ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 3

ஆரிய நாகரீகத்தின் தத்துவங்கள் என்ன?

பல்வேறு வேத சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ள சனாதன தர்மத்தின் அடிப்படையில் ஆரிய நாகரீகம் நிறுவப்பட்டுள்ளது. வேத சாஸ்திரங்களில் நான்கு வேதங்கள் (ரிக், யஜுர், சாம, அதர்வண), வேதாந்த சூத்திரம், நூற்றியெட்டு உபநிஷதங்கள், பதினெண் புராணங்கள், இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்றவை அடங்கும். இவற்றில் பகவத் கீதை முதன்மையான உபநிஷதமாகவும் ஸ்ரீமத் பாகவதம் புராணங்களில் முதன்மையானதாகவும் விளங்குகின்றன.

புகைப்பட ஆதாரம் : The Bhaktivedanta Book Trust

இதைவிட, பல லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக நேரம், இடம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு, மனு மற்றும் பல்வேறு ரிஷி,முனிவர்களால் தொகுக்கப்பட்ட பலவகையான தர்ம சாஸ்திரங்கள் உள்ளன. அனைத்து வேத சாஸ்திரங்களுக்கும் சாராம்சமாக விளங்குவது ஸ்ரீமத் பாகவத புராணம் ஆகும். அதனால், ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து இந்தக் கட்டுரையில் பல மேற்கோள்கள் காண்பிக்கப்பட்டுள்ளன.

வேத சாஸ்திரங்களிலுள்ள தத்துவங்களின் சாராம்சம் என்னவென்றால், ஆத்மா மற்றும் சரீரம் பற்றிய உண்மையை எடுத்தியம்பி, பகவான் கிருஷ்ணரிடம் பிரேம பக்தியை அடையும் இலக்கை நோக்கி மக்களை வழிநடத்துவதாகும். ஆனால், மக்கள் வெவ்வேறு இயல்புகளையும் பண்புகளையும் பெற்றிருப்பதால், வேத சாஸ்திரங்களில் கர்ம யோகம், ஞான யோகம் மற்றும் பக்தி யோகம் போன்ற பல்வேறு வழிபாட்டு செயல்முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இதைவிட சைவம், வைஷ்ணவம், சாக்தம், சௌரம், கணபத்யாம் மற்றும் கௌமாரம் ஆகிய ஆறு வழிபாட்டு முறைகளும் உள்ளன. இந்தப் பல்வேறு வழிபாட்டு முறைகளின் நோக்கமெல்லாம் மக்களைப் படிப்படியாக, நைமித்திக தர்மங்களிலிருந்து ஆத்மாவின் நித்ய தர்மமான கிருஷ்ண பக்தியை நோக்கி வழிப்படுத்துவதாகும். இதையே பகவான் கிருஷ்ணர் பகவத் கீதை அத்தியாயம் 18 ஸ்லோகம் 66 ல் “எல்லாவிதமான தர்மங்களையும் துறந்து என்னிடம் மட்டுமே சரணடைவாயாக” என்று கூறுகின்றார்.

இது சம்பந்தமாக, ஸ்ரீல மாதவாசார்யா இந்த பூலோகத்தில் எப்படி மனிதர்கள் வாழ வேண்டும் என்பது பற்றி பிரம்ம வைவர்த்த புராணத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். இந்த மனித உடலில் நாம் இருக்கும் வரை, உடலுக்குள் இருக்கும் ஆத்மாவைப் புரிந்துகொள்வதே நமது கடமை. உடலானது ஆத்மா போன்று நிரந்தரமானது அல்ல. நாம் உடலிலிருந்து வேறுபட்டவர்கள். குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்திற்கும், சிறுவயதில் இருந்து முதுமைக்கும், பின்னர் வெளிப்படையான அழிவுக்கும் உடல் மாறுவதைப் பற்றி ஒருவர் அதிகம் கவலைப்படக் கூடாது. மாறாக, உடலுக்குள் இருக்கும் ஆத்மாவைப் பற்றியும், லௌகீக வாழ்க்கைக் சிக்கலில் இருந்து ஆத்மாவை எவ்வாறு விடுவிப்பது என்பதை ஒருவர் மிகவும் தீவிரமாகக் சிந்திக்க வேண்டும். உடலுக்குள் இருக்கும் உயிர் ஒரு போதும் அழிவதில்லை. அவர் ஒரு ஆத்மா (அஹம் பிரம்மாஸ்மி) மற்றும் ஆத்மா நிலையானது என்றும் உடலின் மாற்றங்களால் பாதிக்கப்படாது என்பதையும் ஒருவர் அறிந்து கொள்ள வேண்டும்.

பிராமண கலாச்சாரத்தின் அடிப்படைக் கொள்கை, ஹோமம், யாகம் போன்ற சடங்குகளின் உருவமான விஷ்ணு அல்லது கிருஷ்ணரை பூஜித்து திருப்திப்படுத்துவதாகும். விஷ்ணு பகவான் அனைத்து வேதச்சடங்குகளையும் அர்ப்பணமாக, “பூர்ணாகுதி” மூலமாகப் பெற்றுக் கொண்டு, மக்களுக்கு அருள் பாலிக்கின்றார். மேலும், அவர் அனைத்து தேவர்கள், பெரிய மஹான்கள் மற்றும் கடவுள் பக்தர்கள் ஆகியோரின் சரணாகதியும் ஆவார். எனவே, ஆரிய வழி முறையில் வர்ணாஸ்ரம-தர்மம் உள்ளது. இதன் மூலம் ஒவ்வொருவரும் சமுதாயத்தின் வர்ண (பிராமண, ஷத்திரிய, வைசிய மற்றும் சூத்ர) மற்றும் ஆஸ்ரம (பிரம்மச்சார்யம், கிரஹஸ்தா, வானபிரஸ்தம் மற்றும் சந்நியாசம்) பிரிவில் அவரவர் நிலைக்கு ஏற்ப கல்வி கற்று பக்திப் பாதையில் முன்னேற வேண்டும்.

விஸ்வரூப வடிவான விஷ்ணுபகவானுடைய வாயிலிருந்து பிராமணர்களும், கைகளில் இருந்து க்ஷத்திரியர்களும், தொடையிலிருந்து வைசியர்களும், கால்களிலிருந்து சூத்ரர்களும் பிறக்கிறார்கள். பிராமணர்களுக்கு பின்வரும் குணங்கள் உள்ளன: அமைதி, சுயக்கட்டுப்பாடு, சிக்கனம், தூய்மை, சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, ஞானம் மற்றும் ஆன்மீக வழிபாடு. க்ஷத்ரியர்களின் பணியின் பண்புகள் வீரம், வல்லமை, உறுதிப்பாடு, சமயோசிதம், போரில் துணிவு, பெருந்தன்மை, தலைமைத்துவம் ஆகியவையாகும். வைசியர்களுக்கான வேலையின் குணங்கள் விவசாயம், பசுக்களைப் பாதுகாத்தல், வியாபாரம் ஆகியவை. மேலும் சூத்ரர்களுக்கு உழைப்பும் மற்றவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பும் உள்ளது.

ஸ்ரீமத் பாகவதம் 2 வது காண்டம் 4 வது அத்தியாயம் 18 வது ஸ்லோகம், சனாதன தர்மத்தை விட்டு வெளியேறி உலகின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய பல இனங்களைப் பற்றிக்கூறுகிறது. இது கிராதா (பீகார்), ஹூனா (கிழக்கு ஜெர்மனி மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகள்), ஆந்திரா, புலிந்தா (கிரேக்கர்கள்), புல்காசா, ஆபீரா (அரேபிய கடலின் மறுபக்கம்), சும்பா, யவன (துருக்கி), காசா (மங்கோலியன் மற்றும் சீனம்) போன்ற இனங்களைக் குறிப்பிடுகிறது. இதிலிருந்து, மனித நாகரிகம் முதலில் இந்தியாவில் உருவாகி பின்னர் உலகின் பிற பகுதிகளுக்கு நகர்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். எனவே,லட்சக் கணக்கான ஆண்டுகளாக நடந்த மக்களின் இடம் பெயர்வுகளை விவரிக்க, இந்தியாவிலிருந்து வெளியே சென்றவர்கள் என்ற கோட்பாடு (OIT) தான், ஆரிய படையெடுப்பு கோட்பாட்டை (AIT) என்பதை விட மிகவும் பொருத்தமாக உள்ளது.

பிரம்மா உலகை உருவாக்கிய போது அதை ஆண்டவர் யார்?

பிரபஞ்சம் உருவானபோது, ​​பூமியை மனு ஆட்சி செய்தார். பிறகு அவருடைய மகன் பிரியவர்தர் இந்த உலகை ஆட்சி செய்தார். மஹாராஜா பிரியவர்தர் ​​தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார். ஸ்ரீமத் பாகவதம் காண்டம் 5 அத்தியாயம் 1 ஸ்லோகம் 31 இன் படி, பிரியவர்தர் தனது தேரை சூரியனுக்குப் பின்னால் ஓட்டியபோது, ​​அவரது தேர்ச்சக்கரங்களின் விளிம்புகள் பெரிய அடையாளங்களை உருவாக்கியது. அது பின்னர் ஏழு பெருங்கடல்களாக மாறி, பூ மண்டலம் எனப்படும் கிரக அமைப்பை ஏழு தீவுகளாகப் பிரித்தது. உலகம் முழுவதும் ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆரிய அரசர்களால் ஆளப்பட்டதைக் காணலாம்.

மேலும், ஸ்ரீமத் பாகவதம் காண்டம் 4 அத்தியாயம் 21 ஸ்லோகம் 12 கூறுவதன்படி, மஹாராஜா பிருது ஒரு நிகரற்ற மன்னராக இருந்தார். மேலும் பூமியின் மேற்பரப்பில் உள்ள ஏழு தீவுகளையும் (சப்த த்வீபங்கள்) ஆளும் அரச அதிகாரத்தை கொண்டிருந்தார். அகில உலக கிருஷ்ண பக்தி மன்ற ஸ்தாபக ஆசார்யர் ஸ்ரீல பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்கள் இந்த ஸ்லோகத்திற்கு எழுதிய விரிவுரையில், சப்த-த்வீபங்கள் என்பது பூமியின் மேற்பரப்பில் உள்ள ஏழு பெரிய தீவுகள் அல்லது கண்டங்களைக் குறிக்கிறது என்று குறிப்பிடுகிறார். அவையாவன :- (1) ஆசியா, (2) ஐரோப்பா, (3) ஆப்பிரிக்கா, (4) வட அமெரிக்கா, (5) தென் அமெரிக்கா, (6) ஆஸ்திரேலியா மற்றும் (7) ஓசியானியா. நவீன யுகத்தில், மக்கள் வேத காலத்தில் அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் அமெரிக்கா மற்றும் உலகின் பல பகுதிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற எண்ணத்தில் உள்ளனர். ஆனால் அது ஒரு உண்மை அல்ல. அந்தப் பகுதிகளை ஆரியச்சக்கரவர்த்திகள் புராண காலங்களில் ஆண்டு வந்துள்ளனர்.

பிருது மஹாராஜா, வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்று அழைக்கப்படுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகை ஆண்டார். மேலும் அந்த நாட்களில் உலகின் பல்வேறு பகுதிகள் அறியப்பட்டவை மட்டுமல்ல, அவை மஹாராஜா பிருது என்ற ஒரு மன்னரால் ஆளப்பட்டன என்பதும் இங்கே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து பிருது மஹாராஜா ஆட்சி புரிந்து வந்தார். ஏனெனில் அவர் கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பிரம்மவர்த்தா என்று அழைக்கப்படும் இந்த நிலப்பகுதி, பஞ்சாப் மற்றும் வட இந்தியாவின் பகுதிகளாக நவீன யுகத்தில் அறியப்பட்ட பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்திய அரசர்கள் ஒரு காலத்தில் உலகம் முழுவதையும் ஆண்டனர் என்பதும் அவர்களின் கலாச்சாரம் வேதங்களைப் பின் பற்றியது என்பதும் தெளிவாகிறது.

மேற்கூறியவற்றிலிருந்து, வேதகால ஆரிய நாகரிகம் முதன்முதலில் இந்தியாவில் உருவாக்கப்பட்டு, வரலாற்றுக்கு முந்தைய காலங்களில், உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். மாக்ஸ் முல்லர் மற்றும் பல்வேறு இந்தியவியலாளர்களால் பரப்பப்பட்ட கட்டுக்கதையை தோற்கடிப்பதற்கு , இந்தியாவுக்கு வெளியே மக்கள் சென்றார்கள் என்ற கோட்பாடு (OIT) தான் சரியான பதில் என்றும் ஆரிய படையெடுப்பு கோட்பாடு (AIT) அல்ல என்ற முடிவுக்கு நாம் வரலாம். வெளியில் இருந்து இந்தியாவிற்கு ஆரியர் வருவது என்பது ஐரோப்பியர்களால் இந்தியாவைப் பிரித்து ஆள்வதற்காகப் பரப்பப்பட்ட தவறான கருத்துரையாகும்.

(தொடரும்)

Series Navigation<< ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 1ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 4 >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *