பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தற்போது இலங்கையில் இருக்கிறார். இது தொடர்பான யூட்யூப் பதிவு ஒன்றில் ஒருவர் வினை ஆற்றியிருந்தார்.
பார்த்தவுடன் எனக்கு ஒரு பெருமிதமான சிரிப்பு வந்து விட்டது.
அது வேறொன்றுமில்லை “சிங்கக்கொடி நாட்டில் சிங்கம்” என்பதுதான்.
ஓர் உணர்ச்சிவயப்பட்ட உயர்வு நவிற்சிதான்.
ஆனாலும் சிங்கக்கொடி என்பதிலும் சிங்கம் என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லையே!
அவருடைய இலங்கைப் பயணம் அரசுமுறைப் பயணம் அல்ல. அவர் எந்த அரசு பதவியிலும் இல்லை. அரசும் அவரை அனுப்ப வில்லை. இலங்கை மலையகத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், அவர்கள் கொடுத்த ஓர் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருக்கிறார். அப்படியே மேலோட்டமாக பார்த்தால் இது இயல்பாக ஒரு தமிழ்நாட்டுத் தலைவரை உள்ளூர் விழா ஒன்றுக்கு அழைப்பது போலத்தான்.
இக்கட்டான நிலையில் இருக்கும் இலங்கையில் என்ன நடக்கிறது என்று நேரில் அறிந்து வரவும், ஆறுதல் சொல்லவும், அபயக்கரம் நீட்டவும். அதன் பின்னான அரசியல் ஆக்கங்களைச் செய்யவும் ஓர் அருமையான வாய்ப்பாக இந்தப் பயணம் அவருக்கு அமைந்திருக்கிறது.
இதெல்லாம் இருக்கட்டும். எனக்கு சிரிப்பு வந்ததற்கு காரணம் இது தான்.
இப்படி ஒரு அழைப்பை திமுக ஏற்படுத்திக் கொள்ள முடியாதா! அப்படியே ஏற்படுத்திக்கொண்டு அங்கே சென்று அவர்களை விசாரித்து இருக்க முடியாதா! உள்மனது சொல்லுகிறது, முடியாது.
அங்கே அவர்களுக்கு வரவேற்பு கிடைக்குமா அல்லது வேறு ஏதும் கிடைக்குமா என்பது எனக்கு ஐயமாக இருக்கிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் வீம்புக்காக பாஜக எதிர்ப்பு செய்பவர்கள், இதிலும் ஏதேனும் செய்தாலும் செய்வார்கள்!
இந்த வேலையை ஏன் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் செய்யக்கூடாது என்று பார்த்தால், அவர்களை இப்போது யாராவது எழுப்பி விட வேண்டும். பிறகு விஷயத்தை சொல்லவேண்டும். அதன் பிறகு அவர்கள் யோசிக்கவேண்டும். இப்படி எல்லாம் போகிறதால் அவர்க்ளை விட்டுவிடலாம்.
அடுத்ததாக தமிழ்நாட்டில் பெரிய கட்சி(?) என்று பார்த்தால் காங்கிரஸ் கட்சி. அவர்கள் இன்னும் மூவேழு இருபத்தியோரு ஜென்மங்களுக்கும் இந்த விஷயத்தை கெட்ட ஒரு கனவிலும் கூட எண்ணிப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு துரோகத்தை இலங்கைக்கு அவர்கள் செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட்கள் செய்யலாமே! அதுவும் இது மே தின விழா அல்லவா, வெற்றிகரமாகச் செய்யலாமே! ஆனால் அவர்கள் செயல்பட மறந்து, தமிழகத்தில் ஜால்ரா அடிப்பது மட்டுமே தொழிலாகக் கொண்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது. அதைத்தவிர அவர்களுக்கு அவர்கள் முன்னாள் கனவு கண்ட, அந்த பொன்னுலகத்தை பற்றி நினைவு கூட இருக்குமா என்பது தெரியாது. அவர்களை அவர்களுடைய ஜால்ரா போக்கிலேயே விட்டு விடலாம்.
பிறகு வேறு வேறு யார் இருக்கிறார்கள்? ஆம். இருக்கிறாரே கழுத்து நரம்பு புடைக்க கிரேக்க கவிதை பேசுகிறவர்! அன்றைக்கு கள்ளத்தோணியில் இலங்கைக்கு சென்றவர் இன்றைக்கு நல்லத் தோணியிலே கூட செல்ல முடியாமா! அவரையும் விடுவோம்.
அப்புறம் இன்னொருவர் இருக்கிறார். கட்சி ஆரம்ப காலத்தில் பிரபாகரன் படத்தை தைரியமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லும் அளவுக்கு அவருடைய இலங்கைப் பாசம் இருந்தது. எனக்கு இது நினைவில் இருக்கிறது. அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கையில் வீரம் காட்டிய அனுமனின் பெயரான ராமதாஸ் என்பதைத் தன் பெயராக வைத்திருக்கும் அவருடைய கட்சி, இதை செய்து விட முடியுமா! யாராவது யோசனை சொல்லித்தான் பாருங்களேன், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!
வேறு யாராவது இருக்கிறார்களா? தமிழ்நாட்டில் சொல்லிக்கொள்ளும்படி ஒருவரும் இல்லை போலிருக்கிறதே! ஏதோ ஒரு தூரத்தில் குரல் கேட்கிறதே, நாம் தமிழர், நாம் தமிழர், நாம் தமிழர் என்று. ஓ, அவர்களா! அவர்களுக்கு இப்பொழுது பேச ஏதுமில்லை. ஏனென்றால் இந்த இக்கட்டான நிலைமைக்கு பிரபாகரன் நேரடி காரணமும் இல்லை, தீர்வும் இல்லை. அப்படி இருக்கும்போது அவர்களுக்கு இதில் சம்பந்தமும் இல்லை. அப்படியே இருந்து கொண்டிருக்கிறார்கள். இனிமேலும் அப்படியேதான் இருப்பார்கள்!
இப்போது புரிகிறதா என்னுடைய பெருமிதத்துக்கும் சிரிப்புக்கும் காரணம்!
இப்படி இலங்கை சென்று,
ஆறுதலும்,
அரவணைப்பும்,
இன்னபிற நல்லனவும் தருகின்ற
ஆற்றலும்,
அதிகாரமும்,
திறமையும்,
நோக்கமும்,
அதற்கான வல்லமையும்,
உண்மை அன்பும்,
அந்த அன்புக்குரிய பண்பும்,
அத்தனையும் இருக்கின்ற ஒரே ஓர் ஒற்றை இடம் பாரதிய ஜனதா கட்சி மட்டுமே. இதை எழுதும்போது எனக்கு இது ஏதோ உயர்வு நவிற்சி போலிருக்கிறதே என்று தோன்றவே இல்லை. முற்று முதலான உண்மை. இதில் இன்னமும் சொல்ல வேண்டியது தான் இருக்கிறதே தவிர உயர்வு நவிர்ச்சியாக ஏதுமில்லை என்பது சர்வநிச்சயம்.
மீண்டும் ஒருமுறை சிரித்துக் கொள்கிறேன், பெருமிதத்துடன்.
இலங்கை சென்று இந்திய நலனோடு இலங்கை தமிழருக்கு என்ன செய்யமுடியும் என விவாதிக்கின்றார் அண்ணாமலை
ஜெர்மனியில் மாபெரும் வரவேற்பில் இந்திய ஜெர்மனி உறவால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என பட்டியலிடுகின்றார் பிரதமர் மோடி
இந்த நேரம் நேபாளத்தில் சீன தூதருடன், அதாவது நேபாளத்தில் இருக்கும் சீனாவின் பெண் தூதருடன் ராகுல்காந்தி பார்ட்டியில் கலந்து கொண்டு கும்மி அடித்த செய்திகளும் வருகின்றன
ராகுல்காந்தி இந்தியாவின் எதிர்கட்சி தலைவர், அவர் இந்திய எதிரியான சீன தூதருடன் அதிகார பூர்வமற்ற சந்திப்பை செய்தது நிச்சயம் சரியல்ல, இது நாட்டுக்கு அச்சுறுத்தலான விஷயம்
யார் நாட்டுபற்றாளர்கள் யார் நாட்டுக்கு சரியில்லாதவர்கள் என்பது இப்பொழுது வெள்ளிடை மலையாக தெரிகின்றது