தொடர்ச்சி…
(7)
1998 ஆம் ஆண்டு திருநாவலூர் ஸ்ரீ சுந்தரர் ஆராதனை அறக்கட்டளை என்ற அமைப்பு சிவாச்சாரியார்களால் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, தமிழகம் முழுவது உள்ள சிவாச்சாரியார்களால் தங்கள் பிறந்தநாள், திருமணநாள், தீக்ஷை நாள்களில் ஸ்ரீ சுந்தரர் மடத்தின் ஒரு நாள் பூஜை செலவை ஏற்றுக்கொள்வது என்ற திட்டத்தின்படி ஒரு தொகை வைப்புநிதியாக வைக்கப்பட்டு ஆண்டின் 365 நாள்களும் பூஜைகள் தடையின்றி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன்பின் இந்த ஆராதனா அறக்கடளை மூலம் அனைத்து சிவாச்சாரியார்களும் ஒன்று சேர்ந்து 2000 ம் ஆண்டில் ஸ்ரீ சுந்தரர் மடம் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்வது சம்பந்தமாக முயற்ச்சிகள் மேற்க்கொள்ளப்பட்டன.
முன்பு 40 ஆண்டுகள் முன் செய்த திருப்பணியானது, சிவாச்சாரியார்கள் கஷ்ட ஜீவனத்திற்க்கு இடையில் செய்த திருப்பணி என்பதால், மடம் பழுதடைய ஆரம்பித்தது. எனவே மடத்தை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அதன்படி, சுந்தரர் ஆராதனா அறக்கட்டளை சார்பாக ஸ்ரீலஸ்ரீ கூனம்பட்டிஆதினம் சுவாமிகள் தலைமையில், 20-10- 2000 ஆம் ஆண்டு சேலம் சிவஸ்ரீ கணேச சிவாச்சாரியார் மற்றும் அவினாசி சிவஸ்ரீ சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார்கள் வழிகாட்டதலோடு திருப்பணி சார்ந்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி திருமடம் திருப்பணி ஆரம்பித்து தொடங்குவது என்றும், அதற்க்குமுன்பாக, 40 ஆண்டுகள் முன்பாக நம் முன்னோர்கள் செய்தது போல் முதலில் திருநாவலூர் பெரியகோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயிலை முதலில் கும்பாபிஷேகம் செய்து பின் சுந்தரர் திருமடம் கும்பாபிஷேகம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் ஆலயம் திருப்பணி தொடங்கப்பட்டது.அதேநேரத்தில் திருமடத்திலும், திருப்பணி அறக்கட்டளை சிவாச்சாரியார்களும், தொண்டைமண்டலதிருப்பணிக்குழு என தொண்டை மண்டல சிவாச்சாரியார்களும் திருப்பணி ஆரம்பித்தனர். ஆனால் திருப்பணியில் தடை ஏற்ப்பட்டது. காரணம் திருப்பணி சார்ந்த நிதிகள் சிவாச்சாரியார்களே செய்வது, வெளியில் வசூல் செய்வதில்லை என்பதாலும் சிவாச்சாரியார்கள் அனைவரும் தங்கள் கோயில் நித்ய பூஜையில் உள்ளதாலும், தமிழகம் முழுவது விரவி ஒரு குடி, இருகுடி என்று உள்ளதால், ஒன்று சேர்ந்து அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று ஆலோசிப்பதில் வந்த தாமதமே.
இந்நிலையில் வயது முதிர்ந்த சிவாச்சாரியார்கள், முதலில் பெரியகோயில் கும்பாபிஷேகத்தை பூர்த்தி செய்தால்தான் திருமடம் திருப்பணி தங்கு தடையின்றி நடைபெறும் என்று வழிகாட்டினர். அதன்படி திருநாவலூர் கோயில் & மடத்தின் குருக்கள் சிவஸ்ரீ முத்துஸ்வாமி குருக்கள் சக்கரமாக சுழன்று பெரியக்கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்க்கான பணிகளை மேற்க்கொண்டார் . 2003 ல் தொடங்கிய திருப்பணி 2006 ல் பூர்த்தி பெற்றது .அறநிலையத்துறையின் எவ்வித உதவியும் இன்றி ஊர்பொதுமக்கள் ஒத்துழைப்போடு, முழுக்க முழுக்க சிவாச்சாரியார்கள் செய்த கும்பாபிஷேகம் இது.
கும்பாபிஷேகத்திற்க்காக பெரியகோயில் குருக்கள் முத்துசாமி சிவம், பல ஊர்க்களுக்கு சென்று சிவாச்சாரியார்களை அணுகியபொழுது, அவர்கள் தங்களால் இயன்ற அளவு நிதிஉதவி, நெய், பூஜை பொருட்கள், மூலிகை திரவியங்கள், கலசங்கள் என வாங்கித்தந்தனர். 2006 ல் நடைபெற்ற ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட சிவாச்சாரியார்கள் சுமார் 200 பேர் இருப்பார்கள் . ஆறு நாட்கள் நடந்த கும்பாபிஷேகத்திற்க்கு சிவாச்சாரியார்கள் தங்கள் திருநாவலூர் என்ற எண்ணத்தில் பலரும் சம்பாவனையே வாங்காமல் தொண்டு செய்தனர் .திருக்கோயில் குருக்கள் வலியுறுத்தி தந்த மரியாதை நிமித்தமான சம்பாவணையை மட்டும் சிலர் ஏற்றுக்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பல சிவாச்சாரியார்கள் உடலாலும், மனதாலும், பொருளாலும் தொண்டுசெய்து ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை பூர்த்தி செய்தார்கள். திருநாவலூரோடு சிவாச்சாரியார்களுக்கு இருந்த தொடர்பும், பந்தமும், திருநாவலூர்பூமியை தங்கள் ஆதிபூர்விகமாக பாவித்த பக்தியுமே சிவாச்சாரியார்களின் இந்தளவிற்கான தொண்டுக்கும் ஈடுபாடுக்கும் காரணமாயிற்று.
2006 பக்தஜனேஸ்வரர் கும்பாபிஷேகத்தை உள்ளூர் குருக்கள் தலைமையில், தமிழக சிவாச்சாரியார்கள் தன்னார்வலராக தொண்டாற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள் என்பதை அவ்வூர் பொதுமக்களாலேயே மறுக்கமுடியாத உண்மையாகும். அதாவது 1965 மற்றும் 2006 வாக்கில் நடைபெற்ற பக்தஜனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இரண்டுமே சிவாச்சாரியார்கள் பங்களிப்போடே நடைபெற்றது என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு பக்தஜனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை பூர்த்தி செய்து, 2007 ஆம் ஆண்டு மீண்டும் திருமடம் திருப்பணி ஆரம்பிக்கவிருந்த நிலையில் கோயில் & மடத்தின் குருக்களுக்கு சில தனிப்பட்ட குடும்ப சங்கடங்கள் ஏற்பட்டது.
தொடர்புடைய படங்கள் இங்கே:
https://facebook.com/story.php?story_fbid=1995525057427722&id=100009107423631
(8)
திருநாவலூரில் இரண்டு ஆதிசைவ குருக்கள் குடும்பம் உள்ளது.இவர்களில் மூத்தவர் சிவஸ்ரீ ராமநாதகுருக்கள் &வாரிசுகள். இளையவர் சிவஸ்ரீ. சம்பந்த குருக்கள் &வாரிசுகள். இவர்கள் இருவருக்கும் பெரியகோயில் என்ற ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயிலில் 15 &15 நாள் பூஜை முறை. இவர்களில் இளையவர் சம்பந்த குருக்களே பெரியகோயில் பூஜை முறையோடு, திருமடம் பூஜை &நிர்வாகம் செய்துவந்தார்.இவரது இளைய மகன் முத்துசுவாமி குருக்கள் முறைப்படி வேத ஆகமம் பயின்றவர் .திருமுறைகளில் மிகுந்த பற்றுக்கொண்டவர் .
திருநாவலூர் மிகவும் புராதான கோயில் என்றாலும், பக்தி பெருக்கம் ஏற்பட்ட 2000 ஆம் ஆண்டு வாக்கில் பல பக்தர்கள் கோயிலை தேடிவரும் வகையில் கோயில் புகழ்பெறச் செய்தவர் இந்த முத்துஸ்வாமி குருக்கள் என்றால் மிகையாது. இவர் மிகுந்த திறமையாக கோயிலை நிர்வாகம் செய்தது, சிலருக்கு சங்கடமாக இருந்தது . பொதுவாக ஊருக்கு ஒரு குடியாக உள்ள குருக்கள் தன்மானம் பார்க்காமல் அடிமைப்போல் இருந்தால் கிராமப்பகுதியில் புகழ்வார்கள். அவ்வாறு இல்லாமல், கொஞ்சம் தன்மானத்தோடு, நிர்வாகம் செய்பவராக இருந்தால் சிலருக்கு சங்கடமே. அவ்வகையில் இவர் எங்கு சறுக்குவார் என்று எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இவரின் குடும்பசங்கடம் + அதே நேரத்தில் உருவான நிதிமுறைகேடு என்ற வாய்ப்பை பயன்படுத்தி சிலர் இவரை பழிவாங்கினார்கள்.
பொதுவாக திருமடத்தில் சிவாச்சாரியார்களே நிதிஉதவி அக்காலத்தில் செய்தனர். வெளிநபரிடம் பெரும்பாலும் வசூல் செய்வதில்லை. அவ்வாறான நிலையில் நிதிமுறைகேடு பற்றி விசாரிக்கவேண்டியவர்கள் தமிழக சிவாச்சாரியார்கள். அடுத்து முறைகேடு நடந்தாலும், அதனை திருத்தி, அல்லது தண்டனைக்குட்படுத்தி, மாற்று ஏற்பாடு செய்து, முறைப்படுத்தவேண்டுமே தவிர, ஒரு மரபின் வழி வழி அடையாளத்தை அழிக்க முனையக்கூடாது. இதுவே சான்றோர் செய்கை. ஆனால் திருநாவலூரில் இந்த சூழலை பயன்படுத்தி மடத்திற்க்கும், குருக்களுக்கும் உள்ள தொடர்பை அறுக்க முயன்றனர் . இதன் காரணமாக திருப்பணி ஆரம்பிப்பது தாமதமாகியது.
காரணம் தமிழகம் முழுவதும் உள்ள சிவாச்சாரியார்கள் நிதி சார்ந்து பங்களித்தாலும், அங்கு நிர்வாகம் செய்து அதனை செயல்படுத்தும் இடத்தில் உள்ளூர் குருக்களே இருந்தார். அவரே திருமடம் அர்ச்சகர்& நிர்வாகம் செய்து வந்தார். இதே காலக்கட்டத்தில் அதாவது 2000 முதல் 2010 வரையிலான காலங்களில் சைவசமயத்தில் ஈடுபாடுகொண்டு பலரும் வந்தனர். இவ்வாறு சைவசமய பக்திகொண்டு சிவவழிபாடு தொடங்கிய அடியார்களில் பலரும் சரியை, கிரியை வழி மூலம் இறைவனை அடைதல் பிறவின்பயன் என்றபடிக்கு, உழவாரம் செய்தல், தீபம், தூப தொண்டுகள், முற்றோதல், திருத்தலயாத்திரை என்ற அடியார் இலக்கணத்தோடு செயல்பட்டோர் பலர். இதேகாலத்தில், கடந்து ஐம்பது வருட திராவிடவாசத்தில் இருந்து விதிவசமாக சிவகோலம் கொண்டோர் சிலர். இவர்களுக்கு சிவக்கோலம் கொண்டாலும் பழைய திராவிடவாசம் விடவில்லை .எனவே முடிந்தளவு சைவசமயத்தில் திராவிட கருத்துகளை இறக்குமதி செய்தனர் .
அந்தபடிக்கு இத்தைய சிவகோலம் கொண்டோர், சரியை, கிரியை செய்து அடியாராக இருப்பதைவிட, ஆதினமாக, சைவசமய சட்டாம்பிள்ளையாக மாறவிரும்பினர் .அதாவது ஒரு படத்தில் கிண்டலாக வரும் .இந்த வில்லன், துணை நடிகர் எல்லாம் நடிப்பதில்லை. Direct ஹீரோதான் என்பார் . அதுபோல் சைவசமயம் சார்ந்த மூன்று வருடத்திலேயே Direct டாக ஆதினம், மடாதிபதி ஆவது என்று சைவசமய மார்க்கெட்டை கணித்து திட்டமிட்டோர் சிலர். அப்படியான எண்ணோம் கொண்டோருக்கு சுந்தரர் மடம் ஒரு காரணியாகியது. எப்படி வார்டு கவுன்சிலர் ஏழைகளின் பிரச்சனை உடைய இடத்தை தன்பெயரில் பட்டா போட்டுக்கொள்வாரோ, அதுபோல், அன்றைய சூழலில் சுந்தரர் மடம் சில சிக்கலில் இருந்ததால், அந்த சூழலை பயன்படுத்தி திருப்பணி என்ற பெயரில் சிலர் நுழைய முயன்றனர். அதன்படி திருப்பணி செய்வதாக முதலில் 2010 ல் நுழைந்தவர்கள், விருத்தாசலம் அறுபத்திமூவர் திருப்பணி மன்றம் என்ற அமைப்பினர் .
அதுமுதல், அதாவது 2010 முதல் திருநாவலூர் சுந்தரர் திருமடம், வழக்கு பிரச்சனை என இன்று வரை இருந்துவருகின்றது. சரியோ, தவறோ தேவையின்றி மற்றவர் அனுபவத்தில் உரிமையில் இருந்த இடத்தில் நுழைய சிலர் முற்பட்டதால் வந்த விளைவு இது. ஸ்ரீ சுந்தரர் பெருமான் அருள்வாழ்வே வழக்கு மன்றத்தில் ஆரம்பித்ததால், அவர் இடமும் வழக்கு பிரச்சனை என்று உள்ளதோ?
(9)
திருநாவலூர் ஸ்ரீ சுந்தர் திருமடத்தில் சரியோ, தவறோ அவ்விடத்தில் திருப்பணி ஆரம்பித்து நடைபெற்று வந்தது. திருப்பணிகளை தடைசெய்யவேண்டும் என்பது நோக்கமல்ல. பாரம்பர்ய மிக்க சைவ ஆதினங்கள், சிவாச்சாரியார்களை கொண்டு ஆலோசித்து முறைப்படுத்தவேண்டும் என்பதே கோரிக்கை.
இப்பொழுது திருப்பணி செய்பவர்களுக்கு உண்மையில் திருப்பணி செய்வதுதான் மைய நோக்கம் என்றால், அவர்கள் திருப்பணிக்கு சிவாச்சாரியார்கள் அனைவரும் தோளோடு தோள் நிற்போம். காரணம் இப்பொழுது திருப்பணி செய்பவர்கள் அறநிலையத்துறையிடம் உபயத்திருப்பணி என அனுமதி வாங்கியே செய்கிறார்கள். உபயத்திருப்பணி என்றால் வெளியில் வசூல் செய்யாமல் ஒரு தனி நபரோ அல்லது டிரஸ்டோ உபயமாக செய்வது. உபயதாரர் அந்த உபயத்தை பூர்த்தி செய்துவிட்டார்கள் என்றால், அவருக்கான கோயில் மரியாதை செய்யப்படும். மரியாதை பெற்றுக்கொண்டர் எவ்விதத்திலும் அதன் பின் தன் உபயத்தில் அதிகாரமோ, உரிமையோ செய்யக்கூடாது.
அவ்வகையில் இப்பொழுது திருப்பணி செய்பவர்கள் ஒரு உபயதாரர்கள். இவர்கள் திருப்பணி பூர்த்தி செய்வதில்தான் மைய நோக்கம் இருக்கவேண்டுமே ஒழிய, எந்த இடத்திற்க்கு உபயம் செய்கிறார்களோ அந்த இடத்தை ஆக்ரமிக்கும் நோக்கம் இருக்கக் கூடாது. ஆனால் இன்று திருநாவலூரில் திருப்பணி செய்பவர்களுக்கு, திருப்பணி செய்வது மட்டுமே நோக்கமல்ல.அதற்க்கு மேலும் மடத்தை ஆக்ரமிக்கும் எண்ணம், மடத்தில் இருந்து சிவாச்சாரியார்களை வெளியேற்றும் எண்ணம் உள்ளது என்பது அவர்கள் செயல்பாடுகளால் உணரமுடிகின்றது.
அடுத்து சுந்தரர் திருப்பணியில் வரலாற்று ரீதியாக 1500 ஆண்டுகள் பந்தம் கொண்ட, கடந்த நூறு ஆண்டுகளாக மடத்தை நிர்வாகித்து சென்ற கும்பாபிஷேகம் செய்த தமிழக சிவாச்சாரியார்களை மிரட்டி ஒதுக்குவது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. அடுத்து நால்வரில் ஒருவராகிய ஸ்ரீ சுந்தரர் மடத்தின் திருப்பணியை சைவபாரம்பர்ய ஆதினங்களாகிய, தருமைஆதினம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதினங்களையும், ஏற்கனவை 1965ல் நடைபெற்ற திருநாவலூர் சுந்தரர் மடம் திருப்பணிகுழு தலைவராக இருந்து கும்பாபிஷேகம் செய்த கூனம்பட்டிஆதினம், மற்றும் சிவாச்சாரியார்களை கலந்தாலோசிக்காமல், அவர்கள் வழிகாட்டுதல் இல்லாமல், தான்தோன்றித்தனமான திருப்பணி செய்வதன் காரணம் என்ன? அதன் மர்மம் என்ன? என்ற கேள்வி எழுகின்றது.
இன்று வாழும் நாவுக்கரசராக, பழுத்த சைவப்பழமாக உள்ள, வேத, ஆகம, திருமுறை சித்தாந்த சாஸ்திரங்கில் சைவ அனுபவம் வாய்ந்த, ஆதினங்களில் இன்று மிகவும் மூத்தவராக விளங்கும் ஞானாச்சாரியார் தருமை ஆதினம் அவர்கள் இப்பொழுது நடைபெறும் திருப்பணியில் ஆகம குற்றம் உள்ளது என்று கூறியுள்ளதாக தகவல் வருகின்றது. திருநாவலூருக்கு மிக மிக அருகாமையில் உள்ள, அப்பர் பெருமான் அவதரித்த திருவாமூரில் அனைத்து திருப்பணிகளும் ஸ்ரீலஸ்ரீ தருமை ஆதினம் அவர்களை ஆலோசித்து, அவர்கள் வழிகாட்டுதலோடு விழாக்களை செய்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க திருநாவலூர் சுந்தரர் மடாலய திருப்பணியில் சைவப் பாரம்பர்ய ஆதினங்களின் வழிகாட்டுதலை பெறாத மர்மம் என்ன?தருமை ஆதினம் அவர்களை திருநாவலூர் திருமடத்தில் எழுந்தருளச் செய்து திருப்பணி சார்ந்த ஆலோசனை பெறாதது ஏன்.?
திருவாமூர் அப்பர் கோயில்வரை வரும் தருமை ஆதினம், மேலே நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநாவலூருக்கு வரமாட்டோம் என்றா கூறிவிடுவார். மூத்த ஆதினமாகிய அவர்களை அழைக்காதது ஏன்? தமிழகத்தின் பாடல் பெற்ற தலங்கள் மற்றும் முக்கிய சைவசமய வரலாற்று இடங்களில் திருப்பணிகளோ அல்லது கும்பாபிஷேகமோ அல்லது விழாக்களோ செய்யும் பொழுது, இதனை அரசாங்கம் செய்தாலும் சரி, நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் போன்று வேறு உபயதாரர் எவர் உபயமாக செய்தாலும் சரி, சைவசமயத்தின் மிகப்பெரும் முப்பெரும் ஆதினங்களாகிய தருமை ஆதினம், திருவாவடுதுறை ஆதினம், திருப்பனந்தாள் ஆதினம் ஆகிய இவர்களை ஆலோசிக்காமல், இவர்கள் வழிகாட்டுதல் இல்லாமல், இவர்களை கும்பாபிஷேகம் விழாக்களுக்கு அழைக்காமல் கும்பாபிஷேகம் நடைபெற்றதாக வரலாறு இல்லை. இவ்வாறு இருக்க, சைவசமய மூவர் முதலிகளில் ஒருவராகிய சுந்தரர் அவதரித்த சைவசமய வரலாற்று சிறப்புமிக்க திருமடம் திருப்பணியில் மட்டும் சைவ பாரம்பர்ய ஆதினங்களை அழைத்து வழிகாட்டுதல் பெறாதது ஏனோ?
எப்பொழுதுமே நம் சைவமரபில் முதலில் உதவி புரிந்தவர்களை மறக்கமாட்டார்கள்.இது சைவதர்மம், சைவ நியதி. அதன்படி 1965 ல் சுந்தரர் மடம் திருப்பணி குழு தலைவராக இருந்து கும்பாபிஷேகம் செய்த கொங்கு தேசம் கூனம்பட்டிஆதினம் ஸ்வாமிகளை இப்பொழுது நடைபெறும் திருப்பணியில் ஆலோசனையோ, வழிகாட்டுதலோ பெறாதது ஏன்?அழைக்காதது ஏன்? இப்படியான மரபுகள், சைவதர்மங்கள், சைவ நியதிகள் இருக்கும் பொழுது தான்தோன்றிதனமாக திருப்பணி செய்ய சுந்தரர் மடம் என்ன இவர்கள் வீடா?
சைவசமய மூவர் முதலிகளில் ஒருவர் சுந்தரர் பெருமான் என்பதால், அவர் அவதரித்த இடத்தில் நடைபெறும் திருப்பணி, விழா சார்ந்த விசயங்களை பற்றிய விபரங்களை கேட்கும் உரிமை, உலகம் முழுவதும் உள்ள மெய்யடியார்களுக்கும், ஏதேனும் தவறுகள் இருப்பின் அதை பற்றிய விபரங்கள் கேட்கும் கடமையும் மெய்யடியார்களுக்கு உண்டு.
தொடர்புடைய படங்கள் இங்கே:
https://facebook.com/story.php?story_fbid=1999131883733706&id=100009107423631
(10)
விருத்தாஜலம் அறுபத்து மூவர் திருப்பணிமன்றம் என்ற அமைப்புசார்பாக தொடங்கப்பட்ட திருப்பணி, சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் சிவாச்சாரியார்கள் பக்கம் அடிப்படை நியாயம் இருந்ததால் விழுப்புரம் மாவட்டம் நீதிமன்றம் தடையாணை அளித்தது. ஆனால் தடையாணை பெற்றதால் பல சங்கடங்கள் அக்காலத்தில் உள்ளூர் குருக்களுக்கு ஏற்பட்டது. பொதுவாக உள்ளூர் குருக்கள் ஊரில் ஒரு குடியாக வாழ்வதால், பல இடைஞ்சல்கள் ஏற்படும் . ஒத்த குடி என்றும், அடித்தால் கேட்க ஆளில்லை என்றும், பார்ப்பான் என்றும் வசவுகள் வரும். கடந்த ஐம்பது ஆண்டு திராவிட ஆட்சிகாலத்தில் பிராமணர்கள், முக்கியமாக உலக விபரம் இல்லாத கோயில் குருக்கள் எப்படியெல்லாம் மிரட்டப்படுவார் என்று சொல்லித்தெரியவேண்டாம் .அவரவர் யூகத்திற்க்கு சிந்திக்கலாம். எனவே உள்ளூர் குருக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, உள்ளூர் குருக்கள் குடும்பத்தோடு வழக்கு தொடர்ந்த சிவாச்சாரியார்கள் வீட்டுக்கு சென்று அழுது புலம்பல் செய்ய, இவ்வழக்கு தாக்கல் செய்து தடையாணை பெற பெரிதும் துணையாக இருந்த, அர்ச்சகர் சங்க தலைவர் கடலூர் அருணாசலம் அவர்கள் இல்லத்திற்க்கே சென்று உள்ளூர் குருக்கள் நெருக்கடியை கூற, வேறு வழியின்றி வழக்கை வாபஸ் வாங்குவது என்று முடிவுசெய்யப்பட்டு வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.
இவ்விடத்தில் பொதுவாக திருநாவலூர் கிராமத்தில் சிலர் கூறும் கூற்று என்னவென்றால், வெளியூர் சிவாச்சாரியார்களுக்கு இங்கு என்ன வேலை என்பது. அதாவது சுந்தரர் மடம் உள்ளூர் விசயமாம். அதனால் வெளி சிவாச்சாரியார்கள் தலையிடக்கூடாதாம்.ஏனெனில் வழக்கு தொடர்ந்தவர்கள் வெளியூர் சிவாச்சாரியார்கள் என்பதால் இந்த வாதம் முன்வைக்கப்படுகின்றது. திருநாவலூரில் உள்ள ஒரு காளி, மாரி கோயில்கள் என்றால் வெளியூர் நபர்கள் எவரும் தலையிடப்போவதில்லை. ஆனால், திருநாவலூர் சுந்தரர் மடம் சைவசமய உலகத்திற்க்கு சொந்தமான்து. அடுத்து சிவாச்சாரியார்கள் பூர்வீக வரலாறுகளை ஆராய்ந்தால் ஆகமங்களிலும், அடுத்து திருமுறைகளிலும், திருமுறை என்றால் பெரியபுராணத்திலும், அதிலும் திருநாவலூரில் அவதரித்த சுந்தரர் புராணத்திலுமே அதிகம் உள்ளது. அவ்வகையில் திருநாவலூர் தமிழக சிவாச்சாரியார்களுக்கு ஆதிபூர்வீகம்.
அடுத்து சாதாரண பஜனை மண்டபமாக இருந்த இடத்தை, ஸ்ரீலஸ்ரீ கூனம்பட்டி சுவாமிகள் தலைமையில் பல சிவாச்சாரியார்கள் ஒன்று சேர்ந்து ஐம்பது ஆண்டுகள் முன் போக்குவரத்தே இல்லாத கஷ்டமான காலத்தில் நடந்தே சென்று திருப்பணி செய்து, சுந்தரர்மடமாக பொலிவுறச்செய்தது வெளியூர் சிவாச்சாரியார்களே. அதன்பின், ஐம்பது ஆண்டுகளாக நித்யபூஜை. ,சிறப்பு விழாக்கள், திருமடம் நிலத்தில் பிரச்சனை ஏற்ப்பட்டபோது, அப்பிரச்சனையை தீர்த்து நிலம்கிரையம் செய்து தந்தது என அனைத்தும் செய்தது வெளியூர் சிவாச்சாரியார்களே. மேலும், சுந்தரர் மடத்தை சிவாச்சாரியார்கள் சாதி ரீதியாக அணுகவில்லை .தங்கள் மரபின் அடையாளமாக, தமிழகத்தில் மிஞ்சி இருக்கக் கூடிய தங்கள் மரபின் எச்சமாக, ஆதிபூர்விக மடமாக கருதுகிறார்கள்.எனவேதான் தமிழகம் முழுவதும் உள்ள பல சிவாச்சாரியார்கள் அம்மடத்திற்கு தொண்டு செய்துள்ளார்கள். எனவே வெளியூர் சிவாச்சாரியார்களுக்கு இங்கு என்ன வேலை என்று பேச்சு கொஞ்சமும் நியாயமற்றது.
இவ்வாறு 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்ந்து தடையாணை பெற்ற வழக்கு வாபஸ் பெறப்பட்ட பின், சுந்தரர் திருமடம் பிரச்சனை அல்லது ஈகோவுக்கு உரிய இடமாக மாறிப்போனது. 2011 க்கு பின் சிவாச்சாரியார்களும் அவ்விடத்தில் திருப்பணி ஆரம்பிக்க முடியாத சூழல் உருவானது. இந்நிலையில் 2012 ஆண்டு டிசம்பர் மாதம் கூனம்பட்டிஆதினம் தலைமையில் சிவாச்சாரியார்கள் ஒன்றினைந்து ஐம்பது ஆண்டுகள் முன்பு கட்டிய திருமடம், பழமை காரணம் காட்டி ஒரே நாளில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
(11)
எதற்கு இடிக்கப்பட்டது. ஏன் இடிக்கப்பட்டது என்றும் எதுவும் தெரியாது. எவருக்கும் தெரியாதுஉள்ளூர் குருக்களும் அடியேனுக்கு தெரிந்தவரை வெளியூர் சிவாச்சாரியார்களுக்கு தகவல் அளித்ததாக தெரியவில்லை.
பின்பு ஒரு பத்து நாட்களில் புதியதாக உருவாக்கப்பட்ட தம்பிரான் தோழர் அறக்கட்டளை -உளுந்தூர்பேட்டை என்ற அமைப்பு சுந்தரர் திருமடத்தை புதியதாக திருப்பணி செய்ய உள்ளதாகவும், அதற்க்கு அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும், மடம் பழமையாக உள்ளதால், அறநிலையத்துறை அனுமதி பெற்று பழைய மடம் இடிக்கப்பட்டதாகவும், பிற்காலத்தில் அடியேன் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் தெரிந்துகொண்டேன்.
தேவையின்றி ஸ்ரீ சுந்தரர் திருமடத்தை, தமிழக சிவாச்சாரியார்களிடம் இருந்து அந்நியப்படுத்தவேண்டும், என்ற நோக்கில், அனாவச்யமாக அறநிலையத்துறையிடம் சென்றது தேவையற்றதாக தோன்றுகின்றது.
கடந்த காலத்தில் திருமடத்திற்காக ஒரு கற்பூரம் வாங்கக் கூட அறநிலையத்துறை உதவி செய்தது இல்லை. கடந்த காலத்தில் மடத்தில் தொண்டும் உதவியும் செய்தவர்கள் தமிழக சிவாச்சாரியார்களே. ஆனால் சிவாச்சாரியார்களை புறக்கணிக்கவேண்டும் என செயல்படுவதால், திருப்பணி செய்பவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக அறநிலையத்துறையே இவ்விசயத்தில் உள்ளே இழுத்துவிட்டு, இப்பொழுது அறநிலையத்துறை பஞ்சாயத்து செய்யவேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. இவ்வாறு தம்பிரான் தோழர் அறக்கட்டளை அமைப்பினர் அறநிலையத்துறையிடம் அனுமதிபெற்று பழைய மடத்தை இடித்து புதியதாக திருப்பணி செய்வதாக அறிவித்தனர்.
ஆனால் தார்மீகரீதியாக, சைவநியதிப்படி பழையமடம் இடிப்பதற்க்குமுன் கடந்த நூறு ஆண்டுகளாக கட்டிக்காத்த தமிழக சிவாச்சாரியார்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களோடு சேர்ந்து திருப்பணி ஆரம்பித்து இருக்கவேண்டும். அல்லது சிவாச்சாரியார்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும், ஐம்பது ஆண்டுகள் முன் திருநாவலூரிலேயே ஐந்து ஆண்டுகளாக இரவுபகலாக தங்கி திருப்பணி தலைவராக திருப்பணி செய்தருளிய ஸ்ரீலஸ்ரீ கூனம்பட்டி ஆதினம் ஸ்வாமிகளுக்காவது பழைய மடம் இடிப்பது சார்ந்த தகவல் தெரிவித்து, புதிய திருப்பணி செய்வது சார்ந்து சுவாமிகள் வழிகாட்டுதலோடு செய்திருந்தால் அதில் ஒரு நியாயம், நேர்மை இருக்கும். ஏனெனில், நம் பாரம்பர்யத்தில் பாட்டன்காலத்தில் கோயிலுக்கு ஒரு திருப்பணி உதவி செய்திருப்பார்.சன்றோர்கள் அந்த நன்றியை மறக்காமல் பேரனை கூப்பிட்டு அந்த திருப்பணி சார்ந்து ஆலோசிப்பார்கள்.இது தர்மம். அப்படி, குறைந்தபட்சம் கூனம்பட்டி ஆதினம் அவர்களையாவது மடம் இடிப்பது மற்றும் திருப்பணி சார்ந்து ஆலோசித்திருக்கலாம். ஏனெனில் ஸ்ரீ கூனம்பட்டி ஆதின சுவாமிகள், திருநாவலூரிலேயே தங்கி திருப்பணி செய்தார்கள் என்பதை அவ்வூர் வாசி ஒருவரே கூறியுள்ளதாக நண்பர் ஒருவர் பதிவு செய்துள்ளதும் காண்க (பார்க்க படம் 2)
ஆனால் சுந்தரர் மடம் முன்பு திருப்பணி செய்து, கட்டிக்காத்தவர்களாகிய எவரையும் ஆலோசனை செய்யாமல், தான்தோன்றித்தனமாக மடம் இடிக்கப்பட்டு புதிய மடம் திருப்பணியானது 23-01 -2013 அன்று நடைபெற உள்ளதாக பத்திரிக்கை அடித்து விநியோகம் செய்யப்பட்டது. (பார்க்க படம் -1) கடந்த 2010 ஆம் ஆண்டு திருப்பணி செய்வதாக அடிக்கப்பட்ட பத்திரிக்கையிலாவது, ஆதிசைவப்பெரியோர்கள் என்ற வார்த்தை சம்பிரதாயத்திற்க்கு சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் இப்பொழுது 2013 ல் திருப்பணி செய்ய உள்ளதாக அடிக்கப்பட்டுள்ள பத்திரிக்கையில் ஆதிசைவர்கள், சிவாச்சாரியார்கள் என்ற வார்த்தையே கிடையாது.
பத்திரிக்கை வாசகமே சிவாச்சாரியார்களை ஒதுக்கிவிட்டு செய்கிறோம் என்பதை குறிப்பால் உணர்த்தியது. சரி, இந்த தம்பிரான் தோழர் அறக்கட்டளை நிர்வாகிகள் யார் என்றால், ஒரு காலத்தில், பெரியகோயில் வழிபாடு வந்தவர்கள், பக்கத்தில் உள்ள மடத்திற்க்கு வந்து தரிசனம் செய்து, திருமடம் குருக்களிடம் நயமாக பேசி, மாதா மாதம் சுவாதி கட்டளை செய்கிறோம் என்று பணிவாக பேசி,ஆரம்பித்து காலப்போக்கில் மடத்தின் ஆதரவற்ற நிலையை அறிந்து திருப்பணி என்ற பெயரில், எந்த குருக்கள் மாத சுவாதி செய்ய ஆதரவு அளித்தாரோ, அதே குருக்கள் சமூகத்தை எதிர்த்து உள்ளே நுழைந்தவர்கள்.
அதாவது ஒட்டகத்தை கொட்டகையில் விட்ட கதை என்றபடிக்கு ஆனது. அக்கதை, பாலைவனமாகிய அரேபியாவில் பகலில் கடும் உஷ்ணமும், இரவில் அதீத குளிரும் வாட்டும். ஒட்டகத்தின் மீது தங்கள் வழித் துணைக்கு தேவையான பொருட்களை சுமையாக ஏற்றிக் கொண்டு பயணப்படுவது அரேபியர்களின் பழக்கம். அதில் முக்கியமானதாக இருப்பது கூடாரம் அமைக்கும் கொட்டகை பொருட்கள். அரேபிய ஷேக் வியாபாரி அவ்விதம் பயணப்பட்டு இரவில் ஓய்வெடுக்க கொட்டகை அமைத்து உறங்குகிறான். கடும் குளிரில் அவன் பாதம் வைத்திருந்த இடத்தில் மட்டும் சிறிது சூடு பரவுவதை உணர்கிறான். என்னவென்று பார்த்ததில் ,அது அவனது ஒட்டகம் விடும் மூச்சுக் காற்று என்று தெரிகிறது. சரி, உடலுக்கு இதமாக இருக்கிறதே என்று நினைத்து… கொட்டகைக்குள் தனது கால்களை கொஞ்சம் மடக்கிக் கொண்டு ,ஒட்டகம் தன் மூக்கை நுழைக்கும் அளவுக்கு இடம் ஏற்படுத்தி தருகிறான்.
முதலில் மூக்கை நுழைத்த ஒட்டகம், கொட்டகைக்குள் இருக்கும் சௌகர்யம் பிடித்துப் போக… சிறிதுசிறிதாக முகம், கழுத்து, முன்னங்கால், முதுகு பின்னங்கால் என்று அனைத்தையும் கொட்டகைக்குள் நுழைத்து விட…
தான் தன்னுடைய அற்ப சுகத்துக்காக(ஒட்டகையின் மூச்சு வெப்பம்) நிரந்தர சுகமாகிய தூக்கத்தை இழந்து…கொட்டகைக்கு வெளியே கடும் குளிரில் தன் துப்பட்டாவை போர்த்திக் கொண்டு இரவு முழுவதும் மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தான்…வியாபாரி… அதே கதையாக மடம் அமைப்பதற்கான நிறைவுப் பணியில் ஏற்பட்ட தொய்வையும், பணமுடையையும் போக்க வந்த சைவ வேடதாரிகளின் திரவிய உதவியாகிய அற்ப சுகத்திற்கு ஆசைப்பட்டு…அரும்பாடுபட்டு அமைத்த சுந்தரர் திருமடமாகிய கோவிலை (நிரந்தர நிர்வாகத்தை) அவர்களின் ஆக்ரமிப்பில் விட்டுவிட்டு…ஆதிசைவர்கள் இன்று கொட்டகைக்கு வெளியே காத்திருக்கிறோம்… எப்போது விடியும் என்று!?
இப்படி, திருமடம் குருக்கள் செய்த பெரும் தவறு குற்றம் இது. எந்த உபயமாக இருந்தாலும் கோயிலில் செய்துக்கொள்ளுங்கள்.மடத்தை வந்து தரிசியுங்கள், தேவாரம் ஓதுங்கள், விபூதி பிரசாதம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று தெளிவாக கூறியிருந்தால் இந்த பிரச்சனையே ஏற்பட்டிருக்காது. இவற்றையெல்லாம் தமிழகத்தில் உள்ள மற்ற சிவாச்சாரியார்கள் அனுபவப் பாடமாக உணர்ந்துகொள்ளவேண்டும்.
இவ்வாறு 23-01-2013 அன்று அறநிலையத்துறை அனுமதியோடு திருப்பணி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது .
படங்கள்:
https://facebook.com/story.php?story_fbid=2004300016550226&id=100009107423631
(12)
பழைய மடம் இடித்து பூமிபூஜை போடுவதாக 2013ல் ஜனவரியில் அறிவித்த அக்காலகட்டத்திலேயே அடியேன் இவ்விசயத்தில் சம்பந்தப்படுகின்றேன்.
சிறுவயதில் எனது தந்தையோடு பலமுறை சுந்தரர் மடம் விழாவிற்கு வந்துள்ளேன். அதேபோல் பெரியகோயில் கும்பாபிஷேகத்திற்கும் வந்துள்ளேன்.அதேபோல் கடந்த காலங்களில் உறவினர்களோடு சிறுவயதில் வரும்பொழுது, சுந்தரர் பூஜைக்கான மாலைகள், புஷ்பங்கள், அபிஷேக பொருட்களை கெடிலம் கூட்ரோடில் இருந்து தலையில் சுமந்தபடி திருநாவலூருக்கு நடந்தே வருவார்கள்.அப்பொழுது உறவினர்களோடு விளையாட்டு பிள்ளையாக வந்து வழிபாடு செய்துள்ளேன். மற்றப்படி 2013 ஆம் ஆண்டுவரை சுந்தரர் மடம் சார்ந்து அ, ஆ க்கூட அடியேனுக்கு தெரியாது. ஆனால் பழையமடம் இடிக்கப்பட்டு புதிய மடம் சிவாச்சாரியார்களை புறக்கணித்து நடைபெறுகின்றது என்பதை அறிந்து உள்ளூர் குருக்களை தொடர்பு கொண்டு கேட்டபொழுது, இது சார்ந்து எதுவும் எங்களை கேட்காதீர்கள். இது சம்பந்தமாக எங்கள் வீட்டு படியும் ஏறாதீர்கள் என்று உரைத்துவிட்டார்கள். சரி திருமடம் சார்ந்த விபர ஆவணங்களையாவது காண்பியுங்கள் என்று கேட்தற்க்கு, எங்களிடம் எதுவும் இல்லை. எங்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறிவிட்டார்கள் (அந்நிலையில் மடம் சார்ந்த விசயம் எதுவும் தெரியாது .பின்னாளில் அடியேன் பல மாதங்கள் செலவு செய்து தகவல் பெறும் சட்டம் மூலம் சில மடம் சார்ந்த சில ஆவணங்களை பெற்றேன்)
உள்ளூர் குருக்கள் இவ்வாறு முகத்தில் அடித்ததுபோல் கூறிவிட்டதால், நேராக திருநாவலூர் உள்ளூர் முக்கியஸ்தர்களை சந்தித்து பேசினேன்.அவர்கள் அந்நேரத்தில் மிகவும் மரியாதையாகவே பேசினார்கள். குறை ஒன்றும் சொல்வதற்க்கில்லை. ஆனால் உள்ளூர் குருக்கள் மீது குற்றம் கூறினார்கள். அடியேன் அவர்களிடம் உரைத்தது – உள்ளூர் குருக்கள் மீது குற்றம் உள்ளது என்பதற்க்காக ஒட்டுமொத்த தமிழக சிவாச்சாரியார்களை புறக்கணிப்பது தகுமா? கடந்த காலத்தில் மடத்திற்க்கு தொண்டு செய்த சிவாச்சாரியார்கள் தியாகத்தை தாங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். சைவசமயம் சார்ந்த ஓர் இடத்தில் தவறுகள் நிகழ்ந்தால் மீண்டும் அதனை வேத ஆகம முறைப்படியே நெறிப்படுத்தவேண்டும்.
மனுநீதிச்சோழன் திருவாரூர் கோயிலுக்கு தேவையானவை என்ன என்று ஆராய்ந்து வேண்டியவற்றையும், விலக்கனவற்றையும் ஆகமங்கள் கூறியபடி செய்தார் என்பதை,
“பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்தான்
துங்கஆகமம் சொன்ன முறைமையால் .
என்று தமிழ்வேதமாகிய பெரியபுராணத்தில் சேக்கிழார் பாடிஅருள்கின்றார்.
நமிநந்தியடிகள்நாயனார் திருவாரூரில் சமணர்கள் ஏற்பட்ட இடையூறுகளை நீக்கி மீண்டும் வேத ஆகம நெறிப்படி பூஜைகள் விளங்க சோழமன்னனிடம் கோரிக்கை வைக்கின்றார். மன்னனும் அவ்வாறே இடையூறுகளை சரிசெய்து வேதஆகமவிதி விளங்க நிபந்தம் பூஜைகள் செய்ய வழிவகுக்கின்றான். இதனை பெரியபுராணத்தில் சேக்கிழார் ,
“நாதமறைதேர் நமி நந்தியடிகளார் நற்றொண்டாகப்
பூதநாதர் புற்றிடம் கொள் புனிதர்க்கு அமுதுபடி முதலாம்
நீதிவளவன்தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரியணையின்
மீது திகழ இருந்தமைத்தான் வேதாகம நூல் விதிவிளங்க ”
என்று பாடியுள்ளார்.
எனவே வேத ஆகம விதிப்படியே திருநாவலூர் வாழ் மக்களாகிய தாங்கள் செயல்படவேண்டும்.காரணம் வாய்மைக் குன்றா திருநாவலூர் என பெரியபுராணம் கூறுவதால், ஊர் பெரியவர்கள் வாய்மையோடு எனது கோரிக்கையை பரிசீலனை செய்யவேண்டும் என்றேன். இருப்பினும் ஒற்றை ஆளாகச் சென்று பேசியதால், அவர்கள் அதனை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.அது தவறும் இல்லை. ஆனால் ஒருவர் மட்டும் இப்பொழுதே சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பாக இருபத்தி ஐந்து லட்சம் பேங்கில் போடுங்கள் .திருப்பணி சிவாச்சாரியார்கள் செய்யலாம். மற்றப்படி பழங்கதை வேண்டாம் என்று கூறிவிட்டார். என் தகுதிக்கு அந்நிலையில் இயலாத காரியம் .எனவே அடியேன் திரும்பிவந்து விட்டேன்.
பொதுவாக திருநாவலூரில் ஆதிசைவர்கள், சிவாச்சாரியார்கள் சார்ந்த விழிப்புணர்வு ஏதும் தெரியவில்லை என்றே எனக்கு தோன்றியது .எல்லோருமே ஐயர் அவ்வளவே தெரிவதாக உணர்ந்தேன்.ஆகமம், ஆதிசைவர் என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை என தோன்றியது. எனவே, சிவாச்சாரியார்கள் பற்றிய வரலாறை சுருக்கமாகவும், சிவாச்சாரியார்களுக்கும் சுந்தரர் மடத்திற்க்கும் உள்ள தொடர்பை விளக்கமாக எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, அதனை நான்கு பக்க நோட்டீசாக, திருநாவலூர் பொதுமக்களிடம் மன்றாடி கேட்கும் வகையில், தமிழகஅரசுக்கும், திருநாவலூர்வாழ்பொதுமக்களுக்கும், சைவசமயஅன்பர்களுக்கும் ஒர் அன்பான வேண்டுகோள் என்ற தலைப்பில் பிரசுரமானது, நானும் என்னோடு ஒரு சிவஅன்பர் என இருவர் மட்டும் திருநாவலூரில் உள்ள வீடு வீடாக சென்று பிரசுரம் வழங்கி கோரிக்கை வைத்தோம். ஆனால், சிவாச்சாரியார்கள் பங்கேற்பு இன்றி குறிப்பிட்டநாளில் பூமிபூஜை நடைபெற்றது.
அடியேன் வீடு வீடாக சென்று சிவாச்சாரியார்கள் சார்பாக வைத்த கோரிக்கை மறுநாள் தினமலரில் திடிர்பரப்பரப்பு என்ற தலைப்பில் செய்தியாக வந்தது. சிவாச்சாரியார்களை ஒதுக்கி பூமிபூஜை நடந்ததால், ஒரு பத்து தினங்கள் கழித்து, மீண்டும் திருநாவலூர் வாழ் பொதுமக்களுக்கு இருகரம் கூப்பி பணிவான வேண்டுகோள் என்ற தலைப்பில், திருநாவலூருக்கும் ஆதிசைவர்களுக்கும் உள்ள பந்தத்தை விளக்கி இரண்டு பக்க பிரசுரம் ஒன்று வீடுவீடாக மீண்டும் அடியேனும் எனது சிவநண்பரும் வழங்கினோம்.
தொடர்புடைய படங்கள்:
https://facebook.com/story.php?story_fbid=2004479509865610&id=100009107423631
(13)
திருநாவலூர் சுந்தரர் மடம் அறநிலையத்துறை ஆவணங்களின்படி ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயிலின் கிளை கோயிலே. எனவேதான் 2013 ஆம் ஆண்டு விழுப்புரம் இணை ஆணையர் புது மண்டபம் கட்டுதல் என்றபடிக்கே உபயதிருப்பணி அனுமதி கொடுத்துள்ளார். இந்த உபயதிருப்பணிக்கு அறநிலையத்துறை 6 நிபந்தனைகளை கொடுத்துள்ளது.
அதில் முக்கியமாக இரண்டாவது நிபந்தனை ஆகமவிதிப்படி செயல்படவேண்டும் என்பது. ஆனால் இன்று அத்தனை நிபந்தனைகளும் ஆள்பலம் அரசியல் பலத்தால் மீறப்பட்டிருக்கின்றது. முதல் நிபந்தனையாகிய
முன்னுரிமைகோரக்கூடாது என்பதற்கு மாறாக மடம் ஆக்கிரமிக்கப்படும் நிலையில் உள்ளது. அனுமதி கொடுத்து இந்த முத்தநாதர்களை (மெய்ப்பொருள் நாயனார் புராணத்தில் அவரைக் கொல்ல சிவனடியாராக வேடமிட்டு வரும் விரோதி) உள்ளே அனுமதித்ததே அறமற்றதுறை. இன்று அவர்கள் தந்த நிபந்தனைகள் அனைத்தும் மீறப்பட்டு வருகிறது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அறமற்றதுறை.
படம்:
https://www.facebook.com/story.php?story_fbid=2082112152102345&id=100009107423631
இவ்வாறு, சைவவேடதாரிகள், ஆணவப்போக்கோடு, சுந்தரர் மடம் நிலைப்பெற கடந்த நூறு ஆண்டுகளில் காரணமாக இருந்த சிவாச்சாரியார்களை மிரட்டி ஒதுக்கியும், பாரம்பர்ய சைவ ஆதினங்களின் வழிகாட்டுதல் இல்லாமலும் தான்தோன்றித் தனமான திருப்பணியும் குடமுழுக்கும் செய்து விட்டிருக்கிறார்கள். இந்த சைவவேடதாரிகளின் இன்றைய செயல்பாடு சரிதானா? சைவதர்மமா? என்பதை சைவசமயத்தார்கள் சீர்தூக்கி சிந்திக்கவேண்டும். சிவாச்சாரியர்களுக்கு நீதி கிடைக்கவும், சைவ மரபு பாதுகாக்கப் படவும் முன்னின்று குரல்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சிவார்ப்பணம்.
(முற்றும்)
ஸ்ரீநாராயணகுரு போதித்த வண்ணம் வழிபாடுகள் எளிமையாக்கப்பட வேண்டும். எனக்கு தெரிந்த அரிசன நண்பர்கள் ஊரில் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். ஊா் அம்மன் கோவில் மராமத்து செய்து பணிகள் முடிவடையாமல் இருந்தது. விசாரித்தேன்.கும்பாபிஷேகம் செய்ய 4 லட்சம் ஆகும் என்கிறார்கள் என்றாா் தர்மகரத்தா. ஒரு சிலையை மட்டும் வைத்து விட்டு பிற சன்னதிகைளை உடைத்து விடுங்கள்.ஸ்ரீநாராயணகுரு வழிகாட்டிபடி நீங்களே மந்திரம் ஜெபித்து புஜை செய்யுங்கள்.போதுமானது.ஐயா் தேவையிலலை என்று சொன்னேன். நம்ப கஷடப்பட்டாா்கள். மிகவும் ஏழைகளாக அந்த மக்கள் 4 லட்ச ரூபாய்க்கு எங்கே போவார்கள். அருணாச்சலபுரம் செட்டியாபத்து கிராமம் திருச்செந்துா்வட்டம் தூத்துக்குடி மாவட்டம்.
கடைநிலையில் இருக்கும் இந்துக்களுக்கு எந்த திட்டத்தையும் இந்து இயக்கங்கள் வைத்திருக்கவில்லை.மிகவும் வருந்தத்தக்க நிலை இதுதான். இந்து சமூகத்தில் வளா்ச்சி கருத்து தெளிவை திக காரன் கிறிஸ்தவன்உருவாக்கினால் மக்கள் அவனை நன்றியுடனே அணுகுவார்கள். இதுவரை நடந்தது அதுதான். இன்றளவும் பாமர மக்களுக்கு இந்து இயக்கங்கள் எநத திட்டதிதையும் முன்வைக்கவில்லை.
Birlas Hindustan charity. Is renovating SC colony temples. Through RSS you can approach them
இந்த கட்டுரை ஒரு சார்புடன் எழுதப்பட்டுள்ளது.
1. பவானி திருக்கூட்டத்தின் மீது காழ்ப்புனருடன் எழுதப்பட்ட கட்டுரை. அவர்களை வழிபாட்டு முறையை குறித்த கருத்து வேறுபாடு பலருக்கும் உண்டு. அதை பல இடங்களில் விவாதிக்கபட்டுள்ளது. https://www.shaivam.org/articles/thelivukkaaka
அவர்களின் சைவ பக்தி நெறியை யாரும் குறை கூற முடியாது.
2. நான் அறிந்தவரை பவானி திருக்கூட்டத்தின் முதன்மையானவர் சிவ திரு தியாகராஜன் அவர்கள் பல இடங்களில் சென்று திருமுறைகள் மற்றும் சைவசித்தாந்தம் பற்றி சொற்பொழிவுகள் செய்துள்ளார்கள்.
அதன் மூலம் நன்கொடைகள் பெற்று இந்த திருப்பணி செய்து உள்ளார்கள்.
https://www.youtube.com/watch?v=BpkyciQeP8w&list=PLedGwlCwL9_JlFbg2nwjQdsXcUMKU-tmT
3. நான் அறிந்தவரை அவர்கள் இந்த திருப்பணியை முழுமையாக செய்து வைத்தார்கள். அதை தவிற வேறுஎதுவும் செய்யவில்லை. திருமடத்தை அபகரித்து கொண்டார்கள் என கூறுவது மிகவும் தவறு. இன்றுவரை அந்த திருமடமும் அதன் இடமும் முன் வைத்தியவர்களிடம் தான் உள்ளது. யாரும் அபகரித்துக்கொள்ளவில்லை .
சமய குறவர்கள் நால்வரில் சுந்தரர் பெருமானுக்கு மட்டும் தனி திருக்கோவில் இல்லாததை அவர்கள் பூர்த்தி செய்துஉள்ளார்கள். அவர்கள் நோக்கத்தை கொச்சை படுத்தக்கூடாது.
4. ஆதிசைவ அந்தணர்கள் சேர்ந்து ஒரு சிறப்பு யாகமும் வாழிபாடும் நடத்தலாமே? யார் அதை தடுப்பார்கள்?
திருமுறையும் நான்கு வேதங்களும் ஒலிக்கட்டும் .
நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்
கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே. (7.55)
மறைகள் ஆயின நான்கும்
மற்றுள பொருள்களு மெல்லாந்
துறையுந் தோத்திரத் திறையுந்
தொன்மையும் நன்மையு மாய
அறையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே. (7.75)
சோமசுந்தரம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இந்தக்களுக்கும் சிவபராணம் ஒத வீடுகளில் பாராயணம் செய்யும் பழக்கத்தை உண்டாக்க வேண்டும். அதுதான் முதல் பணி.