இரண்டு நாட்களாக அவள் செவிகளில் விழும் சேதி எதுவுமே கேட்கும்படி இல்லை. தான் ஒன்று நினைத்து உதயகுமாரனைத் தூண்டிவிட அவன் பித்துப் பிடித்தவன் போல இப்படியா மணிமேகலையைத் துரத்தி ஒரு விஞ்சையன் வாளால் வெட்டுண்டு இறப்பான்? இதற்கும் மணிமேகலைக்கும் என்ன தொடர்பு? யாரோ செய்த பிழைக்கு இவள் ஏன் சிறையில் கிடந்து மாயவேண்டும்? இதுபோன்ற கேள்விகள் சித்ராபதியின் தூக்கத்தைக் கெடுக்க, மணிமேகலையை மீண்டும் கணிகையர் இல்லத்திற்குக்கொண்டுவர முடிவுசெய்து, அதிகாரிகள்மூலம் அரசியைப் பார்க்க விண்ணப்பித்திருந்தாள். பேசும்விதத்தில் பேசி மணிமேகலையை மீட்டுக்கொண்டுவர சித்ராபதி மனதில் திட்டம் ஒன்றை வரைந்தாள்

அரசியார் திருமாளிகைக் காவலனிடம் அனுமதி-ஓலையைக் காட்டி, உள்ளே சென்றாள்.

இராசமாதேவி தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

சித்ராபதி அரசியை நிலத்தில் விழுந்து வணங்கினாள்.

“சொல், சித்ராபதி!“ என்றார் அரசி.

“சொல்வதற்கு என்ன இருக்கிறது, மகாராணியாரே? எங்கள் குலம்பற்றிதான் உங்களுக்குத் தெரியுமே? தேவேந்திரன் சபையில் நடனம் ஆடிக்கொண்டிருந்த அரம்பையர்கள்தான் எங்கள் முன்னோர். ஒருமுறை தேவேந்திரனுக்கு முன்பு நடனமாடிய பதினாறு தேவகன்னிகைகள் தாளம்தப்பி ஆடியதால் சபிக்கப்பட்டுப் பூவுலகில் பிறந்ததாகக் கூறுவர். இது போதாதென்று இந்திரன், அவன் மகன் சயந்தன், குறுமுனியாகிய அகத்தியன் முன்னிலையில் ஊர்வசி தன்னுடன் நூற்றுநான்கு தேவகன்னிகைகளுடன் நடனமாடும்போது ஏற்பட்ட பிழையால் இப்பூவுலகில் வந்து பிறந்தனர். அப்படித் தோன்றியதுதான் எங்கள் கணிகையர் குலம். அவர்கள்பெற்ற துன்பத்தை விடவும் அதிகத் துன்பத்தை நான் அடைந்துள்ளேன்.“ என்றாள்.

“எதற்கு இப்படி நீட்டி முழக்குகிறாய், சித்திராபதி? சொல்ல வந்ததை விரைவாகச் சொல்!”

“அது எங்கள் பரம்பரைக்கே இல்லை, அரசியாரே! கோவலன் இறந்துவிட்டான் என்ற சேதி கேட்டதும் மாதவி துறவறம் பூண்டதும், உடன் மணிமேகலையும் இளம் துறவி ஆனதும் உங்களுக்கு மீண்டும் சொல்ல வேண்டாம். இந்த இரு கணிகையரும் தங்கள் குலத்தொழிலை விடுத்துத் துறவிகள் ஆனதனால் எங்கள் இல்லப் பெண்கள் கேலிபேசிச் சிரித்தனர். அதுவாவது போகட்டும். தொடர்ந்து வருவது மன்னர்மகன் என்பது தெரிந்தும் அவர் ஆசைக்கு இணங்காமல் போனதால்தானே, இளவரசர் தேவையில்லாமல் வெட்டுண்டு இறந்தார்?”

“என்ன செய்வது,சித்திராபதி? இது தாங்க முடியாத துன்பம்தான்.”

“இதைவிடப் பெரிய துன்பம் இந்தப் புகார் நகருக்கு ஏற்படப்போகிறது, அரசியாரே!“ என்றாள் சித்திராபதி.

“இதையும்விடப் பெரிய துன்பமா? என்ன சொல்கிறாய் சித்ராபதி?“

“சோழர்குலச் செம்மல் நெடுமுடிக்கிள்ளிக்கு நேர்ந்த கதை தெரியுமல்லவா? காவேரி பூம்பட்டிணத்தின் நெடிய உப்பளங்கள் மிகுந்து காணப்படும் கடற்கரையின் ஓரத்தில் ஒரு அழகிய புன்னைமர வனம் இருந்தது. அங்கே உங்கள் சோழச்சக்கரவர்த்திகளில் சிறந்து விளங்கி, உயர்ந்த முடியினை (மகுடத்தினை) அணிந்த நெடுமுடிக்கிள்ளி என்ற அரசர் நின்று கொண்ருந்தார். அப்போது ஒருவருமில்லாத அந்தத் தனிமை பொழுதில் தனியாக ஒரு பெண் அவள் முன்தோன்றினாள்.

“பல போர்களில் பல அம்புகளிலிருந்து தப்பிய மன்னன் மல்லிகை, அசோகம், மா, குவளை, தாமரை மலர்களினால் செய்யப்பட்ட கணைகளைத் தொடுத்து, மாறன் எறிந்த அம்புகளுக்கு ஆளானான். அந்த ஐவைகை அம்புகளின் வேதனை பொறுக்காமல் அவள் அருகில் சென்று அவள் யார் எந்த ஊர் என்று கேட்டான். ஆவலுடன் ஒரு மாத கால அளவில் அவனோடு கூடியிருந்தாலும், அவள் தன்னைப் பற்றிய தகவல்கள் எதையும் வெளிப்படுத்தவில்லை. ஒருநாள் அவள் சொல்லிக்கொள்ளாமல் மறைந்துவிட்டாள்.

“மன்னன் தேடாத இடமில்லை. அவளைக் காணாது பரிதவித்துக்கொண்டிருந்தபோது வான்வழியே திரிந்தும், நீரின் மேல் நடந்தும் வருகின்ற சித்திகள் கொண்ட ஒரு சாரணன் அங்கு வந்தான்.

“யாரைத் தேடுகிறாய் மன்னா? என்று கேட்டான் சாரணன்.

“அழகிற் சிறந்த பெண் ஒருத்தி. மெல்லியலாள்; அழகின் மொத்த உருவம்; பொன்வளையல்களை அணிந்த பூங்கொடி போன்ற பெண். என்னுடன் நெடுநாட்கள் இணைந்திருந்தாள் இதோ சற்றுநேரம் முதல் காணவில்லை. தாங்கள் வான்வழி வரும்போது அவளைப்போல ஒருத்தியைப் பார்த்தீர்களா என்று மன்னன் கேட்டான்.

“அவளைப் பார்க்கவில்லை மன்னா. ஆனால் அவளை எனக்கு ஏற்கனவே நன்கு தெரியும். நாகநாட்டை நல்லமுறையில் ஆட்சிசெய்த வளைவண்ணன் என்ற அரசனுக்கும் அவனுடைய பட்டத்து அரசி வாசமையிலை என்பவளுக்கும் மகளாகப் பிறந்தவள். பீலிவளை என்பது அவள் பெயர். அவள் பிறந்தவுடன் கணிகன் ஒருவனிடம் பிறந்த நேரத்தைக் கூறிச் ஜாதகம் கணித்தனர். அந்த ஜோசியர் நேர்மையானவர். பீலிவளை தனது இளமைப்பருவத்தில் இரவிகுலத்தில் தோன்றிய ஓர் அரசனுடைய மார்பில்பொருந்தி அதன்மூலம் அவன் கருவைத் தனது வயிற்றில் சுமந்து வருவாள் என்று கூறினான். அந்தப் பீலிவளைமூலம் உனக்குப் பிறந்த மகன் திரும்பிவருவானே அன்றி அவள் மீண்டும் வரமாட்டாள், வருந்தாதே, என்று அந்தச் சாரணன் கூறினான்.

“நெடுமுடிக்கிள்ளி சிந்தனையில் ஆழ்ந்தான்.

“அப்பொழுது அச்சாரணன், வருடம் ஒருமுறை இந்திரனுக்குக் கால்கோள் விழா எடுப்பது மன்னனின் கடமை. அவ்வாறு இந்திராவிழா எடுக்கத் தவறிய வருடத்தில் பெரும் தீங்கு ராஜ்ஜியத்திற்கு வந்துசேரும். நாட்டைக் கடல்கொண்டுவிடும் என்று எச்சரித்தான். அதைக் கேட்ட மன்னன், இந்திரவிழா எடுப்பது ஒவ்வொரு வருடமும் நிகழும் என உறுதியளித்தான்.

“அன்று தொடங்கி இன்று வரையில் ஒவ்வொரு வருடமும் புகார் நகரத்தில் இந்திரவிழா எடுப்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்திரவிழா எடுக்கத் தவறினால் எங்கே கடல்கொண்டுவிடுமோ இந்நகரத்தை என்ற அச்சமும் மக்கள் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.“ என்று சித்திராபதி முடித்தாள்.

“சித்திராபதி! அதற்கும் நீ சொன்ன இன்னொரு பெரிய துன்பத்திற்கும் என்ன தொடர்பு?“ என்றாள் அரசியார்.

“அரசியாரே! இந்திரவிழா வருடம் தவறாமல் எடுக்கவேண்டும் என்று முதலில் கூறியது இந்திரன். அதனை இந்தப் புகார் நகரின்கண் வந்து கூறியது, மணிமேகலா தெய்வம். மணிமேகலா தெய்வம் மாதவி கோவலனின் குலதெய்வம். அதனால்தான் மாதவி தனது பெண்ணிற்கு மணிமேகலை என்று பெயர் சூட்டினாள். அந்த மணிமேகலை சிறையில் வாடினால் அந்த நெடுமுடிக் கிள்ளிக்குச் சாரணர் எச்சரித்ததைவிடப் பெரிய கடல்கோள் ஏற்படாதா அரசியாரே?” என்று சித்திராபதி முடித்தாள்.

சித்திராபதி முடிவில் எதைக் கேட்க வருகிறாள் என்று இராஜமாதேவிக்கு விளங்கியது.

“சித்திராதேவி! இதற்கு இவ்வளவு பீடிகையா? நேரில் கேட்டிருந்தால் நான் விடைகூறியிருப்பேனே?” என்றாள்.

சித்திராபதி பதில் பேசவில்லை.

“களவு, கள், கொலை, பொய், நெறிகெட்ட காமம் இவற்றிற்கு இடம்கொடுக்கும் மாளிகையில் குடியிருக்கும் கணிகை நீ. உன் மாளிகையில் குடியிருக்க அச்சம்கொண்டுதான் மணிமேகலை இங்கே வந்துசேர்ந்திருக்கிறாள். கவலைப்பாடாதே. அவளுக்கு ஒன்றும் நேராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்“ என்று அரசி தீர்மானமாகக் கூறினாள்.

அப்பொழுது, “தங்களைக் காண மூவர் வந்துள்ளனர். அவற்றில் ஒருவர் புத்த சந்நியாசி!“ என்று அறிவித்தான் காவலன்.

“வரச்சொல்!“ என்றாள் அரசி.

மணிமேகலையைக் காணாமல் கலங்கிய மாதவி சுதமதியை அழைத்துக்கொண்டு உலக அறவியில் இருக்கும் அறவண அடிகளிடம் வழிகேட்டகவே, மூவரும் கிளம்பி இராஜமாதேவியின் அரண்மனைக்கு வந்தனர்.

இராசமாதேவி எழுந்து அறவண அடிகளுக்கு உரிய ஆசனம் அளித்து அவர் பாதங்களில் விழுந்து வணங்கி வரவேற்றாள்.

“ தங்கள் பாதம் நோக இந்தப் பாவி இருக்கும் இடம் வரையில் வரவேண்டுமா? ஒரு வார்த்தை சொல்லி அனுப்பியிருந்தால் நான் பல்லக்கு அனுப்பியிருக்க மாட்டேனா?“ என்று போற்றிக் கூறினாள்.

அறவண அடிகள் சிரித்தபடியே, “கேள் அரசியே!” என்று ஆரம்பித்தார்.

“நான் தவத்தினால் உறுதி பெற்ற உடலைப் பெற்றவன் ஆயினும், மாலைச் சூரியனைப் போல வீழும் நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவன். பிறந்தார், வளர்ந்தார், நோயுற்றார், பின் இறந்தார் என்பதுதானே அம்மா, மானிட உடலின் வரலாறு! பேதமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம் தோற்றம் வினைப்பயன் ஆக்கிய பனிரெண்டு நிதானங்களையும் அறிந்தவர்கள் எவரோ அவரே இந்தப் பிறவி எடுத்ததன் பலனை அடைவார்கள். அறியவில்லை என்றால் நரகம் என்றால் என்ன என்பதை அறிவார்கள். அறிவீனம் எதுவென்றால், இந்தப் பனிரெண்டு நிதானங்களையும் அறியாமல், இயற்கையில் காணப்படும் வேறு பொருள்களை உண்மை என்று நம்பி, மதிமயங்கி முயலுக்குக் கொம்பு உண்டு என்று பிடிவாதமாகக் கூறுவதாகும்.

“மூவுலகங்களுள் வாழும் உயிர்கள் கணக்கில் அடங்காதவை. அந்த உயிர்களை மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய் என்ற ஆறுவகையாகப் பிரிக்கலாம். நல்வினை, தீவினை ஆகியவற்றின் பலன்கள் இந்த உயிர்கள் தோன்றும்போது அவற்றின் கருவில் இணைந்து அவை வாழும் காலத்தில் இன்பம்-துன்பம் ஆகிய பலன்களை அவ்வுயிர்களுக்கு அளிக்கும்.

“இந்த உடம்பின்கண் தோன்றும் பொய், களவு, காமம் என்ற மூன்றும் தீவினையாகும். நமது வாய்மொழியில் தோன்றுவது நான்கு. அவை பொய், குறளை எனப்படும் நிந்தனைச் சொற்கள், கடுஞ்சொல் மற்றும் பயனற்ற சொற்கள் என்பவையாகும். மனதில் தோன்றும் மூன்று ஆசை, கோபம், மயங்குதல் என்பவையாகும். மேற்சொன்ன பத்தும் தீயவழிகளாகும். நன்கு கற்றறிந்தோர் இந்தப் பத்தின் வழி செல்லமாட்டார்கள். அப்படிச் சென்றார்களாயின் விலங்குநிலை, பேய்நிலை அல்லது நரகநிலை அடைந்து மனத்தளவில் துன்பங்களை அனுபவிப்பார்கள்.

“நல்வினை எதுவென்று கேட்டால் மேற்கூறிய பத்து வினைச் செயல்களையும் தவிர்த்து, நல்லொழுக்கத்தின்கண் நின்று, தானங்கள் செய்து, மனிதர், தேவர் மற்றும் பிரம்ம நிலைகளை எய்தி இன்புற்று இருத்தலாகும்.

“மறுபிறவி குறித்து அறிந்துள்ள மணிமேகலை! பலசமயங்களில் கூறியவற்றைக் இன்னும் நீ கேட்கவேண்டிய பணி ஒன்றுள்ளது. அப்படிக் கேட்டுவிட்டு வரும்வேளையில் உனக்கு நான் இந்தச் சமயத்தின் அறவுரை பல கூறவேண்டியிருக்கிறது. வா. இப்போது கிளம்பலாம்.“ என்றார்.

இளங்கொடிபோல விளங்கிய மணிமேகலை எழுந்து அறவண அடிகளை வணங்கினாள்.

பிறகு அரசியையும் சித்திராபதியையும், ஆய மகளிரையும் பார்த்து, “மிக்க வந்தனம். நான் இந்தப் புகார் நகரத்தில் வசித்தால் உதயகுமாரன் மரணத்திற்கு நானும் ஒரு காரணம் என்ற நினைப்பு மக்கள் மனதிலிருந்து நீங்காது. அதனால் எனக்கும் நல்லதில்லை. நீங்கள் அனைவரும் அறவண அடிகளின் நன்மொழிகளைக் கேட்டுவாருங்கள். ஆபுத்திரன் இந்தப் பிறவியில் மன்னனாக ஆட்சி புரியும் சாவகத்தில் எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. அவற்றை முடித்துப் பின்னர் குற்றமில்லாத மணிபல்லவத் தீவிற்குச் சென்று புத்தபீடத்தை வணங்கவேண்டும். அங்கிருந்து என் தாய் வீரப்பத்தினி கண்ணகி கோவில்கொண்டுள்ள வஞ்சி நகரம் போகவேண்டும். செல்லும் இடமெல்லாம் ஒருநாள்கூடத் தவறாது நல்லறம் செய்யவேண்டும். இது என் உள்ளக்கிடக்கை.. செல்லும் இடங்களில் எனக்கு துன்பம் நேரிடுமோ என்று நீங்கள் அஞ்சவேண்டாம். இனி எனக்கு எவ்விதத் துன்பமும் நேராது. என்னை வழியனுப்புங்கள்!“ என்று வயதில் மூத்தோர்களின் பாதங்களில் விழுந்து வணங்கினாள்.

அந்திமாலை மேலைவானத்தில் பொன்னை வார்த்து ஊற்றியதுபோல வண்ணங்களை வாரியிறைத்துக் கொண்டே வந்தது. மணிமேகலை அங்கிருந்து கிளம்பி உலக வரவியை அடைந்தாள். சம்பாதியையும் கந்திற்பாவையையும் வலம்வந்து வணங்கினாள். பிறகு வான்வழி செல்ல உதவும் மந்திரத்தைக் கண்களைமூடித் தியானித்தபடி உச்சரித்தாள். மணிமேகலையின் உடல் எவ்வித முயற்சியும் இன்றி மேலே எழும்பிச் சென்றது. ஓர் அழகிய நகரத்தை அடுத்திருந்த பூவனத்தில் இறங்கினாள்.

அந்த வனத்தில் துறவி ஒருவர் தவம் மேற்கொண்டிருந்தார். மணிமேகலை அவரிடம் சென்று, “அண்ணலே இது எந்த நாடு? இங்கு ஆட்சி புரியும் மன்னன் யார்?” என்று கேட்டாள்.

“பெண்ணே! இந்த நகரத்தின் பெயர் நாகபுரம். இந்த நல்ல நாட்டினை ஆள்பவன் பூமிசந்திரன் என்ற மன்னனின் மகன் புண்ணியராஜன். அவன் தோன்றிய அன்றிலிருந்து இந்தத் தேசத்தில் மழை பருவகாலத்தில் பொய்த்ததே இல்லை. மேனி நடுக்குறும் பசிபோன்ற பிணிகளால் உயிரினங்கள் பீடிக்கபட்டதில்லை,” என்று கூறிவிட்டு புண்ணியராசன் ஆட்சிபுரியும் நாகநாட்டின் பெருமைகளை விவரிக்கத் தொடங்கினார்.

மனிமேகலைக்குத் தெளிவு பிறந்தது. தான் சரியான இடத்திற்குதான் வந்திருக்கிறோம் என்று மனநிறைவு கொண்டாள்.

(தொடரும்)

2 Replies to “ஆபுத்திரன் நாடு அடைந்த காதை – மணிமேகலை 25”

  1. எதற்காக இந்தத் தொடரை அடுத்தடுத்து வெளியிடுவதில் இத்தனை கால தாமதம் என்று புரியவில்லை. நானும் சொல்லி சொல்லி சலித்து விட்டேன்.மன்னிக்கவும் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *