2. அமெரிக்க ஓட்டுப் பதிவு
“அமெரிக்க அதிபரோட, செனட்டர், காங்கிரஸ்மேன் (கட்சிக்காரங்க இல்லை அதுதாங்க, அமெரிக்க மக்கள்மன்றப் பிரதிநிதி,), ஆளுநர், மாநில செனட்டர், பிரதிநிதி, பிரேரேபணை, இத்யாதி மட்டும்னு பார்த்தா, இன்னும் விவரமாச் சொல்றேன்னு விட்டுட்டீங்களே! ஏங்க, அங்கே எலக்ஷன் நடத்தறாங்களா? இல்லே, பரிட்சைவைச்சு, கேள்விக்குப் பதில் சொல்லுன்னு உங்களைப் படாய்ப் படுத்தறாங்களா? இவ்வளவு கஷ்டப்படுத்தினா, யாருங்க ஓட்டுப்போட வருவாங்க?” அப்படீன்னு கேட்கறீங்களா?
ரொம்பக் கஷ்டம்தான். அதுனாலதான் இங்கே வாக்களிப்பவர் விழுக்காடு (அதுதாங்க, சதவீதம் – %) இந்தியாவைவிட குறைவு. இந்தத் தடவை அதிகமா ஓட்டுப்போட்டிருக்காங்கனு பேரு, அமெரிக்காவிலே நூறு வருஷத்துக்கு அப்பறம் (1908ல் 65.7%) இந்தத்தடவை 66.0%தான் (66.8% ஊகம்) ஓட்டுப்போட்டுருக்காங்க.[i] அரிசோனாவில 65.3%. இந்தியாவிலே 2019 எலக்ஷன்ல 67.11%ம், தமிழ்நாட்டில் 72.02%ம் வாக்களிச்சிருக்காங்க.[ii] பார்த்தீங்களா, அமெரிக்காவோட நூறு வருஷ ரிகார்டுகூட இந்தியாகிட்ட நெருங்கமுடியலை! தமிழ்நாட்டிலே எல்லோரும் அமெரிக்காவை இந்தவிஷயத்திலே தோற்கடிச்சுட்டோம்னு மார்தட்டிக்கலாம்.
“என்னங்க நீங்க, புரியாத மனுஷனா இருக்கீங்க? காசு விளையாடுது. இங்கே மக்கள்லாம் மனச்சாட்சி உள்ளவங்க. கைநீட்டி வாங்கிட்டா, ஓட்டுப்போடாம இருப்பாங்களா? எத்தனையோ நூத்துக்கணக்கான கோடி டாலர் செலவுசெஞ்சாங்கனு நாங்க டிவிலே பார்த்தோமே! அதுதான் ஓட்டுப்போட்டதுல மோசடினு உங்க பிரசிடென்ட் சொல்லறாருபோல!” என்று அங்கே என் காதை நீங்கள் கடிப்பது இங்கே எனக்கு வலிக்கிறது.
இங்கே பணம் செலவழிஞ்சது, அதுவும் மக்களாட்சிக் கட்சி – அதுதாங்க, டெமாகிரடிக் பார்ட்டி, குடியரசுக் கட்சியைவிட (ரிபப்ளிகன் பார்ட்டி) நிறையச் செலவு செஞ்சிருக்காங்க.[iii] மொத்தம் $14 பில்லியன் (லட்சத்து நாற்பதாயிரம் கோடி டாலர் – ஒருகோடியே, எழுலட்சம் கோடி ரூபாய்) செலவு. உடனே இத்தனை பணமான்னு வாயைப் பிளக்காதீங்க, கூட்டிக் கழிச்சுப்பார்த்தார், அமெரிக்காவுலே ஓட்டுப்போட்ட ஒருத்தொருத்தருக்கும் சுமாரா $88.61தான் (ரூ.6378.20தான்!) செலவு பண்ணியிருக்காங்க. எப்படிங்ககறீங்களா? 14பில்லியன் டாலரை மொத்தம் ஓட்டுப்போட்ட 158 மில்லியனாலே வகுத்தா, அவ்வளவு பணம்தான் தேறும்!
அதில ஒரு சென்ட்கூட (இங்கெல்லாம் பைசா கிடையாது, சென்ட்தான்!) ஓட்டுப்போடக் கையூட்டாக் கொடுக்கலை. அப்படிக் கொடுத்தா, உள்ளே கொண்டுபோய் வைச்சுடுவாங்க. டிவிகாரங்க பிழைச்சாங்க, விளம்பரத்துலே. இருந்தாலும், இங்கே, எண்பத்துஎட்டு டாலர் கொடுத்து யாரோட வாக்கையும் வாங்கிவிடவும் முடியாது. நாலுபேரு உள்ள ஒரு குடும்பம் சுமாரான ஓட்டலுக்குப் போயிச் சாப்பிட்டா ஒருவேளை சாப்பிடலாம். அங்கே அம்மா உணவகம்மாதிரி இங்கே இருக்கற மக்டானல்ஸ்ல சாப்பிட்டா ரெண்டுவேளை — அவ்வளவுதான்! ஒருவேளைச் சாப்பாட்டுக்காக எதிர்காலத்தை யாருங்க அடமானம் வைப்பாங்க?
ஆக, கைநீட்டி வாங்கிட்ட்டு, வாக்களித்து யாரும் மோசம் பண்ணலை.
அப்ப, எப்படி மோசடின்னு சொல்றாங்க!
சும்மா சும்மா மோசடின்னா இப்படியே எழுதறத நிறுத்திட்டுப் போயிடுவேன்.
முதல்ல, எத்தனை பேருக்கு வாக்குச் சீட்டிலே ஓட்டுப்போடணும் எப்படிப் போடணும்னு தெரிஞ்சுக்க வேணாமா? அதுக்கப்பறம் கோவிட்னால வாக்குப் போடறது இந்தத் தடவை எப்படி மாறிச்சு, தேர்தல்ல என்னென்ன நடந்ததுன்னு சொல்லவேண்டாமா? கொஞ்சம் பொறுமாயாத்தான் இருங்களேன்.
நீங்க இப்படிக் குறுக்கே பேசிப்பேசி என்னை விஷயத்தைச் சொல்லவிடாம தடுத்தா, நான் போகறதுக்கு முன்னாலேயே, “நீ எழுதிக் கிழிச்சது போதும். இடத்தைக் காலிபண்ணு”னு தமிழ் ஹிந்து ஆசிரியர்குழு சொல்லிடுவாங்க. இது வேணுமா, எனக்கு?
“ஒரு அரிசோனன், நீங்கதானே நகைச்சுவையா எழுதப்போறேன்னு சொன்னீங்க. அதுனாலதான் நாங்க இப்படிக் கேட்டு, நகைச்சுவையை உண்டுபண்றோம். அத்தப் புரிஞ்சுக்காம, ஏதேதோ சொன்னீங்கன்னா, நாங்க கேள்வி கேட்காமலே போயிடுவோம்.”னு சொல்றீங்களா! சத்தமாச் சொல்லாதீங்கையா. அப்பப்பக் கேளுங்க. எழுதவே விடாம கேட்டுக் குழப்பாதீங்கனுதானே சொல்றேன். தயவுசெய்யுங்க ஐயாமாரே, அம்மாமாரே!
அப்பாடா! இனிமே கொஞ்சநேரம் நிம்மதியா நான் சொல்லவந்ததைச் சொல்லலாம்.
ஆமா, என்ன சொல்லவந்தேன்?
அதான், நிறையப் பேருக்கு ஓட்டுப் போடணும்னு…
தாங்க்ஸ், நன்றி, ஞாபகப்படுத்தினதுக்கு.
இந்தியாவிலே ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கலெக்டர் இருக்காங்க. அதுபோல, இங்கே ஒவ்வொரு கவுன்ட்டிக்கும் மேலாளர்(கவுன்டி சூப்பர்வைசர்) இருக்காங்க. அவங்களையும் நாங்கதான் தேர்வுசெய்யணும். அதுமட்டுமல்ல, நீதிபதிகளும்கூட வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படறாங்க. இருபது மாநிலங்களில் வழக்குமன்ற (Trial Court) நீதிபதிகள் எந்தக் கட்சின்னு போட்டிருக்கும். மத்த முப்பது மாநிலங்களில் அவங்க எந்தக் கட்சின்னு போட்டிருக்காது. அரிசோனாவில நீதிபதி எந்தக் கட்சின்னு போட்டிருக்காது.
ஆனால், அப்பீல் கோர்ட், அதுதாங்க, முதல்ல வழக்குப் போட்டு, அது தீர்ப்பு சொன்னதும், அதை எதிர்த்து மேலே முறையிடறாங்க இல்லையா, அதுதாங்க அப்பீல் கோர்ட். அரிசோனாவில அப்பீல் கோர்ட் நீதிபதிகள் எந்தக் கட்சின்னு போட்டிருக்கும். ஒரே குழப்பமா இருக்கா? அப்படித்தான்.
இதுபோக மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளும் பதிமூணு மாநிலங்களில் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படறாங்க. இவங்க பெயரும் வாக்குச்சீட்டுலே இருக்கும். இவங்களைத் தேர்ந்தெடுக்கலாமா, வேண்டாமானு ஓட்டுப்போடணும். விவரமா தெரிஞ்சுக்கணும்னா, உங்க குழந்தைகள்கிட்ட கடைசிலே கொடுத்திருக்கற சுட்டியைக் கொடுத்து,[iv] அதுலே என்ன எழுதியிருக்குன்னு விளக்கமாச் சொல்லச் சொல்லுங்க.
இதென்ன வம்பாயிருக்கு? நீதிபதியை ஒரு சாமானியக் குடிமகர் தேர்வு எப்படிச் செய்வார்னு கேட்கறீங்களா? நாட்டை, மாநிலத்தை ஆளப்போகற அதிபர், ஆளுநர் இவங்களையே தேர்ந்தேடுக்கறபோது, நீதிபதியையும் தேர்ந்தெடுக்கக்கூடாதா?
இருந்தாலும் கொஞ்சம் உதவியா இருக்கட்டும்னு ஒவ்வொரு நீதிபதிபதியப் பத்தியும், அவர் திறமை, சட்ட அறிவு, பாரபட்சமின்மை இவற்றைப் பத்தி, மத்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வாதி, பிரதிவாதிகள் உள்பட மார்க் (நூற்றுக்கு எவ்வளவுன்னு) கொடுத்திருப்பாங்க. அதைப் பார்த்தும் இவங்க நீதிபதியாத் தொடரணுமா வேண்டாமான்னு முடிவெடுக்கலாம்.
State courts and their selection methods across the U.S., including the District of Columbia[1] | |||
Method | Supreme Court (of 53)[3] | Courts of Appeal (of 45) | Trial Courts (of 147) |
Partisan elections (PE) | 7 | 6 | 39 |
Nonpartisan elections (NPE) | 15 | 15 | 34 |
Legislative elections (LE) | 2 | 2 | 5 |
Gubernatorial appointment of judges (GA) | 5 | 3 | 6 |
Assisted appointment (AA) | 24 | 18 | 46 |
Combination or other | 0 | 1[4] | 17[5] |
The table above illustrates the current shape of judicial selection across the country’s state courts.
நல்ல ஐடியாவா இருக்கே, இந்தியாவிலேயும் அப்படி…
நிறுத்துங்க, நிறுத்துங்க. இதுக்கு நான் பதில்சொன்னா, இந்தியத் தேர்தல்ல நான் குழப்படி செய்யறேன் அப்படீன்னு என்மேல பழிவிழும். ஆளைவிடுங்க, சாமி.
இதுபோக, மாநிலச் செயலர், பொருளாளர், ஆவண அதிகாரி, இன்ன பிறரையும் தேர்வுசெய்யணும்.
இதையும் ஒருசென்ட் வரும்படி எதிர்பார்க்காமச் செய்யணும்.
இப்பப் புரியுதா, ஏன் அமெரிக்காவுலே ஓட்டுப் போடறவங்க விகிதம் ரொம்பக் குறைச்சலா இருக்குன்னு?
நீங்கதானே இந்தத் தேர்தல்லே விகிதம் அதிகமா இருக்குன்னு சொன்னீங்கன்னு கேட்கறீங்களா? நான்தான் முதல்லயே சொல்லிட்டேனே — நிறையப்பேரு எல்லாத்துக்கும் ஓட்டுப்போடமாட்டாங்க, இந்தியாமாதிரி ஒண்ணோ, ரெண்டோட நிறுத்திடுவாங்கன்னு.
அப்ப மத்ததுலே உள்ளே இருக்கறவங்க ஏதாவது குழப்படிபண்ணி வாக்கு எண்ணறதுல மோசடி பண்ணிட்டங்கன்னானு நீங்க என் காதைக் கடிக்கறது போதும். இப்படி நீங்க என் காதைக் கடிச்சுக்கிட்டே இருந்தீங்கன்னா, எனக்கு ஒரு காதே இல்லாம போயிடும்.
என்ன, இன்னோரு காது இருக்கேன்னு..
அதுக்கெல்லாம் வழியில்ல சாமிமாரே. அதையும் விவரமாச் சொல்றேன்.
2014ல் இருந்து இந்தியாவிலே வாக்களிக்க மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.[v] எங்கேயும் காகித வாக்குச்சீட்டுகள் கையாளப்படுவதில்லை. அளிக்கப்பட்ட ஓட்டுகளை எப்படி தணிக்கை செய்வது? இதுபற்றி நண்பர் ஜடாயுவிடம் கேட்டேன். அவர் சில வாக்குப் பதியும் இடங்களில் அளிக்கப்பட்ட ஓட்டுகளைக் காகிதததில் அச்சிடுவாரகள் என்று சொன்னார். இருப்பினும், இந்த மின்னணு எந்திரங்களால் குளறுபடி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பல்வேறு அரசியல் தலைவர்களும் அதை வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர் [vi] அப்படீன்னு ஒரு பத்திரிகைலேகூட படிச்சேன்.
அதைப்பற்றி நான் கருத்து எதுவும் சொல்லப்போவதில்லை.
ஒரு தொகுதியில் அண்ணா, தம்பி, அக்கா என்று மூவர் போட்டியிருகிறார்கள் என்றும், மொத்தம் ஆறுலட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்றும் வைத்துக்கொள்வோம். வாக்குகளை எண்ணி முடித்தவுடன், அண்ணாவுக்கும், தம்பிக்கும் ஆயிரம் வாக்குகள் கூட வித்தியாசம் இல்லை என்றால் (அண்ணா – 2,48,000 வாக்குகள், தம்பி – 2,48,700 வாக்குகள், மீதி அக்கா பெற்றுள்ளார்), பதிவான ஓட்டுகளில் அண்ணா 41.33%ம், தம்பி 41.45%ம் அடைந்துள்ளனர், வித்தியாசம் 0.12% தானே அர்த்தம?. எண்ணிக்கை சரியில்லை என்று அண்ணா வாதிட்டால், மறுபடியும் எப்படி வாக்குகளை எண்ணுவது? பதிவான ஓட்டுகள் வாக்காளர்கள் அளித்ததா, அல்லது நடுவில் யாராவது தட்டினார்களா என்று எப்படி உறுதிசெய்துகள்வது?
எழுநூறு வாக்குகள் என்பதால் நமக்கே குழப்பா இருக்கு, இல்லையா? இதுவே தம்பி பதினையாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபற்றால் அவ்வளவு குழப்பம் இருக்காது. அதுவே, ஐம்பதாயிரம் என்றால் — அண்ணா வாக்குப்பதிவில் மோசடி என்றால், சரித்தான் போய்யா/போம்மா, கனாக்காணாதே! மொத்த ஓட்டே, ஆறு லட்சம், இதிலே, ஐம்பதாயிரம் ஓட்டு அதிகமா வாங்கியிருக்கற தம்பி ஃப்ராடு எப்படி, எதுக்குப் பண்ணனும் அப்படீன்னுதான் கேட்போம்
முதல் எடுத்துக்காட்டுக்கு வருவோம். எழுநூறு ஓட்டு மோசடியா, ஓட்டு எந்திரம் சரியா எண்ணித்தான்னு எப்படி முடிவு பண்றது? கிட்டத்தட்ட முப்பது இடங்கள்ல சராசரி மூவாயிரம் ஓட்டு பதிவாயிருக்குன்னு எடுத்துகிட்டா, ஒரு இடத்தில இருபத்தைந்து வாக்கு மோசடி செஞ்சாக்கூட ஒருத்தர் 700 ஓட்டு அதிகமா வாங்கமுடியும் இல்லையா? ஆக, ஓட்டு சரியாத்தான் போட்டிருக்காங்கனு எப்படி உறுதிப்படுத்துவீங்க?
இதுனாலாதான் யார் ஓட்டுப்போட்டாங்கன்னு சரிபார்த்திடுட்டுப் பதிஞ்சபின்னால ஓட்டுப்போட விடறாங்க. ஒரு ஓட்டுச் சாவடிலே இத்தனைபேருதான் ஓட்டுப் போட்டாங்க, பாருங்க, ஓட்டு எந்திரமும் அதையேதான் காட்டுதுன்னு சொல்லிடலாம்.
“அது சரிங்க ஐயா, ஓட்டு மெசின் தப்பா பதிஞ்சுதுன்னா? காகித ஓட்டுன்னா, வாக்காளர் எதில முத்திரை குத்திருக்காருன்னு பழையபடிக்கும் எண்ணிப்பார்க்கலாமில்ல?”
இப்படி கேள்வி வரும்னு எலக்ஷன் கமிஷன்ல உள்ளவங்களுக்குத் தெரியாதா? அதுக்க என்ன செஞ்சிருக்காங்க?
இந்தியாவில என்ன செஞ்சிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கறது உங்க பொறுப்பு. நான் அமெரிக்காவைப் பத்தி மட்டும்தான் சொல்லமுடியும்.
“என்னங்க, ஒரு அரிசோனன்? இந்தியாவிலே ஓட்டு இப்படி, அமெரிக்காவில ஓட்டு இப்படின்னு சொல்லிகிட்டே வந்துட்டு, இந்தியாவுல சந்தேகம் வந்தா என்ன செய்வாங்கனு கேட்டா, இப்படி விலாங்கு மீனு மாதிரி நழுவறிங்களே?” அப்படீன்னு கேட்கிறீங்களா?
இந்தியத் தேர்தலைப் பத்தி நான் கருத்து சொல்லிக் கெட்டபேரு ஏன் வாங்கிக்கணும்கறேன்? நாளைப்பின்ன நான் இந்தியா வந்தா, என்னைப் பிடிச்சு உள்ளே போடறதுக்கா? நல்ல வேலையைக் கெடுத்தீங்க நீங்க!
அமெரிக்காவுலே வாக்குச் சீட்டு காகிதமா, எந்திரமா, குழப்படிவந்தா என்ன பண்ணுவாங்கனு அடுத்த அத்தியாயத்திலே சொல்றேன். உங்களுக்கும் ஒரு சஸ்பென்ஸ் கொடுத்தாத்தானே தொடர்ந்து படிப்பீங்!
(இன்னும் வரும்)
[i] 2020 turnout is the highest in over a century by Kevin Schaul, Kate Rabinowitz and Ted Mellnik, The Washiton Post, Nov 5, 2020, https://www.washingtonpost.com/graphics/2020/elections/voter-turnout/
[ii] “Final Voter turnout of Phase 1 to Phase 7 of the Lok Sabha Elections 2019”. Election Commission of India.
[iii] Total 2020 election spending to hit nearly $14 billion, more than double 2016′s sum, Brian Schwartz, CNBC, Oct, 28, 2020, https://www.cnbc.com/2020/10/28/2020-election-spending-to-hit-nearly-14-billion-a-record.html
[iv] Judicial selection in States, Ballotpedia, https://ballotpedia.org/Judicial_selection_in_the_states
[v] Madhavan Somanathan (2019). “India’s electoral democracy: How EVMs curb electoral fraud”. Brookings Institution, Washington DC.
[vi] https://www.cnn.com/2020/12/01/politics/william-barr-election-2020/index.html
சிறப்பு