இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.
தொடர்ச்சி…
The Inquisition is the institutional practice of specially appointed Roman Catholic priests, charged with investigating and putting on trial individuals suspected of “heresy” (holding to beliefs and practices that were considered to be a threat to, or significantly out of line with, official Roman Catholic teaching).
முன்பே கூறியபடி, தங்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஸ்பெயினில் வாழ்ந்த யூதர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். வேறு வழியில்லாத யூதர்கள் பலரும் கிறிஸ்தவர்களாக மதம் மாறினார்கள் என்றாலும், மனதளவில் அவர்கள் யூதர்களாகவே வாழ்ந்தார்கள். வெளிப்புறம் தாங்கள் முழுக் கிறிஸ்தவர்களாக காட்டிக்கொண்ட அவர்கள் தங்களின் பாரம்பரியமான திருவிழாக்களையும், வழிபாடுகளையும் பிறர் அறியாவண்ணம் ரகசியமாகச் செய்துவந்தார்கள்.
அவர்களைக் குறித்து விளக்கும் அன்டலூசியாவைச் சேர்ந்த க்யூரட்டே என்பவர் கூறுகையில்,
“பெரும் சாபத்திற்கு உள்ளாக்கப்பட்ட இந்தப் பரிதாபமான இனத்து மக்கள் தங்கள் குழந்தைகளை கிறிஸ்தவர்களாக ஞானஸ்நானம் செய்விக்க அரைமனதுடன் அழைத்துச் சென்றாலும், வீடு திரும்பியவுடன் அதன் சுவடுகளை அழித்தார்கள். கிறிஸ்தவர்களைப்போல அவர்களின் சமையலில் பன்றிக் கொழுப்பினைக் கலந்து சமைக்காமல் அவர்களின் உணவில் தாவர எண்ணெயைப் பயன்படுத்தினார்கள். பன்றி இறைச்சி உண்பதினை முற்றிலும் தவிர்த்தார்கள். தங்களின் வசந்த விழாவினை (Passover) ரகசியமாகக் கொண்டாடினார்கள். கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளின்போது உபவாசம் இருக்காமல் இறைச்சியை உண்டார்கள். மேலும், தங்களின் யூதக் கோவில்களில் விளக்கெரிக்கத் தேவையான எண்ணெய் மற்றும் பிற பிரார்த்தனைப் பொருட்களை ரகசியமாக தங்களின் பூசாரிகளுக்குக் கொடுத்தனுப்பினார்கள்.”
எனவே, இந்த யூதர்களைத் தண்டிக்க இன்குசிஷனை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டுமென்ற கூச்சல் நாடெங்கிலும் எழுந்தது. செவிய்யா [Seville] நகரிலிருந்த செயிண்ட் பால் சர்ச்சைச்சேர்ந்த டொமினிகனான அல்போன்ஸோ-டி-ஒஜெடோ என்கிற மதகுருவும் அவரது உதவியாளனான டியாகோ-டி-மெர்லோ என்கிற இருவரும் இதனைக் குறித்து மிகத் தீவிரம்காட்டினார்கள். ஸ்பெயினின் அரசர் பெர்டினண்டிடம் சென்ற அல்போன்ஸோ, யூதக் குஷ்டரோகம் நாடெங்கும் பீடித்துக் கிடப்பதாகவும் அதனைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். அரசவையிலிருந்த பிற கிறிஸ்தவ மதகுருக்களும் அதற்கு ஆதரவாகக் குரலெழுப்பினார்கள்.
அவ்வாறு யூதர்களைத் தண்டிப்பதால் கிடைக்கக்கூடிய ஏராளமான வருமானத்தைக் குறித்து கேள்விப்பட்ட பெர்டினண்ட் அதற்குச் சாதகமாக பதிலளித்தாலும், அரசியான இஸபெல்லா அதனைத் தடுத்தாள். இருப்பினும் மதகுருமார்கள் மூலமாக அவளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இறுதியில் கேஸ்ட்டில் என்னுமிடத்தில் இன்குசிஷன் செய்வதற்கு வசதியாக ஒரு அலுவலகத்தைத் திறப்பதற்கு அவள் சம்மதித்தாள். அதன்படி 1478-ஆம் வருடம் ஒரு அலுவலகம் திறக்கப்பட்டு, அதில் பணிபுரிய மூன்று மதகுருமார்களும் நியமிக்கப்பட்டார்கள். கிறிஸ்தவர்களல்லாத பேகன்களையும் [pagans], யூதர்களையும் பிடித்து விசாரித்து அவர்களைக் கிறிஸ்தவர்களாக மதம்மாறச் செய்வதற்கான அத்தனை அதிகாரங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இருப்பினும், இன்குசிஷனிலால் பிறமதத்தவர்களுக்கு விளையவிருக்கும் இன்னல்களை நன்கு அறிந்தவளான, இளகிய மனம்கொண்ட அரசி இஸபெல்லா, மதகுருமார்களுக்கு உடனடியாக அதிகாரம் அளிப்பதிலிருந்து நாட்களைத் தள்ளிப்போட்டாள். அதற்குப் பதிலாக புதிதாக மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு கிறிஸ்தவ மதத்தினைக் குறித்து பாடம் எடுக்கவேண்டுமென ஆர்ச் பிஷப் கார்டினல் மண்டோசா என்பவரிடம் வேண்டுகோள் விடுத்தாள் இஸபெல்லா.
தொடர்ச்சியான அழுத்தங்களின் காரணமாக இறுதியில் ஸ்பெயின் அரசனும் அரசியும் இன்குசிஷன் தொடங்குவதற்கான சம்மதத்தை அளித்தார்கள். அதன்படி ஜனவரி 2, 1481 -ஆம் ஆண்டு ஸ்பெயினில் இன்குசிஷன் என்னும் பயங்கரம் துவங்கியது. துவங்கிய நான்கே நாட்களில் பிறமதத்தவர்களான பேகன்கள் நான்குபேர் பிடிக்கப்பட்டு உயிருடன் தீவைத்துக் கொளுத்திக் கொல்லப்பட்டார்கள்.
1481-ஆம் வருட முழுமையும் ஏறக்குறைய 300 கிறிஸ்தர்களல்லாத பிறமதத்தவர்கள் செவிய்யா (Seville) நகரில் கம்பங்களில் கட்டி வைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர், 80 பேர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தப் பகுதியின் பிறநகரங்களில் ஏறக்குறைய 2000 பேர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். மேலும் 17,000 பேர்களுக்கு வெவ்வேறுவிதமான தண்டனைகள் வழங்கப்பட்டன.
1483-ஆம் வருடம் போப் நான்காம் சிக்ஸ்டஸ், ஒரு புதிய டிரிபியூனலை ஆரம்பித்து அதற்கு தாமஸ்-டி-டார்க்குமெடாவை இன்குசிஷன் ஜெனரலாக நியமித்தார். இன்குசிஷனை துல்லியமாக நடத்தத் தேவையான புதிய சட்ட-திட்டங்களை வகுக்கும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவ்வாறு எழுதப்பட்ட புதிய சட்டங்கள் 1484-ஆம் வருடம் நடைமுறைக்கு வந்தன. இந்தச் சட்டங்களைக் குறித்து எழுதப்பட்ட நூல்கள் பலவும் இன்றைக்கும் கிடைக்கின்றன. H.C. Lea எழுதிய A History of the Inquisition in Spain இதில் ஒரு முக்கியமானதொரு புத்தகம்.
ஸ்பெயினில் வாழ்ந்த பல யூதர்களும், புதிதாகக் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்களும் இந்த பயங்கரங்களிலிருந்து தப்புவதற்காக அருகாமை நாடுகளான ஃப்ரான்ஸ், இத்தாலி மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தப்பி ஓடினார்கள். இருப்பினும், தாங்கள் பிறந்து வளர்ந்த, தங்களது சொத்துக்களும், வியாபாரங்களும், உறவினர்களும் இருக்கும் ஸ்பெயினை விட்டுச் செல்ல பல யூதர்கள் பெரிதும் தயங்கினார்கள். எனவே அம்மாதிரியானவர்கள் ஸ்பெயினிலேயே வாழவிரும்பி, அங்கேயே தங்கினார்கள்.
ஸ்பெயினில் தங்க விழைந்த யூதர்கள், தங்களை அங்கே வாழவிடும்படி அரசன் ஃபெர்டினண்டிற்குக் கோரிக்கை வைத்து அதற்கென 80,000 டக்கெட் (Duckat) பணத்தையும் அவருக்கு அளிப்பதாகக் கூறினார்கள். உள்ளுக்குள் அதற்கு சம்மதிக்காவிட்டாலும், அரசி இஸபெல்லாவின் வற்புறுத்தலுக்குச் செவிசாய்க்கும் ஃபெர்டினண்ட், அந்த யூதர்கள் ஸ்பெயினில் இருக்க சம்மதமளித்தார்.
இதனைக் கேட்டுக் கோபமுற்ற டார்க்குமெடா, அரண்மனைக்குள் நுழைந்து தன் கையிலிருந்து சிலுவையை அரசனின் முன்னிருந்த மேசையில் வீசிவிட்டு, “ஜூதாஸ் கரியோத்து தனது எஜமானனை வெறும் முப்பது வெள்ளிக்கு விற்றான். நீ ஏசுவை 80,000 டக்கெட்டுக்கு விற்க்க ஆசைப்படுகிறாய். இதோ இந்தச் சிலுவையை எடுத்து அதனையும் விற்றுக் கொள்!” எனக் கூறினான். டார்க்குமெடாவின் இந்தத் தோரணையைக் கண்டு அஞ்சிய அரசனும், அரசியும் யூதர்களுக்கு அடைக்கலம் கொடுக்க ஒப்புக்கொண்ட வாக்கிலிருந்து விலகினார்கள்.
இதன்படி, மார்ச் 8, 1492-ஆம் வருடம் ஸ்பெயினில் வாழும் அத்தனை யூதர்களும் அந்த நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டது. யூதர்களுக்கு நான்கு மாத காலம் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் அந்த நான்கு மாதகாலத்திற்குள் தங்களின் சொத்துக்களையும், வியாபாரங்களையும் விற்றுவிட்டு வெளியேறவேண்டும் என அவகாசம் தரப்பட்டது. அனுமதிக்கப்பட்ட நான்கு மாதங்களுக்கும் மேல் ஸ்பெயினில் தங்குகிற ஒவ்வொரு யூதனுக்கும் கடுமையான தண்டனை அளிக்கப்படும் எனவும், அவனது அத்தனை சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டது.
மேற்படி யூதர்கள் இப்போது கிறிஸ்தவர்களாக மதம்மாறச் சம்மதித்தாலும், புதிய இன்குசிஷன் சட்டங்களின்படி அவர்கள் ஸ்பெயினில் வாழ்வது கடினம் எனவும் அவர்களுக்கு உணர்த்தப்பட்டது. அந்த உத்தரவுகளை மதிக்காமல் நான்கு மாதங்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்த யூதர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசாங்க கஜானாவில் சேர்க்கப்பட்டது.. வெளியேற விரும்பியவர்கள் தங்களின் சொத்துக்களை (தங்கம், வெள்ளி, இன்னபிற தடைசெய்யப்பட்ட பொருட்களைத் தவிர்த்து) நிலவழியாகவோ அல்லது கடல்வழியாகவோ கொண்டு செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது..
புறப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட இறுதி நாட்கள் நெருங்க, நெருங்க யூதர்கள் பதற்றமடைந்தார்கள். நினைத்ததற்கு மாறாக அவர்களின் சொத்துக்களை விற்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.. பெரும் மதிப்புடைய அவர்களின் நிலங்களை ஒன்றிரண்டு துணிகளுக்காக விற்றார்கள். அரண்மனைபோலக் கட்டியிருந்த வீடுகள் ஒன்றிரண்டு கோவேறு கழுதைகளுக்கு பதிலாகக் கொடுக்கப்பட்டன. பெரும் பணக்காரர்களாக வாழ்ந்த யூதர்ள் தங்களின் உடைமைகள் விட்டுவிட்டு அந்தக் கோவேறு கழுதைகளால் சுமக்கமுடிந்த பொருட்களைமட்டும் எடுத்துச் சென்றார்கள்.
ஸ்பெயினில் வாழ்ந்த பல பெரும்பணக்காரர்கள், வியாபாரிகள், பிரபுக்கள் எனப் பலரும் அந்த யூதர்களிடம் பெரும் பணம் கடன்வாங்கியவர்களாக இருந்தார்கள். அந்தக் கடன்களை மீண்டும் தனக்குக் கடன்கொடுத்த யூதனிடம் திருப்பிக் கொடுக்க ஒருவனும் முன்வரவில்லை. எண்ணிப் பார்க்கவே இயலாத நஷ்டத்துடன் அந்த யூதர்கள் மனதில் ஊமை அழுகையுடன் ஸ்பெயினை விட்டுச்செல்லத் தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலரோ தாளமுடியாத கண்ணீருடன் தங்களின் இறந்துபோன பெற்றோர்களைப் புதைத்துவைத்த இடத்தின் மேலிருந்த கற்பலகைகளைத் தோண்டியெடுத்துத் தங்களுடன் கொண்டுசெல்ல முயன்றார்கள். எங்கும் கண்ணீரும், வேதனையும் யூதர்களைச் சூழ்ந்திருந்தது.
வேறு வழியின்றி யூதர்கள் ஸ்பெயினை விட்டு வெளிச்சென்றார்கள். எனினும் அவர்கள் அடைக்கலம் புகுந்த நாடுகளிலும் அவர்களுக்கு நிம்மதி இருக்கவில்லை.
மொராக்கோ மற்றும் அல்ஜியர்ஸ் நாடுகளுக்குள் அடைக்கலம் புகுந்த யூதர்களுக்கு அங்கும் துயரமே பரிசாகக் கிடைத்தது. பல யூதர்கள் சிறைபிடிக்கப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டார்கள். மேலும் சிலர், உண்ண உணவின்றி பட்டினியால் மரித்தார்கள். இன்னும் சிலர் வயிற்றில் தங்கம் கடத்திச்செல்லுவதாகச் சந்தேகிக்கப்பட்டு, அவர்களின் வயிறுகள் கிழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். தப்பிப் பிழைத்த சிலர் மீண்டும் ஸ்பெயினுக்கே சென்று கிறிஸ்தவரகளாக மதம்மாறிவாழ ஆசைப்பட்டார்கள்.
இதற்கு நேர்மாறாக துருக்கியில் யூதர்கள் வரவேற்கப்பட்டு குடியமர்த்தப்பட்டார்கள். இருப்பினும் ஸ்பெயினிலிருந்து இடம்பெயர்ந்த யூதர்களில் பெரும்பாலோர் போர்ச்சுக்கலுக்குச் சென்ரார்கள். போர்ச்சுக்கல் அரசன் இரண்டாம் ஜான் அந்த நாட்டுக்கு வரும் ஒவ்வொரு யூதனும் குடியேற்றவரி செலுத்தவேண்டும் என்றும், அவ்வாறு வந்தவர்கள் அனைவரும் எட்டு மாதங்களுக்குப் பிறகு வேறு நாடுகளுக்குச் சென்றுவிடவேண்டும் எனவும் உத்தரவிட்டான். வேறுவழியின்றி அதனை ஏற்றுக் கொள்ளும் யூதர்கள் போர்ச்சுக்கலுக்குள் அடைக்கலம் புகுந்தார்கள்.
[தொடரும்]
இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.