குழவி மருங்கினும் கிழவதாகும் – 8

            இதே போன்று  முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழிலும் குழந்தை முருகனை, ‘பொன்னால் செய்தபெரிய கழல்கள்  பாதச்சிலம்புகளோடு சேர்ந்து கலின் கலின் எனும் ஒலியினை எழுப்பவும், திருவரையில் உடைமணி கிணின் கிணின் என ஒலிக்கவும், மற்றும் பலவாபரணங்கள் பொலியவும்  எம்மிடம் வருவாயாக!’ எனத்தாய்  வேண்டும் பாடல் காணப்படுகிறது.

            ‘செம்பொற் கருங்குழல் அரிக்குரல் கிண்கிணி

                   சிலம்பொடு கலின்கலினெனத்

              திருவரையில் அரைமணி கிணின்கிணின் எனப்பொலந்

                   திண்டோளின் வளைகலிப்ப…’

            கேட்டவரம் தர ஒடிவரும் குழந்தை தெய்வம், கிண்கிணி சதங்கையொலிக்க ஆடியசைந்து வரும் குழந்தை எனக் கொஞ்சி, சிறுகுழந்தைத் தெய்வங்களை வாரியணைத்து உச்சிமுகர்ந்து கொண்டாட அடியார்களுக்கு ஆவல் மிகுகிறது. தமது பக்திப்பெருக்கினையும் கவிதைச் சிறப்பினையும் சொற்களில் குழைத்தெடுத்துப் பாடல்களைப் புனைந்து வைத்துள்ளனர்.

            குழந்தை முருகனுக்குப் பலவிதமான அலங்காரங்களைச் செய்துபார்க்கும் தாய் ஒரு கட்டத்தில் அவனே முதலும் முடிவுமான பரம்பொருள் எனத்தெளிந்து, மொழிகுழற அவன்புகழைப்பாடி அழைப்பதாக, திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழிலிருந்து கவிதை நயம் பெருகும் ஒரு பாடல்: ‘வா’ எனும் சொல் பலவிதமான பொருட்களில் பலமுறை பயின்று வரும் பாடல்.

            ‘அன்ன வாகனனாகிய பிரமனின் நாலுமுகங்களும் தொங்கிப்போகும்படி (பிரணவ மந்திரத்தின் பொருளை உணர்ந்து உரைக்காததனால்) அவனை அறைந்தவனே! தேவர்கள் துன்பம் நீங்கிட வாவியான சரவணப்பொய்கையில் மகவானவனே! கார்த்திகைப்பெண்டிர் அறுவர் முலைப்பாலைப் பருகியவனே!

            ‘மின்னல் போலும் பெண்ணான உமை விரும்பும் சடாமுடியன் சிவபிரானின் குருவானவனே! அரக்கர் குலத்தைத் தடிந்தவனே! வலிய வேடர்களின் மகளான வள்ளிமீது மையல் கொண்டலைந்தவனே! உன் பெயரைச் சொல்பவர்கள் மீது குறையாது அருளை வழங்குபவனே!

            ‘முதல்வனே! அனைத்துக்கும் முடிவானவனே! சித்திக்கும் முத்திக்கும் முதலானவனே! முருகா வா வா என மொழிகுழற உருகி வேண்டுவோர் முன்பு வாராதிருப்பது உன் பெருமைக்குத் தகுமோ?

            ‘பொன்கொழிக்கும் ஆறான பொன்னி எனும் காவிரிநீர் பாயும் வளநாட்டை உடையவனே! வருக! தேவர்கள் அதிபதி இந்திரனும், திருமாலும் அயனும் விருப்பொடு சலாமிட்டு வணங்கும் சுவாமிமலை முருகனே வருகவே!’ என நெகிழ்ந்துருகி உளம்கசியும் பாடலிது.          

            அன்னவா கனனாலு முகநாலு முகமா

                   அறைந்தவா அமரர் துன்பம்

              அகலவா வியினில் மகவானவா உடுமகளிர்

                   அறுவர்முலை அமுதுண்டவா

          மின்னவா வியசடையர் குருவான வாஅசுரர்

                   வேரைத் தடிந்தவா வல்

              வேடர்மகள் மால்கொண்ட லைந்தவா சொல்லுவார்

                   மீதிலருள் குறையாதவா

          முன்னவா யாவைக்கு முடிவான வாசித்தி

                   முத்திக்கு முதலானவா

              முருகவா வாவென்று மொழிகுழற ஓதுவோர்

                   முன்னர்வா ராமைதகவா

          சொன்னவா றானநீர்ப் பொன்னிபாய் வளநாட

                   சுப்ரமண் யாவருகவே

              சுராதிபதி மாலயனு மாலொடு சலாமிடு

                   சுவாமிமலை வேள்வருகவே.

            தெய்வங்களை வழிபடும்போது பாதாதிகேச வருணனை எனப் பெண்தெய்வங்களையும், கேசாதி பாத வருணனை என ஆண்தெய்வங்களையும் போற்றி வழிபடுவது மரபு.

            இதற்கேற்ப ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியில் அன்னையின் திருப்பாதங்களை வருணிக்கும் ஸ்லோகம் மிக இலக்கிய நயம் வாய்ந்தது. சௌந்தர்யலஹரியினை வீரை கவிராஜ பண்டிதர் என்பவர் சுவைகுன்றாது தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். இதன் 87-வது பாடல் திருமண காலத்தில் ஐயன் அன்னையின் திருப்பதத்தை அம்மி மீது ஏற்றிவைத்த செயலைக் கூறுகிறது.

            “அன்னையே! உன் பாதங்கள் பஞ்சின்மேல் வைத்தாலும் வாடுகின்ற மென்மையான தன்மையுடையவை; சிவந்த தாமரை மலர் போன்றவை; இவ்வாறு அவற்றைப் போற்றாது சிலர் இதனை ஆமையின் மேல் ஓட்டிற்கு உவமை கூறி வீணாக வியப்பார்கள். கருநிற மிடற்றரானவரும் உனது கையை மணநாளில் பற்றுபவருமான (வரர்= வரிப்பவர், வரைந்து கொள்பவர்) பெருமான் மென்மையான உனது பாதத்தினை அம்மிக்கல் மீதும் ஏற்றி வைப்பாராம். இந்த நிகழ்ச்சியைக் கண்ணுற்றோருக்கு வஞ்சகக் கொடியநெஞ்சை உடையவர் அவர் எனவே எண்ணத் தோன்றும். ஆயினும் சிறிது எண்ணிப் பார்த்தால் அவர் அவ்வாறானவர் அல்ல, உன்பால் மெத்த அன்பு கொண்ட ஆண்டகையான் என்பது தெற்றென விளங்கும்,” என்கிறார் புலவனார்.

            பஞ்சு அழுத்தினும் வாடு நின்பத

                   பங்கயத்து இணை ஒப்பெனா     

          விஞ்சை கற்றவர் வன்புஅக் கம்

                   டத்தை வீணில் வியப்பராம்

          அஞ்சனப் புயல் அங்கை நின்வரர்

                   அம்மி மீதிலும் வைப்பராம்

          வஞ்சகக் கொடு நெஞ்சர் அத்தனை

                   வல்லர் அல்லர் நினைக்கினே.

            இதே கருத்தினில் அம்மையின் திருப்பாதங்களைப்பற்றிய ஒரு பாடலை திருவுத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் நூலில் காணலாம். ஆனால் அது வருகைப்பருவத்தில் அமையாது ஊசற் பருவத்தில் காணப்படுகிறது. இருப்பினும் பாடலின் நயத்திற்காகவும், பாடுபொருளின் சிறப்பிற்காகவும் இங்கு அது கூறப்பட்டது.

            பார்வதி பரமேசுவரர்களின் தெய்வத்திருமணம், வைதிக முறையில் நிகழ்கின்றது.  இத்திருமணத்தைக் காண மறைகள் அனைத்தையும் உணர்ந்தவனான பிரமதேவன், முகுந்தன் எனப்படும் திருமால், குலிசம் எனும் வச்சிராயுதத்தைக் கையில் ஏந்திய தேவர்கள் தலைவனான இந்திரன், எனும் இவர்களைத்தவிர இன்னும் முப்பத்து முக்கோடி தேவர்களுடன் எண்ணற்ற புலவோரும் சித்தர்களும் திரண்டெழுந்துள்ளனர். அவர்கள், “இத்தெய்வத் திருமணத்தைக் காண நமக்கு இதுவென்ன பாக்கியம்?” என உள்ளம் நெகிழ்ந்து உருகுகின்றனராம்.

            சித்திரைத் திங்களில் பல திருக்கோவில்களிலும் ஐயன், அம்மையின் திருமண விழா நடைபெறும். அதுதான் இங்கு கூறப்படுகிறது.

            பக்தியினால் உருகும் அன்பர்கள் உள்ளம் பச்சாதாபத்தினாலும் உருகுகிறதாம். எதனால் என்று பார்ப்போமா?

            நமது வைதிகமுறைத் திருமணத்தில் ‘அம்மி மிதித்தல்,’ என ஒரு சடங்கு உண்டு. அதானது, மணப்பெண்ணின் இடது பாதத்தின் பெருவிரலை மணமகன் தனது வலக்கரத்தால் பிடித்தெடுத்து, ஒரு அம்மிக்கல்லின் மீதேற்றி வைப்பதாகும். இதன் பொருள் என்னவென்றால், “இந்தக் கல்லினைப்போல் கடினசித்தம் கொண்டவளாகி, மன உறுதியோடும், வலிமையோடும் வாழ்வில் என்னுடன் இணைந்து இன்பதுன்பங்களில் பங்குகொள்வாயாக,” எனக் கூறுவதாகும். இதற்கான மந்திரங்களை மணமகன் அப்போது உச்சரிப்பது  வழக்கம்.

            சிவனுக்கும் பார்வதிக்கும் நடைபெற்ற திருமணத்திலும் இச்சடங்கினை மணமகனாகிய சிவபிரான் செய்தார். அன்பர்களால் புகழ்ந்து துதிக்கப்பட்ட (துதி மணக்கின்ற) அம்பிகையின் பாதங்களிலொன்றை எந்தையாகிய பிரான் எடுத்து அம்மிமேல் வைத்ததால், கடினமான அம்மிக்கல்லில் பட்டுச் சிவந்துபோன அப்பாதத்தைக்கண்டு அடியார்கள் மனம்வருந்தி உருகுகிறார்களாம். பாதத்தைக் கண்டு உருகியது ஒருபுறம்; இவ்வாறு ஐயன் அம்மையின் மலர்ப்பாதத்தைக் கல்லின்மீது வைக்கும் தொழிலைக் கண்டும் உள்ளம் உருகுகிறார்களாம்.

            ஏனெனில் ஒரு பெரியமனிதரை எந்த ஒரு சிறு செயலையும் செய்ய அவருடைய அடியார்களும், அன்பர்களும் விடமாட்டார்கள். அவர் செய்துவிட்டால் பொறுக்கவும் மாட்டார்கள்! சிவபிரான் என்ன சாமானிய மனிதரா?அந்தம் ஆதி அற்ற உயர்வானவனல்லவா? ஆனால் இந்தச் செயலை, சடங்கினை, அவனன்றி அவனுடைய திருமணத்தில் யாராலும் செய்ய இயலாதே!

            அதுமட்டுமல்ல; இப்போது அன்னையே அத்தன் செய்த அத்தொழிலுக்காக உருகுகிறாளாம்.

            தனது பாதத்தினை அவருடைய திருக்கரத்தாற் தூக்கி அம்மிமேல் இட்ட செய்கை மென்மையான அவளுடைய இதயத்தை உருக்கிவிட்டது. ஏன்? அவளை மணம் புரிந்து கொள்பவன் அகில சராசரங்களுக்கும் நாயகன். அகிலநாயகியான அவளுமே செயற்கரிய தவங்களைச் செய்தே அவனை அடைந்திருக்கிறாள். மற்றும் அவன் காலால் இட்ட பணியைத் தலையால் செய்ய தேவரும் மற்றோரும் காத்திருக்கிறார்கள். அவனோ தனது தகுதிக்கேற்றவண்ணம் பெருமிதம் கொண்டு நில்லாது, ‘இது நம் திருமணம்; இது ஒரு புனிதமான முதன்மையான சடங்கு,’ என்று உள்ளத்தில் கொண்டு, அம்மையின் பூம்பாதத்தைத் தன் திருக்கரத்தால் பற்றி, அதனை எடுத்து மென்மையாக அம்மிமேல் வைக்கிறான்.

            அந்த மெல்லிய பூப்போன்ற பாதத்தை அம்மிமேல் தூக்கிவைக்க அவனுடைய மனமும் ஒப்பியிருக்காதுதான். ஆயினும் ஐயன் செய்வதனை உலகமே பார்த்தபடி உள்ளது. உலகத்தோர் நன்னெறிகளைக் கடைப்பிடிக்க ஐயன் தானே முன்னுதாரணமாகி நிற்கிறான். ‘ரோல் மாடல்’ எனக் கூறுவதுண்டல்லவா? அதுதான் இதுவும்.

            திருமண வைபவத்தைக்கண்டு களித்துருகிய அடியார்கள் ‘அன்னையின் அடி நோகுமே’ என மனமுருக, ‘உலகிற்கே முதல்வன் தன்னடியைப் பற்றி தூக்கினாரே’ என அன்னை உருக, படிக்கும் நம்முள்ளத்தையும் உருக்கும் அழகிய பாடலிது.

            இது திருவுத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் எனும் நூலில் காணப்படும் ஊசற்பருவப் பாடல். இயற்றியவர் பெயர் அறியக் கிடைக்கவில்லை. தமிழ்நயம், சொல்நயம், சந்தநயம் எனப் பல அழகுகளும் கொண்டு பொலியும் நூலாகும் இது. பாடலடிகளைக் காண்போமே!

                        ‘பாக்கியம் நமக்கிதென்னப்

          பார்த்துருக வும்சித்தி ரைத்திங்க ளென்னப்

                   பதித்திடு மணச்சடங்கில்

          துதிமணக் கின்றநின் பதம் அம்மி மேலெந்தை

                   தூக்கிவைத் துச்சிவந்த

          தொழில்கண்டு பின்னுருக நீயுமவர் கையினால்

                   தூக்கிய தொழிற்குருகவும்’

            அடியார்கள் மனதில் முளத்தெழும் எண்ணற்ற கற்பனைகள்; வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பெற்றும் பட்டை தீட்டிய வைரங்களாகவும் ஒளிர்கின்ற அழகை பிள்ளைத்தமிழ் நூல்களில் பலவிடங்களில் கண்டு களிக்கலாம்; இறும்பூதெய்தலாம்.

            தளர்நடை பயிலத்துவங்கியுள்ளாள் குழந்தை. இதனையே, ‘கண்டோர் பவத் துன்பு காணார்களாய்ப் பருங்களி ஆர்கலிக் கண்மூழ்கி,’ என்கிறார் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். தத்தித் தத்தி மயில்போல நடந்து வரும் குழந்தையைக்கண்டு பரவசத்தில் உள்ளம் பறிகொடுத்து, தாயின் நிலையிலும், அடியாரின் நிலையிலும் இருவிதமாகவும் நின்று, அவளைப் பலவிதமாக வருணிக்கிறார் அவர். தெய்வக்குழந்தையல்லவா இந்த மங்களாம்பிகை? ‘இவளைக் கண்ணால் கண்டாலே பிறவிக்கடலில் மூழ்கிப் படும் துயரமெல்லாம் பறந்தோடும்; பேரானந்தம் கொண்டு உள்ளம் கடல்போல ஆரவாரிக்கும்,’ என்பது பொருள்!

            சிவபிரானின் பெருமைகள் அனைத்தும் அன்னை மங்களவல்லிக்கே உரித்தாக்கப்படுகின்றன. சிவனும் சக்தியும் இணைபிரியாதவர்களல்லவா? அயனும்  திருமாலும் அன்னமாகவும், வராகமாகவும் உருவெடுத்து ஐயனின் அடிமுடி காணப்புகுந்த வரலாறு இது. தீயோர்களை நாசம்செய்யும் சுதரிசனம் எனும் சக்கரப்படையை ஏந்தியவன் திருமால். அவன் ஒரு விலங்காக (பன்றி, வராகம்) வடிவெடுத்து தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமானின் இரண்டு திருப்பாதங்களைத் தேடிக்காணமுயன்றான். பூமியின் அடிவரை சென்று தேடியும் காணஇயலாமையால் மனமும் உடலும் துவண்டு மீன்கள் நிறைந்த கடலில் (இங்கு பாற்கடலில் எனப் பொருள்கொள்ள வேண்டும்) விழுந்து இளைப்பாறுகிறான்.

            அடுத்து பிரமன் அன்னப்பறவை வடிவெடுத்து சிவனின் முடிதேடியதனை அழகுற விளக்குகிறார். உயர உயரப்பறந்து தேடியும், முடியைக் காண இயலவில்லை. இனி எங்குபோய்த் தேடுவது எனச் சிந்திப்பவனுக்கு ஒரு  எண்ணம் உதிக்கின்றதாம். அவன் தேடிய சிவபிரானின் முடியானது ஊடல்கொண்ட அன்னையின் சின்னஞ்சிறு பாதங்களின்மேல் வைக்கப்பெற்றுள்ளது. ஆகவே, பிரமன் தான் தேடும் சிவபிரானின் முடியைக்காண ‘அன்னையின் பாதங்களை நாடினாலே போதுமே; ஆகவே, அதனைச் செய்வோம்,’ என எண்ணுகிறான். இனிய அரிய கற்பனை.

            குறுக்குவழியில் இலக்கை அடைவது பற்றிய சிந்தனை புராணகாலம் தொட்டு இருந்துள்ளது போலும்!! யாருக்கும் எட்டாத பரம்பொருளின் திவ்விய வடிவை, முடியை, எளிதிலடைந்து விட முடியுமா? முடியாதுதான். அண்ணல் சிவபிரானின் முடி அயன் கண்களுக்கெட்டாத கற்பகக்கனியாகி விட்டது.

            இனி என் செய்வான்? அன்னம் ஆகி (ஓதிமம்) வருந்திக் களைத்து நின்ற அவன் கருத்து குழந்தையாகி நடைபயிலும் அன்னையின் தேன்நிறைந்த மலர்போன்ற திருவடிகளில் பதிகின்றது. அது பயிலும் மென்னடையில் அவன் சிந்தையும் கருத்தும் பதிகின்றது; அயன் தேடிவந்ததென்னவோ, சிவபிரான் திருமுடிக்காட்சியைத்தான். ஆனால், அது எட்டாக்கனியாகிவிட்ட நிலையில், அன்னையின் நடையழகு அவன் கருத்தைக் கவர்ந்துகொண்டுவிட்டது. மற்ற அன்னங்கள் இவள் நடையைக் கற்க ஆவல்மிகுந்து அவளைப் பின் தொடர்கின்றன. தாமரைமலரில் வீற்றிருக்கும் இந்த (பிரம்மா) அன்னமும் அவைகளுடன் அன்னையைப் பின் தொடர்கின்றதாம்.

            இவ்வாறு அன்னங்கள் பின்தொடருமாறு தளர்நடை பயில்பவள், வானளாவ உயர்ந்த இமயமலையில் பிறந்த வனிதையாகிய மங்களவல்லி. இவள் தங்குமிடமோ வேதியர்கள் ஓதும் மறைவாழ்த்தொலி விண்ணளாவ முழங்கும் திருக்குடந்தை நகராகும். அம்மடந்தையை வருக வருகவே எனத் தாயர் அழைப்பதாகப் புலவர் கற்பனை விருந்து படைக்கிறார்.

            ஊன்தோய் சுதரி சனப்படையா னொருமா வுருக்கொண்டு உம்பர்பிரான்

                    உபய பதமுஙம் காண்பான் புக்கு ஒன்றுஙம் காணாது உழிதந்து

          மீன்தோய் பரவைப் புடைவிழுந்தான் விரும்பி யிவள்சிற் றடிதொடரின்மேற்

                    விழைந்து முயன்ற முடிகாணன் மேவு மேவா விடினும் இவள்

          தேன்தோய் மலர்த்தாள் தொடர்பு ஒன்றே திருந்து மெனவுடள் கொடுமலர்

                    திகழ் ஓதிமம் மென்னடைகற்பான் செறியோ திமங்க ளொடும்தொடர

          வான்தோய் இமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே

                    மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே.

            சிந்தை களிகூர அன்னையின் கால்வண்ணம் கண்டோம்.

            குழந்தையைக் காண்பதே மகிழ்ச்சிதரும். அதுவும், அணிமணி புனைந்து அலங்காரம் செய்விக்கப்பட்ட குழந்தையைக்காண ஆசை இன்னும் பெருகுமல்லவோ? தாயுள்ளத்தின் தாபமும் அன்பும் நிறைந்து ததும்பும் அழகிய கருத்துக்கொண்ட பாடல்கள் பலவுண்டு.

            சிவஞான முனிவர் இயற்றியுள்ள பிள்ளையார் மீதான கலைசை பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்று, இருகைகளை ஊன்றித் தவழ்ந்து வரும் சிறு குழந்தை விநாயகனை, அவன் உருவிற்கேற்ப, ஒரு சிறு களிறு செய்யும் செயல்களால் வருணித்து மகிழ்கிறது.

            ‘இளமை பொருந்திய ஏறு எனத் தவழ்ந்து வரும்போழ்தில்,  தூண்போன்ற தும்பிக்கையால், பெருமூச்செறிந்தபடி நிலத்தைத் தோண்டியும், ஊழித்தீ போல பெருக்கெடுக்கும் செவியின் அசைப்பினால் உண்டான காற்று ஆகாயத்தைப் பிளந்தபடியும் அசைந்தாடி வரும் பீடும் பொருந்தி வரும் சிறு களிறு போன்று வருக,’ என விநாயகனைக் மழகளிறாகவே கண்டு மகிழ்கிறார்.

            இருகை யூன்றித் தவழ்ந்துமழ ஏற்றின் வருந்தோ றாங்காங்கே

                   எறுழ்வன் புழைக்கை நெட்டுயிர்ப்பா னிருமா நிலத்தைக் குழிப்பதுவும்

          பெருகும் கடைக்கால் செயுஞ்செவிவான் பிளப்ப தேய்ப்பப் பல்காலும்

                   பெயர்ந்து மடங்கி அசைந்தாடும் பீடும் தத்தம் பொறிதமக்கு

          மருவும் புலைன அவற்றிடமா மண்ணை அகழ்ந்தும் வெளிப்பரப்பை

                   வளைத்தும் கவவிக் கொடுத்துதவும் வண்மை காட்ட அசைந்தசைந்து

          முருகுவிரியும் தொடைப்புயத்து முதல்வா வருக வருகவே

                   மூரிக் கலைசைச் செங்கழுநீர் முனியே வருக வருகவே.

Image result for periyazhwar

            இலக்கணப்படி வருகைப்பருவத்தின் பாடுபொருள், குழந்தையின் சிறுபாதங்களும் கால்களும் ஆகும். திருமால் குழந்தையாகக் கால்களால் செய்த செயல்கள் பலவாம்: காளிங்கன் எனும் நச்சுப்பாம்பின் தலைமீது ஏறி நடம் புரிந்து அவன் ஆணவத்தை அடக்கியது, பின் வாமன அவதாரத்தில் மூவுலகும் ஈரடிகளால் முறைதிறம்பா வகையில் அளந்தது, மாயச்சகடத்தைக் காலால் உதைத்து, இறுத்து அரக்கனை அழித்தது எனப் பெரியாழ்வார் அனைத்தையுமே அழகுறப் பாடியுள்ளார்.

            உந்திபறத்தல் எனும் விளையாட்டை சிறுமியர் ஆடிப்பாடுவதாக அமைந்ததொரு அழகிய பெரியாழ்வார் பாசுரம்; இதிலும் கிருஷ்ணனின் திருவடித் தாமரைகள் போற்றப்படுகின்றன. ஸ்ரீராமனாகவும், கிருஷ்ணனாகவும் அவதரித்து, அவன் திருவடிகளால் செய்த கால்வண்ணங்களைப் பாடிப்பாடி மகிழ்கின்றனர் சிறுமியர். இதுவும் அரசனின் வீரச் செயல்களைப் புகழ்ந்துரைப்பது போன்றதே.

            ‘திருமுடி தாங்கி மூன்று உலகங்களையும் ஆண்டு எமக்கு அருள் செய்வாயாக,’ எனக் கானகம் சென்ற காகுத்தனைத் தொடர்ந்து சென்று வேண்டி நின்றான் அவன் தம்பி பரதன். ராமபிரானோவெனில் அவனுக்குத் தனது திருவடி நிலைகளை (பாதுகைகளை)க் கொடுத்து அருளினான்; அவனைப் பாடிப்பரவி உந்தீபற,’ என உந்திபறக்கின்றனர் சிறுமியர்.

            முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு, உன்

          அடியேற் கருளென்று அவன்பின் தொடர்ந்த

          படியில் குணத்துப் பரதநம் பிக்கு, அன்று

          அடிநிலை ஈந்தானைப் பாடிப்பற

                   அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.

                        (பெரியாழ்வார் பாசுரம்- உந்தி பறத்தல்)

            ஸ்ரீ மகரக் குழைக்காதர் பிள்ளைத்தமிழின் புலவரும் அக்கால்களின் பெருமை வாய்ந்த செயல்களைப் பாடி மகிழ்கிறார்.

            ‘ஆலிலையில், திருவரங்கத்தில், பாற்கடலில் கண்வளரும் பச்சைநிறத்தவனே! நாகரத்தினத்தைத் தலையில் கொண்ட பாம்பான காளிங்கனின் கண்கள் பிதுங்குமாறு உனது சிவந்த தாமரைப்பாதங்களால் மிதித்துத் தள்ளி, அவன் வாலைப்பிடித்துச் சுழற்றி, இடையர்களைக் காக்க அவன் தலைமீது நடம்புரிந்த தலைவனே!’ என அவன் பெருமைகளைப் பேசுகிறார்.

Image result for alilai krishna

            ‘பண்டா லிலையில்அரங் கத்துப்

                   பாதாழியில் கண்துயில் கூரும்

              பச்சைப் புயலே பணா மகுடப் படப்

                   பாந்தளின் கண்பிதுங்க நறும்

          தண்தாமரைச் செஞ்சரண் பெயர்த்துத்

                   தள்ளிக் கடைவால் பிடித்து நெறி

              தழைக்கும் படிக்கு நடம்புரிந்த

                   தலைவா ………………..’ எனப் போற்றுகிறார்.

            இறையனுபவத்தையும் மழலையின்பத்தையும் ஒருசேரக் காட்டும் சிறப்பினைக் கொண்டமைந்தவை பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் எனலாம்.

(வளரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *