நடைபெற்றுக்கொண்டிருக்கும் 17வது பாராளுமன்றத்திற்கான தேர்தல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. மூன்றாவது அணி ஒன்று இப்போது இல்லைவே இல்லை. நரேந்திரமோடி என்கிற ஒற்றை மனிதனை வீழ்த்துவதற்காக இதுவரை பரம எதிரிகளாக இருந்த கட்சிகள்கூட ஒன்று சேர்ந்திருக்கின்றன.
இந்த தேர்தலில் முக்கியப்பிரச்சாரமாக எந்தப் பிரச்சினைப் பேசப்படுகிறது?
எனக்குத்தெரிந்து விலைவாசி உயர்ந்துவிட்டது, மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று பிரச்சாரம் செய்யாத தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்றும் ஊழல் மலிந்துவிட்டது என்றும் பிரச்சாரங்கள் நடைபெறவில்லை. எம்பிக்கள் கொள்ளையடித்துவிட்டார்கள் என்று எங்கேயும் பிரச்சாரம் நடைபெறவில்லை. பொருளாதாரம் படுகுழியில் வீழ்ந்துவிட்டது என்று பேசுவதில்லை. விவசாயம் அழிந்துவிட்டது என்று யாரும் கூக்குரல் இடவில்லை. வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது என்று யாரும் ஏளனம் செய்யவில்லை. அதாவது மக்களை நேரடியாக பாதிக்கிற பிரச்சினைகளைப் பற்றி யாரும் முக்கியப் பேசுபொருளாகப் பேசுவதில்லை. அதற்கு மாறாக புதிய பிரச்சாரமாக ’மதச்சார்பின்மையைக் காக்க’ என்று பிரச்சாரம் செய்யப்பட்டுவருகிறது.
மதசார்பின்மைக்கு ஆபத்து வந்துவிட்டது. ஆகவே மதசார்பின்மையை காக்க மோடிக்கு வாக்களிக்க கூடாது. சிறுபான்மையினர் தாக்கப்படுகிறார்கள். பட்டியல் சமூதாயத்தினர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று முக்கியப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதுதான் இந்த தேர்தலில் மையப் பிரச்சாரம்.
இதுபோன்றப் பிரச்சார சூழலில் இன்று அண்ணல் அம்பேத்கர் ஒரு வாக்காளராக இருந்திருந்தால் எந்த கட்சிக்கு வாக்களித்திருப்பார்? இது ஒரு அதிகப்படியான கற்பனைக் கேள்வியாக தோன்றலாம். ஆனால் அவசியமான கேள்வி. ஏன் இந்த கேள்வி தோன்றியது? மதச்சார்பின்மை, சிறுபான்மையினர், பட்டியல் சமுதாய நலன் போன்றவற்றில் அதிகப்படியான கவனத்தைக் கொடுத்து களப்பணியாற்றியவர் அண்ணல் அம்பேத்கர். தீர்க்கமான பார்வையுடையவர். இவற்றுக்கான தீர்வுகளை முன்வைத்தவர். அதனால் இவற்றைப்பற்றி இன்று பிரச்சாரம் மையம் கொண்டிருப்பதால் அண்ணல் அம்பேத்கர் இருந்திருந்தால் இன்று எந்தக் கட்சிக்கு வாக்களித்திருப்பார் என்பதை அலச வேண்டியுள்ளது.
இன்று தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பட்டியல் சமூக கட்சிகள் ஆகியவை முக்கியக் கட்சிகளாக இருக்கின்றன. மாநிலக் கட்சிகள் இவர்களோடு கூட்டணி வைத்தும் வைக்காமலும் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இறங்கியிருக்கின்றன.
காங்கிரஸ் கட்சி
1885ல் பிரிட்டிஷ்காரரால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி தற்போது பாஜகவிற்கு அடுத்த பெரிய கட்சியாக இருக்கிறது. சில மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து ஆண்டு கொண்டிருக்கிறது காங்கிரஸ். அண்ணல் அம்பேத்கர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்ததிலிருந்து காங்கிரஸ் கட்சியை கடுமையாக எதிர்த்து வந்தார். பட்டியல் சமூகத்தவர்களை வாக்குவங்கியாக காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறதே தவிர அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த மறுக்கிறது காங்கிரஸ் என்று தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். அவர் எந்த ஒரு தேர்தலிலும் காங்கிரசுடன் கூட்டணியை வைத்ததில்லை. அவர்களை எதிர்த்தே அரசியலில் களம் கண்டார்.
அண்ணல் அம்பேத்கர் எந்த அளவிற்கு காங்கிரஸ் கட்சிக்கு எதிரியாக செயல்பட்டாரோ அதே அளவிற்கு காங்கிரசும் அவரை கடுமையாக எதிர்த்தது. 1931ல் லண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் அண்ணல் அம்பேத்கரை தீவிரமாக எதிர்த்தது காங்கிரஸ். அவர் ஒட்டுமொத்த பட்டியல் சமூகத்தவர்களுக்கும் பிரதிநிதி அல்ல என்று காங்கிரஸ் வாதிட்டது. காங்கிரசின் இப்பேச்சைக் கண்டித்து நாடு முழுவதும் அண்ணல் அம்பேத்கருக்கு ஆதரவுக் கடிதங்கள் வந்தது.
1937ல் நடைபெற்ற பட்டியல் சமூகத்தவர்களின் மாநாட்டில் அம்பேத்கர் ‘தொழிலாளர்களின், ஏழைகளின் நலன்களைப் பற்றி கலைப்படாதவர் காந்தி என்பது என்னுடைய அழுத்தமான கருத்தாகும். காங்கிரஸ் ஒரு புரட்சிகரமான அமைப்பாக இருந்திருப்பின் அதில் நான் சேர்ந்திருப்பேன். ஆனால் காங்கிரஸ் ஒரு புரட்சிகரமான கட்சியாக இல்லை என்பது என் திடமான கருத்தாகும். சாதாரண மக்கள் அவரவர் விரும்புகின்ற தொழிலைச் செய்வதற்கான வாய்ப்பையும் உரிமையையும் பெற்று வளருவதற்கான வழியமைத்துத் தரவல்ல சமூகப் பொருளாதாரச் சமத்துவத்தைத் தன் கொள்கையாக அறிவிக்கக்கூடிய துணிவு காங்கிரசுக்கு இல்லை. உற்பத்திச் சாதனங்கள் எல்லாம் சில சுயநலமிகளின் ஆதிக்கத்தில் இருக்கின்றவரையில் இதைச் செய்ய முடியாது. காந்தியின் தத்துவப்படிப் பார்த்தால் ஏருடன் பூட்டியுள்ள இரண்டு மாடுகளுடன் மூன்றாவது மாடாகத்தான் விவசாயியைப் பிணைக்க வேண்டியிருக்கிறது’ என்று காட்டமாகவே விமர்சனம் செய்தார்.
காங்கிரசையும் காந்தியையும் அவர் அளவுக்கு விமர்சனம் செய்தவர்கள் அன்று யாரும் இல்லை. காங்கிரசும் காந்தியும் தீண்டப்படாத மக்களுக்கு செய்தது என்ன? என்று தனி புத்தகமே எழுதி வெளியிட்டார் அண்ணல் அம்பேத்கர். அப்புத்தகத்தில் காந்தியும் காங்கிரசு கட்சியும் பட்டியல் சமுதாயத்தவர்களை எப்படி ஏமாற்றுகிறது, எப்படி அவர்களை நசுக்குகிறது என்பதை மிக விரிவாகவே எழுதியிருக்கிறார்.
பாகிஸ்தான் பிரிவினையின்போது பட்டியல் சமுதாய மக்கள் பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டார்கள். கற்பழிக்கப்பட்டார்கள். சுகாதாரமற்ற வேலைகளை செய்ய வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டார்கள். அவர்களை மீட்க அண்ணல் அம்பேத்கர் பிரதமராக இருந்த நேரு அவர்களுக்கு கடிதம் எழுதினார். ஒரு படையை அனுப்ப ஆலோசனை கூறினார். இதை எதையுமே நேரு செய்யவில்லை. இது அண்ணல் மனதில் நீங்கா வடுவாக இருந்து வந்தது.
அரசியல் அமைப்பு சட்ட அவையிலும் மற்றும் சட்ட அமைச்சர் பதவியும் அவருடைய தகுதியின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது. அவரைத் தவிர வேறு யாரும் அந்தளவிற்கு அந்தப் பணியை செய்ய முடியாது என்ற காரணத்தால்தான் கொடுக்கப்பட்டது. அப்போதுகூட அவர் ’என் சமூக மக்களுக்கு இதன்மூலம் நன்மை கிடைக்கும் என்ற காரணத்தால் இப்பதவியை ஏற்றுக்கொள்கிறேன். அப்படி கிடைக்க வழியில்லையெனில் அதை தூக்கி எறிந்துவிட்டு வந்துவிடுவேன்’ என்று சொல்லித்தான் ஏற்றுக்கொண்டார். அதன்படிதான் பட்டியல் சமூக மக்களுக்கு ஏதும் நன்மை இல்லை என்பதாலும் மேலும் பல காரணங்களாலும் தன் சட்ட அமைச்சர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு வந்தார்.
தன் சட்ட அமைச்சர் பதவியை ஐந்து காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அண்ணல் கூறியிருந்தார். அதில் தனக்கு சட்ட அமைச்சர் பதவியை அளிக்க முன்வந்தபோது, பிறகு திட்ட அமைச்சர் பதவியை அளிப்பதாக வாக்களித்த நேரு, ஒவ்வொரு அமைச்சரவை குழுவிலும் எவ்வாறு தன்னைச் சேர்க்காமல் விட்டுவிட்டார் என்பதையும்
பட்டியல் சமூகத்தவர்களின் முன்னேற்றத்தில் காங்கிரஸ் அரசு அக்கறையற்று இருக்கிறது என்பதையும்
காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறந்த வழி காஷ்மீரை பிரிப்பதேயாகும். இந்துக்களும் பௌத்தர்களும் வாழும் பகுதியை இந்தியாவுடனும், முஸ்லீம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தானுடனும் இணைத்திட வேண்டும் என்பதையும்
இந்தியாவின் அயல்நாட்டுக்கொள்கை நண்பர்களைவிட எதிரிகளையே அதிகமாக உருவாக்கியிருக்கிறது என்பதையும்
இந்துசட்ட மசோதாவின்மேல் நேரு கொண்டிருந்த அக்கறையின்மை என்பதையும் குறிப்பிட்டுக் காட்டியிருந்தார். அவர் உடல்நலமின்மையால் ராஜினாமா செய்யவில்லை. காங்கிரசால் ஏமாற்றப்பட்டதாலேயே ராஜினாமா செய்கிறேன் என்று கூறினார்.
1951ல் அவருடைய இந்திய பட்டியல் சமூதாயப் பேரவையின் தேர்தல் குறித்த கூட்டத்தில் காங்கிரஸ், இந்துமகாசபை, கம்யூனிஸ்டு கட்சி ஆகியவற்றுடன் உடன்பாடு வைத்துக்கொள்ளாது என்று அறிவித்தார். 1952 தேர்தலில் 1,23,576 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளரான என்.எஸ்.கஜ்ரோல்கர் 1,37,950 வாக்குகள் பெற்றார். ஒதுக்கப்பட்ட இடத்திற்காக அளித்திருக்கப்பட வேண்டிய 50,000 வாக்குகள் திட்டமிட்டே வீணாக்கப்பட்டன. இதனால் அம்பேத்கர் தேர்தல் கமிஷன் விசாரணை செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். அவர் தோற்றதுக்கு காரணம் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் என்று கூறினார் அண்ணல் அம்பேத்கர்
அண்ணல் அம்பேத்கரின் தொடர் முயற்சியின் காரணமாக காங்கிரஸ் அரசு 1953ல் தீண்டாமைச் (குற்றங்கள்) சட்டம் 1953 என்ற தலைப்பிட்ட மசோதாவை வெளியிட்டது. 1954ல் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தது. இம்மசோதா மீது அம்பேத்கர் உரையாற்றியபோது பல ஆலோசனைகளை வழங்கினார். அதற்குப் பிறகு இந்த சட்டத்திற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் பார்த்துக்கொண்டது காங்கிரஸ். அதில் திருத்தங்கள் கொண்டுவந்தாலும் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே போனது. 2005 முதல் 2014 பிப்ரவரிவரை சில திருத்தங்களை கொண்டுவர பட்டியல் சமூகத்தவர்கள் கேட்டார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி அதை கிடப்பில் போட்டது.
2008ல் மாநிலங்களவையில் பட்டியல் சமூகத்தவர்கள் (பணியிடங்கள் மற்றும் சேவைகளில் இட ஒதுக்கீடு) மசோதா 2008 என்ற ஒரு மசோதாவை காங்கிரஸ் கொண்டுவந்த து. இந்த மசோதாவின் முக்கிய அம்சம் என்னவென்றால் 47 அரசு நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிப்பதாகும். அதாவது உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடிகள், ஐஐஎம்கள், மருத்துவ மேற்படிப்பு கல்வி நிறுவனங்கள், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மற்றும் 5 மத்திய பல்கலைக் கழகங்கள் இவற்றிற்கு இட ஒதுக்கீட்டுப் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. மேலும் பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியினத்தவருக்கு இட ஒதுக்கீட்டை நிராகரிக்கும் அதிகாரிகளுக்கு துறை மாற்றம் தவிர வேறு தண்டனைகள் வழங்க க்கூடாது என்ற 18வது பிரிவை அறிவித்தது.
காங்கிரஸ் ஆண்ட 60 ஆண்டுகளில் அக்கட்சிக்கு ஒருதடவைகூட பட்டியல் சமூகத்தவர்கள் தேசிய தலைவராக இதுவரை வரமுடியவில்லை. அல்லது வரவிடுவதில்லை. அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிப்பதில்லை. 2019ல்கூட கர்நாடகத்தில் காங்கிரசில் தாங்கள் பட்டியல் சமூகத்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக தகுதி இருந்தும் முதல்வர் பதவி மறுக்கப்படுகிறது என்று மனம் நொந்து கூறியிருந்தார்.
உயிருடன் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கிய நிலையில் அரசியல் சட்டத்தை உருவாக்கிக்கொடுத்த அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்க கூட மனம் இல்லை காங்கிரசுக்கு. அந்த அளவிற்கு எதிரியாக நினைக்கிறது காங்கிரஸ்.
பட்டியல் சமூத்தவர்களுக்கு சமூக, பொருளாதார, அரசியல் அதிகாரத்தை இதுவரை ஆண்ட காங்கிரசால் தர முடியவில்லை. அதனை உணர்ந்துதான் அன்றே பட்டியல் சமூகத்தவர்களுக்கு அவர் சொன்ன அறிவுரை ‘காங்கிரசில் சேருவது என்பது தற்கொலைக்கு ஒப்பானதாகும்’ என்பதுதான். 2004ல் காங்கிரஸ் 145 இடங்களையும், 2009ல் 206 இடங்களையும் வென்ற காங்கிரஸ் 2014ல் வெறும் 44 இடங்களை மட்டுமே பெறுவதற்கு காரணம் 21 சதவீதம் மக்கள்தொகை கொண்ட பட்டியல் சமூகத்தவர்களை ஆட்சியில் இருந்தபோது புறக்கணித்ததன் விளைவுதான் அது.
தான் கடைசிவரை போராடிய நோக்கத்திற்கு – பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு இதுவரை காங்கிரஸ் எந்தவிதமான திட்டமோ அதற்கான முயற்சியோ எடுக்காதது மட்டுமல்ல, தன் கொள்கைகளை குழிதோண்டி புதைக்கும்போது அண்ணல் அம்பேத்கர் காங்கிரசுக்கு வாக்களிப்பாரா?
கம்யூனிஸ்ட் கட்சி
1920-25களில் “தொழிலாளர்களின் நலனுக்காக” என்று ஆரம்பிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் மிக வேகமாகவே வளர்ந்து நாளடைவில் பிரிந்து சில மாநிலங்களில் ஆட்சியையும் பிடித்தது. மேற்கு வங்காளம், திரிபுரா, கேரளா என்று ஆட்சியைப்பிடித்து ஆண்டது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு கொடுத்தவர்கள் பெரும்பாலும் பட்டியல் சமூகத்தவர்களே. ஆனாலும் வர்க்கப் பார்வையோடு இருந்த கம்யூனிஸ்டுகள் பட்டியல் சமூகத்தவர்கள் அனுபவித்து வந்த சாதிய கொடுமைகளைப் புறம்தள்ளிவிட்டனர். தொழில்வளர்ச்சியும் வர்க்கப் போராட்டமும் சாதிய வேறுபாடுகளை ஒழித்துவிடும். எனவே சாதியை ஒழிப்பதற்கு தனியான இயக்கங்களோ, போராட்டங்களோ நடத்தத் தேவையில்லை என்று கம்யூனிஸ்டுகள் கருதினார்கள். கம்யூனிஸ்டுகளின் இப்பார்வையும் வர்க்க ஒற்றுமை என்ற முழக்கமானதும் பட்டியல் சமுதாய ஒற்றுமையை குலைக்கும் என்று கருதினார் அவர். ஒரு பட்டியல் சமூகத்தவன் என்னதான் முன்னேறினாலும் அவன் சாதியை வைத்து கீழானவனாகவேப் பார்க்கும் மனநிலை தொடர்கிறது. அதனால் சாதியை ஒழிக்க சிறப்பான இயக்கங்கள், போராட்டங்கள் தேவை என்று கருதினார் அண்ணல் அம்பேத்கர்.
ஆரம்ப காலத்திலிருந்தே அண்ணல் அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளை எதிர்த்தே வந்திருக்கிறார். காரணம் மகாராஷ்டிராவில் கம்யூனிஸ்டுகள் எடுத்த இரட்டை நிலைப்பாடே. பம்பாய் நகரிலுள்ள நெசவு ஆலைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் எடுத்தபோது, அவ்வேலைக்கு மனுச் செய்த பட்டியல் சமுகத்தவர் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை. காரணம், நெசவு ஆலையில் பணிபுரியும் சமயம், நாடாவில் நூலை வாயில் வைத்து உறிஞ்சி எடுக்க வேண்டும். இதனால் எச்சில் தீட்டுப்படும் என்பதற்காக இவர்களை எடுக்கவில்லை. இதுபற்றிக் கம்யூனிஸ்டுக் கட்சி போராட்டம் நடத்த வேண்டும் என்று எஸ்.ஏ.டாங்கேயை அண்ணல் அம்பேத்கர் கேட்டபோது, அதை அவர் மறுத்ததோடு மட்டுமல்லாமல் இதற்காக அம்பேத்கர் போராட்டம் நடத்தியபோது ஆதரவும் தரவில்லை.
கம்யூனிஸ்டுகள் பட்டியல் சமுதாய தொழிலாளர்களின் பிரச்சினைகளில் தலையிடாத காரணத்தால் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் 1928, 1929ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பம்பாய் நெசவாலை வேலைநிறுத்தங்களை அவர் எதிர்த்ததோடு இந்த வேலை நிறுத்தங்களில் கலந்துகொள்ள வேண்டாமென்று தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுத்த பாக்லே, போலே மற்றும் இதர சீர்திருத்தவாதிகளுடன் அவரும் சேர்ந்து கொண்டார். கம்யூனிஸ்டுகள் நடத்தும் தொழிலாளர் இயக்கத்தைப் பற்றி பேசும்போது அவர், ’நான் அதில் சேரும் சாத்தியக்கூறே இல்லை. நான் அவர்களின் பரம்பரை எதிரி. கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் தொழிலாளர்களைத் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காகச் சுரண்டுபவர்கள்’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
1951ல் மகாராஷ்டிரத்தில் உள்ள விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சியின் தலைவர்களுக்கும் அண்ணல் அம்பேத்கரின் இயக்கத்துக்கும் தேர்தல் உடன்பாடு காண்பது பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அப்போது சங்கர் ராவ் முரே தலைமையில் இயங்குகின்ற விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி இரஷ்யாவின் கொள்கைகளை ஆதரிப்பதாக இருப்பதுடன் வகுப்புவாத நோக்கங்கொண்ட ஒரு முதன்மையான மராட்டிய அமைப்பாக இருக்கிறது என்று அம்பேத்கர் கருதினார். ஆகவே விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியுடன் எத்தகைய தொடர்பும் வைத்துக்கொள்ள அவர் மறுத்துவிட்டார். மேலும் முரே கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவாளராக இருக்கிறார் என்று செயப்பிரகாச நாராயணனும் அம்பேத்கரிடம் கூறியிருந்தார்.
அண்ணல் அம்பேத்கர் ஒரு ஜனநாயகவாதி. தனது நோக்கங்களை அடைவதற்காக அரசியலமைப்புச் சட்ட ரீதியான முறைகள் மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றையே அவர் உறுதியாக நம்பியிருந்தார். இதற்கு எதிராக கம்யூனிஸ்டுகள் எடுத்துக்கூறிய தீவிரமான, புரட்சிகரமான நடவடிக்கைகளை அவர் தீவிரமாக எதிர்த்தார். கம்யூனிச அமைப்பு வன்முறையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறிய அம்பேத்கர், ஜலந்தர் நகரில் உள்ள டி.ஏ.வி. கல்லூரியில் நடைபெற்ற மாணவர் நாடாளுமன்றத்தில் பேசியபோது, ‘இந்த நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுப்போனால், நான் குறிப்பிட்ட காரணங்களால் அது தோற்றுத்தான் போகும். அதன் விளைவாகக் கலகம், அராஜகம், கம்யூனிசம் தோன்றும். வாரிசு வழி அதிகாரத்தை மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்று ஆட்சியிலுள்ளவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் இந்நாடு அழிந்தே போகும். கம்யூனிசம் இங்கு வரலாம். ரஷ்யா நமது நாட்டில் மேலாண்மை பெற்றுத் தனிமனித சுதந்திரத்தை நசுக்கி, நமது சுதந்திரத்தையும் ஒழித்துவிடும். அல்லது ஆட்சியதிகாரத்திலிருக்கும் கட்சி தோல்வியடைந்தால் அதிருப்தியுற்ற ஒரு பிரிவு மக்கள் கலகத்தில் ஈடுபடலாம். அராஜகம் அப்போது தலைதூக்கும்’ என்றார். வேறொரு சமயத்தில், ‘கம்யூனி
சமும் சுதந்திர ஜனநாயகமும் ஒன்றிணைந்து செயல்படும் என்று கூறப்படுவது அறிவுக்குப் பொருந்தாக்கூற்று என்பதே என் கருத்தாகும். ஏனெனில் கம்யூனிசம் ஒரு காட்டுத்தீயைப் போன்றதாகும். தன்னை எதிர்க்கும் எல்லாவற்றையும் எரித்து அழித்துவிடும்’ என்று கூறினார் அவர்.
அண்ணல் அம்பேத்கர் கம்யூனிச ரஷ்யா, கம்யூனிச சீனாவையும்கூட நம்பவில்லை. ஐ.நா.வில் சீனா நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியா ஆதரவு கொடுக்க கூடாது என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். அதற்கு பதிலாக இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் அப்போதைய காங்கிரஸ் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அண்ணல் அம்பேத்கரின் இந்த தொலைநோக்கு பார்வையை கவனிக்காததன் விளைவு இன்று இந்தியா அனுபவிக்கிறது. பாகிஸ்தானில் உள்ள மசூத் அசாரை தீவிரவாதியாக அறிவிப்பதற்கு ஐ.நா.வில் கம்யூனிச சீனா அதே நிரந்தர உறுப்பினர் பதவியை வைத்து தடுத்து வருகிறது.
1955ல் கம்யூனிச சீனாவைப் பற்றி பேசும்போது, ‘இந்தியாவும் சீனாவும் இப்போது நட்புநாடுகளாக இருந்தாலும் இந்த நட்புறவு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை யாராலும் திட்டவட்டமாகக் கூற முடியாது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு எப்போதும் இருக்கவே செய்கிறது’ என்று கூறிய அம்பேத்கர், பாராளுமன்ற அவையில் பேசும்போது ஒரு எச்சரிக்கையை வலியுறுத்திச் சொன்னார். அவர் பேசும்போது, ‘சீனா அதனுடைய எல்லையை இந்தியாவின் எல்லைவரையில் கொண்டுவந்துவிட பிரதமர் அனுமதித்துவிட்டார். இந்த உண்மைகளையெல்லாம் ஒருசேர நினைக்கும்போது, உடனடியாக என்று கூற முடியாவிடினும் எதிர்காலத்தில் இந்தியா ஆக்கிரமிப்புக்குள்ளாகும் அபாயம் இருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பை யார் செய்வார்களெனில் ஆக்கிரப்புச் செய்வதையே வழக்கமாக்கிக் கொண்டவர்கள் செய்வார்கள்’ என்று உறுதிபடக்கூறினார். இந்த தொலைநோக்கு எச்சரிக்கையையும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறந்தள்ளிவிட்டன. விளைவு 1962ல் சீனா நம்மீது போர் தொடுத்து பல ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டது. அன்று ஏற்பட்ட தலைவலி இன்னும் இந்தியாவிற்கு தீரவில்லை. அன்று கம்யூனிஸ்டுகள் இந்தியாதான் போர் தொடுத்தது, சீனாவின்
நிலங்களை ஆக்கிரமித்துள்ளது என்று புரளியை மக்கள் மத்தியில் கிளப்பிவிட்டனர். காங்கிரசோ புல், பூண்டு முளைக்காத இடங்கள் அவை என்று விட்டுக்கொடுத்தது.
மனிதர்களுக்கு ஆன்மிகம் அவசியம் என்பதில் உறுதியாக இருந்தார் அண்ணல் அம்பேத்கர். கம்யூனிசமோ மதம் ஒரு அபின் என்று சொல்லியது. இதை பல இடங்களில் மறுதலித்தார் அம்பேத்கர். கம்யூனிச தத்துவத்தை பன்றிகளோடு ஒப்பிட்டார் அண்ணல் அம்பேத்கர். ‘அறிஞர் கார்லைல், அரசியல் பொருளாதாரத்தைப் பன்றிகளின் தத்துவம் என்று கூறினார். கார்லைல் கூறியது தவறுதான். ஏனென்றால் மனிதனுக்குப் பொருளியல் வசதிகள் வேண்டும். ஆனால் பொதுஉடைமைத் தத்துவம் அதேபோலத் தவறானதே. ஏனென்றால் அந்தத் தத்துவத்தின் நோக்கம், மனிதர்களும் பன்றிகளைப் போன்றவர்கள்தான் என்பதுபோல, அவர்களைக் கொழுக்க வைப்பதாகவே இருக்கிறது. மனிதன் பொருளியல் வளர்ச்சியும் அதே சமயம் ஆன்மிக வளர்ச்சியும் பெற வேண்டும்’ என்றார் அம்பேத்கர். எந்த அளவிற்கு கம்யூனிசம் மேல் வெறுப்பு இருந்திருந்தால் பன்றிகளோடு கம்யூனிசத்தை ஒப்பிட்டு இருப்பார் என்பதை புரிந்துகொள்ளலாம்.
அண்ணல் அம்பேத்கர் கம்யூனிசத்தை பரம எதிரியாக கருதினார். அதுபோலவே கம்யூனிஸ்டுகளும் அவரை பரம எதிரியாக நினைத்து செயல்பட்டனர். அண்ணல் அம்பேத்கரை கம்யூனிஸ்டுகள் ‘பெட்டி பூர்ஷ்வா மிஸ்லீடர்’ என்றும் ‘ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி’ என்றும் விமர்சனம் செய்தனர். 1952ம் ஆண்டு தேர்தலில் அம்பேத்கர் தோல்வியடைந்தார். அதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று கம்யூனிஸ்டுகளும்தான். இரட்டை உறுப்பினர் தொகுதியில் ஒரு வாக்கினை அளிக்க வேண்டும் என்றும், மற்றொரு வாக்கினை அம்பேத்கருக்கு அளிப்பதைத் தவிர்க்கும் வகையில் செல்லாததாக்கிவிட வேண்டும் என்றும் கம்யூனிஸ்டுகளுக்கு எஸ்.ஏ.டாங்கே உத்தரவிட்டிருந்தார். அதாவது எதிரியான காங்கிரஸ் வெற்றிபெற்றாலும் பரவாயில்லை. பரம எதிரியான அம்பேத்கர் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதில் கம்யூனிஸ்டுகள் கவனமாகவே இருந்தார்கள்.
கம்யூனிஸ்டுகள் ஆண்ட மாநிலங்களில் பட்டியல் சமுதாயத்தவர்களின் முன்னேற்றம் என்பது எள்ளளவும் உயரவில்லை. 21-6-1977ல் முதல் மந்தியாக பதவியேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜோதிபாசு தொடர்ந்து 23 ஆண்டுகள் மேற்குவங்காளத்தை ஆண்டார். அப்போதுகூட கை ரிக்ஷா வண்டி ஒழிக்கப்படவில்லை. பட்டியல் சமுக மக்களின் வாழ்வில் மறக்க முடியாத சம்பவமாக சுந்தர்பான் காடு படுகொலை பார்க்கப்படுகிறது. அகதிகளாக வந்த பட்டியல் சமூக மக்கள் சுந்தர்பான் காடுகளில் இருந்த மரிச்ஜாப்பியில் தங்கியிருந்தனர். அவர்களை வெளியேற உத்தரவிட்டது கம்யூனிச அரசு. உழைத்து உழைத்து உருவாக்கிய மரிச்ஜாப்பியை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர். உடனே கம்யூனிச அரசு பல ஆயிரம் பட்டியல் சமூகத்தவரை சுட்டுக் கொன்றது. தப்பிதவர்களை போர்க்குற்றவாளிகளைப் போல வேறு மாநிலங்களுக்கு கடத்தியது.
நந்திகிராம் மக்களுடைய விளைநிலங்களைப் பிடுங்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்தது கம்யூனிச அரசு. அதை எதிர்த்து போராடிய பட்டியல் சமூக மக்களையும் விவசாயிகளையும் சித்ரவதை செய்தது மட்டுமல்லாமல் சுட்டுக் கொன்றது. மிகப்பெரிய கலவரம் வெடித்தது.
மண்டல் கமிஷனின் முன்பு எங்கள் மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற வரையறையில் யாரும் இல்லை என்று கம்யூனிச அரசு அறிக்கை கொடுத்தது. பின்பு ஆதாரத்துடன் எடுத்துக்காட்டியப் பின் ஏற்றுக்கொண்டது.
இன்றுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவில் ஒரே ஒரு பட்டியல் சமூகத்தவர்கள்கூட உறுப்பினராக அனுமதிப்பதில்லை.
ஆகவேதான் 2004ல் பாராளுமன்றத்தில் 43 உறுப்பினர்களைப்பெற்ற கம்யூனிஸ்டுகள், அடுத்த தேர்தலான 2009ல் 20ஆக குறைந்தார்கள். 2014ல் 9ஆக குறுகிப்போனார்கள். மேற்குவங்காளத்தையும், திரிபுராவையும் இழந்து நிற்கிறார்கள்.
தான் கடைசிவரை போராடிய நோக்கத்திற்கு – பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு இதுவரை கம்யூனிஸ்டுகள் எந்தவிதமான திட்டமோ அதற்கான முயற்சியோ எடுக்காதது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான பட்டியல் சமூக மக்களை படுகொலை செய்த, தங்கள் கட்சியிலேயே சமூகநீதிக்கு குழிதோண்டி புதைத்த கம்யூனிஸ்டுகளுக்கு அண்ணல் அம்பேத்கர் வாக்களிப்பாரா?
பட்டியல் சமுதாய கட்சிகள்
அண்ணல் அம்பேத்கர் செட்யூல்டு கேஸ்ட் பெடரேஷன் ஆப் இந்தியா என்ற கட்சியைத் துவக்கி போட்டியிட்டார். பின்பு எல்லோரையும் இணைத்துக் கொள்கிற வகையில் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்க முன்னேற்பாடுகளை செய்தார். ஆனால் அதற்குள் இறந்துவிட்டார். அவர் இறந்த 10 மாதங்களுக்குப் பின்பு இந்தியக் குடியரசு கட்சி அவரின் விசுவாசிகளால் துவங்கப்பட்டது. நாளடைவில் அவைகளெல்லாம் பிளவுபட்டு தனித்தனியான சிறு சாதி அரசியல் கட்சியாக உருவெடுத்தன. அவைகள் போராட வலிவுற்று இருந்தன. அதனால் ஆளும் கட்சியை சார்ந்தே இருப்பது அவசியமாயிற்று. பெரிய கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தி அதன்மூலம் அவர்களையே சார்ந்து இருக்கும் அவலநிலை இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
உதாரணத்திற்கு தமிழ்நாட்டு பட்டியல் சாதி அரசியல் கட்சிகளையே எடுத்துக்கொள்வோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த பெரிய கட்சியோடு கூட்டணி வைக்கிறதோ அவர்களை சமூகநீதி காவலர்கள் என்று போற்றும். கூட்டணி முறிந்தபின் அந்த சமூகநீதி காவலர்கள் பட்டியல் சமூத்தவர்களின் எதிரிகள் என்று விமர்சனம் செய்யப்படுவார். திருமாவளவன் அவர்கள் ஒருதடவை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நிறுத்தப்பட்டார். தற்போதைய தேர்தலில் தங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்கிறார். இந்த நடைமுறை தங்கள் அரசியல் வாழ்வு அஸ்தமிக்காமல் இருக்க எடுக்கப்படுகிற முடிவு மட்டுமல்ல தங்கள் சுயலாபத்துக்காக பெரிய கட்சிகளின் வற்புறுத்தலுக்கு இணங்கி போதலும் இருக்கிறது. இனி ரவிக்குமார் வெற்றிபெற்றாலும் அவர் திமுகவைச் சார்ந்தவர்தான். ஏற்கனவே ரவிக்குமார் பட்டியல் சமூக கட்சிகள் செய்யாதவற்றை – செய்யத் தயங்கியதை திமுக செய்துள்ளது என்று எழுதி தன் திமுக விசுவாசத்தை வெளிக்காட்டினார். திமுகவின் எஸ்சி அணியாக விடுதலை சிறுத்தைகள் செயல்பட்டு வருகிறது என்ற விமர்சனம் மிகையல்ல. அதனால்தான் விசிக தமிழ்நாட்டில் 21சதவீதம் பட்டியல் சாதி இருந்தும் 2சதவீத வாக்குகூட வாங்க முடிவதில்லை.
இந்திய அளவில் மாயாவதி பட்டியல் சமூக கட்சியாக காட்டிக்கொண்டாலும் அந்த மக்கள் நம்பத் தயாராயில்லை. பாராளுமன்றத் தேர்தலான 2009ல் 21 இடங்களை அளித்த மக்கள் 2014ல் ஒரு இடத்தைக்கூட மாயாவதிக்கு அளிக்கவில்லை. அதாவது மாயாவதியை நம்பவில்லை. காரணம் முதல்வராக இருந்தபோது பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை. மாறாக யானை சின்னத்தை பல்வேறு இடங்களில் சிலைகளாக வைத்து ஊழலில் திளைத்ததால்தான். சட்டமன்றத் தேர்தலில் பட்டியல் சமூகத்தவர்களுக்கு குறைவான இடங்களையும், முஸ்லீம்களுக்கு, உயர்சாதியினருக்கு அதிகப்படியான இடங்களையும் அளித்த மாயாவதியை பட்டியல் சமூக மக்கள் நம்பத் தயாராயில்லை. பஸ்வான், அத்வாலே போன்றவர்கள் மாநில அரசியலில் தவிர்க்கமுடியா தலைவர்களாக ஆக முடியாததற்கு காரணம் பட்டியல் சமுதாயத்தவர்களின் நம்பிக்கையை இழந்ததால்தான்.
இவர்கள் ஏதாவது ஒரு மாநிலக் கட்சியையோ தேசிய கட்சியையோ பிடித்துக்கொண்டு பயணப்படுகிறார்கள். தங்களுக்கான கொள்கையாக எதையும் வைத்துக்கொள்ளாமல் பெரிய கட்சிகள் நினைப்பதை செயல்படுத்தி காட்டும் எஸ்சி அணியாகவே செயல்பட்டு வருகின்றனர்.
அதனால்தான் அண்ணல் அம்பேத்கர் ‘நான் இழுத்துக்கொண்டு வந்திருக்கிற தேரை நீங்கள் முன்நோக்கி இழுத்து செல்லாவிட்டாலும் பரவாயில்லை. பின்நோக்கி தள்ளிவிடாதீர்கள்’ என்று அப்போதே பட்டியல் சமூகத்தவர்களிடம் அறிவுறுத்தினார். இப்படி பெரிய கட்சிகளின் தொங்கு சதையாக இருக்கும் பட்டியல் சமூக கட்சிகளுக்கா அண்ணல் அம்பேத்கர் வாக்களிப்பார்?
பாரதிய ஜனதா கட்சி
1951ல் உதயமான ஜனசங்கம் 1980ல் பாரதிய ஜனதா கட்சியாக மாற்றம் பெற்றது. இந்துக்களின் கட்சியாக வேண்டுமென்றே பரப்புரை செய்யப்பட்ட பாஜக இன்று அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. அதேசமயம் சிறுபான்மையினர் விரோதி, பட்டியல் சமூக விரோதி என்றெல்லாம் முலாம் பூசப்பட்டு தொடர்ந்து விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. அண்ணல் அம்பேத்கர் இருந்த 1956வரை ஜனசங்கம் மீது விமர்சனம் வைத்ததாக வரலாறு இல்லை. ஜனசங்கத்தை எதிர்த்து பேட்டியோ, போராட்டமோ எதுவும் அம்பேத்கர் நிகழ்த்தியதாக இல்லை.
ஆனால் ஜனசங்கம் முதல் பாரதிய ஜனதா கட்சிவரை அண்ணல் அம்பேத்கர் மீது மிகுந்த பற்று வைத்திருந்தது. பாஜக ஆதரவுடன் ஆட்சி செய்து கொண்டிருந்த போதுதான் அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது. அண்ணலின் உருவப்படம் பாராளுமன்ற மைய வளாகத்தில் வைக்கப்பட்டது. வாஜ்பாய் ஆட்சியில்தான் அண்ணலின் பிறந்தநாள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் உள்ள மாவ் என்ற ஊரில் அண்ணல் பிறந்த இடம் விலைக்கு வாங்கப்பட்டு அம்பேத்கர் நினைவு இல்லமாக பாஜக அரசால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
தற்போதைய நரேந்திரமோடி அரசால் அம்பேத்கரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகள் நடந்தேறியது.
- அண்ணல் அம்பேத்கர் தபால்தலை வெளியிடப்பட்டது.
- அண்ணல் அம்பேத்கர் உருவம் பொறித்த ரூ.125, ரூ.10 நாணயம் வெளியிடப்பட்டது.
- லண்டனில் அம்பேத்கர் தங்கியிருந்த இடம் விலைக்கு வாங்கப்பட்டு நினைவகம் அமைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
- ஜப்பானில் அம்பேத்கரின் சிலை திறக்கப்பட்டது.
- காஷ்மீரில் அம்பேத்கரின் சிலை திறக்கப்பட்டது.
- அண்ணல் அம்பேத்கரின் எழுத்துகள், பேச்சுகளுக்கு தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
- வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்திலும் அண்ணல் அம்பேத்கரின் எழுத்துகள், பேச்சுகள் வெளியிடப்பட்டுள்ளது.
- இந்தியத் தூதரகம் உள்ள அனைத்து நாடுகளிலும் அண்ணல் அம்பேத்கரின் 125வது பிறந்தநாளை கொண்டாடியது.
- 22ஆண்டுகள் டெல்லியில் கிடப்பில் போடப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர் பன்னாட்டு ஆய்வு மையத்தை ரூ.198 கோடியில் கட்டி திறந்து வைக்கப்பட்டது.
- இந்து மில் இடத்தை விலைக்கு வாங்கி அம்பேத்கர் நினைவு இல்லத்தை கட்டுகிறது
- அம்பேத்கர் வாழ்ந்த டெல்லி இல்லத்தை நினைவு இல்லமாக ஆக்கியது.
- முதன்முதலாக அம்பேத்கரின் சட்டப்பணியை பெருமைபடுத்தும் விதமாக நவம்பர் 26ஐ அரசியல் அமைப்பு சட்ட நாளாக கொண்டாடியது.
- மக்கள் எல்லோரும் பயன்படுத்தும் செயலிக்கு ‘பீம் செயலி’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
அண்ணல் அம்பேத்கருக்கு மட்டுமல்ல பட்டியல் சமுதாயத்தவரின் முன்னேற்றத்திலும் மிகப்பெரிய திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தி காட்டியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
- முத்ரா கடன் மூலம் சிறு, குறு தொழில் செய்யும் பட்டியல் சமுதாயத்தவருக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க திட்டத்தை கொண்டுவந்தது பாஜக
- ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வங்கி கிளையும் ஒரு பட்டியல் சமூகத்தவருக்கு ரூ.1கோடி பிணையம் இல்லாமல் கடன் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.
- பிஎச்டி படிக்கும் மாணவர்களின் உதவித்தொகை ரூ.18000லிருந்து ரூ.25000 ஆக உயர்த்தியது பாஜக
- காங்கிரஸ் அரசால் கிடப்பில் போடப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது பாஜக
- ஐஐடியில் படிக்கும் பட்டியல் சமூக மாணவர்களுக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளித்துள்ளது பாஜக.
- போட்டி தேர்வுகளுக்கு டியூசன் படிக்கும் மாணவர்களின் கட்டணத்திலிருந்து விலக்கு அளித்துள்ளது பாஜக
- பட்டியல் சமூகத்தவர்களின் தொழிலை முன்னேற்ற SC/ST HUB கொண்டுவந்துள்ளது பாஜக.
- எஸ்சி/எஸ்டி மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்திற்கு ஒருலட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி சாதனை படைத்துள்ளது பாஜக.
இப்படி அண்ணலின் புகழுக்கு பெருமை சேர்க்கும்வகையில் பல பணிகளை செய்துள்ள பாஜக, பட்டியல் சமூகத்தவர்களின் முன்னேற்றத்திற்கும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இட ஒதுக்கீடு சரியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வன்கொடுமை தடுப்பு திருத்த மசோதாவில் உள்ள சில பிரிவுகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்த உடனே அதை எதிர்த்து பாராளுமன்றத்தில் மீண்டும் அதை கொண்டுவந்து காத்தது பாஜக. தேசியக் கட்சிகளில் இதுவரை தேசிய தலைவராக ஒரு பட்டியல் சமூகத்தவர் வந்த தில்லை. ஆனால் பாஜகவில் தேசியத் தலைவராக பங்காரு லட்சுமணன் என்கிற பட்டியல் சமூகத்தவர் நியமிக்கப்பட்டார். இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 7 அமைச்சர் பதவி பட்டியல் சமூகத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது பாஜக ஆட்சியில் மட்டும்தான்.
அண்ணல் அம்பேத்கரின் நோக்கமான பட்டியல் சமூகத்தவர்களின் பொருளாதார முன்னேற்றம், சமூக முன்னேற்றம், சமூகநீதி, அரசியலதிகாரம் ஆகியவற்றை தொடர்ந்து செயல்படுத்திவரும் பாஜகவிற்கு அண்ணல் வாக்களிப்பாரா?
முடிவு உங்களிடம்….
இன்று அண்ணல் அம்பேத்கர் யாருக்கு வாக்களித்திருப்பார்?
என்று ஒரு கேள்வி கேட்டுவிட்டு, ஒரே ஒரு ஃபோட்டோவைப் போட்டு “குறிப்பாக” பதிலும் சொல்லி விட்டீர்கள்.