கட்டுரையாளன் குறிப்பு: சென்ற பதிவுடன் இக்கட்டுரையை நிறைவுசெய்தேன். ஆயினும் பல வாசக நண்பர்கள் எனக்குத் முகநூல்/தமிழ் ஹிந்து மூலமாகவும், தனிப்பட்ட முறையிலும் டசோல்-அம்பானி விவகாரத்தைப்[?!] பற்றி எழுதுமாறு கேட்டிருந்தார்கள்.
துவக்கத்திலேயே இது அரசியல் கட்டுரை அன்று என்றும், தொழில்நுட்பம் மற்றும் வரலாறு குறித்த் கட்டுரை என்றும் தெரிவித்திருந்தேன். இருந்தபோதிலும், என்னை அரசியச் சூறாவளிக் காற்று/ புதைமண்ணில் சிக்கவைத்து ஆனந்திக்கப் பலர் விரும்புவதாகவே தோன்றுகிறது.
இதில் சிக்காவண்ணம் தொழில்நுட்பம்/வரலாறு துணைகொண்டு அக்கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வண்ணம் இப்பகுதியை கட்டுரைத் தொடரின் முடிவுரையாக அளிக்கிறேன்.
***
- நூற்றி இருபத்தெட்டு போர்விமானங்கள் வாங்குவதாக ஒப்பந்தமிட்டுவிட்டு, இப்பொழுது முப்பத்தாறு போர்விமானங்கள் மட்டும் வாங்குவது ஏன்?
- குறைந்த விலையில் போர்விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தை இரத்துசெய்துவிட்டு, அதிக விலையில் வாங்குவது ஏன்?
- “இந்தியாவில் செய்க!” என்று முழங்கிவிட்டு, வெளிநாட்டில் முழுக்கமுழுக்கத் தயாரிக்கப்படும் போர்விமானங்களை வாங்குவது ஏன்?
- பல பத்தாண்டுகளாகப் போர்விமானங்கள் தயாரிக்கும் அனுபவம்பெற்ற பாரத நிறுவனமான எச்.ஏ.எல்லைப் புறந்தள்ளிவிட்டு, காகிதத்தில் மட்டுமே உள்ள ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் எப்படிச் செய்யப்பட்டது?
- தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு நிதியுதவிசெய்யும் திட்டம்தானே இது?
இன்னும் பலப்பல கேள்வில்கள் கேட்கப்படுகின்றன.
கூடியமட்டும் அரசியலில் சிக்கிக்கொள்ளாது பதிலளிக்க முயற்சிக்கிறேன்.
1. டசோல் நிறுவனத்துடன் எந்தவொரு ஒப்பந்தமும் முடிவுக்குவந்து கையெழுத்தாகவில்லை. இது பலருக்கும் வியப்பை அளிக்கலாம். சென்ற பகுதியிலேயே, பறக்கும் நிலையிலுள்ள பதினெட்டு விமானக்கூடுகள் பிரான்சிலிருந்து வாங்கவேண்டும் என்பது முதலாவது ஷரத்து.
விமானக்கூடு என்று குறிப்பிட்டதற்குக் காரணம் உள்ளது. ஏனெனில், அவற்றில் எந்தவிதமான இராணுவத் தளவாடமும் பொருத்தப்பட்டிருக்காது. இப்படிப்பட்ட விமானத்தை வைத்துக்கொண்டு யாருடன் போரிட இயலும்? அவ்விமானம்தான் எப்படிப்பட்ட பாதுகாப்பை நல்க இயலும்?
இரண்டாவது ஷரத்து, ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் [எச்.ஏ.எல்] நிறுவனத்தில் மீதி நூற்றெட்டு போர்விமானங்கள் உற்பத்திசெய்யப்படவேண்டும் என்பதே.
எச்.ஏ.ஏல் நிறுவனத்துடன் இணைந்து விமான உற்பத்திசெய்ய டசோல் நிறுவனம் மறுத்துவிட்டதாலும், மற்றபல காரணங்களாலும், ஒப்பந்தம் நிலுவையிலுந்ததே தவிர உறுதியாக்கப்படவில்லை. எனவே, ஒப்பந்தம் என்று ஒன்று இருந்தது, அது மீறப்பட்டது என்பது வணிகமுறைப்படியும், சட்டமுறைப்படியும் சரியான கூற்று அல்ல. அது அரசியல்.
டசோல் நிறுவனம் ஏன் எச்.ஏ.எல்லுடன் இணைந்து விமான உற்பத்திசெய்ய மறுத்துவிட்டது என்று சென்ற பகுதிலேயே சுருக்கமாக விளக்கப்பட்டது.
2. போர்விமானங்கள் அதிகவிலை கொடுத்து வாங்கப்படவில்லை என்பதைச் சென்றபகுதியிலேயே விரிவாக விளக்கப்பட்டதால், அதை மீண்டும் இங்கு எழுதப்போவதில்லை. வாசகர்கள் தேவைப்பட்டால் சென்றபகுதியைப் படித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
3. “இந்தியாவில் செய்க!” என்று முழங்கிவிட்டு, வெளிநாட்டில் முழுக்கமுழுக்கத் தயாரிக்கப்படும் போர்விமானங்களை வாங்குவது ஏன் என்ற கேள்வி நியாயமானதே. டசோல் நிறுவனத்திற்குக் கிடைக்கும் ஈடு [offset] 25 விழுக்காடுதான். மற்ற ஈடுகள் தேல்ஸ், சஃப்ரன், எம்.பி.டி.ஏ இன்ன் பிற நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும். மேலும், டசோலின் ஈட்டில் 10%தான் — மொத்த மதிப்பில் 2.5%தான் டசோல்-ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்குச் [டி.ஆர்.ஏ.எல்] 36 விமானங்களுக்குச் சில சிறிய பாகங்களைச் செய்ய அளிக்கப்படுகிறது.
மற்ற ஈடுகள் பாரதத்திலுள்ள பி.டி.எஸ்.எல், டி.எ.எஃப்.சே.ஒய்.எஸ், கைனடிக், மஹீந்திரா, மைனி, சாம்டெல் போன்ற [BTSL, DEFSYS, Kinetic, Mahindra, Maini, SAMTEL etc] 72 நிறுவனங்களுக்கு அளிக்கப்படும். டசோலும் அதனுடைய முதல் தட்டு கூட்டாளிகளும் நூற்றுக்கும் மேலான இந்திய நிறுவனங்கள் மற்ற ஈட்டு உடன்படிக்கைகளில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்துள்ளன.
அதோடு மட்டுமன்றி, பிரெஞ்சு நிறுவனமான ஸ்நெக்மா [டசோலின் பங்குதாரர்] இந்தியப் போர்விமானமான் தேஜஸ் எம்.கே.1ஏயில் [MK1A] பொருத்தப்படும் காவேரி எஞ்சின்களை பாரத்த்தில் தயாரிக்க நூறுகோடி யூரோக்கள் முதலீடு செய்யவதாக ஒப்புக்கொண்டிருக்கிறது.[1]
ஆகையால், “இந்தியாவில் செய்க” என்னும் கொள்கை முடிந்த அளவுக்கு அமல்படுத்தப்படுகிறது என்றே சொல்லலாம்.
4. எச்.ஏ.எல். நிறுவனம் புறந்தள்ளப்பட்டது ஏன் என்பதைச் சுருக்கமாகச் சென்றபகுதியில் விளக்கப்பட்டிருந்தது. அதிக விளக்கம் தேவை என்று தோன்றியதால் அது இங்கு விவரிக்கப்படுகிறது.
எச்.ஏ.எல் தற்பொழுது பலவிதமான இலகு போர்விமானங்களை, முக்கியமாக தேஜஸ் விமானத்தைச் செய்துவருவதால், அதனால் மேலும் புதுத் திட்டங்களை மேற்கொள்வது சிரமமாக இருக்கும்.
எச்.ஏ.எல் தயாரித்தளிக்கும் சுகோய்-30 போர்விமானங்கள் ஏகப்பட்ட பிரச்சினைகளையும், அதன் ஏற்புடைமை
பாரத விமானப்படைக்குத் தலைவலியை அளிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், குறைந்தபட்சம் 75% விமானங்கள் எப்போதும் போர்நிலைக்கு ஆயத்தமாக இருக்கும் எனவும் டசோல் தனது ராஃபேல் விமானத்திற்கு உத்திரவாதமளித்தது. இதுவே, ராபேல் விமானத்தைத் தேர்ந்தெடுக்க முக்கியமான காரணம்.
பாரதப் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து கிடைத்த ஆதாரப்படி, எச்.ஏ.எல் ராஃபேல் விமானத்தைத் தயாரித்தால் அதன் தரம் குறைந்துவிடும் என்று உயர்மட்ட பாரதப் விமானப்படை அதிகாரிகளே ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
5. தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு நிதியுதவிசெய்யும் திட்டம்தானே இது என்று பலவாறும் ஊடகங்களில் பேசப்பட்டு வந்திருக்கிறாது.
126 போர்விமானத் தேவைக்காக ராஃபேல் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற செய்திவந்த இரண்டே வாரத்திலேயே, அதாவது 2012லேயே, டசோல் நிறுவனம் பாதுகாப்புத்துறையில் பாரதத்தின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒரு உடன்படிக்கை செய்துகொண்டது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது.[2] அப்பொழுது காங்கிரஸ் கூட்டணி [யு.பி.ஏ – ஒருங்கிணைந்த முற்போக்குக் கூட்டணி] பாரதத்தை ஆட்சிசெய்தது என்பதை நினைவு கூறவேண்டும்.
2012ல் ஏற்பட்ட டசோல்-ரிலையன்ஸ் உடன்படிக்கைக்கு, 2014ல் ஆட்சிக்குவரப்போகிறவரால் அப்பொழுது அழுத்தம்கொடுக்க முடியுமா? இதை நான் குறிப்பிடப்பட்டிருப்பது வரலாறு காரணமாகவே அன்றி, அரசியலுக்காகவல்ல.
இப்படியிருக்கையில், “மோதியின் சொந்த மாநிலமான குஜராத்தைச் சேர்ந்தவரும், பி.ஜே.பிக்கு மிகவும் வேண்டப்பட்டவருமான அனில் அம்பானி, டசோலின் முக்கிய பங்குதாரர் ஆகியுள்ளார்.. அம்பானியின் ரிலையன்ஸ் குழு இதுவரை ஒரு விண்வெளி பாகத்தையும் தயாரித்திருக்காதபோதிலும், அது டசோல் நிறுவனத்துடன் இணைந்து டசோல் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் [டி.ஆர்.ஏ.எல்] என்ற கூட்டு வணிக முயற்சியை மேற்கொண்டிருக்கிறது..” என்று குறிப்பிட்டு ஒரு கட்டுரை அஜய் சுக்லா என்பவரால் செப்டெம்பர் 2018ல் ஒரு சிறந்த ஊடகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.[3]ஒரு பொறுப்புள்ள கட்டுரையாளருக்கு டசோல்-ரிலையன்ஸ் கூட்டமைப்பு எந்தக் கட்சி ஆட்சியிலிருக்கும்போது உருப்பெற்றது என்று தெரியாமலா இருக்கும்? காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருக்கும்போது பாரதீய ஜனதா அனுதாபிக்கு எப்படி ஒரு வணிக முயற்சி கிட்டுவது சாத்தியமாகும்? படிப்போர் எது வரலாறு, எது அரசியல் புகைத்திரை என்ற முடிவுக்கு வரவேண்டும்.
இது போதாதென்று இதைக்குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயி, “வணிகத்தில் பாரபட்சம் காட்டப்பட்டது என்னும் அளவுக்கு எந்தவொரு சான்றையும் நாங்கள் காணவில்லை,” என்று தீர்ப்பளித்தார்.[4]
டசோல் நிறுவனத்தின் அதிபரும் விமான உற்பத்தி ஈட்டைப் பகிர்ந்துகொள்ளுவதில் தாங்கள் எந்தவிதமான ஊழலோ, தனிப்பட்ட நிறுவனம் எதற்கும் சலுகையோ அளிக்கவில்லை என்பதை உறுதிசெய்தார்.[5]
வாசகர்கள்
கேட்ட வினாக்களுக்கு என்னால் இயன்றவரை விளக்கம்கொடுத்துள்ளேன். மேலும் கேள்விகளோ கருத்துகளோ இருப்பின் அதைப் பகிர்ந்துகொள்ளுங்கள். விளக்கம் அளிக்க முற்படுகிறேன். வணக்கம்.
[1] Dassault Rafale v/s. Eurofighter Typhoon :- Why Government Ignored Offer From Eurofighter by Indian Defence Update, dec 3, 2017 https://defenceupdate.in/dassault-rafale-v-s-eurofighter-typhoon-government-ignored-offer-eurofighter/
[2] Dassault Aviation, India’s Reliance in defence pact, by Reuters, Feb 12, 2012
[3] How Modi’s Rafale defence deal has left India lagging China, Pakistan by Ajai Shukla, Geo Politics, This week in Asia, September, 29, 2018
[4] India court rejects challenge to Dassault jet deal;Rauters, Dec 14, 2018
[5] No Scandal In Rafale Deal, Says Dassault CEO; Defends role for Reliance, Source: Press Trust of India; published Feb 20, 2019