கோவாவிற்கு 1511-ஆம் வருடம் வந்த, பின்னர் சீனாவில் போர்ச்சுக்கீசியத் தூதுவராகப் பணியாற்றிய தோமே பைரஸ் என்பன் 1540-ஆம் வருடம் எழுதிய புத்தகமான Suma Oriental-இல் அன்றைய கோவாவைப் பற்றி இப்படிச் சொல்கிறான்,
“தக்காணத்துப் பகுதியையும்விட அதிகமான இறைமறுப்பாளர்கள் கோவா ராஜ்ஜியத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் பெரும் பணக்காரர்கள். ஏறக்குறைய மொத்த கோவாவும் அவர்களின் வசம் இருந்தது. அவர்களின் மூலமாக போர்ச்சுக்கீசிய அரசருக்கு ஏராளமான வரியும் கிடைத்துவந்தது. காம்பே பகுதியை விடவும் அழகான ஆலயங்கள் கோவா பகுதியில் இருந்தன. அதனைப் பராமரிக்கவும், தினப்படி பூசைகள்செய்யவும் பலவிதமான பிராமணர்கள் இருந்தார்கள். மிகவும் சுத்தமும், ஆச்சாரமும் பேணும் அந்த பிராமணர்கள் விலங்குகளைக் கொன்று தின்னாதவர்களாக, பிறரால் சமைக்கப்பட்ட உணவை உண்ணாதவர்கள். அந்தப் பகுதியில் வாழ்ந்த ஹிந்துக்கள் இந்த பிராமணர்களின்மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். தங்களின் மதத்தின்பால் மிகவும் பிடிப்புகொண்டிருந்த இந்த பிராமணர்கள் அரசபதவி அளித்தாலும் முஸ்லிம்களாக மதம்மாறத் தயாராக இல்லாதவர்கள்.”
இந்தப் புத்தகம் கோவாவைக் கைப்பற்றிய அல்புகர்க்கி உயிரோடு இருக்கையில் எழுதப்பட்டது என்பதினை நாம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். அதுவரையில் கோவா ஹிந்துக்கள் எவரும் கொடுமைப்படுத்தப் படவில்லை அல்லது மதம் மாறவேண்டும் என வற்புறுத்தப்படவில்லை என்பது இது உணர்த்துகிறது. தோமே பைரஸ் சொன்னபடி பிராமணர்கள் மட்டுமல்லாமல் அங்கு வாழ்ந்த ஹிந்துக்கள் அனைவரும் தங்களின் மதத்தின்மீது மிகுந்த பற்றுள்ளவர்களாக, அதனை தினப்படி வாழ்க்கையில் பின்பற்றுபவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். பிற்காலத்தில் கிறிஸ்தவர்களாக அவர்கள் மதம்மாற வறுபுறுத்தப்படுகையில் அவர்களில் பலர் மதம்மாற மறுத்து கோவாவைவிட்டு வெளியேறி பிறபகுதிகளில் குடியேறினார்கள்.
இனி கோவா மதமாற்றங்களை வலியுறுத்தி போர்ச்சுக்கீசியர்கள் எடுத்த சில நடவடிக்கைகளைக் குறித்து பார்க்கலாம்.
மதமாற்ற நடவடிக்கைகளை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலாவது, கோவாவில் வாழும் ஹிந்துக்களுக்குத் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து அவர்கள் தங்களின் மதத்தைப் பின்பற்றுவதைக் கடினமான ஒன்றாக்கியது. இதன்படி ஹிந்துக் கோவில்கள் அனைத்தும் இடிக்கப்பட்டதுடன், புதிதாக ஆலயங்கள் எதுவும் கட்டுவதற்கும், புனரமைப்பதறும் தடைகள் விதிக்கப்பட்டன.
ஹிந்து விழாக்கள், பண்டிகைகள், ஹிந்து முறையிலான திருமணங்கள், பூணூல் அணிவது, பிள்ளைகளுக்குப் பூணூல் அணிவிக்கும் விழா நடத்துவது, குழந்தை பிறந்ததை ஹிந்து முறைப்படி கொண்டாடுவது போன்ற சடங்குகள் முற்றிலும் தடைசெய்யப்பட்டன. ஹிந்துப் பூசாரிகள், காலட்சேபம் செய்பவர்கள், ஹிந்து ஆசிரியர்கள் என கிறிஸ்தவ மதம் பரப்புவதற்குத் தடையாக எவரெவர் இருப்பார்கள் என்று கருதப்பட்டார்களோ அவர்கள் அத்தனைபேர்களும் கோவாவிலிருந்து துரத்தப்பட்டார்கள்.
மீதமிருந்தவர்கள் அவர்களின் முன்னோர்களின் நிலங்களில் வரும் வருமானத்தை எடுத்துச் செலவுசெய்ய அனுமதி மறுக்கப்பட்டார்கள். ஹிந்துக்கள் என்கிற ஒரே காரணத்திற்க்காக பல்வேறு அவமானங்களும், கொடுமைகளும், உடல் உறுப்புகளைச் சிதைத்தலும் வெளிப்படையாகச் செய்யப்பட்டது. ஹிந்துக்களின் அனாதைக் குழந்தைகள் பிடிக்கப்பட்டு உடனடியாக கிறிஸ்தவர்களாக ஞானஸ்னானம் செய்துவைக்கப்பட்டார்கள். கூட்டமாகப் பிடிக்கப்பட்டு சர்ச்சுகளுக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஹிந்து ஆண், பெண்கள் அங்கு நடந்த கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தை வலுக்கட்டாயமாக கேட்கவைக்கப்பட்டார்கள்.
இரண்டாவது பகுதி, கிறிஸ்தவத்தைக் குறித்த நல்லெண்ணத்தை எப்பாடு பட்டாவது ஹிந்துக்களிடையே பரப்புவது என்பதாகும். கிறிஸ்தவர்களாக மதம்மாறுபவனுக்கு அரசாங்க வேலைகளைக் கொடுப்பது, ஹிந்து சொத்துச் சட்டங்களை மாற்றி, நியாயமற்ற முறையில் அவனது பெற்றோர்களிடமிருந்து அதிகமான சொத்துக்களைப் பிடுங்கிக் கொடுப்பது, ஊர்களிலும், கிராமங்களிலும் நடக்கும் வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகள் போன்றவற்றில் தலையிட்டு கிறிஸ்தவனாக மதம்மாறியவனுக்குச் சாதகமாக தீர்ப்புவழங்குவது போன்றவை தொடர்ந்து நடத்தப்பட்டன.
இன்குசிஷன் விசாரணைகள் மேற்கண்ட செயல்களுக்குப் பேருதவியாக இருந்தன. மதம்மாற மறுத்த ஒவ்வொரு ஹிந்துவும் நரகத்தில் வாழ்ந்தான். அவனுக்கு எதிராக கண்மூடித்தனமான, ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஏப்ரல் 2, 1560-அன்று கோவாவின் வைசிராயான கான்ஸ்டாண்டினோ பிராகன்கா, கோவாவில் வசிக்கும் ஏராளமான பிராமணர்கள் உடனடியாக போர்ச்சுக்கீசிய அரசருக்குக் கீழ்வரும் கோவாவிலிருந்தும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள், கோட்டைகளிலிருந்தும் உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிட்டான். செலசெட் மற்றும் பார்டெஸ் பகுதிவாசிகள் மட்டும் மீண்டும் ஊருக்குள் திரும்ப அனுமதிக்கப்பட்டார்கள். பிராமணர்களுடன் வைசிராயின் பட்டியலில் பெயர் உள்ள பிறஹிந்துக்களில் உடனடியாக வெளியேறாதவர்கள், வெளியேற மறுப்பவர்கள் அனைவரும் சிறையிலடைக்கப்படுவார்கள், அவர்களின் சொத்து ஜப்தி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அவர்கள் தங்களின் சொத்துக்களை விற்பதற்கு ஒருமாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது.
அதே ஆண்டு ஜூன் 8-ம் தேதி கோவாவில் வசிக்கும் தங்க நகைகள் செய்யும் ஆசாரிகள் போர்ச்சுக்கீசிய கோவாவுக்கு வெளியிலிருக்கும் நிலம் சொத்துக்களை உடனடியாக விற்றுவிட்டு, அவர்களின் குடும்பத்தார் கோவாவுக்கு வெளியில் வசித்தால், அவர்களும் அடுத்த பத்து நாட்களுக்குள் கோவா பகுதிக்குள் வந்துவிடவேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஒருவேளை தங்க நகை செய்யும் ஆசாரகளிடம் நிறையத் தங்கம் இருப்பதாக வைசிராய் நினைத்திருக்கலாம்.
இந்தக் கொடுமையான உத்தரவின் காரணமாக போர்ச்சுக்கீசிய கோவாவில் வாழ்ந்த ஹிந்துக்கள் மூட்டைமுடிச்சுகளுடன் அருகிலிருந்த பகுதிகளுக்குக் கூட்டம் கூட்டமாக இடம்பெயர ஆரம்பித்தார்கள். கோவாவில் அவர்கள் நடத்திக் கொண்டிருந்த வியாபாரங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஹிந்து விவசாயக் கூலிகளும் கோவாவைவிட்டுச் சென்றுவிட்டதால் விவசாயக் கூலிகள் கிடைப்பது அரிதாகியது. அவர்களுடன் கலைஞர்களும், சிறு தொழில் நுட்பங்கள் தெரிந்தவர்களும் சென்றுவிட்டதால் கோவா பெரும் சிக்கலுக்கு உள்ளாகியது.
கோவாவின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்ட நிலையில் புதிய வைசிராயான கோண்டே-டி-ரொனால்டோ ஃப்ரான்ஸிஸ்கோ கோட்டின்ஹா டிசம்பர் 3, 1561-ஆம் வருடம் கோவாவை விட்டு வெளியேறிய ஹிந்துக்கள் அனைவரையும் திரும்ப வரும்படி வேண்டுகோள் விடுத்தார்.
“நான் கோவாவுக்கு வந்தவுடன் அதன் நகரங்களும், கிராமங்களும் ஜனங்கள் எவருமின்றி வெறிச்சோடிக் கிடப்பதனைக் கண்டேன். விவசாயிகள் இல்லாத வயல்களில் ஆற்றுநீர் புகுந்து வயல்வெளிகள் நீரில் மூழ்கியிருந்தன. அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஹிந்துக்கள் மீண்டும் கோவாவிற்கு வரமறுத்து வெளியிலேயே தங்கியிருந்தார்கள். முன்னாள் வைசிராயான காண்ஸ்ட்டண்டினோவின் உத்தரவுப்படி அவர்களின் சொத்துக்களும், நிலங்களும் கோவாவாசிகளுக்குத் தானமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தன. எனவே வைசிராய் கான்ஸ்டண்டினோ ஹிந்துக்கள் உடனடியாகத் திரும்பி வராவிட்டால் அவர்களின் சொத்துக்களை கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்துவிடுவதாக மிரட்டி இன்னொரு உத்தரவினை வெளியிட்டார். இந்தச் சூழ்நிலையை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் ஆர்ச் பிஷப்பும் அவரைச் சார்ந்த கிறிஸ்தவ பாதிரிகளும்தான் என்பதனைக் கண்டுகொண்டேன். எனவே நான் அவர்களுடன் விவாதித்து கான்ஸ்டண்டினோவின் கடுமையான உத்தரவுகளைச் செயல்படுத்தக்கூடாது என வேண்டியதுடன் கோவாவிற்குத் திரும்பிவரும் ஹிந்துக்களுக்கு அவர்களின் பூர்விக நிலத்தை ஒப்படைப்பதாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தேன்.”
இந்த உத்தரவால் சில ஹிந்துக்களும், பிராமணர்களும் மீண்டும் கோவா பகுதிகளுக்குள் வந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், போர்ச்சுக்கீசியப் பகுதியிலிருந்த கிறிஸ்தவ மதவெறியர்கள் தங்களின் அரசருக்குக் கடிதங்கள் எழுதி, புதிய வைசிராயின் உத்தரவுகளை நீக்கச் செய்தார்கள். எனவே நவம்பர் 27, 1563-ஆம் வருடம் புதிய வைசிராயான ஃப்ரான்ஸிஸ்கோ கோட்டின்ஹா, ஆர்ச்பிஷப்பின் பட்டியலில் இருக்கும் பிராமணர்கள் அனைவரும் ஒரு மாத காலத்திற்குள் கோவாவைவிட்டு வெளியேறவேண்டும் எனப் புதிதாக உத்தரவிட்டார்.
இவர்களிலிருந்து தங்களின் நிலங்களைத் தாங்களாகவே உழுது பயிர்செய்த பிராமணர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. அவர்களுடன் மருத்துவர்கள், தச்சர்கள், கருமான்கள், கடைக்காரர்கள், வரிவசூலிப்பவர்கள் ஆகியோர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு கோவாவிலேயே தங்க அனுமதிக்கப்பட்டார்கள்.
அங்கிருந்த விரட்டப்படுபவர்கள் அனைவரும் தங்களின் சொத்துக்களை ஒரு மாதகாலத்திற்குள்ளாக விற்றாகவேண்டும், ஒருவேளை அதனைச் செய்ய இயலாவிட்டால் கோவாவில் இருக்கும் வேறு யாருக்காவது அதனை விற்பதற்கான அதிகாரத்தைத் தரவேண்டும் என்றும், அவர்கள் ஒரு வருட காலத்திற்குள்ளாக அந்தச் சொத்துக்களை விற்றாகவேண்டும் எனவும் கூறப்பட்டது. அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் அவர்கள் அங்கிருந்து வெளியேறாவிட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்ப்ட்டு சிறைகளில் அடைக்கப்படுவார்கள் என்றும், அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் ஜப்தி செய்யப்படும் எனவும் மிரட்டப்பட்டார்கள்.
பிப்ரவரி 7ம் 1575-ஆம் ஆண்டு கவர்னர் அண்டோனியோ மோனிஸ் பர்ரெட்டோவினால் பிறப்பிக்கப்பட்ட இன்னொரு உத்தரவின்படி, கிறிஸ்துவின் பெயரால் கோவாவை விட்டு விரட்டியடிக்கப்பட்ட பிராமணர்கள் எவரும் மீண்டும் போர்ச்சுக்கீசியப் பகுதிக்குள் காலடி எடுத்துவைத்தால் அவர்கள் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு புதிதாக மதம்மாறிய கிறிஸ்தவனுக்குக் கொடுக்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் 1585-ஆம் வருடம் பிறப்பிக்கப்பட்டதொரு தீர்மானம், “அரசர் தனது வைசிராய்களுக்கும், கவர்னர்களுக்கும் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொன்னது என்னவென்றால், அவரது ஆட்சிக்குட்பட்ட இந்தியப் பகுதி எவற்றிலும் பிராமணர்கள் எவரும் குடியிருக்க அனுமதிக்கவே கூடாது எனவும், அவர்களுடன் கிறிஸ்துவமத நம்பிக்கையற்ற மருத்துவர்களும் கிறிஸ்துவ எதிரிகளும் விரட்டியடிக்கப்படவேண்டும். இவர்கள் விரட்டியடிக்கப்பட்ட பிறகே ஏராளமான ஹிந்துக்கள் புதிய கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். எந்த பிராமணனோ அல்லது மருத்துவனோ இதனைத் தடுக்க முயன்றால் அவனைக் குறித்து ஆர்ச்பிஷப்பிற்குத் தெரியப்படுத்தப்படவேண்டும். பின்னர் வைசிராயிடமும், கவர்னரிடமும் இதனைக் குறித்து எடுத்துச்சொல்லி இந்தக் கிறிஸ்தவ எதிரிகளை ஒழித்துக்கட்ட அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்……” எனக் குறிப்பிடுகிறது.
[தொடரும்]
முறையான சமய கல்வியை இந்துக்கள் பெறாத வரையில் இதபோன்ற கட்டுரைகளால் எந்த நன்மையும் விளையாது.சிறுபான்மையினரை எதிர்த்து போராடும் தகுதியை பிற்பட்ட மிக பிற்பட்ட அட்டவணை இந்துக்கள் கலாச்சார ரீதியிலும் சமய ரீதியிலும் பெறவில்லை.தோல்வி அடையப் போவது இந்துக்கள்தான். ஆம் நாம்தான்.
எங்கள் ஊரில் ஸ்ரீமுத்தாரம்மன் ஆலயம் உள்ளது.அதன் நிா்வாகத்தில் 2.5 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள ஸ்ரீபெருமாள் சுவாமி கோவிலும் உள்ளது.சில பக்கதர்கள் ஸ்ரீதுர்க்கா அம்மனுக்கு தனி சன்னதி கட்ட வேண்டும் என்று நன்கொடை பிரித்து கட்டிவிட்டாா்கள்.நிர்வாகச் செலவு பொது நிதியில்தான்.வருடாபிஷேகம் கும்பாபிஷேகம் என்று செலவுகள் ஏற்படும்.
பெருமாள் கோவிலில் எற்கனவே ஸ்ரீவிநாயகர் ஸ்ரீ பேச்சிய்ம்மன் சந்நதிகள் உள்ளன். பின் நவக்கிரக கோவில்கள் கட்டப்பட்டது. பின் தட்சணாமூா்த்தி ஆலயம் கட்டப்பட்டது.பின் இப்போது சோதிடர்கள் பரிகாரமாக அனுமார் வாலில் வெண்ணெய் வைக்க சொல்கின்றாார்கள். ஸ்ரீ அனுமானுக்கு கோவில் இல்லை.எனவே கட்ட வேண்டும் என்று முடிவு செய்து கட்டும் பணி வேகமாக நடந்து வருகின்றது. இனி நந்தியோடு கூடிய சிவன் கோவில் கட்ட வேண்டுமாம்……… ???????????
வழிபாடு என்ற பெயரில் நிா்வாகச் செலவுகளை அதிகரித்து வருடத்திற்கு வீட்டுக்கு போடும் வரியை பல மடங்கு அதகரித்து மக்களை வாட்டி வதைக்கவே இந்த செயல்கள் பயன்படும்.இந்துக்கள் மனிதவளமற்ற செலவுகளைச் செய்து தன்னையும் தனது கூட்டத்தையும் பாழாக்கி வருகின்றான்.
தூத்துக்குடி டயோசிசன் சார்பில் திருச்செந்தூா் உடன்குடி ரோட்டில் வெள்ளாளன் விளை என்ற ஊரில் கலை அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு வருகின்றது. தூத்துக்குடி டயோசிசன் சார்பில் ஒரு மருத்துவ கல்லூரி துவங்க முடிவு செய்யப்பட்டு நடவடிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
இந்துக்கள் உருப்படுவார்களா ? கிறிஸ்தவர்கள் உருப்படுவார்களா ? வாசகர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.