கொலைகாரக் கிறிஸ்தவம் – 3

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

தொடர்ச்சி..

Image result for christian attack on jews in portugal

நயவஞ்சகக் கிறிஸ்தவப் பாதிரியான டார்க்குமெடாவின் தலைமையில் புதிதாக மதம்மாறிய 8,800 கிறிஸ்தவர்கள் கட்டைகளில் கட்டிவைக்கப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள்.  ஸ்பானிய இன்குசிஷன் விசாரணையின் காரணமாக 96,504 பேர்களுக்கு கடுமையான அபராதங்களும் தண்டனைகளும் விதிக்கப்பட்டன.  இந்தத் தகவல்கள் அனைத்தும் 1790-92 ஆண்டுகாலத்தில் ஸ்பானிஷ் இன்குசிஷன்களுக்குப் பொறுப்பாளராக இருந்த, மாட்ரிட் நகரைச் சார்ந்த டான்-குவான் அன்டோனியோ லோராண்ட்டே என்பவரால் அளிக்கப்பட்டவை. இன்குசிஷன் குறித்த அனைத்து ஆவணங்களையும் ஆராயும் உரிமை அவருக்கு இருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

1808-ஆம் வருடம் இன்குசிஷன் நிறுத்தப்பட்ட பிறகு, ஸ்பானிஷ் நகரங்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அதன் தாக்கத்தைக் குறித்து ஆராய்ந்தவர் அண்டோனியோ லோராண்ட்டே. இன்குசிஷன் விசாரனைக் காலத்தில் நடந்த படுகொலைகள் அனைத்தும் முகத்திரையிட்டு மறைக்கப்பட்டிருக்கையில் அதனை விலக்கி உண்மையை அறிந்துகொள்ள முயன்ற ஒரே எழுத்தாளர் அல்லது ஆய்வாளர் அவர் மட்டும்தான். அன்றைக்கு வாழ்ந்த பிற எழுத்தாளர்கள் எவரும் அதனை ஆராயத் துணியவில்லை. ஏனென்றால் ஏசுவின் பெயரால் யூதர்களுக்கும், பேகன்களுக்கும் நடந்த கொடூரங்கள் அத்தனை பயங்கரமானவை.

ஸ்பெயினிலிருந்து நான்கு மாதகால அவகாசத்தில் விரட்டியடிக்கப்பட்ட யூதர்கள் அதன் அருகாமை நாடான போர்ச்சுகலுக்கு வந்து சேர்ந்தார்கள். ஸ்பெயினும் போர்ச்சுகலும் அருகருகே அமைந்த நாடுகள் என்பது ஒருபுறமிருந்தாலும், ஸ்பெயினில் வாழ்ந்த யூதர்களுக்கும் போர்ச்சுகலில் வாழ்ந்த யூதர்களுக்கும் காலம் காலமாக இருந்த தொடர்பும் இன்னொரு முக்கிய காரணம். எனவே ஸ்பெயினிலிருந்து நாடுகடத்தப்பட்ட யூதர்கள் போர்ச்சுகல் அரசரை அணுகி, பிறநாடுகளுக்குத் தாங்கள் செல்லத் தங்களுக்குச் சரியான வசதிகள் ஏற்படும்வரை அங்கு தங்க அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கைவிடுத்தார்கள். அதற்கென ஏராளமான பணமும் போர்ச்சுகல் அரசனுக்குக் கொடுக்கப்பட்டது.

அந்த நேரத்தில் போர்ச்சுகல் ஆப்பிரிக்கப் போர்களில் ஈடுபட்டிருந்ததால் பொருளாதார ரீதியில் சிறிது பின்தங்கியிருந்தது. எனவே யூதர்கள் அளித்த பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குத் தற்காலிகப் புகலிடம் கொடுக்க அனுமதி கொடுக்க போர்ச்சுகல் அரசரான இரண்டாம் டி. ஜொவாவோ (D. Joao II)  இசைகிறார். இதனை விரும்பாத அவரது அரசசபை பிரபுக்களும் அப்போது நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல்கள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இந்த யோசனைக்கு அரைமனதுடன் இசைந்தார்கள். இருப்பினும் அரசசபையில் இருந்த சில கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் அரசரின் இந்த யோசனையை எதிர்த்தார்கள்.

எனவே, அரசர் இந்த யோசனையை உடனடியாகக் கைவிட்டு, யூதர்களை போர்ச்சுகலிலிருந்து விரட்டியடிக்க வேண்டும் அல்லது அப்படியே அவர்களை அனுமதித்தாலும் அவர்களின் குழந்தைகளை கிறிஸ்தவர்களாக ஞானஸ்னானம் செய்விக்க நிபந்தனை விதிக்கவேண்டும் எனவும் கோரினார்கள். எனினும், அரசர் ஜொவாவோ அந்த யோசனையை நிராகரித்தார். யூதர்கள் போர்ச்சுகலில் மூன்று மாத காலம் தங்கிக் கொள்ள அனுமதி அளிப்பதாகவும், அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாகக் கொடுக்க வேண்டும் எனவும், அவர்கள் அந்த நாட்டை விட்டுச்செல்வதற்குத் தேவையான கப்பல்களையும் அவர்களே ஏற்பாடுசெய்து கொள்ளவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த நிபந்தனைகளை ஏற்று ஏறக்குறயை 1,50.000 யூதர்கள் போர்ச்சுகலுக்குள் நுழைகிறார்கள். இவர்களுடன் வந்த 600 பெரும் பணக்கார யூதர்கள் போர்ச்சுகல் குடியுரிமையைப் பெற ஒவ்வொருவரும் 6,00,000 எஸ்க்யூடோக்களை (போர்ச்சுகல் பணம்) அளித்து குடியுரிமை பெற்றார்கள். அதுபோலவே ஒருசில கலைஞர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.

துரதிருஷ்டவசமாக அந்தக் காலகட்டத்தில் ஸ்பெயின் ப்ளேக் நோயின் பிடியில் சிக்கியிருந்தது. ஸ்பெயினை விட்டுச் சென்ற யூதர்கள் ப்ளேக் கிருமிகளை போர்ச்சுக்கலுக்குள்ளும் கொண்டுசென்றார்கள். எனவே ப்ளேக் நோய் போர்ச்சுகல் குடிமகனையும் தொற்ற ஆரம்பித்ததால் அங்கு குடியேறிய யூதர்கள் மீது பெரும் வெறுப்பு ஆரம்பமாகியது. அவர்கள் ஸ்பெயினிலிருந்து வந்த யூதர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். எனவே வேறுவழியில்லாத போர்ச்சுகல் அரசன் இரண்டாம் ஜோவொவோ அந்த யூதர்களை அனுமதிக்கப்பட்ட காலமான எட்டு மாதங்களுக்கு முன்பே அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டான். அவர்கள் செல்வதற்குத் தேவையான கப்பல்களையும் மனிதாபிமான அடிப்படையில் தானே ஏற்பாடும் செய்து கொடுத்தான்.

ஆனால் அவர்களை ஏற்றிச் சென்ற கப்பல்களின் கேப்டன்கள் அந்த யூதர்களின் கையறு நிலையைப் பயன்படுத்தி அவர்களைக் கொள்ளையடித்தபின்னர் பெயரறியாத ஆப்பிரிக்க நாடுகளின் கரைகளில் அவர்களை இறக்கிவிட்டுச் சென்றார்கள். அங்கு உண்ண உணவின்றி பல யூதர்கள் பட்டினியால் மாண்டார்கள். தப்பியவர்களை முஸ்லிம்கள் அடிமைகளாகப் பிடித்துச் சென்றனர்.

யூதர்கள் தங்களிடமிருந்த தங்கத்தைப் பொடியாக்கி அதனை விழுங்கியதாக ஸ்பெயினில் பரவிய வதந்தி ஆப்பிரிக்க நாடுகளையும் அடைந்ததால் பல யூதர்கள் பிடிக்கப்பட்டு அவர்களின் வயிறுகள் கிழிக்கப்பட்டன. இதன் காரணமாக ஆப்பிரிக்காவை அடைந்த பல நூற்றுக்கணக்கான யூதர்கள் கொலையுண்டனர்.

பிறநாடுகளில் நுழைய விதிக்கப்பட்ட வரியைக் கொடுக்கவியலாத பல யூதர்கள் அந்த நாடுகளில் திருட்டுத்தனமாக நுழையை முற்பட்டார்கள். அவ்வாறானவர்கள் பிடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்டார்கள், அல்லது அடிமைச் சந்தைகளில் விற்கப்பட்டார்கள். போர்ச்சுகல் அரசன் இரண்டாம் ஜெவொவாவின் ஆணைப்படி இந்த பரிதாபத்திற்குரிய யூதர்களின் 8 முதல் 10 வயதுடைய குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, போர்ச்சுகல் காலனியான செயிண்ட் தாமஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

போர்ச்சுகல் அரசனின் இந்த நடவடிக்கைகள் போர்ச்சுகலின் குடிமக்களாக வாழ்ந்த யூதர்களிடையே பெரும் பதற்றத்தை உண்டுபண்ணியது. தங்களின் புத்தி சாதுர்யத்தாலும், கல்வியாலும், கடின உழைப்பாலும் முன்னேறிய போர்ச்சுகல் யூதர்களுக்கு அங்கு பெரும் மதிப்பும், மரியாதையும் நிலவியது. பெரும் நிலச்சுவான்தார்களாக, விவசாயம் புரிபவர்களாக இருந்த யூதர்கள் போர்ச்சுகலில் பெரும் ஆளுமைசெலுத்தினார்கள்.

எனினும் தங்களின் யூதப் பின்னணி காரணமாக தங்களின் மீது எந்தநேரமும் கிறிஸ்தவர்கள் தொல்லைசெய்யலாம் என்கிற அச்சத்தின் காரணமாக அவர்கள் தங்களைப் பெருமளவு வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தனர். ஏனென்றால் கிறிஸ்தவ மதவெறி எந்தநேரமும் தங்களின் வழிபாட்டிடங்களைப் பிடுங்கிக் கொள்ளலாம், தங்களின் மதத்தைப் பின்பற்ற அனுமதி மறுக்கலாம் என அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அதனையும்விட, யூதர்கள் தங்களின் மதத்தைப் பின்பற்ற, ஒரு தனிப்பட்ட வரியும் அவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது (இந்த வரியே பின்னர் இந்தியாவின் கோவாவில் ஹிந்துக்களின் மீது அதனை ஆண்ட போர்ச்சுகல் ஆட்சியாளர்களால் விதிக்கப்பட முன்னோடியாக இருந்தது).

ஒரு போர்ச்சுகல் யூதனின் மகன் கிறிஸ்தவனாக மதம்மாறினால் அவனது தகப்பனது சொத்துக்கள் அனைத்தும் அந்தக் கிறிஸ்தவ மகனுக்கே சென்றுவிடும் எனச் சட்டம் இருந்தது. அப்படி மதம்மாறியவனின் பெற்றோர்கள் இறந்துவிட்டதாக அனுமானிக்கப்பட்டு அவர்களின் வீடும், நிலமும், அசையும் அசையாத சொத்துக்கள் அனைத்திலும் மூன்றில் இரண்டு பங்கு அந்த மகனுக்கே உரிமையாகும்.  இந்த நடவடிக்கை யூதர்கள் கிறிஸ்தவர்களாக மதம்மாறுவதற்குப் பெரிதும் உதவியது. அதனையும்விட யூதர்கள் நகர்ப்புறங்களிலிருந்து தள்ளியிருந்த இடங்களில் மட்டுமே குடியிருக்க அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களின்கீழ் வேலைசெய்ய எந்தக் கிறிஸ்தவனும் அனுமதிக்கப்படவில்லை. பட்டுத் துணிகள் அணியவும், நகைகளை அணியவும், குதிரைகளின்மீது ஏறி சவாரிசெய்யவும் போர்ச்சுகல் யூதர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும், அவர்கள் தங்களின் ஆலயங்களில் பிறர் அறியாமல் தங்களின் மதச் சடங்குகளை பின்பற்ற அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

போர்ச்சுகல் அரசனான இரண்டாம் ஜொவாவோ, ஸ்பெயினிலிருந்து வந்த யூதர்களைக் கடுமையாக நடத்தினாலும், தனது நாட்டில் கிறிஸ்தவ அடிப்படைவாதமான கொடூர இன்குசிஷன் விசாரணைகளை அனுமதிக்க முற்றிலும் மறுத்துவிட்டார். தனது நாட்டிற்கு யூதர்களால் விளையும் நன்மைகளையும், அவர்களை விரட்டியடித்தால் விளையும் தீமைகளையும் ஜொவாவோ மிக நன்றான உணர்ந்திருந்தார். எனினும் சாதாரண கிறிஸ்தவக் குடிமகன் யூதர்கள்மீது சந்தேகமும், தீராத வெறுப்பும் கொண்டிருந்தான். இதற்கு மத அடிப்படை ஒரு காரணமாக இருந்தாலும், வசதிகளுடன் வாழும் யூதர்களும், கடன்காரர்களிடம் கடனைத் திரும்பப் பெற அவர்கள் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளும் இன்னொருபுறம் போர்ச்சுகல் கிறிஸ்தவ குடிமகனைக் கோபம்கொள்ளச் செய்திருந்தன.

இருப்பினும் ஸ்பெயினில் யூதர்களுக்கு நிகழ்ந்த பெரும் கொடுமைகளைக் கேள்விப்பட்டிருந்த போர்ச்சுகல் கிறிஸ்தவர்கள் அவர்கள்மீது சிறிது பரிதாபமும் கொண்டிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சூழ்நிலையில் போர்ச்சுகல் அரசன் இரண்டாம் ஜொவோவோ 1495-ஆம் ஆண்டு மரணமடைந்தான். அதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பு அவனது ஒரே மகனான டி. அஃபோன்ஸோ குதிரையிலிருந்து தவறி விழுந்து மரணமடைந்திருந்தான். எனவே அரசன் ஜெவோவோவின் மருமகனான டி. மானுவெல் என்பவன் போர்ச்சுக்கலுக்கு அரசனாக முடிசூட்டப்பட்டான்.

புதிதாக பதவியேற்ற அரசன் மானுவெல் யூதர்கள்மீது சிறிதுகாலம் வரைக்கும் பரிதாபம் கொண்டவனாக, அவர்களை அதிகம் துன்புறுத்தாதவனாக இருந்தான். எனினும், அவன் மறைந்த அரசனின் மனைவியான இஸபெல்லாவிடம் (இவன் ஸ்பானிஷ் அரசர் ஃபெர்டினெண்ட் மற்றும் அரசி இஸபெல்லாவின் மூத்த மகள்) காதல் கொண்டு அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆவலுடையவனாக இருந்தான். இந்த இஸபெல்லா அவளது அன்னையைப் போலில்லாமல் யூதர்களின்மீது பெருவெறுப்பும், மதவெறியும் கொண்டவளாக இருந்தாள். மானுவெல் தன்னை மணந்துகொள்ள வேண்டுமென்றால் தனது பெற்றோர்களைப் போலவே யூதர்களின்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நிபந்தனை விதித்தாள்.

இந்த நிபந்தனைக்குச் சம்மதிக்கும் மானுவெல், இஸபெல்லாவைத் திருமணம் செய்து கொண்டான். இதனைத் தொடர்ந்து ஸ்பெயினிலிருந்து போர்ச்சுகல்லுக்கு வந்து தங்கியிருக்கும் அத்தனை யூதர்களும் போர்ச்சுகல்லை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவும் மானுவெல்-இஸபெல்லாவின் திருமண ஒப்பந்தத்தில் ஒரு ஷரத்தாக 1497-ஆம் வருடம் இணக்கப்பட்டு, கையொப்பமிடப்பட்டது.

போர்ச்சுகலில் இருக்கும் யூதர்கள் அனைவரும் ஒரு மாதகாலத்திற்குள் வெளியேற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கும் அந்த ஒப்பந்தைப் படித்த பின்னரே இஸெபெல்லா மானுவலைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் தெரிவித்தாள்.

[தொடரும்]

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

One Reply to “கொலைகாரக் கிறிஸ்தவம் – 3”

  1. Great service you are doing. Tamils are blind about their own religion.Tamils dont know anything about world commercial religions and their atrocities.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *