நீட் தேர்வு அவசியம்; சமூக நீதியைக் கொடுக்கிறது

2021 மே மாதம் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் செப்டம்பர் மாதம் நீட் தேர்விலிருந்து மாநிலத்துக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த மசோதாவை 2022 பிப்ரவரி 1 ஆம் தேதி ஆளுநர் தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பினார்.

அப்போது மசோதாவுக்குக் காரணமான நீதிபதி ராஜன் குழுவின் அறிக்கை அடிப்படையில்லாத யூகங்களையும், ஒரு தலைப்பட்சமான கருத்தினையும் கொண்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2020 ஆம் வருடத்திய வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி வழக்கில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளார். அதில் நீட் தேர்வு மருத்துவக் கல்வியை மேம்படுத்தவே பரிந்துரைக்கப்பட்டதெனவும், மருத்துவ இடங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுத்து, அனைத்து பிரிவினருக்கும் சமமான வாய்ப்பினைக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ள பகுதியைச் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாணவர்களின் நலன்களுக்கு எதிராக நீட் விலக்கு மசோதா இருப்பதால், அதை சட்டப்பேரவை மறு ஆய்வு செய்திடும் வகையில் திருப்பி அனுப்புவதாக கூறியுள்ளார்.

பின்னர் நான்கு நாட்கள் கழித்து பிப்ரவரி ஐந்தாம் தேதி தமிழக அரசு சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தைக் கூட்டியது. பாரதிய ஜனதா மற்றும் அதிமுக அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து பிப்ரவரி எட்டாம் தேதி சிறப்பு சட்டமன்றம் கூட்டப்பட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பாஜக மட்டும் வெளிநடப்பு செய்தது.

சட்டமன்றக் கூட்டத்தில் ஆளும் கூட்டணி சார்பில் ஆளுநர் அரசியல் சட்ட முறைகளுக்கு முரணாக நடந்து கொள்கிறார் என்றும் மசோதாவை முன்னரே குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. மேலும் ராஜன் குழு அறிக்கை புள்ளி விபரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது; ஆளுநரின் மதீப்பீடு தவறு என்றும் சொல்லப்பட்டது. மாநில முதல்வர் சட்டப்பேரவையின் இறையாண்மை கேள்விக்குறியாகி உள்ளது; மாநில சுயாட்சி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது மற்றும் கூட்டாட்சித் தத்துவம் தலை குனிந்து நிற்கிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டப்படி மசோதா சட்டமாக ஆளுநரின் அனுமதியுடன் அவரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆளுநர் திருப்தி அடையவில்லை எனில் மசோதாவைத் திருப்பி அனுப்பும் உரிமை அவருக்கு உள்ளது. அதன்படி அவர் செய்துள்ளார்.

நீதிபதி ராஜன் குழு அதிக அளவு மாநில அரசின் அதிகாரிகளையும், நீட் தேர்வை தீவிரமாக எதிர்ப்பவர்களையுமே உறுப்பினர்களாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை பல இடங்களில் ஆதாரமில்லாத கருத்துக்களைச் சொல்லியுள்ளது. நீட் தேர்வு அரசியலமைப்புச் சட்டத்துக்கும் நாட்டு மக்களுக்கும் எதிரானது; தன்னிச்சையாக அரசியல் நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டது; அது தொடர்ந்தால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு தமிழகம் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்துக்குப் போய்விடும் என்றெல்லாம் கருத்துக்களைக் கூறியுள்ளது.

அந்த அறிக்கையின் முக்கியமான ஒரு வாதம் நீட் தேர்வு வருவதற்கு முன்னால் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்து வந்த வாய்ப்புகள், அதற்குப் பின்னர் பறி போய் விட்டன என்பதாகும். ஆனால் அதற்கான புள்ளி விபரங்கள் கொடுக்கப்படவில்லை. 2010-11 முதல் 2013-14 வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் பற்றிய விபரங்கள் அதில் சொல்லாமல் விடப்பட்டுள்ளது. மேலும் 99 விழுக்காடு மருத்துவப் படிப்பு சேரும் மாணவர்கள் தனியாரிடம் பயிற்சி பெற்ற பின்னரே தேர்ச்சி அடைகின்றனர் என்று அறிக்கை கூறுகிறது. ஆனால் அது குறித்த விபரம் எதுவும் தம்மிடம் இல்லை என அரசே ஒத்துக் கொண்டுள்ளது.

நீட் தேர்வு வருவதற்கு முன்னர் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. அப்போது 2006 முதல் 2016 வருடம் வரை மாநில முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சொற்பமாகவே இருந்துள்ளது. உதாரணமாக 2011 முதல் 2014 வரை பதினெட்டு முதல் இருபத்தி மூன்று என்னும் எண்ணிக்கையில் மட்டுமே எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர் என தகவல் உரிமைச் சட்ட விபரம் தெரிவிக்கிறது.

நீட் தேர்வை அறிமுகப்படுத்திய போது நமது மாநில மாணவர்களின் தேர்ச்சி அளவு குறைவாக இருந்தது. அதற்குக் காரணம் தமிழகத்தில் நீட் தேர்வு வராது என்று மாணவர்களிடத்தில் அரசியல் கட்சிகள் உருவாக்கிய தவறான கருத்து மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் குறைபாடுகள் ஆகியன. சுமார் பன்னிரெண்டு வருடங்களாக பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படாமல் இருந்தன. அதனால் பிற மாநிலங்களுடன் நமது மாணவர்களால் போட்டியிட முடியவில்லை.

2018 ஆம் வருடம் பாடத்திட்டம் திருத்தி அமைக்கப்பட்டு, பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சிகளை அரசு கொடுக்கத் துவங்கிய பின்னர் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீடு என வந்ததும் ஏழை மாணவர்கள் அதிக அளவுகளில் தேர்வாகி வருகின்றனர்.

நீட் தேர்வு வந்த பின்னர் தமிழக மாணவர்கள் வருடா வருடம் அதிக எண்ணிக்கையில் அந்த தேர்வில் பங்கு பெறுவதும், தேர்ச்சி பெறுவதும் அதிகரித்து வருகிறது. 2019 ஆம் வருடத்துடன் ஒப்பிடும் போது 2020 ஆம் வருடம் நடந்த தேர்வில் போது ஒரே வருடத்தில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சுமார் 9 விழுக்காடு அதிகரித்து தேசிய அளவில் வேகமாக உயர்ந்தது.

மேலும் நீட் தேர்வுக்குப் பின்னர் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் உள்ள நல்ல மருத்துவக் கல்லூரிகளுக்கும், தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களுக்கும் செல்லும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சென்ற வருடம் முதன் முறையாக சுமார் முப்பது மாணவர்கள் எய்ம்ஸ், ஜிப்மெர் உள்ளிட்ட தேசிய நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது.

2021 ஆம் வருடம் நடைபெற்ற தேர்வில் தமிழகத்திலிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கு எட்டாயிரம் பேர் நீட் தேர்வினை எழுதியுள்ளனர். தமிழ் மொழி வழியாகத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. அதனால் இந்த முறை பதினேழாயிரம் பேருக்கு மேல் தமிழில் எழுதியுள்ளனர்.

2020 ஆம் ஆண்டுக்கான அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ் பற்றிய சேர்க்கைகள் குறித்துக் கிடைத்த விபரங்கள் உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பிரிவு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே அனைத்து இடங்களையும் பெற்றுள்ளனர். பொதுப் பிரிவின் கீழ் மாணவர்கள் யாரும் இடம் பெறவில்லை.

அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு போக மீதி இடங்களில் மிகப் பெரும்பாலான எம்பிபிஎஸ் இடங்கள் மேற்கண்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கே கிடைத்துள்ளது. மாநில அரசு நடைமுறைப்படுத்தி வரும் விகிதங்களை விட அதிகமான இடங்களை அவர்கள் பெற்றுள்ளனர். பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஐம்பது விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் சுமார் 25 விழுக்காடு, பட்டியலின பிரிவினர் 18.4 விழுக்காடு, மலைவாழ் பிரிவு மாணவர்கள் ஒரு விழுக்காடு என இடங்கள் கிடைத்துள்ளன. சுமார் நான்கு விழுக்காடு இடங்கள் மட்டுமே பொதுப்பிரிவின் மூலம் மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.

மேற்குறிப்பிட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு அதிக பலன் கிடைக்க வேண்டும் என்பதே சமூக நீதியின் அடிப்படை. எனவே நீட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சமூக நீதி பாதிக்கப்பட்டுள்ளது என்கிற வாதம் சரியல்ல. உண்மையில் மேற்கண்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒதுக்கீட்டு அளவில் உள்ளதை விட பல மடங்கு அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

2021 ஆம் வருடம் நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையில் தற்போது மருத்துவக் கல்லூரி ஒதுக்கீடுகள் நடைபெற்று வருகின்றன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடுகள் முடிந்து விட்டன. மருத்துவக் கல்லூரிகளில் 435 இடங்கள், பல் மருத்துவக் கல்லூரிகளில் 100 இடங்கள் என மொத்தம் 535 இடங்களுக்கு ஒதுக்கீடுகள் நடைபெற்று விட்டதாகத் தெரிகிறது.

இந்த வருடமும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அரசு நிர்ணயித்த ஒதுக்கீட்டு இடங்களை விட அதிக இடங்களைப் பெற்றுள்ளனர். மொத்த இடங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் 43 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு 31 விழுக்காடு, பட்டியலினப் பிரிவு 19 விழுக்காடு எனப் பெற்றுள்ளனர். எனவே சென்ற வருடத்தை விடவும் இந்த வருடத்தில் அதிகமான இடங்கள் கிடைத்துள்ளன.

அதனால் மிகவும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த, கிராமப்புற மற்றும் வசதி குறைவான மலைப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களின் தமிழ் வழியில் படித்த குழந்தைகள் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பெரும்பேடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனுஷா. பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்பவர்கள். உள்ளூர் அரசு பள்ளியில் படித்தார். பயிற்சி மையம் எங்கும் செல்லாமல், வீட்டிலிருந்து தேர்வுக்குத் தயார் செய்தார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார்.

சேலம் மாவட்டம் சூரப்பள்ளி சின்னனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் கலையரசன். பெற்றோர்கள் தறித் தொழில் செய்பவர்கள். ஆலமத்தூர் அரசு பள்ளியில் படித்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் இடத்தைப் பெற்றுள்ளார்.

வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகில் உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் மாணவி சத்யா. மாற்றுத் திறனாளி. பெற்றோர் இருவரும் குவாரியில் கல் உடைக்கும் வேலை செய்பவர்கள். உள்ளூர் அரசு பள்ளியில் படித்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மலைவாழ் மக்கள் பிரிவு குடும்பத்தைச் சேர்ந்த மாணவி சினேகா. தந்தை சாலை ஓரத்தில் கரும்புச் சாறு விற்கும் கடை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார். மழைக் காலங்களில் பாத்திர வியாபாரம் செய்வார். அவருக்கு ஐந்து பெண் குழந்தைகள். சினேகா மலைவாழ் மக்கள் பிரிவு மாணவர்களில் மாநில அளவில் முதலிடம் பெற்று, சென்னை ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார்.

இவையெல்லாம் உதாரணங்கள் மட்டுமே. எனவே வசதி வாய்ப்புகள் இல்லாத சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பலரும் நீட் தேர்வு மூலம் பலன் பெற்று வருகின்றனர். மேலும் இந்த வருடம் பொருளாதார வளர்ச்சி குறைந்த மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்கின்றனர்.

தருமபுரி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்து முறையே 33, 31, 26, 24 மாணவர்கள் மருத்துவப்படிப்புகளில் சேர்ந்துள்ளனர். காஞ்சிபுரம், விழுப்புரம், தென்காசி ஆகிய மாவட்டங்களிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையில் சேர்ந்துள்ளனர். பொருளாதார வளர்ச்சி பெற்ற பல மாவட்டங்களை விட மேற்காணும் எண்ணிக்கைகள் அதிகம்.

தற்போது தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் பொருளாதார பின்னணி இல்லாதவர்கள். அவர்தம் குடும்பங்களில் பள்ளிப் படிப்பு கூட முடிக்காதவர்களே அதிகம் இருக்கும். அவர்களில் பலர் முதல் முறையாக நீட் தேர்வு எழுதியவர்கள். பலர் பயிற்சி வகுப்புகளுக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்து படித்தவர்கள். முழுக்க தமிழ் வழியிலேயே கல்வி கற்றவர்களும் உள்ளனர்.

அவர்கள் எல்லாம் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரிய மருத்துவக் கல்லூரிகளில் படித்து முதல் தலைமுறை பட்டதாரி ஆகப் போகிறார்கள். இது தற்போதைய நீட் தேர்வு முறையால் மட்டுமே சாத்தியமாகி உள்ளது. இதற்கு முந்தைய காலங்களில் இவையெல்லாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத விசயமாக இருந்தது.

இந்த வருடம் அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பிரிவில் முதல் பத்து இடங்களில் இரண்டு தமிழக மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர். மேலும் பாண்டிச்சேரியிலுள்ள ஜிப்மெர் நிறுவனத்தில் இந்த வருடம் பொதுப் போட்டியில் உள்ள 121 இடங்களில் 32 இடங்களைத் தமிழக மாணவர்கள் பெற்றுள்ளனர். இது மொத்த இடங்களில் 26.4 விழுக்காடாகும்.

எனவே சென்ற வருடத்துக்கான மொத்த சேர்க்கை விபரங்கள், தற்போது அரசு பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டு விபரங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீடு என அனைத்தையும் பார்க்கும் போது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து வருவது உறுதியாகிறது.

சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்கு அப்புறம் நீட் தேர்வு முறை வசதி வாய்ப்புகள் இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மக்களாட்சியின் நோக்கமே ஏழை மக்களை முன்னேற்றுவது தான். அந்தப் பணியை தற்போது நீட் தேர்வு முறை செய்து வருகிறது.

முந்தைய முறையில் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பாடங்கள் போதிக்கப்படவில்லை. ஆனால் அதைப் படிக்காமல், பன்னிரெண்டாம் வகுப்புகளைப் புரிந்து கொள்வது மாணவர்களுக்குக் கடினம். மேலும் ‘ப்ளூ பிரிண்ட்’ என்னும் முறை மூலம் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே மனப்பாடம் செய்து, அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் பள்ளி இறுதிக் கல்வி வணிக மயமாகி, குறிப்பிட்ட பள்ளிகள் அதிக கட்டணத்தை வசூலித்துக் கொண்டு சேர்க்கைகளை நடத்தி வந்தனர்.

மாநில பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு தற்போது 34,000 கோடி ரூபாயாக உள்ளது. இவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்தும் நம்மால் ஏன் அதிக அளவில் மருத்துவப் படிப்புக்கு மாணவர்களைத் தயார் செய்ய முடியவில்லை என்பது பற்றி யோசிக்க வேண்டும். தேவையான பயிற்சிகளை ஆசிரியர்களுக்குக் கொடுத்து, கட்டமைப்புகளை வலுப்படுத்தும் போது நமது மாணவர்களைப் போட்டித் தேர்வுகளுக்கு சுலபமாகத் தயார் செய்ய முடியும். அதன் மூலம் தேசிய அளவில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் அவர்களால் போட்டியிட முடியும். ஏனெனில் உலகின் பல பகுதிகளிலும் உயர் படிப்புகளுக்குப் போட்டித் தேர்வுகள் உள்ளன.

தமிழக மாணவர்கள் மிகத் திறமை வாய்ந்தவர்கள். முறையான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் போது, அவர்கள் நன்கு வெற்றி பெறுவார்கள். அதைத் தான் இப்போது அவர்கள் சாதித்துக் காட்டி வருகிறார்கள்.

மோடி அரசு கடந்த இரண்டு வருட காலத்தில் தமிழகத்துக்கு மட்டும் பதினோரு அரசு மருத்துவக் கல்லூரிகளையும், ஒரு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியையும் கொடுத்துள்ளது. இது நாட்டின் மற்ற எந்தவொரு மாநிலத்துக்கும் கிடக்காத பேருதவி. அதன் மூலம் இந்த வருடம் முதல் சுமார் 1500 மருத்துவ இடங்கள் நமக்குக் கிடைக்க உள்ளன. அவை தொடர்ந்து நான்கு ஆண்டுகளில் மேலும் உயரும்.

நீட் தேர்வு தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. நாட்டின் மாநிலங்கள் பலவற்றிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் உள்ளன. ஆனால் அவை எல்லாம் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு தமது மாநிலங்களில் நடைமுறைப் படுத்தி வருகின்றன. அப்படி இருக்கும் போது பிற மாநிலங்களை விட வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ள நமது மாநிலம் ஏன் நீட் தேர்வைத் தவிர்க்க வேண்டும்?. மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவை ஆளும் மாநிலங்களில் நீட் தேர்வை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

கல்வித் துறையில் முன்னேறிய தமிழகத்தில் இது வரை ஏழை மாணவர்களுக்குப் போதிய அளவு மருத்துவக் கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது உண்மை. அந்த நிலை தற்போது மாறி வருகிறது. எனவே தமிழகத்தில் நீட் தேர்வு தொடர வேண்டும். அதன் மூலமே உண்மையான சமூக நீதி கிடைக்கும்.

அதே சமயம் தற்போதைய ஒதுக்கீட்டு முறையின் மூலம் முற்பட்ட வகுப்பு பிரிவு மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் மிகவும் குறைவான இடங்களே கிடைத்து வருகின்றன. அதற்காக 2019 ஆம் வருடம் மத்திய அரசு அறிவித்த பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான பத்து விழுக்காடு உடனே தமிழகத்திலும் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

2 Replies to “நீட் தேர்வு அவசியம்; சமூக நீதியைக் கொடுக்கிறது”

 1. “இட்ஸ் டமில்நாடு டிரவிடியன் போராளிஸ், அகிலேஷ் யாதவ் ஸ்பீக்கிங்

  அய்யா சொல்லுங்க‌

  எப்ப பிரச்சாரத்துக்கு வருவீங்க? பெரியாரிசம் இங்க பரப்பணும் பாஜகவ விரட்டணும் சொன்னீங்களாம்

  ஆமாம், உடனே வருவோம் பாஜக விரட்டியே ஆகணும்

  கண்டிப்பா, ஆமா பெரியார் கொள்கைன்னா இன்னா?

  அது வந்துங்க உங்க பெயரை அகிலேஷ் யாதவ்ல இருந்து “அகிலேஷ்”னு சுருக்கணுமுங்க, ஜாதி கூடாது

  ஷட் அப் நான்சென்ஸ், வேற சொல்லு மேன்

  இந்தி கூடவே கூடாதுங்கிறது பெரியார் கொள்கைங்க‌

  பின்ன இங்க என்ன லாங்குவேஜ்ல பேசுவ மேன்?

  தெரியலீங்க, ஊமை பாஷையில பேசிக்கலாம்

  அப்புறம்?

  பெண் உரிமை வேணும் சார்..

  யோவ் மாயாவதி முதல்வரா இருந்த மாகாணம் இது, புதுசா சொல்லுயா

  இந்தியா ஒரு தேசம் அல்ல, அது ஒன்றியம்

  வாய மூடு, இது என்ன உங்க ஊருன்னு நினைச்சியா இத சொன்னாலே பிச்சிபுடுவாங்க வேற சொல்லு

  மதம் கூடாது, கூடவே கூடாது

  டேய் ராமருக்கு கோவில் கட்டியிருக்க ஊர்ல இதெல்லாம் சொல்லமுடியுமா? அதுவும் முஸ்லீம் என்ன நினைப்பாங்க?

  இந்துமதம்தான் கூடாதுங்க, முஸ்லீம் இருக்கலாம் அது சமத்துவம்

  ஆஹான் ஒகே பை

  அய்யா நாங்க வரவேண்டாமா?

  நீங்க வந்தா டெப்பாசிட் கூட கிடைக்காது, டமில்நாட்ல நீங்கதான ராகுல் கூட கூட்டு

  ஆமா கண்டிப்பா

  இந்த ராஜிவ் கொலையாளியெல்லாம் நல்லா இருக்காங்களா?

  பெயில்ல சுகமா இருக்காங்க‌

  அந்த கட்சி ஏன் உருப்படாம போச்சுதுன்னு இப்பதாண்டா தெரியுது, உங்க கூட்டணிய பார்த்துட்டுத்தான் இந்தியா பூரா ராகுல விரட்டி அடிச்சிருக்காங்க‌

  அப்ப நாங்க வரவேணாமா சார்

  உபி எல்லையில கால் வச்சா வெட்டிருவோம்

  சார் பாஜக உள்ள வந்திரும் சார்

  அவங்க எப்பவோ வந்தாச்சுது, உங்களுக்கு அவங்க எவ்வளவோ பரவாயில்ல …”

 2. எந்த ஒரு வேலைக்கு ஆள் எடுக்கும் போதும், கல்வி அல்லது உயர் கல்வி அல்லது தொழில் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையின் போதும் , தேவைக்கு மேல் பலமடங்கு எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் குவிகின்றன. PRE-KG, LKG,UKGஇல் ஆரம்பித்து பல்வேறு படிப்புக்கள், பல்வேறு போட்டித்தேர்வுகள் என்று வடிகட்டும் பணி உலகில் இந்தியா உட்பட பலநாடுகளில் தொடர்கிறது. NEET – தேர்வை கொலைக்களம் என்று வர்ணித்த தமிழக விடியல் அரசின் முதல்வர் அவர்கள் , இன்னொரு பக்கம் பத்தாம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு தேர்வுகள் என்ற பெயரிலேயும், TNPSC – என்ற பெயரிலேயும், பல்வேறு கொலைக்களங்களை நடத்திவருகிறார் என்பது இரட்டை வேடம் அல்லவா ? தமிழக அரசு நடத்தும் இந்த தேர்வுகளில் பல மாணவர்கள் ஆண்டுதோறும் தோல்விஅடைந்து, தூக்க மாத்திரை, விஷம், ஆகியவற்றில் எதையாவது அருந்தியோ , தூக்கில் தொங்கியோ, , ரயிலில் பாய்ந்தோ உயிரை விட்ட செய்திகளை தமிழகத்து அர்பன் நக்சல் மீடியாக்களில் நாம் பார்க்கிறோம்.

  நீட் தேர்வு என்ற கொலைக்களத்தை மூடவேண்டும் என்று கோரிக்கை வைப்போர் தாங்கள் பல பத்து ஆண்டுகளாக நடத்திவரும் கொலைக்களங்கள் ஆகிய TNPSC ,10,12 வகுப்பு தேர்வுகள் ஆகியவற்றை உடனே நிறுத்திவிட்டு அல்லவா ஊருக்கு உபதேசம் செய்யவேண்டும் . உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து , தமிழக அரசு தரப்பில் உள்ள சொத்தை வாதங்களில் ஏதாவது நியாயம் இருந்தால் ,வெற்றிபெற சிறிதாவது முயற்சிக்கலாமே ?

  எடப்பாடியார் தலைமையிலான அதிமுக அரசு , நீட் விவகாரத்தில் சட்டசபை தீர்மானம் போட்டபோது, கேலிபேசிய திமுக விடியல்கள் , இப்போது அதே தீர்மானத்தினை மீண்டும் போடுவது நகைச்சுவையின் உச்சக்கட்டம் என்றே அனைவரும் கருதுகிறார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *