தொல்லியலாளர் கே கே முகம்மது அவர்கள் 1976 ல் ராமாயண காலத்தின் நகரங்களை அகழ்வாய்வு செய்த பி பி லால் தலைமையிலான தொல்லியலாளர்கள் குழுவில் உறுப்பினராக இருந்து ஆராய்ச்சி செய்த இஸ்லாமிய அறிஞர். பாபர் மசூதி என்பது இந்து கோவிலின் மீது தான் கட்டப்பட்டிருக்கிறது என்ற உண்மையை உரத்து சொன்னவர். உண்மையை சொல்லியதற்காக தண்டிக்கப்பட்டவர். இடதுசாரிகளால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டவர். இந்தியாவின் முக்கியமான கலை பொக்கிஷங்களை மீட்டெடுத்தவர். பாடேஸ்வரர் ஆலய வளாகத்தை சம்பல் கொள்ளையர்களின் ஆதிக்கம் மிகுந்திருந்த காலத்தில் உயிரை பணயம் வைத்து அவர்களையும் இணைத்து கொண்டு கோவில் தொகையை முற்றிலும் மீட்டெடுத்தவர். மாவோயிஸ்ட்களின் ஆதிக்கத்தில் இருந்த தண்டே வாடா, காட்டு பகுதியில் இந்திய ஆலயங்களை மீட்டெடுத்தவர். அக்பரின் சமரச மத ஆலயத்தை கணடறிந்தவர். வடக்கு பகுதி ஏ எஸ் ஐ யின் ரீஜனல் டைரக்ட்ராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். பத்மஸ்ரீ விருதுக்கு பெருமை சேர்த்தவர். பாரதத்தின் பொக்கிஷம் என்று இவரை சொல்லலாம். ஞானிகளை போல, ரிஷிகளை போல துணிந்து உண்மையை தேடுபவர், அதற்காக எந்த சமரசமும் செய்யாதவர்.
சமீபத்திய அயோத்தி தீர்ப்புக்குப் பிறகு கோவையில் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன்பின்பு அவருடன் உரையாடும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அவர் கூறிய கருத்துக்களை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து நேர்காணல் வடிவில் இங்கு அளிக்கிறேன்.
கே: அயோத்தியில் ராமஜென்மபூமி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நம்பிக்கைகளின் அடிப்படையிலானது உண்மையின் அடிப்படையிலானது அல்ல? என்று சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள், ஜா, போன்ற இடது சாரி வரலாற்றாசிரியர்கள், மாவோயிஸ ஆதரவாளர்களும், இடது சாய்வுள்ள பத்திரிக்கைகளும் பிரச்சாரம் செய்கின்றனவே அது பற்றி தங்கள் கருத்து?
கே கே முகம்மது : ராம ஜென்மபூமி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு அரிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. மிகவும் கவனத்தோடும், நடு நிலையோடும், கண் முன் இருக்கும் அகழ்வாய்வு, வரலாற்று ஆவணங்கள், தொல்லியல் சான்றுகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் கவனத்தில் கொண்டு 300 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் சிக்கலுக்கு சுமூகமாக அனைத்து தரப்பினரும் ஏற்கும் படியான ஒரு தீர்ப்பை கொடுத்திருக்கிறது. இதை இந்தியாவின் அனைத்து தரப்பினரும் வரவேற்கிறார்கள்.
ஜா, இர்பான் ஹபீப், உள்ளிட்ட இடது சாரி வரலாற்றாசிரியர்களுக்கு இதை ஒப்புக்கொள்ள தயக்கம் இருக்கிறது. ஆனால் அது ஒரு அரசியல் என்றளவில் தான் மதிக்கத்தக்கது. மார்க்ஸிய வரலாற்றாசிரியர்கள், ஜெ என் யூ வரலாற்று கும்பல்கள் , முக்கியமான இந்திய வரலாற்று பண்பாட்டு நிறுவனங்களில் அமர்ந்து கொண்டு இது போன்று வரலாற்றுத்திரிபில் தொடர்ந்து செயல்படுகிறார்கள். அவர்களின் அரசியலுக்காக வரலாற்றை திருகுகிறார்கள்.
கே: ராம ஜென்மபூமி தீர்ப்பு வரலாற்று , அகழ்வாய்வு ஆதாரங்களின் அடிப்படையில் தான் வழங்கப்பட்டிருக்கிறது என்றால் என்ன விதமான வரலாற்று ஆதாரங்கள்?
கே கே முகம்மது : இஸ்லாமிய மார்க்க அறிஞரும், அக்பர் நாமாவின் ஆசிரியருமான அபுல் பஸல் தன் அய்னி இ அக்பர் நூலில் ஜென்மஸ்தான் என்று அயோத்தி பற்றி குறிப்பிடுகிறார். ஜென்மஸ்தான் என்ற வார்த்தையை பெர்ஷிய மொழி அறிஞரும், அக்பரின் நிர்வாகம் பற்றி விரிவாக பதிவு செய்தவருமான மார்க்க அறிஞரும், மாபெரும் இறை பற்றாளுருமான அபுல் பஸல் குறிப்பிட அவசியம் இல்லை. அதற்கு முன்னர் அங்கு மசூதியோ, தொழும் இடமோ இருந்தால் நிச்சயம் அபுல் பஸல் அதை குறிப்பிட்டிருப்பார். அவர் ஒரு கறாரான பெர்ஷிய வருவாய் அதிகாரி. வருவாய் , நில அளவீடுகளில் மிகவும் துல்லியமாக அனைத்தையும் பதிவு செய்தவர். இதை மறந்திருப்பார் என சொல்லுவது ஏற்கக்கூடியதல்ல. 1590ல் பெர்ஷிய மொழியில் எழுதப்பட்டு 1870 ல் ஹெர்பர்ட்டால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட ஆவணங்களை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது.
அதோடு ஜெசூட்ஸ் பாதிரியாரான ஜோஸப் டிபண்ட்தாலெர் (Joseph Tieffenthaler) 1740 ல் பயணம் மேற்கொண்டு அயோத்தியில் வழிபாட்டில் இருந்த குழந்தை ராமன் ஆலயம், சீதையின் சமையலறை, மற்றும் சொர்க்க துவாரம் (sworga dwar ) அல்லது சொர்க்க வாயில் பற்றியும் நேரில் பார்த்து பதிவு செய்திருக்கிறார். ( குறிப்பிற்காக இந்து தொன்மங்களின் படி அயோத்தி, காசி, மதுரா உள்ளிட்ட ஆலயங்கள் மோட்சத்திற்கு செல்லக்கூடிய நுழை வாயில் என்று சொல்லப்படுகிறது. ) ஜெசூட்ஸ் பாதிரியாரான இவருக்கு பெர்ஷிய, லத்தீன், சமஸ்கிருதம் ஆகியவற்றோடு புவி அமைப்புகள், வரைபடங்கள் மீதும் நல்ல அறிவு இருந்தது. இது மட்டுமல்லாமல் 7க்கும் மேற்பட்ட பிரென்ஞ், ஆங்கில பயணிகளின் நூல்களில் அயோத்தி பற்றியும், அங்கு மக்கள் வழிபடுவது பற்ரியும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். அதோடு அதில் ஓளரங்கசீப் அல்லது பாபாரால் இடித்து தள்ளப்பட்ட ராமகூடத்தை பற்றியும், அதன் மேல் எழுப்பட்டுள்ள மூன்று கும்மட்டங்களை பற்றியும் குறிப்பு இருப்பதை சுட்டி காட்டுகிறார்.
அடுத்து ஆங்கில வரலாற்று ஆய்வாளரும், பயணியும், ஆட்சிப்பணித்துறையில் பணியாற்ரிய ராபர்ட் மாண்ட்கோமொரி மார்ட்டின், கிழக்கந்திய நிலவியல், வரலாறு, கலைப்பொருட்கள் பற்றிய புள்ளி விபரங்கள் என்ற நூலில் இதை பற்றி குறிப்பிட்டுள்ளார். இதுவும் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ஆலயத்தை பற்றி மார்ட்டின் சொல்கையில் உஜ்ஜைனியை ஆண்ட காட்வால் அரச வம்சத்தை சார்ந்த விக்ரமனையும் அவன் கட்டிய 360 கோவில் பற்றியும் குறிப்பிட்டு சொல்கிறார். அதோடு அதன் பல பகுதிகள் இடித்து சிதைக்கபட்டு சில கும்மட்டங்கள் கட்டப்பட்டிருப்பதையும் பதிவு செய்திருக்கிறார்.
இதோடு எட்வர்ட் தார்ண்ட்டன், வில்லியம் பின்ச் போன்ற புகழ் பெற்ற வரலாற்று பயணிகளின் குறிப்புகளையும், அப்போதைய அயோத்தியா கெஸட்டியர்களையும் படித்து ஒப்பு நோக்கி தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றுக்கு கிறிஸ்த்தவர், இஸ்லாமியர் என்று பாகுபாடு கிடையாது. நான் இறை நம்பிக்கையுள்ள இந்திய இஸ்லாமியன். நானும், ஜெசூட்ஸ் பாதிரியாரான ஜோஸப் தாலெரும், ஆங்கில வரலாற்று ஆய்வாளர்களும், சீக்கிய மத நூல்களும் அங்கு ராமன் ஆலயம் இருந்ததை சொல்கிறோம். வரலாற்று உண்மைகளுக்கு சிறுபான்மை, பெரும்பான்மை அரசியல்வாதம் பொருத்தமற்றது மட்டுமல்ல, தேவையற்றதும் கூட..
மேலும் 1813-1814 ஆண்டுகளில் கிழக்கந்திய கம்பெனிக்காக நில அளவை செய்யும் பொருட்டு அயோத்தி இடத்தை சர்வே செய்த பொறியாளர் பிரான்சிஸ் புக்கானன், வழிபாட்டில் இல்லாத மூன்று கும்மட்டங்களை பற்றியும் அங்கிருந்த சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டுக்களையும் பார்த்து பதிவு செய்திருக்கிறார். பிரான்சிஸ் புக்கானின் பதிவுப்படி 1658 க்கு மேல் ஓளரங்கசீப்பால் வழிபாட்டில் இருந்த குழந்தை ராமனின் ஆலயம் இடிக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார். எனெனில் 1528 முதல் 1668 வரையிலான காலத்தில் அங்கு மசூதியோ, இஸ்லாமிய வழிபாட்டிடமோ இருந்ததற்குரிய சான்றுகள் இல்லை என்கிறார். அங்கு மசூதி இருந்தது என்பதற்குரிய முதல் வரலாற்று ஆதாரம் 1718 ல் இரண்டாம் ஜெய்சிங் மசூதியை சுற்றியுள்ள இடத்தை விலைக்கு வாங்கும் போது குறிப்பிடுகிறார். அதற்கு முன்பு அங்கு எந்த இஸ்லாமிய கட்டுமானமும் இருந்ததற்கான ஆதாரமும் இல்லை. மசூதியை ஒத்த அந்த கட்டடம் குழந்தை ராமன் பிறந்த இடம் என அங்கிருந்த மக்கள் மசூதியை ஒத்த கட்டடத்தின் வெளியில் இருந்து வழிபட்டு செல்வதை புக்கானனும், பின்னர் 50 ஆண்டுகள் கழித்து பதிவு செய்த ஜெசூட்ஸ் பாதிரியாரான ஜோஸப் தாலெரும் பதிவு செய்திருக்கிறார்கள்.
1598ல் அய்ன் இ அக்பரியின் மூன்றாம் பாகத்தில் அவந்த் பிராந்தத்தில் கோலகாலமாக கொண்டாடப்பட்ட ராம நவமி பற்றி விரிவாக பதிவு செய்திருக்கிறார். அதில் இஸ்லாமிய வழிபாட்டிடம் பற்றி எந்த குறிப்பும் இல்லை. முதன்மையான சீக்கிய மத குரு குரு நானக் தேவ் அவர்கள் 1510-11 ஆண்டுகளில் குழந்தை ராமனின் ஆலயத்திற்கு வந்ததாக சீக்கிய குறிப்புகளும் வரலாற்று ஆவணங்களாக நாம் அனைவரும் பார்க்கும் படி இருக்கிறது. இவை எதுவுமே நம்பிக்கையின் அடிப்படையிலானது அல்ல. இவைகள் உண்மையான எழுதப்பட்ட வரலாறுகள். அதன் தரவுகளின் அடிப்படையில் தான் பரிசீலிக்க வேண்டும்.
கே: வரலாற்று சான்றுகள் ஒப்புக்கொள்ளத்தக்கவையே தொல்லியல் சான்றுகள் இருக்கிறதா? மீண்டும் மீண்டும் இடது சாரி வரலாற்று ஆசிரியர்களும், மாவோயிஸ்ட் ஆதரவு பத்திரிக்கைகளும், பிரிவினைவாதிகளும் தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையிலானது அல்ல இத்தீர்ப்பு என்று சொல்கிறார்களே? உண்மை என்ன?
கே கே முகம்மது : இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள், குறிப்பாக ஜெ என் யூ, அலிகார் பல்கலைகழக வரலாற்று ஆசிரியர்கள் துணிந்து இந்த பொய்யை பரப்புரை போல செய்து வருகிறார்கள். இர்பான் ஹபீப், நதீம் ரிஸ்வி, ரொமிலா தாப்பார் ஆகியோர் தொடர்ந்தும் முன்பு ஆர் எஸ் ஷர்மா, டி என் ஜா போன்றோர்கள் அடிப்படை ஆதாரமற்ற பொய்யை திரும்ப திரும்ப சொல்லி பொய்யை நிலை நாட்ட பார்க்கிறார்கள் என்று நான் பல முறை கூறி இருக்கிறேன். உதாரணமாக இடிக்கப்பட்ட பாப்ரி மசூதியில் இருந்த 12 தூண்கள் புஷ்ப கலசங்களை கொண்டிருக்கிறது. பூரண புஷ்ப கலசங்கள் தொன்று தொட்டு இந்துக்களின் அனைத்து சடங்குகளிலும், ஆலய , வழிபாட்டு நிகழ்வுகளிலும் பூரண கலசம் என்பது எண் மங்களங்களில் ஒன்று. இன்றளவும் அது நடைமுறையில் இருக்கும் ஒன்று. இஸ்லாமியர்களுக்கு இந்த வழக்கம் இல்லை. இதற்கு முன்பும் இருந்தது இல்லை. இரண்டாவது இங்கே கிடைத்த பிரணாளா, குறிப்பாக 11ம் நூற்றாண்டை சேர்ந்த மகர பிரணாளா, இது ஆலயங்களில் இறைவனுக்கு அபிஷேகம் செய்த பிறகு அபிஷேக நீர் வெளியேற வைக்கும் அமைப்பு, அது வடக்கு நோக்கி இருப்பதை நீங்கள் இன்றும் அனைத்து ஆலயங்களிலும் இருப்பதை பார்க்கலாம்.
இஸ்லாமியர்களுக்கு அபிஷேகம் செய்வதோ, அலங்காரம் செய்வதோ ஹராம். அவர்கள் ஏன் வழிபாட்டிடத்தில் பிரணாளாவை வைக்கப்போகிறார்கள். அதுவும் மகர பிரணாளா, இஸ்லாமிய கட்டிடக்கலையின் தத்துவார்த்த அடிப்படையே உருவமற்ற வழிபாடு என்பது தான் அதனால் தான் கூம்பு வடிவ, வட்ட, வடிவ கோள வடிவிலான கட்டுமானங்கள், வளைவுகள்,அதில் பூ, மற்றும் சித்திர வேலைப்பாடுகள் தான் இருக்கும். இந்துக்களின் ஆலயங்களின் தனித்துவமிக்கவை , சிற்பக்கலையும், நளினமும், கலை உச்சமும் இந்து ஆலயங்களின் முத்திரைகள். விமானங்கள், கர்ப்பகிரஹங்கள், மண்டபங்கள், தூண்கள்,சாளரங்கள், ஜஹதி , மேற்கூரைகள் என்று ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முத்திரை மிக்க தனித்துவ கட்டுமானத்தை கொண்டிருக்கிறார்கள். பிரணாளாக்களையே எடுத்துக்கொண்டால் பல வித்தியாசமான அமைப்புகளில் இந்த நீர் வெளியேற்றும் அமைப்பை வடிவமைத்திருக்கிறார்கள். முதலை வடிவிலான அமைப்பு இன்னும் சிறப்பானது. முதலை கங்கையின் ஒரு அங்கமாக இந்து சிற்ப ஒழுங்கில் குறிக்கப்படுகிறது. ஒவ்வொரு கோவிலின் வாயிலிலும் இருபுறமும் இரண்டு கொடிப்பெண்கள் இருப்பார்கள், அவர்கள் முதலை மீதும், ஆமை மீதும் நிற்பது போல சிற்பங்கள் இருக்கும், இந்த சிற்பங்கள் கங்கையையும், யமுனையையும் குறிப்பவை, கீழே அந்தர்யாமியாக ஓடும் சரஸ்வதியையும் குறிப்பதாக கருதி, நீரை கடந்து மானசீகமாக செல்வார்கள். மகரம் கங்கையையும், கூர்மம் யமுனையையும் குறிக்க பயன்படும் இந்து ஐகனோகிராபி. மகர பிரணாளா, கங்கையையும், கூர்மத்தின் மீது அமுத கலசத்துடன் நிற்கும் பெண் யமுனையையும் குறிக்கிறார்கள். மேலும் பாப்ரி கட்டுமானம் இடிக்கப்படுவதற்கு முன்பே அங்கே அமலகங்கள் கிடைத்தது. அவை இன்றும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அமலகங்கள் என்பவை நெல்லிக்காய் மாலை போன்ற அமைப்பில் இருக்கும் விமான சிகரங்களில் கலசத்திற்கு கீழ் இருக்கும் அமைப்பாகும். இது வட இந்திய ஆலயக்கட்டுமானத்தின் ஒரு அங்கம்.
அதோடு 12 தூண்கள் பாப்ரி கட்டுமானத்திலேயே இருந்தது. அந்த தூண்களின் பூர்ண கலசமே அவை இந்து கட்டுமானத்தின் ஒரு பகுதி என்பதன் சான்று தான். இதற்கு பிறகான அகழ்வாய்வில் 50 க்கும் மேற்பட்ட முழு தூண்கள் கிடைத்திருக்கிறது. 17 வரிசைகளில் இந்த தூண்கள் இருந்ததற்குரிய கட்டுமான அடித்தளங்களும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டது. மேலும் 263 க்கும் மேற்பட்ட நாக கன்னிகைகள், நடன மாதர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், வாத்தியம் இசைப்பவர்கள் , துவார பாலகர்கள் என்று இந்து ஆலய லட்சணத்திற்குரிய அனைத்து ஆதாரங்களும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டு நீதி மன்றத்திலும் அதற்குரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 1975-76 ல் நடைபெற்ற முதல்கட்ட அகழ்வாய்விலேயே கீழே நிலையான பெரிய ஆலயம் இருப்பதற்குரிய சான்றுகள் கிடைத்தது. முக்கியமாக இந்த ஆய்வில் பங்கேற்ற ஒரே இஸ்லாமியன் நான் தான். என்னோடு அகழ்வில் பங்கு பெற்ற இன்னொரு முக்கியமான நபர் ஜெயஸ்ரீ ஜெய்ராம் ரமேஷ். முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சரின் மனைவியும் என்னோடு அகழ்வாய்வில் பங்கேற்றார். இங்கு ஆலயம் இருந்தது பற்றிய எங்கள் கண்டுபிடிப்பை அப்போதைய அரசிடமும் எடுத்து சொன்னோம். அப்பொழுதும் ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட வழி இருந்தது. இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் அப்போதும் அதை கெடுத்தார்கள். ஆர் எஸ் சர்மா, டி என் ஜா, அத்தார் அலி, சூரஜ் பென், ரொமிலா தாப்பர் இவர்களை எல்லாம் தலைமை தாங்கி வழி நடத்தும் இர்பான் ஹபீப் இவர்களே இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு வராமல் அரசியல் செய்தவர்கள். இந்திய அரசின் உயர் கல்வி , மற்ரும் பண்பாட்டு அமைப்புகளில் ஊடுருவி இருந்த எளிய மார்க்ஸிய அரசியல்வாதிகள். சுமூகமான தீர்வு எதுவும் நடந்து விடக்கூடாது என்று உறுதியாக அரசியல் செய்தார்கள். அன்று இப்பிரச்சினையை தீர்த்திருந்தால் நிறைய உயிர் சேதங்களையும், மக்களுக்கிடையே மனப்பிளவுகளையும் தவிர்த்திருக்கலாம்.
தொல்லியல் ஆதாரங்கள், வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல.
கே: இந்த சிற்பங்கள், ஆலய சிதைவுகள் வேறு இடங்களில் இருந்து கூட எடுத்து வந்திருக்கலாம் என இடதுசாரிகள், மற்றும் மத அடிப்படைவாதிகள் குற்றம் சாட்டுகிறார்களே ?
கே கே முகம்மது : அயோத்தி அகழ்வாய்வு பிரிட்டிஷ் காலத்தில் ஆர்க்கியாலஜிகல் சர்வே ஆப் இந்தியாவின் நிறுவனர்களில் ஒருவரான அலெக்ஸாணடர் கன்னிங்ஹாம் தலைமையில் 1862-63 காலத்தில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 1890 ல் பியூரர் தலைமையிலும்,பின்னர் 1970 வாக்கில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் உதவியோடும்,அதன் பிறகு 1975 முதல் 1984 வரை இந்தியாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளை முன்னெடுத்த அகழ்வாய்வாளர் பெருமதிப்பிற்குரிய பி பி லால் அவர்கள் தலைமையில் விரிவாக நிகழ்ந்திருக்கிறது. அதன் பின்னர் 2003 ஆம் ஆண்டு அலஹாபாத் நீதி மன்றத்தின் வழிகாட்டுதல் படி ஹரி மாஞ்சி, பி ஆர் மணி தலைமையில் அகழ்வாய்வு நடத்தப்பட்டு அதன் அறிக்கையும் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக asi 574 பக்கங்கள் கொண்ட இடைக்கால ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது.
இந்த ஆய்வில் தேசத்தின் முதன்மையான 13 தொல்லியலாளர்கள் பங்கேற்றார்கள். 136 பணியாளர்கள் பணி செய்தார்கள். அவர்களில் 52 பேர் இஸ்லாமியர்கள். தொல்லியலாளர்களில் 4 பேர் இஸ்லாமியர்கள். மூன்றில் ஒரு பங்கு இஸ்லாமியர்கள் பணியில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது. அவர்கள் முன்னிலையில் தான் இந்த அகழ்வாய்வே நிகழ்ந்தது. முழு அகழ்வும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நீதியரசர்களும் இந்த அகழ்வில் பங்கு பெற்றார்கள். அதோடு கனேடிய புவி இயற்பியலாளர்கள் claude robillard தலைமையில் ground penetrating radar மூலம் ராம ஜென்ம பூமியில் சோதனை நிகழ்த்தப்பட்டது. ஒலி அலைகளை முப்பரிமாண தோற்றமாக மாற்றி, புவியின் கீழ் உள்ள அமைப்புகளை புரிந்து கொள்ள உதவும் அதி உயர் தொழில் நுட்பம் மூலமும் ஆய்வு செய்தோம். இதற்கும் இடது சாரி வரலாற்று அரசியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் இந்த ஒலி அலைகள் மூலம் மேப்பிங் செய்ததில் மூன்று கும்மட்டங்கள் இருந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் அடியில் மிகப்பிரமாண்டமான ஆலயம் இருந்தது அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டிருக்கிறது. அதற்கு கீழும் ஆலயத்தின் மிச்சங்கள் இருந்தது முப்பரிமாண வரைபடங்கள் மூலம் தெரிய வந்தது. இந்த ஆய்வை செய்த கனேடிய நிறுவனமும் அதன் தொழில் நுட்பமும் இந்து மதத்திற்கு சார்பானவை என்று எப்படி சொல்ல முடியும். இதன் அடிப்படையில் அக்ழ்வாய்வு செய்து 263 சிற்பங்கள், பாசால்ட் தூண்கள்,எண் மங்கலங்கள் பொறித்த உத்திரங்கள் , அசோகன் பிராமியில் எழுதப்பட்ட கற்பலகைகள் இவைகளை வெளிக்கொண்டு வந்து அவை ஆவணமாக்கப்பட்டு நீதி மன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர் மனுதாரர்களான சுன்னி வக்ப் வாரியம் மற்றும் இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியமும் அதன் வழக்கறிஞர்களும் கூட நேரில் பார்த்தார்கள். இந்த அகழ்வில் பங்கேற்ற 4 இஸ்லாமியர்கள் திரு. குலாம் சையது ஹாஜா, திரு ஹத்திக்கூர் ரெஹ்மான் சித்திக்கி, ஏ ஏ ஹாஸ்மி, மற்றும் ஜீல்பிகர் அலி இதில் ஒருவரை தவிர அனைவரும் இந்தியாவிலேயே இருக்கிறார்கள். அவர்களிடம் நீங்களே நேரில் கேட்கலாம். 1976 அகழ்வின் நாயகன் பி பி லால் அவர்கள் அமெரிக்காவில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார். அவரிடமும் இது தொடர்பான சந்தேகங்களை எழுப்பி விபரங்களை பெறலாம். இந்த நான்கு இஸ்லாமிய தொல்லியல் அறிஞர்களும் பார்த்து முன்னின்று ஆராய்ந்து பாப்ரி மசூதிக்கு கீழ் நிச்சயமான இந்து ஆலயம் இருக்கிறது. அது 12 ஆம் நூற்றாண்டை சார்ந்த விஷ்ணு ஆலயம் என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்கறார்கள். பிரத்யட்சமாக கண்ணுக்கு முன்னால் அறிவியல் பூர்வமாக இருக்கும் உண்மைகளை புறக்கணிப்பது, அதுவும் அரசியல் காரணங்களுக்காக என்பது தான் இடது சாரி வரலாற்று ஆசிரியர்களின் தார்மீக வீழ்ச்சி.
மேலும் கர சேவை நிகழ்ந்த பிறகு அந்த இடத்தை இடிபாடுகளை நீக்கும் பொழுது 12 ஆம் நூற்றாண்டை சார்ந்த விஷ்ணு ஹரி சிலா பலகை இடிபாடுகளில் சிக்கி இருந்தது. அதில் மிகத்தெளிவாக இந்த ஆலயம் வாலியை வதைத்தவனுக்கு, 10 தலை உடைய ராவணணை கொன்ற ராகவ ராமனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட ஆலயம் என்று தெளிவாக இருக்கிறது. 11, 12ம் நூற்றாண்டை சார்ந்த காட்வாலா அரச வம்சம் விஷ்ணுவிற்கு அர்ப்பணித்த ஆலயம் என்று கல்வெட்டு ஆதாரம் கிடைத்திருக்கிறது. பாப்ரி மசூதியின் கட்டுமானத்தில் ஆலயங்களில் இருக்கும் பூர்ண கலச தூண்களை உபயோகித்து கட்டியிருப்பதை பார்த்தேன்.இதே போன்ற கட்டுமானத்தை நீங்கள் குதுப்மினாருக்கு அருகில் உள்ள குவாதுல் இஸ்லாம் மசூதியில் தற்போதும் பார்க்கலாம். அந்த மசூதி கட்டப்பட்டது பற்றி சொல்லும் பொழுதே 23 ஆலயங்களை அழித்து கட்டப்பட்ட மசூதி என்று இருக்கிறது. அதே போல தூண்கள் பாப்ரி மசூதி யிலும் இருந்தது அதை நானே நேரில் பார்த்துள்ளேன். 11, 12 ஆம் நூற்றாண்டு தூண்களுக்கு என்று ஒரு வகைமை இருக்கிறது. அதில் கட வடிவிலான பூரண கலசம் இருப்பது ஒரு அஷ்ட மங்கல சின்னத்தை வைப்பதை நடைமுறையாக கடைபிடித்திருக்கிறார்கள். இதை பார்க்கும் எந்த தொல்லியலாளரும் மிக எளிதில் இது ஒரு இந்து ஆலயத்தின் துணைப்பகுதி என்று சொல்லி விடுவார்கள்.
கேள்வி : இந்த கண்டுபிடிப்புகள் ஏன் அப்போதே வெளி வரவில்லை? 90 களில் சர்ச்சையாக என்ன காரணம்?
கே கே. முகம்மது : இந்த அகழ்வு தொன்மையான ராமாயண நகரங்களை பற்றிய ஆய்வின் ஒரு பகுதியாக செய்யப்பட்டது. அதில் பேராசிரியர் பி.பி லால் அவர்களின் கண்டுபிடிப்புகள் அரசிடம் ஆய்வறிகையாக சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. 90 களில் இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள், பொய்யாக அங்கே எந்த ஆலயமும் இல்லை இது தான் ஆர்க்கியாலஜிகல் சர்வேயின் கண்டுபிடிப்பு என்று துணிந்து பொய் சொன்னார்கள். அப்போது நான் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஏ எஸ் ஐ யில் பணி செய்து கொண்டிருந்தேன். ஐராவதம் மகாதேவன் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் ராமன் ஆலயம் அங்கிருக்க வாய்ப்பில்லை என்று மதிக்கத்தகுந்த வரலாற்றாசிரியர்கள் இர்பான் ஹபீப், ஆர் எஸ் சர்மா, கே என் பணிக்கர் இவர்கள் எல்லாம் சொல்கிறார்கள். எனவே அதை தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எழுதி இருந்தார். நான் அவருக்கு தனிப்பட்ட முறையில் பிபி லால் தலைமையிலான ஆய்வையும், அதில் பங்காற்றியது பற்றியும், அதிலிருந்த ஒரே இஸ்லாமியனான நான் அங்கு ஆலயத்தின் மிச்சங்களை, இடிபாடுகளை கண்ணால் பார்த்தேன். இது தொடர்பான அரிக்கையும் அரசுக்கு அளிக்கப்பட்டிருக்கிரது என்பதையும் விரிவாக எழுதி இருந்தேன். என்னை நேரில் சந்தித்த ஐராவதம் மஹாதேவன் அவர்கள், இந்த கடிதத்தை நான் அப்படியே பதிப்பித்து விடவா? இதில் ஒன்றும் மாற்றமில்லையே என்றார். அரசு பணியாளன் நான் அரசு அனுமதி இன்றி பொது வெளியில் இவைகளை பேசுவது சரி அல்ல என்று எண்ணுகிறேன். அதனால் வேண்டாம், இது உங்களின் தனிப்பட்ட பார்வைக்கு மட்டும் என்றேன். பின்னர் யோசித்து பார்த்த பிறகு அதை இன்னும் விரிவாக எழுதி கீழே கே கே முகம்மது ஆர்க்கியாலஜிகல் சர்வே, சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை என்று எழுதி அனுப்பி விட்டேன். அந்த கடிதம் பத்திரிக்கையில் வந்த பிறகு இடதுசாரி வரலாற்று ஆசிரியர்களும், அவர்களின் கார்டெல்லில் இருக்கும் கூலிப்பட்டாள நிரைகளும் பெரும் கூச்சலை கிளப்பினார்கள். என் மீது தனிப்பட்ட வசைகளை பொது வெளியில் வைத்தார்கள். அடிப்படைவாத இயக்கங்கள் கொலை மிரட்டல் விடுத்தன. பல பத்வாக்கள் விதிக்கப்பட்டன. துறை ரீதியாக உண்மையை எழுதியதற்காக என மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு அன்றைய ஏ எஸ் ஐ டைரக்டர் த்ரிபாதி அவர்கள் நேரில் வந்து விளக்கம் கேட்டார்.
இந்த கடிதத்தை எழுதியதற்காக உன்னை இப்பொழுதே சஸ்பெண்ட் செய்ய இருக்கிறோம் என்றார். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: (அறத்தை நாம் பேணினால் அறம் நம்மை காக்கும் ) என்றேன். என்னிடமே சமஸ்கிருதம் சொல்கிறாயா? நான் அலகாபாத் பிராமணன் என்றதோடு, சரி உன் வேதாந்தம் உன் வேலையை காப்பாற்ற போவதில்லை பார்த்துக்கொள் என்றார். திரும்பவும் இதை ஏன் எழுதினாய், எனக்கும் தெரியும் கீழே மிகப்பிரமாண்டமான ராமர் ஆலயம் இருக்கிறது என்று அதை ஏன் வெளியில் சொல்ல வேண்டும். அது நம் பணியா? என்றார். என் சுதர்மம் உண்மையை உரத்து சொல்வதே. எந்த விலை கொடுத்தும் சத்தியத்தையே நாம் காக்க வேண்டும் அதுவே என் சுதர்மம் என்றேன். சிரித்துக்கொண்டே அது சரி ஆனால் அது உனக்கு பணிப்பாதுகாப்பு வழங்காது என்று சொல்லி விட்டு பணி நீக்கம் என்பதற்கு பதில் கோவா பகுதிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டேன். ஆனால் அது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை . என் கடன் பணி செய்து கிடப்பதே…
கே: இந்த அகழ்வாய்வில் உடனடியாக கிடைத்தது வேண்டுமானால் விஷ்ணு ஆலயமாக இருக்கலாம். ஆனால் அதற்கு கீழ் இருப்பது பெளத்த சைத்யம் என்று அலிகர் முஸ்லீம் பல்கலை கழக ஆசிரியர்களும், சில பிரிவினை வாத தலித் அரசியல்வாதிகளும் சொல்கிறார்களே. ? அதோடு பெளத்த ஐகனோகிராபிக்கும் , இந்து ஐகனோகிராபிக்கும் பெரிய வேறுபாடு கிடையாது . அதை நீங்கள் பிழையாக புரிந்து கொண்டீர்கள் என்று சொல்லப்படுவது பற்றி?
கே கே முகம்மது : இந்த ஆலயத்திற்கு கீழ் இன்னொரு அடுக்கில் ஆலய மிச்சங்கள் இருப்பது உண்மை தான் அந்த ஆலய மிச்சங்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அதில் இருக்கும் வட்ட வடிவ அரைக்கட்டுமான மிச்சம் பெளத்த சைத்யத்தின் மிச்சம் என சொல்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. பெளத்த சைத்யத்தில் கட்டப்படும் ஸ்தூபி முழுமையான சாலிட் ஸ்ட்ரக்சர், நடுவில் இடம் விட்டோ, வேறு பொருட்களை நிரப்பியோ கட்டப்பட மாட்டாது., ஏனென்றால் அது மிகவும் புனிதமானது. சுதந்திரத்திற்கு முன்பு நிகழ்ந்த அயோத்தி அகழ்வில் முக்கிய நோக்கம், பெளத்த, சமண தடங்களை தேடியது தான். ஆனால் அப்படி எந்த கட்டுமானமும் கிடைக்க வில்லை. அதே போல கீழே சிவாலயம் இருந்ததற்குரிய ஆதாரம் இருக்கிறது. அதிலும் சதிக்கோட்பாட்டை பொருத்த வேண்டியதில்லை. சிவனும்,விஷ்ணுவும் ஒரே இடத்தில் இந்த தேசம் முழுக்க இருக்கிறார்கள். எப்படி இருந்தாலும், கீழே இந்து ஆலயங்களின் தொகை இருப்பது மறுக்க முடியாத ஆவணம். மசூதி கோவிலை இடித்து தான் கட்டப்பட்டது என்பதும் உண்மை. அதற்கும், வரலாற்று தொல்லியல் சான்றுகள் இருக்கிறது. அதை விட 2003 ல் அகழ்வாராய்ச்சி நடத்திய ஹரி மாஞ்சியே ஒரு பெளத்தர் தான். அங்கிருந்தது எதுவும் பெளத்த ஐகனோகிராபி அல்ல என்று அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டிருக்கிறது.
கே: உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரலாற்று, தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையிலானது மட்டுமா? ஒரு இஸ்லாமியராக நீங்கள் இந்த தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்.
கே கே முகம்மது : நான் முதலில் இந்த தேசத்தின் பெருமைமிகு குடிமகன். நான் ஒரு பாரதீயன் என்று சொல்லிக்கொள்வதை பெருமையாக நினைப்பவன். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த சம நிலையான தீர்ப்பு. இதை அனைத்து தரப்பினரும் வரவேற்பதை பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். அகழ்வாய்வின் போது 3 -4 மாதங்கள் அங்கேயே தங்கி இருந்து பார்த்திருக்கிறேன். தினமும் நுற்றுக்கணக்கான இந்துக்கள் வந்து மசூதி இருந்த இடத்தை சுற்றி வழிபட்டு செல்வதையும், மனமுருகி பிரார்த்தனை செய்வதையும் பார்த்திருக்கிறேன். அவர்கள் எளிய ஆன்மாக்கள் அவர்களுக்கு வரலாறோ, சர்ச்சைகளோ, அரசியலோ தெரியாது. அதை எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் இறைவனை அந்த இடத்தில் வழிபடுகிறார்கள். அதனால் தான் இஸ்லாமியர்கள், மெக்கா, மதீனாவில் வழிபடுவது போன்று இது இந்துக்களுக்கான புனித ஸ்தலம் மனமுவந்து விட்டுக்கொடுக்கலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸில் கட்டுரை எழுதினேன். அதனை நான் மனப்பூர்வமாக என் சகோதர இஸ்லாமியர்களிடம் கோருவேன். பாரதிய இஸ்லாமியர்கள் அதை மனமுவந்தும் செய்வார்கள். அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை என்னால் ஒப்புக்கொள்ளமுடியவில்லை. அது தவறு என்பது தான் என் நிலைபாடு, ஆனால் அதன் கீழ் ராமனுக்கு ஆலயம் இருந்தது என்பதும், அது இந்துக்களின் புனித பூமி என்பதும், அகழ்வாய்வில் கண்டடைந்த உண்மை. அதை எதற்கும் ஈடாக விட்டுக்கொடுக்க முடியாது.
இந்த மசூதி ஒன்றும் நேரடியாக முகமது நபியோடோ, அவுலியாக்களோடோ தொடர்பு கொண்டதல்ல. ஆனால் இந்துக்களுக்கு இது ஒரு புனித ஸ்தலம். இஸ்லாமியர்களுக்கு இந்துக்கள் இதை விட பெரிய மசூதியாகவே இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் அயோத்தியின் பிற பகுதியில் கட்டி கொடுக்கலாம். அது தான் பாரதிய தன்மை. எந்த ஒரு இஸ்லாமிய தேசத்தை விடவும் பாரதத்தில் இஸ்லாமியர்கள் மிகவும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். அவர்களின் உரிமைகளுக்கும், வளர்ச்சிக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதற்கு இந்துக்களின் பெருந்தன்மையும், இந்து சமயம் அளிக்கும் மன விரிவுமே காரணம். உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு மக்களின் ஒற்றுமை, சமூகங்களிடையே இணக்கம், இவைகளையும் வரலாற்று, தொல்லியல் சான்றுகளோடு இணைத்து தான் நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். நீங்களே பாருங்கள், இந்துக்களும் , இஸ்லாமியர்களும் இணைந்து இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். 300 ஆண்டு கால பிரச்சினை . மக்களிடையே எந்த சம நிலை குலைவையும் ஏற்படுத்தாமல் ஏற்றுக்கொள்ள செய்திருக்கிறது என்பதே உண்மையின் ஒளி அந்த தீர்ப்பில் இருப்பதால் தான்..ஆனால் இஸ்லாமியர்கள் இதை ஏற்றுக்கொண்டாலும் மார்க்கஸிய அரசியலாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், அந்த மக்களை திசை திருப்பும் வகையில் பொய்யை திரும்ப திரும்ப கூறி பிளவை ஆழமாக்கி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்.
கே: தீர்ப்பிற்கு பிறகு இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் உங்கள் மீது பழி சுமத்தி தூற்றுகிறார்களே? அதோடு அடிப்படைவாதிகளின் பத்வா?
கே கே முகம்மது : இடதுசாரி ஆசிரியர்கள் தொடர்ந்து இப்படியான அநாகரீகமான பொய்களை சொல்கிறார்கள். அது அவர்களின் அரசியல், சமீபத்தில் நதீம் ரிஸ்வி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் நான் அயோத்தி அகழ்வில் பங்கெடுக்கவே இல்லை. பொய் சொல்கிறார் என்று ஒரு பொய்யை துணிந்து எழுதினார். அதை மேற்கோள் காட்டி இடது சாரி பத்திரிக்கைகள், சமூக ஊடகங்களில் என்னை கடுமையாக வசை பாடினார்கள்.டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஹிந்து நாளிதழ்களின் இடது சாய்வு அரசியல் தெரிந்தது தான். ஆனால் ஊடக அறம் என்று ஒன்று இருப்பதாக கொண்டால் என்னிடமும் அதற்குரிய விளக்கங்களை கேட்டிருக்க வேண்டும். கேட்காமல் பெரிய அளவில் நதிம் ரிஸ்வியின் கட்டுரையை வெளியிட்டு விட்டார்கள். அதன் பிறகு நான் பேராசிரியர் பிபி லால் அவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு இது பற்றி போட்டோக்கள் எதேனும் இருக்கிறதா என கேட்டேன். அவர் உடனடியாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு முழு ஆதாரத்துடனும், புகைப்படத்துடனும் ஒரு கட்டுரை எழுதி அனுப்பினார். எனக்கும் அனுப்பி இருந்தார். டைம்ஸ் ஆப் இந்தியாவில் மிகவும் சிறிய அளவில் 13ம் பக்கத்தில் அதை பிரசுரித்து இருந்தார்கள். இந்த அரசியலை எல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எனக்கெதிராக பத்வா விதித்திருக்கிறார்கள். ஆனால் நான் நான்றிந்த உண்மைகளை அதற்காக மறைத்து கொண்டு இருக்க மாட்டேன். உண்மையை நிச்சயம் உரத்து சொல்வேன். நான் இறைவனுக்கு மட்டுமே தலைவணங்குபவன். இதை பற்றி எல்லாம் பெரிதாக எண்ண வில்லை.
கே: இஸ்லாமியர்களுக்கு பொது மக்களுக்கு உங்கள் செய்தி என்ன?
கே கே முகம்மது : சகோதரர்களே நாம் அரசியல் முதிர்ச்சியையும், நம் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்த வேண்டிய தருணமிது. இந்த நிலையில் இருந்து நாம் முன்னோக்கி பயணம் செய்ய வேண்டும். இந்துக்களின் மன முதிர்ச்சியை நிச்சயம் பாராட்ட வேண்டும். அவர்கள் எங்கும் வெற்றி விழா கொண்டாட்டம், என்றோ, ஆர்ப்பாட்டம் என்றோ செய்யாமல் மன முதிர்ச்சியோடும், அரசியல் முதிர்ச்சியோடும் இருக்கிறார்கள். நாம் இணைந்து இந்த கால கட்டத்தை கடந்து செல்ல வேண்டும். இங்குள்ள இஸ்லாமியர்களும், இந்துக்களும் மனமுவந்து சகோதரபாவத்தோடு இருக்கிறார்கள் என்பதே நவீன உலகிற்கு நாம் சொல்லும் செய்தி.
அருமை, மிக அருமை!
Good
அசத்திவிட்டீர்கள். அருமையான கட்டுரை. இதை சிறு புத்தகமாக இந்து அமைப்புகள் வெளியிட வேண்டும்.
இந்த கட்டுரையை அப்படியே மற்றவர்களுக்கு இமெயில் மூலம் அனுப்புவது எப்படி ? அதற்கான வசதியை அளிக்க வேண்டுகிறேன்.
தொல்லியலாளர் கே.கே. முகம்மது நடுநிலையிலிருந்து சான்றுகளைப் பார்த்திருக்கிறார். இதை யூ-டியூபில் பல சந்தர்ப்பங்களில் விளக்கியிருக்கிறார்.
வரலாற்று உண்மை இஸ்லாமியர்களுக்கும் நன்கு தெரிந்ததுதான்.ஆனால் தாங்கள் பிடித்த இடத்தையோ நாட்டையோ விட்டுக்கொடுப்பது என்பது இஸ்லாமியர் அகராதியில் இல்லை. அவற்றைச் சண்டயிட்டு வென்றால்தான் உண்டு. ஜெருசலேம் பகுதியில் முஸ்லிம்கள் ஆக்ரமித்த யூத-கிறிஸ்துவ இடங்களை மீட்க போப் தலைமையில் கிறிஸ்தவர்கள் இரு நூற்றாண்டுகள் முயன்றும் பலிக்கவில்லை.
அயோத்யா விஷயத்தில் முஸ்லிம் தரப்பினர் 1986-89 வாக்கில் சமரசத்திற்கு தயாராகி வந்தனர்.ஆனால் இடதுசாரிகள் “வரலாற்று அறிஞர்” என்ற போர்வையில் குறுக்கே வந்து இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை யிட்டனர். அலஹாபாத் உயர் நீதி மன்றத்தில், அகழ்வாராச்சியில் வெளிப்பட்ட ஹிந்துக்கோயில் உண்மை ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. அதே சமயம், வரலாற்றுக்காரர்கள் என்ற பெயரில் உலாவந்த நபர்களை குறுக்கு விசாரணை செய்த நீதிமன்றம், அவர்கள் எந்த அகழ்வாராய்ச்சியோ, வேறு எந்த விதமான ஆய்வோ செய்யவில்லை, அவர்கள் சொல்வது சொந்தக்கருத்தே தவிர சரித்திர பூர்வமான உண்மையல்ல, எனவே அவர்கள் கூற்று ஏற்கத்தக்க தல்ல என்ற முடிவுக்கு வந்தது. ஆனால் நமது முக்கிய பத்திரிகைகள் [ Times of India, The Hindu of Chennai etc] இந்த உண்மைகளை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்ததுடன், அந்த இடது சாரி அண்டப் புளுகர்களுக்கே மேலும் தம் பத்திரிகையில் எழுத வாய்ப்பளித்தன.
அயோத்யா சம்பந்தப்பட்ட விவரங்களை சரித்திர பூர்வமாக, ஆதாரங்களின் அடிப்படையில் அறிய , டெல்லி பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் மீனாக்ஷி ஜெயின் அவர்கள் எழுதிய ( Rama & Ayodhya, The Battle For Rama – Aryan Books International, New Delhi) ஆகிய புத்தகங்கள் முக்கியமானவை. மேலும் டாக்டர் கான்ராய்ட் எல்ஸ்ட் ( Dr. Koenraad Elst ) என்ற பெல்ஜிய அறிஞர் எழுதிய புத்தகங்களும் கட்டுரைகளும் மிகவும் பயன்படும்.
அயோத்யா வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது, ஆனால் ஹிந்துக்களின் பிரச்சினைகள் இத்தோடு முடிந்துவிடவில்லை. உண்மையான வரலாற்றை அறிய ஒவ்வொரு படித்த ஹிந்துவும் இத்தகைய அறிவாய்ந்த நூல்களைப் படித்தறியவேண்டும்.
அகழ்வாராய்சி உண்மையை தயங்காமல் ஒப்புக்கொண்டதுடன் அதை பகிரங்கமாகப் பேசி விளக்கிவரும் கே.கே முகம்மதுவிற்கு நமது நன்றியும் பாராட்டும் உரியவை.
சுவனப்பிரியன்என்ற அரேபிய மத இணையத்தில் முழு கட்டுரையும் பதிவு செய்தேன்.படங்கள் இல்லாமல் வெளியிட்டுள்ளாா்கள். கட்டுரை மிகச் சிறப்பாக உள்ளது.
namaskarmam,
my heart full thanks
Very good article , every. Indian (both Hindu &Muslim must read this
மிக அருமை. சர்வ நிச்சயமாக இவர் இந்தியா பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டிய ஒரு மாமனிதர் என்பதில் ஐயமே இல்லை. அவருக்கும் அவரை விளக்கமாக பேட்டி கண்டு இக்கட்டுரைய கொணர்ந்த திரு.வீர.ராஜமாணிக்கம் அவர்களுக்கும் வணக்கம்.
பெரும் அருவருப்பையும் சினத்தையும் வரவைப்பது ஊடகவேசிகளும் அறிவுஜீவிகள் போர்வையில் உலாவரும் நிர்மூட கூலிப்படையினரும்தான். இவர்களால்தான் பிரச்சினைகள். பொய்யாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டமைக்காகவும், திரு.முகம்மது அவர்களிடம் விளக்கம் கேட்காமலேயே பொய்செய்தி பரப்பியமைக்காகவும் மேற்படி கூலிப்படையினரையும் ஊடக பொறுப்பாளர்களையும் உள்ளே தள்ளியிருந்திருக்கவேண்டும்.
அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான “இந்த கட்டுரையை அப்படியே மற்றவர்களுக்கு இமெயில் மூலம் அனுப்புவது எப்படி??. இந்த கட்டுரை எழுதிய ஆசிரியர் திரு வீர. ராஜமாணிக்கம் அவர்களின் அனுமதி பெற்று “ஆசிரியரின் பெயரில்” இந்த கட்டுரையை எளிதாக மாற்றம் செய்யாமல் PDF-இல் நான் மாற்றித்தருகிறேன். அதற்கு ஆசிரியர் மற்றும் tamilhindu.com ஆகியோரின் அனுமதி தேவை. வேண்டுமென்றால் அனுமதி பெற்று எனது மின்னஞ்சலில் தெரிவியுங்கள்.