கொலைகாரக் கிறிஸ்தவம் – 26

கோவாவிற்குத் திரும்பி வரமறுக்கும் வியாபாரிகளைக் குறித்து வைசிராய், ஜனவரி 18, 1727லும், மற்ற சமயத்திலும் போர்ச்சுகீசிய அரசருக்கு எழுதிய கடிதங்களில், இன்குசிஷன் விசாரணைகள் காரணமாக பல நல்ல ஹிந்துக்கள் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டதின் காரணமாக கோவாவின் வடபகுதியிலிருந்த மக்கள் அனைவரும் வெளியேறியதால், தாணா மாவாட்டத்தில் இருக்கும் பல நல்ல போர்ச்சுகீசிய தொழிற்சாலைகள் வேலைசெய்ய ஆட்கள் கிடைக்காமல் நஷ்டமடைந்திருப்பதாகவும், அங்கிருந்து சென்றவர்கள் பாம்பேயில் (மும்பை) சிறப்பான தொழிற்சாலைகள் அமைத்துக் கொண்டிருப்பதாகவும் விளக்குகிறார்.

மேளும், போர்ச்சுகீசிய அரசாங்கம் உடனடியாக பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து பம்பாயை மீண்டும் விலைக்கு வாங்கிக் கொள்ளவேண்டும் என்றும்,. (போர்ச்சுக்கீசியர் வசமிருந்த பம்பாயை பிரிட்டிஷ்காரர்கள் விலைக்கு வாங்கினார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்). பம்பாயில் பிரிட்டிஷ் தொழிற்சாலைகள் நன்றாக நடப்பதாகவும், ஒவ்வொரு வருடமும் 1,60,000 ஜெராஃபின் (போர்ச்சுகீசிய கரன்ஸி)  லாபம் வருவதாகவும், அங்கு (பம்பாயில்) நிலவும் மதப்பிணக்குகளற்ற சுதந்திரச் சூழ்நிலையே இந்தத் தொழில்வளப் பெருக்கத்திற்கு முக்கிய காரணம் எனவும் எச்சரிக்கிறார்.

ஆர்க்கைவோ போர்ச்சுகீஸ் ஓரியன்டல் [Archivo P0rtugues Oriental] என்ற பத்திரிகையை நடத்தும் குன்ஹா ரிவாரா என்பவர், “போர்ச்சுகீசிய மதவெறியர்களால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஹிந்துக்கள் அந்தப் பிரச்சினைகள் எதுவுமில்லாத பம்பாய்க்குப் போய் அந்த நகரைப் பொருளாதார ரீதியில் வெற்றியடையச் செய்கிறார்கள்,” என்கிறார். கோவாவில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக்களில் பலருக்கு வியாபாரம் செய்வதற்கோ அல்லது அரசுப் பணிகளில் ஈடுபடுவதற்கோ தேவையான கல்வியும், தகுதிகளும் இல்லை எனப் போர்ச்சுகீசிய புனித விசாரணை நடத்தியவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

மதம்மாறிய பெரும்பாலோர் போர்ச்சுகீசியர்கள் தரும் பொருளுதவிக்காகவும், பதவிகளுக்காகவும் மதம்மாறியவர்களேயன்றி தகுதியானவர்கள் அல்ல. இருப்பதை வைத்துக் கொண்டு தாங்கள் சொகுசான வாழ்க்கையை வாழலாம் என்பதற்காக மதம்மாறிய ஹிந்துக்கள் எப்படி கடினாமாக உழைப்பார்கள்? எனவே புதிதாக மதம்மாறியவர்கள் போர்ச்சுகீசிய மதவெறியர்களால் விரட்டியடிக்கப்பட்ட ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் இடத்தை இட்டு நிரப்ப இயலவில்லை என்பதே உண்மை.

இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்தும் அதன் பின்விளைவுகளைக் குறித்தும் பெயரறிவிக்காத ஒருவர், 1778-ஆம் வருடம் புனித விசாரணைகள் நிறுத்தப்பட்டபிறகு, எழுதிய குறிப்புகள் இன்றைக்கும் லிஸ்பன் நகரில் இருக்கும் நூலகத்தில் இருக்கிறது. அது கோவாவில் நிகழ்ந்த மத பயங்கரங்களைக் குறிப்பிட்டு, சர்ச்சுகளும், அரசாங்கமும் தனித்தனியே இயங்க வேண்டும் எனச் சொல்கிறது..

போர்ச்சுகீசிய அரசு ஒரு காலத்தில் கிழக்கின் பெரும்பாலான நாடுகளில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தார்கள். கிழக்கின் பெரும்பகுதியை தங்கள் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்திருந்தார்கள். எனினும் மதவெறியர்கள் அங்கு தலையெடுத்து பேயாட்டம் ஆடி ஓய்ந்த பிறகு போர்ச்சுகீசிய அரசு சுருங்கி கோவா, டையூ, டாமன் போன்ற இந்தியப் பகுதிகளிலும், சீனாவின் மக்காவ் பகுதிகளிலும் மட்டுமே ஆட்சி புரியும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த அவல நிலைக்கு கட்டற்ற கிறிஸ்தவ மதவெறியே காரணம் என்று மேற்கண்ட எழுத்தாளர் உறுதிபடக் கூறியிருக்கிறார்.

கோவாவில் இன்குசிஷன் விசாரணைகளை நடத்த அனுமதிக்கும் போர்சுகீசிய அரசன் மூன்றாம் ஜொகோவோ, அந்த விசாரணைகள் கிறிஸ்துவர்களிடம் மட்டுமே நடத்தப்படவேண்டும் எனவும் பிற மதத்தவரகள் இதனால் பாதிக்கக்கூடாது என்று கூறியே அனுமதி அளித்தான். எனினும் மூன்றாம் ஜெகோவோ இறந்தபிறகு அந்த உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டு, அது பிற மதத்தவர்களான ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் மீது திணிக்கப்பட்டது. இதனால் ஹிந்துக்கள், முஸ்லிம்கள், , வியாபாரிகள், அரசுப்பணி செய்பவர்கள் கோவாவை விட்டு வெளியேறியதன் காரணமாக கோவாவின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. எனவே கோவாவில் குடியேறிய போர்ச்சுகீசியர்கள் பிழைப்பிற்காக இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் சென்று குடியேறி அங்கு வேலைகள் செய்ய ஆரம்பித்தார்கள். உதாரணமாக வாழ்வதற்கு வழியற்ற முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போர்ச்சுகீசிய படைவீரர்கள் அருகிருந்த அரசர்கள் மற்றும் போர்ச்சுகீசிய எதிரிகளிடம் பணிபுரிய ஆரம்பித்தார்கள்.

இலங்கையைப் பிடித்த போர்ச்சுகீசியர்கள் அங்கிருந்த குடிமக்களை மிகவும் கொடூரமான முறையில் நடத்தினார்கள். காலான்பினி என்னுமிடத்திலிருந்த சீனப் பேரரசரின் கல்லறையை உடைத்துச் சிதைத்தார்கள். மகாடோஸ் கடற்கரை (Mahatos?) ஓரமிருந்த பல கோவில்களை இடித்து உடைத்தார்கள் போர்சுகீசியர்கள். இடிந்த கோவிலைக் கண்டு கதறி அழுதுகொண்டிருந்தவர்களைப் பிடித்துத் தூக்கிலிட்டுக் கொன்றார்கள். தங்களின் பண்பாட்டையும, கலாச்சாரத்தையும் தூக்கியெறிந்து கொலைவெறியும், கொள்ளையடிப்பதனையும், குரூர புத்தியையும் கைக் கொண்டார்கள் போர்ச்சுகீசியர்கள்.

போர்ச்சுகிசிய அரசு உச்சத்திலிருந்த காலத்தில் பிடிக்கப்பட்ட பகுதிகளிலில் இருந்த 150க்கும் மேற்பட்ட அரசுகளிடமிருந்து அரசனால் கப்பம் எதனையும் பெற இயலவில்லை. இந்தக் கப்பங்கள் இல்லாமல் போர்ச்சுகீசிய ராணுவத்தையும், கப்பல் படையையும், கோட்டைகளையும் அதற்குத் தேவையான ஆயுதங்களையும், பொருட்களையும் வாங்க இயலாத நிலை உருவானது. அந்தப் பகுதிகளில் குடியேறி ஆட்சி புரிந்து கொண்டிருந்தவர்கள் தங்களின் முன்னோர்களைப் போன்ற வீரமற்றவர்களாக மாறியிருந்தார்கள். எனவே கிறிஸ்தவ மதவெறியைக் கையிலெடுத்துத் தனது குடிமக்களைத் தாங்கவொண்ணாத் துயரத்தில் ஆழ்த்திய போர்ச்சுகீசியர்களைக் கண்டு சாதாரண குடிமகன் அஞ்சி நடுங்கினான்.

போர்ச்சுகீசியர்கள் இந்தியா வந்ததற்கு முக்கிய காரணம் வியாபாரம்தான். ஆனால் அவர்கள் அதனைக் கைவிட்டு மதவெறியைக் கையிலெடுத்தார்கள். மதமும், வியாபாரமும் ஒன்றுக்கொன்று எதிரானவை. எனவே போர்ச்சுகீசிய அரசின் அழிவை எவராலும் தடுக்க இயலவில்லை எனக் குறிப்பிடுகிறார் அந்த பெயரறிவிக்காத எழுத்தாளர்.

வியாபாரம் பல நாட்டு, பல மொழி, பல இன மக்கள் ஒன்றிணைய ஒரு முக்கிய காரணம். அம்மாதிரியான மக்கள் கூட்டம் தங்களின் கலாச்சாரத்தை எந்தத் தடையுமின்றித் தொடருவதற்கான அத்தனை பாதுகாப்புகளையும் அளிப்பதே ஒரு சிறந்த ஆட்சியாளனின் அடையாளம். ஏனெனில் வேற்றுமைகளே பல சமயத்தில் ஒருவரை ஒருவர் இணைக்கும் பாலமாகவும் இருக்கும்.

ஆனால் கிறிஸ்தவ மதவெறிபிடித்த இன்குசிஷன் புனித விசாரணைகள் மக்களை ஒன்றிணைய விடாமல் அவர்களை கிறிஸ்தவர், கிறிஸ்தவரல்லாதவர் என இரண்டாகப் பிரித்தன. இதன் காரணமாக அது சாதாரண பிற மதத்துக்கார குடிமகனை அச்சத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்தியது. இதே மதவெறிச் செயல்கள்  லண்டனிலோ அல்லது ஆம்ஸ்டர்டாமிலோ நடத்தப்பட்டிருந்தால் அந்த நகரங்கள் சுடுகாடுகளாக மாறியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஃப்ரான்ஸின் இரண்டாம் பிலிப்ஸ் மன்னன் இதே இன்குசிஷன் விசாரணைகளை ஃப்ளாண்டர்ஸ் நகரில் துவங்கியபோது அதன் காரணமாக அங்கு ஏற்பட்ட வியாபாரத் தடங்கல்கள் பொதுமக்களின் கோபமாக மாறி ஃப்ரான்ஸில் ஃப்ரெஞ்சுப் புரட்சி ஏற்பட முக்கிய காரணமாகியது என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.

அதில் பாடம் பயின்ற ஃப்ரான்ஸ் மற்றும் ஜெர்மனி தேசங்கள் இந்தக் கொடுமையிலிருந்து தப்பின. ஏனென்றால் இந்த இரண்டு நாடுகளும் படுபயங்கரமான மதச் சண்டைகளில் ஈடுபட்டவை. அதிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொண்டார்கள். ஆனால் போர்ச்சுகீசியர்கள் மூடத்தனமாக கிறிஸ்தவ மதவெறியைக் கையிலெடுத்து கோவாவையும் அதனுடன் போர்ச்சுக்கலையும் அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றார்கள்.

மேற்கண்ட எழுத்தாளர் குறிப்பிடும் இன்னொரு விஷயம் என்னவென்றால், கோவாவில் புனித விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகு பல்வேறு பாதிரிகள் தங்குவதற்குப் பல்வேறு கான்வெண்ட்டுகள் ஆரம்பிக்கப்ப்ட்டன. அந்த காலகட்டத்தில் கோவாவில் பயணம் செய்தவார்கள் ஏறக்குறைய 60 கான்வெண்ட்டுகளைக் கண்டதாகக் குறிப்பிடுகிறார்கள். இந்தக் கான்வெண்டுகளில் ஏறக்குறைய 20,000 பாதிரிகள் தங்கியிருந்ததாகவும், அவர்களுக்குத் தேவையான உணவும், உடையும் கோவாவாசிகளிடமிருந்து வசூலிக்கப்பட வரியிலிருந்து கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இறுதியில் கோவாவின் வியாபாரம் இந்தக் கான்வெண்ட் வாசிகளின் கையில் சிக்கிப் பின்னர் அதுவே போர்ச்சுகீசிய அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும், அவமானத்திற்கும் காரணமாயிற்று. அங்கிருந்த பாதிரிகள் அரசனைக் கூட மதிக்காகமல் கப்பல், கப்பலாக தங்களுக்குத் தேவையானவற்றை வரவழைத்து உண்டு கொழுத்தார்கள்.

கோவாவில் இன்குசிஷனை நீக்கியதோடு மட்டும் நில்லாமல் அதனுடனேயே காண்வெண்டுகளில் உண்டு திரியும் இந்த கொழுத்த பாதிரிகளையும், அவர்களது நடவடிக்கைகளையும் முடக்கியிருக்க வேண்டும் என எழுதுகிறார் அந்த எழுத்தாளர்.

கிறிஸ்துவின் பெயரால் வெறியாட்டம் நிகழ்த்திய இந்த பாதிரிகளின் கொடூரச் செயல்களால் இந்திய ஹிந்துக்களின் மனதில் கிறிஸ்துவ மதத்தினைக் குறித்த பெரும் வெறுப்பு விதைக்கப்பட்டது என்றால் மிகையல்ல. போர்ச்சுகீசியர்கள் பிற மதங்களை மதிக்காததன்மை, பிற மதத்தவரின் மீது அவர்கள் நிகழ்த்திய குரூரங்கள், இரக்கமற்ற அவர்களின் நடவடிக்கைகள் கிறிஸ்த மதத்தின்பால் அச்சத்தையும், அவநம்பிக்கையையும் சாதாரண ஹிந்துக்களின் மனதில் தோற்றுவித்தன. அதுவே இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இத்துடன் கோவா புனித விசாரணைகள் குறித்த பகுதி முடிவுக்கு வருகிறது. இனிவரும் பகுதிகளில் உலகின் பிற நாடுகளில் மதவெறி பாதிரிகள் கிறிஸ்துவின் பெயரால் நிகழ்த்திய படுகொலைகளையும், கலாச்சார, இன அழிப்புகளையும் தொடர்ந்து காண்போம்.

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *