கொலைகாரக் கிறிஸ்தவம் — 23

கோவாவில் ஹிந்துக்களுக்கு எதிரான இன்குசிஷன் விசாரணகள் டவுன் ஹாலுக்கு எதிரே, கதீட்ரல் சதுக்கத்திற்குத் தெற்கில் இருந்த மாளிகையில் (Sambaio Palace) நடத்தப்பட்டன. போர்ச்சுகீசியர்கள் கைப்பற்றுவதற்கு முன்பு அந்த வீடு அடில்ஷா சுல்தானின் தங்குமிடமாக இருந்தது. பின்னர் கோவாவின் போர்சுகீசிய கவர்னர் மற்றும் வைசிராய்கள் தங்குமிடமாக சிறிதுகாலம் இருந்தது. 1554-ல் கோவாவின் வைசிராயாக இருந்த பெட்ரோ மாஸ்காரேன்ஹாஸ் மிகவும் வயதாகி அந்த மாளிகையின் மாடிப்படிகளில் ஏறி இறங்குவதற்குச் சிரமப்பட்டதால் அவரது இருப்பிடம் கோட்டைக்குள் இருந்த வீட்டிற்கு மாற்றப்பட்டது. அவரைத் தொடந்து வந்த கவர்னர்களும், வைசிராய்களும் அங்கேயே தங்க ஆரம்பித்தார்கள்.

சம்பாயோ மாளிகை பாழடைந்து கிடந்த காரணத்தால் 1560ல் கோவாவில் துவங்கப்பட்ட இன்குசிஷன் விசாரணைகளுக்காக அது ஒதுக்கப்பட்டது. அங்கு ஒரு சர்ச்சும், வருபவர்கள் அமர்வதற்காக ஒரு பெரியதொரு முன்னறையும், வரவேற்பறையும், கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளை விசாரணைசெய்வதற்கான விசாரணை அறையும், தலைமை விசாரணை அதிகாரி தங்கும் இடமும், கிறிஸ்தவரல்லாதவர்களுக்கு கிறிஸ்தவமதத்தின் மேன்மையைக் குறித்துப் பாடமெடுக்கும் அறைகளும், எண்ணவே இயலாத பல்வேறு சிறைகளும், வேலைக்காரர்கள், ரகசிய உளவாளிகள் தங்குமிடங்களும், சித்திரவதைசெய்யும் அறைகளும், அந்த மாளிகையில் அமைக்கப்பட்டன. அந்த மாளிகையைச் சுற்றிலும் எழு கையளவு தடிமனுள்ள சுவர்களும் கட்டப்பட்டன.

ஃப்ரெஞ்சுப் பயணியான டெல்லோன் இந்த அரண்மனையைக் குறித்து அவரது புத்தகத்தின் 15-ஆவது அத்தியாயத்தில் அந்த மாளிகையில் ஏறக்குறைய 200 சிறை அறைகள் இருந்ததாகத் தெரிவிக்கிறார். சில அறைகள் சன்னல்கள் இல்லாமல் இருண்ட அறைகளாகவும், ஐரோப்பாவில் அமைக்கப்பட்டிருந்தது போல பாதாளச் சிறைகளை உடையதாகவும் இருந்ததாக அவர் விளக்குகிறார்.

இந்தச் சிறைகளை நேரில் கண்ட பிரிட்டோரியஸ் என்கிற போர்ச்சுகீசியர் எழுதிய கடிதமொன்று மேற்படி மாளிகையைக் குறித்து இவ்வாறு கூறுகிறது,

சில பாதாளச் சிறைகள் கிணறு போன்ற தோற்றமுடைய, பதினைந்து அல்லது முப்பது மீட்டர்கள் (fathoms?) ஆழமுள்ளவை. மேற்புறமிருக்கும் திறப்பின் வழியாக கை, கால்களில் கயிறுகள் பிணைக்கப்பட்ட கைதிகளை உள்ளே இறக்கி, அதன் வழியாகவே மேலே இழுத்து வெளியே எடுப்பார்கள். அந்த மாதிரியான சிறைக்கைதிகளை நானே நேரில் கண்டிருக்கிறேன். அந்தக் கைதிகள் கிணற்றின் கீழே கடுமையான குளிரில் நடுங்கியபடி அமர்ந்திருப்பார்கள். நாளெல்லாம் குளிர்ந்த நீரில் இருப்பதானால் உறைபனிக் கடி ஏற்பட்டு அவர்களின் கை, கால்கள் உறைந்துவிடும். விரல்கள் உதிர்ந்து ஊனமுற்றவர்களாக மாறும் அவர்கள் அந்தச் சிறையிலிருந்து விடுபட்டாலும் வாழ்நாளெல்லாம் ஊனமுற்றவர்களாகவே இருப்பார்கள்.

மேலும் சிலர் சூரியவெளிச்சம் படாத வைகையில் இரவும், பகலும் இருட்டுச் சிறைகளில் அடைபட்டுக் கிடந்தார்கள். அவர்களின் கை-கால்கள் கயிறுகளால் இறுக்கமாகக் கட்டப்பட்ருந்ததால் எங்கும் நகரமுடியாமல் கிடந்த இடத்திலே கிடந்து வலியில் உழன்றார்கள். அவர்களின் மலம்-மூத்திரத்தின்மீது அவர்கள் படுத்து உறங்கவேண்டிய நிலைமை இருந்தது. சாதாரண ஆடு, மாடுகளுக்கு வழங்கப்படும் சுதந்திரம்கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. சரியான உணவும் வழங்கப்படாமல், நிம்மதியாக உறங்க முடியாமல், அச்சத்திலும், பயத்திலும் நடுங்கியபடி அவர்கள் அங்கு பிழைத்துக் கிடந்தார்கள்.

அவர்களைப் பேன்களும், எலிகளும், இன்ன பிற ஜந்துக்களும் அவர்களின் உடல்களைச் சிறிது சிறிதாக கடித்துத் தின்றுகொண்டிருந்தன. அத்துடன் இன்குசிஷன் விசாரணை அதிகாரிகளும், சிறைக்காவலர்களும், மரணதண்டனைகளை நிறைவேறுபவர்களும், அந்த பரிதாபப்பட்ட ஜீவன்களை மிரட்டியும், அடித்தும் ஒடுக்கிக்கொண்டிருந்தனர். இந்தச் சூழ்நிலைக்கு மாத, சில சமயங்கள் வருடங்களுக்கும் ஆளாக்கப்பட்ட அக்கைதிகள் தங்களின் மனோதைரியத்தையும், உடல் உறுதியையும், பொறுமையையும் இழந்து நாட்கள் செல்லச் செல்ல உடல் பலத்தை இழந்து பலகீனமானவர்களாக, கோழைகளாக, வாழ்வில் நம்பிக்கை இழந்தவர்களாக மாறினார்கள். இன்னும் சிலரோ இந்தக் கொடுமைகளைத் தாங்க இயலாமல் அரைப் பைத்தியங்களாக மாறினார்கள். எனக் குறிப்பிடுகிறார்.

எல்லா மதத்தினரையும் சமமாகப் பாவிக்க நினைத்த மார்க்குவஸ்-டி-பொம்பால், ஃபிப்ரவரி 10, 1774ல் இன்குசிஷன் விசாரணைகளை நிறுத்த உத்தரவிடும்வரை, மேற்சொன்ன மாளிகை கைதிகளின் விசாரணைக் கூடமாக, சித்திரவதைக் கூடமாகத் திகழ்ந்தது. போர்ச்சுக்கீசிய கவர்னர்களும், வைசிராய்களும் மீண்டும் அந்த மாளிகையிலே வாழவேண்டும் எனப் பொம்பால் உத்தரவிட்டார். அந்தநேரத்தில் வைசிராயாக இருந்த ஜோஸே பெடரோ-டி-கமாரா, இன்குசிஷன் விசாரணைகளுக்காக அந்த மாளிகையில் செய்யப்பட்ட பல மாற்றங்களைச் சுட்டிக்காட்டி அவற்றையெல்லாம் மீண்டும் மாற்றுவதற்கு ஏராளமாக செலவுசெய்யவேண்டும் எனக் கூறியதால் அந்த யோசனை கைவிடப்பட்டது.

இருப்பினும், 1778ல் போர்ச்சுகீசிய அரசி மரியாவின் உத்தரவின்பேரில் ஹிந்துக்களுக்கு எதிரான இன்குசிஷன் விசாரணைகள் மீண்டும் அதே மாளிகையில் துவங்கப்பட்டன. அந்த மாளிகையை 1808ல் பார்த்த டாக்டர் புக்கானன் என்பவர் எழுதிய குறிப்புகளைப் படித்த — அன்றைய இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் ஹிந்துக்களுக்கு எதிரான இன்குசிஷன் பயங்கரங்களை நிறுத்தும்படி போர்ச்சுகீசிய அரசிற்கு வேண்டுகோள்விடுத்தார்கள்.

அதே மாளிகையை 1821-ஆம் வருடம் கண்ட அபே-கோட்டின்யூ, அந்த மாளிகை கவனிப்பாரின்றி பாழடைந்து கொண்டிருந்ததாகத் தெரித்தார்:

இன்குசிஷன் விசாரணைகள் நிகழ்ந்த அந்த மாளிகை இப்போது வேகமாகப் பாழடைந்து கொண்டிருக்கிறது. அந்த மாளிகையில் கதவுகளோ அல்லது ஜன்னல் கதவுகளோ இல்லை. எங்கு நோக்கினும் புதர்களும், குப்பையும் குவிந்து மாளிகையின் வாசலை அடைத்துக் கொண்டிருக்கின்றன. 1812ல் பிரிட்டிஷ்காரர்கள் கோவாவில் தங்கியிருக்கையில் போர்ச்சுக்கீசிய ரியோ-ஜெனெய்ரோ நீதிமன்றந்திலிருந்து கோவாவில் ஹிந்துக்களுக்கு எதிரான இன்குசிஷன் விசாரணைகளை நிறுத்துவதற்கான உத்தரவு வந்தது. அதன் பின்னர் அந்த மாளிகை உபயோகத்திலில்லை எனத் தெரிகிறது.

1828-1830 கால கட்டத்தில் கோவா அரசாங்கம் அந்த மாளிகையை இடிக்க உத்தரவிட்டது. அந்த மாளிகையிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்கள் பஞ்சிமில் இன்னொரு மாளிகை கட்டுவதற்காக உபயோகப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதனைப் பற்றி ஜெ.என். ஃபொன்சேகா என்பவர், இடித்துத் தகர்க்கப்பட்ட இன்குசிஷன் விசாரணை மாளிகையின் மீதங்கள், ஃப்ரான்ஸிஸ் சேவியரின் உடல் கண்காட்சியில் வைக்கப்பட்ட 1859-ஆம் வருடத்திலும் அங்கேயே இருந்தன. அந்த இடிபாடுகளை நீக்கிக் களைவதற்கு அழைக்கப்பட்ட கூலியாட்கள் அங்கு பல பாதாள அறைகளைக் கண்டுபிடித்தார்கள். அங்கு ஏராளமான மனித எலும்புகள் ஒரு ஒரு பெரும் படகு அல்லது திமிங்கலத்தைப் போன்ற தோற்றமுள்ள அமைப்பு ஒன்றின் அடியில் இருப்பதனைக் கண்டறிந்தார்கள். குறிப்பிட்டிருக்கிறார்.

இன்றைக்கு அந்தக் கட்டிடம் இருந்த இடத்தை கோவாவாசிகளே அறிவார்களா என்பது சந்தேகம்தான்.

இன்குசிஷன் விசாரணைகளை நடத்துபவரின் அதிகாரம் வானளாவியது. ஏனென்றால் அவர் பரமண்டலத்தில் இருக்கும் பிதாவிற்காக வேலைசெய்கிறவர். ஏறக்குறைய அரசனுக்கும் மேலான அதிகாரம் அவருடையது. அரசனுக்கு இருக்கும் அதிகாரம் அவனது குடிமக்களுக்கு மட்டுமேயானது. ஆனால் பரமண்டலத்து பிதாவிற்காக ஆன்மீக வேலைசெய்பவர் அவனுக்கும் அதிக அதிகாரத்தில் இருப்பதுதானே சரியானது?!

ஃப்ரெஞ்சுப் பயணியான டெல்லோன், கோவா இன்குசிஷன் விசாரணைகளை நடத்திய முதன்மை தண்டனையளிப்பவர் (Grand Inquisitor) மட்டுமே குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் பிரயாணம் செய்ய இயலும், கோவாவின் ஆர்ச் பிஷப்பை விடவும் அதிகாரம் அவருக்கு இருந்தது. வைசிராய், கவர்னர், ஆர்ச்பிஷப் போன்றவர்களைத் தவிர்த்து, கண்ணில் தென்படுகிற அத்தனைபேர்களின்மீது அவரது அதிகாரம் செல்லுபடியாகியிருந்தது. போர்ச்சுகலிலிருந்து இறையாண்மை அமைப்பிலிருந்தோ (Conselho Supremo) அல்லது அங்கிருக்கும் நீதிமன்றங்களிலிருந்தோ ரகசிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டால் கோவாவிலிருக்கும் எவரையும் கைது செய்யும் உரிமையும் அவருக்கு இருந்தது என்று எழுதியுள்ளார்.

இன்குசிஷன் விசாரணைகள் தொடங்கிய காலகட்டத்தில் கோவா ஆர்ச்பிஷப்பிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் பின்னர் அது குறைக்கப்பட்டது. கோவாவின் கவர்னர்களுக்கும் இன்குசிஷனைச் செய்தவர்களுக்கும் இடையே தகராறுகளும் ஏற்பட்ட சம்பவங்களும் உண்டு. அந்தச் சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, கவர்னர்கள் தங்களின் பேச்சைக் கேட்டு ஹிந்துக்களின் மீது நடவடிக்கைகள் எடுக்க மறுக்கிறார்கள் எனக் கூறும் குற்றச்சாட்டுகள் அடங்கிய கடிதங்கள் போர்ச்சுகீசிய அரசனுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. கவர்னர் கோர்டின்ஹோவும் அவரது மனைவியும் ஹிந்து விழாக்களில் கலந்துகொள்வது பற்றியும், இன்னொரு பெண்மணியான டோனா அனா எஸ்பான்ஹொலிம் ஹிந்து மந்திரவாதிகளைக் கலந்து ஆலோசிப்பது பற்றியுமான குற்றச்சாட்டுக்களும் உண்டு.

சில சமயங்களில் பல போர்ச்சுகீசிய கிறிஸ்தவர்களும்கூட இன்குசிஷன் விசாரணை நடத்தியவர்களால் கைதுசெய்யப்பட்ட சம்பவங்களும் நடந்தேறின.

[தொடரும்]

One Reply to “கொலைகாரக் கிறிஸ்தவம் — 23”

  1. This inquisition treatment can be compared with the brutal and dangerous treatment thrusted on the Jews in concentration camp. The former was in the name of religion and the latter by Hitler the dictator.
    It is not known to Goans well.I was in Goa from 80 to 84 and visited St.Franciez Savior church. No trace of this incident came from people’s mouth from anywhere there. Now I feel guilty

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *