பாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்

வாஜ்பாயுடன் மோடி.

முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலமாகிவிட்டார். அரசியலில் மாபெரும் சகாப்தம் ஒன்று நிறைவு பெற்றுவிட்டது. தேசிய அரசியலில் ஹிந்துத்துவ சக்திகளை அரியணை ஏற்றியவர் அமரர் ஆகிவிட்டார். அவரது கடமை நிறைவடைந்து விண்ணேகிவிட்டார். அவர் என்றும் நமது இதயங்களில் வீற்றிருந்து வழித்துணையாக இருப்பார். வாழ்க அவரது புகழ்!

வாஜ்பாயின் நினைவில் ஹிந்து இயக்கத் தோழர்கள் பலரும் நெக்குருகுவது இயல்பே. ஆனால், ஹிந்து இயக்கத்துக்கு மாறானவர்கள் கூட, இன்று அவரது மறைவால் வேதனை அடைந்திருப்பதைக் காணும்போது, எதிரியே இல்லா ஸ்வயம்சேவகன் என்ற  சிறப்பை அடைந்த அவரை எண்ணி மனம் பெருமிதம் கொள்கிறது. அதேசமயம், அவர் பிரதமராக ஆட்சியில் இருந்த ஆறு ஆண்டுகளில் அந்தக் கட்சிகள் நடத்திய நாடகங்களை நினைக்கும்போது, வேதனை மிகுகிறது.

*****

தேசிய ஜனநாயகக் கூட்டணியை குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் உருவாக்க்கி, கூட்டணி தர்மம் என்றால் என்ன என்பதை அனைவருக்கும் புரிய வைத்தவர் வாஜ்பாய். நீண்டநாள் சகாவான அத்வானியுடன் கைகோர்த்து இதனை அவர் சாதித்தார். அதன்மூலம், கூட்டணி ஆட்சி இந்தியாவில் சாத்தியமில்லை என்பதை அவர் பொடிப்பொடியாக்கினார்.

கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளுக்கு சமத்துவமான மரியாதை அளித்ததிலும், அவர்களின் நிபந்தனைகளை லாவகமாகக் கையாண்டதிலும் வாஜ்பாயின் பண்பட்ட அரசியல் வெளிப்பட்டது. அவருக்கு உறுதுணையாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூட்டணியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். 1998-இல் 13 கட்சிகளுடன் அவர் அமைத்த அந்தக் கூட்டணி மேலும் வலுவடைந்ததே தவிர, சிதறவில்லை.

பழைய நினைவுகள்- இரு படங்களில்…

அதிமுக தலைவி ஜெயலலிதாவுடன் வாஜ்பாய் (1998)

 

மருமகன் முரசொலி மாறனுடன் வாஜ்பாயைச் சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி. உடன் அத்வானி (1999).

முதல்முறையாக 13 நாட்களே (1996 மே16- ஜூன் 1) அவர் பிரதமராக நீடித்தபோதும், அடுத்து அமைத்த ஆட்சியின்போது (1998 மார்ச் 19- 1999) 13 மாதங்களில் கூட்டணி ஆட்சியை ஸ்திரப்படுத்தினார். ஆனால், அதிமுகவின் ஜெயலலிதா தனது அவசரத்தால் அந்த அரசைக் கவிழ்த்தார். தமிழகத்தில் அப்போதிருந்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை வாஜ்பாய் ஏற்காததால்தான் அப்போது அரசு கவிழ்க்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.

ஆயினும் கார்கில் போர் வெற்றியால் மக்களிடம் பெற்ற அபரிமிதமான செல்வாக்கால் அவர் மீண்டும் பிரதமர் ஆனார் (1999- 2004). அதிமுகவுக்குப் பதிலாக திமுக கூட்டணித் தோழன் ஆனது.

திமுக சார்பில் அமைச்சரான முரசொலி மாறன் நோய்வாய்ப்பட்டபோது, அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வாஜ்பாய் அரசு செய்தது. அவர் கோமா நிலையில் பல மாதங்கள் இருந்தபோதும், மாறன் காலமாகும் வரை அவரை அமைச்சரவையில் இருந்து வாஜ்பாய் நீக்கவில்லை. ஆனால், அவர் இறந்த சில நாட்களில் வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திமுக வாபஸ் பெற்றது.

அதேபோல, ஆட்சியில் அங்கம் வகித்தபடியே திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி அளித்த இடையூறுகளை வாஜ்பாய் பெருந்தன்மையாகப் பொறுத்துக் கொண்டார். நம்பிக்கையான கூட்டாளியாக இருந்த பல கட்சிகள் கடைசி நேரத்தில் காங்கிரஸ் கூட்டணிக்குத் தாவின. அதனால்தான் 2004 தேர்தலில் வாஜ்பாயால் மீண்டும் வெல்ல முடியவில்லை. திமுகவும் சில கட்சிகளும் கூட்டணி மாறாமல் இருந்திருந்தால், 2004 தேர்தல் முடிவுகளே வேறு மாதிரியாக இருந்திருக்கும்; அவரே பிரதமராகத் தொடர்ந்திருப்பார். அந்தத் தேர்தலில் உண்மையாக காங்கிரஸ் வெல்லவில்லை; பாஜக நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்டது.

இன்று வாஜ்பாயின் பெருந்தன்மை, அரசியல் நாகரிகம், ராஜதந்திரம், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு ஆகியவற்றை மனம் திறந்து பாராட்டும் எதிர்க்கட்சித் தலைவர்கள், 2004-இல் சற்றே சிந்தித்துச் செயல்பட்டிருந்தால், ஊழல் மயமான மன்மோகன் சிங் ஆட்சி நாட்டில் பத்தாண்டுகள் (2004- 2014)  நடைபெற வாய்ப்பில்லாது போயிருக்கும்.

அரசியலில் வெற்றி- தோல்விகள் இயல்பானதே. ஆனால், நம்பிக்கை மோசடியால் வீழ்த்தப்படுவது தோல்வியல்ல. அத்தகைய தோல்வியை வாஜ்பாய்க்கு அளித்ததில், இன்று கண்ணீர் அஞ்சலி செலுத்தும் திமுக, மதிமுக, பாமக கட்சிகளுக்கு பெரும் பங்குண்டு.

1999-இல் அதிமுகவாலும், 2004-இல் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளாலும் வஞ்சிக்கப்பட்டவர் வாஜ்பாய். அதனை மறக்க முடியவில்லை. அதனால்தானோ, இன்று நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அதீத வலிமையுடன் கூட்டணிக் கட்சிகளைச் சாராமல் செயல்படும் வகையில் மக்கள் வாக்களித்திருக்கின்றனர்!

இன்று பாஜகவுடன் நெருக்கம் காட்ட அனைத்துக் கட்சிகளும் திரைமறைவு பேரம் நடத்துகின்றன. மத்திய அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளால் கதிகலங்கியுள்ள பல கட்சிகள் பாஜகவுடன் தோழமை பூண்டு தப்பிக்க விழைகின்றன. இந்த நேரத்தில்தான் பாஜக சாதுரியமாகவும், தெளிவாகவும் முடிவெடுக்க வேண்டும்.

வாஜ்பாயின் அஸ்திக்கு அஞ்சலி- இரு காட்சிகள்:

வாஜ்பாய் அஸ்திக்கு கமலாலயத்தில் அஞ்சலி செலுத்திய முத்ல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் (23.08.18).

 

சென்னையில் பாஜக தலைமையகமான கமலாலயத்தில், வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்திய மு,க.ஸ்டாலின்.

தனது முதுகில் குத்திய கட்சிகளை பாஜக மன்னிப்பதை அக்கட்சியின் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். தவிர, ஊழலுக்கு எதிரான கட்சி என்பதே பாஜகவின் முதன்மையான முழக்கமாக உள்ள நிலையில், சுயநலக் கண்ணோட்டத்துடன் தன்னைத் தழுவ வரும் கட்சிகளை பாஜக புறக்கணிக்க வேண்டும்.

அடல் பிகாரி வாஜ்பாய் என்ற இமயம் தேசிய அரசியலிலிருந்து விலகக் காரணமான நாசகார சக்திகளுடன் எந்த இணக்கமும் பாஜக வைத்துக் கொள்ளக் கூடாது என்பதே, சரித்திர நினைவு உள்ளவர்களின் கருத்து.

இன்று ஜெயலலிதா- கருணாநிதி என்ற இரு பெரும் அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் இல்லை. அதனால் அதிமுக, திமுக கட்சிகள் செயலிழந்திருக்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழகத்தில் பாஜவை வலுவடையச் செய்வதே பாஜகவின் நோக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில் சுய வலிமையே ஆட்சியைத் தொடர அவசியம் என்பதை, வாஜ்பாயின் அனுபவம் உணர்த்தி இருக்கிறது. அவரது மறைவு பாஜகவுக்கு நினைவுபடுத்துவதும் அதுவே.

10 Replies to “பாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்”

 1. பாஜக கடந்த கால அனுபவத்தில் ஏதாவது படிப்பினை பெற்றிருந்தால் , கொள்கை அடிப்படை என்பது கூட்டணிகளில் இல்லை என்ற உண்மையை உணர்ந்து ஓரளவாவது ஒத்துப்போகக்கூடிய கட்சிகளுடன் கூட்டணி காண்பது தமிழகத்தில் மிக நன்று. திமுக, திக , கம்யூனிஸ்டுகள், குடும்ப கட்சியாகிய சோனியா குழுமம், நாம் தமிழர் போன்றவற்றுடன் பாரதீய ஜனதா கூட்டணி அமைக்க முடியாது. பிரிவினை, வெறுப்பு அரசியல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுள்ள கட்சிகளுடன் பாஜக சேர்வது முடியாது. பாஜக திமுகவுடன் உறவு கொண்டு போட்டியிட்ட பல தேர்தல்களில் , தமிழகத்தில் உள்ள பாஜக ஆதரவாளர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களித்து, பாஜகவின் கூட்டணிக்கு எதிராகவே செயல்பட்டனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக என்பது குடும்ப கட்சி மட்டும் அல்ல. ஊழல் மட்டும் அல்ல. இலங்கை தமிழர் படுகொலை, காவிரி நதி நீர் விஷயத்தில் மாநில நலன்களை பாதித்த தவறான முடிவுகள், வந்த தீர்ப்பை கூட அரசிதழில் வெளியிடாமல் ஏழு வருடங்கள் தாமதம் செய்தது , கடுமையான மின்வெட்டு, தமிழகம் முழுவதும் நிலப்பறி இயக்கம் , சில்லறை வாணிகத்தில் அந்நிய முதலீடு கூடாது என்று அரசியல் மேடைகளில் பேசிக்கொண்டே , பார்லிமெண்டில் வாக்களிப்பு செய்யும் சமயத்தில் சில்லறையை தேத்திக்கொண்டு , சில்லறை வாணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக பச்சோந்தி அரசியல் செய்தது என்று , திமுக ஐம்பது ஆண்டுகளாகவே துரோக அரசியல் மட்டுமே செய்துவந்துள்ளது. இது மக்களுக்கு புரிந்து விட்டது. இப்போது மீண்டும் திமுகவுடன் கூட்டணி என்று சில மீடியா கைக்கூலிகள் கற்பனை கதைகளை தங்கள் கனவுகளாக வெளிப்படுத்தி வருகின்றனர். இந்து மத வெறுப்பு, இந்தி வெறுப்பு என்ற வெறுப்பு அரசியலை திமுக கைவிட்டுவிட்டால், அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவேண்டும். ஈவேரா கடவுள் இல்லை என்றார். கடவுளை நம்புபவன் முட்டாள் என்றார். கடவுள் நம்பிக்கையை பரப்புபவன் அயோக்கியன் என்றார். ஆனால் அண்ணாவோ ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார். தனித்தமிழ் நாடு கோரிக்கையை பக்குவமாக சமாதிக்கு அனுப்பினார்.

  அண்ணாவுக்கு பிறகு திமுகவை கட்டுமரம் தவறான பாதைக்கு அழைத்து சென்று , நெற்றியில் குங்குமம் வைத்திருந்த தன் கட்சி எம் பி ஆதிசங்கரை பார்த்து உன் நெற்றியில் என்ன ரத்தமா என்று கேட்டது , ராமன் எந்தக் காலேஜில் என்ஜினீயரிங் படித்தான், பகவத் கீதை ஒரு கொலைநூல் என்றது, இந்து என்றால் திருடன் என்றது, இந்திய அமைதிப்படையை வரவேற்க செல்லாமல் அவமதித்தது , என்று சொல்லிக்கொண்டே போகலாம். திமுகவுடன் தமிழகத்தில் கூட்டணி அமைத்தால் , பாஜக தமிழகத்தில் முற்றிலும் காலியாகிவிடும். சென்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக விஜயகாந்த் வைகோ பாமக கூட்டணி 19 % வாக்குகளை பெற்றது. அதாவது சுமார் 75 லட்சம் வாக்குகள். அதே போல ஒரு உதிரி கட்சிகளின் கூட்டணியை அமைத்தால் , சென்ற முறை பெற்ற இரண்டு இடங்களுக்கு பதிலாக ஐந்து இடங்களை கைப்பற்ற முடியும். அதை விட்டுவிட்டு திமுகவுடன் கை கோர்த்தால், திமுகவும் , பாஜகவும் சேர்ந்து மூழ்குவது உறுதி. திமுகவுக்கு கட்டுமரம் உயிருடன் இருந்த போதே, ஆர் கே நகரில் டெபாசிட் காலியாகி மூன்றாவது இடம்தான் கிடைத்தது. அந்த உண்மையை மறந்து, தமிழகத்தில் திமுக ஏஜெண்டுகள் மீடியாவில் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளில் ஏராளம் புகுந்துவிட்டதால், திமுக மீண்டும் வந்துவிடும் என்று தொடர்ந்து பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொய்ப் பிரச்சாரங்களில் தமிழக வாக்காளர்கள் ஏமாற மாட்டார்கள். மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார். சென்றமுறை பாஜக பெற்ற 282 இந்த முறை 320 ஐ தாண்டிவிடும். திமுகவுடன் கூட்டணி கண்டால், பாஜகவின் இமேஜ் அதல பாதாளத்திற்கு போய்விடும் என்பதுடன் , அகில இந்திய அளவிலும் பாதிப்பு வரும். எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

 2. எடப்பாடி பழனிச்சாமி -அதிமுக வுடன் கூட்டணி வைத்தால் – சாதக பாதகங்களைப் பதிவு செய்யுங்களேன் .விவாதம் தொடரட்டும்.

 3. இன்று நமது அரசியலே விசித்திரமாக இருக்கிறது. நாடு முழுவதிலும் அக்கறைகொண்ட, நாட்டு நலனையே முக்கியமாகக்கொண்ட கட்சி என்று பார்த்தால் பாரதிய ஜனதாவைத்தவிர வேறு கட்சியே இல்லை. ஆனால் இதை ஒன்றுபோல் நாடுமுழுவதும் செயல் படுத்துவது சாத்தியமல்ல!
  பிற எல்லா கட்சிகளும் குடும்பம், ஜாதி-சமூகம், மொழி ,இனப்பற்று அல்லது வெறுப்பு, வட்டார பிரச்சினைகள், அண்டை மாநிலத்துடனான பிரச்சினை, ஆகிய அடிப்படையிலேயே செயல்படுகின்றன. இதில் எந்த பிற கட்சியுடன் கூட்டமைத்தாலும் அது பா.ஜ.கவுக்கு சரிவாகத்தான் இருக்கும். நச்சுப் பாம்பை தழுவும் சமாசாரம்தான்.
  தமிழ்நாட்டில் இருக்கும் உண்மையான தேசீயவாதி எவனும் பா.ஜ.க எந்தத் திராவிடக் கட்சியுடனும் கூட்டு வைப்பதை விரும்பமாட்டான். முன்பு காலைவாரிவிட்ட கட்சிகளுடன் மீண்டும் கைகோர்த்தால் பா.ஜ மீது காறித் துப்புவார்கள். தமிழ் நாட்டில் சென்ற 50 வருடங்களில் தேசீயத்திற்கு எதிரான எண்ணமே வலுவடைந்திருக்கிறது. இதற்கு எல்லா கட்சிகளும் உடந்தை.யாருடன் கூட்டுவைத்தாலும் அது தேசத் துரோகமே.
  பிற கட்சித் தலைவர்களுக்கு உரிய மதிப்பைத் தரவேண்டும்தான். அதற்காக என்னவேண்டுமானாலும் செய்யலாமா? மோடியும் சில திராவிடக் கட்சித் தலவர்களுக்குக் காட்டிய அதீத மரியாதை அவசியமற்றது. சமீபத்திய கர்னாடக தேர்தலின் போது வலியச்சென்று மோடி தேவகௌடாவை அளவுக்கு மீறிப் புகழ்ந்தார். இது கடைசி நிமிஷத்தில் அப்பா–மகன் கட்சிப்பக்கம் ஓட்டைத் திருப்பியது.
  ஆந்திராவுக்கு சிறப்புச் சலுகை தரமுடியாது என்றதால், கர்னாடகாவில் தெலுங்கு பேசும் வாக்காளர்கள் அதிகம் இருந்த பகுதிகளில் பா.ஜ, கோட்டை விட்டது. இப்படி நமது அரசியலில் எத்தனையோ குழப்பங்கள்.
  நாட்டு நலனில் அக்கறை இருந்தாலும் அதை எப்படிச் செயல் படுத்துவது என்பது மோடி அரசுக்குத் தெரியவில்லை. ஊழல் ஒழிப்பு, கள்ளப் பணம் ஒழிப்பு போன்றவை எதிர்மறையானவை. இவற்றைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் இடம்பெறுகின்றன. ஆனால் இவற்றின் விளைவு என்ன, இதனால் சராசரி மனிதனுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கிறது என்பதை யாரும் விளக்கவில்லை! இன்றும் லஞ்சம் பரவித்தான் இருக்கிறது. நம் மக்கள் லஞ்சம் ஒழிவதை உண்மையாகவே ஆதரிக்கிறார்களா? தெரியவில்லை.
  மோடி அரசு மேற்கொண்ட பல திட்டங்கள் சரியாக விளக்கப்படவில்லை; ஹிந்தி மாநிலங்களில் எப்படியோ, ஹிந்தி பேசாத நமக்கு விளங்கவில்லை! இவர்கள் பேசும் ஹிந்தி யானைக்குப் புரியுமோ, என்னவோ!
  DEvelopment, Make in India போன்றவை கோஷங்கள், கொள்கைகள் அல்ல! இவற்றின் விளக்கம் நமக்குத் தெரியவில்லை!
  உதிரிக் கட்சிகள் ஒன்றுசேர்ந்து கூட்டணி அமைத்தால் எந்த தேசீயக் கட்சியும் தாக்குப் பிடிக்காது. ஓட்டு சிதறுவதாலேயே இன்று கட்சிகள் வெற்றிபெறுகின்றன. சில இடமே பெற்றாலும் பெரிய கட்சிகளின் கையை முறுக்க இயலும் என்பதையும் கட்சிகள் கண்டுகொண்டன,
  பா.ஜவும் சில விஷயங்களில் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை. இது நீண்டகால ஆதரவாளர்களிடையேயும் ஒரு சலிப்பையும் கசப்பையும் தோற்றுவித்திருக்கிறது. காங்கிரஸ் சென்ற பாதையில் தான் பா.ஜனதாவும் போகிறது!
  இந்தியாவில் தேசீயக் கட்சி தாக்குப்பிடிக்காது! நம்மிடையே பலவிஷயங்களில் வேற்றுமை அவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது.

 4. சீமாந்திரா மாநிலத்துக்கு தனி அந்தஸ்து அளித்தால் அதன் விளைவாக சீமாந்திரா மாநிலத்தின் அண்டை மாநிலங்களான தெலுங்கானா, ஒரிஸ்ஸா, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு கடும்பாதிப்பு ஏற்படும் சூழலே உள்ளது. அப்புறம் செம்மொழி போல தமிழுக்கு செம்மொழி பட்டம் என்று ஆரம்பித்து அதன் பின்னர் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா என்று ஒரு நீண்ட பட்டியலே செம்மொழி பட்டம் பெற்றுவிட்டது. அதன் விளைவாக செம்மொழி என்ற சொல்லின் சிறப்பு ஒன்றுமே இல்லை என்று ஆகிவிட்டது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களுமே பல்வேறு காரணங்களுக்காக சிறப்பு அந்தஸ்து கேட்பதற்கு தயாராகவே என்றும் இருக்கின்றன.சிறப்பு நிதி உதவி ( SPECIAL PACKAGE )வேண்டுமானால் கேட்கலாம் , அளிக்கவும் அளிக்கலாம் .ஆனால் சிறப்பு அந்தஸ்து கொடுப்பது மேலும் மேலும் குழப்பம் மற்றும் பிற மாநிலங்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கும்.

 5. பாராளுமன்ற தோ்தலுக்கு கூட்டணி வைத்துக் கொள்வதில் தவறு இல்லை.எடப்பாடி பழனிச்சாமியோடு கூட்டு வைத்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரளவிற்கு சமாளித்துக்கொள்ளலாம்.

 6. பாஜக, ரஜினி, அதிமுக, டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோருடன் கூட்டணி காணலாம். ஆனால் ரஜினி யாருடனும் கூட்டணி வைத்துக்கொள்வாரா என்று தெரியவில்லை. ஏனெனில் அறிமுக அறிவிப்பு விழாவில், யாருடன் கூட்டணி காணாமல் 234 தொகுதியிலும் தனித்துப்போட்டி என்றே அவர் சொல்லியுள்ளார். பார்லிமென்ட் தேர்தல் பற்றி ரஜினி சொல்லவில்லை. ரஜினி அரசியலுக்கு குட்பை சொல்லி, தேர்தலில் போட்டியிடாமல் விலகிவிட்டால், மீண்டும் ஒரு அதிமுக ஆட்சிதான் அமையும். தமிழக பாஜக கட்சி வேர் பிடித்து வளரும் வரை , அதிமுக ஆட்சி தான் இங்கு இருக்கும். திருப்பம் வந்தால் அது ரஜினியின் மூலம் தான் வர முடியும்.

 7. Alliances are never based on principles. So, it will not be a surprise if BJP has an alliance with DMK in the forthcoming parliamentary polls. After all, they had an alliance with DMK when Vajpayee was PM. Did Vajpayee & BJP not know then, that the DMK is anti hindu?

  However, the fact of the matter is, whomsoever the BJP chooses to have an alliance with, it can never gain a foothold in the state. TN is a lost cause for BJP.

 8. சஞ்சய் அவர்களின் கருத்து சற்று பிழையானது.பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் வளா்ச்சி முகம்தான். ஆனாலும் கிராம அளவில் கட்சி பணி செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த தேர்தல் இல்லாவிட்டாலும் 2014 தோ்தலில் சிறந்த எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினா் மற்றும் சட்ட மன்ற உறுப்பினா் களைப் நிச்சயம் பெறமுடியும். திமுக வடன் கூட்டணி வைப்பது சிறப்பானது அல்ல.ஆனாலும்அதிமுக வும் ஊழிலில் குறைந்ததா ? தோ்வு செய்வது கடினம்.
  இரண்டு கட்சியோடும் கூட்டணியை தவிா்த்தால் பாராளுமன்ற தோ்தலில் உறுப்பினா்கள் தேறுமா ? தேறாது. சங்கடமான தோ்வுதான். கழுதையோடு சோ்ந்த கன்றும் மலம் தின்னும் என்ற பழமொழியை மாற்றிப்போட்டால் கன்றோடு சோ்ந்த கழுதையும் மலம் தின்னாது என்றும் பொருள்படுமே.பாரதிய ஜனதாவோடு சோ்ந்து திமுக அதிமுக கட்சி தன்னை திருத்திக்கொள்ளுமா ?

 9. anburaj,

  I dunno what you mean by growth of BJP in TN. There has no increase in vote share or seats. Also, BJP keeps repeatedly saying “kazhagangal illaa tamizhagam”. So, if they have an alliance now, it will be a weakness.

  The BJP is unpopular due to NEET, methane & other issues.

  They also do not have a charismatic/effective state level leader.

 10. NEET தோ்வு அனைதது மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வெகுகாலம் ஆகிவிட்டது. அந்த சவாலான தோ்விற்கு அந்த மாணவர்கள் தயாராகி விட்டாா்கள். ஆழ அகல பொருள் விளங்கி ,படித்தபாடத்தில் எவ்வளவு நுணுக்கமான கேள்விகளைக் கேட்டாலும் பதில் அளிக்கும் தகுதியைப் பெற்றுவிட்டாா்கள்.அல்லது அப்படி கற்பதுதான் கல்வி என்பதை அறிந்து கொண்டாா்கள்.ஆனால் தமிழக மாணவர்கள் அப்படி கற்கவில்லை. பாடப்புத்கத்தில் இருப்பதை ஈஅடித்தான் காப்பியாக படித்து,அதற்கு ஏற்ற முறையில் வினாக்கள் அமைக்கப்பட்டிருக்கும்ஒரு தோ்வை எழுதி சிந்திக்க மறந்த ஒரு சமுதாயமாக தமிழக மாணவர்கள் மாறிவிட்டாா்கள். இதனால்தான் Indian Institute of science, Indian Institute of technology,NIT,IIM, Central University Indian institute of statistics ,…etc போன்ற உயா் கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவா்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டுபவா்களாக தமிழக மாணவர்களை சீரழித்த பெருமை திமுக -கலைஞா் கருணாநிதிக்குதான்.சமசசீா் கல்விகொண்டுவந்து கல்வியைப் பாழாக்கியவா்கள் அவரே.
  தற்போது கல்வி என்பது தேசிய அளவில்சர்வதேச அளவில் என்ன என்பதை தமிழக மாணவா்கள் அறிந்து கொள்ளும் ஆா்வம் வந்துள்ளது. சிந்திக்கவும்கல்வி என்ற தகுதி வேண்டும் என்பதை மாணவர்கள் உணா்ந்து கொண்டார்கள். ஆசிரியா்கள் படுபாவிகள். சம்பளம் வாங்கியபின் படிப்பதை மட்டும் விட்டு விட்டாா்கள்.ஆகவேதான் முதுகலைப்பட்டம் பெற்றவா்கள் மேல்நிலை 11 வகுப்பில் புதிய பாடத்திட்டப்படி கணிதம் இயற்பியல் வேதியில் பாடங்களை NEET/JEE தோ்வில் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் நடத்த இயலாது தவிக்கின்றார்கள்.இந்த நிலைமாறிவிடும்.பாருங்கள்.நல்லகாலம் பிறந்து விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *