மக்களுக்குப் பல விஷயங்களைப் பற்றியும் சாவகாசமாக கூடியமர்ந்து ஆன்மிக மன நிலையுடன் சிந்தித்துப் பார்க்கும் வாய்ப்புகளை புராணப் பிரவசனங்கள் தந்து வந்திருக்கின்றன என்பது உண்மை. கதை வடிவம், ஸிம்பாலிஸம் என்னு அமைப்பிலேயே பெரும் தத்துவ அர்த்தங்களை மக்களின் மனத்தில் புகுத்திவிடும் வல்லமை புராணங்களுக்கும், பொதுவாக பௌராணிகர்களுக்கும் இருந்து வந்திருக்கிறது. இந்த முழு உலகையும் பகவானின் சரீரமாக நினைத்துப் பார்க்கும் உன்னதப் பயிற்சியை அவை தர முயன்றுள்ளன. இந்த அம்சத்தை நமது தற்கால கல்வி இனிமேல்தான் எட்ட வேண்டிய நிலையில் இருக்கிறது. உதாரணத்திற்கு புராணங்களில் திலகமான ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பகவானைப் பூஜிப்பதாகிய கிரியா யோகம் பற்றி வினவும் சந்தர்ப்பத்தில் பூஜைக்குரிய ஸ்ரீவிஷ்ணுவின் உருவமாக எப்படி நினைக்க வேண்டும் என்று கடைசிப் பகுதியான பன்னிரண்டாவது ஸ்கந்தம் விளக்குகிறது –
பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கும் விக்கிரகம் அன்று வணங்கப்படுவது. உண்மையில் பிரபஞ்ச மயமாக இருக்கும் விராட் விக்கிரகம்தான் வணங்கப்படுவதாம். அந்த விராட் விக்கிரகம் எதனால் ஆனது?
சேதனர்கள் என்னும் ஜீவர்களின் முழுமையும் சேர்ந்து ஒரு பெரிய சரீரம் என்று கருதினால் அந்தச் சரீரத்தில் இருக்கும் ஆத்மாவாக நாராயணன் இருக்கிறார். அவருடைய உருவமாக, அவர் மயமாகவே இருப்பது இந்த விராட் விக்கிரகம். அந்த விராட் விக்கிரகத்தில் மூன்று லோகங்களும் காணப்படுகின்றன. அனைத்து இந்திரியங்கள், பஞ்ச மகா பூதங்கள் இவற்றின் மயமாகவே இருக்கிறது அந்த விராட் விக்கிரகம். மாயை, சூத்திரம், மஹத், அகங்காரம், ஐந்து தன்மாத்திரைகள் ஆகிய ஒன்பது தத்துவங்களால் ஆனது அந்த விராட் விக்கிரகம். இதுதான் விராட் புருஷனின் நாராயண ரூபம். விராட் விராட் என்றால் பிரபஞ்ச முழுமையானது என்று பொருள். இனி இந்த விராட் என்பதற்கு பாதங்கள் முதலிய வெவ்வேறு அங்கங்கள் என்ன என்று பார்ப்போம்.
பூமிதான் பாதங்கள். த்யு லோகம் என்னும் விண் என்பதுதான் சிரம். ஆகாயம் என்பது நாபி. சூரியன் தான் கண்கள். வாயு மூக்குகள். திக்குகள்தாம் காதுகள். பிரஜாபதியைக் குறியாக உடைய அந்த விராட்டிற்கு மரணம் என்னும் மிருத்யுதான் அபானம். லோகபாலர்கள் அவருடைய கைகள். சந்திரன் மனம். யமன் புருவங்கள். லஜ்ஜை மேலுதடு. லோபம் கீழுதடு. சந்திரிகை பற்கள். பிரமம் சிரிப்பு. மரங்கள் உரோமங்கள். மேகங்கள் விராட்டினுடைய தலைமயிர்கள். இந்த நாராயண ரூபன் ஜீவ சைதன்யமாகிய சோதியையே தமது மார்பில் கௌஸ்துப மணியாக தரிக்கிறார். அந்த சோதியின் பிரபையாகிய ஒளியைத் தமது மார்பில் ஸ்ரீவத்ஸம் என்னும் மச்சமாக தரிக்கிறார். பலதரப்பட்ட குணங்களாகிய மாயையை வனமாலை என்று கழுத்தில் அணிகிறார். அவருடைய பீதாம்பரம் சந்தங்களால் ஆன வேதம். மூன்று மாத்திரைகள் அளவுள்ள பிரணவம் என்பது அவர் அணிந்திருக்கும் உபவீதமாகிய பிரம்ம ஸூத்திரம். சாங்கியமும், யோகமும் அவர் காதுகளில் மகர குண்டலங்கள். சர்வ லோகங்களுக்கும் அபயம் அளிக்கும் பிரம்ம லோகமானது அவருடைய தலைப்பகுதி. வெளிப்படாத பிரபஞ்ச உள்ளிருப்பான அவ்யாகிருதம் என்பதே அவர் அமரும் ஆசனமாகிய அனந்தன் என்னும் சேஷன். தர்மம், ஞானம் என்பவற்றுடன் கூடிய சத்துவ குணமே அவருடைய ஆசனத்தைத் தாங்கும் பத்மம்.
ஓஜஸ், ஸஹஸ், பலம் இவற்றால் ஆன பிராணன் என்பதையே கதையாக தரிக்கிறார். நீர் என்னும் தத்துவமே அவருடைய சங்கம். தேஜஸ் தத்துவமே சக்கிரம். ஆகாய தத்துவமே அவருடைய குற்றம் அற்ற நந்தகம் என்ற கத்தி. கத்தியின் உறை தமோகுணம். கால ரூபமே சார்ங்கம் என்னும் வில். கர்ம வினைத் தொகுதிகளே சரங்கள் அடங்கிய அம்பறாத் தூணி. இந்திரியங்களே அம்புகள். கிரியா சக்தியுடன் கூடிய மனமே இவருடைய தேர். தன்மத்திரைகளே இந்தத் தேரின் வெளி வடிவம்.
வரத்தை அளிக்கும் கை முத்திரை வரதானம். அபயம் அளிக்கும் முத்திரை அபயப் பிரதானம். சூரிய மண்டலமே பூஜை செய்யும் இடம்.
ஞானம், ஐஸ்வர்யம், யசஸ் (மெய்ப்புகழ்), தர்மம், ஸ்ரீ, வைராக்கியம் என்னும் பகம் என்னும் ஆறு குணங்கள் கொண்டவர் பக + வான், பகவான் ஆகிறார். அவருக்கு ஐஸ்வரியம், ஸ்ரீ, ஜ்ஞானம், வைராக்கியம் என்பன விளையாட்டாக ஏந்தியுள்ள பத்மம். தர்மம் சாமரம். யசஸ் என்பது விசிறி. எங்கும் பயமற்ற வைகுண்டம் அவருடைய குடை.
ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் ஆகிய வேதமயமாகிய கருடன் யக்ஞ புருஷனாகிய பகவானை ஏந்தி வருகிறார் என்று நினைக்க வேண்டும். பரமாத்மாவான ஹரியின் அழிவற்ற சக்திதான் பகவதியாகிய லக்ஷ்மி.
பாஞ்சராத்திர ஆகம ரூபர்தான் விஷ்வக்ஸேனர். அந்தப் பகவானின் நான்கு வடிவங்கள் வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன். அத்யாத்மத்தில் அவரே விச்வன், தைஜஸன், பிராஜ்ஞன், துரீயன். படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்றையும் செய்பவராக இருந்தும், பரமாத்ம அனுபவத்தில் ஈடுபட்டவர்களால் ஆத்மாவாகக் காணப்பட்டவர் ஆகிறார்.
ஹே கிருஷ்ணனே! அர்ஜுனனின் தோழனே! யாதவரில் சிறந்தோனே! பூமிக்குத் துரோகம் செய்யும் அரசர்களின் வம்சங்களுக்கு (வம்சம் – மூங்கில்) அக்கினி போன்றவரே! குறையாத வீரியம் உடையோய்! கோவிந்தா! கோபிகளாலும் நாரதர் முதலிய அந்தரங்க பக்தர்களாலும் சூழப்பட்டு கானம் செய்யப்பட்ட பரிசுத்தமான கீர்த்தியை உடையவரே! கேட்பதற்கே மங்களமான சரிதத்தை உடையவரே! பக்தர்களைக் காக்க வேண்டும் ஐயா!
என்று விடியற்காலத்தில் எவன் எழுந்திருந்து பரிசுத்தனாக, பகவனிடத்தில் செலுத்திய சித்தம் கொண்டவனாய் இந்த மகா புருஷ விராட் வடிவத்தை ஜபிப்பானோ அவனுடைய இதய குகையில் பிரகாசிக்கின்ற பிரஹ்மத்தை அறிந்துகொண்டு விடுகிறான்.
இவ்வாறு அகில பிரபஞ்சத்தையும் ஒரே தத்துவ வடிவாகக் கண்டு போற்றுதல்தான் உண்மையில் நாராயண வழிபாடு என்னும் அரிய பெரிய கருத்தை எவ்வளவு அழகாகப் புராணங்களால் குறியீடுகளின் மூலம் காட்டிவிட முடிகிறது! இந்த அளவிற்கு தத்துவச் செறிவான உள்கருத்துகளை பௌராணிகர்கள் பலர் அந்நாளில் மிகவும் முயன்று மக்களுக்குப் பொதுவில் அமர்ந்து விளக்கியதன் காரணமாகத்தான் பாரதம் ஆன்மிகச் செழுமை உடையது என்ற கீர்த்தி ஏற்பட வாய்ப்பானது. இன்றும் இவ்வண்ணம் தத்துவச் செறிவுகளை ஆழ்ந்து விளக்குவதில் மிகுந்த முனைப்பு காட்டி வரும் பௌராணிகர் என்று சொன்னால் ஸ்ரீகிருஷ்ண பிரேமி அவர்களைச் சொல்ல முடியும்.