(முன்குறிப்பு: தீவிர ஆத்திகர்கள் படிப்பதைத் தவிர்க்கலாம்)
சுந்தரகாண்டம் படிப்பதால் உற்சாகம் கொடுக்கும் ஒரு கதை என்பதற்கு மேல் வேறொரு நன்மையும் கிடையாது.
சுந்தர காண்டம் எதிலிருந்து எது வரை?
இராமர் சுக்ரிவன் தலைமையில் அனுமரிடம் ஒரு வேலை கொடுக்கிறார். “சீதை இருக்கும் இடத்தைக் கண்டறிந்து வந்து சொல்ல வேண்டும்”. அந்தத் தூதுவப் பணியை சிலபல தடைகளைக் கடந்து அனுமர் மிஷன் கம்ப்ளீட் ரிபோர்ட் கொடுக்கிறார். இவ்வளவு தானே? இதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்? வரிசையா பார்ப்போம்…
முதலில் தன் வலிமை கூட தெரியாத அனுமர். ஜாம்பவான், அனுமருக்கு அவரின் வலிமையை உணர்த்திய பின்பு, தனியாக கடல்கடந்து இலங்கை செல்லணும். அப்படி பறந்து செல்லும் போது,
1, மைநாகப் பர்வதம் என்ற மலை நிஜமாகவே அன்புடன் இவர் தங்கிச் செல்ல வற்புறுத்துகிறது. அனுமர், எடுத்த காரியம் முடியும் வரை ஓய்வே எடுக்கக் கூடாது என்று அன்பும் கண்டிப்புமாகத் தவிர்த்தார்.
2, நாகங்களின் தாயான சுரசை என்பளை விட்டு அனுமரை விழுங்கச் சொல்லி நிர்பந்திக்கிறார்கள். அனுமர், அநாவசியமாக சண்டை போடாமல், புத்தியை மட்டும் பயன்படுத்தி அவள் வாயினுள் நுழைந்து திரும்பி சாகசம் பண்ணித் தப்பிப்பதன் மூலம், தேவையில்லாத நேரத்தில் சக்தியைச் செலவழிக்கக் கூடாது.
3, அடுத்தது சிம்ஹிகை என்ற அரக்கியிடம் சிக்கினார். அனுமர், அங்கே பலத்தைப் பிரயோகித்தார். தேவையான இடத்தில் பலப்பிரயோகம் பண்ணிடணும்.
4, இலங்கையை அடைந்ததும் லங்காபுரியைப் பார்த்து கந்தர்வலோகமோ, தேவலோகமோ என்று மனக்குழப்பம் ஏற்படும் அளவிற்கான அற்புதமான நகரைப் பார்த்து பிரம்மித்த போதும், இலங்கை நகரைக் காவல் காக்கும் லங்காதேவி எனும் அரக்கி தன் மாறுவேடத்தை நொடியில் கண்டு பிடித்து ஏய் குரங்கே என்று அதட்டிய போதும் ஆடம்பரம்/செல்வச் செழிப்பு கண்டோ, திடீர் அதிர்ச்சிகளை எதிர் நோக்கும் போதோ நிதானம் தவறாமல் தன் இடது கையால் ஒரே அடியில் வீழ்த்தி, காரியத்தை எப்படி சிரத்தையுடன் முடிப்பது என்று உணர்த்துகிறார்.
5, அசோகவனம் அடைந்து, சீதையைக் கண்டு பிடித்தாகி விட்டது. உடனே சீதையைப் பார்த்து கணையாழியைக் காட்டி விசயத்தைச் சொல்லியிருக்கலாம். ஆனாலும் கூட உடனே ஓடிச் சென்று சீதையிடம் பேசிவிடாமல், ராவணன் வந்து கெஞ்சி, மிரட்டி நிர்பந்தித்த போதும் சரி, ராவணன் ஆணைப்படி அரக்கிகள் சீதையைத் துன்புறுத்தும் சரி, மிகவும் பொறுமையுடன் சுற்றியுள்ள சூழலை முழுமையாக உள்வாங்கும் வரை நிதானித்து அதன் பின்னரே வந்த வேலையைச் செய்யும் நிதானத்தைக் கற்றுக் கொடுக்கிறார்.
6, சீதையிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளும் விதம், “தங்கள் கணவரால், தாங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்று கண்டு வரப் பணிக்கப்பட்ட நபர்” என்ற வாசகத்தில் துளியும் மிகையன்றி, துளியும் குறையன்றி சொல்லும் நேர்மையைப் போதிக்கிறார்.
7, அசோகவனத்தையும் அதைக் காவல் காத்த அரக்கிகளையும் கண்ணிமைக்கும் நேரத்தில் சிதைத்து விட்டு, “ என் மகாராஜன் சுக்ரீவனும், அவருடைய படையிலும் என்னை விட எல்லோரும் அதிகத் திறன் வாய்ந்தவர்கள். எனவே தாங்கள் கவலையேதும் கொள்ளவேண்டாம், இராமன் கடல்கடக்க நாங்கள் துணையிருப்போம்” என்று சொல்லும் தருணத்தில் தன்னடக்கத்தையும் அதை விட இத்தனை பெரிய பலசாலியை விட அதிக பலசாலிகள் கொண்ட சேனை தன் கணவருக்குத் துணையிருக்கிறார்கள் என்ற அசாத்திய நம்பிக்கையைக் கொடுக்கும் திறமையைக் கற்பிக்கிறார்.
8, வந்தாச்சு, கணையாழியைக் கொடுத்தாச்சு, சூடாமணியை வாங்கியாச்சு, கிளம்பிப் போனா ராமரிடம் கொடுத்திடலாம் வேலை முடிஞ்சுடுச்சு இல்லையா? ஆனால், பின்னால் நிகழப் போகும் போருக்குத் தேவையான தகவல்களையும் திரட்டிட்டுப் போகணும் என்ற முன்னடவடிக்கையைச் சுட்டிக் காட்டுகிறார்.
அதாவது, ராமருக்கு, ராவண சைன்யத்தின் பலம்/பலவீனம் பற்றிய தகவல் கொடுக்க வேண்டும் என்றே அங்கேயுள்ள ஒவ்வொருவருடனும் வீண் வம்பிற்குச் சென்று சண்டை போட்டு அவர்களின் பலத்தை பரிசோதனை செய்கிறார்.
9, அப்படிச் சண்டை போடும் போது ஒருவேளை தோல்வி நேர்ந்தால், இதுவரை பயணம் செய்து, எடுத்த காரியம் சிதைந்து போய் விட்டால், எல்லாமே வீணாகிவிடுமே என்ற அச்சம் நேர்ந்த போது. நானே பலசாலி, நானே ஜெயிப்பேன் என்று முழுவதும் தன்னை நம்பும் தன்னம்பிக்கையை போதிக்கிறார்.
10, தன் தலைவனுக்குச் சாதகமாக எதிரியை மனரீதியாக நிலை குலையச் செய்யும் விதமாக, ராவணனிடம் ராமனின் புகழ் பாடி, உயிர் தப்பிக்கணும்னா அவனிடம் சென்று சரணடைய அறிவுறுத்துகிறார். எதிரியை மனதளவில் அயற்சியடையச் செய்தல்.
11, தன் வாலில் தீ வைத்து நகர் முழுவதும் இழுத்து வரச் செய்த போதும், அத்தனை கொடுமையான சூழலிலும், நகரின் வரைபடத்தைக் குறித்துக் கொள்ளும் வாய்ப்பாக்கிக் கொள்ளும் போது, எத்தனை பெரிய துன்பம் வரும் போதும், சூழலைக் கவனிக்கவும், அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தவும் அறிவுறுத்துகிறார்.
12, எல்லாம் முடித்துத் திரும்பியவுடன், சூடாமணியை எடுத்துக் கொண்டு ராமரைச் சந்திக்க ஓடவில்லை. சாதித்து விட்டேன் என்ற அதீத கொண்டாட்ட மனப்பாண்மையில்லை. செய்தியை முதலில் தன் மன்னனான சுக்ரீவனிடம் செய்தியைச் சொல்லி அனுமதி கேட்டு ஆள் அனுப்புகிறார். அதாவது, அதீத உற்சாகத்தில் கூட அதிகாரப் படிநிலையைத் (Hieararchy) தவிர்த்து விடாத நிதானம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
13, சுக்ரிவனின் அனுமதியுடன் ராமரைச் சந்தித்துச் செய்தியைச் சொல்லும் பொழுது, ஒரே வாக்கியம், முழு நிறைவான பதிலாகச் சொன்னது உச்சம்
“கண்டனன் கற்பினுக்கு அணியை என் கண்களால்”
முதல் வார்த்தையில், “பார்த்துட்டேன்”.
அடுத்த இரு வார்த்தைகளில், “ ராவணனால் எந்த பங்கமும் அடையாமல், கற்பில் சிறிதும் குறைவில்லாமல் இருக்கிறாள்”.
அதற்கடுத்தது, “ நானே பார்த்தேன். எந்தச் சந்தேகமும் வேண்டாம்”.
அனுமர் சொன்ன அந்த ஒரு வாக்கியத்தைக் கேட்ட பின் யாருக்கேனும், ஏதேனும் சந்தேகம் வருமா?
மறுபடியும் சொல்றேன். சுந்தர காண்டம் படிப்பதால் மட்டும் எந்த பிரயோஜனமும் இல்லை. அதை உணர்ந்தால், உள்வாங்கி நம் வாழ்க்கைக்குப் பயன்படுத்தினால் அதை விட உயர்வான வழிகாட்டி வேறேதும் இல்லை.
குறிப்பு 1: சும்மா மேலோட்டமாக என் சிற்றறிவுக்கு எட்டிய அளவில் சுருக்கமாக எழுதியிருக்கேன். தீவிர ஆத்திகர்கள் படிக்க வேண்டாம் என்று சொன்னது, பக்தி நிறைந்திருப்பவர்களுக்கு பகுத்தறிவு தேவையில்லை. சரணடைதலே ஆகச் சிறந்த வழி.
குறிப்பு 2 : அனுமன் வேறு யாருமல்ல, நாம் தான், நம் மனம்/புத்தி தான். தடைகள் பல கடந்து ஜீவாத்மாவான சீதாபிராட்டியாரை, பரமாத்மாவான ஸ்ரீராமரை அடையச் செய்வது தான் பிறவிக்கடன் என்ற பெரியவர்களின் வழிகாட்டுதலை உணர்ந்தவர்களுக்கான பதிவல்ல இது.
ஜெய் ஸ்ரீராம்!
அபாரம்…