இஸ்ரேலின் பொகஸஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆர்பாட்டத்தின் போது உணர்சி மயமாக பேசியுள்ளார். ஒரு உண்மையை ஊடகங்கள் கூட மறைத்து விட்டு தங்களின் விருப்பம் போல் எழுதுவதும், விவாதிப்பதுமாக இருக்கிறார்கள். இந்தியாவில் போன் ஒட்டு கேட்பு செயல்பாட்டை துவக்கி வைத்ததே காங்கிரஸ் கட்சி தான் என்பதை மறந்து விட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கூச்சல் போடுகிறார்கள். ஒரு ஆட்சியை கலைப்பதற்கு உளவு பார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்தே கலைத்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர்.
28.2.1991 வெளி வந்த இன்டியா டூ டே பத்திரிக்கையில் பிரபல எழுத்தாளர் பிரபு சாவ்லா எழுதிய கட்டுரை வெளியானது. இந்த கட்டுரையின் தலைப்பே காங்கிரஸ் ஆட்சியில் தொலைப்பேசி ஒட்டு கேட்பு பற்றிய சி.பி.ஐ.யின் ரகசிய அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் ( Secret report by CBI contains shocking details of phone tapping ordered by Congress (I) govts )என்பதாகும். மேற்படி கட்டுரையில் 27 அரசியல்வாதிகளின் தொலைபேசியும் ஒட்டுக் கேட்டதாக பதிய விட்டுள்ளார். 1984 முதல் 1987 வரை மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சி, சி.பி.ஐ.யின் உதவியுடன் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் , பல மாநில முதல்வர்கள் , மதத் தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்களின் தொலை பேசிகள் ஒட்டுக் கேட்டக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டிருந்தார்.
ஆரீப் முகமது கான், கே.சி. பந்த், போன்றவர்களும், மாநில முதல்வர்களான கருணாநிதி, சிமன்பாய் பட்டேல், ஏ.ஆர். அந்துலே உள்ளிட்டவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டன. 1988-ல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தி ஆறு மாதங்கள் வரை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களின் தொலைப்பேசியும், கட்சியின் தலைமை அலுவலக தொலைப் பேசியும் ஒட்டுக் கேட்கப்பட்டன. இன்று உள்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அலறும் காங்கிரஸ் கட்சியினர் செய்த வேலையை சற்றே பின்னோக்கி பார்க்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மூத்த தலைவராக இருந்த ஏ.ஆர். அந்துலேவின் தொலைபேசி எண் 292050 ஐ 31.3.1984 முதல் 30.9.1988 வரை ஒட்டுக் கேட்கப்பட்டதும், உரையாடல்களை பதிவும் செய்திருக்கிறார்கள். இவரது 296169, 319330 ஆகிய இரண்டு தொலைப்பேசியும் ஒட்டுக் கேட்டு, பதிவு செய்யப்பட்டது. இவரை போலவே தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதியின் 76080 தொலைபேசி, 14.3.85 முதல் 6.1.87 வரையிலும், 475225 எண் கொண்ட தொலைபேசி 22.2.85 முதல் 31.12.85 வரையிலும், மீன்டும் 1.1.88 முதல் 18.5.88 வரையிலும் ஒட்டுக்கேட்டு பதிவு செய்யப்பட்டது. கருணாநிதியை போலவே ஜெயலலிதாவின் 452121 எண் கொண்ட தொலைபேசி 12.11.84 முதல் 7.11.86 வரையிலும், 7.11.87 முதல் 31.12.87 வரையிலும் , மீன்டும் 1.1.88 முதல் 11.2.88 வரையிலும் ஒட்டுக் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இதை போலவே ஜெயலலிதாவின் மற்றொரு எண் 454479 எண்ணும் ஒட்டுக்கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இதை பற்றி தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வாய் திறந்து பதில் கொடுப்பார்களா ?
மேற்படி இன்டியா டு டே பத்திரிக்கையில், வாழப்பாடி கே.ராமமூர்த்தியின் 843536 தொலைப்பேசியும், மு.க.ஸ்டாலின் தொலைப்பேசி 473264-ம், முரசொலி மாறன் , ஆற்காடு வீராசாமி, கே.ஹெச். பட்டேல், எஸ்.பங்காரப்பா, தேவராஜ் அர்ஸ், போன்றவர்களின் தொலைப்பேசியும் ஒட்டுக்கேட்கப்பட்டது. சென்னை மற்றும் பெங்களுர் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம், தி,மு.க. அலுவலகம், அகமதாபாத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் ஒட்டுக் கேட்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் தமிழக தலைமை செயலகத்தின் தொலைபேசியும் 7 மாதங்களாக ஒட்டுக் கேட்கபட்டது. இந்த ஒட்டுக்கேட்பு 1985 முதல் 1987 வரை விட்டு விட்டு ஒட்டுக் கேட்கப்பட்டது.
டெல்லியைச் சார்ந்த Prosenjit Mondal என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் படி கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில், 2008 லிருந்து 2013 வரை மத்தியில் ஆண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மாதம் ஒன்றுக்கு 9,000 தொலைப்பேசிகளும், 500 இ-மெயில்களும் இடைமறித்து கேட்கப்பட்டது, சில சமயங்களில் ஒட்டுக்கேட்பும் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது முழுக்க முழக்க மன்மோகன் சிங் ஆட்சியில் நடைபெற்றது. 2011-ல் மன்மோகன் சிங் ஆட்சியில் பிரணாப் முகர்ஜி தனது அலுவலக தொலைப்பேசியும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக பிரதமரிடம் புகார் அளித்தார். இதற்கு அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த பதில், பிரணாப் முகர்ஜியின் அலுவலக தொலைப்பேசி ஒட்டுக்கேட்கப்படவில்லை, ஐ.பி.யின் விசாரனையில் தனியார் நிறுவனம் ஒட்டுக் கேட்டிருக்கலாம் என்று கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
2013 ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் “எதிர்க்கட்சியை உளவு பார்த்ததாக” குற்றம் சாட்டிய பாஜக, காங்கிரஸ் அரசு மன்னிப்பு கோர வேண்டும். இது ஒரு தீவிரமான விஷயம் என்று கூறி, இந்த அங்கீகரிக்கப்படாத கண்காணிப்புக்கு யார் உத்தரவிட்டார் என்பது குறித்து அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சுஷில்குமார் ஷிண்டேவிடம் பாஜக பதில் கோரியது. ஆனால் மாநிலங்களவையில் ஒரு அறிக்கையை வெளியிட்ட ஷிண்டே, பாஜக தலைவர் அருண் ஜெட்லியின் தொலைபேசியைத் ஒட்டுக்கேட்டகவில்லை. அவரது தொலைபேசியின் அழைப்பு விவரங்கள் மட்டுமே அணுகப்பட்டதாகக் கூறினார். டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் அரவிந்த் தபாஸ் ஏ.சி.பி நடவடிக்கைகளின் மின்னஞ்சல் ஐடியை சட்டவிரோதமாக அணுகி தொலைதொடர்பு ஆபரேட்டர்களுக்கு கோரிக்கைகளை அனுப்ப தவறாக பயன்படுத்தினார், பல தலைவர்கள் உட்பட பல நபர்களின் அழைப்பு விவரங்களை கோரியுள்ளார். செப்டம்பர் 2012 இல் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா, பி.சிதம்பரம் தனது தொலைபேசியைத் ஒட்டுக்கேட்குமாறு உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டினார். ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தின் பிரச்சினையை அவர் எழுப்பியதால் சிதம்பரம் அவரைத் தூண்டிவிட்டார் என்று சிங் கூறினார். சிதம்பரம் ஏர்செல்-மேக்சிஸ் ஊழலில் ஈடுபட்டதாக சின்ஹா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்திரா காந்தி ஐ.பி. துறையினருக்கு உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங்கின் தொலைப் பேசியை ஒட்டுக்கேட்டு உரையாடலை பதிவு செய்யுமாறு உத்திரவிட்டார் என முன்னாள் ஐ.பி.யின் இணை இயக்குநரும், மறைந்த திரு மலோய் கிருஷ்ணா தார் என்பவர் தான் எழுதிய ” ஓபன் சீக்ரெட்ஸ் – இந்திய இன்டலிஜென்ஸ் ” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதே புத்தகத்தில், கியானி ஜெயில் சிங் காலிஸ்தான் தீவிரவாதி பிந்தரண்வாலாவுடன் நடத்திய பேச்சு ஒட்டுக்கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. மேற்படி பதிவை இந்திரா காந்தியிடம் ஒப்படைக்கப் பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை போலவே, இந்திரா காந்தியின் உத்திரவின் படி, அவரது மருமகள் மேனகா காந்தியின் தொலைப்பேசி ஒட்டுக் கேட்கப்பட்டது. திருமதி மேனகா காந்தியின் உறவினர்கள் மற்றும் நன்பர்களுடன் பேசிய உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு இந்திராவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திரா காந்தியின் அடிச்சுவட்டில், ராஜீவ் காந்தியும் ஐ.பிக்கு குடியரசு தலைவர் கியானி ஜெயில் சிங்கின் பேச்சு ஒட்டுக் கேட்க உத்திரவிடப்பட்டது. இது பற்றி கியானி ஜெயில் சிங் குறிப்பிடுகையில், feared many rooms in Rastrapathy bhavan were bugged என குறிப்பிட்டார்.
மற்ற மாநிலங்களை காட்டிலும் கர்நாடகாவில் போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் ஆட்சி கவிழ்ந்த வரலாறும் உண்டு. 1988-ல் ராமகிருஷ்ண ஹெக்டே அரசு கவிழ்ந்து. 2008 பிப்ரவரி மாதம் ம.தி.மு.க.வில் இருந்த ராதாகிருஷ்ணன் தனது தொலைபேசி ஒட்டுக் கேட்பதாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கும், தமிழக தலைமை செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.. மகாராஷ்ட்ர மாநில அரசானது முஸ்லீம் லீக் உறுப்பினர் ஜி.எம். பனத்துவாலா வின் தொலைப்பேசியை 1989 மார்ச் முதல் 1990 ஏப்ரல் வரை ஒட்டுக்கேட்கவும் பதிவு செய்யவும் உத்திரவிட்டது. இது போல் 1975 ஜீன் மாதம் கொண்டு வரப்பட்ட அவசர நிலை பிரகடனப்படுத்திய பின்னர் போன் ஒட்டுக் கேட்பு என்பது அன்றாட நிகழ்வு போல் நடந்தன. அந்நிலையில் தமிழகத்தில் காமாரஜரின் போனும் ஒட்டுக் கேட்கப்பட்டது.
1975-ல் இந்திரா காந்தி அவசர நிலை கொண்டு வருவதற்கு முன் , அலகாபாத் நீதி மன்றம் தான் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்தவுடன், அடுத்த பிரதமர் யார் வர வேண்டும் என்ற ஆலோசனையின் போது என்ன நடந்தது என்பதை பற்றி 15.6.2021 ந்தேதி Open இதழில் Ravi Visvesvaraya Sharada Prasad என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் “ Yashwantrao Balwantrao Chavan too lobbied to be made prime minister. Indira Gandhi was wary of YB Chavan, because, as home minister, he had tapped her telephones. Moreover, Lal Bahadur Shastri had spoken of YB Chavan as his successor. என குறிப்பிட்டுள்ளார். ஆகவே தொலைப்பேசியை ஒட்டுக் கேட்பதும், பதிவு செய்வதும் காங்கிரஸ் கட்சியின் வேலை என்பதை மறந்து விடக் கூடாது.
தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு என்பது இந்திரா காந்தியின் ஆட்சியிலும், பின்னர் வந்த ராஜீவ் காந்தியின் ஆட்சியிலும் ஒரு அங்கமாகவே ஐ.பி.யும் டெல்லி காவல்துறையும் செயல்பட்டது. இவ்வளவு வில்லங்கமான செயல்பாடுகளை செய்து விட்டு தற்போது முழுமையான உண்மையை தெரிந்து கொள்வதற்கு முன்பே பதவி விலக கூச்சல் போடுவது காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமாகும். சந்தடிசாக்கில் சிந்து பாடுவது போல், மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் தனது பங்கிற்கு எனது செல்போனும் ஒட்டுக்கேட்கப்படுகிறது என ஒப்பாரி வைக்கிறார்.