இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

பிறந்த தின (1897 ஜனவரி 23) சிறப்புக் கட்டுரை

இந்த நாடு சுதந்திரம் பெற உழைத்தவர்களுள் தலையாய இருவர் என மகாத்மா காந்திஜியையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸையும் சொல்லலாம். இருவரின் வழிமுறைகள் வேறானவையாக இருந்தபோதும், இலக்கு ஒன்றாகவே இருந்தது. எனினும், இலக்கை நோக்கிய அரசியல் பயணத்தில் நேதாஜி காந்திஜியைவிட ஒருபடி மேலானவராகவே இருந்தார்.

காந்திஜியும் நேதாஜியும் ஒத்த கருத்துடன் செயல்பட்டிருந்தால் சுதந்திர இந்தியா வேறு வடிவில் எழுந்திருக்கும் என்பதே சரித்திர ஆய்வாளர்களின் கருத்து. நமது துரதிர்ஷ்டம், காந்திஜியும் நேதாஜியும் துவக்கக் காலம் (1922) முதலே உடன்பாடும் முரண்பாடும் கொண்டவர்களாகவே இயங்கி வந்துள்ளனர். அந்த இடைவெளியில்தான் ஜவஹர்லால் நேரு உள்புகுந்து காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்றினார்; பின்னாளில், பிரதமர் ஆன பிறகு காந்திஜியையே செல்லாக்காசாக்கினர்.

மாறாக, யுத்தமுனையில் நின்றபோதும் சிங்கப்பூரில் இருந்தபடியே வானொலியில் (1945) உரையாற்றிய நேதாஜி, மகாத்மா காந்தியை தங்கள் வழிகாட்டியாகக் குறிப்பிட்டு வெகுவாகப் புகழ்ந்திருப்பதைக் கேட்க முடியும்.

இந்த வேறுபாடுகளுக்குக் காரணம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய, இன்றும் நிலவும் குழு மனப்பான்மை தான் எனில் மிகையில்லை. ஆங்கிலேயரால் துவங்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்குள் பாலகங்காதர திலகர் காலடி எடுத்துவைத்த பிறகே அக்கட்சி விடுதலைக்காக தீர்மானம் இயற்றத் துவங்கியது. அப்போதே திலகருக்கு எதிராக கோபால கிருஷ்ண கோகலே போன்ற மிதவாதிகள் உருவாகினர். மிதவாதிகள் என்பவர்கள் ஆட்சியாளர்களைச் சார்ந்திருப்பவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

திலகர் சகாப்தம் நிறைவடையும் வேளையில், கோகலேவை குருவாக வரித்துக்கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய அரசியலில் நுழைகிறார். 1915லேயே தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தாலும் 1920 வரை அவர் தீவிர அரசியலில் இறங்கவில்லை. 1920ல் திலகர் மறைந்த பிறகே காந்தியின் அரசியல் வேகம் பெற்றது. 1924ல் அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் தான் கொல்கத்தாவில் சுபாஷ் சந்திரபோஸ் விடுதலைப்போரில் குதித்தார். அவரது அரசியல் குரு, சித்தரஞ்சன் தாஸ். அவரோ காந்தியையின் அஹிம்சையைக் கடுமையாக எதிர்த்தவர்.

சித்தரஞ்சன் தாஸ்

1922ல் அறிவிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தை, சௌரிசௌரா சம்பவத்தைக் காரணமாகக் காட்டி தன்னிச்சையாக நிறுத்தினார் காந்தி. அதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சிக்குளேயே ‘சுயராஜ்யக் கட்சி’யை நிறுவினார் சித்தரஞ்சன் தாஸ். ஏனெனில் அவரது கருத்துகளால் கட்சிக்குள் காந்தியின் செல்வாக்கை மீறி வெல்ல முடியவில்லை. காந்திக்கு பதிலடி கொடுப்பதற்காகவே ‘சுயராஜ்யா’ என்ற பத்திரிகையை துவக்கிய சித்தரஞ்சன் தாஸ், அதன் நிர்வாகப் பொறுப்பை சுபாஸிடம் ஒப்படைத்தார். இங்குதான் காந்தி- போஸ் முரண்பாடு துவங்குகிறது.

ஆங்கிலேயர்கள் தங்களைக் கடுமையாக எதிர்த்தோரை கொடும் சட்டங்களால் சிறையில் தள்ளி பொதுவாழ்விலிருந்து அகற்றினர். அதேசமயம், மிதமாக எதிர்ப்போருக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்தனர். அதன்மூலமாகவே காந்தி, நேரு, படேல் போன்ற மிதவாதிகள் அரசியல் சூழலில் தொடர்ந்து போராட முடிந்தது. அவர்களே மக்களின் மனதில் நிற்கவும் முடிந்தது. அவர்களது அணியின் தலைவராக காந்தி விளங்கினார்.

மாறாக, திலகர், அரவிந்தர், சாவர்க்கர் போன்ற தீவிரவாதிகளின் பக்கம் சுபாஷ் நின்றார். இது தனிப்பட்ட ஆளுமைகளிடையிலான மோதல் அல்ல; நாட்டின் சுதந்திரத்தை அடையும் வழிமுறை அடிப்படையிலான கொள்கை மோதல். இந்த முரண் காந்திஜி- நேதாஜியின் இறுதிக்காலம் வரை தொடர்ந்தது.

1928 ல் கொல்கத்தாவில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு காந்தி தலைமையில் கூடியது. சுயாட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்தியை எதிர்த்துப் பேச காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினர். கொல்கத்தா மாகாணத் தலைவரான போஸ் எழுந்தார்;  காந்தியின் முடிவு தவறு என எதிர்த்தார். காந்தி- போஸ் மோதல் மேலும் வலுவடைந்தது. போஸின் முடிவை அப்போது நேரு ஆதரித்தார். இதனால் இருவரும் இணைந்து காங்கிரஸில் இருந்தபடி  ‘விடுதலைச் சங்கம்’ என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தினர். (பின்னாளில் காங்கிரஸ் கட்சிக்குள் நேதாஜியின் செல்வாக்கு சரிந்தபோது, நேரு காந்திஜியின் தலைமையை ஏற்றார்).

நேதாஜியுடன் நேரு

காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே போஸ் எதிர்த்ததால், காரிய கமிட்டியில் இருந்து நீக்கப்பட்டார். அவரைப் போல சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சீனிவாச ஐயங்காரும்  நீக்கப்பட்டார். உடனே போஸ், “காங்கிரஸ் மிதவாதிகள் கைக்கு போய்விட்டது; அங்கு எங்களுக்கு வேலையில்லை’’ எனக் கட்சியிலிருந்து விலகி, சீனிவாசரைத் தலைவராகக் கொண்டு ‘காங்கிரஸ் ஜனநாயக கட்சி’யைத் தொடங்கினார்.

அடுத்த பத்தாண்டுகளில் காந்தி காங்கிரஸ் கட்சியின் தன்னிகரற்ற தலைவர் ஆகியிருந்தார். அக்கட்சியின் உறுப்பினர் ஆகாமலே கட்சிக்குள் செல்வாக்கு செலுத்துபவராக அவர் விளங்கினார். அவரது தன்னிச்சையான போக்கிற்கு எதிர்ப்பும் கட்சிக்குள் நிலவியது. அந்த அதிருப்தியாளர்களின் குவிமுனையாக நேதாஜி இருந்தார்.

1939 இல் சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திர பிரசாத்தையும், ஜவஹர்லால் நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதாராமையாவை போட்டியாளராக நிறுத்தினார். ஆனால், மகாத்மாவின் செல்வாக்கி மீறி, 1,580 வாக்குகளுடன் நேதாஜி வெற்றி பெற்றார்.

அந்தத் தேர்தல் கட்சிக்குள் நடைபெற்ற ஜனநாயகரீதியான தேர்தல். ஆனால், “சீதாராமையாவின் தோல்வி என்னுடைய தோல்வி’’ என்று கூறி  உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார் காந்திஜி. அதனால், அவரைச் சமாதானப்படுத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் நேதாஜி. இது, தனது தனிப்பட்ட வெறுப்புக்காக உள்கட்சி ஜனநாயகத்தை காந்திஜியே சிதைத்த வரலாறு. காங்கிரஸ் கட்சிக்குள் இன்றும் தொடரும் பல ஜனநாயக விரோத விபரீதங்களுக்கு வித்திட்டவர் காந்திஜிதான்.

அதன்பிறகு நேதாஜி 1939 இல் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார். தனது கட்சி காங்கிரஸ் பேரியக்கத்தின் களப் போரில் முன்னணித் தளகர்த்தராக இருக்கும் என்று அவர் சொன்னார். அதன் அகில இந்தியத் தலைவராக நேதாஜியும், தமிழகத் தலைவராக பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் பொறுப்பேற்றனர். ஆனால், பார்வர்டு பிளாக் கட்சியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பகையாளிகளாகவே நடத்தினர். அதனால்தான் இன்று அக்கட்சி இடதுசாரியாக மாறி இருக்கிறது.

ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரை லண்டனில் சுட்டுக் கொன்றார் பாரத இளைஞர் உத்தம் சிங் (1940). அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் போஸ். காந்திக்கும் போஸுக்கும் இடையிலான உரசலை இந்தச் சம்பவம் அதிகரித்தது.

1941இல் கொல்கத்தாவில் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேதாஜி அங்கிருந்து தப்பி, ஆப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனி சென்று, அங்கிருந்து ஜப்பான் சென்றது வீர வரலாறு. அப்போது நாடு முழுவதும் வீரநாயகன் எனப் போற்றப்பட்டார் நேதாஜி. எனவேதான் 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் காந்திஜிக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் சிறைப்படுத்தப்பட்டார்.

இந்திய தேசிய ராணுவம்: ஒரு வீர சகாப்தம்

வெளிநாடு சென்ற நேதாஜி அங்கு போர்ப்படை திரட்டியதும், ‘தில்லி சலோ’ முழக்கத்துடன்’ இந்தியாவை துப்பாக்கி முனையில் விடுவிக்கப் போர் நடத்தியதும், விதிவசமாக அதில் தோல்வியுற்றதும் தனி வரலாறு. இரண்டாம் உலகப் போரின் முடிவே நேதாஜியின் தோல்விக்கு வித்திட்டது. அந்தப் போரில் ஜப்பான் வென்றிருந்தால் சுதந்திர இந்திய ராணுவமும் ஆங்கிலேயரை வென்று நாட்டை மீட்டிருக்கும். அதேசமயம், இந்தியாவை விட்டு ஆங்கிலேயர் வெளியேற வேண்டியதன் அவசரத்தையும் இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப் போரும் வேகம் பெற்றிருந்தது. அதனால்தான் நாம் 1947ல் சுதந்திரம் அடைந்தோம்.

விடுதலை சும்மா வரவில்லை; அதை நாம் போராடித்தான் பெற்றோம். அதேசமயம், மிதவாதிகளின் மென்மையான அணுகுமுறைகள் மட்டுமே அதற்குக் காரணம் அல்ல. திலகர் முதல் நேதாஜி வரையிலான தீவிரக் கொள்கை உடைய தேசியவாதிகளின் பங்களிப்பே விடுதலைப் போரை வழிநடத்தியது. அதை மறைக்க முயலும் அனைவரும் பட்டாபி சீதாராமையாவின் ஆதரவாளர்களாகத் தான் இருக்க முடியும்.

.

4 Replies to “இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்”

  1. அருமையான கட்டுரை. சீதாராமையாவின் தோல்வி என் தோல்வி என்று காந்தி அறிக்கை விட்டதால் நேதாஜி தலைவா் பதவியை விட்டு விலகினாா் என்றுதான் நான் அறிவேன்.காந்தி உண்ணாவிரதம் இருந்தது தெரியாது.விபரங்களை பதிவு செய்தால் தெரிந்து கொள்வேன்.

  2. நேதாஜி RSS பற்றியும், இந்து மகா சபை பற்றியும் கசப்பை காட்டியதாக இந்தியன் எக்ஸ்பிரசிலும் (ஷாஹுல் இஸ்மாயீல்), ஹிந்துஸ்தான் டைம்சிலும் (ராமச்சந்திர குஹா) முகநூல் உள்ளிட்ட திமுக காங்கிரஸ் சொம்பு பதிவுகளில் RSS, இந்து மகாசபயை மட்டம் தட்டி பேசுகிறார்கள். உண்மையில் நேதாஜி அவர்களின் நிலைப்பாடு ஹிந்துத்வத்திர்க்கு எதிராக இருந்ததா என்பதை விளக்கி ஒரு கட்டுரை வெளியிட்டால், என் போன்றோர் கருத்து மோதல்களில் எதிர்த்து நிற்க ஏதுவாக இருக்கும்…

  3. இரண்டாம் உலகப்
    போரில் இங்கிலாந்துக்கு ஆதரவாக இந்தியாவில் பிரிட்டிஷ் இராணுவத்தில்
    பணியாற்றிக் கொண்டிருந்த இந்திய சிப்பாய்களை,

    இத்தாலி,
    ஜெர்மன்,
    துருக்கி
    போன்ற நாடுகளின் மீது,
    போரிடுவதற்காக அனுப்ப
    பிரிட்டிஷ் அரசு
    முடிவெடுத்த
    போது,

    சர்தார் வல்பாய் படேல் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஆனால்,
    காந்தி
    இந்திய சிப்பாய்களை அனுப்புவதற்கு சம்மதித்தார்..

    இதனால் படேலுக்கும் காந்திக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்தியர்களான,
    சுமார்
    5000 சிப்பாய்கள் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக,

    இத்தாலி
    மீது போர் தொடுக்க அனுப்
    பட்டனர்.

    ஆனால்,
    அந்த
    ஐயாயிரம்
    இந்திய சிப்பாய்களும் இத்தாலி இராணுவத்தால் சிறை பிடிக்கப்
    பட்டனர்,

    ஒரு பெரிய
    நாடக அரங்கத்தில்
    அடைத்து
    வைத்து,
    விஷ வாயுவை செலுத்தி படுகொலை
    செய்ய முசோலினியும் திட்ட
    மிடுகிறார்.

    அதனை,
    உடனே ஹிட்லருக்கும் தெரியப் படுத்துகிறார்.

    செய்தி
    அறிந்து பதை
    பதைக்கிறார்,
    ஒரு இந்திய
    தலைவர்
    அவசரம் வேண்டாம்,

    அந்த
    சிப்பாய்களை
    ஒரு முறை நான் பார்க்க
    வேண்டும்,
    அது
    வரையில் பொறுத்திருங்கள்
    என்று வேண்டுகோள் விடுத்தார்.

    நமது
    சிப்பாய்கள் அடைத்து வைத்திருந்த அரங்கத்தில்..,

    முதலில் முசோலினி நுழைந்தார்.,

    அமைதி…

    இரண்டாம்
    நபராக ஹிட்லர் நுழைந்தார்.,

    துளி கூட
    அசைவே
    இல்லை…

    மூன்றாவது
    நபராக
    இந்தியத்
    தலைவர் நுழைந்தார்…

    அவரைப்
    பார்த்த அந்த 5000
    இந்திய சிப்பாய்களும்,
    வீரு
    கொண்டு
    எழுந்து,
    உணர்ச்சிப் பிழம்பாகவே
    மாறி…..

    நேதாஜி ஜிந்தாபாத்
    என்று எழுப்பிய
    கோஷம்,
    அந்த அரங்கமே அதிர்ந்தது….

    ஹிட்லரும், முசோலினியும்,
    விக்கித்து நின்றனர்…

    அப்போது
    அதே இடத்தில்,
    நேதாஜி அவர்கள்
    ஹிட்லரிடமும்,
    முசோலினியிடமும்
    இவர்கள்
    பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்
    தாலும்,

    என் தாய் நாட்டு மக்கள்,

    எனது
    சகோதரர்கள், இவர்களுக்கு தயவு கூர்ந்து பொது
    மன்னிப்பை வழங்கி,
    என்னிடம் தாருங்கள்..

    நான் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்த்து
    பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர்த்துப்
    போரிட்டு,

    என் பாரத
    நாட்டின்
    விடுதலையை விரைவாகவே
    பெற்று
    விடுவேன்
    என்று கூறியும்,

    உடனடியாக
    அவர்கள்
    இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்த செய்தியை ,
    சர்வதேச ரேடியோவிலும்
    அறிவிக்கிறார் நேதாஜி…

    இந்தச்
    செய்தியை
    கேட்ட இங்கிலாந்துக்கு நடுக்கமும் ஏற்படுகிறது.

    பிரிட்டிஷ் பாராளுமன்றம் அவசரமாகக்
    கூடி விவாதித்தது…..

    இந்தியாவில் உள்ள இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்,
    இந்திய சிப்பாய்கள் கையில் இப்போது
    துப்பாக்கி இருக்கிறது.

    அது எந்த
    நேரமும் நமக்கெதிராக திரும்பும்,
    அந்த நிலை நமக்கு
    ஏற்பட்டு விடக்கூடாது,

    எனவே
    நாம் இந்தியாவை விட்டு
    உடனடியாக
    வெளியேறி விட வேண்டும்
    என்ற தீர்மானமும் உடனடியாக போட்டது…

    ஐந்தாயிரம் படைவீரர்களுடன் பர்மா வழியாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவிற்குள் வருவதையறிந்த பிரிட்டிஷ்காரர்கள்.

    அவசரமாக காந்தியை கூப்பிட்டு உங்கள் ஆயுதமில்லா அறப்போராட்டம் எங்களை கவர்ந்தது அதனால் உங்கள் நாட்டை உங்களிடமே ஒப்படைக்கிறோம் என்று அவசரமாக இந்தியாவை விட்டு வெளியேறினர்.

    இது
    போன்ற, நேதாஜியின் சேவையும், தியாகமும் வாழ்க்கையும், வரலாறுகளும்

    ஏன் ?

    மரணம்
    உட்பட கூட,

    அவரைப்
    பற்றி
    மறைக்கப்
    பட்ட உண்மைகளோ ஏராளம் !
    ஏராளம் !!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *