<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>
ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய
கிறிஸ்துமதச்சேதனம்
தமிழில்: சிவஸ்ரீ. விபூதிபூஷண்
பகுதி 1
பதிஇயல்
மெய்யன்பர்களே!
பல்வேறு அலுவல்கள் காரணமாக எமது மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்வதில் தடை ஏற்பட்டது. அதற்காக வருந்துகின்றேன். இறையருளும் குருவருளும் நண்பர்களுடைய ஆர்வமும், ஆசிரியர் குழுவினரின் ஊக்கமும் இந்த நூலின் முதல் பிரகரணமாகிய பதியியலின் நிறைவுப்பகுதியினை மொழிபெயர்ப்பதற்கு துணை செய்திருக்கின்றன. அனைவருக்கும் எமது நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகட்டும்!
இந்தப்பகுதியில் பதியியலின் கடைசி இரு அத்தியாயங்கள் இடம்பெறுகின்றன. பரிசுத்த ஆவியின் கதை ஒன்பதாவது அத்தியாயமாகவும் திரித்துவம் பத்தாவது அத்தியாயமாக அமைந்திருக்கின்றன. ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் தமது ஆழ்ந்த தர்க்கத்திறனால் கிறிஸ்தவம் சிரமேற்கொள்ளும் பிதா(யஹோவா), சுதன்(இயேசு), தூய ஆவி ஆகிய மும்மணிக் கோட்பாட்டை நிராகரிப்பதோடு அவற்றின் தெய்வத்தன்மையையும் மறுக்கின்றார்.
கிறிஸ்துமதச்சேதனம் என்ற இந்த அற்புதமான விவாத நூலிலே இன்னும் பசுவியல்(பசுப்பிரகரணம்), பாசவியல்(பாசப்பிரகரணம்), பயனியல்(கதிப்பிரகரணம்) மற்றும் கிறிஸ்து மத சாரம் என்று மூன்று பகுதிகள் உள்ளன. இறையருள் மற்றும் குருவருளின் துணையோடு அவற்றையும் மொழிபெயர்க்க முயல்கின்றேன். கிறிஸ்துமதச்சேதனம் பாரதிய சிந்தனை மரபிலும் சரி பாரதப்பண்பாட்டின் மீதான அன்னியத்தாக்குதல்களை எதிர்கொள்ளுவதிலும் சரி மிக முக்கியமான நூல். கிறைஸ்தவ தேவயியலின் தாக்கத்திலிருந்து தமிழ் கூறு நல்லுலகம் மீள்வதற்கு இந்த நூலின் மொழிபெயர்ப்பை நாம் பயன்படுத்தவேண்டும். இதைவாசிக்கும் அன்பர்கள் இதன் ஒவ்வொரு பகுதியையும் சமூக ஊடகத்திலே பகிர்ந்து நமது பண்பாட்டினையும் தர்மத்தையும் காக்கும் பணியிலே உதவிடவேண்டுகின்றேன்.
– சிவஸ்ரீ
பரிசுத்த ஆவியின் கதையும் திரித்துவமும்
பரிசுத்த ஆவியின் கதை
எல்லாம் வல்ல தேவனுக்கு ஆவியின் துணை எதற்கு?
ஓ கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!
பரிசுத்த ஆவியானது ஜெஹோவாவிற்கு படைத்தல் தொழிலுக்கு உதவி செய்கின்றது என்று நீங்கள் சொல்லுகின்றீர்கள். ஜெஹோவா என்னும் உங்கள் தேவன் சர்வவல்லமை உடையவராக இருக்கின்றபோது அவருக்கு மற்றவர்களின் துணை அவசியமா? ஜெஹோவா எல்லாம் வல்லவர்தான், பரிசுத்த ஆவியானது அவருடைய செயல்பாடுகளுக்கு உதவிசெய்வதாக, ஒப்புதல்தருவதாக மட்டுமே இருக்கின்றது என்று நீங்கள் வாதிடலாம். ஆனால் அதற்கு உங்கள் விவிலியத்தில் ஆதாரம் ஏதும் இல்லையே!. பரிசுத்த ஆவியின் ஒப்புதலைப்பெற்றுத்தான் ஜெஹோவா செயல்படவேண்டும் என்பது ஆதாரப்பூர்வமானது என்றால் அவரது சர்வவல்லமை பங்கமாகுமே!
பரிசுத்த ஆவியானது பைபிளைத் தானே அருளாமல் தனது விசுவாசிகளைக்கொண்டு எழுதவைத்தது ஏன்? இயேசுவைப் பெற்றப் பரிசுத்த ஆவி அவரை இயல்பாகவே தூய்மையானவராக ஞானம் நிறைந்தவராகப் படைக்காதது ஏன்? இயேசு குற்றமற்றவராக படைக்கப்பட்டிருந்தால் பின்னாளில் ஒரு புறாவைப்போல அவர் மீது பரிசுத்த ஆவி இறங்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே! (யோவான், 1:32). இயேசுவின் மீது அப்போது இறங்கிய பரிசுத்த ஆவி, அவர் சிலுவையிலே அறையப்பட்டு, துன்புற்று கதறியபோது அவரைக் காப்பாற்றாதது ஏன்? கன்னி மேரியின் மூலம் இயேசுவைப்பெற்ற அந்தப்பரிசுத்த ஆவி, மரணத்தருவாயில் அவர் என் பிதாவே! என் பிதாவே! என்று அழுது கதறி அழைத்தபோது அவரைக் காப்பாற்ற ஏன் வரவில்லை?
ஓ கிறிஸ்தவப் பிரச்சாரகர்களே!
ஆதிமனிதரான ஆதாமையும் ஏவாளையும் சாத்தான் பாம்பின் வடிவிலே ஏமாற்றி தேவனாகிய ஜெஹோவாவால் தடை செய்யப்பட்ட கனியை உண்ணச்செய்தான். அதனால் பாம்புகள் எல்லாவற்றையும் ஜெஹோவா சபித்தார் என்று கூறுகின்றீர்களே! ஆனால் புறாவின் வடிவிலே இயேசுவின் மீது இறங்கிய அதே பரிசுத்த ஆவி எந்தப்புறாவும் மனிதர்களால் கொல்லப்படக்கூடாது! உண்ணப்படக்கூடாது என்று ஏன் ஆணையிடவில்லை? பாவம் செய்யத்தூண்டிய பாம்பின் இனத்துக்கு தண்டனை அளித்த தேவன், பரிசுத்தமானப் புறாவுக்கு ஏன் வரம் தரவில்லை?
ஜெஹோவாவுக்கு படைப்பில் துணைசெய்யும் உதவிபுரிந்தது பரிசுத்த ஆவி! கன்னிமேரியின் மூலம் இயேசுவைப்பெற்றதும் அதே தூய ஆவிதான்! இயேசுவின் மீது புறாவைப்போல இறங்கியதும் அதே ஆவிதான்! அந்த பரிசுத்த ஆவிக்கும் கடவுள்தன்மை ஏதும் இல்லை என்பது இங்கே தெளிவாகின்றது.
திரித்துவம் பைபிளில் உள்ளதா?
திரித்துவம் என்றப் பதம் பைபிளில் எங்கேயும் காணப்படவில்லை. ஜெஹோவாவை பரமபிதா, தேவன் என்று சொன்ன பைபிள் இயேசுவை அவ்வாறு குறிப்பிடவில்லை.
பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்ற பதங்கள் மூன்று இடங்களில் பைபிளில் குறிப்பிடப்படுகின்றன. அவை
“பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்”(1 யோவான் 5:7).
“ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து”( மத்தேயு 28:19),
“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்” (2 கொரிந்தியர் 13:14).
அந்த மூன்று வசனங்களில் முதலாவது தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உள்ள பைபிளில் காணப்படுகின்றது. ஆனால் கிரேக்க மொழியில் உள்ள மூல பைபிளில் அதைக் காணமுடியவில்லை. ஆகவே இதனை இடைச்செருகல் என்று கருதி நடுநிலையான நேர்மையான ஐரோப்பியக் கிறிஸ்தவவியல் அறிஞர்கள் பலர் இதனை நீக்கிவிட்டார்கள். ஆகவே இதைப்பற்றி மேலும் விவாதிக்கவேண்டிய அவசியம் இல்லை.
இரண்டாவது வசனத்தில் பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒன்று என்றோ அல்லது முன்றும் கடவுள் என்றோ, மூன்றும் சமம் என்றோ அல்லது மூன்றும் வணக்கத்திற்குரியவை என்றோ சொல்லப்பட்டிருக்கின்றதா? என்று கேட்டால் இல்லவே இல்லை! என்பது பதிலாக அமையும். இம்மூன்றும் கடவுள் என்றோ அல்லது தம்முள் சமமமானவை என்றோ வணக்கத்திற்கு உரியன என்றோ சொல்லப்படாததால் இவை மூன்றையும் கடவுள் தன்மைகளைக் கொண்ட திரித்துவமாக எப்படி உங்களால் கருதமுடியும்?
மூன்றாவது வசனம் கூட பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒன்றே என்றோ, மூன்றும் சமம் என்றோ அல்லது மூன்றும் வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் உரியன என்றோ சொல்லவில்லை. மேலும் இந்த வசனம் தேவன், இயேசு, பரிசுத்த ஆவி என்ற மூன்றையும் குறிப்பிடுகின்றதே அன்றி பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று சொல்லவில்லை. ஆகவே இந்தவசனம் திரித்துவக்கோட்பாட்டை நிராகரிப்பதாகவே அமைந்திருக்கின்றது. இம்மூன்றில் ஒன்று தேவன் மற்றவை தேவன் அல்ல என்பதாக இந்தவசனம் பொருள் படுகின்றது. கிறிஸ்து தேவன் அல்லர் ஆகவே அவரை திரித்துவத்துள் சேர்ப்பது சரியாகாது. ரெவரெண்ட் ஹென்றி லைர் என்ற பாதிரியார் எழுதிய திரித்துவத்தைப்பற்றியக் கட்டுரையை வாசிப்பது நல்லது(லைர் 1827).
திரித்துவம் புனைவுரையா? கட்டுக்கதையா?
கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!
கிறிஸ்தவத்தின் திரித்துவக் கோட்பாடு ஆதாரமற்றப் புனைவு, கட்டுக்கதை என்பதை பைபிளில் இருந்து மேற்கோள்களைக்காட்டி உங்கள் தேவன் ஒருவரே! மும்மைத்தன்மை என்ற திரித்துவம் அவருக்கு எப்போதும் இருந்ததில்லை இங்கே நிரூபிப்போம்!
ஜெஹோவா என்ற உங்கள் தேவன் தான் ஒருவனே! ஒருவன் மட்டுமே என்பதை சொல்லுவதைக் கூறும் பைபிள் வசனங்களைப் பாருங்கள்.
“என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்”(யாத்திராகமம் 20:3).
“நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்(உபாகமம்32:39).
“நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை(ஏசாயா45:5).
“அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான். அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். . மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்(யாத்திராகமம் :3:13-15).
கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!
நீங்கள் தேவகுமாரன் என்றும் கர்த்தர் என்றும் அழைக்கின்ற இயேசுவே மேற்கண்ட ஜெஹோவாவின் வசனங்களை உறுதி செய்திருப்பதையும் ஜெஹோவா என்ற தனது தேவனுக்கு மும்மைத்தன்மை இல்லை என்பதையும் கவனியுங்கள்.
“ மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார்(மத்தேயு 22:1-32).
ஒருவர் இயேசுவை நல்லவர் என்று சொன்னபோது அவர் அதை மறுதலித்து சொன்னது “7. அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்”( மத்தேயு 19:17)..
“அதற்கு வேதபாரகன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை”(மாற்கு 12:32).
நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்(யோவான் 14:28).
“இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்(அப்போஸ்தலர் 2:22).
இயேசுவும் ஜெஹோவாவும் வேறு வேறானவர்களே!
கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!
இயேசுவும் அவர் தனது பிதா என்று அழைத்த ஜெஹோவாவும் ஒன்றே என்று நீங்கள் சொல்கின்றீர்களே! ஆனால் கீழ்கண்ட பைபிள் வசனங்கள் இயேசுவுக்கும் ஜெஹோவாவாகிய உங்கள் தேவனுக்கும் பெருத்தவேறுபாடுகள் இருப்பதைச் சொல்கின்றனவே! அவருக்கும் ஜெஹோவாவுக்கும் இருக்கின்ற வித்தியாசங்கள் மனிதருக்கும் இயேசுவுக்கும் உள்ள வேறுபாட்டினைவிடவும் அதிகமாகத்தெரிகின்றனவே!
- ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்(1 கொரிந்தியர் 11:3).
இதுபோன்ற பைபிள் வசனங்களைப்பற்றி விவாதித்தால் நூல் மிகப்பெரியதாய் விரியும் என்பதால் அதன் அத்தியாயங்களையும் வசனங்களின் எண்களை மட்டுமே கீழே தருகின்றேன்
யாத்திராகமம் 3:14,15 & 20:3;
உபாகமம் 4:39, 6:4, 32:39 & 5:7;
2 சாமுவேல் 7:22;
இராஜாக்கள் 19:19;
நெகேமியா 9:6;
சங்கீதம் 83:18, 36:10;
ஏசாயா 37:16, 37:27, 40:25, 41:4, 42:8, 44:68, 45:5-6, 45:21-22, 43:10-15;
ஓசியா 13:4;
யோவேல் 2:27;
மத்தேயு 19:17, 7:21, 12:32-34, 20:23, 26:39, 5-42;
யோவான் 17:3, 4:34, 5:38, 6:37, 20:17, 14:28;
1 தீமோத்தேயு 1:17, 24:5, 6:15-16;
யாக்கோபு 2:19;
வெளிப்படுத்தினவிஷேசம் 15:34;
கோலோசியர் 1:3.
மேற்கண்ட பைபிள் வசனங்களைப் பார்க்கும்போது திரித்துவக்கோட்பாடு என்பது பைபிளில் இல்லை என்பது தெளிவாகின்றது. ஆகவே பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒன்று என்ற உங்களது திரித்துவக்கோட்பாட்டை நீங்கள் இனிமேலாவது பயன்படுத்தாதிருப்பதே சாலச்சிறந்தது.
திரித்துவம்: தனித்தனியான மூன்றும் ஒன்றாயினவா?
கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!
ஒரு வாதத்திற்காக பைபிளில் திரித்துவக் கோட்பாடு(மும்மை) இருப்பதாக ஒத்துக்கொண்டாலும் கூட அது தர்க்கத்துக்கு பொருந்துகின்றதா என்று ஆராயவேண்டும்.
திரித்துவம் என்பதன் பொருள் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்ற மூன்றும் ஒன்றே என்பதாகும். இங்கே மூன்றும் ஒன்றாக ஆகிவிட்டபின்னர் அவைத்தனித்தனியாக இருக்குமா? அல்லது ஒன்றாகமட்டுமே நிலைபெற்று இருக்குமா? என்றக் கேள்வி எழுகின்றது.
மூன்றும் ஒன்றானப் பின்னரும் அவைத் தனித்தனியேயும் இருக்கின்றன என்றால் அது தர்க்க அறிவுக்கு முரணாகிவிடும். உதாரணமாக மூன்று மாதுளம்பழங்கள் ஒன்றாயினப் பின்னர் மூன்றாகவும் நீடித்திருக்க வாய்ப்பு உண்டா? என்றால் அதற்கு சாத்தியமே கிடையாது! ஆகவே மூன்றும் ஒன்றே! என்று நீங்கள் சொல்வது அறிவுக்கு ஒவ்வாது! மூன்றும் ஒன்றாகிவிட்டால் மூன்றின் தனித்தனி இருப்பும் சாத்தியமற்றதாகிவிடும்!
இம்மூன்றும் ஒன்றானவை என்றால் அவற்றில் எது காரணம்? எது விளைவாகிய காரியம்? என்பதை நாம் ஆராயவேண்டியிருக்கும். காரணத்தைத் தொடர்ந்தே எப்போதும் காரியம் என்ற விளைவு நிகழும் என்பதே தர்க்க நியாயமாகும். ஆகவே இங்கே மூன்றாக இருந்தனவற்றை காரணமாகவே கருதவேண்டும். ஆரம்பத்தில் இல்லாதிருந்த விளைவு பின்னால் தோன்றியதாகக் கருதப்படல் வேண்டும். முதலில் இல்லாதிருந்த ஒன்று காரணமாக இருக்கமுடியாது. காரியமாக விளைந்தபின்னால் காரணமான ஒன்று அதேயாக முன்னிருந்ததுபோல் நிலைத்திருத்தல் சாத்தியமற்றது. எந்த ஒரு காரணமும் காரியத்தினை விளைவிக்கின்றபோது மறைந்து போகும் என்பதே தர்க்க நியாயமாகும்.
இந்தக் காரண-காரிய நியாயத்தின் அடிப்படையில் பார்க்கும்போது பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் அழிந்தே ஒன்றாதல் சாத்தியம். மூன்றும் ஒன்றாக மாறின என்னில் மூன்றும் மறைந்து போயிருக்கவேண்டும். ஆகவே ஒன்றான இம்மூன்றும், ஒன்றானப்பின்னர் எப்போதும் நிலை பெற்றிருக்குமா? என்றக்கேள்வி இங்கே எழுகின்றது! இதற்கு நிச்சயமாக இல்லை என்பதே பதிலாக அமைகின்றது. விளைவும் கூட எப்போதும் நீடித்திருக வாய்ப்பில்லை. அந்த ஒன்றும் ஒரு சிலக்காலம் கழித்து மறைந்து இன்னொன்றாக மாறும் ஆகவே காரணமாகிய பிதா,சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் மறைந்தது போலவே அவற்றின் விளைவான பிதா என்ற ஒற்றையும் நிச்சயமாகக் காணாமல் போகும் என்பதே உண்மை.
பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒன்றாயின என்பதில் இன்னொரு பெரும் தர்க்கப்பிழை, நியாயப்பிழை இருக்கின்றது. இம்மூன்றும் ஒன்றாக வேண்டும் என்றால் ஒரு சில மாற்றங்களை அடைந்தே அவை ஒன்றாதல் சாத்தியமாகும். மாறாமல் இம்மூன்றும் ஒன்றாவதற்கு வாய்ப்பில்லை.
ஒன்றானது தனித்தனியான மூன்றானதா?
கிறிஸ்தவப் பிரச்சாரகர்களே!
ஜெஹோவா என்ற ஒன்று மூன்றானது ஆகவே அது ஒன்றாகவே இருக்கின்றது என்று என்று கூட நீங்கள் கூறலாம்! மூன்றானப் பின்னரும் அந்த ஒன்று ஒன்றாகவே இருக்கின்றது என்றும் நீங்கள் வாதாடலாம். ஆனால் அது தர்க்கப்பூர்வமானது அல்ல! ஒரு மாதுளம்பழம் ஒன்றாக இருந்துகொண்டே மூன்றுமாதல் சாத்தியமே இல்லாத ஒன்று அல்லவா? ஆகவே ஒன்று மூன்றானது என்ற உங்கள் கூற்றும் நிராகரிக்கத்தக்கதே! காரணக்காரிய நியாயத்தின் படியும் ஒன்று(தேவன்) காரணம், மூன்று (பிதா,சுதன், பரிசுத்தஆவி) விளைவு என்றால், ஒரு தேவன் அழிந்து மூன்றாக மாறுகின்றான் என்றேப் பொருள்படும். ஏற்கனவே நாம் கூறியபடி காரணம் அழிந்து தோன்றிய விளைவாகியக் காரியமும் காலப்போக்கில் அழிந்து போய்விடும். அந்தவகையில் உங்கள் திரித்துவமும் அழியக்கூடியதாகிவிடும்.
எல்லா மனிதர்களும் சிலத்தன்மைகளில் சமமாக ஒரேமாதிரியாக இருப்பதால் மனிதர் ஒன்று என்று சொல்லுவது போல பிதா சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் தனித்தனியானவை என்றாலும் அம்மூன்றும் சமமான ஆற்றல் உடையவை ஆகவே அவை ஒன்று என்றும் நீங்கள் வாதாடலாம். ஆனால் ஒரேமாதிரி சிலகுணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் பலர் இருக்கின்றார்கள் என்றாலும் இதரப் பலத்தன்மைகளில் அவர்கள் மாறுபடுவதால் அவர்களை ஒன்று என்று சொல்லமுடியாது.
பிதா,சுதன், ஆவி ஆகிய மூன்றும் எல்லாக்குணங்களிலும் ஒரேமாதிரி இருப்பதால் அம்மூன்றும் ஒன்றே என்று நீங்கள் வாதாடலாம். உங்களது அந்த வாதத்தையும் ஏற்கமுடியாது. ஏனென்றால் ஒரே மாதிரியாக எல்லாக் குணாதிசயங்களிலும் ஒத்ததாக இருக்கும் மூன்று வெள்ளி நாணயங்களையும் மூன்று என்றுதான் சொல்லமுடியுமே அன்றி ஒன்று என்று சொல்லமுடியாது? அதுமட்டுமல்ல, பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய முன்றும் அவற்றின் தன்மைகள், செயல்பாடுகள் போன்றவற்றில் ஒத்தத்தன்மை உடையவை என்று உங்களால் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தலும் சாத்தியமில்லை.
பிதாவாகிய ஜெஹோவா உலகைப்படைத்தார், ஆதிமனிதனையும் அவனது சந்ததிகளையும் பாவிகளாக சபித்தார், சப்பாத் என்ற விடுமுறை நாளன்று வேலை செய்யும் மனிதன் கல்லால் அடித்துக் கொல்லப்படவேண்டும் என்று அவரே ஆணையிட்டார், தனது மூத்தோர்களைக் கொல்ல மறுத்தவனை ரகசியமாகக் கொல்லமுயன்றார், எகிப்தியர்களது சொத்துக்களை கொள்ளையடித்து செல்ல மோசேவுக்கு ஆணையிட்டார், மேசேயின் வழியாக யூதர்களுக்கு பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார், படைப்புக்கு முன்னரே அவர் இருந்தார், பலிகளைப் பெறும்போது இயேசுவுக்கு இடப்புறத்திலே அமர்ந்திருந்தார், மேலும் இத்தகைய காரியங்கள் அனேகமானவற்றை செய்தார் என்று உங்கள் பைபிள் சொல்லுகின்றது.
இயேசுவோ தனது தேவதூஷணம், மற்றும் ராஜத்துரோகச் செயலுக்காக தண்டிக்கப்பட சிலுவையில் அரையப்பட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் பிதா எனப்படும் ஜெஹோவாவின் வலப்புறத்தில் அமர்ந்தார்.
பரிசுத்த ஆவி கன்னி மரியாள் மேல் வந்து இயேசுவைப் பெறுவதற்கு காரணமாயிற்று. அது இயேசுவின் மீது ஒரு புறாவைப்போல வானத்திலிருந்து இறங்கியது.
மேற்கண்டத்தகவல்களில் இருந்து ஜெஹோவா, இயேசு, பரிசுத்த ஆவி ஆகிய மூன்றின் குணாதிசயங்களும் செயல்களும் வேறுவேறாக இருப்பது தெளிவாகத்தெரிகின்றது.
மூன்றுப் பொருள்கள் ஒன்றாவதும், ஒரு பொருள் மூன்றாவதும் அளவிற்குற்பட்ட எல்லைக்குட்பட்ட சடப்பொருள்களுக்கே அவசியமாகும். எல்லையற்ற, எங்கும் நிறைந்த பரவஸ்த்துவுக்கு, உள்பொருளுக்கு அது அனாவசியமாகும்.
ஒரு மூடியப்பாத்திரத்தில் நீர் நிறைந்திருக்கின்றது என்று கொள்வோம். அது இரண்டாகவோ அல்லது மூன்று பகுதிகளாகப்பிரிந்து மறுபடியும் ஒன்றாக மாறுதல் சாத்தியமா? அது இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ பிரிவதற்கு இடம் தேவைப்படுகின்றது. ஆகவே அதனால் பிரிவதும் மறுபடியும் சேர்வதும் சாத்தியமல்ல. எங்கும் நிறைந்த பூரணமான எல்லையற்ற பரவஸ்து(உள்பொருள்) தனித்தனிப் பொருட்களாகப் பிரிவதற்கு சாத்தியமோ அவசியமோ இல்லை. மாறுதலுக்குட்பட்ட செயலற்ற சடப்பொருளே பகுக்கப்படுவதற்கும் பிரிக்கப்படுவதற்கும் சேர்க்கப்பட்டு ஒன்றாவதற்கும் சாத்தியம் உள்ளது. ஒரு எல்லையற்ற சர்வவியாபகமான பரம்பொருள் தானே பலவாகப் பிரிவதற்கும் அவை சேர்ந்து ஒன்றாவதற்கும் வாய்ப்பே கிடையாது.
ஆகவே, பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்ற மூன்றும் ஒன்று என்பதும் அந்த ஒன்றே மூன்றும் என்பது தர்க்க நியாயத்திற்கு முரணானது.
திரித்துவத்தில் பூரணத்துவ தோஷம்: தயிரான பாலோ
ஓ கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!
உங்களது திரித்துவக்கோட்பாட்டை வேறொரு நோக்கிலே ஆராயலாம்! முதலில் இரண்டுப்பொருட்கள் ஒன்றானப்பின்னரும் ஒன்றாகவே நிலைத்திருத்தல் சாத்தியமா என்பதை ஆய்ந்து அறியவேண்டும். அது சாத்தியமானால் மூன்றுப்பொருட்கள் ஒன்றானப்பின்னரும் மூன்றாயிருத்தலும் சாத்தியம் என்று சொல்லிடலாம்.
பால் தயிராவதுபோலவே பிதா சுதனானார் என்று நீங்கள் வாதாடலாம். ஆனால் அது பரிணாமவாத நியாத்துக்கு முரணாகிவிடும். பால் தயிராகும்போது தயிர் மட்டுமே இருக்கின்றது. பாலும் தயிரும் ஒருங்கே இருப்பதில்லை. பால் மறைந்தே தயிராகின்றது. அதுபோலவே பிதா மறைந்து சுதனாகிய இயேசுவாக மாறியிருக்கலாம். அப்படியில்லாமல் பிதா பரலோகத்திலும் இயேசு மண்ணுலகிலும் ஒரேசமயத்தில் இருந்ததாகத்தான் பைபிள் சொல்கின்றது. இரு இடங்களில் காரணமும் காரியமும் ஒரேசமயத்தில் இருப்பது சாத்தியமானது அல்ல. பாலும் அதிலிருந்து உருவான தயிரும் இருவேறு இடங்களில் இருப்பது சாத்தியமில்லையே! ஆகவே இருவேறு இடங்களில் இருந்த இயேசு மற்றும் ஜெஹோவாவும் பாலும் தயிரும்போல ஒன்று என்று சொல்வது தர்க்க அறிவுக்கு நியாயத்துக்கும் பொருந்தாது.
இன்னொரு குறைபாடும் இந்த பாலும் தயிரும் உவமானத்திற்கு உண்டு. பால் அழிந்து தயிர் தோன்றுவதற்குக் காரணாமாக அமைகின்றது. அந்தத்தயிரும் அப்படியே நிலைபெற்று இருப்பதில்லை. அதுவும் அழிந்து வேறொன்று தோன்றுவதும் நடக்கிறது. அந்தவேறொன்று மறைந்து மற்றொன்றாக மாறுவது நடக்கின்றது. இந்தத்தொடர் நிகழ்வு முடிவிலியாய் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது. அதேபோல பிதா, மறைந்து சுதனானால், சுதன் மறைந்து வேறொருவராகலாம். அவர் மறைந்து வேறொருவரும் தோன்றலாம். இந்தநிகழ்வும் முடிவிலாதுத் தொடரும். அப்போது பிதாவும், சுதனும் கூட இருக்கமாட்டார்கள். அவர்கள் எந்த வடிவில் அப்போது இருப்பார்கள் என்பதையும் நாம் கணிப்பது சாத்தியமில்லை.ஆகவே பிதாவே சுதனாகிய இயேசுவாக பால் தயிராவதுப்போல மாறினார் என்ற உங்களது வாதம் ஒரு காலத்தில் பிதாவும் இல்லை சுதனும் இல்லை என்ற நிலை ஏற்படும் என்ற முடிவுக்குக் கொண்டு சென்றுவிடும்.
இன்னொருவகையிலும் நீங்கள் வாதாடலாம். பிதாவின் ஒருபகுதி சுதனாகிய இயேசுவானது, மற்றபகுதி பிதாவாகவே நிலைத்திருந்தது என்று நீங்கள் சொல்லலாம். பாலின் ஒருபகுதி தயிராக்கப்படுவதும் மறுபகுதி அப்படியே வைத்திருத்தலும் சாத்தியமாவதுபோல் இதுவும் சாத்தியமே என்றிடலாம். பிதாவின் ஒருபகுதி மாறுவதானால் அவர் மாறாத சத்தியம் என்ற உங்கள் கொள்கை பங்கமாகிவிடும். மேலும் பிதாவின் ஒருபகுதி சுதனாக மாறுமானால், அந்த மாறுதலுக்குக் காரணமான இயக்க விதிகளின் படி காலவெள்ளத்தில் மற்றப்பகுதியும் அப்படி மாறுவதற்கு சாத்தியம் உண்டு. தயிரானப்பால் மீண்டும் பாலாக மாறுவதில்லை. ஆகவே சுதனாக மாறியப் பிதாவும் மறுபடியும் பிதாவாவதும் சாத்தியமில்லை. ஒன்று இன்னொன்றாக மாறும் தொடர் நிகழ்வில் பிதா இன்னமும் இருக்கின்றார் என்பதேக்கூடப் பொய்யாகிவிடும்.
திரித்துவம்: மண்ணும் பானையும்போலா?
கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!
திரித்துவத்தை வேறொருக் கோணத்திலும் ஆராயலாம். பிதாவாகிய ஜெஹோவா சுதனாகிய இயேசுவாக மாறியபோது மண் பானையாகும்போது அழியாததுபோல மாறாது இருக்கின்றார் என்று கூட நீங்கள் வாதாடலாம். பானையில் மண் இருப்பதுபோல இயேசுவில் ஜெஹோவாவும் இருக்கின்றார். பானை மண்ணாகவும் இருப்பதுபோல பிதா சுதனாகவும் இருக்கின்றார் என்ற வாதத்தையும் ஏற்கவியலாது. ஏனென்றால் பானையும் மண்ணும் ஒரே இடத்தில்தான் இருக்கவேண்டும். அவை இருவேறு இடங்களில் தனித்தனியாக் இருத்தல் சாத்தியமில்லை. பிதா பரலோகத்திலும் பிள்ளையான இயேசு மண்ணுலகிலும் இருப்பதாக பைபிள் சொல்வதால் மண் பானையாகின்ற உதாரணம் ஜெஹோவா இயேசுவும் ஒன்று என்பதற்குப் பொருந்தாது.
மண் தனது வடிவத்தில் மாற்றம் பெற்றேப் பானையாகின்றது. அப்படியே பிதாவும் மாற்றம் பெற்று சுதனாகிய இயேசுவாக மாறினார் என்று நீங்கள் சொல்ல வேண்டியிருக்கும். மண்ணானது பல மாற்றங்களை ஏற்றே பானையாக மாறுவதுபோலவே இயேசுவும் மாற்றமடைந்த ஜெஹோவாவின் பெயர் என்று கொள்ளலாமா? சாத்தியமில்லை.
பிதாவாகிய யஹோவாவும் சுதனாகிய இயேசுவும் வேறுவேறானவர் அல்லர் என்பதில் அனேகக்குற்றங்கள் உள்ளன. இயேசு முள் கிரீடத்தை அணிந்ததாக பைபிள் கூறுகின்றது! பிதாவும் அதை அணிந்ததாக சொல்லமுடியுமா? சிலுவையில் அரையப்பட்டு இயேசு மரணித்தார்! அப்படியே பிதாவும் மரித்தாரா? தனது உயிரை விடும்போது இயேசு என் தந்தையே என் தந்தையே, என்னைக்கைவிட்டீரே என்று அழுது கண்ணீர்விட்டார். பிதாவும் அப்படியே அழுதாரா? அப்படியானால் அவரது பிதாவுக்கும் பிதா இருந்திருக்கவேண்டும். அவருக்கும் பிதா இருந்திருக்கவேண்டுமே! இந்த சுதன் பிதா, அவரது பிதா, என்பது முடிவிலாது தொடரவேண்டியிருக்கும். அப்படிக்கூறுவது அனாவஸ்த தோசம் என்ற தர்க்கப்பிழைக்கு இட்டுச்சென்றுவிடும்.
இயேசு மனிதரும் தேவரும் ஆவார். அப்படியே பிதாவையும் மனிதர் என்றிட முடியுமா? இயேசு மரியாளுக்குப்பிறந்தவர். அப்படியே பிதாவும் பெண்ணிடத்தில் பிறந்தவர் என்று சொல்லமுடியுமா? பரலோகத்தில் பிதாவின் வலதுபக்கத்தில் இயேசு அமர்ந்துள்ளார் என்று பைபிள் கூறுகின்றதே! இந்த இருவரும் எப்படி ஒன்றாக இருக்கமுடியும். இடதும்வலதும் வேறல்லவா?
மண்ணும் பானையும் போல பிதாவுமாக இயேசுவும் இருக்கின்றார்கள் என்று கூறுகின்றீர்களே! மண் பானையாகத்தானே ஆவதில்லையே! குயவர்தானே அதைப் பக்குவப்படுத்திப் பானையாக்குகின்றார். பிதாவாகிய மண்ணை சுதனாகிய பானையாக்கிய குயவர் எங்கே? மண்ணை பானையாகவனையும் சக்கரமும் அதைசுழற்றும் கோலும் எங்கே! ஆகவே மண் பானைபோல ஜெஹோவாவும் இயேசுவும் ஒன்றே என்ற உங்கள் வாதமும் நிராகரிக்கத்தக்கதே.
திரித்துவம்: நிஜமும் பிம்பமும் போலா?
ஓ கிறிஸ்தவப் பிரச்சாரகர்களே!
பிதாவும் சுதனும் நிஜமும் நிழல்போல் வேறல்ல! ஒன்றே என்றுக்கூட நீங்கள் வாதாடலாம்! நீரில் தெரியும் சூரியனுடைய பிம்பம் சூரியனே என்பது போல இயேசு ஜெஹோவாவின் பிம்பம் என்று நீங்கள் கூறலாம். அந்த உங்களது விளக்கமும் தர்க்கப்பூர்வமானது அன்று! அறிவார்ந்தது அன்று! சூரியன் உண்மை ஆனால் அவரது நிழல் பொய்யானது. அப்படிப்பார்த்தால் பிதா உண்மையானவர் என்றும் நிழலாகிய இயேசு பொய் என்றும் பொருள் பட்டுவிடும். இயேசுவே பொய்யாகிப்போனால் இயேசுவின் பிறப்பும், சிலுவையில் அவர் மரணித்ததும், அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தியதும், பரலோகத்தில் அவர் இருப்பதும், உலகின் முடிவில் நியாயத்தீர்ப்பு வழங்குவதற்கு அவர் வருகிறார் என்று பைபிள் சொல்வதெல்லாமும் பொய்யாய்விடும். இந்தக்கதைகள் எல்லாம் பொய்யாகிவிடில் பைபிளும் பொய்யாகிவிடும்.
இன்னொரு பெரும் தர்க்கப்பிழையும் பிதாவும் சுதனும் நிஜம்-நிழல் என்ற வாதத்தில் இருக்கின்றது. எல்லைக்குட்பட்டப் பொருட்களுக்கே இந்த உதாரணம் பொருந்தும். எல்லையற்ற எங்கும் நிறைந்த பரம்பொருளுக்கு இது பொருந்தாது! சூரியன் மேலே வானத்திலும், நீர் கீழே நிலத்திலும் இருக்கின்றன. இரண்டும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. அகவேதான் வானத்தில் உள்ள சூரியன் நிலத்தில் உள்ள நீரில் பிம்பமாகத்தெரிகின்றது. சூரியன் எங்கும் நீக்கமற நிறைந்தவராய் இருந்தால் தண்ணீருக்கோ அல்லது அதில் நிழல்தெரிவதற்கோ வாய்ப்பே இல்லை. பிதா எல்லையில்லாதவர், எங்கும் நிறைந்தவர், முழுமையானவர், பரிபூரணர் என்றெல்லாம் நீங்கள் சொல்லுவதால், இயேசு பிதாவான யஹோவாவின் பிரதிபிம்பம் என்ற உங்கள் வாதம் அறிவுக்கு ஒவ்வாதது.
ஓ கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!
பிதாவாகிய யஹோவாவும் சுதனாகிய இயேசுவும் கயிறும் பாம்பும் போல! வெளிச்சமும் கானல் நீரும் போல! முன்னவை உள்ளன, பின்னவை அவற்றின் தோற்றம் மட்டுமே என்று கூட நீங்கள் வாதாடலாம். இந்தவாதமும் கூட தர்க்கரீதியில் நிராகரிக்கத்தக்கதே!
பிதா கயிறு என்றால் இயேசு பாம்புபோல அதன் தோற்றம் என்று நீங்கள் கூறலாம். பாலைவனத்திலே கானப்படும் கானல் நீரும் கயிற்றிலே காணப்பட்ட பாம்பும் மாயத்தோற்றமே அன்றி உண்மையல்ல. அப்படியே இயேசுவும் பொய்யானத் தோற்றம் என்றே இந்த உவமானம் பொருள்தரும். பிதாவை அன்றி தனித்த எந்த ஒரு இருப்பும் இயேசுவுக்கு இல்லை என்றும் இது பொருள்தரும். மாயையான பாம்பு ஒரு பெண்ணின் கருவிலே பிறந்தது எப்படி? என்றக் கேள்வியும் இங்கே எழும். கானல் நீரும் கயிறிலே தோன்றிய பாம்பும் போலிருந்த இயேசுவின் ஜீவிதம் கூட பொய்த் தோற்றமாகவே கருதவும் வேண்டியிருக்கும். அத்தகைய இல்பொருளான ஒருவரது பெயராலே ஒரு மதம் எதற்கு? அப்படிப்பட்ட ஒரு மதம் சிலருக்குத் தேவைப்பட்டாலும் கூட அறிஞர்கள் அதனை உண்மை என்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
திரித்துவம்: சூரியஒளி, நிறம் மற்றும் வெப்பம்
கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!
பிதா சுதன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகியவற்றின் ஏகத்துவத்தை நிருபிப்பதற்காக வேறொரு உதாரணத்தை நீங்கள் சொல்கின்றீர்கள். சூரியனின் ஒளி, நிறம் மற்றும் வெப்பம் ஆகிய மூன்றைப்போல இம்மூன்றும் ஒரே பொருளின் மூன்றுத் தன்மைகள் என்பது உங்களது வாதமாகும்.
இதே வாதப்படி ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு, மூன்று, நான்கு ஐந்து, ஆறு, ஆறுக்கும் மேலானத் தன்மைகள் குணாதிசயங்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக மண்ணை எடுத்துக்கொள்வோம். கடினத்தன்மை, மணம், சுவை, வடிவம், தொடுவுணர்வு, ஒலி, நிறம் எனப் பல்வேறு தன்மைகள் உள்ளன. நமது தேவைக்கு ஏற்ப இவற்றிலே எத்தனை குணங்களை வேண்டுமானாலும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த நியாய விதியை எந்தப் பொருளுக்கும் பொருத்திப்பார்க்கலாம் பயன்படுத்தலாம். சூரியனிடத்திலே நீங்கள் சொன்னத் தன்மைகளைத்தவிற பல்வேறு குணாதிசயங்களையும் காணலாம். சூரியனுக்கு கோளவடிவம், பேரளவு, தொலைவு போன்று பல்வேறுத் தன்மைகளை நாம் கூறமுடியும். அப்படி பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் மூன்றுதன்மைகள் எனக்கொண்டால் இம்மூன்றுத் தன்மைகளுடைய அந்தப்பொருள் எது? இம் மூன்றுத்தன்மைகளும் அவைகளைக்கொண்ட அந்தப்பொருளும் ஒன்றா வெவேறா? ஒருவரது குணாதிசயங்கள் அவரை விட்டுவிட்டு தனித்து செயல்படுவது சாத்தியமா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. நமது நடைமுறை வாழ்வில் எந்த ஒரு பொருளும் அதன் தன்மைகளும் வேறுவேறல்ல என்பதை நாம் அறிந்திருக்கின்றோம்.அப்படிப் பார்க்கும்போது ஒருவரது ஒரு குணாதிசயம் மட்டுமே ஒரு பெண்ணுக்கு மகவாகப்பிறந்து இன்பம் துன்பம் ஆகியவற்றை அனுபவத்து மரணிப்பது சாத்தியமா? என்றக் கேள்வி எழும். நிச்சயமாக இதற்கெல்லாம் சாத்தியமே கிடையாது. ஆகவே பிதா, சுதனாகிய இயேசு மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் மூன்று குணாதிசயங்கள் மூன்றுத்தன்மைகள் என்பது அறிவுப்பூர்வமானது அல்ல.
திரித்துவம்: ஹஸ்தம்-கரம்-பாணி போன்றா?
கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!
சிலக்கிறிஸ்தவ அறிஞர்கள் ஹஸ்தம், கரம் பாணி என்பனப் போல பிதா சுதன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒன்றே என்று வாதிடுகின்றார்கள். ஹஸ்தம் கரம் பாணி என்ற மூன்று சம்ஸ்கிருதப் பதங்களும் கை என்ற ஒரே மானுட அங்கத்தையேக் குறிக்கின்றது. அப்படியே பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒரே பொருளின் மூன்று பெயர்களாக நாமங்களாக அமைகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவி மூன்றும் ஒரே பொருளின் மூன்றுப்பெயர்களானால் அந்த மூன்றும் எப்போதும் ஒரே இடத்தில் தான் இருக்க வேண்டும். இம்மூன்றும் வேறுவேறு இடங்களிலே இருந்ததாக விவிலியம் சொல்லுவதால் ஹஸ்தம், கரம் பாணி மூன்றும் ஒன்று என்ற உவமை பிதாசுதன் பரிசுத்த ஆவி என்ற திரித்துவத்துக்குப் பொருந்தாது.
உடலும் உயிரும் போல மூன்றான ஒன்று
ஓ கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!
ஒரே மனிதன் உடலாகவும் (தேகம்) உயிராகவும்(ஆன்மா) ஒரே சமயத்திலே இருப்பது போல ஒன்றே மூன்றாக உள்ளது என்று நீங்கள் வாதிடலாம். ஆன்மாவும் தேகமும் ஒன்றுக்கொன்று முரணானத் தன்மைகளை உடையன. ஆன்மா அறிவுப்பொருள் எனில் உடலோ ஆன்மாவின் துணையின்றி அறியவல்லது அன்று. உடலுக்கு வடிவம் உண்டு. ஆன்மாவுக்கு உருவம் இல்லை. ஆன்மா அழிவற்றது ஆனால் உடலோ அழியக்கூடியது.
ஆனால் பிதா சுதன் பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் இறையான்மை, சர்வவியாபகம்(எங்கும் நிறைந்த தன்மை), மரணமில்லாத்தன்மை ஆகிய தேவத்தன்மைகளை உடையனவாகவே நீங்கள் பேசுகின்றீர்கள். ஆகவே உடலும் உயிரும் போல ஒன்று என்ற உவமையும் திரித்துவத்துக்குப் பொருந்த்தாது. பிதா சுதன் ஆவி ஆகியவற்றில் ஒவ்வொன்றும் தேவன் என்று சொல்லுகின்ற நீங்கள் உடலும் உயிரும் தனித்தனியே மனிதன் என்றும் சொல்லமுடியுமா? நிச்சயமாக சொல்லமுடியாது.
சுதனாகிய இயேசு சிலுவையிலே அறையப்பட்டு துன்புறும் வேளையில் பிதாவாகிய தேவன் அவரைக்கைவிட்டார் என்று பைபிளிலே இயேசுவே சொல்வதாக வருகின்றது. ஆகவே பிதாவும் சுதனும் ஒன்று என்பது உண்மையாகாது.
இயேசுவுக்கு யோவான் ஞானஸ்னானம் வழங்கியபோது பரிசுத்த ஆவியானது ஒரு புறாவைப்போல வானத்திலிருந்து இயேசுவின் மீது இறங்கியதாக புதிய ஏற்பாடு சொல்கின்றது. அவர் தான் பரமண்டலத்துக்கு ஏறிபோகும்வரை பரிசுத்த ஆவியை உங்களுக்கு அனுப்பமுடியாது என்று தனது சீஷர்களிடத்திலே கூறுவதும் பைபிளிலே சொல்லப்படுகின்றது. இயேசுவின் ஜீவிதத்தில் நடந்ததாக சொல்லப்படும் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் பரிசுத்த ஆவியும் இயேசுவும் ஒன்றல்ல வேறுவேறு என்பதைக்காட்டுகின்றன. எனவே பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒன்று என்பது தர்க்க அறிவுக்கு எள்ளளவும் பொருந்தாது.
இயேசு பரமண்டலத்துக்கு ஏறிப்போய் தனது பிதாவோடு சேரவில்லை என்பது புனைவு என்பதும் கிறிஸ்துவின் ஜீவிதம் என்ற அத்யாயத்திலே ஆதாரப்பூர்வமாக எம்மால் சொல்லப்பட்டது. கிறிஸ்து நரகத்துக்கே சென்றிருப்பார் என்பதால் கிறிஸ்தவர்களை ஆசீர்வதிப்பதற்காக தூய ஆவியும் உலகத்துக்கு இறங்கிவரவே வராது என்பதே உண்மை. ஹெல் என்னும் நரகத்தை அடைந்தவர்கள் அதிலிருந்து மீண்டுவருவது சாத்தியமே இல்லை என்று பைபிள் சொல்லுவதால் இயேசுவாலும் அதிலிருந்து மீண்டு சொர்கத்துக்குப்போவதும் சாத்தியமே இல்லை. ஆகவே கிறிஸ்தவர்களே உங்களது எல்லா நம்பிக்கைகளும் வீணே!
மேற்கண்டவிவாதம் கிறிஸ்தவத்தின் மும்மணிகளான பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகியவற்றுக்கு இறைத்தன்மைகள் ஏதும் இல்லை என்று நிரூபிக்கப்படுகின்றது.
(தொடரும்)
<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>
திரித்துவம்: திரித்து திரித்து கயிறு ஆக்கும் தத்துவம் தான் கிறுக்கு கிருஸ்துவ தத்துவம் என்பதை நன்கு விளக்கும் நல்ல கட்டுரை
ஏன் இந்த கொலைவெறி கொலைவெறி டீ
மொத்த சாமி மூணு மூணு
புனித ஆவி அப்பன் பிள்ள
மூணும் சேர்ந்து ஒண்ணு ஒண்ணு
அந்த ஒண்ணே ஏசு சாமி
சாமி ஆடி சிலுவை சாய்ந்தார்
மீண்டு வந்து சலவை செய்தார்
ஏசு *சொன்னது அன்பு அன்பு
பவுலு சொன்னது வம்பு வம்பு
பாவியானர் பாமர ஆளு
ரத்த சுத்தி ரத்த சுத்தி
ஏன் இந்த கொலவெறி கொலவெறி டீ
* (சொன்தாக சொல்லுவது)
(ஒரு கடவுள், மூன்று நபர்கள் ) அடிப்படை கோட்பாடான முக்கூறு சொல்வது கடவுள் என்பவர் ஒருவர்தான் ஆனால் அவர் சுவாசுவதமாக தனிதன்மையுடன் மூன்று வெவ்வேறு நபர்கள் – அதாவது பிதா – பிள்ளை – புனித ஆவி. வேறுவிதமாக கடவுள் என்பவர் ஒருவர்தான் என்பதும் அவர் வெவ்வேறான மூன்று தனிநபர்கள்தான் என்பதும்தான் சாரம். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான உண்மைகள் — 1) பிதாஇ பிள்ளை மற்றும் புனித ஆவி என்பவர்கள் தனி தன்மையுடைய நபர்கள் 2) ஒவ்வொருவரும் கடவுள்கள்தான் 3) ஆனால் ஒரே ஒரு கடவுள்தான். (செந்தில்-கௌடமணி வாழைபழம் கதை அறிவாளிகளுக்கு மட்டும்தான் புரியும்)
மிக்க நன்றி ஸார். தங்கள் பணி சிறந்தது. 12 பகுதிகளும் படித்தேன்.
இப்பதிவின் கடைசிப் பத்தியின் முதல் வரியில் பிழை உள்ளது போல் தெரிகிறது.
இருந்தால் திருத்தவும்,இல்லையென்றால் மன்னிக்கவும்.
மிகச் சிறப்பான பதிவு மிகச்சிறப்பான ஆராய்ச்சிகள் மிகச் சிறப்பு மிகச் சிறப்பான உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்