காளிதாசரின் சாகுந்தலத்தில் நான்கு பாடல்கள்

"காவ்யேஷு நாடகம் ரம்யம்
 நாடகேஷு சகுந்தலா
 தத்ராபி ச சதுர்தோSங்க:
 தத்ர ஸ்லோக சதுஷ்டயம்"

என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு சுலோகம் உள்ளது. 

"காவியங்களில் ரம்மியமானது நாடகம். நாடகங்களில் ரம்மியமானது சாகுந்தலம். சாகுந்தலத்தில் ரம்யமானது நான்காவது அங்கம். அந்த நான்காவது அங்கத்தில் ரம்மியமானது நான்காவது ஸ்லோகம்" என்பது இதன்பொருள்.

 இவ்வாறு கூறுவதில் சிறப்பு உள்ளது. அதாவது இந்த நான்கு ஸ்லோகங்களும் சம்ஸ்கிருத இலக்கியத்தில் சாதாரண நிலையை விட நான்கு மடங்கு அதிக சுவை உள்ளவை. இவ்வாறு புகழ் பெற்ற காளிதாசரின் அந்த நான்கு ஸ்லோகங்களையும் அவற்றின் பொருளையும் பார்ப்போம்!

"யாஸ்யத்யஜ்ய சகுந்தலேதி ஹ்ருதயம் சம்ஸ்ப்ருஷ்ட முத்கண்டயா
 கண்டஸ்தம்பித பாஷ்பவ்ருத்தி கலுஷம் சிந்தாஜடம் தர்ஸனம்
 வைக்லப்யம் மமதாவதீத்ருஸ மிதம் ஸ்னேஹா தரண்யௌகஸ:
 பீத்யந்தே க்ருஹிண: கதம் நு தனயா விஸ்லேஷ து:கைர்ணவை:"

இது அந்த ஸ்லோகங்களில் முதலாவது.

கண்வ மகரிஷி தன் வளர்ப்பு மகள் சகுந்தலாவை தவசிகளோடு துஷ்யந்தனிடம் அனுப்ப முனையும்போது தனக்குத்தானே இவ்வாறு நினைத்துக் கொள்கிறார்.

 "சகுந்தலா இப்போது சென்று விடப் போகிறாள் என்று நினைக்கும்போதே வருத்தமாக உள்ளது. கண்ணீரை பலவந்தமாக அடக்கிக்கொள்வதால் தொண்டை அடைக்கிறது. கண்களில் நீர் திரையிட்டு எதுவும் சரியாகத் தென்படவில்லை. காட்டில் வசிக்கும் நானே, வளர்த்த பாசத்திற்கே, பிரிவுத் துயரில் இவ்விதம் வருந்தினால், இல்லறத்தார் தாம் பெற்ற மகளை முதல் முறையாக மாமியார் வீட்டிற்கு அனுப்பும் போது இன்னும் எத்தனை வருந்துவார்களோ!" 

 இதில் கண்வ மகரிஷி தன் துயரத்தின் ஆழத்தை விவரிக்கிறார். அவர் மக்களிடமிருந்து விலகி காட்டில் வசிக்கும் தபஸ்வி. ஊர்த்துவ ரேதஸ் கொண்டவர். எந்தவித பாசத்திற்கும் இடம் கொடுக்காதவர்.

 சகுந்தலா, மேனகைக்கும் விசுவாமித்திரருக்கும் பிறந்தவள். கண்வர் வெறும் வளர்ப்புத் தந்தை. அவருக்கே இத்தனை துக்கம் ஏற்படுகிறதென்றால், இனி, இல்லாறத்தாருக்கு மனைவி பிள்ளைகள் என்று உறவில் உள்ள மனிதருக்கு, தான் பெற்ற பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பும் போது அதுவும் முதல் முறை, அந்தப் பிரிவுத் துயரம் அவர்களை எத்தனை பாதிக்குமோ… என்று தன் அனுபவத்தைக் கொண்டு அந்த நிலையில் இருக்கும் இல்லறத்தாரின் துயரத்தை கற்பனை செய்கிறார் கண்வ முனிவர். அதாவது அப்படிப் பார்க்கும் மனநிலையை நமக்கு ஏற்படுத்துகிறார்.

"பாதும் ந ப்ரதமம் வ்யவஸ்யதி ஜலம் யுஷ்மா ஸ்வபீதேஷுயா
 நாதத்ரே ப்ரியமண்டநாபி பவதாம் ஸ்னேஹே ந யா பல்லவம்
 ஆஜ்யேவ: குசும் ப்ரசூதிஸமயே யஸ்யா பவத்யுத்ஸவ:
 ஸேயம் யாதி சகுந்தலா பதிக்ருஹம் ஸர்வை ரனுஞ்ஜாயதாம்" 

இது இரண்டாவது ஸ்லோகம். கண்வ முனிவர், சகுந்தலாவை தன் தபோ வனத்தில் இருக்கும் மரங்களிடம் காட்டி, இவ்வாறு கூறுகிறார்…

"இவள் முதலில் உங்களுக்கு நீரூற்றி நீங்கள் அருந்திய பின்னரே நீர் அருந்துவாள். அலங்கரித்துக் கொள்வது அவளுக்கு மிகவும் பிரியம். ஆனாலும் உங்கள் மீதுள்ள நட்பால் உங்களுக்கு வருத்தம் ஏற்படுமோ என்று ஒரு சிறு அரும்பைக் கூட பறிக்க மாட்டாள். உங்கள் முதல் பூ பூக்கும் போது இவள் விழா கொண்டாடுவாள். அப்படிப்பட்ட சகுந்தலா இதோ மாமியார் வீட்டுக்குச் செல்கிறாள். நீங்கள் அவளுக்கு அனுமதி அளியுங்கள்!"

 கண்வ மகரிஷி இப்படிக் கூறியது தனக்குத்தானே அல்ல… மரங்களிடம். ஆசிரம விருட்சங்களை சகுந்தலா அத்தனை செல்லமாக வளர்த்தாள். கண்வ மகரிஷி அந்த மரங்களுக்குக் கூட மதிப்பளித்து அவற்றிடம் அனுமதி வேண்டுகிறார். அவரால் கொடுக்க முடியாத அனுமதியை அவற்றிடம் கேட்கிறார்.

 கண்வ மகரிஷி மல்லிகைக் கொடியை சகுந்தலாவுக்கு சமமாக பாதுகாத்தார். சகுந்தலா ஒரு மான் குட்டியை மகளாக வளர்த்தாள். ஆயின் இங்கு சக மனிதனையே கண்டுகொள்ளாத மனிதர்களான நமக்கு இவ்வாறு மரம் செடிகளை மனிதர்களாகக் கருதி பேசிப் பழகுவது ஏதோ வெறும் கற்பனை போல் தோன்றக்கூடும். அதற்கு, நம் வாழ்க்கையின் வேகம், இயந்திர கதி இவற்றுக்கு நம்மீது நாமே இரக்கப்பட்டு அடுத்த ஸ்லோகத்திற்கு செல்வோம்.

"அஸ்மான் சாது விசிந்த்ய சம்யமதனானுச்சை: குலம் சாத்மன:
 த்வையஸ்யா: கதமப்யபாந்தவ க்ருதாம் ஸ்னேஹ ப்ரவ்ருத்திம் சதாம்
 ஸாமான்ய ப்ரதிபத்திபூர்வகமியம் தாரேஷு த்ருஸ்யா த்வயா
 பாக்யாயத்த மத: பரம் நகலுத த்வாத்யம் வதூபந்துபி:"

கண்வ முனிவர் துஷ்யந்தனுக்கு தன் கூற்றாகக் கூறும்படியாக சீடர்கள் இருவரிடமும் இவ்வாறு கூறுகிறார்: 

 "நான் தவச்செல்வம் மட்டும் உள்ளவன். நீ உயர்ந்த அரச வம்சத்தில் உதித்தவன். இவள் எந்த உறவினரின் தூண்டுதலும் இன்றி தானாகவே உன்னை காதலித்தாள். இந்த விஷயம் எல்லாம் நீ சரியாக எண்ணிப்பார். இவளை மீதியுள்ள உன் மனைவிகளுக்குச் சமமாக ஆதரி. அதற்கு மேல் அவளுடைய அதிர்ஷ்டம்! அது குறித்துப் பெண் வீட்டாரான நாங்கள் பேசக்கூடாது"

 இந்தச் சொற்களில் கண்வர் முதலில் தன் பரிதாபகரமான நிலையை தெரிவிக்கிறார். தன்னிடம் தவத்தைத் தவிர பிற செல்வங்கள் இல்லை என்கிறார். பிறர் தவறு செய்தால் அவர்களை தண்டிக்கும் பொறுப்பு உள்ள அரசனையும் அவன் வம்சத்தையும் சகுந்தலைக்கு அவனிடம் ஏற்பட்ட காரணம் கருதாத பிரேமையையும் நினைவூட்டி அவளை பிற மனைவியரைப் போலவே பார்த்துக் கொள் என்கிறார். மேற்படி அவள் அதிர்ஷ்டம் என்று தன் பொறுப்புத் துறப்பை வெளிப்படுத்துகிறார். அது குறித்து தாம் பேசக்கூடாது என்று பெண்ணின் தந்தையாக உலக மரியாதையை கடைபிடிக்கிறார்.

 இதில் வெளிப்பட்ட பலதார மணமும் பெற்றோரின் உதவியற்ற நிலையும் இந்தக் காலத்திற்கு ஏற்றதல்ல என்றாலும் அன்று கண்வ மகரிஷியின் இதய வேதனையை சித்தரித்திருக்கும் விதம் காளிதாசருக்கே தகும்.

 இது கடைசி ஸ்லோகம். கண்வ மகரிஷி சகுந்தலாவுக்கு மாமியார் வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிப்பது.

"ஸுஸ்ரூஷஸ்வ குரூன் ப்ரியசகீ வ்ருத்திம் ஸபத்னீஜனே
 பர்துர் விப்ர க்ருதாபி ரோஷணதயா மாஸ்மம் ப்ரதீபங்கம:
 பூயிஷ்டம் பவ தக்ஷிணா பரிஜனே பாக்யேஷ்வ னுத்ஸேகினீ
 யான்த்யேவம் க்ருஹிணீபதம் யுவதயோ: வாமா: குலஸ்யாதய:"

இதன் பொருள் - "மாமியார் மாமனாருக்கு சேவை செய். சக்களத்திகளோடு நட்போடு பழகு. கணவர் ஏதாவது தவறு செய்தாலும் கோபத்தோடு அவரை எதிர்த்துப் பேசாதே. பணியாளர்களிடம் கனிவோடு இரு. பாக்கியங்களைக் கண்டு மகிழ்ந்து பொங்காதே. இவ்வாறு இருந்தால் உத்தம இல்லாள் என்று மெச்சப்படுவாய். இவ்விதம் இல்லாதவர்கள் அங்கு புகுந்த வீட்டிற்கும் இங்கு பிறந்த வீட்டிற்கும் கூட தலைவலியாக மாறிவிடுவார்கள்"

 இங்கு மாமியார் மாமனார், வீடு நிறைய பணியாளர்கள், கூட்டுக்குடும்பம் கூறப்படுகிறது. இத்தகைய அமைப்பு தற்போது மாறிவிட்டது. கணவன் எது செய்தாலும் பணிந்து கிடக்கும் நிலை மனைவிக்கு இல்லை. வீட்டில் மாமனார் மாமியாருக்கு சேவை செய்வது, பணியாளர்களிடம் இரக்கத்தோடு நடந்து கொள்வது, ஐஸ்வர்யம் வந்தாலும் கர்வம் இல்லாமல் இருப்பது, நல்ல இல்லாளாக விளங்குவது போன்றவை பெண்களுக்கு இந்த காலத்திலும் கடமையே.

 எது எப்படியானாலும் மக்களிடமிருந்தும் நகரத்திலிருந்தும் தொலைவாக இருந்த போதிலும் கண்வ மகரிஷி இந்த சந்தர்ப்பத்தில் ஆசிரம மரங்களிடம் கூட தனக்குள்ள கருணையோடு கூடிய அன்பையும் தன் உதவியற்ற நிலையையும், உலகியல் நிலைமைகளையும் இதயத்தைத் தொடும் வண்ணம் தன் சொற்களில் வெளிப்படுத்துகிறார். அதாவது அந்த கதாபாத்திரத்தில் தன்மயம் அடைந்த காளிதாசரே தன் திறமையால் கண்வ முனிவரின் இதயத்திலுள்ள அத்தனை உணர்ச்சிகளையும் ரம்மியமாக இந்த சுலோகங்களில் பிரதிபலிக்கச் செய்துள்ளார்.
 
 இந்த நான்கு ஸ்லோகங்களை சம்ஸ்கிருத இலக்கியத்தின் ரம்மியமான ஸ்லோகங்களாக எடுத்துரைப்பது சிறப்பானது.

One Reply to “காளிதாசரின் சாகுந்தலத்தில் நான்கு பாடல்கள்”

 1. *ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார்.*

  “இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

  “இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன்.

  அடுத்தபடியாக, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

  “இது பாலை விட இனிப்பாக உள்ளது!” என்றான் மகன்.

  அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை.

  “தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான் இனிப்பாக உள்ளது.

  இனி எனக்கு வெறும் பாலும் வேண்டாம், வெறும் சர்க்கரையும் வேண்டாம். சர்க்கரை கலந்த பாலை மட்டும் தாருங்கள்!” என்றான் மகன்

  சிறு கதைகளைச் சொல்லிப் பெரிய தத்துவங் களை விளக்குவதில் வல்லவர் பராசர பட்டர்.

  இக்கதையைச் சொன்ன பராசர பட்டர், “திருமால் மிருக வடிவத்துடன் எடுத்த மத்ஸ்யம், கூர்மம் போன்ற அவதாரங்கள் வெறும் பால் போன்றவை.

  மனித வடிவத்துடன் எடுத்த ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் வெறும் சர்க்கரை போன்றவை.

  ஆனால்,

  மனிதன்-மிருகம் இரண்டும் கலந்த கலவையாக எடுத்த நரசிம்ம அவதாரம் சர்க்கரை கலந்த பால் போன்றதாகும்.

  எப்படிச் சர்க்கரை கலந்த பாலைக் குடித்த சிறுவன், வெறும் பாலையும் வெறும் சர்க்கரையையும் விரும்புவதில்லையோ,

  அவ்வாறே நரசிம்ம அவதாரத்தில் ஈடுபட்ட ஒரு பக்தனின் மனது, திருமாலின் மற்ற அவதாரங்களில் ஈடுபடுவதில்லை!” என்று கதைக்குப் பின் உள்ள தத்துவதை விளக்கினார்.

  மேலும், “நரசிம்மர் சேராதவற்றை எல்லாம் சேர்ப்பவர்.

  மனிதனையும் மிருகத்தையும் இணைக்க முடியுமா?

  பகலையும் இரவையும் இணைக்க முடியுமா?

  பூமியையும் வானத்தையும் இணைக்க முடியுமா?

  வீட்டின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் இணைக்க முடியுமா?

  உயிருள்ள பொருளையும் உயிரற்ற பொருளையும் இணைக்க முடியுமா?

  கருணையையும் கோபத்தையும் இணைக்க முடியுமா?

  இவை அனைத்தையும் இணைத்தவர் நரசிம்மர்.

  சிங்கம், மனிதன் இரண்டும் கலந்த நரசிம்ம வடிவில் தோன்றி மனிதனையும் மிருகத்தையும் சேர்த்தார்.

  பகலும் இரவும் இணையும் பொழுதான சந்தியாகாலத்தில் தோன்றிப் பகலையும் இரவையும் சேர்த்தார்.

  தனது மடியில் வைத்து இரணியனை வதம் செய்த நரசிம்மர், தன் மடியில் பூமியையும் வானையும் ஒன்றாகச் சேர்த்தார்.

  வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் இணைக்கும் நிலைப்படியில் வைத்து இரணியனை வதைத்ததால், வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் நிலைப்படியில் சேர்த்தார்.

  நகத்தை வெட்டினால் வளர்வதால் அதற்கு உயிர் இருப்பதாகவும் கொள்ளலாம், அதை வெட்டினா லும் வலிக்காததால் உயிர் இல்லாததாகவும் கொள்ளலாம்.

  தன் நகங்களால் கீறி இரணியனைக் கொன்று, உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் இரண்டையும் சேர்த்தார் நரசிம்மர்.

  சிங்கம் எப்படி யானையோடு போர் புரிந்து கொண்டே, தன் சிங்கக்குட்டிக்குப் பாலும் ஊட்டுமோ, அதுபோல் நரசிம்மர் இரணியனைக் கோபத்துடன் வதம் செய்து கொண்டே, தன் குழந்தையான பிரகலாதனிடம் கருணையையும் காட்டி அருள்புரிந்தார்.

  இப்படிக்கருணை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் ஒரே நேரத்தில் சேர்த்துக் காட்டினார் நரசிம்மர்!” என்று விளக்கினார் பட்டர்.

  ‘தாதா’ என்றால் சேர்ப்பவர் என்று பொருள்.

  சேராத பொருள்களை எல்லாம் சேர்ப்பவராக நரசிம்மர் விளங்குவதால், ‘ஸந்தாதா’ என்று அழைக்கப்படுகிறார்.

  “ஸந்தாத்ரே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பிரிந்து போன சொந்தங்களும், செல்வங்களும் மீண்டும் வந்து சேரும் படியும், இணைந்த உறவுகள் பிரியாதிருக்கும் படியும் நரசிம்மர் அருள்புரிவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *