கொலைகாரக் கிறிஸ்தவம் – 27

கிறிஸ்துவின் பெயரால் கோவாவில் போர்ச்சுகீசியர் ஹிந்துக்களுக்குச் செய்த அதே கொடுமைகளை இலங்கையில் யாழ்ப்பாணத்து ஹிந்து தமிழர்களுக்கும் செய்தனர்.

1560லிருந்து 1621வரை போர்ச்சுகீசிய மேஜரும், இலங்கையின் கவர்னருமான ஃபிலிப்பே-டி-ஒலிவெரா ஏறக்குறைய 500 ஹிந்துக் கோவில்களை இடித்தான். 1575-ஆம் வருடம் சிலாவில் இருந்த சிலாபம் முனீஸ்வரன் கோவில் இடிக்கப்பட்டது. 1588-ஆம் வருடம் தேவனுவேராவில் இருந்த விஷ்ணு ஆலயமும், மாதோட்டத்தில் இருந்த மாதோட்டம் திருக்கேதீஸ்வர சிவாலயமும் இடிக்கப்பட்டன.

1619ல் போர்ச்சுகீசியர்களால் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்ட பிறகு தமிழர்களின் மீதான அவர்களின் பிடி இறுகியது. ஆரம்பத்தில் தமிழ் அரசர்களைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து அவர்களின் மூலமாக தமிழர்களை ஆண்டு கொண்டிருந்த போர்ச்சுகீசியர்கள், பின்னர் நேரடியாகவே தமிழர்களை ஆளத் துவங்கினர். இதன் காரணமாகத் தமிழர்கள் மத்தியில் கிறிஸ்துவ மதமாற்றம் துரிதப்படுத்தப்பட்டது. இதன் பின்னனியில் யாழ்ப்பாணத்து ஹிந்துக் கோவில்கள் இடித்துத் தள்ளப்பட்டன.

1621 பிப்ரவரி 2-ல் யாழ்ப்பாணத்தில் போர்ச்சுகீசிய உயரதிகாரியாகப் பதவியேற்ற கவர்னர் ஒலிவேராவின் ஆணையின்படி அன்றே நல்லூரின் புகழ்பெற்ற கந்தசுவாமி ஆலயம் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1622-ஆம் வருடம் இன்னொரு புகழ்பெற்ற பெருங்கோவிலான ஆரியச் சக்கரவர்த்தி ஆலயமும், திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயமும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

இடிக்கப்பட்ட ஆலயங்களிலிருந்து எடுக்கப்பட்ட செங்கற்களும், சிலைகளும் போர்ச்சுகீசியர்கள் கட்டிக் கொண்டிருந்த கோட்டைச் சுவர்களை பலப்படுத்தவும், புதிய பல சர்ச்சுகள் யாழ்ப்பாண நகருக்குள் கட்ட உபயோகப்படுத்தப்பட்டன.

உலகின் மிகப்பழமையான மொழியில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளும், தாமிரப் பட்டயங்களும், தமிழர்களின் தொன்மையான வரலாறு அடங்கிய பல அபூர்வமான நூல்களும் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்து பழமையான சரஸ்வதி மஹால் நூலகாத்தையும், அருங்க்காட்சியகத்தையும் இடித்துத் தகர்த்ததுதான் இக்கிறிஸ்தவ மதவெறியனான ஒலிவேரா செய்த மாபெரும் குற்றம் எனலாம்.

இந்தியாவிற்கு வந்தததைப் போலவே இலங்கையிலும் வியாபாரம் செய்யவும், பணம் சம்பாதிக்கவும்தான் வந்த  போர்ச்சுகீசியர்கள், தங்களிடமிருந்த ஆயுத மற்றும் கப்பல்படையின் பலத்தால் கடற்கரையோரப் பகுதிகள் முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள். எனவே இலங்கையில் வியாபாரம் செய்யவந்தவர்கள் அனைவரும் அவர்களின் தயவை நாடி இருக்கவேண்டியதாயிற்று.  யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபிறகு வியாபாரத்தையோ அல்லது உள்கட்டுமானத்தையோ பலப்படுத்த போர்ச்சுகீசியர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

அதற்குப் பதிலாக இவாஞ்சலிச [மதமாற்றும்] கிறிஸ்தவம் யாழ்ப்பாணப்பகுதிகளில் ஊக்குவிக்கப்பட்டதால் ஏராளமான ஹிந்துத் தமிழர்கள் கிறிஸ்தவர்களாக இந்தக் காலகட்டத்தில் மதமாற்றம் செய்யப்பட்டார்கள். மறுத்தவர்கள் கொடூரமான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 1658 ஜூன் 21-ஆம் தேதி டச்சுக்காரர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும்வரை போர்ச்சுகீசிய மதவெறிக் கிறிஸ்தவர்களின் அட்டகாசம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது.

போர்ச்சுகீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பிருந்தே கத்தோலிக்க மிஷனரிகள் யாழ்ப்பாணத்திற்கு வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். எனினும் 1591 நவம்பர் மாதம் போர்ச்சுகீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பிறகு ஃப்ரான்ஸிஸ்கன் பாதிரிகள் யாழ்ப்பாணத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களையும், முதலியார்களையும், கிராமசபைத் தலைவர்களையும் குறிவைக்கத் துவங்கினார்கள்.

போர்ச்சுகீசிய ஆவணங்களின்படி, அதிகாரத்தில் அமர்ந்திருந்த போர்ச்சுகீசிய அதிகாரிகள் தங்களின் அதிகாரத்தை கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக உபயோகிக்க ஆரம்பித்தார்கள் எனத் தெரிகிறது. கிறிஸ்தவர்களாக மாறிய ஹிந்துத் தமிழர்களுக்குப் பதவிகளும், பரிசுகளும் கொடுத்து ஊக்குவிக்க ஆரம்பித்தார்கள். யாழ்ப்பாணத்தில் நிலம் வைத்திருந்த பெருநிலக்கிழார்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ரோமன் கத்தோலிக்கர்களாக மாற்றப்பட்டார்கள்.

1622ல் ஜெர்ஸ்யூட் பாதிரிகள் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்து அங்கு ஒரு கல்லூரியை ஸ்தாபித்ததுடன், யாழ்ப்பாணத்தைத் தங்களின் தலைமையகமாகவும் மாற்றினார்கள். போர்ச்சுகீசிய ஆட்சியாளர் யாழ்ப்பாணத்தை 42 கிறிஸ்தவ மண்டலங்களாகப் (Parishes)  பிரித்து அதில் 24 பகுதிகளை  ஃப்ரான்ஸிஸ்கன் பாதிரிகளுக்கும் எஞ்சியவைகளை ஜெர்ஸ்யூட் பாதிகளுக்கும் அளித்தார்கள். அந்தப் பகுதிகளில் மதமாற்ற வேலைகள் செய்து கொண்டிருந்த ஒற்றை டொமினிகன் பாதிரியை யாழ்ப்பாணக் கோட்டைப்பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள். 1634-ஆம் வருட இறுதிக்குள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட அத்தனை கிறிஸ்துவ மதமாற்ற சபைகளும் முழுவேகத்தில் இயங்க ஆரம்பித்தன.

1640-ல் எழுதப்பட்ட ஒரு மிஷனரிக் குறிப்பின்படி யாழ்ப்பாணத்திலிருந்த அத்தனை ஹிந்துத் தமிழர்களும் கிறிஸ்தவர்களாக மதம்மாற்றப்பட்டதாகக் கூறுகிறது. போர்ச்சுகீசியர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப் படுவதற்குச் சிறிது காலத்திற்கு முன் “யாழ்ப்பாணம் ஒரு முழுக் கிறிஸ்தவப் பகுதி” என போர்ச்சுகீசிய அதிகாரியொருவர் பெருமையுடன் குறிப்புகள் எழுதினார். அது உண்மையாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. மதவெறி பிடித்தவர்களான போர்ச்சுகீசியர்களுக்கு அஞ்சி யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் அனைவரும் கிறிஸ்தவமதத்தை மட்டுமே பின்பற்றி வந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அப்படி இல்லாவிட்டாலும் வெளிப்படையாக தங்களின் மதமான ஹிந்து மதத்தைப் பின்பற்றாமல் இருந்திருக்கக்கூடும்.

 “போர்ச்சுகீசிய மிஷனரிகள் ஏதோ ஒரு கிராமத்திற்கு வருகை தருவதற்கு முன்பு, அவர்களின் வருகையை முரசறிவிப்பார்கள் அதைக் கேட்டு, பொது இடத்தில் கூடிய கிராமவாசிகளிடம் அந்தப் பாதிரிகள், கிராமவாசிகள் வணங்கும் ‘பொய்யான’ கடவுளர்களை மறுதலித்து ‘இயேசு கிறிஸ்துவான தங்களின் உண்மையான ஒரே இறைவனை’ வணங்கும்படிச் சொல்வார்கள்.

“பொது இடத்தில் கூடவேண்டும் என வேண்டுகோள் எதுவும் விடுக்கப்படவில்லை. மாறாக போர்ச்சுகீசிய அரசாங்கம் அவர்களை அங்கு வரவேண்டும் என ‘உத்தரவு’ இட்டது. மதமாற்ற மிஷனரிப் பாதிரிகள் போர்சுகீசிய அதிகாரிகள்,  ஆயுதமேந்திய ராணுவத்தினர், உள்ளூர் பெரியமனிதர் சகிதமாகவே கிராமங்களுக்குச் சென்றனர்.  ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுக்கு வராதவர்களுக்கு கடுமையான தண்டனைகளும், அபராதங்களும், மரக்கட்டையால் அடிகளும் கிட்டியதால், சர்ச்சுகளில் கூட்டம் அலைமோதியது.” என்று வரலாற்று ஆய்வாளர் அபயசிங்கே, போர்ச்சுகீசிய அதிகாரிகளான டிரினிடாடே, குயிர்ரோஸ் என்ற இருவரும் எவ்வாறு தமிழ்ப்பகுதிகளில் மதமாற்றங்களை நடத்தினார்கள் என்பதை விளக்கியிருக்கிறார்.

போர்ச்சுகீசிய ஃப்ரான்ஸிஸ்கன் பாதிரிகள் 25, ஜெர்ஸ்யூட் பாதிரிகள் 12 கிறிஸ்தவப் பள்ளிகளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தனர்.  அவை மதமாற்றக் கூடமாக மாற்றப்பட்டு, பைபிள் பாடங்கள் போர்ச்சுகீசிய தமிழ் மொழிகளில் அங்கு படிக்க வரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டன.  அதனுடன் மேற்படிப்பு படிக்கும் கல்வி நிறுவனங்களும், கல்லூரிகளும் துவங்கப்பட்டன. ஆனால் அதன் அடிப்படையில் மதமாற்றம் ஒன்றே குறியாக இருந்தது.

இதனால் ஹிந்துக்கள் அச்சத்துடன் வாழ்ந்துவந்தார்கள். வரலாற்றாசிரியரான ஃபெர்னாண்டோ-டி-குயிர்ரோஸ் போர்ச்சுகீசிய ஆட்சியினைப் பற்றி எழுதுகையில், “யாழ்ப்பாணத்து ஹிந்துக்கள் பரிதாபத்திற்குரியவராக” மாற்றப்பட்டார்கள்”, எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *