யாழ்ப்பாணத்து சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 2

கோயில் வழிபாட்டையும் புராணபடன மரபையும் ஊக்குவித்து சித்தாந்தத்தை வளர்த்தல்:

பாமரரும் சைவசித்தாந்த உண்மைகளை புரிந்துகொள்வதற்குச் சிறந்த சாதனமாக மிளிர்வது சிவாலயங்களாகும் என்பதை உணர்ந்த சபாபதிநாவலர் அவர்கள் திருக்கோயில் வழிபாட்டை பெரிதும் ஊக்குவித்துவந்தார். தாம் எங்கிருக்கிறாரோ அவ்விடத்திற்கு அருகிலுள்ள திருக்கோயிலில் வழிபாடாற்றிவந்த அவர் திருக்கோயில் வழிபாட்டை ஊக்குவித்துவந்தார்.

அத்துடன், கோயில்சார் இலக்கியங்களைப் படைத்து கோயில் வழிபாட்டில் யாவரும் ஈடுபடும்வண்ணம் செயற்பட்டார். அந்த வகையில் சபாபதி நாவலர் எழுதிய சிதம்பர சபாநாதபுராணம், திருச்சிற்றம்பல யமக அந்தாதி, திருவிடைமருதூர் பதிற்றுப்பத்தந்தாதி, மாவையந்தாதி, சிதம்பர பாண்டிநாயக மும்மணிக்கோவை, வடகோவைச் செல்வ விநாயக இரட்டை மணிமாலை, நல்லைச் சுப்பிரமணியக்கடவுள் பதிகம், வதிரிநகர் தண்டபாணிக்கடவுள் பதிகம், புறவார் பனங்காட்டூர் புறவம்மை பதிகம்போன்ற நூல்களைக் குறிப்பிடலாம்.

இவ்வாறு தலச்சிறப்புக்களைப் பேசவல்ல நூல்களைப் படைத்து மேற்படி தலங்கள்மீது அடியவர்களை ஆற்றுப்படுத்தும் செயற்பாட்டைச் சித்தாந்த மரபினின்று வழுவாமல், நாவலரவர்கள் மேற்கொண்டிருந்தார் எனக் கருதலாம். சிதம்பர சபாநாதர் புராணம் எழுதிய நாவலர் புராண காவியங்களுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து, வைதீக காவிய தூஷண மறுப்பு என்கிற நூலும் எழுதியுள்ளார். ஆக, புராணபடன மரபை வளர்ப்பதிலும் நாவலரவர்கள் ஆறுமுகநாவலருக்குப்பின் கணிசமான பணியாற்றினார் எனக் கருதலாம்.

சித்தாந்தவழி நிற்கும் அடியவர்களை போற்றுதல்:

Image result for saiva saintsசைவசித்தாந்தநெறிநின்று விலகாத சபாபதி நாவலர் சித்தாந்த ஆச்சார்யர்களைப் பெரிதும் போற்றிவந்துள்ளதுடன், அவர்கள் வழியிலேயே செயற்படவேண்டும் என்கிற ஆர்வமும் உடையவராக விளங்கியுள்ளார்.

சபாபதி நாவலரின் உரைநூலில் “இப்பெரிய வைதிக சைவமார்க்கத்தினைச் சிவபிரான் மெய் அருளாணை மந்திரதந்திரங் கொண்டு பிரதிட்டைசெய்து உபகரித்தருளிய பரமாசாரியர்கள் நால்வர். அவர் திருஞானசம்பந்த மூர்த்தியென்னும் ஆளுடைய பிள்ளையார், வாகீசரென்னும் அப்பர்மூர்த்திகள், சுந்தரமூர்த்தி யென்னுந் தம்பிரான்றோழர், மாணிக்கவாசகரென்னும் வாதவூரடிகள் என்றிப் பெரியரே. இந்நாற்பெரும் பரமாசாரியர் பெருமைகள் புராணங்களும் பக்தவிலாசங்களும் பிறவும் மிகவிரித்தெடுத்துப் புகழப்படுவன. வேதநெறி கடைப்பிடித் தொழுகினாலும் சிவாகமநெறி கடைப்பிடித்தொழுகினாலும் இவ்விரண்டு நெறியும் ஒன்றேயாம்; மெய்மை தெளிந்து அருள்வழி நின்றாரும் ஆகிய எல்லோரும் இப்பரமாசாரியர் நால்வர் திருவடிப்பக்தி வழிபாடே இக்கலிகாலத்துப் பிறவிப் பெருங்கடலைக் கடப்பித்துப் பேரா இன்பச் சிவத்தடங்கரை சேர்த்து உய்தி கூட்டும் அருட்புனையென்று கொண்டு அங்ஙனம் வழிபட்டு உய்தி கூடினார்.  கூடுகின்றார்…..” என்றும்,

“… அறுபத்து மும்மை நாயன்மாருட்பட்ட மற்றை நாயன்மார் பிரபாவமெல்லாம் இப்பரமாசாரியர் பிரபாவத்துள் பன்முறையானும் ஒன்றுபட்டு நடப்பனவேயாம்.  ஆரதத்த சிவாச்சாரியர், சோமசம்பு சிவாசாரியர், மெய்கண்ட சிவாசாரியர், அருணந்தி சிவாசாரியர், மறைஞானசம்பந்த சிவாசாரியர், உமாபதி சிவாசாரியர், என்றித் தொடக்கத்துத் திருவருட்செல்வர் பிரபாவங்களும் அதில் ஒன்றுபட்டு நடப்பனவேயாம்…”9 என்றும் எழுதுவது இவரது அடியார்பக்தியைப் பெரிதும் காட்டிநிற்கிறது.

அதேபோல, திருவாவடுதுறையாதீனத்து சிவஞானயோகிகளை தமது உபாசனாகுரவராக இவர் கொண்டிருந்தார் என்பதும் அவரது சிவஞானமுனிவர் வணக்கம் முதலிய செய்யுட்களாலும் வரலாற்றுச் செய்திகளாலும் அறியமுடிகின்றது.

சபாபதி நாவலர் கண்ட இந்துத் தத்துவம்:

சைவசித்தாந்தத்தை பிறசமய, தத்துவமரபுகளோடு கூடியதாக நிறுவுதல் ஆறுமுகநாவலர் காலத்தே யாழ்ப்பாணத்தில் உண்டான சைவசித்தாந்த மறுமலர்ச்சியில் ஈர்க்கப்பட்ட சைவச்சான்றோர்களில் பலரும் பிறசமயங்களை பெரிதும் கண்டிப்பவர்களாயும் சைவசித்தாந்தம் ஒன்றையே மெய்மையாக கருதுபவர்களாகவும் விளங்கினார்கள்.

இந்த மரபில் வந்த சான்றோராகவே சபாபதி நாவலரவர்கள் விளங்கியபோதும் அவர் பிறசமயங்களை அனுசரிப்பவர்களின் மனோபாவங்களை உணரும் ஆற்றல்கொண்டவராகவும், அவர்கள் எதற்காக அந்தச் சமயத்தை சார்கிறார்கள் என்கிற ஆராய்ச்சிபூர்வமான எண்ணப்பாங்கு உடையவராகவும் விளங்கியிருக்கிறார். இதனை,

Image result for shaivites+vaishnavitesவைதிகசமயிகள் தங்கள் சமயக்கொள்கைகளோடு இங்ஙனம் வித்தியாசம் பெரிதுடையனவாய் மிகவும் கீழ்ப்பட்டிருக்கும் விவிலிய சமயங்களை நல்லனவென்று பற்றுதற்கு நியாயம் சிறிதும் சித்திக்காது. இனி, ஆரியசமயிகளில் சிற்சிலர் இக்காலத்தில் கீழான விவிலிய சமயங்களிற் பிரவேசித்தற்குக் காரணம், வைதிகசமய விதிவிலக்குகளாகிய தருமங்கள் அனுட்டித்தற்கு அரிய பண்டிதக் கொள்கையாதலும், விவிலிய சமயக்கொள்கைகள் அனுட்டித்தற்கு எளிய பாமரக் கொள்கையாதலும், மனம்போகுமாறு போய் இச்சாபோகங்களை அனுபவிப்பதற்கு அநுகூலமாய் இருத்தலுமேயாம். அநித்யமும், துக்கமும், இழிவும், பழியுமுள்ள பொய்ப்போகங்களை அநுபவித்தற் பொருட்டு நித்தியமும் சுகமும் உயர்வும் புகழுமுள்ள வைதிகசமயங்களைக் கைவிட எண்ணுதல், அந்தோ! மேன்மக்களாகிய ஆரியர்களுக்கு எவ்வளவு மதிக்கேடு!! எவ்வளவு அவமதிப்பு!! எவ்வளவு பழி!! எவ்வளவு பாவமாம்!!”10 என்று உரைநூலில் சபாபதி நாவலர் எழுதுவதன்மூலம் தெளிவாக உணரலாம்.

இவ்வாறு தான் ஒரு சைவசித்தாந்தியாக இருந்தபோதும் அக்கால நன்மை கருதி வைதீகசமயங்கள் முதலில் ஒன்றுபடவேண்டும் என்கிற கொள்கை உடையவராக விளங்கிய நாவலர், அவற்றுள் சைவசித்தாந்தத்தை தனித்துவமாக போற்றுவதை அவரது நூல்கள் எழுத்துக்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். அதேவேளை கீழ்ச்சமயிகளும் மேற்சமயிகளும் தமக்குள் இளையசகோதரர், மூத்தசகோதரர்போல, வெறுப்புணர்ச்சியின்றி பழகவேண்டும் என்கிற கருத்தையும் அவர் சமயம் என்கிற கட்டுரையில் பதிவுசெய்கிறார்.

ஆக, இன்றைக்கு சித்தாந்தத்தைக் கற்காமலே தாம் பெரும் வீரசைவர் என்ற எண்ணப்பாங்கோடு இந்துசமயத்தின் பிறதத்துவ மரபுகளை இழித்துரைப்பதே தமது சித்தாந்தப் பெரும்பணி என்று வாழ்வோர் அக்காலத்திலேயே திருவாவடுதுறை முதலிய சைவாதீனங்களால் போற்றப்பட்டவராக வாழ்ந்த சபாபதி நாவலரின் தொலைநோக்கினையும் தெளிவான எண்ணங்களையும் ஒரு கணம் நினைத்துப்பார்க்கவேண்டியது அவசியமாகும்.

நிறைவுரை:

வடகோவை சபாபதி நாவலர் அவர்கள் பல நூல்களை எழுதியதாகவும், பத்திரிகைகளை நடாத்தியதாகவும் அறியமுடிகிறபோதும், அவற்றுள்; அதிகமானவற்றை இன்று பெரும் நூலகங்களிலும் காண்பது அரிது. ஆக, இன்று கிடைக்கக்கூடியனவாக உள்ள நூல்களை வைத்து ஆய்வுசெய்கிறபோதே சபாபதிநாவலரவர்கள் சைவசித்தாந்தத்திற்கு பன்முகப்பணிகளை ஆற்றியமையை உணர்ந்துகொள்ளமுடிகின்றது.

சபாபதிநாவலர் அவர்களின் ஞாபகமாக பல தருமசாதனங்கள் நிறைவேறின என்று நூல்கள் அறிவிக்கின்றபோதும் அவற்றில் அவற்றில் வடகோவை வீரகத்திப்பிள்ளையார் கோயிலை அணித்தாக அமைந்துள்ள சபாபதிநாவலர் திருநந்தவனம், திருக்குளம் ஆகிய இரண்டைவிட, பிற அழிந்துபோயின என்றே கருதமுடிகிறது. அதுபோலவே, திராவிடப்பிரகாசிகை தவிர்ந்த அவரது நூல்களும் கிடைத்தற்கரியனவாயிற்று. அவற்றில் நான்கு நூல்களை அண்மையில்(2016) திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்கள் பெரிதும் முயன்று தேடி ஒரேநூலாக பதிப்பித்தமை பாராட்டுதற்குரியதாகும்.

சைவசித்தாந்த ஞானமரபுக்கு தன்னலமின்றிப் பணியாற்றிய இலங்கையரான சபாபதிநாவலர் அவர்களைப் போற்றுவதும், அவர் சிதம்பரத்தில் சித்தாந்தப்பணி செய்தவாறே சிவபதமெய்திய ஆனித்திங்கள் அபரபஞ்சமி, அவிட்டத்திருநாளை அன்னாரின் குருபூசைநாளாகக் கருதிக் கொண்டாடுவதும், அவரது நூல்களைப் பதிப்பித்து அழியவிடாது பாதுகாப்பதும் இன்றைக்கு மிகவும் அவசியமானவைகளாகக் கருதலாம்.

அவ்வாறு செய்வதன்மூலம் எதிர்காலச்சந்ததியினருக்கு சபாபதிநாவலரின் உத்தமமான வாழ்வியலையும் அவரது கருத்துக்களையும் தெரிவிக்க வாய்ப்புண்டாவதுடன், அவர் வழியில் சைவசித்தாந்தப்பணியை செய்ய அழைப்பதாகவும் இருக்கும். இவ்வாறு தன்னுடல், பொருள், ஆவி எனும் மூன்றையும் சைவசித்தாந்தம் சொல்லும் சிவப்பணிக்காகவே செலவிட்ட அன்னாரின் நூல்களைப் பதிப்பிப்பதும், அன்னாரை பூசித்து குரு நிலையில் வைத்துக் கொண்டாடுவதும் கூட சிவப்பணியே என்பதும் அது இறையருளையும் குருவருளையும் தரவல்ல ஒன்று என்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும்.

அடிக்குறிப்பு:

 • 1. சபாபதி நாவலர்,(1927)- திராவிடப்பிரகாசிகை, சாது அச்சுக்கூடம், சென்னை, சபாபதிநாவலர் சரிதம், பக் ஐஐ
 1. மேலது பக் ஓஓஐஓ
 2. மேலது பக் ஓஓஓஓ
 3. சிவகுருநாதன்.அ. வடகோவை, (1955)- சபாபதி நாவலர் சரித்திரச்சுருக்கம், சபாபதி நாவலர் ஞாபக நிலையத்தின் வெளியீடு- 1,

வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை பக் 3

 1. மேலது
 2. சபாபதி நாவலர்,ஸ்ரீ (1949), சமயம், தமிழ் வளர்ச்சிக்கழகம்,

திருவாவடுதுறை யாதீனம், தமிழ்நாடு  பக் 1

 1. யோகேஸ்வரி சிவப்பிரகாசம், (2016), வடகோவை சபாபதி நாவலரின்

நான்மணிகள், ஜீவநதி, கலையகம், அல்வாய், பக் 83

 1. சபாபதி நாவலர், (1956)- ஞானாமிர்தம் (சமயமும் நால்வர் பிரபாவமும்),

சாது அச்சுக்கூடம், சென்னை பக் உஉ

 1. சபாபதி நாவலர், (1956)- ஞானாமிர்தம் (சமயமும் நால்வர் பிரபாவமும்),

சாது அச்சுக்கூடம், சென்னை பக் உங

 1. யோகேஸ்வரி சிவப்பிரகாசம், (2016), வடகோவை சபாபதி நாவலரின்

நான்மணிகள், ஜீவநதி, கலையகம், அல்வாய் பக் 15

பயன்பட்ட நூல்கள்:

 • சிவகுருநாதன்.அ. வடகோவை, (1955)- சபாபதி நாவலர் சரித்திரச்சுருக்கம்,

சபாபதி நாவலர் ஞாபக நிலையத்தின் வெளியீடு- 1, வித்தியாநுபாலன யந்திரசாலை,

சென்னை

 • சபாபதி நாவலர்,(1927)- திராவிடப்பிரகாசிகை, சாது அச்சுக்கூடம், சென்னை
 • சபாபதி நாவலர், (1939), சிவகர்ணாமிர்தம், சென்னை
 • யோகேஸ்வரி சிவப்பிரகாசம், (2016), வடகோவை சபாபதி நாவலரின் நான்மணிகள்,

ஜீவநதி, கலையகம், அல்வாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *