வியாச மகாபாரதத்தின் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு கிசாரி மோகன் காங்குலி (1848 – 1908) அவர்களால் செய்யப்பட்டது. இன்றுவரை உலகெங்கும் உள்ள வாசகர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் அறிஞர்களுக்கும் ஆதாரபூர்வமான மகாபாரத நூலாக அது உள்ளது. முலநூலில் சுமார் 80,000 சம்ஸ்கிருத சுலோகங்களுக்கு மேல் உள்ள இதிகாசத்தின் மொழிபெயர்ப்பு எவ்வளவு பிரம்மாண்டமானதாக இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இந்த நூலை ஆதிபர்வம் தொடங்கி அத்தியாயம் அத்தியாயமாகத் தமிழில் மொழிபெயர்த்து 2013ம் ஆண்டு முதல் தனது இணையதளத்தில் அனைவரும் படித்துப் பயன்பெறும் வகையில் வெளியிட்டு வருகிறார் செ.அருட்செல்வப் பேரரசன். தற்போது சல்லிய பருவம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மொழிபெயர்ப்பு துல்லியமானதாகவும், அதே சமயம் எளிய, சுவாரஸ்யமான நடையிலும் அமைந்துள்ளது சிறப்பு.
படிப்பதற்குப் பதிலாக கேட்க விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் முடிவடைந்த பகுதிகளை தெளிவான உச்சரிப்புடன் வாசிக்கச் செய்து யூட்யூபில் காணொளிகளாகவும் ஆடியோ கோப்புகளாகவும் இட்டு வருகிறார்.
இப்பெரும்ணியில் அவர் செலுத்தும் உழைப்பும் கவனமும் மகத்தானவை, போற்றுதலுக்குரியவை. எந்த நிறுவனங்களின் ஆதரவும் நிதி உதவியுமின்றி தனி மனிதராக, தனது குடும்பத்தினர் மற்றும் சில நண்பர்களின் ஒத்துழைப்பை மட்டுமே கொண்டு இதில் ஈடுபட்டுள்ளார். நமது பண்பாட்டின் மீது அவருக்குள்ள பற்றும், மகாபாரதத்தின் மீதுள்ள பேரன்புமே இதற்குக் காரணம்.
அண்மையில் மகாபாரதத்தில் உள்ள தனிக்கதைகளை வாசகர்கள் படிப்பதற்கு உகந்த வகையில் மின்னூல்களாகவும் (E-books) அவர் வெளியிட்டிருக்கிறார். இதுவரை உதங்க சபதம், கருடனும் அமுதமும், நாகவேள்வி, நாகர்களும் ஆஸ்திகரும், துஷ்யந்தன் சகுந்தலை, யயாதி ஆகிய நூல்கள் வந்துள்ளன. இவற்றுக்குக் கிடைக்கும் வாசக ஆதரவு, மேலும் பல மஹாபாரதக் கதை நூல்களை இதே வடிவில் வெளியிடுவதற்கு அவரை தூக்குவிக்கும், தூண்டுதலாக அமையும்.
மகாபாரதத்தை ஏற்கனவே பல விதங்களில் படித்தவர்கள் இந்தக் கதைகளை அறிந்திருக்கக் கூடும். ஆனால் அவர்களுக்கும் கூட, வியாச மகாரபாரத்தில் உள்ளதன் நேரடியான வடிவத்தை வாசிப்பது என்பது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்.
உதாரணமாக, யயாதி நூலின் அறிமுகம் இவ்வாறு கூறுகிறது:
”இந்த யயாதியின் கதையில், பல நீதிகள் உரைக்கப்படுவதை நாம் காணலாம், சுக்ராச்சாரியருக்கும், தேவையானிக்கும் இடையில் நடக்கும் உரையாடல், கசனுக்கும், தேவயானிக்கும் இடையில் நடக்கும் உரையாடல், யயாதிக்கும் அவனது பேரர்களுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் ஆகியவை பல நீதிகளைக் குறித்துப் பேசுகின்றன. .. பழங்காலத்தில் மதுவைப் புசித்து வந்த பிராமணர்களுக்கு, அது தகாதது என்ற விதி இந்தக் கதையில்தான் ஏற்படுகிறது. யயாதியும் அவனது பேரர்களும் உரையாடும் பகுதி மறுமையைக் குறித்து அதிகம் பேசுகிறது. காலவரும் கருடனுக்கும் இடையில் நடக்கும் உரையாடலில், நாற்றிசையிலும் என்னென்ன இருக்கின்றன என்ற தொன்மக் களஞ்சயம் நம் கண் முன்னே விரிகிறது. வர்ணக் கலப்பு மணம் அந்தக் காலத்தில் எவ்வளவு எளிதாக நடந்திருக்கிறது என்பதையும் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. மஹாபாரதத்தில் வரும் கிளைக்கதைகளில், இந்த யயாதியின் கதை மிக முக்கியமானதாகும். இனி மஹாபாரத மூலத்தில் உள்ளவாறே யயாதியைத் தரிசிப்போம் வாருங்கள்”.
இந்த மின் நூல்கள் அமேசான் தளத்தில் கிடைக்கின்றன. கீழ்க்கண்ட இணைப்புகளில் க்ளிக் செய்து அவற்றை வாங்கலாம்.
கருடனும்! அமுதமும்!! – ₹.56.00
நாகர்களும்! ஆஸ்தீகரும்!! – ₹.75.00
இந்த மின் நூல்களை கிண்டில் வாசிப்புக் கருவியிலும், செல்போன் / டேப்லட் கருவிகளில் உள்ள Kindle Reader App மூலமும் வாசித்து மகிழலாம்.
கும்பகோணம் சதாவதானம் ஸ்ரீ உ.வே. தி.ஈ.ஸ்ரீனிவாஸாசார்யார் ஸ்வாமின் அவர்களுக்கு அடுத்த படி மஹாபாரதத்தை உள்ளபடி மொழிபெயர்த்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளிக்கும் பணியினைச் செய்து வருபவர் ஸ்ரீ அருட்செல்வப் பேரரசன் அவர்கள்.
தமிழ் மொழிபெயர்ப்பை பதிப்பித்த ஸ்ரீ ராமானுஜாசார்யார் ஸ்வாமின் அவர்கள் தமது விக்ஞாபனத்தில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தாராய் எழுந்தருளியிருந்த ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகரவர்கள் தமக்கு செய்த உபகாராதிகளையும் தமிழ்த்தாத்தா ஸ்ரீ உ வே சாமிநாதைய்யர் அவர்கள் தம்மைத் தொடர்ந்து உத்ஸாஹப்படுத்தியதையும் நினைவு கூறுகிறார்.
இவ்வரும்பெரும் நூலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உபகதைகளை ப்ரசுரித்தமைக்கும் அவரது மொழிபெயர்ப்பு நற்பணிக்கும் தமிழ்கூறும் நல்லுலகம் என்றென்றும் நன்றியுடைத்ததாயிருக்கும். ஜெயம்.
அருட்செல்வப் பேரரசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
அருட்செல்வபேரரசனின் பணி மிகவும் பாராட்டட்தக்கது. ஒரு உதாரணம். பலருக்கு யயாதியைப் பற்றி தெரியாது. அப்படி படித்திருந்தாலும், அதனுடைய தத்துவத்தை தவறாக புரிந்துகொள்வார்கள். முகவுரையே அற்புதம். தெளிவான சிந்தனை, ஆராய்ச்சி. நான் புத்தகத்தை முழுவதும் படிக்கவில்லை. முகவுரையிலேயே அவரை புரிந்துகொண்டேன். நன்றி
என்.ஆர். ரங்கனாதன் 9380288980.