ஸீதையின் மஹாசரித்ரமும்  அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 4

கட்டுரையின் மங்கல வாழ்த்து:

அபிரதிபந்தக பாரதந்தர்யம் என்னும் தடையற்ற, நிபந்தனைகளற்ற பக்திநிலைக்கு எடுத்துக்காட்டாக குலசேகராழ்வார் மேலும் சில பாசுரங்களை  காட்டுகின்றார். அவை பின் வருமாறு:

மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட்டு அம்மானே

பால்நோக்காய் ஆகிலும் உன்பற்றல்லால் பற்றிலேன்

தான்நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்

கோல்நோக்கி வாழும் குடிபோன்று இருந்தேனே

–பெருமாள் திருமொழி -5-3

பொருள்: மீன்கள் வாழ்வதற்கேற்ற நீர்வளமிக்க, நீண்ட வயல்கள் சூழ்ந்த திருவிற்றுவக்கோடு என்னும் திருத்தலத்து எம்பெருமானே! அடியேனாகிய என்பால் நீ கருணை காட்டாவிடினும், உன்னையன்றி எனக்கு, வேறு ஒரு புகலில்லை. மக்களை காப்பதற்காக! என்று மாலையணிந்த மன்னவன், தான் செய்யவேண்டிய காவல் பணியிலிருந்து தவறி, தன்குடிகளைக் காக்காமல், தானே முனைந்து எப்படிப்பட்ட துன்பங்களைச் செய்தாலும், அவனுடைய செங்கோலையே பார்த்துவாழும் மக்களைப்போல, உன் திருவடிகளையே எப்பொழுதும் எண்ணியுள்ளேன்.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத்துயர் தரினும் வித்துவக் கோட்டம்மானே

ஆளாவுனதருளே பார்ப்பன் அடியேனே

-பெருமாள் திருமொழி -5-4

பொருள்: [பாலக்காடு ஜில்லாவில், பட்டாம்பி நகருக்கு அருகில்,] திருவிற்றுவக்கோடு என்னும் திவ்யதேசத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளே! வைத்தியன் சிகிச்சைக்காக கத்தியாலே அறுப்பதுவும், பழுக்கக் காய்ச்சிய ஊசியினால் சூடுபோதுவதும் செய்தாலும், அவனிடத்தில் நீங்காத அன்புடைய நோயாளியைப்போல, நீ உன் மாயையினால் நீங்காத துயரத்தை எனக்குத் தந்தாலும், நான் உன்னுடைய அடிமையாக இருந்து, உனது அருள்நோக்கிக் காத்திருப்பேன்.

[குறிப்பு: பெருமாள் திருமொழியினை அருளியவர் குலசேகர ஆழ்வாராவார். வைணவ உரை நூல்களில், கண்ணனை அவன், இவன் என்று ஏக வசனத்தில் அழைப்பார். ஆனால் சக்கரவர்த்தித் திருமகனை பெருமாள் என்று மரியாதை கொடுத்து விளிப்பார். பெருமாள் என்றாலே அது  சக்கரவர்த்தி திருமகன்தான். குலசேகர ஆழ்வாரும்  மாசிமாதம், ஸ்ரீராமபிரானுடைய புனர்பூசம் திருநக்ஷத்திரத்தில் அவதரித்தார். தினமும் தன் அரண்மனையில் இராமாயண பாராயணம் செய்விப்பார். அவருக்கு திருவாராதன மூர்த்தியும் ஸ்ரீராமபிரானாவார். இவ்வாழ்வார் 1.)“திருத்தாலாட்டு” (மன்னுபுகழ் கௌசலை-எட்டாம் திருமொழி),

2.)“தயரதர் புலம்பல்” (வன்தாளிணை வணங்கி-ஒன்பதாம் திருமொழி),

3.)“சம்பூர்ண ராமாயணம்” (அங்கணெடு மதிள்-பத்தாம் திருமொழி)

என்று பெருமாளைப் பாடினார்; அந்த பெருமாள்தானே தன் திருக்கரத்தால் ஆராதித்துவந்த ஶ்ரீரங்கநாதராகிய பெரியபெருமாளை  உகந்து

4.)“மங்களாஶாசனம்” (இருளிரியச் சுடர்மணிகள்-முதல் திருமொழி),

5.)“அடியார் குழாம்” (தேட்டரும்திறல் தேனினை- இரண்டாம் திருமொழி), 6.)“அரங்கனின் மீதான காதல்” (மெய்யில் வாழ்க்கையை-மூன்றாம் திருமொழி)

என்று பாடினார்.

எனவே அவரது நூலில் மிகுதியான பாகம் பெருமாளைப்பற்றியே இருந்தலால், அதற்கு “பெருமாள் திருமொழி” என்றே திருநாமம் சூட்டினர் பெரியோர்.

இப்பாசுரங்களுக்கும் மேற்குறித்த முதல் குறட்பாவிற்கும் இலக்கணமாக வாழ்ந்து காட்டினாள் பிராட்டி.

ராமாயணத்தின் தோற்றுவாய் கூறும் சிறையிருந்தவள் ஏற்றம்:

ஒருநாள்  தமஸா நதிக்கரையில், சிஷ்யர் பரத்வாஜருடன் மகரிஷி வால்மீகி சென்றார். அப்பொழுது ஒருவேடன், பனைமரத்தில் விளையாடிக்கொண்டிருந்த அன்றில் ஜோடியில் ஆண்பறவையை அம்பெய்திக் கொன்றான். ஆண்பறவையின் உடலின்மிது விழுந்து பெண்பறவையானது பிரிவால் கதறித் துடித்தது. பறவைகளின்மீது இரக்கமும், அவற்றின்மீது பகைகொண்ட வேடன்மீது கோபமும்கொண்டு, பொறுக்காமல் மகரிஷி, வேடனை

மா நிஷாத பிரதிஷ்டாம் த்வம் அகம ஸாஸ்வதீ ஸமா |

யத் கிரௌஞ்ச மிதுனாத் ஏகம் அவதீ காம மோஹிதம் ||

-“ வேடனே! காமத்தில் விளையாடிக்கொண்டிருந்த  அன்றில் பறவைகளில் ஒன்றினை கொன்ற நீ, பலகாலம் நிம்மதியின்றி அலைவாய்(உனக்கு அமங்கலம் உண்டாகுக)” என்று சபித்தார்.

அவர் வெகுண்டு சொன்ன அவ்வார்த்தைகள், மேற்கூறிய சுலோகமாக அனுஷ்டுப் சந்தஸில், வீணையில் இசையமைத்து பாடத்தக்கவகையில் அமைந்து, மஹரிஷி வாயில் சாபமாக, அவரையும் அறியாமல் வெளிப்பட்டது.

சினத்தின் வயப்பட்டு சாபம் கொடுத்து விட்டோமே என்ற கவலையும்,  அது எப்படி சாபம், சுலோகமாகப் பிறந்தது என்ற பிரமிப்புமாக மகரிஷி, பின்னர் ஆஸ்ரமம் திரும்பினார். நீண்டநேரம்  சிந்தித்தும் அதற்கு விடைகிட்டவில்லை.  அப்பொழுது, சுயம்புவான  பிதாமகர் பிரம்மா அங்கு தோன்றினார்.

“கோபதாபங்கள் ஆகிய உணர்ச்சிகளுக்கு வசப்பட்டோமே!” என்ற கவலைகொண்ட  ரிஷியை சமாதானம் செய்து, அந்த சுலோகத்தில்  மா = இல்லை, நிஷாத = வேடன் என்னும் சொற்களை மா = திருமகள், நிஷாத = கேள்வன்; அதாவது  மாநிஷாத = திருமகளுக்குல் கேள்வன் என்னும் வேற்றுமைத்தொகை தத்புருஷ சமாசமாக மாற்றி  “ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கேள்வனான திருமாலே! காமத்தால் வெறிகொண்ட அரக்கனான ராவணனை கொன்றாய்! உனக்கு பல்லாண்டு மங்கலம் உண்டாகுக” என்னும்படியாக பொருளை  மங்களசரணமாக மாற்றி உரைத்தார்.

அநுபந்த சதுஷ்டயம்:

எந்த ஒரு நூலையும் எழுதுமுன், அந்நூலானது தடையின்றி எழுதி முடிக்கப்பட வேண்டியும், அந்நூலானது உலகில் நன்கு பரவப்பட்டு புகழ் படைக்க வேண்டியும்,

1) இஷ்டதேவதையௌ நமஸ்கரித்து ஒரு சுலோகம் எழுதுவது வழக்கம். மேலும் அக்கலையினை கற்பவர்களுக்கு அந்நூலில் ஈடுபாடு(பிரவ்ருத்தி) உண்டாகும் வண்ணம்

2) விஷயம் அல்லது அந்நூலில் கூறப்படும் கருப்பொருள்,

3) அதிகாரி அல்லது அந்நூலைக் கற்க தகுதியுள்ளவர் யாவர்,

4) மற்றும் அந்நூலைக் கற்பதனால் கிடைக்கும் பலன் என்னும் இந்த நான்கினை அநுபந்த சதுஷ்டயமாக அந்த சுலோகத்தில் தெரிவிப்பர்.

மேலும், சரஸ்வதியை மஹரிஷியினுடைய வாக்கில் அமரவைத்து தான் பயிலும் சதகோடிராமாயணம் என்னும் நூறுகோடி சுலோகங்களுள்ள நூலிலிருந்து மேற்கண்ட சுலோகத்தின்மூலம் இவ்வாறு அநுபந்த-சதுஷ்டய சுலோகம் பாடவைத்ததாக பிரம்மா மருள்நீக்கினார்.

அது சாபமல்ல! இலக்கண யாப்பு, தளைகொண்டு, அடிக்கு 16 அக்ஷரங்களாய், இரண்டடிகொண்ட அனுஷ்டுப் சந்தஸில் அமைந்த அனுபந்தம்  என்று தெரிவித்தார். மேலும் மகரிஷியை  அந்த சுலோகத்தையே முன்னுதாரணமாக/ இதிகாச்ச-சுருக்கமாக வைத்து, அந்த முறையிலேயே, விஸ்தாரமாக, தன்னைப் படைத்த ஸ்ரீமந்நாராயணனுடைய, ராமாவதாரத்தை, ஒரு முழுக்காவியமாகப் பாடப்பணித்தார்.

ஆகவே இதுவே ராமாயணத்தின் முதலடி என்பர்.

ராமாயணம் (ராமன் சொன்ன வழியில்) = “சிறையிருந்தவள் ஏற்றம்” என்று சீதை நடந்து காட்டியது” என்றும் பெரியோர் பணிப்பர்.

இதில்,

1) “பிரம்மனானவர் – திருவுடன் கூடிய திருமாலைப் பல்லாண்டு பாடுவது”  என்பது இஷ்ட தேவதா நமஸ்காரமாகும்.

2) “திருமாலானவர் இவ்வுலகை நலிக்கச்செய்யும் ராவணனை ஒழிக்க அவதாரம் செய்த வரலாறு” என்பது நூலின் விஷயமாகும்.

3) ஶ்ரீமந்நாராயணன் சேதன, அசேதனங்களுக்கு இருப்பிடமாதலால், அவனுக்கு பல்லாண்டு பாடியமை என்னும் வியாஜத்தினால், இந்நூலினைக் கற்கும் தகுதி, “நமக்கும் அவனுக்குமான அயனசம்பந்தம் கருதி, அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும் என்பது” அதிகாரி சம்பந்தமாகும்.

4) இந்நூலினை கற்பதனால் –“அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்னும் அனைத்துவித மங்கலங்களும் உண்டாகும்” என்பது  பலனாகும்.

பாரதந்த்ர்யத்தின் வகைகள்:

முற்பட்ட பாகங்களில், பாரதந்தர்யம் என்றால் என்னவென்று பார்த்தோம். இனி அதன் வகைகளை இக்கட்டுரையில், தர்க்கத்தின் துணைகொண்டு காணலாம்.

  1. ஸோபாதிகம் ( ) ஒருகாரணம் பற்றியது:

கிஷ்கிந்தா காண்டத்தில் ராமலக்ஷ்மணர்கள் அனுமனைச் சந்திக்கின்றனர். அவர்களை யாரென்று வினவிய அனுமனிடம், லக்ஷ்மணர் தன்னை, “ராமருடைய வாத்சல்யம், சௌசீல்யம், சௌலப்யம், ஆர்ஜவம்  போன்ற எண்ணிறந்த குணங்களால் கவரப்பட்டு, அவருடைய அடிமையானவன்.  அவருடைய இளைய சகோதரனுமாவேன்.” என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் இங்கு உபாதி என்னும் சூக்ஷ்மத்தினை ஆதிகவி நமக்குக் காட்டுகின்றார். அதாவது லக்ஷ்மணன் தான் ராமபிரானுக்கு அடிமையாக இருப்பதற்கு காரணம் அவரிடமுள்ள எண்ணிறந்த குணங்களே என்று சொல்கிறார். இது ஒருகாரணம் பற்றி வந்த தொண்டு மனப்பான்மை / அடிமைத்தனம்/ பக்திநிலை ஆகும்.

  1. நிரூபாதிகம் ( ) காரணம் பற்றாதது ( ) இயற்கையானது:

                    இதுவே அயோத்யா காண்டத்தில் சக்கரவர்த்தியாரும் துஞ்சி, ராமபிரானும் வனம் சென்ற பின்னர், வசிஷ்டர் தன்னை முடிசூடுமாறு நிர்பந்திக்கும் பொழுது பரதன், “இந்டஹ் ராஜ்யமும் நானும் ராமபிரானுக்கு உடைமைகள்,” என்று தான் ராமபிரானுக்கு எவ்வித காரணமுமின்றி [பாரதந்த்ர்யமாக]பணியாளனாக இருப்பதைத் தெரிவிக்கிறார்.  ஶ்ரீராமபிரானுக்கு அடிமைப்பொருளான நான், அவருடைய இன்னொரு அடிமைப்பொருளான ராஜ்யத்தை எங்ஙனம் ஆளுவேன் என்று வசிஷ்டரைக் கேட்கிறார். அதாவது இந்த ராஜ்யம் எப்படி ஒரு உயிரற்றதான, மற்றும் ஶ்ரீராமருக்கே உரியதான பொருளோ, அவ்வாறே நானும் உயிருள்ளவனாயினும் ஶ்ரீராமருக்கே அற்றுத்தீர்ந்த பொருள் என்கிறார்.

அப்பொழுது வசிஷ்டர் ஒரு உதாரணம் காட்டுகின்றார். அணிகலன் ஒரு சுதந்திரமற்ற /பாரதந்த்ர்ய வஸ்துவாகும். அதை காக்கும் கஜானாபெட்டியும் ஒரு பாரதந்த்ர்ய வஸ்துவாகும். ஆனால் அந்தப் பாரதந்த்ர்ய பொருளான- கஜானாபெட்டியானது, மற்றொரு பாரதந்த்ர்ய பொருளான அணிகலனை உள்ளே வைத்துக்கொண்டு காப்பதுபோல, ஸ்ரீராமருக்கு பாரதந்த்ர்ய பொருளான நீயும், மற்றொரு பாரதந்த்ர்ய பொருளான அவனது ராஜ்ஜியத்தை காப்பாற்று என்கிறார்.

அதற்கு பரதன், “நீர் சொல்வது மிகவும் சரிதான்! ஆனால் அவ்விரண்டு பாரதந்த்ர்ய வஸ்துக்களுக்கு(பெட்டி+ஆணிகலன்)  எஜமானனானவன், பத்திரமாக அணிகலனை பெட்டியில் வைத்துச் சென்றால்தானே, அணிகலனை பெட்டியானது காக்கும்? எனக்கு எஜமானரான ராமர் அவருடைய, ராஜ்யத்தினை காக்க, அங்ஙனம் எனக்குக் கட்டளையிடவில்லை. எனவே நானும் காட்டிற்கு சென்று ராமரை சந்தித்து; அவர் எனக்கு நேரே கட்டளையிட்ட பின்னரே, ஆட்சியா அல்லது வனவாசமா என்பதுபற்றி மேலே சிந்திப்பேன்” என்றார்.

அவ்வாறே சித்திரகூட வனத்தில் ராமபிரானைச் சந்தித்து; அவரும் பலவாறு நிர்பந்தித்த பின்னர்தான், அவருடைய பாதுகைகளைப் பெற்றுத் திரும்பி, அயோத்திக்கு வெளியே நந்திகிராமத்திலிருந்து அரசாட்சி புரிந்தார்.

அவர் நிரூபாதிகமாக,

(அ) இயற்கையாக, எவ்வித காரணமுமின்றி பாரதந்த்ர்யப்பட்டுள்ளார். ஆனால் லக்ஷ்மணனோ தான் ராமபிரானுக்கு பாரதந்த்ர்யமாக/பணியாளனாக இருப்பதற்கு ராமனின் குணங்களே காரணம் என்று காட்டுகிறார். இதற்கு உபாதி என்று பெயர். உபாதை என்றால் வியாதி என்றும் சொல்லுவார்கள். அதாவது புகை உருவாக ஈரவிறகினை எரிப்பது காரணம் ஆகும். இங்கு விறகு பக்ஷம்; நெருப்பு ஹேது; புகை சாத்தியம்; ஆனால் ஈரம் உபாதி ஆகிறது. அவ்வாறே லக்ஷ்மணனிடம் ராமபக்தி ஏற்பட ராமநின் குணங்களே உபாதியாகின்றன. இதைவிட பரதனின் பாரதந்த்ர்யம் மேலானது,  நிரூபாதிகமானது (உபாதி அற்றது/இயற்கையானது) என்று காட்டுகின்றார் ஆதிகவி.

  1. அபிரதிபந்தகம் ( ) தடையற்றது :

                         இனி பிராட்டியினுடைய விஷயத்திற்கு வருவோம். உத்தர காண்டத்தில், தான் கர்ப்பம் தரித்ததை பெருமாளிடம் சொல்கின்றாள். மேலும் கங்கைக்கரையில் ரிஷிகளின் ஆஶ்ரமத்தில் தங்க விருப்பமும் தெரிவிக்கின்றாள். மறுநாள் லக்ஷ்மணனுடன் அனுப்புவதாக ராமபிரானும் அனுமதி தந்து, மந்திராலோசனை காரணமாக, அவளிடமிருந்து விடைபெறுகிறார். அன்று இரவு பத்ரன் மூலமாக அபவாதம் தெரியவந்து, சீதையை வால்மீகி ஆஶ்ரமத்தருகில் விட்டுவருமாறு லக்ஷ்மணனைப் பணிக்கின்றார். கங்கைக்கரையில் இறக்கிவிடும் இளையாழ்வாரும் அவளிடம், நடந்ததை விளக்குகின்றான்.

அபவாதம் பொறுக்காத பிராட்டி, தான் உடனேயே கங்கையில் விழுந்து உயிர்துறக்க விரும்புகிறாள். ஆயினும் ஶ்ரீராமபிரானின் திருவுள்ளத்திற்கு அனுசரணையாக, வால்மீகி ஆஶ்ரமத்தில் உயிர் வாழ்கிறாள். தானும் பரதனைப்போல, ”ஶ்ரீராமபிரானை நேரில் கண்டு, இதுபற்றி விவாதித்துவிட்டு, பிறகு கங்கையில் விழுவதா, அல்லது உயிர்வாழ்வதா என்று முடிவெடுக்கின்றேன்! ம்ம்! லக்ஷ்மணரே! ரதம் அயோத்திக்குத் திரும்பட்டும்!!” என்றெல்லாம் ஆர்பாட்டம்செய்யவில்லை. ராமபிரானின் திருவுள்ளத்தினைத் துல்லியமாக அறிந்து அவ்வண்ணமே வாழ்ந்துகாட்டினார். இதற்கு தர்க்கத்தில் அபிரதிபந்தகம் என்று பெயர்.

ஸோபாதிகத்துக்கு உதாரணம்:

                        நீரிலே மின்சாரம் கடத்த முடியாது. ஆனால் அந்நீரில் சில சொட்டு எலுமிச்சைச் சாறு கலந்தால் மின்சாரத்தை எளிதாகக் கடத்தலாம். நீர் என்பது ஹேது அல்லது வியாப்யம்; மின்சாரம் என்பது வியாபகம் அல்லது சாத்தியம்; எலுமிச்சைச் சாறு என்பது உபாதி. இதனை வினையூக்கி அல்லது செயலூக்கி என்னலாம். அதாவது இயற்கையாகவே மின்கடத்தும் திறன் இல்லாத நீரினை அவ்வாறு ஆக்குவது உபாதி. எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் மின்சாரம் பாயும் என்னும் அறிவு தான் வியாப்தி ஆகும். இங்கே வியாப்திக்கு உபாதி உதவுகின்றது. இதனை ஸ+உபாதிக+வியாப்தி == ஸோபாதிக வியாப்தி என்பர். இதுவே லக்ஷ்மணரின் பக்திநிலையாகும்.

நிரூபாதிகத்திற்கு உதாரணம்:  

உலோக கம்பிகளுக்கு இடையே மின்சாரத்தை கடத்தலாம். இங்கும் உலோகக் கம்பி என்பது வியாப்யம்; மின்சாரம் என்பது வியாபகம்; உலோகத்தில் மின்சாரம் பாயும் என்னும் அறிவு வியாப்தியாகும். இதனை நிர்+உபாதிக+வியாப்தி == நிரூபாதிக வியாப்தி என்பர் (உபாதி இல்லாதது). இது பரதனின் பாரதந்த்ர்யமாகும்.

தடைக்கு உதாரணம்:  

ஆனால் அக்கம்பிகளுக்கு இடையில் அதற்குத்தடையாக ஒருகட்டையோ, பிளாஸ்டிக் டேப்போ, வெற்றிடமோ இருந்தால் மின்சாரம் பாயாது. இதற்கு பிரதிபந்தகம் என்பர். இங்கே உலோகக்கம்பி என்பது ஹேது; மின்சாரம் என்பது சாத்தியம்; பிளாஸ்டிக் டேப்(INSULATION TAPE) என்பது பிரதிபந்தகம். அதாவது இயற்கையாக மின்சாரம் பாயக்கூடிய உலோககம்பிகளுக்கு இடையே அதற்கு தடையாக வருவது பிரதிபந்தகம் ஆகும். இங்கு ஶ்ரீராமபிரான் பிராட்டிக்குத் தன்னை ஒரு கொடுங்கோலனாக காட்டிக்கொண்டதை, ஸீதையின் பாரதந்த்ர்யத்திற்கு பிரதிபந்தகமாக உதாரணம் கொள்ளலாம்.

ப்பிரதிபந்தகத்துக்கு உதாரணம்:

மின்காந்த சுற்றுக்களில் மின்சாரம் கடத்தலாம். அதற்கு

தடையாகக் கட்டையோ, வெற்றிடமோ இருந்தாலும்கூட மின்சாரம் கடத்தலாம். ஏனெனில் மின்சாரமும் காந்தப்புலனும் பரஸ்பர சம்பந்தம்கொண்டவை. இதற்கு சமவாய சம்பந்தம் என்பர் தார்க்கிகர்கள். அவை மின்காந்த அயனிகளால் ஆனவை. அவற்றைப் பிரிக்கவே முடியாது. அவற்றுக்குத் தடையே கிடையாது.    இங்கே மின்காந்தசுற்று என்பது வியாப்யம்; மின்சாரம் என்பது வியாபகம்;  மின்சாரமும் காந்தப்புலனும் சமவாயசம்பந்தம்கொண்டவை என்னும் அறிவே வியாப்தியாகும். இதுபோன்று ஸ்ரீராமரும் சீதையும் இணைபிரியாதவர்கள் ஆவர். “அகர முதல எழுத்தெல்லாம்,” என்னும் முன்னடியில் வரும் அகாரமானது ஶ்ரீராமரையும் சீதையையும் சேர்ந்தே சுட்டுகின்றது. அகாரமானது “காக்கும் இயல்வினன் கண்ணபெருமானான,”   ஶ்ரீராமரையும் சீதையையும் சேர்ந்தே சுட்டுகின்றது. “ஆதிபகவன் முதற்றே உலகு,” என்னும் பின்னடியும் இந்தத் தம்பதியரையே சுட்டுகின்றது.

சிறந்தது எது:

லக்ஷ்மணனின் பக்திநிலை ஸோபாதிகம். பரதனின் பாரதந்த்ர்யம் நிரூபாதிகம். ஆனால் பிராட்டியின் பாரதந்த்ர்யம் தான் அபிரதிபந்தகம்  என்பது மஹரிஷியின் தீர்ப்பு ஆகும்.

பின்குறிப்பு:

மேற்கண்ட அனுபந்த-சதுஷ்டயம் திருக்குறளிலும் மற்றும் கம்பராமாயணத்திலும் உண்டு. திருக்குறளில்,

1) ஆதிபகவன் என்பது இஷ்டதேவதா,

2) தர்மார்த்த உபதேசம் என்பது விஷயம்,

3) தமிழரனைவரும் அதிகாரிகள் மற்றும்

4) அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்பது பலன்.

குறட்பாவில் பயின்ற “உலகு” என்னும் வியாப்யத்தினை வைத்துக் கம்பநாடரும்,

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்

நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா

அலகிலா விளையாட்டு உடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

என்று தொடங்குகின்றார்.  தலைவர், முதல்வர் என்பன [பர்யாய சொற்கள்] ஒருபொருட் பன்மொழிகள். குறட்பாவில் வியாபகமான “ஆதிபகவனை” கம்பர் “தலைவர்” என்றுகொண்டார்.

கம்பனிலும்,

1) திருமால் இஷ்ட தேவதா,

2) ராமாவதாரம் விஷயம்,

3) தமிழர்களனைவரும் அதிகாரிகள் மற்றும்

4) அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்னும் பிரயோஜனங்களை சரணாகதி மூலம் அடைவது பலன்.

குறட்பாவில் சரணாகதி என்னும் சாதனம் மறைந்துளது. அதனை அடுத்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

[தொடரும்]

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *