இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.
தொடர்ச்சி…
கோவாவில் போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவ மதவெறியர்களால் நடத்தப்பட்ட இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்துப் ஃப்ரெஞ்சுப் பயணியான ஃப்ரான்கோ பையார்ட் மேலும் சொல்கையில்,
“கோவாவில் நடத்தப்பட்ட இரக்கமற்ற இன்குசிஷன் விசாரணைகளின்போது மரணமடைந்தவர்கள் எத்தனைபேர்கள் என்று அளவிடுவது மிகமிகக் கடினமான ஒரு விஷயமாகும். எனக்குத் தெரிந்த ஒரு ஹாலந்து குடிமகனுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் குறித்து மட்டும் கூறிக்கொண்டு இதனை முடிக்கிறேன். நகை விற்பனையானான அந்த ஹாலந்தியன் மிகக் கடினமாக உழைத்து ஏறக்குறைய முப்பதிலிருந்து, நாற்பதாயிரம் குரூசோடோக்களை (போர்ச்சுக்கீசிய பணம்) சம்பாதித்து வைத்திருந்தான். அவன் ஒரு போர்ச்சுகல்காரியை மணமுடித்ததிருந்தான். அவர்களிருவருக்கும் திருமணவயதில் ஒரு மிக அழகான மகள் இருந்தாள்.
“அவனுக்கும் அவனது மனைவிக்கும் உண்டான மனஸ்தாபத்தின் காரணமாக, அவன் மனைவி தனது கணவன் பரமண்டலத்திலிருக்கிற பிதாவினையும், அவனது மகனான ஏசுகிறிஸ்துவையும் தவறாகப் பேசினான் என இன்குசிஷன் விசாரணை அதிகாரிகளுக்குப் பொய்யான புகாரளித்தாள். இதனடிப்படையில் அந்த ஹாலந்தியன் கைதுசெய்யப்பட்டதோடுமட்டுமல்லாமல், அவனது சொத்துக்ளும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தச் சொத்துகளில் பாதியளவு அவனது மனைவிக்கும் மீதிப் பாதி இன்குசிஷன் விசாரணை அதிகாரிகளுக்கும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. அதற்குப் பின்னர் அந்த ஹாலந்தியன் என்னவானான் என்று எனக்குத் தெரியவில்லை. அனேகமாக அவன் சித்திரவதைசெய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கவே வாய்ப்பிருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன்.
“அவனே ஒரு போர்ச்சுக்கீசியனாக இருந்திருந்தால் அவனைக் கைதுசெய்து போர்ச்சுகலுக்கு அனுப்பிவைத்திருப்பார்கள். மேற்படி ஆள், ஹாலந்துக்காரனாகவும், பணக்காரனாகவும் இருந்ததால் இங்கேயே அவனது கதையை முடித்துவிட்டார்கள்.
“கோவாவில் நடந்த இன்குசிஷன் விசாரணைகளின் தண்டனைகள் அனைத்தும் பெருவிருந்து நாட்களிலேயே நடந்தன. தங்களின் புனிதப் புத்தகங்களையோ, அல்லது புனிதர்களையோ தவறாக விமரிசித்தவர்கள் என்று நம்பப்பட்டு, சித்திரவதைசெய்யப்பட்டுத் தண்டனையளிக்கப்பட்ட பரிதாபகரமானவர்கள் — சல்ஃபர் [கந்தகம்] ஊற்றி ஊறவைக்கப்பட, தீயின் படம் வரையப்பட்ட உடல்களுடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்கள். அவர்களில் தீயால் கொளுத்தி எரியப்போகிறவர்களைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டிருப்பார்கள். பின்னர் ஊர்வலம் ஒரு பெரிய சர்ச்சையோ, அல்லது சிறைக்கு அருகிலிருக்கும் பெரிய மைதானத்திலோ சென்று கூடும்.
“பின்னர் பாதிரிகள் புனிதப் புத்தகத்தைப் படித்து பிரசங்கம் நிகழ்த்துவார்கள். அதனைத் தொடர்ந்து அந்தக் கைதிகள் அவரவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளின்படி தண்டிக்கப்பட்டார்கள் (Campo Sancto Lazaro). எரித்துக் கொல்லப்பட தண்டனையளிக்கப்பட்டவர்கள் கம்பங்களில் தலைகீழாகக் கட்டிவைக்கப்பட்டுப் பின்னர் அத்தனைபேர்களுக்கும் முன்னிலையில் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.”
ஜெ.சி. பரேட்டோ மிராண்டா என்கிற கோவா வரலாற்றாசிரியர் இன்குசிஷன் விசாரணைகள் என்கிற பெயரில் போர்ச்சுக்கீசிய பாதிரிகள் பிறமதத்தவர்களின்மீதும், குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீதும் நடத்தப்பட்ட கொடூரங்களைக் குறித்துக் கூறுகையில்,“அன்பும், அமைதியும் நிறைந்த மதமாக ஐரோப்பாவில் கூறப்படும் கிறிஸ்தவமதத்தைச் சார்ந்த பாதிரிகள், அவர்களின் நாட்டில் பிறமதத்தவர்களான யூதர்கள் போன்றவர்களுக்கு நடத்திக் காட்டிய கொடூரங்களைக் காட்டிலும் பல மடங்கு குரூரங்களை இந்தியாவின் கோவாபகுதியில் நடத்தினார்கள். இன்குசிஷன் விசாரணையை நடத்திய குழுவினருக்கு இந்தியாவிலிருந்த ஆர்ச்பிஷப்பும், கோவாவை ஆண்ட வைசிராயும்கூட அஞ்சவேண்டிய நிலை இருந்தது. ஒரே ஒரு தவறான வார்த்தையோ, அல்லது தவறான நடவடிக்கையோ, அங்கு பயங்கரத்தை வரவழைத்தது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வையும் சாவையும் தீர்மானிப்பதாகவும் இருந்தது. தங்களின் கைகளில் சிக்கியவர்களைப் பாதாளச் சிறைகளிலிட்டு இரக்கமில்லாமல் சித்திரவதைசெய்து கொன்றார்கள்; அல்லது அவர்களுக்கு உணவும், நீரும் வழங்காமல் பட்டினியிட்டுக் கொன்றார்கள்; அல்லது அவர்களை நெருப்பிலிட்டு எரித்துக் கொன்றார்கள்.” என்கிறார்.
போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நிகழ்ந்த இன்குசிஷன் விசாரணைக் கொடூரங்களைக் குறித்த பல புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தாலும், இந்தியாவில் நிகழ்ந்த இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்த முழுமையான ஆவணங்கள் எதுவும் இன்றைக்குக் கிட்டுவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்த கொடுமைகளைவிடவும் கிறிஸ்தவமத நம்பிக்கையற்றவர்களான ஹிந்துக்களும், முஸ்லிம்களும் வாழ்ந்த கோவாவில் நிகழ்ந்த கொடுமைகள் பலமடங்கானவை என்பதில் எந்த வரலாற்றாசிரியருக்கும் பேதமில்லை.
மிகைல் வின்செண்ட்டே-டி-அபேரோ என்பவர் எழுதியுள்ளபடி, கோவாவின் சிறந்த வராலாற்றாசிரியரான ஃபெலிப்பே-நெரி-சேவியர், தான் கோவாவைக் குறித்து 1864-ஆம் வருடம் ஒரு புத்தகம் எழுதப் போவதாகவும் (Boletim do Governo), அதில் கோவாவைக் குறித்தான நினைவுகளை வெளிக் கொணரப் போவதாகவும் (Memoria Historica de Tribunal da Inquisicao de Goa – Historical Record of the Tribunal of the Inquisition of Goa) சொல்கிறார். அதில் கோவாவில் இருநூற்றைம்பது வருட காலமாக கிறிஸ்துவின் பெயரால் நடந்த கொடூரங்களை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டப்போவதாக மேலும் குறிப்பிட்டிருக்கிறார் என்றாலும் அந்தப் புத்தகம் என்னவாயிற்று என்பது எவருக்கும் தெரியவில்லை.
எதனால் கோவா பயங்கரங்கள் குறித்த தகவல்களோ அல்லது அங்கு நடத்தப்பட்ட பயங்கரங்கள் குறித்த குறிப்புகளோ வெளிவரவில்லை என்பதனைக் குறித்து எவராலும் எளிதாக யூகிக்கமுடியும். ஏனென்றால் இன்குசிஷன் விசாரணை செய்தவர்களுக்கு இருந்த வானளாவிய அதிகாரம் அங்கு வாழ்ந்த அத்தனை குடிமக்களின் மனதிலும் அச்சத்தையும், திகிலையும் ஏற்படுத்தியிருந்தது. எதிர்த்துப் பேசிய, எழுதிய, அத்தனைபேர்களுமே கொடூரமாகத் தண்டிக்கப்பட்டார்கள் என்பதால் எவரும் அதனை எழுதிவைக்கத் துணியாதிருந்திருக்கலாம். இருப்பினும், இன்குசிஷன் விசாரணைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அதனை நடத்தியவர்களால் துல்லியமாக எழுதப்பட்டு ஆவணங்களாக்கப்பட்டன என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. அவை என்னவாகின?
அந்த ஆவணங்கள் அனைத்தும் போர்ச்சுகலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு உயர்பதவிகளிலிருந்த கிறிஸ்தவர்களால் மூடிமறைக்கப்பட்டன. போர்ச்சுகல் அரசாங்கம் அந்தக் கொடூரங்களைக் குறித்து எழுதமுயன்ற அனைவரையும் தடுத்துநிறுத்தியது. இன்றைக்கு கோவாவில் வசிக்கும் எவரும் அந்த ஆவணங்களைக் குறித்தோ, அல்லது கிறிஸ்துவின் பெயரால் நடந்த கொடூரமான கேவலங்களைக் குறித்தோ ஆராய்ந்து எழுத முன்வருவதில்லை. வரலாற்றின் இருண்ட பக்கங்களில் சென்று மறைந்துவிட்டது, கோவா இன்குசிஷன் விசாரணை. எதிர்காலத்தில் எவரேனும் துணிந்து அதனைச்செய்ய முன்வரலாம்.
எக்காரணத்திற்காக இந்தக் கொடுமைகளை எவரும் எழுதிவைக்க முற்படவில்லை என்பதற்கு நெரி-சேவியர் என்பவர் எழுதியதொரு உதாரணத்தைப் பார்க்கலாம்.
“இன்குசிஷன் விசாரணைக் காலத்தில் அப்பாவிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் கோவாவாசிகளின் மனதில் பெரும் அச்சத்தைத் தோற்றுவித்து, அவர்களுக்குள் அழியாததொரு வடுவாகச் சமைந்துவிட்டது. இந்த விசாரணைகள் நடந்ததொரு வீட்டின் பெயரை உச்சரிப்பதற்குக்கூட எவருக்கும் தைரியமில்லை. அதற்குப் பதிலாக ,அந்த வீட்டைக் குறித்து சொல்கையில் அந்தப் பெரிய வீடு (Orlem gor) எனச் சூசகமாகச் சொன்னார்களேயன்றி, அது எந்தவீடு என்று சுட்டிக்காட்டக்கூடத் தயங்கினார்கள். இன்னதற்கும் இன்குசிஷன் விசாரணைகள் முழுமையாக ஆரம்பமாகாத காலகட்டம் அது”
ஒரு வீட்டின் பெயரை உச்சரிப்பதற்குக்கூட ஒரு சாதாரண குடிமகன் அஞ்சினானென்றால் அவன் மனதில் அது எத்தகையதொரு அச்சத்தைத் தோற்றுவித்திருக்கும் என்று உணரலாம். கோவாவைக் குறித்து எழுதப்பட்ட அத்தனை குறிப்புகளையும் போர்ச்சுகீசிய அரசாங்கம் தீவைத்து எரித்தோ, அல்லது வேறு ஏதோ ஒருவகையிலோ அவற்றை அழித்திருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு நடந்தவை அனைத்தும் “அன்பு மதத்தின்” பெயரால் நிகழ்ந்த அழிவுகள் என்பதனைச் சாதாரணன் உணரவேண்டும்.
1739-ஆம் வருடம் மராத்தாக்கள் கோவாவைத் தாக்கினார்கள். அந்தக் காலகட்டத்தில் கோவவைப்பற்றி எழுதப்பட்ட இன்குசிஷன் விசாரணைத் தகவல்கள் அனைத்தும் கோவாவிலேயே இருந்திருக்கின்றன. மராத்தாக்கள் கையில் இந்தத் தகவல்கள் சிக்கிவிடாதிருக்கும் பொருட்டு அவற்றை எரிப்பதற்குப் போர்ச்சுக்கீசிய ஆட்சியாளர்கள் முனைந்திருக்கிறார்கள். இதற்கானதொரு உத்தரவை அன்றைக்கு கோவாவில் இன்குசிஷன் ஜெனரலாக இருந்த அண்டோனியோ-டி-அமரால் குட்டின்ஹா எழுதியிருக்கிறார்.
ஜனவரி 23, 1738-ஆம் வருடம் கோவாவின்மீது மராத்தாக்களின் தாக்குதலை அடுத்து போர்ச்சுக்கீசியர்கள் மர்கோவாவை விட்டு செல்செட்டேவிலிருந்த கிராமங்களுக்குத் தப்பிச் சென்றார்கள். அடுத்த சில நாட்களில் மராத்தாக்கள் கோவாவையும் தாக்குவார்கள் என அஞ்சிய இன்குசிஷன்-ஜெனரல் குட்டின்ஹா அனைத்து இன்குசிஷன் விசாரணைகள் குறித்த தகவல்கள், ஆவணங்கள், சித்திரவதைக் கருவிகள், ஊர்வலங்கள் குறித்த குறிப்புகள் என அத்தனையையும் ஒரு பெட்டியில் வைத்து, மர்கோவா கோட்டைக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையே மராத்தாக்கள் பார்டெஷ் நகரைக் கைப்பற்றினார்கள். அவர்களின் அடுத்த குறி கோவாதான் என அஞ்சிய வைசிராய், போர்ச்சுக்கீசிய பெண்கள், குழந்தைகள் அனைவரையும் மர்கோவாவிற்குச் செல்ல ஆணையிட்டார். இந்தக் குழப்பத்தில் இன்குசிஷன் விசாரணைகள் குறித்த ஆவணங்கள் அனைத்தையும் மர்கோவாவிற்கு எடுத்துச் செல்ல வாகனங்கள் கிடைக்காததால் அங்கிருந்த சிறையின் அறைகளில் பரப்பிவைக்கப்பட்டு, தேவைப்பட்டால் அந்த ஆவணங்களைத் தீக்கிரையாக்கும் எண்ணத்துடன் அதன்மீது உலர்ந்த இலைகளைப் போட்டு மூடினார்கள்.
ஆனால் அன்றைக்கு அதிர்ஷ்டம் போர்ச்சுக்கீசிய ஆட்சியாளர்களின் பக்கம் இருந்ததால் மராத்தாக்களின் தாக்குதல் வெற்றிபெறவில்லை. எனவே அந்தக் ஆவணங்களை அன்று அவர்கள் எரிக்கவேண்டிய தேவை ஏற்படவில்லை.
[தொடரும்]
இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.