தெய்வங்களும் ஊடலும்

‘நீர்’ என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை! பொதுவாகச் சொல்வதுபோல் குறிப்பாகக் கூறுகிறாள் உமையவள்! “பித்தன் என்று தெரிந்துகொண்ட பின்னும், அதனைப் பொருட்படுத்தாமல் என் அண்ணன் உமக்கு பெண்ணைக் கொடுத்தான்; என் கூடப்பிறந்தவன் அல்லவா? எனது திருமணத்தில் தனது தங்கையான எனக்காக அத்தனை சீரும் கொடுத்தான்; உமக்குக் கையில் அம்பாகவும் இருந்தான். (சிவபிரான் திரிபுரத்தை எரித்தபோது அவனுடைய வில்லுக்குத் திருமால் அம்பாக இருந்தான்). அப்படிப்பட்ட மைத்துனனை ஒருநாளும் புகழ்ந்து பாராட்டாமல், ‘எங்கள் அண்ணன்’ உமக்குச் செய்த நன்றி அத்தனையும் மறந்துபோய் விட்டீரே! சத்தி பீடத்தில் உறைபவரே, இது தாம் உமது வழக்கமோ?” எனப் பழித்துரைக்கிறாள். (சங்கை- வழக்கம்).


பித்தனென்றும் பாராமற் பெண்கொடுத்தா
னவனோடு பிறந்த வாசிக்
கித்தனைபெண் சீருமிட்டாங் கையம்பா
வுமக்கிருந்தா னெந்த நாளும்
மைத்துனனைப் பாராட்டி யெங்களண்ணன்
செய்தநன்றி மறந்த தாலே
சத்திபீ டத்துறைவீர் செய்தநன்றி
நீர்மறந்த சங்கை தானே. (11)


இத்தனை கூறியபின்னும் குற்றாலநாதன் சும்மாவிருப்பானா? தன் பங்கிற்கு அவனும் கூறுகிறான்! “குழல்வாய்மொழியே! உன் அண்ணன் சங்கைக் கையிலெடுத்துக் கொண்டு திரிந்துகொண்டிருந்தான். நாம்தான் போனால் போகின்றதென்று ஒரு சக்கராயுதத்தை அவனுக்குக் கொடுத்தோம். அதாவது, ‘வீணர்கள் கூட்டத்தொடு வேலைவெட்டி இல்லாமல் திரிந்து கொண்டிருந்தவனுக்கு நான்தான் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தேன்,’ என்பது போலக் கூறுகிறான் குற்றாலநாதன். “சங்கம் எடுத்தே திரிந்தான்; சக்ராயுதம் கொடுத்தோம்,” என்கிறான். கையில் ஏந்திய சங்கு வெறும் ஓசையைத் தான் கிளப்பும்; அப்படிப்பட்ட வெற்றொலி எழுப்பும் சங்கை வைத்துக் கொண்டு திரிந்து கொண்டிருந்தவனுக்கு நான் தான் பகைவரை வெல்லும் பேராற்றல் கொண்ட சக்கராயுதத்தைக் கொடுத்தேன் என்று பெருமை பேசுகிறான் குற்றாலநாதன் என்கிறார். (திருமால் சக்கராயுதத்தை வேண்டிச் சிவனாரிடம் தவமிருந்தான். ஆயிரம் தாமரைமலர்களால் அனுதினமும் பூசித்தான். திருமாலைச் சோதிக்கவேண்டி சிவனார் ஒருநாள் ஒருமலர் குறையச் செய்தார். ஆனால் திருமாலோ சிறிதும் தயங்காமல் தனது ஒரு கண்ணை அகழ்ந்தெடுத்து சிவனுக்கு அர்ப்பணித்தார். மனமகிழ்ந்து சிவபெருமான் அவருக்குச் சக்ராயுதத்தை அளித்தார் என்பது புராணம்).


திருமால் வெறி (மயக்கம் (அ) பைத்தியம்) கொண்ட நரசிம்மமாய் உருவெடுத்தபோது அவனுக்கு உண்டான பெரும் சினத்தைத் தீர்த்து வைத்தோம் (இரண்யகசிபுவை வதைத்து பிரகலாதனைக் காக்க திருமால் நரசிம்ம அவதாரம் கொண்டது கூறப்படுகிறது); இலட்சுமியைப் பெண்பார்த்துத் திருமணமும் செய்து வைத்தோம். (பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வந்த இலட்சுமியைத் திருமால் மணந்து கொண்டது கூறப்படுகிறது). இதையெல்லாம் நீயும் மறந்து விட்டாயோ? உன் அண்ணன் நாம் செய்த இந்த நன்மைகளை எல்லாம் மறந்து போனதால்- செய்த நன்றி மறந்ததால் எங்கெல்லாமோ சென்று பாலைத் திருடி அதனால் உடலில் எங்கெல்லாமோ அடியும் பட்டுக் கொண்டானல்லவா?” என்கிறான்.


சங்கமெடுத் தேதிரிந்தான் சக்கராயு
தங்கொடுத்தோம் தலைநாட் கொண்ட
சிங்கவெறி தீர்த்தருளிச் செய்யாளை
முகம்பார்க்கச் செய்தோம் கண்டாய்
மங்கைகுழல் வாய்மொழியே யுங்களண்ணன்
செய்தநன்றி மறந்த தாலே
எங்கெல்லாம் பால்திருடி யெங்கெல்லா
மடிபடவு மேது வாச்சே. (12)


அவளது அண்ணனைத் தொடர்ந்து பழிக்கிறான் அன்புக்கணவன்; அம்மையின் சினம் இன்னுமே மிகுகிறது!! “திரிகூடமலையின் இறைவரே! சொன்ன பேச்சை மறக்க வேண்டாம்! இவ்வளவு ஏச்சும் பேச்சும் வந்து தலையில் விழுந்தது எங்கள் அண்ணனுக்கா, உமக்கா எனச் சிறிது யோசித்துப் பாரும். எங்கள் அண்ணன் கண்ணன் இடைச்சியர் காய்ச்சி வைத்திருந்த பாலைத் திருடிக் குடித்தான் என்றீர்கள்; நான் அதை வேண்டுமானால் ஒத்துக் கொள்கிறேன்; ஆனால் நீங்கள் என்ன செய்தீராம்? வேடன் கொடுத்த எச்சில் மாமிசத்தை உண்டீர் ( கண்ணப்பர் வாயில் அதுக்கிக் கொண்டு வந்து கொடுத்த மாமிசத்தை ஏற்றுக் கொண்டீர்).


“என் அண்ணன் ஆய்ச்சியர் கையால்தான் அடிபட்டான். அதுவும் அவர்கள் மீது கொண்ட கருணையினால் தான் அடிபட்டான்! நீங்கள் பேடியின் கையால் அல்லவோ அடிபட்டீர்! மறந்து போயிற்றோ?” எனக் கேட்கிறாள். (பேடு; பேடி – அர்ச்சுனன்). இங்கு மகாபாரத நிகழ்ச்சி ஒன்றைக் காவியத்தலைவி மொழியாகப் புலவர் கூறுகிறார்.
பாண்டவர்களின் அஞ்ஞாத வாசத்தின் போது அர்ச்சுனன் பிருஹன்னளை எனும் பெயர் கொண்ட பேடியாக (திருநங்கையாக) இருந்தான்; அவன் பாசுபதாஸ்திரம் பெற வேண்டித் தவமிருந்த போது சிவபிரான் கிராதனாக (வேடனாக) வேடம் தரித்து வந்து அர்ச்சுனனுடன் போர் செய்தான் (கிரதார்ஜுனீயம்). அப்போது அர்ச்சுனன் கை வில்லால் சிவபெருமான் அடியும்பட்டான். இதைத்தான் ‘நீரும்தான் பேடி கையால் அடிபட்டீர்,’ என ஏளனமாகக் கூறுகிறாள்.


வாய்ச்சதிரி கூடமலைக் கிறையவரே
சொன்னமொழி மறக்க வேண்டா
ஏச்சுவந்து சுமந்ததெங்க ளண்ணற்கோ
வுமக்கோவென் றெண்ணிப் பாரீர்
காய்ச்சியபால் கண்ணனுண்டான் வேடனெச்சில்
நீர்கலந்தீர் கருணை யாமா
லாய்ச்சியர்கை யாலடிபட்ட டானையநீர்
பேடிகையா லடிபட் டீரே. (13)

இப்போது இந்த சொற்போர் மிக்க சுவையடையதாகிறது. நமக்கே தொடர்ந்துகேட்டு முடிவை அறிய ஆவலும் உண்டாகிறது அல்லவா? இறைவனும் இறைவியுமாகிய தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்வதாகக் கற்பனை செய்து, சிவன், திருமால் ஆகியோரின் திருவிளையாடல்களை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் திரிகூடராசப்பக் கவிராயர்.
குற்றாலநாதன் குழல்மொழியாளிடம் கூறுகிறான்: “இப்படி அடிபடுவது, ஆய்ச்சியர்கள் கறந்து வைத்த பாலைத் திருடிக் குடிப்பது என இருந்தவனும் ஒருநாள் அரசனாக ஆசைப்பட்டான்! முடித்தலையில் ஒரு மணிமுடியுமின்றி அரசாண்டான்! (தலையில் ஒரு முடியுமின்றிப் புரந்தான் எனவும் கொள்ளலாம். அதாவது மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டுத் தானம் பெற்றபோது பிரம்மசாரியாக, மொட்டைத் தலையனாக பூமியை இரந்து தானமாகப் பெற்றானே ஒழிய ஒரு அரசனாகவா பெற்றான்?) அவன் வளர்ந்ததெல்லாம் பால் கலயங்களுடனும் பசுக்கூட்டங்களுடனும் தானே!

இவன் இடையர் குலத்தில் பிறந்தவனோ, எது (யாதவ குலம் அல்லது எந்தக் குலம் என இருவிதமாகப் பொருள் கொள்ளலாம்) குலத்தில் பிறந்தவனோ? ஆனால் அரசகுலத்தில் பிறக்கவில்லை! எந்தக் குலத்தவன் என்று யாரறிவார்?” (ஆசை இருக்கு தாசில் பண்ண; அதிர்ஷ்டமிருக்கு கழுதை மேய்க்க என்பது போல, ஆசை இருக்கு அரசனாக; ஆனால் அதிர்ஷ்டமிருக்கு ஆநிரை மேய்க்க!)


யாதவ வம்ச திலகன், யதுகுல திலகன் எனத் திருமாலை வருணிப்பர். இங்கு இவன் செய்கைகள் முன்பின்னாக, ஏறுமாறாக இருப்பதால் இவன் எந்தக்குலத்தவனோ என சந்தேகப்படுவது போல இப்படிக் கேட்கிறான் குற்றாலநாதன்.

அடிப்பதுவு மாய்ச்சியர்பால் குடிப்பதுவு
மிசைந்தானு மரச னாக
முடித்தலையில் முடியுமின்றிப் படிபுரந்தா
னுமுனது முன்வந் தானும்
படிக்கலமும் பசுநிரையும் பயின்றானுங்
குழல்மொழிப்பூம் பாவை கேளாய்
இடைக்குலத்திற் பிறந்தானோ எதுகுலத்திற்
பிறந்தானோ இவன் கண்டாயே. (14)

மிகுந்த சினம் இப்போது பெருகுகிறது குழல்வாய்மொழியாளிடம்! “நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வேறு கன்னியருக்காக என்னைப் பிரிந்து சென்றவர்தானே நீங்கள்? இல்லை, அவர்களுடன் கூடி மகிழ்ந்து குலாவியதால் வந்த பெருமிதமா? அதனால்தான் எங்கள் அண்ணனின் குலத்தைப் பற்றிக் குற்றம் சொல்ல வந்து விட்டீர்கள் போலும். முற்காலத்தில் இருந்த உமது பழமையான குலத்தைப் பற்றி நான் கூறலாகுமோ ஐயா? பரமரே! நீர் என் அண்ணனின் யாதவ குலத்தைச் சேர்ந்த என்னை மனையாளாகக் கொண்ட பிற்பாடும் இவ்வாறு அந்தக் குலத்தைப் பற்றிப் பழித்துப் பேசலாமா? அந்தப் பழி உமது மனையாளான எனக்கும் ஆகாதோ? குற்றாலக் கூத்தனாரே!” என்கிறாள்.


குற்றால நடனசபை சிவபிரானின் ஐந்து நடனசபைகளில் ஒன்றான சித்திரசபையாகும். ஆகவேதான் அவரைக் கூத்தனாரே என அழைக்கிறாள்! மேலும், சிவபிரான் ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் பழம்பொருள். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருள் சிவபிரான். அதைத்தான் மறைமுகமாக, “உமது பழமையான குலத்தைப் பற்றி என்னால் கூற இயலுமா என்ன?” என்கிறாள். எவ்வளவு அழகான தூற்றுமறைத் துதியாக (நிந்தா ஸ்துதியாக) இப்பாடல்கள் அமைந்துள்ளன. படிப்போர் உள்ளம் சிலிர்க்கின்றது.

கண்டிருந்தும் கன்னியர்க்கா வெனைப்பிரிந்த
மதந்தானோ கலவித் தேற
லுண்டிருந்த மதந்தானோ எங்களண்ணன்
குலத்தில்மறு வுரைத்தீ ரையா
பண்டிருந்த வுமதுகுலம் நான்சொன்னாற்
பழுதாமோ பரம ரேநீர்
கொண்டிருந்தும் குலம்பேசல் ஞாயமோ
குற்றாலக் கூத்த னாரே. (15)

குழல்மொழியாள் குழைந்து கூறியதும் பரமனான குற்றாலநாதன் உள்ளம் அவளிடம் உருகிக் குழைகிறது.

“குற்றாலத் திரிகூட மலையின் சிகரத்தில் என்னுடன் வாழும் பசுமையான கிளி போன்றவளே! முனிவர்கள் நடனமாடிய எனது பாதங்களைக் கண்டு தரிசனம் செய்ய ஏங்கிக் காத்திருந்தனர். அவர்களுடன் கூடவே இந்திரன் முதலான தேவர்களும் இருந்தனர். இவர்களுக்குக் கொலுவிருந்து காட்சி கொடுத்து மகிழ்விப்பதற்காகத்தான் நீயறியாமல் உன்னைப் பிரிந்து சென்றோம் யாம். நீ என்னவென்றால் அதற்காக ஊடல் கொண்டு இப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாம் எனக்கு எதிராக உரைக்கிறாய். நான் என்ன செய்வேன்?” என்று தழைந்து வந்து குழைந்து கேட்கிறான்!

கூத்திருந்த பதம்பெறவே கொதித்திருந்த
முனிவர்கட் கொலுச்சே விக்கக்
காத்திருந்த தேவர்களுங் காட்சிபெற
வேண்டியுனைக் கரந்து போனோம்
பூத்திருந்த திரிகூடப் பொருப்பிருந்த
பசுங்கிளியே புலவிக் காக
வேத்திருந்த வார்த்தையெல்லா மெதிர்த்திருந்து
நீயுரைத்தா லென்செய் வோமே. (16)


இதனைக் கேட்டபின் குழல்வாய் மொழியாளின் மனமும் பாகாய்க் கரைந்து பனியாய் உருகி விடுகிறது. “என் மீதும் பக்தி இல்லாத தேவர்களும் உண்டோ கூறுவீர்! (இதற்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம்; உம்மைக் காணக் காத்திருந்த தேவர்கள் அனைவருக்கும் உமது சரிபாதியாகிய என்மீதும் பக்தி இல்லாமல் போகுமோ? ஆகவே நீங்கள் என்னையும் உங்களுடன் அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என ஒரு பொருள்; மற்றது தேவரீர் என்மீது அன்பு வைத்திருந்தீர் ஆயின் என்னையும் முதலிலேயே நீங்களே உங்களுடன் அழைத்துச் சென்றிருக்கலாமே என்பது). என்னைப் பிரிந்து தனியாக வீதியில் போவது நீதியாகுமா தென்திசைத் திரிகூட மலையில் உறைபவரே! என் மேலும்தான் தவறுண்டு. அது என்ன தெரியுமா? உம் மீது முன்பே நான் காதல் கொண்டது ஒரு குற்றமாகும். (அதனால்தான் இவ்வாறு கடும்சொற்களைப் பேசி விட்டேன்). உங்களது சொற்களுக்கு எல்லாம் எதிர்ச்சொற்கள் கூறிவிட்டேன் என்பதால் என்மேலும் குற்றம் உண்டுதான். கூறியதனைத்தும் நான்தானே! இதனால் என் தமையன் மேல் குற்றம் இல்லையே? (இல்லை என்பதாகும்). உம் முன்பு பணிந்து வணங்கி நிற்கிறேன்,” என்கிறாள்.


என்மேலும் பத்தியில்லாத் தேவருண்டோ
எனைப்பிரிந்து வீதி போகத்
தென்மேவு திரிகூடச் செல்வரே
நீதியுண்டோ தேவரீர் மேல்
முன்மேவுங் குற்றமுண்டு திருவாக்குக்
கெதிர்வாக்கு மொழிந்த தாலே
தன்மேலும் குற்றமுண்டு தமையனார்
மேலுமுண்டோ தாழ்த்தி தானே. (17)

இவ்வுரைகளைக்கேட்ட குற்றாலநாதனின் மனம் முழுதும் குழல்வாய்மொழியாளிடம் அன்பால் கனிந்து உருகிவிடுகின்றது. அவன் கூறுகிறான்: “குழல்மொழியே; பூவின் சாயலைக் கொண்ட மாதே!” எனக் கனிவாக அவளை அழைக்கிறான்; “அண்ணனென்றும் தங்கை என்றும் நான் உங்கள் இருவரையும் பிரித்து வேறுபடுத்திப் பார்த்ததில்லையே, உமையவளே! உனக்கு மிக்க அருமையான உன் அருமைத் தமையன் எனக்கும் அருமையானவன் ஆகின்றான் அல்லவோ? நீ என்னைப் பற்றிக் குறைகள் கூறினாய்; ஆகவே நானும் அவனைப் பற்றி நையாண்டியாக (கேலிப் பேச்சாக) சில வார்த்தைகள் சொன்னேன். வானவர்கள் என் பதம் காண வேண்டி வந்ததால் நானும் செல்லும்படி நேர்ந்தது; அதனால் தானே இத்தனை வாக்குவாதங்கள் நிகழ்ந்து விட்டன். இதைப் பொறுத்துக்கொள் அம்மா, இமயமலையில் வாழும் பெண்மணியே!” என மிகவும் வினயமாக வேண்டிக் கொள்கிறான் குற்றாலநாதன்.


தமையனென்று தங்கையென்று வேற்றுமையென்
குழன்மொழிப்பூஞ் சாயல் மாதே
உமையவளே தமையனுனக் கருமையென்றா
னமக்குமவ னருமை யாமே
நமையுமோரிங் குறையுரைத்தாய் நாமவனைச்
சரசமாக நவின்றோம் கண்டாய்
இமையவர்கள் வேண்டுதற்கா இத்தனையும்
பொறுத்தருள்வாய் இமய மாதே. (18)

இப்போது குழல்வாய் மொழியாள் மிகவும் நாணம் கொள்கிறாள். ‘அவசரப்பட்டு என்னென்ன பேச்சுக்களெல்லாம் பேசி விட்டோம் நாம்,’ எனக் காதல் கணவனிடம் மன்னிப்பும் கேட்கிறாள்.
“ஒப்பற்ற தேவரான நீங்கள் ஆடியது திருக்கூத்தாயிற்று. (குற்றாலநாதன் சித்திரசபைக் கூத்தன் என்பது பொருள்; இவ்வாறு என்னை ஊடல்கொள்ள வைத்து வேடிக்கை பார்த்தது நீர் ஆடிய திருக்கூத்து (விளையாட்டும்) ஆயிற்று எனவும் இன்னொரு பொருள்). வலிமை மிக்கவர்களான கொடிய அரக்கர்கள் தவறு செய்தால் நீங்கள் அதனைப் பொறுத்து மன்னிக்க மாட்டீர்கள்! ஆனால் கரிய ஆலகால நஞ்சினை விழுங்கி சீரணம் செய்து விடுவீரே நீர்,” (சிவபிரான் ஆலகால விடத்தை உண்டதை “உண்டு சீரணித்தும் விட்டீர்” எனப் பெருமையாகக் கூறுகிறாள் குழல்வாய்மொழியாள்).

பிறகு அவனிடம் வேண்டுகிறாள்: “நீங்கள் எனக்குக் கொடுக்கும் படி (Allowance-படி- செலவினை ஈடுசெய்யத் தரும் பணம்- பஞ்சப்படி, அகவிலைப் படி என்பது போல) போதாது. (இருநாழிப் படி நெல்லைக் கொடுத்து முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றக் கூறிவிட்டீர்கள்) எனக்கு அது போதவே போதாது பெருமானே! மேலும் நிறையப் பொன்னும் பூணும் அணிகளும் கிடைக்கும் உபாயத்தைக் கூறினால் உம் மனையாளான எனக்கும் பெருமையாக இருக்குமே,” என்கிறாள்.
“நீர் உலகுக்கே ஈசுவரர்; ஐசுவரியம் உடையவன் ஈசுவரன். உம்முடைய ஐசுவரியத்தை எங்கே மறைத்து வைத்திருக்கிறீர் எனும் வஞ்சகத்தை என்னிடம் சொன்னால் அது உமது பெருமையைச் சொன்னதாகாது அல்லவோ?” எனவும் கேட்கிறாள்.

மாதேவர் நீரொருவ ராடினது
கூத்தாச்சு வலியோர் செய்தால்
தீதேதுஞ் செமியாதீர் குற்றால
நஞ்சையுண்டு செமிப்பீ ரையா
போதாது நீரளக்கு மிருநாழிப்
படியெனக்குப் பொன்னும் பூணுஞ்
சூதான வகைமுழுதுஞ் சொன்னாலென்
னாற்பெருமை சொல்ல லாமோ. (19)


கடைசியாக எல்லா ஊடல்களும் வந்து முடிவது இந்த இடத்தில்தான்! (ஊடலைத் தணிக்க ஏதோ ஒரு பரிசு – அது புடவையோ, நகையோ, என ஏதோ ஒன்று) என எண்ணினாரோ என்னவோ புலவர். அண்ணல் குற்றாலநாதன் கூற்றாகக் கூறுகிறார்: “சொர்ணமலை உனக்குச் சொந்தமாயிற்று (சிவபிரான் திரிபுரம் எரித்த போது பொன்மலை அம்மையின் கையில் வில்லாகத் தங்கியது. அதனால் அவளுக்கே சொந்தமானது). வெள்ளிமலையும் (இமயமலையும்) ஏற்கெனவே உனக்கே சொந்தமாயிற்று; இனி வேறு என்ன பொருள் வேண்டும்? பெண்களுடைய பேதைமைக் குணம் (அறிவற்ற செயல்) இது மாதிரி உண்டோ? (எப்போதுமே இவ்வாறுதான் என எதிர்மறையாக உணர்த்தினார்) எண்ணுவதற்கு அரிய பயிர்கள் விளையும் நிலங்களையும், நல்ல நகரங்களையும் நவநிதியையும் உனக்கே சொந்தம் என்று நான் அளிக்கிறேன், கொஞ்சு மொழி பேசும் குழல்வாய்மொழியாளே! உனக்கே தந்தேன்; இதற்கான பட்டயத்தையும் தந்தேன் பார்!” என்று அளித்தருளுகிறான் குற்றாலத்து ஐயன்.


சொன்னமலை தனதாச்சுப் பொன்னுலகு
வெள்ளிமலை சொந்த மாயிச்
சின்னமொரு பொருளுமுண்டோ பெண்கட்பே
தமைக்குணந்தா னிதுபோ லுண்டோ
உன்னரிய விளைநிலமு நன்னகர
நவநிதியு முனக்கே யென்று
பன்னிகுழல் வாய்மொழியே பாலித்தோம்
பட்டயமும் பாலித் தோமே. (20)

தலைவன் தணிவித்தால் ஊடல் எளிதில் தீர்ந்து விடும் பண்பு தலைவியினுடையது! அம்மை குழல்வாய் மொழியாள் இப்பண்பைப் பெற்றவள். ஊடுவதற்கு ஒரு காரணமும் உண்மையில் இல்லையாயினும் தலைவி பொய்யான ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு ஊடுதல், பின் ஊடல் தீர்தல் ஆகியன பெண்மைக்குரிய பேதைமைக் குணம் என்கிறார்.
எப்படியானால் என்ன? நமக்கு ஒரு அழகான சொல்நயம், பொருள்நயம் செறிந்த சிறு இலக்கிய நூல் படித்துச் சுவைக்கக் கிட்டியதல்லவா?

இத்தகைய ஊடல் இலக்கியங்களில் தற்போது கிடைத்திருப்பது இது ஒன்றே. ஆயினும் ஒரு சுவையான செய்தி, காலஞ்சென்ற கோவை நகரத்துப் பேராசிரியர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்கள் மூலம் நமக்கு அறியக் கிடைக்கிறது. ‘திருப்பேரூர் பச்சைநாயகி ஊடல்’ எனும் நூல் பற்றிக் கூறுகிறார்: பச்சைநாயகி பட்டீசுவரரிடம் ஊடல் கொள்கிறாள் எனக் கொண்டு ஒரு புலவர் சுவைபட இந்நூலை எழுதியுள்ளாராம்! ஊடலுக்கு என்ன காரணம்? அது திருப்பேரூர் கோவில் வரலாற்றுடன் தொடர்பு உடையது என்கிறார் பேராசிரியர்.
கொங்குநாடு பண்டைக்காலத்தில் காடுகள் நிறைந்ததாக இருந்ததாம். கரிகால்சோழன் உறையூர் முதல் மேற்குத் தொடர்ச்சி மலையில் முட்டம் என்னும் தலம் வரைக்கும் நொய்யலாற்றங்கரையின் அருகே சிறிதும் பெரிதுமாகச் சிவன் கோவில்களை எடுப்பித்தான். திருப்பேரூரில் கோவில் எடுக்க முனைந்தபோது அங்கு இருந்த அதிமூர்க்கம்மன் என்ற வனதேவதை தடுத்ததாம். அதனை அமைதிப்படுத்த, பட்டீசுவரருக்கு விழா எடுக்குமுன் அதிமூர்க்கம்மனுக்கு சாந்தி செய்வது என்ற உடன்பாடு எழுந்ததாம்.

பேரூர்ப் புராண ஆசிரியர் அதிமூர்க்கம்மனை திருவாலங்காட்டுக் காளியுடன் ஒன்றுபடுத்தி, பட்டிப்பெருமான் ஆலங்காட்டுக் காளிக்குத் தன் திருநடனத்தைக் காட்டியதாகப் பாடினார். ஊடல் நூல் ஆசிரியரின் கற்பனைக்கு இது கரு அளித்தது. பச்சைநாயகியார் தமக்கே உரிமையுடைய நடனத்தினைச் சிவனார் காளிக்கும் காட்டியதால் சிவனாரிடம் ஊடல் கொள்கிறார். இது பிரம்மோற்சவத்தில் ஊடல் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. மணிவாசகப் பெருமான் ஊடல் தணிவிக்கும் தூதராகத் தொழிலாற்றுகின்றார். இந்த விழாவில் இந்த ஊடல் வாசிக்கப் படுகின்றதாம்!

(நான் மிகவும் முயன்று தேடியும் இன்றுவரை இந்நூல் கிட்டவில்லை. எவருக்காவது கிடைத்தால் எனக்கும் ஒரு பிரதி தருமாறு வேண்டிக்கொள்கிறேன்).

இதுபோன்ற ஊடல் திருவிழா பல கோவில்களிலும் நடைபெறுகின்றது என அறிகிறோம். எனது உறவினர் ஒருவர் கூறியதாவது: திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் பிரம்மோற்சவத்தில் ஒருநாள் ஊடல்விழா கொண்டாடப்படுகிறது! அம்மை அறம் வளர்த்த நாயகி ஊடல் கொண்டு தனது சன்னிதிக்குள் சென்று கதவை மூடிக் கொண்டு விடுவாளாம். எதனால் ஊடல் ஏற்பட்டது என்றோ பின்பு எவ்வாறு ஊடல் தணிகிறது எனவோ அறிய இயலவில்லை. ஊடல் இலக்கியமாக ஏதேனும் நூல்கள் உண்டா என வினவியபோதும் ஒருவருக்கும் தெரியவில்லை! இத்தகைய சுவையான இலக்கியங்களும் தொன்மையான வழக்கங்களும் மறைந்து வருகின்றன என்பது மிகவும் வருந்தத் தக்கது.

முத்தம்மாள் பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டுள்ள நாட்டுப்புறப்பாடல்கள் பற்றிய ஒரு நூல் சொக்கர் – மீனாட்சி கதை இவ்வாறு ஊடல் பாடல்களாகப் பரிணமித்துள்ளதைக் காட்டுகிறது. மதுரைத் திருக்கோவிலிலும் இந்த ஊடல் திருவிழா நடக்கிறதா என அறிய இயலவில்லை. ஊடல் நூல் உண்டு என அறிகிறோம்.

இந்த நாட்டுப்புறப் பாடல், சொக்கர் விளைநிலத்தை உழுததையும், மீனா எனும் மீனாட்சி விதை தூவி, முதல் நாற்று நட்டதையும் பாடுகின்றது. சொக்கருக்கு விளைச்சல் அமோகமாய் விளைந்து கோபுரமாய்ப் போர் ஏறியதாம்.

‘சம்பாக் கதிரடித்து சொக்கர் சலித்து நிற்கும் வேளையிலே, மீனா பன்னீரால் உலை வைத்து, அடுப்பெல்லாம் நெய்வடியச் சோறாக்கிக் குடலையிலே குயில் போல சொக்கருக்குச் சோறு கொண்டு போனாளாம்.’

‘நேரமாச்சு என்று சொல்லி- சொக்கர்
நெல்லால் அடித்தாராம்
கல்லுக் கிடக்குதுன்னு- சொக்கர்
கடுங்கோபம் கொண்டாராம்.’
‘மயங்கி விழுந்தாளாம்- மீனா
மல்லிகைப்பூ மெத்தையிலே.’
எனப் போகின்றது பாடல்.

கணவன் கையால் அடிவாங்கிய மீனாவின் அழுத குரல் கேட்டு அவள் அண்ணன் வந்தாராம். ஆறுதல் பல சொல்லி சீமையிலே உள்ளதெல்லாம் வரிசை கொடுத்தாராம். அத்தனையும் போதாதென்று அழுத மீனாவுக்கு,


‘தள்ளாக்குளம் விட்டார் சொக்கர் மீனாவுக்கு
தனிக்குளமும் பாதி விட்டார்.
மானா மதுரை விட்டார் சொக்கர் மீனாவுக்கு
மதுரையில் பாதி விட்டார்
மங்கையை வசியம் பண்ண சொக்கர்- மீனாவுக்கு
மனசையே அள்ளித் தந்தார்,
‘ என அருமையாக முடிகின்றது இந்த நாட்டுப்புறப்பாடல்.

கணவனின் அன்பல்லது வேறு என்ன வேண்டும் ஊடல் கொண்ட ஒரு பெண்ணுக்கு?
இதிலிருந்து கடவுளர்களையும் ஊடல் கொள்ள வைத்துப் பார்த்துக் களிப்பது ஒரு வழக்கம் எனத்தான் தோன்றுகிறது. எவ்வாறாயினும் ஒரு அழகான சிற்றிலக்கியமோ, நாட்டுப்புற இலக்கியமோ மலர இவை காரணங்களாயின அல்லவா?
*
சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஹிந்து’ ஆங்கில நாளிதழில் இது சம்பந்தமான ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. ஸ்ரீரங்கம் ரங்கநாதரும், ரங்கநாயகியும் ஊடல் கொண்டு பலத்த வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். உறையூர் கமலவல்லி நாச்சியாரைக் காணச்சென்று அவளுக்கு ஒரு மோதிரத்தையும் பரிசாக அளித்துவிட்டு வந்ததால் ரங்கநாதரிடம் பேச மறுத்து அவருக்குத் தன் சன்னிதியில் புக அனுமதியும் மறுத்த ரங்கநாயகித்தாயார் ஒரு கட்டத்தில் உள்ளே சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டு விடுகிறாள். இந்த நிகழ்ச்சி பங்குனி உத்திரத்தன்று தாயார் சன்னிதியில் அரையர்களால் நிகழ்த்தப்படுகின்றது.

இந்த வாக்குவாதங்கள் ஐந்து சுற்றுக்களாக ஒரு மணி நேரம் ஒரு ஆயிரம் பார்வையாளர்கள் மத்தியில் அரையர்கள் மூலம் தொடர்கின்றது. கடைசியில் நம்மாழ்வார் தலையிட்டுத் தாயாரிடம், ரங்கநாதரை இழிவுபடுத்தும் இந்த வாக்குவாதம் தொடர வேண்டாம் என வேண்டிக்கொள்ள, தாயாரும் பெரியவரான அவர் சொல்லைக் கேட்டு ஊடலை விட்டொழிக்கிறாள்!
இவை அரையர்கள் மூலம் நிகழும் வாய்ச்சொற்களால் அமைந்த உரையாடல்கள். பாடல்கள் அல்லது செய்யுட்களால் அமைந்த திருக்குற்றால ஊடல் போன்ற நூல்கள் உள்ளனவா என அறிய இயலவில்லை. எதுவாயினும், ஊடல் என்பதும், தம்பதியரிடையே நிகழும் சிறு பிணக்குகள் முதலானவையும் இல்வாழ்விற்குச் சுவை கூட்டுவன; எனினும் அளவு மீறிச் செல்லாமல் குடும்பத்துப் பெரியோர்களை மதித்து அவர்களின் அறிவுரைகளைச் செவிமடுத்து அதன்படி ஒழுக வேண்டியது இளையோர்களின் கடமை என உலகத்தோர்க்கு உணர்த்தவே இந்த நிகழ்ச்சி நடத்தப் பெறுவதாகக் கூறப்படுகின்றது.

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல். (திருக்குறள்)
(ஊடல் என்பது உணவிலிடும் உப்பு போல ஒரு அளவோடு இருக்க வேண்டும். அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாகும்).

(நிறைந்தது)

3 Replies to “தெய்வங்களும் ஊடலும்”

  1. திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கும் – உண்ணாமலையம்மைக்கும் நடந்த ஊடலை ஒவ்வொரு ஆண்டும் இங்கு திருவிழாவாகவே கொண்டாடி வருகிறார்கள். திருவண்ணாமலையின் முக்கிய தெரு ஒன்றிற்கு, திருவூடல் தெரு என்றே பெயர் உள்ளது. (இந்த வீதியில் தான் திருவூடல் விழா நடைபெறும்)

  2. ஓ! அருமையான செய்தி. மிக்க நன்றி. இதற்காகத் தனியாக ஊடல் இலக்கியங்கள் உள்ளனவா? அறிந்து கொள்ள ஆசை.

  3. .ஆடல் இனிது பாடல் இனிது என்பர்…தெய்வ
    ஊடல் சுவை அறியாதவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *