தொடர்ச்சி..
சென்ற பகுதியில் பிள்ளைத்தமிழ் தொடர்பான யூடியூப் இணப்பு விடுபட்டுப் போய்விட்டது. அந்த நிகழ்ச்சியைக் கச்சிதமாக நிறைவு செய்ய இங்கு அந்த இணைப்பினைக் கொடுத்துள்ளேன். கண்டு, கேட்டு மகிழவும். இதில் 23-வது நிமிடத்தில் நான் குறிப்பிட்டுள்ள திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்ப் பாடலைக் கேட்டு மகிழலாம்!
நெறியாளரிடம் ஆற்றுப்படுத்தியது:
திரும்ப ஐயாவுடனான எனது பிள்ளைத்தமிழ் ஆராய்ச்சி அனுபவங்களைத் தொடர்கிறேன்!
ஆய்வுக்கு, ஒரு பல்கலைக்கழகத்தில் நெறியாளர் ஆகத் தகுதிவாய்ந்த பேராசிரியரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆய்வினை சரியான வழியில் எடுத்துச் செல்ல இவரே நமக்கு உதவுவார்; நெறிப்படுத்துவார். ஐயா, பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரியின் மேனாள் முதல்வராகப் பணியாற்றியவர். பணி ஓய்வு பெற்ற அவரால் அதிகாரபூர்வமாக எனது நெறியாளராக இருக்கவியலாது.
எனது ஆதங்கத்தை நன்கு அறிந்திருந்த பேராசிரியர் ஐயா, கோவை ஈச்சநாரியிலுள்ள கற்பகம் உயர்கல்விகலைக் கழகத்தில் தமிழ்த்துறைத்தலைவராக இருந்த முனைவர் திருமதி தமிழரசி எனும் அம்மையாரிடம் என்னை அனுப்பி வைத்தார். அவ்வம்மையார் இன்முகம் படைத்தவர்; இனிமையாகப் பழகுபவர்; தேனீ போலச் சுறுசுறுப்பானவர். எனது இலக்கிய வாழ்வின் அடுத்த கட்டம் மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் துவங்கிற்று; ஒரு தடங்கலுமின்றி முனைவர் தமிழரசியின் மேற்பார்வையில் அருமையான நெறிப்படுத்தலுடன், பேராசிரியர் ஐயாவின் ஆசிகளுடன் காப்புப் பருவத்தினின்று துவங்கி வளர்ந்து இனிய நடை (வருகைப்பருவம்) பயின்றது. இதற்காகப் பலமுறை நான் கோயமுத்தூர் செல்லவேண்டியிருந்தது. அங்கு ஐயாவைக் காணச்செல்லும்போதெல்லாம் எனக்காக, எங்கிருந்தாவது கண்டெடுத்து, வாங்கிவைத்திருந்த சில அரிய பிள்ளைத்தமிழ் நூல்களைத் தருவார் ஐயா. அவ்வாறு கிடைத்தவையே தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் (நல்லதுக்குடி கிருட்டிணையர் எழுதி, ஐயாவின் நண்பரான தமிழ்ப் பேராசிரியர் திரு. நாகராசு அவர்கள் உரை எழுதியது), திருப்புக்கொளியூர் பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழ் (உயர்திரு சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் எழுதியது), இடையிடையே, தமது தந்தையார் கவியரசு நடேச கவுண்டரின் பல நூல்களையும் கொடுத்தார். முனைவர் தமிழரசி அவர்களும் பூங்கோதையன்னை பிள்ளைத்தமிழ் (திரு. இரா. சென்னியப்பனார் எழுதியது), மற்றும் சில நூல்களைக் கண்டெடுத்து அளித்தார். அது ஒரு பொற்காலம்.
ஐயாவிடமிருந்து நான் கற்றதும் மிகப்பெரிது; பெற்றதும் கிடைத்தற்கு மிகமிக அரிது. நம் மனமறிந்து தானே வலியவந்து உதவிகளைச் செய்வார்; ஒருவரையும் புறம்கூற மாட்டார். அவர் ஒருவரிடம் பிரியம் வைத்துவிட்டால் எக்காரணத்திற்காகவும் அது பழுதுபடாமல் குறைவின்றி பேரருளாக வளரும். தம் கல்விச் செல்வத்தைக் குறைவின்றி நமது சிந்தை எனும் பாத்திரம், நிரம்பி வழிய வழியப் படைப்பார். கோயமுத்தூரிலேயே நான் இருக்கக்கூடாதா, ஐயாவிடம் வந்து தொடர்ந்து சைவசித்தாந்தம் பாடம் கேட்கலாமே எனவும் பலமுறை ஏங்கியதுண்டு….
பலமுறை ஐயாவை அவருடைய கோவைபுதூர் இல்லத்தில் சந்தித்தபின்பு, அருகிலுள்ள பேரூர் கோவிலுக்கும் சென்று வழிபட்டுத் திரும்புவது வழக்கம். சில சமயங்களில் வேறு சில காரணங்களால் கோவில் செல்ல இயலாமல் போய்விடுவதுண்டு. அப்பொழுதுகளில் திருவருட்பாவின் ஒரு பாடலையே நினைவுகூர்வேன்.
இருட்பாடு நீக்கியொளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
இறைவனே சிவப்பழமாக அவர் வடிவில் நின்று எனக்கருளினார் எனச் சுருக்கமாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
‘நீயெல்லாம் தமிழைப் படித்து என்ன செய்து விடப்போகிறாய்?’ எனும் மனப்பான்மை அவருக்கு இருக்கவேயில்லை. முதல் சந்திப்பிலிருந்தே, அறிவியல் புலத்தின் பின்னணியிலிருந்து நான் தமிழை நோக்கிப் பயணித்தது அவருக்குப் பெருத்த மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்தது. எனது தமிழார்வத்தை இலக்கிய, ஆன்மீக உண(ர்)வூட்டி வளர்த்தார். தமிழில் நான் அறியாதவற்றை, என் இருட்பாட்டினை நீக்கியும், எனது தெருட்பாடல்களான கட்டுரைகளை உவந்தும் மகிழ்ந்தார். முதன்முதலில் நான் தமிழ்ஹிந்துவுக்கு ‘சிவபிரான் சிதைத்த சிற்றில்’ எனும் தலைப்பில் பிள்ளைத்தமிழ் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அக்கட்டுரை பிள்ளைத்தமிழிலிருந்து திருமந்திரம் வரை பயணித்தது. “சிவபிரானையே பாட்டுடைத்தலைவனாக்கி விட்டீர்கள்,” என மிகவும் சிலாகித்தார். ஏனெனில் யார் வயிற்றிலும் குழந்தையாகப் பிறக்காத சிவபிரான் மீது பிள்ளைத்தமிழ் பாடக்கூடாதென்பது இலக்கிய மரபு. ஆனால் பிள்ளைத்தமிழ் ஆசிரியர்கள் சிவபிரானை இலேசில் விட்டுவிடுவதாக இல்லை! சிவபிரானின் பல திருவிளையாடல்களைத் தம் கவிதைகளில் பொருள்நயம்படப் புனைந்து சேர்த்துவிடுவார்கள். (விரைவில் கடவுள் அருள்கூட்ட, இவைபற்றித் தொடராக எழுதும் எண்ணம் உண்டு).
தமிழ் ஒரு (Conjugate language) கூட்டுமொழி; பல சொற்கள் இணைந்து வழங்கும் செய்யுள்நடையைப் பதம் பிரித்துப் பொருள்காண மிக இயல்பாக எனக்குப் பயிற்றுவித்தார் ஐயா. சிறிது சிறிதாக அப்பயிற்சி எனக்குப் பிடிபடலாயிற்று. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனக்குப் பாக்களைப் பாடிக்காட்டியும் யாப்பின் வகைதொகைகளை விளக்கியும் காட்டினார். இப்போதும்கூட நான் பிள்ளைத்தமிழைப் படித்தால் எதேனும் ஒரு ராகத்தில் அதனைச் சீர்பிரித்துப் பாடியபடியே படிப்பது வழக்கமாகிவிட்டது. பொருளை உணர்ந்து மகிழ முடிகிறது. ஐயாவின் ஆசி!
நான் அறிவியல் ஆராய்ச்சியிலிருந்து தமிழாராய்ச்சியில் புகுந்ததனால் எனது ஆய்வேட்டில் அறிவியல் பற்றிய கருத்துக்களை ஒரு இயலாகவே (அத்தியாயமாகவே) எழுதும்படி பணித்தார். மற்ற ஆய்வுகளிலிருந்து அது தனித்து நிற்க வேண்டுமென்பது அவருடைய பேரவா. அது எனது ஆய்வைக் கூர்மையாக நோக்கிவந்த கற்பகம் கல்விக்கழகத்தின் தமிழ்த்துறையினருக்கு பெருத்த மகிழ்ச்சியையே அளித்தது.
ஆண்டுகள் உருண்டோடி நான்காண்டுகளில் சிற்றிலிழைத்தும், அம்மானையாடியும், ஆசையாக ஊசலாடியும் வளர்ந்த எனது பிள்ளையான ஆய்வேடு, மதிப்பீட்டிற்காகச் சமர்ப்பிக்கப்பட்டது! வாய்வழித் தேர்வில் ஐயாவும் வந்தமர்ந்து பங்கெடுத்தது எனது பெரும் பாக்கியம். இது தமிழன்னை, என்னம்மை மீனாட்சி, பேராசிரியர் முத்துக்குமாரசுவாமி ஐயா மூலமாக எனக்களித்த நற்பேறு! சரியான நெறியாளரிடம் ஆற்றுப்படுத்தியது அவரல்லவோ?
இவ்வாய்வேடு ஒரு புத்தகமாக ‘பிள்ளைத்தமிழ்- பன்முகப்பார்வை’ எனும் தலைப்பில் சைவசித்தந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் வெளியிப்பட்டுள்ளது. இன்னும் ஐயா அவர்கள் என்னைப் பணித்துள்ள ஒரு பெரியபணி எதிர்நிற்கின்றது. காலம் கனிந்துவந்து அது கைகூடும்போதில் இவ்விணயதளம் மூலமாகவே அதனைப் பகிர்ந்து கொள்ளுவேன்.
குழவி மருங்கினும் கிழவதாகும்:
நான் ஐயாவைப் பரிச்சயப்படுத்திக் கொண்டது தமிழ் ஹிந்து இணையதளத்தில் அவர் எழுதிவந்த இத்தொடர் மூலமே என முன்பே கூறினேன். ஐயா ஐந்து பாகங்களுடன் எழுதுவதை நிறுத்திக்கொண்டு விட்டார். அவை காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம் ஆகிய பருவங்கள். நான் ஏன் தொடரவில்லை எனக் கேட்டதற்குத் தனக்கு மேலும் அதனை எழுத விருப்பமில்லை என்றும் கூறினார். எனது ஆய்வேட்டைச் சமர்ப்பித்தபின் ஒருநாள் ‘தங்கள் அனுமதியுடன் நான் அதனைத் தொடர்ந்து எழுதலாமா?’ என மிகுந்த தயக்கத்துடன் கேட்டேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் தமது ஆசிகளை மனப்பூர்வமாக வழங்கினார்.
ஒவ்வொரு அத்தியாயத்தை எழுதியதும், ஐயாவிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பின்னரே, பதிப்பிட அனுப்புவேன். சில பொழுதுகளில் இன்னும்சில மேற்கோள்களை, நயமான பாடற்கருத்துக்களை சேர்த்துக்கொள்ளக் கூறுவார். கட்டுரை மிக நீண்டு விட்டதே என்றால், ‘நாம் அறிந்த அழகான, நயமான கருத்துக்களைப் பதிவுசெய்து வைத்துவிட வேண்டும்; பிற்காலத்தவர்களுக்குப் பயன்படுமல்லவா?’ என்பார் அந்த தீர்க்கதரிசி! நாளைய தலைமுறையினருக்கு அறிவுச்செல்வம் போய்ச் சேரவேண்டும் என்பதில் அவருக்கிருந்த ஆர்வம் எத்துணை உயர்வானது! இவ்வாறு 24 அத்தியாயங்கள் (இலக்கண நூல்கள் விளக்கும் அனைத்துப் பிள்ளைத்தமிழ் பருவங்களையும் பற்றி) எழுதப்பட்ட அத்தொடர் இன்று புத்தக வடிவாக உருவெடுக்கப் பதிப்பாளரிடம் சென்றுள்ளது.
தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இருமொழிப்புலமை வாய்ந்த தமது தந்தையார் கவியரசு நடேச கவுண்டர் அற்புதமாகத் தமிழில் ‘இன்பமாகடல்,’ எனும் பெயரில் மொழிபெயர்த்த ‘ஆனந்தசாகர ஸ்தவம்’ எனும் திரு. நீலகண்ட தீக்ஷிதரின் நூலைப் பற்றி ஒரு நீண்ட தொடரையும் எழுதப் பணித்தார். இன்னும் சில அழகான சிறிய நூல்களைக் கொடுத்துள்ளார். அவைபற்றி எழுதி வெளியிட வேண்டும். அதுவே ஐயாவிற்கு, அவருடைய நினைவிற்கு நான் செலுத்தும் நிறைவான, பொருள்செறிந்த அஞ்சலியாக இருக்கும்.
இத்துடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
வணக்கம்.
(முற்றும்)