தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணந்தே கார்யாகார்ய வ்யவஸ்திதே”
-பகவத்கீதை.
“எதைச் செய்யலாம், எதை செய்யக்கூடாது என்ற நிலையில் சாஸ்திரமே பிரமாணம்”
இது கிருஷ்ண பரமாத்மாவின் கூற்று.
இந்த சிருஷ்டியை படைப்பதற்காக பிரம்ம தேவருக்கு வேதங்களை பரமாத்மா அருளினார். வேத விஞ்ஞானத்தை அனுசரித்து ‘விதாதா’வான பிரம்மா விஸ்வ நிர்மாணத்தை தொடங்கினார். அதாவது எப்படி உலகைப் படைப்பது என்பதற்கான சூத்திரங்கள் வேதங்களில் உள்ளன. (இந்தக் கண்ணோட்டத்தில் வேதங்களை ஆராயவேண்டும்).
ஸ்ருதிகளான வேத தர்மங்களைச் சிந்தித்து ஸ்மிருதிகளை அளித்தார்கள் மகரிஷிகள். இவையே தர்ம சாஸ்திரங்கள். வேதத்தின் பொருளை விரிவாக உலகியல் விவகாரங்களில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை புராணங்களும் இதிகாசங்களும் அளித்தன. பாரதிய கலாசார அமைப்பு இவற்றை ஆதாரமாகக் கொண்டே நிலைபெற்றுள்ளது.
புராணங்களும் இதிகாசங்களும் கூட ஸ்மிருதிகள் என்ற பிரிவின்கீழ் வரும். இவ்வாறு ஸ்ருதிகளும் ஸ்மிருதிகளும் நமக்கு பிரமாண நூல்கள். இவற்றையே சாஸ்திரம் என்கிறோம்.
கடமை குறித்து ஐயம் எழுந்தால் சாஸ்திரங்களே பிரமாணம். சில கருத்துகள் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று எதிரானதாகத் தோன்றினாலும் சந்தர்ப்பத்தைப் பொறுத்து எப்படிப்பட்ட முடிவு எடுக்க வேண்டும் என்று சாஸ்திரத்தில் சில இடங்களில் சம்பவங்கள் வடிவத்திலோ உபதேசங்கள் வடிவத்திலோ கூறப்பட்டிருக்கும்.
ஸ்தூலமாக பொருளற்றவையாகத் தென்படும் சாஸ்திரக் கருத்துகள் சூட்சுமமாக மிகவும் ஆழமான பொருளோடு நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. மனிதனின் தற்போதைய சுகபோகங்கள் மட்டுமின்றி அந்த ஜீவனுக்கு சாஸ்வத நன்மையும் நற்கதியும் கிடைக்கும்படி சாஸ்திரங்கள் அமைக்கப்பட்டன.
தவச் சக்தியால் புலன்களுக்கு அப்பாற்பட்ட பார்வை பெற்ற மகரிஷிகள் பிரபஞ்ச நன்மையை விரும்பி சாஸ்திரங்களை ஏற்படுத்தினார்கள். சாஸ்திரத்தின் மூலம்தான் பரமாத்மா பற்றிய ஞானத்தை அறியத் தேவையான சாதனை வழிகளும் புரிதலும் ஏற்படுகிறது. அதனால்தான் பிரம்ம சூத்திரங்கள் கூட “சாஸ்த்ரயோனித்வாத்” என்று அறிவித்தன.
தாற்காலிகமாக மனிதனுடைய சுயநலத்திற்கும் எல்லைக்குட்பட்ட பார்வைக்கும் தடையாகவும் சாதாரண விஷயமாகவும் சில சாஸ்திர அம்சங்கள் தென்பட்டாலும் பரிணாமத்தில் நிரந்தர நன்மையையும் சமுதாய அமைப்புக்கு தர்ம வலிமையையும் அளிப்பதில் அவை வெற்றி பெறும்.
மனிதன் எடுக்கும் தீர்மானங்கள் பலவித மானசீக விகாரங்களோடு கூடியதாக இருக்கும். நியமத்தோடு கூடிய வாழ்க்கை முறை, ஆழமான கல்விப் பயிற்சி போன்றவை இல்லாமையால் மானசீக உணர்ச்சிப் பெருக்கை சரிசெய்து கொள்ள இயலாத மனிதர்கள், தமக்குத் தோன்றியபடி நடந்து கொண்டால் சாஸ்வத நன்மைக்கு பங்கம் ஏற்படும் ஆபத்து உள்ளது. அது சமுதாய பாதுகாப்பைக் குலைத்து மக்கள் இஷ்டம் வந்தாற்போல் நடந்து கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடும். அதனால் சுயநலத்தை கட்டுப்படுத்தும் விதமாக, தனிமனித மற்றும் சமூக பாதுகாப்பிற்கான சூட்சுமத்தோடு கூடிய ரகசிய விஞ்ஞானத்தால் சாஸ்திரங்கள் ஏற்படுத்தப்பட்டன.
பிரத்தியட்சம், அநுமானம் என்று கூறப்படும் பிரமாணங்களை விட சாஸ்திரங்களுக்கே முக்கியத்துவம் அளித்தனர் நம் முன்னோர். தமக்கென்று எந்த சுயநலமும் இன்றி உலக நன்மையைக் கோரினார்கள் ருஷிகள். தனிமனிதன், சுற்றுச்சூழல், எல்லையற்ற இந்த பிரபஞ்சம் இந்த மூன்றின் நன்மைக்காகவும் கருத்தொருமையோடு கூடிய சாஸ்திரங்களை அமைத்தார்கள். இவர்களை விட நமக்கு ஆப்தர்கள் யார்? அதனால்தான் சாஸ்திரங்களை ஆப்த வாக்கியம் என்கிறோம்.
சாஸ்திரங்களை பிரமாணமாக ஏற்று வாழ்க்கையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று பரமாத்மா கீதையில் கூறுகிறான்.
“யத் சாஸ்த்ர விதி முத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத:
ந ச ஸித்திமவாப்னோதி ந சுகம் ந பராங்கதிம்”
“சாஸ்திர விதிகளை விட்டுவிட்டு விருப்பம் போல் நடந்து கொள்பவருக்கு. இகவுலக சுகம் பரலோக சத்கதி இரண்டுமே இல்லை. எந்த ஒரு ஸித்தியும் ஏற்படாது” என்பது கீதையில் ஜகத்குருவின் போதனை.
“ஸ்ருதிஸ்ம்ருதீ மமை வாஞ்ஜா…” என்ற வாக்கியத்தின் மூலம் ஸ்ருதி, ஸ்மிருதிகள் ஜகத்தினை இயக்கும் பரமாத்மாவின் ஆணைகள் என்றும் அவற்றை மீறுபவர் சாஸ்வதமான இயற்கை நியமங்களின்படி தண்டனை அனுபவித்து தீருவர் என்றும் புராணங்கள் தெளிவாக கூறுகின்றன.
அகங்காரத்தோடும் விதண்டாவாதத்தோடும் சாஸ்திரங்களை தாறுமாறு செய்து நியமத்தை மீறி நடந்து கொள்பவருக்கு நற்கதி இருக்காது என்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கீதை சாஸ்திரத்தில் எச்சரிக்கிறார். சாஸ்திரத்தைப் பிரமாணமாக ஏற்கும் புத்தியை தெய்வீக குணமாக வர்ணிக்கிறார் கூட.
சனாதன தர்மம் என்றால் என்ன?
“ஏஷ தர்ம: சனாதன:” – இந்த வாக்கியம் நம் புராணங்களிலும் இதிகாசங்களிலும் அடிக்கடி பேசப்படும் வாக்கியம். “இது சனாதன தர்மம்” என்பது இதன் பொருள். புராதனமாக காணப்பட்டாலும் நித்ய நவீனமாக விளங்குவது சனாதனம். கால எல்லைகளுக்கு வளையாத சாசுவத தர்மம் சனாதனம். சூரியோதயம், சந்திரோதயம் போல என்றும் புதுமையாக விளங்கும் நித்திய ஞானம் சனாதனம்.
“தாரணார்த்தர்ம மித்யாஹு:” என்பது விளக்கம். பற்றுவது தர்மம். விருக்ஷத்திற்கு வேர் பற்றுதல். வேரினால் விருட்சம் நிற்கிறது, வாழ்கிறது, வளர்கிறது. அதேபோல் வாழ்க்கை என்னும் விருட்சத்திற்கு வேர் தர்மம். மனித வாழ்வு உய்வடைவதற்காக, நிறைநிலை பெறுவதற்காக தர்மத்தை போதித்த நூல் வேதம். எனவேதான் “வேதோகில தர்ம மூலம்” என்று சகல சாஸ்திரங்களும் வேதத்தை தலையில் தாங்குகின்றன. கட்டாயம் அனுசரிக்க வேண்டிய சொல்லை “வேதவாக்கு” என்று கூறும் வழக்கம் உள்ளது.
“பிரத்யக்ஷேணானுமித்யேவ யஸ்தூபாயம் சபுத்யதே I
யேனம் வின்தன்தி வேதேன தஸ்மாத் வேதஸ்ய வேததா II”
மகரிஷிகளின் தவத்தில் உதித்த எல்லையற்ற ஞானக் குவியல் வேதம். வேத தர்மத்தை வாழ்க்கை நடைமுறைக்கு எடுத்துவந்து அனைத்து மக்களும் கடைபிடிக்கும்படியாக போதித்தவை ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள்.
பௌதீகவாதமும், பிரத்யக்ஷவாதமும் சாஸ்வத சத்தியத்தை நிரூபிக்க இயலாதவை. புலன்களுக்கு அப்பாற்பட்ட பார்வைக்கு பரமார்த்தம் தன்னைத்தானே பிரத்யக்ஷமாக காட்டியருளும். அந்த பரமார்த்த சாஸ்திரமே வேத விஞ்ஞானம். இது தவத்தால் சித்தியான, இந்திரியங்களுக்கு அதீதமான சக்தியால் கேட்கப்பட்ட திவ்ய சப்தம். ஆதலால் ஸ்ருதி என்றழைக்கப்படுகிறது.
வேதங்கள் கூறும் தர்மங்களை தேச காலத்தை அனுசரித்து எடுத்துரைத்தவையே ஸ்மிருதிகள். ஸ்மிருதிகள் அந்தந்த காலங்களில் ருஷிகள் ஏற்படுத்தியவை. இவற்றையே தர்ம சாஸ்திரம் என்கிறோம். அதன்பின் இதிகாசங்களும், அஷ்டாதச (18) புராணங்களும்.
“இதிஹாசம்” என்பதற்கு “இவ்விதம் ஹா! நிச்சயமாக நடந்தது!” என்று பொருள். நடந்தது நடந்தபடியே இதிகாசத்தில் கூறியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. இதிகாசங்கள் முக்கியமாக இரண்டு. ராமாயணமும் மகாபாரதமும். இவற்றுள் வால்மீகி மகரிஷி எழுதிய இராமாயணம் காவிய சம்பிரதாயத்தை அனுசரித்து வந்த இதிகாசம். மகாபாரதம் புராண, ஸ்மிருதி சம்பிரதாயத்துடன் காவிய குணங்களையும் அணைத்து கொண்ட மகா இதிகாசம். சனாதன தர்மம் இந்த நூல்களில் விஸ்தாரமாக விளக்கப்பட்டுள்ளது.
சனாதன தர்மம் என்பதற்கு முக்கிய ஆதாரங்கள் சுருதி, ஸ்மிருதி, புராணங்கள், இதிகாசங்கள்.
“ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்” என்று கூறி நாம் ஆச்சார்ய குருவை வணங்குகிறோம். சுருதி, ஸ்ம்ருதி, புராணங்கள், இதிகாசங்கள் இவற்றை போதிப்பவரே ஆச்சாரியர் என்பது இதன் கருத்து.
இதிகாச புராணங்கள் மூலம் வேதம் பரவலாக அறியப்படுகிறது. இதிகாச புராண ஞானம் இல்லாதவர்கள் வேதத்திற்கு அர்த்தம் கூறினால் வேதமாதா, தன்னைச் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று வருந்துவாள்.
வேதங்களோடு கூட, தன்னலமற்ற மகான்கள் நடந்து காட்டிய தர்மத்தோடு கூடிய வாழ்க்கையும் சனாதன தர்மத்திற்கு ஆதாரங்கள் ஆகின்றன.
“மஹாத்மா ஏவ கத: ஸபந்தா” – “மகாத்மாக்கள் நடந்ததே நம் வழி!” விஸ்தாரமான தர்மத்தை வாழ்வில் கடைப்பிடித்து காட்டியவர்கள் மகனீயர்கள். நம் நாட்டு தர்ம வாழ்க்கை ஒரு புறம் வேத புராண இதிகாச நூல்கள் மூலமாகவும் மறுபுறம் சான்றோர்களின் ஆதர்ச மயமான வாழ்க்கை மூலமாகவும் தெளிவாக நம்மை வழிநடத்துகின்றன.
வேதம் என்றால் என்ன?
நம் மகரிஷிகள் ஞானத்தை பிரதானமாக வேதத்தின் வழியே அளித்துள்ளார்கள். வேதத்தில் உள்ள ஞான வாக்கியங்களை மந்திரங்கள் என்கிறோம். அந்த மந்திரங்களை அளித்தவர்களை ருஷிகள் என்கிறோம். ருஷி என்றால் “மந்த்ர த்ருஷ்டா” என்று பெயர். “மந்திரங்களை தரிசித்தவர்கள்” என்று பொருள்.
அவர்கள் அளித்துள்ள வேத விஞ்ஞானம் பற்றி சிந்தித்து பார்த்தால் வேதமானது எல்லையற்றது என்பதை அறியமுடிகிறது. “வேதோகில தர்ம மூலம்” என்று ஸ்மிருதிகளில் கூறப்பட்டுள்ளது. அதாவது சர்வ தர்மங்களுக்கும் மூலமானது வேதம்.
தர்மம் பற்றி எடுத்துக் கூறும் தர்ம சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள், காவியம் இவை அனைத்தும் வேதத்தை சிரத்தின் மேல் தாங்கி கௌரவிக்கின்றன. உண்மையில் பலப் பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கியங்களானாலும் அவையனைத்தும் வேதத்தையே ஆதாரமாகக் கொண்டுள்ளன.
தர்ம சாஸ்திரத்தை எழுதிய பராசரர் முதலில் “வேதோகில தர்ம மூலம்” என்றார். கௌதம மகரிஷியும் அதையே கூறினார். அதேபோல் இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் வேதத்தின் சிறப்பைப் போற்றுகின்றன.
பீஷ்ம பிதாமகர் தர்மபுத்திரருக்கு ஞான போதனை செய்கையில், “வேதம் சொன்னதையே நானும் சொல்கிறேன்!” என்று கூறுகிறார். வேதம் சொன்னதைச் சொன்னால் மட்டுமே அதற்கு கௌரவம் இருக்கும்.
கிருஷ்ண பரமாத்மா, “வேதைஸ்ச சர்வை ரஹமேவ வேத்யோ” என்கிறார். “வேதங்களால் காட்டப்படும் பரத்துவம் எதுவோ அதுவே நான்!” என்கிறார். அதுமட்டுமல்ல. “வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம் !!” என்கிறார்.
“வேதத்தின் தாத்பர்யமான வேதாந்த ஞானத்தை அளித்தவன் நான். வேதங்களைப் பற்றி அறிந்தவனும் நான். வேதங்களால் தெரிவிக்கப்படுபவனும், வேதத்தைத் தெரிந்து கொண்டவனும் நானே!” என்கிறார்.
இவ்வாறு கூறுவதன் உத்தேசம் என்னவென்றால், இறைவனைத் தவிர வேதங்களை வேறு யாராலும் முழுமையாக அறிந்துகொள்ள இயலாது. அதாவது அனந்த்தமான வேதம் பகவானைத் தவிர பிறருக்குத் தெரியாது. ஏனென்றால் வேதம் இறைவனின் சொரூபம். இறைவனைப் பற்றி இறைவனுக்குத்தான் தெரியுமே தவிர சாமானியர்களுக்கு தெரியாது என்ற உத்தேசத்தோடு கூறியுள்ளார்.
அதேபோல் பாகவதம் கூட “நிகம கல்பதரோர் கலிதம் பலம்” என்று கூறுகிறது. “வேதம் என்ற கற்பக மரத்தில் பழுத்த பழமே பாகவதம்” என்று கூறுகிறது. இதன் மூலம் வேதத்தில் கூறியதையே பாகவதமும் கூறுகிறது என்பது தெளிவாகிறது.
புராணங்களனைத்தும் கூட வேதத்தை தலைமேல் தாங்கி அடிக்கடி “இது ஸ்ருதி வாக்கியம்” என்று இயம்புகின்றன. இவ்விதம் பாரத தேசத்தில் பிறந்த இலக்கியங்கள் அனைத்தும் வேதத்தை கௌரவிக்கின்றன.
கலைகளும் வேதத்திற்கு கௌரவம் அளிக்கின்றன. சங்கீதம் காந்தர்வ வேதம் என்று கூறப்பட்டு சாம வேதத்திற்கு உபவேதமாக கூறப்படுகிறது. அதேபோல் தனுர் வேதம் யஜுர் வேதத்திற்கு உபவேதமாக கூறப்பட்டுள்ளது. ஆயுர்வேதம் கூட வேதத்தின் உபவேதமாகவே கூறப்படுகிறது.
இவ்விதம் கவனித்துப் பார்த்தால் பாரத தேசத்தில் தோன்றிய ஒவ்வொரு சாஸ்திரமும் வேதம் என்ற பெயரோடு விளங்குகின்றன என்பதைக் காணமுடிகிறது. அதாவது அவை வேதத்தை கௌரவிக்கின்றன.
ஒவ்வொரு சாஸ்திரத்திற்கும் வேதம் என்று பெயர் வைத்தார்களா? அல்லது வேதத்தில் இருப்பதை அனைத்து சாஸ்திரங்களும் எடுத்தியம்புகின்றனவா? என்ற சந்தேகம் எழுகிறது. இதனை ஆழமாக ஆராய்ந்து அறிந்த கருத்து என்னவென்றால் அனைத்து சாஸ்திரங்களும் வேதத்திலிருந்து பிறந்தவையே! அதனால் வேதம் என்ற சொல் அனைத்திலும் இணைந்துள்ளது.
உலகனைத்திற்கும் நன்மை செய்யக்கூடிய வைத்திய சாஸ்திரமான ஆயுர்வேதத்தின் விஷயங்கள் கூட வேத மந்திரத்தில் காணப்படுகின்றன. அவற்றையே சரகர், சுசிருதர் போன்றவர்கள் விரிவாக எடுத்து எழுதியுள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது.
அதேபோல் காந்தர்வ வேதத்திற்கு மூலம் சாமகானம் என்பதை அறிகிறோம். சாமகானத்திலிருந்து சங்கீத வித்யை தோன்றியது. பாரதீய சங்கீதம்… அது ஹிந்துஸ்தானியானாலும் சரி, கர்நாடகமானாலும் சரி….. அதற்கு ஆதாரமான “சரிகமபதநி என்ற சப்தஸ்வரங்கள்” வேதத்திலிருந்தே உற்பத்தியாயின.
அதனால்தான் தியாகராஜர், “சரிகமபதநி வர சப்தஸ்வர வித்யா லோலம் விமல ஹ்ருதய த்யாகராஜ பாலம்…” என்று கூறி, “மோதகரா நிகமோத்தமா சாமவேத சாரம் வாரம் வாரம்…” என்று கீர்த்தனை செய்கிறார். “சாமகானம், சங்கீதம் இவையனைத்தும் சாம வேதத்திலிருந்து பிறந்தவை” என்று கூறுகிறார்.
அது மட்டுமின்றி, கலைகளுக்கும் யுத்த வித்யைகளுக்கும் மூலம் வேதம் என்று தெரிகிறது. நாட்டிய சாஸ்திர கர்த்தாவான பரதர் கூட நாட்டிய சாஸ்திரத்தை சதுர் வேதங்களிலிருந்து பெற்றதாகக் கூறுகிறார். அபிநயம் ஒரு வேதத்திலிருந்தும் அதற்கான சாகித்தியம் ஒரு வேதத்திலிருந்தும் எடுத்து…. இவ்வாறு வேதத்தில் உள்ள பகுதிகளே நாட்டிய சாஸ்திரத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது என்று கூறுகிறார் பரதர். அதற்கு ஆதாரம் என்ன என்று ஆராய்ந்தால் வேதத்தின் எந்த பாகம் நாட்டியத்தில் எந்த வடிவத்தில் வந்துள்ளது என்று கூறிவிட முடியும். அது போல் பரிசோதனை செய்த நாட்டிய சாஸ்திர நிபுணர்கள் பலர் உள்ளார்கள்.
இதன் மூலம் வேதம் சம்பூரணமான விஞ்ஞான சாஸ்திரம் என்பது தெளிவாகிறது. அதனை ஆதாரமாகக் கொண்டே பாரத தேசத்தில் பௌதீக வித்யைகளும், ஆன்மீக வித்யைகளும், தார்மீக வித்யைகளும், கலைகளும் தோன்றியுள்ளன.
பௌதீக வித்யைகளில் பௌதீக வாழ்க்கை சுகமாக நடைபெற உதவும் வித்யைகள் இருக்கின்றன. அதே போல் கலைகள் உள்ளன. ஆன்மிக போதனை செய்யும் வித்யைகளும் உள்ளன. இனி, உபாசனை தொடர்பான வித்யைகள், இறுதியாக தத்துவ சாஸ்திரத்தை விளக்கம் வித்யைகள்…. இவையனைத்திற்கும் ஆதார நூல் வேதமே!
அதனால் வேதம் ஒரு முழுமையான விஞ்ஞானம். நமக்கு கிடைத்துள்ள வேதமே எத்தனையோ அதிகம் என்று தோன்றுகிறது. ஆனால் நம் சாஸ்திரங்களில் வேதத்தின் எண்ணிக்கையை எத்தனையாக வர்ணித்துள்ளார்களோ அத்தனையும் தற்போது கிடைப்பதில்லை. அது காலப்போக்கில் சிறிது சிறிதாக பயன்படுத்தப்படாமல் மறைந்து போனது. மறைந்து போயுள்ளதே தவிர அழிந்து போயிற்று என்று கூற இயலாது. எப்போதுமே வித்யைகள் அழியாது. பிற்காலங்களில் அவை மீண்டும் வெளிப்படக்கூடும்.
தற்போது நமக்கு கிடைத்திருக்கும் வேதக் குவியலை கவனித்துப் பார்த்தாலே ஆச்சர்யமாக இருக்கிறது. வேதத்தின் கால நிர்ணயத்தில் கூட அநேக பண்டிதர்கள் அனேக விதமான காலங்களைக் கூறுகிறார்கள். ஒருவர் கூறுவதற்கும் மற்றொருவர் கூறுவதற்கும் வேறுபாடு காணப்படுகிறது.
ஆனால் சம்பிரதாயத்தின்படி யோசித்துப் பார்த்தால் வேதத்திற்கு கால நிர்ணயம் செய்ய இயலாது. அது எல்லையற்ற காலத்தோடு தொடர்பான விஞ்ஞானத்தை அளிக்கிறது. அது அனாதியானது. சிருஷ்டி எத்தனை பழமையானதோ வேதமும் அத்தனை பழமையானதே! ஆனால் சிருஷ்டி முடிவு பெறும் போது வேதமும் பரமாத்மாவோடு லீனமாகுமே தவிர அழியாது. அதனால் பரமாத்மா எத்தனை பழமையானவரோ வேதமும் அத்தனை பழமையானது. பரமாத்மா எத்தனை பழமையானவர் என்று யாராலும் கூற இயலாது. அவர் அனாதியானவர்.
பகவானின் சப்த வடிவமே வேதம்! வேதம் பகவத் ஸ்வரூபமாக இருப்பதால்தான் அதற்கு இத்தனை பவித்திரத்தன்மை உள்ளது.
பாரத தேசத்தில் இன்றைக்கும் ‘வேதவாக்கு’ என்ற சொல் பழக்கத்தில் உள்ளதைக் காண்கிறோம். “அவருடைய பேச்சு வேதவாக்கு!” என்று கூறுவதுண்டு. வேதவாக்கு என்றால் “தட்டாமல் கடைப்பிடிக்கப்பட வேண்டியதே!” என்ற பொருளில் உபயோகிக்கிறோம்.
வேத மந்திரம் என்றால் என்ன?
வேதத்தில் கூறப்பட்டுள்ள வாக்கியங்களுக்கு மந்திரங்கள் என்று பெயர். அவற்றில் சொற்களுக்கு மட்டுமின்றி தெய்வீக ஒலிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் வேத மந்திரங்கள் வெறும் உச்சரிப்பின் மூலம் கூட சக்தியளிக்கக் கூடியவை.
மந்திரம் என்றால் ‘சக்தி நிரம்பிய சொற்கள்’ என்று பொருள். அவ்விதமாக நாம் சிந்தித்துப் பார்க்கையில் வேதத்தில் இருக்கும் மந்திரங்கள் பலப்பல அர்த்தங்களை நமக்குத் தெரிவிக்கின்றன என்பது புரிகிறது.
வேத மந்திரத்திற்கு இதுதான் பொருள் என்று அத்தனை எளிதாகக் கூறிவிட முடியாது. வேதமந்திரங்களை புரிந்து கொள்வதற்கு ஆறு சாஸ்திரங்களின் உதவி தேவை என்கிறது சம்பிரதாயம். அந்த ஆறு சாஸ்திரங்களுக்கு “ஷட் அங்கங்கள்” என்று பெயர். “சிக்ஷா, வியாகரணம், நிருக்தம், சந்தம், ஜோதிடம், கல்பம்” – இந்த ஆறு சாஸ்திரங்களிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே வேத மந்திரத்திற்கு பொருள் கூற முடியும்.
வேதத்திற்கு இத்தகைய ஆறு வகை சாஸ்திர அறிவோடு பொருள் கூறியவர்களுள் “சாயிநாச்சாரியார்” ஒருவர். அவர் மிக அழகாக வேதத்திற்கு நிருக்தமும் பாஷ்யமும் எழுதி உள்ளார். ‘நிருக்தம்’ என்றால் வேதச் சொற்களுக்கான நிகண்டு, அகராதி என்று பொருள். இதனை அனுசரித்து பாஷ்யம் அதாவது பொழிப்புரை எழுதுகையில் ஒரு வார்த்தை கூறுகிறார். “நான் வெறும் ஒரு விதத்தில் பொருள் கூறுகிறேனே தவிர வேதத்திற்கு இன்னும் எத்தனையோ அர்த்தங்கள் உள்ளன” என்று குறிப்பிடுகிறார். இதனை மிக முக்கியமாக கவனிக்க வேண்டும்.
அதாவது தற்போது நமக்கு இருக்கும் பௌதிக நிலையைப் பொறுத்து வேத மந்திரங்களுக்கு ஒருவிதத்தில் பொருள் கொள்கிறோம். ஆனால் வேத மந்திரங்களுக்குள் இன்னும் எத்தனையோ அர்த்தங்கள் மறைந்திருக்கின்றன.
அர்த்தங்கள் எத்தனை மறைந்திருந்தாலும் சிலவற்றை மட்டுமே நாம் பொருள் புரிந்து கொள்வது எந்த விதத்தில் சரியானது? எந்த விதத்தில் அது முழுமையானது? என்று கேள்வி கேட்டுக் கொண்டால் ஓரளவிற்கு நாம் பொருள் கொள்ள இயலுமே தவிர வேதம் நாம் கொள்ளும் அர்த்தங்களை விட இன்னும் எத்தனையோ அர்த்தங்களோடு கூடியது என்னும் புரிதல் நமக்கு இருந்தால் அதுவே போதும்!
அதனால்தான் சிலர் வேதத்தில் இருக்கும் வான்மண்டல ரகசியங்களை எடுத்துக் கூறுகிறார்கள். சிலர் விஞ்ஞானத்தோடு தொடர்புடைய சாஸ்திரங்களைப் பற்றி எடுத்துக் கூறுகிறார்கள். இவையனைத்தும் அதில் உள்ளன.
வேதத்திலுள்ள ஒவ்வொரு மந்திரத்திற்கும் மூன்று விதமான பொருள் இருக்கும் என்று வேத சாஸ்திரமே தெரிவிக்கிறது. இதனைக் கொண்டு அத்தனை பொருட்களையும் எவ்வாறு அறிவது என்பதையும் கூறுகிறார்கள். ஒவ்வொரு மந்திரத்திற்கும் “அதியக்ஞம், அத்யாத்மம், அதிதெய்வம்” என்ற மூன்றின்படி மூன்று வித பொருள்களைக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
அத்யாத்மம் என்பதற்கு “பௌதீகப் பொருள்” என்று விளக்கம் கொள்ளலாம். அதிதெய்வம் என்றால் தேவதைகளைப் பொறுத்து பொருள் கொள்வது. அதியக்ஞம் என்றால் யக்ஞத்தைப் பொறுத்து பொருள் கொள்வது. யக்ஞத்தின்படியான வியாக்கியானத்தைத்தான் “சாயிநாச்சாரியார்” அளித்துள்ளார்.
வேதத்தில் உள்ள மந்திரங்களை ஆராய்ந்தால் அற்புதமான தனிமனித மேன்மைக்குப் பயன்படும் வாக்கியங்கள் காணப்படுகின்றன. அவற்றை நாம் மனித குலத்தின் மேன்மைக்கான தர்மோபதேசங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். தர்மம் என்றால் உத்தமமான தனி மனித நடத்தை என்ற ஒரு பொருள் போதும்!
தனி மனித நடத்தையை பண்படுத்துவதே தர்மத்தின் நோக்கம். பண்படுத்தப்பட்ட தனி மனித நடத்தையோடு வாழ்வதே தர்மம். அத்தகைய தர்மத்தையே வேதம் போதிக்கிறது.
அதுமட்டுமல்ல. இறுதியில் சூட்சுமமான வேதாந்த தத்துவ வித்யையை போதிக்கிறது. இத்தனை விஸ்தாரமாக கருத்துக்களை கூறும் வேதத்தின் பொருள் சிறப்புகளை நாம் சிந்தித்துப் பார்க்கையில் இத்தனைவித பொருள் பொதிந்த வார்த்தைகள் எவ்வாறு உற்பத்தியாயின என்ற வியப்பு ஏற்படுகிறது.
அதற்குக் காரணம் என்னவென்றால் மிகத் தீவிரமான ஆழ்ந்த தவத்தின் மூலம் சாதாரண அறிவிற்கு அப்பாற்பட்டு செல்கிறார் ருஷி. நீண்டகால ஆழ்ந்த தவத்தினால் ரிஷிகளின் புத்திக்கூர்மை மலர்கிறது. அத்தகைய புத்தி கூர்மையால் பெறும் அறிவாற்றலின் மலர்தலை “புலன்களுக்கு அப்பாற்பட்ட ஞானம்” என்கிறோம்.
உலகில் எந்தக் கல்வியறிவை பற்றிக் கூறினாலும் அவற்றை புலன்களின் எல்லைக்கு உட்பட்டதாகவே அறிகிறோம். புலன்களுக்கு அப்பாற்பட்ட ‘ப்ரக்ஞை’ பற்றி சாமானிய மனிதனால் எடுத்துக் கூற இயலாது.
தவத்தின் மூலம் சமாதி நிலையை அடைந்தவர்கள் இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட அறிவாற்றலால் சாசுவதமான உண்மைகளை அறிந்து கொள்கிறார்கள். அவ்வாறு தரிசித்த சத்தியங்களை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
அவற்றையே வேதமந்திரங்கள் என்கிறோம். அவ்வாறு அறிந்து கொண்டவர்களை ருஷிகள் என்கிறோம். அவர்கள் அறிந்து கொண்ட சத்தியங்களை வேதம் என்கிறோம்.
அதனால் இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட உயர்ந்த புத்தி கூர்மையோடு சமாதியில் ருஷிகள் தரிசித்துச் சொல்லும் வார்த்தை, சாமானிய நிலையில் இருப்பவர்களுக்குப் புரியாது. அதனால் அதனை அவ்விதமே உயர்வாக கௌரவிக்கிறோம் என்பது இதில் உள்ள சிறப்பு.
அதன் கருத்துக்களை நாம் புரிந்து கொண்டாலும் இல்லாவிட்டாலும் அந்த வேத வாக்கியங்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். ஏனென்றால் அவை சமாதி நிலையில் இருந்து வெளிப்பட்ட சொற்களாதலால் அவற்றை நாம் பகவானின் சொற்களாகவே ஏற்க வேண்டும். புலன்களுக்கு அப்பாற்பட்ட சப்தங்கள் இறைவனின் சொரூபமே!
பகவானோடு ஒன்றுபட்ட ருஷி, லௌகீகமான அம்சங்களுக்கு அப்பாற்பட்டு இருப்பார். அதனால் “சர்வ அதீதமான” சத்தியத்தை அவர் வெளிப்படுத்துவார். அதன் காரணமாகவே சமாதி ஸ்திதியிலிருந்து கூறப்பட்ட உண்மைகளில் எத்தனை உட்பொருள் உள்ளது என்பது மீண்டும் அந்த நிலையை எட்டியவருக்குத்தான் புரியுமே தவிர சாமானியர்களுக்கு விளங்காது.
ஒவ்வோர் முறை வேத வாக்கியங்கள் அர்த்தங்களுக்கு அதீதிகமாகக் கூட இருக்கும் என்று கூறப்படுகிறது. இங்கே அர்த்தங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கும் வேத வாக்கியங்களால் நமக்கு என்ன பயன்? என்ற கேள்வி எழுகிறது.
பயன் என்பது அந்த வாக்கியங்களின் இருப்பிலேயே இருக்கிறது என்பதை நாம் கூறி வருகிறோம். அந்தச் சொற்களை உச்சரிக்கும் போது ஏற்படும் சக்தி அலைகளாலேயே நன்மைகள் நிறைவேறுகின்றன.
உலகிலேயே, “இந்தச் சொல்லை இவ்வாறுதான் உச்சரிக்கவேண்டும். இந்தச் சொல்லை இந்த ஸ்வரத்தோடுதான் உச்சரிக்க வேண்டும்” என்று கூறிய ஒரே சாஸ்திர நூல் வேதம். இதர நூல்கள் எதுவுமே இந்தச் சொல்லை இவ்வாறுதான் உச்சரிக்க வேண்டும் என்று கூறுவதில்லை. சங்கீத சாஸ்திரத்தில் மட்டும் அட்சரங்களை இந்த ஸ்வரத்தில் உச்சரிக்க வேண்டும் என்று கூறுவார்களே தவிர மீதி உள்ள எந்த நூலிலும் வாக்கியங்களை இந்த ஸ்வரத்தில்தான் உச்சரிக்க வேண்டும் என்று கூறவில்லை.
வேதத்தில் மட்டுமே அவ்வாறு கூறியுள்ளார்கள். இதனைக் கொண்டு தெரிவது என்னவென்றால் வேதத்தில் பொருள் எத்தனை முக்கியமோ ஒலியும் அதே அளவு முக்கியம்.
நம் தினப்படி வாழ்க்கையில் கூட ஒரே சொல்லை கூறுகையில் பல வேறுபாடுகளைக் காண்கிறோம். சொல் ஒன்றேயானாலும் அன்போடு ‘வாங்க!’ என்று கூறுவதற்கும் வெறுப்போடு அதே சொல்லைக் கூறுவதற்கும் உள்ள சப்த வேறுபாட்டை நாம் கவனிக்க முடியும்.
வேத மந்திரங்களில் ஸ்வரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. “உதாதா, அனுதாதா, சரிதா” என்ற மூன்று முக்கியமான ஸ்வரங்கள் பற்றி வேத மந்திரங்களில் கூறியுள்ளார்கள். அந்தந்த ஸ்வரங்களில் உச்சரிக்கும்போது பொருளிலும் மாற்றமேற்படுகிறது. அதனால் வேதத்திற்கு ஸ்வரம் இன்றியமையாதது.
இக்காரணத்தால்தான் வேதத்தைக் கற்றுக் கொள்வதில் கூட ஒரு திட்டவட்டமான சம்பிரதாயத்தை விதித்துள்ளார்கள். அவ்விதம் சம்பிரதாயத்திற்கு உட்பட்டு வேதத்தை கற்றுக் கொள்ளும்போது அந்த உச்சரிப்பு முறையில் இருக்கும் தெளிவும் அதன் உண்மையான வடிவமும் நமக்குப் புரிய வருகிறது.
இன்னும் ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால் உலகத்தில் உள்ள பல நூல்களும் பல வித்யைகளும் காலப்போக்கில் மாற்றங்களுக்கு ஆளாகி வருகின்றன. ஆனால் வேதம் ஒன்று மட்டுமே எத்தனை யுகங்கள் கடந்தாலும் ஒரே விதமாக உச்சரிக்கப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் காணப்படாது.
இதனைக் கொண்டு எத்தனை பாதுகாப்பான, கட்டுப்பாடான அமைப்பு வேதத்திடம் உள்ளதென்பதை அறிய முடிகிறது. வேதத்தின் வடிவத்தை நாம் புரிந்துகொள்ள முயலும் போது இத்தனை விஷயங்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.
அவ்வாறு புலன்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் ருஷிகள் தரிசித்த சாஸ்வத உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். அதே ஸ்திதிக்குச் சென்று சேர்ந்த மற்ற ரிஷிகள் அவற்றை அறிந்து கொண்டு நமக்குப் புரியும் வண்ணம் எடுத்துக் கூறியுள்ளார்கள். அந்த நூல்களை புராணங்கள், இதிகாசங்கள், தர்ம சாஸ்திரங்கள் என்கிறோம்.
வேதங்களில் கூறிய சத்தியங்களை மீண்டும் அதுபோன்ற சமாதி நிலைக்குச் சென்ற வியாசர் முதலான மகரிஷிகள் புரிந்துகொண்டு கருணையோடு நமக்குப் புரியும் வண்ணம் கதை வடிவிலும், போதனை வடிவிலும் அளித்துள்ளார்கள்.
வேதங்களில் கூறப்பட்டவற்றையே இதர சாஸ்திரங்களில் நம் ஸ்தாயியில், நமக்குப் புரியும் வண்ணம் வழங்கியுள்ளார்கள். அதிலும் கூட கற்றறிந்தோர் அறிவு நிலை முதல் சாமானியர்களின் அறிவு நிலை வரை புரிந்து கொள்ளும் திறனில் பல வித வேறுபாடுகள் இருக்கும்.
மொத்தத்தில் வேதங்களில் கூறப்பட்டுள்ள ஞானமே நமக்குப் பயன்படும் வண்ணம் புராணங்கள் போன்றவற்றில் கிடைக்கின்றன என்பதை அறிய வேண்டும். வேதமே விஸ்தாரமாக இத்தனை நூல்களாக நமக்கு கிடைக்கின்றன.
புராணங்கள் என்ன கூறுகின்றன?
நம் நாட்டு மக்களின் வாழ்வில் புராணங்களின் தாக்கம் ஆழமாக, பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளது. புராணம் வேத மாதாவைப் போற்றி வணங்கி, “வேத தர்மமே சாஸ்வதம்!” என்று போதிக்கிறது.
விதை இன்றி விருட்சம் இல்லை. வேதம் என்ற விதையே புராணம் என்ற விருட்சமாக வெளிப்பட்டுள்ளது. மக்களுக்கு உபயோகப்படும் விருட்சத்தைப் போல புராணம் சாமானியர்களை ஊக்குவித்து, போதித்து அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.
சனாதன தர்மம் என்ற மாளிகைக்கு வேதம் அஸ்திவாரம் என்றால் புராணங்கள் ஆதாரத் தூண்களாக விளங்குகின்றன. புராணங்கள் இல்லாவிட்டால் சனாதன தர்மம் இத்தனை ஸ்திரமாக நிலைபெற்றிருக்காது.
முதன்முதலில் தோன்றிய “மக்கள் நூல்” புராணமே!
வேதங்களின் பொருள் பல ரகசியங்களுடன் ஆழத்துடனும் இருக்கும். அந்த வேத தர்மத்தை சரளமாக அழகிய போதனைகளாக சாமானியர்களுக்கு கூட கிடைக்கச் செய்ய வேண்டுமென்று வியாசர் கருதினார்.
மிகவும் எளிமையாக உள்ள சம்ஸ்கிருதமே புராணங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பேச்சு மொழி போல் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய, சிரமமற்ற சரள சமஸ்கிருதத்தை புராணங்கள் எழுதுவதில் உபயோகித்துள்ளார் வியாச பகவான்.
சுலபமான அனுஷ்டுப் சந்தஸ்ஸையே அதிகமாக உபயோகித்துள்ளார். வேதங்களில் உள்ள பல்முனைப்பட்ட ரகசியங்களை புராணங்களில் எளிமையாக விவரித்துள்ளார்.
“புராணம்” என்றால் பழமையானது என்ற பொருள் மட்டுமேயன்றி பழமையானாலும் என்றும் புதுமையானது என்ற பொருளும் தொனிக்கிறது. “புராபி நவம் புராணம்” – நித்திய நவீனமான தர்மமே பழங்காலத்து அம்சங்களை ஆதாரமாகக் கொண்டு கூறப்பட்டுள்ளது என்பது இதன் கருத்து.
புராணக் கதைகள் அனைத்து வித மக்களையும் கவர்ந்திழுக்கும் அம்சங்களோடு விளங்குகிறது. அவற்றின் கதாபாத்திரங்கள் விதவிதமான பாவனைகளுக்கு வடிவங்களாக பிரகாசித்து வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்களால் ஒப்பிடப்படுகின்றனர். அனேக பிரச்சினைகளுக்கு தீர்க்கும்வழி காட்டுகின்றன. இன்று வரையில் நாம் உதாரணங்களாக உபயோகிக்கும் பாத்திரங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் புராணங்களே ஆதாரம்.
புராண அறிவை வியாசரிடம் இருந்து பெற்று பின்னர் உபதேசித்தவர் சூதர். இவரையே ‘ரோம ஹர்ஷனர்’ என்பர். இந்த மிகச் சிறந்த வித்யைக்கு பிரசாரகர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவரான சூதமகா முனிவர். இவரே சௌனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தவர். இந்த அம்சம் ஒன்றே போதும் நம் சனாதன தர்மத்தில் குலத்தைவிட ஞானத்திற்கு முதலிடம் என்று நிரூபிப்பதற்கு.
புராணம் ஒரு பிரம்மாண்டமான படைப்பு. இத்தனை விஸ்தாரமான படைப்பு பிரபஞ்ச இலக்கியங்களில் காண்பதரிது.
18 என்ற எண்ணிக்கையாக விஸ்தரிக்கப்பட்ட புராண வித்யையை வியாச மகாமுனிவர் பதரிகாஸ்ரமத்தில் எழுதினார். விஷ்ணு சொரூபர்களான நர நாராயணர்களே அவருடைய குருமார்கள். எனவேதான் நர நாராயணர்களையும் வியாசரையும் சரஸ்வதியையும் வணங்கி நைமிசாரணியத்தில் சூதர் புராணக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
“நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம் I
தேவீம் சரஸ்வதீம் வ்யாசம் ததோ ஜய முதீரயேத் II”
‘ஜயம்’ என்ற சொல்லுக்கு தர்மம் அர்த்தம் காமம் மோட்சம் என்ற சதுர்வித புருஷார்த்தங்களையும் அடைவது என்று பொருள். இந்த நான்கையும் அடைவதற்கான ஞானத்தை தரும் நூல் ஜயம். எண் கணிதப்படி ஜயம் என்ற சொல் 18 என்ற எண்ணைக் குறிக்கும். அஷ்டாதச புராண எண்ணிக்கை இந்த பிரார்த்தனை ஸ்லோகத்தில் பொதிந்துள்ளது.
கிராமங்களில் மர நிழல்கள், பொது மேடைகள், கோவில்களின் உற்சவப் பந்தல்கள் புராணக் கதைகளுக்கு மேடைகளாகி மக்களுக்கு தர்மத்தைப் பற்றிய எண்ணத்தையும் பகுத்தறியும் விவேகத்தையும் நீதியையும் பக்தியையும் போதித்தன. இன்றும் போதித்து வருகின்றன. எனவேதான் புராண அறிவலைகளின் விஸ்தீரணம் நாடோடிப் பாடல் இலக்கியங்களில் கூட உணர்ச்சிபூர்வமாக எதிரொலிக்கிறது.
புராணக் கதைகளில் பல யுகங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளையும், யக்ஞ சங்கேதங்களையும், மந்திர சாஸ்திர குறிப்புகளையும், யோக சாஸ்திர குறிப்புகளையும் காண முடிகிறது. சிறிது கூர்ந்து பரிசீலித்தால் இந்த குறிப்புகளை கிரகித்தறிய முடியும்.
சிருஷ்டியின் தொடக்கம் முதல் பிரளயம் வரை நடந்த வரலாற்றினை புராணங்கள் விவரிக்கின்றன. பல்வேறு மன்வந்தரங்களின் சரித்திரம், ராஜ வம்சங்களின் வரலாறு, பூகோள, வான சாஸ்திர, நட்சத்திர, கிரகங்களின் நிலைகள் – இவை புராணங்களில் முக்கியமாக விஸ்தாரமாக எழுதப்பட்டுள்ளன.
விஸ்வமனைத்தையும் பரிபாலிக்கும் பராத்பரனை சிவனாகப் போற்றுபவை சிவ புராணங்கள். விஷ்ணுவாக கீர்த்தனை செய்பவை வைணவ புராணங்கள். சக்தியாக போற்றுபவை தேவி புராணங்கள். இவை அந்தந்த உபாசகர்களுக்கு அந்தந்த தேவதைகளிடம் நிஷ்டையை பலப்படுத்துவதற்காக சர்வ ஜன உபயோகத்திற்காக வியாசர் அமைத்துக் கொடுத்த வழி முறை.
நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் நன்மைக்கே தெய்வம் துணை நிற்கும் என்ற செய்தியுடன் தேவ அசுர யுத்தங்கள் புராணங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளன.
வேத தர்மத்தை மட்டுமின்றி, துவாபர யுக முடிவு வரை (கலியுக ஆரம்பம்) விஸ்தரித்திருந்த பண்டைய அறிஞர்களின் ஞானம் அனைத்தையும் ஸ்வீகரித்து வேதத்திற்கு ஏற்புடையவற்றை புராணங்களில் அமைத்துள்ளார் வியாச பகவான்.
ஜோதிட சாஸ்திர ரகசியங்கள், சிற்ப சாஸ்திரம், சங்கீதம், நாட்டியம் போன்ற கலைகள், வேதாந்த தத்துவ கருத்துகள் – இவை ஏராளமாக புராணங்களில் விவாதிக்கப்பட்டுள்ளன.
புண்ணிய க்ஷேத்திரம், புனித தீர்த்தம், விஞ்ஞானம், ஆராதனைகள், விரதங்கள், தீட்சைகள், வழிபாடுகள் போன்றவை புராணங்கள் மூலமே நமக்குக் கிடைக்கின்றன.
நாம் தற்போது பாரத தேசமெங்கும் கொண்டாடும் பண்டிகைகள் அனைத்திற்கும் புராணங்களே ஆதாரங்கள். புராண வித்யையை ஆதாரமாகக் கொண்டே இமயம் முதல் குமரி வரை உள்ள மக்கள் தமக்கே உரித்தான முறையில் நாட்டியம், இலக்கியம், சிற்பம், கட்டிடம் போன்ற கலைகளையும் ஆச்சார பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
சனாதன தார்மீக எண்ணத்தை மனித இனத்திற்கு உயிர்மூச்சாக அளித்த அற்புத படைப்புகள் புராணங்கள்.
ஸ்தோத்திர நூல்கள் எதற்கு?
சனாதன தர்மத்திற்கு ஆதாரங்களான வேத, புராண, இதிகாசங்களைப் பற்றிக் குறிப்பிட்டோம். அவற்றின் சொரூப சுபாவங்களை விரிவாகப் பார்த்தோம். இந்த நல் நூல்களின் ஆதாரத்துடனும் சத்புருஷர்களின் நல் நடத்தையுடனும் நம் பண்பாடு, பழக்க வழக்கங்கள் என்னும் செல்வம் வளர்ந்துள்ளது.
இவற்றோடு கூட நம் கலாச்சாரத்தின் மேன்மைக்கும் செழிப்பான வளர்ச்சிக்கும் உதவுபவை ஸ்தோத்திர நூல்கள்.
நம் நாட்டில் ஸ்லோக நூல்கள் எண்ணற்றவையாக உள்ளன. அவற்றின் சக்தி, சங்கீதம் நிருத்தியம் போன்ற கலைகளின் மேல் தீவிரமாகப் பரவியுள்ளது. இறைவனின் தத்துவம், மகிமை, லீலை, குணம், வைபவம் இவற்றைப் போற்றுவதே துதிப்பாடல்கள்.
யாகங்களின்போது வைதிக மந்திரங்களால் செய்யப்பட்ட தேவதைகளின் துதியை புராணங்களில் சுலோகங்களால் கட்டிப் போட்டார் வியாச மகரிஷி.
தெய்வத்தைப் பல்வேறு உருவங்களில் உபாசனை செய்யும் பக்தர்கள், தம் பக்திக்கும், அனுபூதிக்கும் சரணாகதிக்கும் ஏற்ப அக்ஷர வடிவங்களாக அபாரமான ஸ்லோகங்களை அருளியுள்ளார்கள்.
ஆன்மீக கண்ணோட்டத்துடன் மட்டுமின்றி, கலைப் பார்வையுடன் தரிசித்தாலும் பரிபூரண கவிதைப் படைப்புகளாக ஸ்தோத்திர சாகித்தியம் மலர்ந்துள்ளது.
வேத, புராண மார்க்கங்களை அனுசரித்து காளிதாஸர் போன்ற மகாகவிகள் அற்புதமான சந்தஸ்ஸுகளில் பாவனைச் சித்திரகளுடனும் சப்த, அர்த்த அலங்காரங்களுடனும் மகோன்னதமான ஸ்தாயியில் ஸ்தோத்திர சாகித்தியத்தை அருளியுள்ளார்கள். அது மட்டுமன்றி தத்துவச் சிந்தனை, ஜீவனின் வேதனை முதலிய பலவித பாவனைகள் அந்தப் படைப்புகளில் நதி நீரோட்டம்போல் பிரவகிக்கின்றன.
ஸ்தோத்திரங்களைப் படிப்பதாலும் பாராயணம் செய்வதாலும் நல்ல பலன்களை அனுபவத்தில் பெற்றவர்கள் அவற்றைப் பவித்திர நூல்களாகக் கண்டு ஆராதித்து வருகிறார்கள்.
சகஸ்ரநாம ஸ்தோத்திரங்கள் போன்றவற்றோடு கூட பல்வேறு துதிகள் இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் பாகவதத்திலும் கிடைக்கின்றன. புராண நூல்களை பற்றி கேட்கவே வேண்டாம்!
ஆதிசங்கர பகவத்பாதரின் சக்தியால், ஸ்தோத்திர சாகித்தியம் ஒரு மேன்மையான ஒளி பொருந்திய இடத்தை பிடித்தது. அவருடைய கனகதாரா ஸ்தோத்திரம், சௌந்தரிய லஹரி, சிவானந்த லஹரி போன்றவை மகா காவியங்களாக போற்றப்படுகின்றன. இவற்றை சாமானியர்கள் கூட எளிதாகப் பாராயணம் செய்கிறார்கள்.
சிவ தாண்டவ ஸ்துதி, மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் போன்றவை சங்கீத வடிவெடுத்தது, அழகான லயத்துடன் அனைத்து மக்களுக்கும் நல்ல ரசானுபூதியை அளிக்கின்றன. அஷ்டகங்களாக, தண்டகங்களாக விஸ்தரித்துள்ள துதிப்பாடல் சாகித்தியம், சமஸ்கிருதத்தில் ஒரு மகா சமுத்திரம் போல் காணப்படுகிறது. சியாமளா தண்டகம் போன்றவை இன்றும் நித்ய பாராயணமாக உள்ளன
புஷ்பதந்தரின் சிவ மகிம்னா ஸ்துதி பிரசித்தியாக தேசமெங்கும் பரவி உள்ளது. லீலாசுகரின் ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம், அப்பைய தீக்ஷரின் சிவகர்ணாம்ருதம், ஆதி சங்கரர் எழுதியதாக கூறப்படும் ஸ்ரீராமகிருஷ்ணாமிருதம் போன்றவை சாகித்ய உலகின் அமிர்த கலசங்கள். ஜெயதேவரின் கீதகோவிந்தம் ஒரு ரசஸ்துதி.
சில ஸ்தோத்திர காவியங்கள், பல்வேறு க்ஷேத்திரங்களோடு தொடர்புடையவை. உதாரணத்திற்கு குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணரைத் துதித்துப் பாடிய ஸ்ரீமன் நாராயணீயம் நாராயண பட்டத்ரி தன் தவத்தின் பலனால் அருளிய துதிப் பாடல். தெய்வத்தின் மறு உருவான இந்த துதி, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் பிரசித்தியாக உள்ளது. சந்தஸ்ஸிலும் பக்தியிலும் அலங்காரச் செல்வத்திலும் சகல லட்சணங்களையும் பெற்ற நூல் இது. இதன் பாராயணம் பரிபூரண ஆரோக்கியத்தை அருள வல்லது.
மயூர கவி எழுதிய சூரிய சதகம், ஸ்ரீகூர நாராயணகவி எழுதிய சுதர்சன சதகம் போன்றவை படிக்கும் போது நம்மை மறக்கச் செய்கின்றன.
நம் நாட்டு கலாச்சாரத்திற்கு உயிர் போன்ற சமஸ்கிருத மொழி, இன்றளவும் சாமானியர்களிடம் சிறிதளவாவது உயிர் வாழ்கிறதென்றால், அது ஸ்தோத்திரப் படைப்புகளினால்தான். அவற்றின் மகிமையை அங்கீகரிக்கத்தான் வேண்டும்.
நம் நாட்டு மொழிகள் அனைத்திலும் துதிப் பாடல்கள் பிரகாசமான இடத்தை பிடித்துள்ளன. மகாராஷ்டிராவில் துக்காராம், ஞானேஷ்வர் போன்றவர்களின் நூல்கள், தமிழில் ஆழ்வார்கள், நாயன்மார்களின் வைஷ்ணவ, சிவ சாகித்தியங்கள், கன்னடத்தில் பசவேஸ்வரரின் வசனங்கள், தாச சாகித்தியங்கள் … இவை சில உதாரணங்கள் மட்டுமே!
தெலுங்கில் தாசரதி சதகம், ந்ருசிம்ம சதகம், ஸ்ரீகிருஷ்ண சதகம் போன்றவை தெய்வ பக்தியோடு கூட தர்ம சிந்தனையையும் நீதி நேர்மையையும் கூட போதிக்கின்றன. ஆஞ்சநேயர் தண்டகம் போன்றவை மிகச் சாமானியர்களைக் கூட அரவணைக்கின்றன. போத்தனா எழுதிய பாகவத காவியம் எத்தனையோ அற்புத துதி பாடல்களை தெலுங்கு மொழியில் சாஸ்வதமாக பிரதிஷ்டை செய்துள்ளது. தூர்ஜடி எழுதிய ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சதகம் கம்பீரமான நூலாக சைவ சாகித்தியத்தின் மணி தீபமாக விளங்குகிறது.
ஸ்தோத்திரப் படைப்புகள் சங்கீத உலகில் கூட நிலைபெற்றுள்ளன. தெய்வ பக்தி இல்லாத சங்கீதத்தை நம் நாட்டு மக்களின் இதயம் ஏற்காது போலும்! எந்த மொழியானாலும் எந்த இடமானாலும் தெய்வ பக்திப் பாடல்களே கீர்த்தனை செய்யப்பட்டு சங்கீத உலகைச் செழிப்பாக்கி உள்ளன.
மீரா, சூர்தாசர் போன்ற வடநாட்டு பக்தர்களோடுகூட, அன்னமய்யா, ராமதாசர், க்ஷேத்ரய்யா, தியாகராஜ சுவாமி, முத்துசுவாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி, சதாசிவ பிரம்மேந்திர சுவாமி, தரி கொண்ட வேங்கமாம்பா போன்ற சங்கீத ஆச்சார்யர்கள் பலர் கீர்த்தனை வடிவில் ஸ்தோத்திர சாகித்தியத்தை படைத்துள்ளனர்.
இவை நம் அழியாத கலைச் செல்வங்கள். தார்மீக வாரிசுகள். முக்திக்குப் படிக்கட்டுகள். நம் நாட்டு பக்தி பாவனை இந்த சரஸ்வதி கிருபையை இதயத்தில் இருத்திக் கொண்டு காப்பாற்றி வருகிறது. இதன் மூலம் நம் பக்தி மார்க்கத்தையும் தார்மீக செல்வத்தையும் இடைவிடாமல் நிலைத்திருக்கச் செய்து வருகிறோம்.
Arumai