எல்லாம்வல்ல பரம்பொருளை அன்னையாக, தந்தையாக, காதலனாக, காதலியாக, ஆண்டானாக, நல்லாசிரியனாக, தொண்டனாக, தோழனாக, குழந்தையாக, இன்னும் பல விதங்களில் கொண்டாடுவது நமது வழக்கம். அதுவே ஆன்மீக உள்ளங்களை மகிழ்ச்சியிலாழ்த்தும்; இறையுணர்வில் நெகிழ்த்தும். அதனாலேயே நமது உள்ளத்து எண்ணங்களுக்கேற்ப அப்பரம்பொருளின் வடிவை அமைத்துக்கொள்கிறோம். பாடியாடிப் பூசித்து மகிழ்கிறோம். இதற்காகப் பாடல்களும் தோத்திரங்களும் செய்யுள்களும் எண்ணற்ற இலக்கங்களில் முன்னோர்களால் அழகுற அருமையாக இயற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. தேவாரம்-திருவாசகமாகட்டும், திவ்வியப்பிரபந்தமாகட்டும், பலவிதமான இலக்கியநயம் சொட்டும் நூல்களாகட்டும், அனைத்துமே செவிக்கும் சிந்தைக்கும் விருந்தாகி, உள்ளத்தை நிறைத்து, ஆன்மீக உணர்வை அவரவர் விரும்பும் விதத்திலும் வேண்டும் வழியிலும் பூரணத்துவம் அடையச் செய்கின்றன.
இவ்வாறு பாடப்பட்ட பாடல்களனைத்தும் இறைவன்மீது போற்றுதல்களாக மட்டுமே அமைந்ததுமில்லை. அதிலும் பக்தர்கள் பலவித நயங்களை இழைத்துப் பாடியுள்ளனர். பரம்பொருள் பற்றிய பல கருத்துக்களைப் பாடியிருப்பினும், ஈசனின் திருநடனத்தைப் பற்றிப் பாடிய பாடல்கள் கருத்திற்கு விருந்தாவனவாகும்.
‘ஆடினதெப்படியோ?’ எனும் பாடலில் முத்துத்தாண்டவர் வியக்கின்ற ஆடலரசனின் திருநடனம் நூற்றெட்டு வகைப்பட்டது எனக் கூறப்படுகிறது. கணக்கற்ற அடியார்களும், புலவர்களும் கவிஞர்களும் அம்பலக்கூத்தனின் ஆனந்தத் திருநடனத்தைப் போற்றிப்பாடியுள்ளனர்!
பெரிதும் போற்றப்பட்ட இத்திருநடனத்தைச் சில அடியவர்கள் பாடும்போது சிலேடையாகவும், இறைவனைப் பழித்து நையாண்டி செய்வதுபோல அமைத்தும் பாடியுள்ளனர். இவை ‘நிந்தாஸ்துதி‘ என வழங்கப்படும். எள்ளி நகையாடுவது போலப்பாடி, உண்மையில் போற்றுவதாக அமையும் இப்பாடல்கள் அற்புதமான சுவையும் நயமும் உட்பொருளும் நிரம்பியவை. வஞ்சப்புகழ்ச்சியணியில் இவை சேரலாம். தமிழில் இதனைத் ‘தூற்றுமறைத்துதி’ எனவும் கூறுவர்.
தமிழ் மும்மணிகளெனத் திகழ்ந்த சீர்காழித் தமிழ்மூவரில் ஒருவரான தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை அவர்கள் இவ்வாறு ‘தூற்றுமறைத்துதி’ பாடுவதில் மிக்க வல்லவராயிருந்தார் என அவருடைய பாடல்களில் இருந்து அறிந்துகொள்ள இயலுகின்றது. இறைவன்மீது கொண்ட எல்லையற்ற அன்பாலும், அப்படிப்பட்ட அன்பின் விளைவாக எழும் உரிமையாலும் சிவபிரானுடைய செயல்களையும், அவனாடும் திருநடனத்தையும் நையாண்டி செய்வது போலப் பாடிப் போற்றியவர் மாரிமுத்தா பிள்ளையவர்கள். தோடி ராகத்திலமைந்த அழகான ஒருபாடல்.
தோடி ராகம் தமிழிசையில் ‘செவ்வழியாழ்,’ என வழங்கப்படும்.
‘எந்நேரமும் ஒரு காலைத் தூக்கிக் கொண்டு
இருக்கிற வகை ஏதையா?
பொன்னாடர் போற்றும் தொல்லை நன்னாடர் ஏத்தும்தில்லைப்
பொன்னம்பல வாணரே இன்னம் தானும் ஊன்றாமல்,’ எனும் ஒரு பாடலில் ஒருகாலை எப்போதும் தூக்கிக் கொண்டிருப்பது எதனாலோ என இகழ்ச்சியாகக் கேட்பது போல, “தக்கனுடைய வீட்டு யாகத்தீயை அழித்தாய் நீ! அந்த நெருப்பில் நடந்ததால் கால் புண்ணாயிற்றோ? மார்க்கண்டேயனுக்காக எமனை உதைத்தாயே, அப்போது ‘மளுக்’கென்று சுளுக்கேறிக் கொண்டதோ? அல்லது அந்த தக்கயாகத்தில் சந்திரனைச் ‘சிக்’கெனப் பிடித்து உனது காலின் கீழேபோட்டுத் தேய்த்தபோது கால் தரையில் உராய்ந்ததினாலோ? உக்கிரமான சாமுண்டியாகிய காளியை எதிர்த்து நடனமாடியதனாலோ? அல்லது பாற்கடலைக் கடைந்தபோது பெருகிவந்த நஞ்சினை உண்டு, அது உனது உடம்பெங்கும் ஊறி வழிந்ததாலோ?” என்றெல்லாம் கேட்டு சிவபிரானுடைய பராக்கிரமங்களை இகழ்வதுபோலப் போற்றிப் பெருமைப்படுத்தி ஆனந்தமடையும் அடியார் இந்த மாரிமுத்தா பிள்ளை.
*****
இன்னொரு கவிஞர்- பெயர் பாபவிநாச முதலியார். தூக்கிய திருவடியைக் கண்டவருக்கு ஐயம் எழுகின்றதாம். “எப்போதும் இடதுகாலைத் தூக்கியவண்ணமே நம் ஐயன் நிற்கின்றானே; இடைவிடாது காலைத்தூக்கி நடனமாடியபடியே இருப்பதனால் அந்தக்கால் உதவாமல் முடமாகி விட்டதோ?” எனக்கேட்டு வருந்துகிறார்.
தமிழிசையில் தக்கேசிப்பண் எனவும் தற்காலத்தில் காம்போதி எனவும் அறியப்படும் ராகத்திலமைந்த பொருள்செறிந்த பாடல்!
நடமாடித் திரிந்த உமக்கிடது கால் உதவாமல்
முடமானதேனென்று சொல்லுவீரைய்யா-
திடமேவும் தில்லைநகர் மருவு பேரண்டத்தில்
சடை விரித்தாடியவா தேவர் சிற்சபையறிய (நடமாடி)
அட! இப்போது தான் புரிகிறது; அவனுடைய கால் ஒன்றும் முடமாகவில்லை; இது கவிஞரின் இடக்குமடக்கானதொரு நையாண்டி என்று புரிகிறது.
‘திருநீறைச் சுமந்தீரோ நெருப்பான மேனிதன்னில்
சீதளத்தினால் மிகுந்த ஒரு வாதகுணமோ?’
‘நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என பஞ்சபூதங்களாகி நிற்பவன் நீயே,’ என ஒருவரியில் இறைவனின் பெருமையைக் கூறிவிட்டு அடுத்தவரியில், “உன்னுடைய நெருப்பான மேனி தன்னில் திருநீற்றை அள்ளிப்பூசிக் கொண்டிருப்பதனால் அது மிகுந்த சீதளத்தை (குளிர்ச்சியை) உண்டாக்கி வாதகுணத்தை அதிகமாக்கி விட்டதோ? அதனால்தான் கால் இப்படியாகிவிட்டதோ?
‘ஒருமையுடன் மார்க்கண்டற்கு உதவியாய் மறலிவிழ
உதைக்கச் சுளுக்கேறிக் கொண்ட குணமோ?’
“ஒருவேளை, எமன் பாசக்கயிற்றை வீசியபோதில் ‘உன்னடியே சரணம்’ என அதனை இறுகப்பற்றிக்கொண்ட மார்க்கண்டேயனுக்கு உதவுவதற்காக எமனை உதைக்கக் காலைத் தூக்கினாயல்லவா?அப்போது சுளுக்கிக்கொண்டு விட்டதோ?
‘பரவையவள் தெருவாசல் படியிடறிற்றோ எந்தன்
பாபமோ என்சிவனே மூவர்க்கும் முதல்வரென்று (நடமாடி)’
“மெய்யன்பன் சுந்தரருக்காகப் பரவையிடம் தூது சென்றாயே, அப்போது விரைந்து அவளுடைய வீட்டு வாசற்படி ஏறும்போது படி தடுக்கிவிட்டதோ?” எனச் சிறிது இளக்காரமும் சிறிது கரிசனமும்(!) கலந்து கேட்கிறார்.
‘பக்தி செய்யும் பெரியோர்கள் பாபநாசமாகும்
பரமபதம் இதுவென்று தூக்கி நின்றதுவோ
சக்தி சிவகாமவல்லி தன்பாதம் நோகுமென்று
தரையிலடி வைக்கத் தயங்கி நின்றதுவோ
சத்யலோகாதிபதி தாளத்திற்கேற்ப நடம்
தாங்கியே ஒருகாலைத் தூக்கி நின்றதுவோ (நடமாடி)’
‘பாவங்களைப் போக்கும் பாதம் இது; என்னையனே! உன் இடப்பாகம் சிவகாமவல்லியாகிய உமையம்மையினுடையது; ஆகவே அவளுடைய பஞ்சினும் மெல்லிய பாதம் நோகுமே எனத் தரையில் படாது தூக்கியவாறே வைத்துக் கொண்டுள்ளாயா? பிரமனின் தாளத்திற்கியைய ஒரு கால்தூக்கி ஆடுகின்றனையோ?’ எனவெல்லாம் கேட்டு நெகிழ்ச்சியடைகிறார்.
இந்நாட்களில் அதிகமாக யாரும் இப்பாடலைப் பாடுவதில்லை. பாடிக்கேட்டால் புல்லரித்துக் கண்களில் நீர் பூக்கவைக்கும் பாடல் இதுவாகும்.
*****
இவ்வாறு சிலேடையாகப் பாடுவதில் அக்காலப் புலவர்களான குமரகுருபரர், காளமேகப்புலவர் ஆகியோர் சிறந்து விளங்கினர்.
குமரகுருபரர் இயற்றிய ‘சிதம்பர மும்மணிக்கோவை’ எனும் ஒரு பிரபந்தம் மூன்று மணிகளால் ஆகிய மாலையைப்போல் ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக்கலித்துறை என்னும் மூவகைச் செய்யுட்களும் இதில் மாறிமாறி விரவி மும்மணிகளாக அழகுற அமையும். இதில் கட்டளைக்கலித்துறையிலமைந்த ஒரு பாடலில் சிதம்பரத்து ஆடலரசன் ஒருகாலில் நின்று நடனமாடுவதன் காரணத்தை நகைச்சுவை தோன்ற விளக்குகிறார் குமரகுருபரனார்.
புரம்ஒன்று இரண்டும் புகையழல் உண்ணப் புவனம் உண்ணும்
சரம்ஒன்று அகிலம் சலிக்கஎய் தோய்சலி யாநடம்செய்
வரம்ஒன்று இரண்டு மலர்த்தாளும் ஊன்றில்தன் மாமகுடம்
பரம்ஒன்றும் என்றுகொல் லோகொண்டவாஅப் பதஞ்சலியே.
ஒன்றும் இரண்டும் ஆகிய (மூன்று புரங்களை) முப்புரங்களைப் புகையுடன் கூடிய தீயில் எரிந்து போகுமாறு அழித்தவன் சிவபிரான்! அந்தத் திரிபுர சம்கார காலத்தில் உலகை உண்ட திருமாலைத் தனது வில்லுக்கு அம்பாக்கிக் கொண்டவனும் அவனே! அவன் எப்போதும் சலியாது நின்று நடனம் ஆடுகிறான்! ஏனெனில் ஐந்தொழில்கள் ஆகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவை அவனுடைய இந்நடனத்தின் மூலமே நிகழ்கின்றன.
இந்த நடனத்தை எப்போதும் கண்டு களிப்பவர் பதஞ்சலி முனிவர். சிவபிரானிடம் பதஞ்சலி முனிவர் ஒரு வேண்டுகோளை வைக்கிறாராம்! பதஞ்சலி முனிவரே ஆதிசேடனின் அம்சமாகப் புவியினைத் தாங்குபவர். நடராசப் பெருமான் தனது இருகால்களையும் புவிமீது ஊன்றி நடனமாடினால் முனிவருக்கு அந்த பாரத்தினைத் தாங்கவியலாமல் துன்பம் உண்டாகும். ஆதலால் ஒருகாலை மட்டும் ஊன்றியாடும்படி இறைவனிடம் வேண்டிக் கொள்கிறார். பாரம் கொஞ்சமாவது குறையுமே என்பது முனிவரின் எண்ணம். அவ்வேண்டுகோளுக்கிணங்க இறைவனும் ஒருகாலை மட்டும் ஊன்றியபடி அனவரதமும் நடனமிடுகிறாராம். ‘இவ்வாறு பதஞ்சலி முனிவர் வேண்டிக்கொண்டதற்கு மேலானது ஒன்றும் உண்டோ? இக்காரணத்திற்காக ஆடலரசே, நீயும் அவருக்கு அருள ஒருகாலில் நடனம் ஆடுகின்றனையோ?’ என வியக்கிறார் குமரகுருபரனார்.
தக்கனார் வேள்வி தகர்த்துச் சமர்முடித்த
நக்கனார் தில்லை நடராசர்- ஒக்கல்
படப்பாய லாங்காணப் பைந்தொடிதாள் என்றோ
இடப்பாதம் தூக்கியவா இன்று.
தாட்சாயணியின் தகப்பனான தட்சன் ஒரு வேள்விசெய்தான்; அனைத்துக் கடவுள்களையும் அழைத்த அவன், சிவபிரானை மட்டும் அலட்சியப்படுத்தி அழைக்காமல் இருந்தான். இருப்பினும் தாட்சாயணி தனது தந்தை செய்த வேள்விக்குச் செல்கிறாள்; அவனால் அவமதிக்கவும் படுகிறாள். தாட்சாயணி வெகுண்டு தனது சினத்தீயில் தன்னையே எரித்துச் சாம்பலாக்கிக் கொள்கிறாள். இதனால் மிகுந்த கோபம் கொண்ட திகம்பரரான (நக்கன்) சிவபிரான், தட்சனுடைய வேள்வியினைச் சிதைத்து அது முற்றுப்பெறுமாறு செய்கிறார்; அவருடைய மைத்துனனான திருமால் பாம்புப் படுக்கையில் படுத்துக் கிடப்பவன்; ஏன் தெரியுமா? அவன் ஒருகாலத்தில் பன்றி உருவெடுத்துப் பூமியை அகழ்ந்துசென்று தேடியும் சிவபிரானின் திருவடியைக் காணாது களைத்தவன். இப்போது அவன் காணும்படி ஈசனார் தனது இடது திருவடியைத் தூக்கியவண்ணம் நிற்கிறார். தேடித்தேடி திருவடியைக் காணாமல் தவித்த திருமாலுக்கு ஈசன் இப்போது வலதுபாதத்தைக் காட்டாமல் குஞ்சிதபாதமாகிய இடது திருவடியைக் காட்டியதற்கு என்ன காரணம்? அந்த இடதுகால் தமது இடப்பாகத்தைக் கொண்டவளான உமையம்மைக்கு உரியது; ஆகவே அதனை அவளுடைய அண்ணனான திருமால் கண்டால் தவறில்லை எனும் காரணத்தாலோ? என்கிறார் புலவர். அதி அற்புதமான நையாண்டிக் கற்பனை!
*****
ஆசுகவி எனப்பட்ட காளமேகப்புலவர் ஈசனின் திருநடனம் பற்றிப் பாடுகிறார்.
கொங்குலவும் தென்தில்லைக் கோவிந்தக் கோனிருக்கக்
கங்குல்பக லண்டர்பலர் காத்திருக்கச்- செங்கையிலே
ஓடெடுத்த அம்பலவ ஓங்குதில்லை உட்புகுந்தே
ஆடெடுத்த தெந்த உபாயம்.
“சிவந்த கையில் திருவோட்டை எடுத்த அம்பலவாணனே! நறுமணம் கமழும் தில்லைக் கோவிந்தக்கோனார் அருகிலேயே இருக்கிறார். இரவும் பகலும் வானவர்கள் பலரும் கூடிக் காவல்காத்திருக்கின்றார்கள். அப்படி இருந்தும் புகழ்வாய்ந்த தில்லைக் கோயிலினுள்ளே நீ புகுந்து ஆட்டினை (ஆடு) எடுத்ததுதான் என்ன காரணத்தினாலோ?”
‘ஆடு எடுத்தது,’ என்பதனை, ஆட்டைத் திருடியதாகவும், ஆடலைத் துவங்கியதாகவும் என இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். “கோவிந்தக்கோனார், மற்றவர்கள் என இத்தனைபேர் காவல்காத்திருக்க, பிழைக்க வழியின்றிப் பிச்சைக்கு ஓடேந்திய நீ எப்படித்தான் அவர்களறியாமல் அம்பலத்துள்ளும் புகுந்து ஆட்டை எடுத்தாயோ! (ஆடுதிருடும் கள்ளனாக ஆனாய்?)” என அதிசயிப்பதுபோல் கேட்கிறார் புலவர்.
திருவாரூர் சென்று தியாகேசப்பெருமானின் ‘அஜபா நடனம்’ எனும் திருநடன அழகைக் காண்கிறார் காளமேகப்புலவர். காணக்காண புலவர் காளமேகத்தின் உள்ளத்தில் அன்பு பொங்குகிறது. ஈசனின் நடனத்தை வியந்து பாடுகிறார்.
ஆடாரோ பின்னையவ ரன்பரெல்லாம் பார்த்திருக்க
நீடாரூர் வீதியிலே நின்றுதான்- தோடாரும்
மெய்க்கே பரிமளங்கள் வீசும் தியாகேசர்
கைக்கே பணமிருந்தக் கால்.
கம்பிக் காதழகர், கிண்கிணிக் காலழகரான தியாகராஜப் பெருமானின் அருமையான திருநடனத்தைக் காணக்கண் கோடி வேண்டுமே! காதிலே அணிந்துள்ள அருமையான தோடுகளும், உடலில் கமழும் வாசனைத்திரவியங்களின் நறுமணமும் உடையவர் இந்தத் தியாகேசப்பெருமான். அவர் கையினில் பணம் [பாம்பு] இருந்ததென்றால் ) அடியவர்கள் அனைவரும் கண்டு களிக்கும்வண்ணம் திருவாரூர் வீதியிலே நின்று ஆடமாட்டாரா என்ன?
‘கையிலே பணமிருப்பவர் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவர்,’ எனும் உலகியல் வழக்கினைக் கருத்தில் கொண்டு நையாண்டியாக இவ்வாறு பாடலைப் புனைந்துள்ளார்!!
கருவிலே திருவாக ஈசனருள் பெற்றவரால் மட்டுமே இவ்வாறு அருமையான கவிதைகளைப் படைக்கவியலும்! கவிதையைப் படித்துப் பொருளுணர்ந்து புன்னகையில் முகம் மலரும்போது அவ்வீசன்மீதான அன்பில் உள்ளத்தாமரையும் மலருவதை உணரலாம்.
****
மூன்று பெண்கள் மூன்று அம்மானைக்காய்களைக் கொண்டு விளையாடும்போது, அதன் வேகத்திற்குப் பொருத்தமாகப் பாடல்களையும் அழகுறப் புனைந்து பாடுகிறார்கள். யார் சாமர்த்தியமாகக் கேள்வி கேட்பது, யார் சமயோசிதமாக விடை கூறுவது, யார் விடையில் இரு பொருள் பொதிந்து கூறுவது என்பதில் இவர்களுக்குள் போட்டி!! ஒருத்தி தனது காயை வீசி, இருபொருள் படும்படியான ஒரு கூற்றை முன்வைக்க, இரண்டாமவள் தானும் காயை மேல்வீசி, அதற்கு இருபொருள்படும் ஒரு வினாவை மறுமொழியாகத் தருவாள். மூன்றாமவள் இவற்றுக்கான சரியான விடையைக் கூறி ஆட்டத்தை முடிப்பாள். இத்தகைய அம்மானைப்பாடல்கள் கலம்பகம் எனும் பலவிதமான செய்யுள் அமைப்புகளைக் கொண்ட பிரபந்தங்களில் இடம்பெறும். பலப்பல அழகான அம்மானைப் பாடல்களுள் ஒன்றினைக் காணலாம்.
முதல்பெண்ணுக்கு மதுரைச் சொக்கர் தங்களுடையவர் என மகாபெருமை. “எல்லா உலகையும் புரக்கும் எங்கள் சொக்கலிங்கர் எப்போதுமே பொற்சபையில்தான் ஆடுவார் (நடிப்பார்) தெரியுமா?” எனக் காயை வீசும் வேகத்திற்கிணையாகப் பெருமையாகக் கூறுகிறாள்.
எந்தவுலகும் பரவும் எங்கள் சொக்கலிங்கேசர்
சந்ததமும் பொன்மன்றில் தானடிப்பார் அம்மானை
அடுத்தவள் காயை வீசியவண்ணம் ஏளனமாக, “எப்போதும் பொற்சபையில்தான் ஆடுபவர் என்கிறாயே, அப்போது ஏன் அவர் வெள்ளிச்சபையில் ஆடினாராம்?” எனக் கேட்கிறாள்.
சந்ததமும் பொன்மன்றில் தானடிப்பார் ஆமாயின்
அந்த வெள்ளி மன்றதனில் ஆடினதேன் அம்மானை
அதாவது சொக்கர் ஆடியது மதுரை வெள்ளியம்பலத்தில் தானே? அங்கே ஏது பொன்னம்பலம்? எனும் குத்தல்தொனி ஒலிக்கவில்லையா?
மூன்றாமவள் இருவரையும் சமாதானப்படுத்தும் விதமாக, “அட! உங்களுக்கு இதுகூடத் தெரியவில்லையா? வெள்ளி, பொன் இரண்டிற்குமிடையே வெள்ளியின் மாற்றே (தரம்) உயர்வானதென அறிந்ததனால்தான் வெள்ளியம்பலத்தில் அவ்வாறு ஆடினார்; (பாண்டியனின் வேண்டுகோளுக்கிணங்க, ஈசன் காலை மாற்றி, வலதுகாலைத் தூக்கி ஆடினார்; கால்+ மாற்றி+ உயர்வாக ஆடினார்),” என்கிறாள்.
ஆடினார் கான் மாற்றதிகம் என்றே அம்மானை.
இதுபோன்று சிவபிரானின் நடனத்தைப்பற்றி சிலேடையாகவும் தூற்றுமறைத் துதியாகவும் பல பாடல்கள் உள்ளன. பல சிற்றிலக்கியங்களில் ஒரு அங்கமாக இந்த அம்மானைப்பாடல் போலும் பலவிதமான பாடல்களையும் காணலாம். இவற்றின் சுவையே தனி. படிக்கும்போது பரவசப்படுத்தும் பாடல்கள்; இவற்றைப் புனைந்த கவிஞர்கள் பரமனிடம் கொண்ட ஆழ்ந்த அன்பின் விளைவினால் மிகுந்த உரிமையும்கொண்டு பாடிவைத்தவை இவையாகும். தமிழ் இன்னிசை நிகழ்ச்சிகளில் இவற்றைக் கேட்டு இரசிப்பதும் உணர்வுபூர்வமான சுகானந்தமான ஒரு அனுபவமாகும்.
(தொடரும்)
vallga vallamudan. your e-journals in useful for tamil liter.. students continu