யானைக்கும் அடிசறுக்கும்: 2018 மாநில தேர்தல் முடிவுகள்

யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற பழமொழி உண்டு. அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில (ம.பி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிஸோரம்) சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் பாஜக அடைந்திருக்கும் தோல்விக்கு பொருத்தமான உதாரணம் இந்தப் பழமொழியாகத் தான் இருக்க முடியும்.

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தில்லி, பிகார் மாநிலத் தேர்தல்கள் தவிர்த்து, அனைத்து சட்டசபை தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் பாஜக தொடர்ந்து வாகை சூடி வந்திருக்கிறது. ஆயினும் தில்லியில் அரவிந்த் கேஜ்ரிவாலும், பிகாரில் நிதிஷ்- லாலு கூட்டணியும் பாஜகவின் வெற்றிப் பயணத்துத் தடையாக இருந்துள்ளதை மறக்க முடியாது. என்றபோதும், வெல்ல முடியாத கட்சி பாஜக என்பது போன்ற ஒரு தோற்றம் உருவாகி இருந்தது. பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இயங்கி பாரத அரசியல் வரைபடத்தின் வண்ணத்தையே மாற்றிக் காட்டினார்கள்.

லாலுவின் தொந்தரவு தாள முடியாமல் நிதிஷ் நிலைமை உணர்ந்து பாஜகவுடன் பழையபடி நட்புக்கரம் நீட்டினார். கோவா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் அரசியல் சாதுரியத்தால் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை பாஜக தடுத்தது. இவ்வாறான செயல்பாடுகளால் நாட்டின் 80 சதவீத மாநிலங்களில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆளும் நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு கூட்டணியிலிருந்து சந்தர்ப்பவாதியான தெலுங்குதேசம் விலகியபோது, இந்த வெற்றிப் பயணத்துக்கு முதல் அடி விழுந்தது. அதையடுத்து உ.பி, கர்நாடக மக்களவை இடைத் தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியது. இப்போது மூன்றாவது அடியாக, ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாஜக தோல்வியை ருசித்திருக்கிறது.

தோல்வி காணாத கட்சி என்று எந்தக் கட்சியும் எக்காலத்திலும் இருந்ததில்லை. உண்மையில் இந்தத் தோல்வி பாஜகவை உள்முகமாக மறுஆய்வு செய்வதற்கான வாய்ப்பாகவே அமைந்திருக்கிறது. ஏனெனில், இத்தோல்வி பாஜகவின் அரசியல் எதிரியான காங்கிரஸ் அடைந்தது போன்ற அவமானகரமான தோல்வி அல்ல. மிகவும் போராடி, நூலிழையில் பாஜக பறிகொடுத்த வெற்றியைத் தான் காங்கிரஸ் சொந்தம் கொண்டாடுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் உள்கட்சி அதிருப்தியாளர்களை சரிக்கட்டி இருந்தாலே, பாஜக ஆட்சி அமைத்திருக்கும், கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் பாஜகவின் வெற்றிவாய்ப்பை மிக குறைந்த வித்தியாசத்தில் பாஜக பறிகொடுத்திருக்கிறது. இங்கெல்லாம் பாஜகவின் அதிருப்தி வேட்பாளர்கள் வாங்கியிருக்கும் வாக்குகள் பல்லாயிரக் கணக்கில் இருக்கின்றன. கட்சி வேட்பாளர் தேர்வில் கொடுக்கப்பட்ட அதீத கவனம், அதிருப்தி வேட்பாளர்கள் பெருகக் காரணமாகி இருக்கிறது. ராஜஸ்தானில் இரு அதிருப்தி வேட்பாளர்கள் சுயேச்சையாகவே வென்றும் இருக்கிறார்கள்!

தவிர, பாஜக அரசுகள் 15 ஆண்டுகாலமாக ஆளும் சத்தீஸ்கர், ம.பி. மாநிலங்களில் ஆட்சிக்கு எதிரான மனநிலை நிலவி இருக்கிறது. முதல்வர்களாக இருந்த சிவராஜ் சிங் சௌஹானும் ரமண் சிங்கும் மக்கலீடம் நல்ல பெயர் பெற்றவர்கள்; ஊழல் கறையும் கிடையாது. என்றாலும், ஆட்சி நிர்வாகம் குறைகள் அற்றது அல்லவே? ம.பி.யில், மாண்ட்சோரில் விவசாயிகள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது, பாஜக அரசுக்கு பெரும் சிக்கலை உருவாக்க்கியது. விவசாயிகளின் அதிருப்தி பெருகவே கிராமப் பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு அவர்கள் ஆதரவாகத் திரும்பினர். போதாக்குறைக்கு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக, நிறைவேற்ற இயலாத வாக்குறுதியை அள்ளி வீசியது காங்கிரஸ். பொறுப்புள்ள கட்சியான பாஜக அவ்வாறு செயல்பட முடியவில்லை.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் விவகாரம் பெரும் அதிருப்தியை உருவாக்கி இருந்தது. இங்கும் விவசாயிகளின் அதிருப்தி பெருகி இருந்தது. விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததால் அவர்கள் தெருவில் இறங்கிப் போராடும் காட்சிகளை பெருமளவில் காண முடிந்தது. விவசாயிகளின் அதிருப்திக் குரலுக்கு மத்திய அரசு உடனடியாக செவிசாய்க்க வேண்டும் என்பதே இந்தத் தேர்தல் முடிவுகள் விடுக்கும் எச்சரிக்கை என்றே சொல்லலாம்.

ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல்களில் ஒவ்வொரு முறையும் ஆட்சியை மாற்றுவது அம்மாநில மக்களின் வழக்கம். அந்த வகையில் காங்கிரஸுக்கு சாதகமான நிலை அங்கு காணப்பட்டது. தவிர, இட ஒதுக்கீட்டுக்காக ஜாட் இன மக்கள் நடத்திய போராட்டமும் அதை மாநில அரசு ஒடுக்கியதும், வசுந்தரா ராஜே அரசுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைத்தது. பாஜகவில் இருந்து விலகிய ஜாட் தலைவரான ஹனுமான் பேனிவால் துவங்கிய ராஷ்ட்ரீய லோக்தந்த்ரிக் கட்சி காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது. இதன் விளைவாக ஜாட் ஆதிக்கம் மிகுந்த 40 தொகுதிகளில் 30 தொகுதிகளை காங்கிரஸ் வென்றுள்ளது.

இவ்வாறு கள நிலவரம் மிகவும் மோசமாக இருந்தபோதும், பாஜக கடைசி வரை கடுமையாகப் போராடி தோல்வி விகிதத்தைக் குறைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரின் சூறாவளிப் பிரசாரமும், வாக்குச்சாவடி மட்டத்திலான தீவிரமான களப்பணியும், நேர்த்தியான தேர்தல் செயல்பாடுகளும் இல்லாமல் இருந்திருந்தால், பாஜக மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கும்.

மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தி நிலவுகையில், மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றிக்கான வாய்ப்புகள் குறைவே. ஆயினும், உள்ளூர் அதிருப்தி நிலவரத்தை பாஜகவின் தேர்தல் பணிகள் பல இடங்களில் மாற்றிக் காட்டியுள்ளன. ம.பி, ராஜஸ்தான் மாநிலங்களில் சுமார் ஐம்பது தொகுதிகள் மிகக் குறைந்த வாக்குகள் வித்யாசத்தில் பாஜகவிடமிருந்து கைநழுவி உள்ளன. அவை பாஜக வசமாகி இருந்திருந்தால் காட்சியே மாறி இருக்கும். உண்மையில் பெரும் தோல்வி ஒன்று தடுக்கப்பட்டதையே இம்முடிவுகள் காட்டுகின்றன.

தெலுங்கானாவிலும் மிஸோமிலும் பாஜக வலுவான கட்சியாக இல்லை. என்றபோதும் மிசோரமில் முதல்முறையாக ஒரு இடத்தில் வென்று பாஜக தனது கணக்கை அங்கும் துவக்கி இருக்கிறது. தவிர, அங்கு பாஜகவின் தோழமைக் கட்சியான மிஸோ தேசிய முன்னணி வென்று ஆட்சி அமைக்க உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆண்ட கடைசி மாநிலம் இது.

தெலுங்கானாவில் காங்கிரஸ்- தெலுங்குதேசம் கூட்டணியைத் தோற்கடிப்பதற்காக சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியை பாஜக அனுதாபிகள் பலர் ஆதரித்துள்ளனர். அங்கு அக்கட்சி வென்றிருப்பது காங்கிரஸ்- தெலுங்குதேசம் கூட்டணிக்கு பெருத்த அடியாகும். ஆனால் எந்த ஊடகமும் இதுபற்றி விவாதித்ததாகத் தெரியவில்லை. இங்கும் பாஜக 4 தொகுதிகளை இழந்துள்ளது. இங்கு முஸ்லிம் அடிப்படைவாதக் கட்சியான ஒவைசியின் கட்சி 7 இடங்களில் வென்றிருப்பதும் அபாய அறிகுறி! இக்கட்சி டி.ஆர்.எஸ். உடன் மரைமுகக் கூட்டணி அமைத்திருந்தது.

எது எப்படியாயினும், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றாலும் தோல்வி தோல்வியே. ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில் பெருவாரியானோர் இருந்தபோதும் லட்சக் கணக்கானோர் காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாமல் நோட்டாவுக்கு வாக்களித்திருப்பதை இம்மாநிலங்களில் காண முடிந்தது. இந்த நோட்டா வாக்காளர்களின் மனநிலையை மாநில அரசு உணர்ந்திருந்தால் சில இடங்களிலேனும் முடிவுகள் மாறி இருக்கும். இவை அனைத்தையும் விட, “காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற இலக்குடன் பயணித்த மோடி- ஷா கூட்டணிக்கு இத்தேர்தல் முடிவுகள் ஏமாற்றமே!

இருப்பினும் காங்கிரஸ் புத்துணர்வு பெறுவது, எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் சேர்க்க உதவக்கூடும். அத்தகைய நிலை ஏற்பட்டால், கட்சிகளிடையிலான சுயநலக் கூட்டணியை விளக்கி நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பிரசாரம் செய்வது எளிதாக இருக்கும். உதாரணமாக, தலித் என்பதாலேயே மாயாவதியை ஆதரிப்பவர், மாயாவதி- காங்கிரஸ் கூட்டணியை விரும்பாது போக வாய்ப்புகள் உண்டு. இடதுசாரிகள் கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் காங்கிரஸை எதிர்த்துக்கொண்டே தேசிய அளவில் அக்கட்சியுடன் இணக்கம் காட்டினால், அவர்களின் சந்தப்பர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்த முடியும்.

இறுதியாக, இந்தத் தேர்தல் முடிவுகள் 2019-இல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இன்றைய நிலையில் பாஜகவின் எதிரிகள் வலுப்பெற இம்முடிவுகள் உதவி இருக்கின்றன என்பது உண்மையே. ஆனால், மாநில சட்டசபைகளுக்கு வாக்களிக்கும் மனநிலை வேறு; தேசிய அளவில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் மனநிலை வேறு என்பதை இதுவரை நமது வாக்காளர்கள் அறிவுப்பூர்வமாக பல முறை நிரூபித்திருக்கின்றனர். தவிர, இன்னும் 4 மாதங்களில் எத்தகைய திருப்பங்கள் நிகழும் என யாராலும் யூகிக்க முடியாது.

மத்திய அரசின் கடந்த 4.5 ஆண்டுகால ஆட்சி மீதான அதிருப்திக்கும் இந்தத் தோல்வியில் பெரும் பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. பாஜக முதல்வர்கள்  இந்தத் தோல்விக்கு தார்மிகரீதியாகப் பொறுப்பேற்கலாம். இத்தேர்தல் முடிவு மத்திய அரசு மீதான அதிருப்தியின் பிரதிபலிப்பல்ல என்று ராஜ்நாத் சிங் கூறலாம். ஆனால், சத்தீஸ்கர் தோல்விக்கு மத்திய அரசு மீதான அதிருப்தியும் ஒரு காரணமே. ராகுல் காந்தியின் பிரசாரத்தில் மத்திய அரசின் திட்டங்களைத் தாக்கியே பேசினார் என்பதை நாம் பார்த்தோம். குறிப்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு- சேவை வரி விதிப்பு ஆகிய இரண்டும் ஊரகப் பகுதி- நகர்ப் பகுதி இரண்டிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. அவை அற்புதமான பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் என்பதை மக்கள் அறிய இன்னும் காலம் தேவைப்படுகிறது. குறிப்பாக, வேலைவாய்ப்பில் வீழ்ச்சி, பொருளாதார முடக்கம் ஆகியவை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. எனவே, மத்திய அரசு சுதாரித்துக் கொள்ள வேண்டிய காலமும் இதுவே.

இப்போதைக்கு 5 மாநிலங்களில் 679 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 295 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் முதலிடம் பிடித்திருக்கிறது. 199 தொகுதிகளில் வென்று பாஜக இரண்டாமிடம் பிடித்திருக்கிறது. 2013 தேர்தல்களில் பாஜக இம்மாநிலங்களில் 382 தொகுதிகளில் வென்றிருந்தது. அத்தகைய வெற்றியை காங்கிரஸ் இம்முறை பெறவில்லை என்பது நிதர்சனம். அதேபோல பாஜகவின் செல்வாக்குச் சரிவும் இதில் வெளிப்படுகிறது. வரும் நாட்களில் பாஜக தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது.

யானைக்கும் அடி சறுக்கும் என்பதை பாஜக ஆதரவாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணமும் இதுவே. வெற்றி மமதை வலியோரையும் பலவீனப்படுத்திவிடும். தவிர கொள்கையோ,  கோட்பாடோ இல்லாத பலரும் வெற்றி பெறும் கட்சியில் சங்கமிக்கத் துடிப்பர். அதுவே, உண்மையான தொண்டர்களை அப்புறப்படுத்திவிடும். அத்தகைய சூழல் பாஜகவுக்குள்ளும் வந்திருப்பது அப்பட்டமாகவே தென்படுகிறது. இந்த நோயைக் குனப்படுத்துவது, கட்சி நிர்வாகிகளின் உடனடிக் கடமை.

இந்த பின்னடைவைப் பயன்படுத்தி, வரும் நாட்களில் கட்சியின் இலக்கு நோக்கிய வெற்றிப் பயணத்தை பாஜக கட்டமைக்க வேண்டும் என்பதே, தேசநலன் விரும்புவோரின் எதிர்பார்ப்பு.

 

2 Replies to “யானைக்கும் அடிசறுக்கும்: 2018 மாநில தேர்தல் முடிவுகள்”

  1. Good write-up. Farmers needs more support from the Government.Writing off Loan is not always Good.

  2. The defeat is due to overconfidence and hubris.Unless the BJP pays more attention to immediate pressing economic issues faced by the people and deploys highly articulate and aggressively proactive spokesperson it will not convince the voters.Indian voters always believe a bird in hand is worth two in the bush.Rafale deal was handled in a lack luster and unconvincing manner helping Rahul to sell the idea thattherewas more than meets the eye.Why Ambanis take cudgels on behalf of the govt. and silence him?Modi has to realize he alone cannot cover the whole of the country and ensure local leaders also play their role and especially in the south which will not be amenable to re issues of economic policies only as it is suffering from caste and anti religious viruses.Thiruvengadam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *