நாடு முழுவதும் விஜயதசமியை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சீருடை அணிவகுப்பை நடத்தி வருகிறது. 1925ஆம் ஆண்டு விஜயதசமியன்று துவங்கப்பட்ட அமைப்பு என்பதால், இதனை ஓர் ஆண்டு நிகழ்வாக ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது.
இந்தச் சீருடை அணிவகுப்பில் அனைவரும் கலந்துகொள்ள முடியாது. சங்கத்தின் முழுமையான சீருடை வைத்துள்ள, நன்கு பயிற்சி பெற்ற அதன் தொண்டர்கள் (ஸ்வயம்சேவகர்கள்) மட்டுமே ராணுவ வாத்திய இசைக்கு ஏற்றபடி மிடுக்காக வீரநடை பயில முடியும். இந்த அணிவகுப்பின் நோக்கம், சமுதாயத்துக்கு துணிவை அளிப்பது தான்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தினசரிக் கூடுதலான ’ஷாகா’வில் பயிற்சி பெறும் தொண்டர்கள், தங்கள் கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியால் பெற்ற ஒழுங்கையும் வெளிப்படுத்துவதும் இந்த அணிவகுப்பின் அடிப்படை. எத்தனை ஆயிரம் பேர் பங்கேற்றாலும் கட்டுக்கோப்பாகவும், மிகவும் துல்லியமாகவும், நேரம் தவறாமலும் நடப்பது ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பின் சிறப்பு.
சங்கத்தின் மீதான போட்டி மனப்பான்மையாலும், தவறான கண்ணோட்டத்தாலும் தடை செய்த முதல் பிரதமர் நேருவே, தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் தவறை உணர்ந்து, 1963 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் இணைந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணிவகுப்பை நடத்த அழைப்பு விடுத்தார் என்பது சரித்திரம். குறுகிய கால அவகாசத்தில், தில்லியைச் சேர்ந்த 3,000 ஸ்வயம்சேவகர்கள் அரசின் அழைப்பை ஏற்று அதில் கலந்துகொண்டனர்.
உண்மையில் ராணுவத்தினரின் அணிவகுப்புக்கு சற்றும் குறைந்ததல்ல ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணிவகுப்பு. ராணுவவீரர்களும் காவல் துறையினரும் அரசு வழங்கும் ஊதியத்திற்காகப் பணிபுரிகின்றனர். அவர்கள் அணிவகுப்பில் கலந்துகொள்வது கடமை. ஆனால், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அனைவரும் தங்கள் சொந்தச் செலவில் சீருடை தயார் செய்து, சுயமாகப் பயிற்சி பெற்று, சுய விருப்பத்தில், யாருடைய ஆணைக்காகவும் காத்திருக்காமல், இந்தச் சீருடை அணிவகுப்பில் கலந்து கொள்கின்றனர். அதேபோல, தரத்திலும் ராணுவ வீரர்களுக்கு இணையாகவே இங்கும் பயிற்சி பெறுகின்றனர். கலவரச்சூழலில் கொடி அணிவகுப்பு நடத்தும் காவல் துறையினர் போல, தன்னம்பிக்கை இழந்த ஹிந்து சமுதாயத்திற்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு நாடு நெடுகிலும் நடைபெறுகிறது.
விஜயதசமி நாளில் மட்டுமல்ல, சங்க பயிற்சி முகாம் நடைபெறும் இடங்களிலும் நாட்களிலும் கூட, ஸ்வயம்சேவகர்கள் பெற்ற பயிற்சியை மக்களுக்கு வெளிப்படுத்த ‘பதசஞ்சலன்’ எனப்படும் இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. எனினும், சங்கத்தின் ஆண்டுவிழாவான விஜயதசமி அன்று நடைபெறும் அணிவகுப்பு சிறப்பானது.
காக்கி கால்சட்டை (முன்னர் இது நிக்கராக- அரைக்கால் சட்டையாக இருந்தது), வெண்மையான சட்டை, சங்க பெல்ட், கருப்புத் தொப்பி, பழுப்புக் காலுறையுடன் கூடிய காலணி, சிலம்பம் பழகும் தடி – இவையே சங்கச் சீருடையாகும். இதை ஒரு ஸ்வயம்சேவகர் தயார் செய்ய குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயேனும் செலவு செய்கிறார். இதனை ஒவ்வொருவரும் சொந்தச் செலவில் செய்கின்றனர். அது மட்டுமல்ல, சீராக நடை பயில சங்கத்தில் அளிக்கப்படும் கடினமான நடைப் பயிற்சியையும் மனமுவந்து ஏற்கின்றனர்.
இந்தச் சீருடை அணிவகுப்பில் ஏழை – பணக்காரர் பேதமோ, மேல்ஜாதி – கீழ் ஜாதி வேறுபாடோ, முதலாளி – தொழிலாளி வேற்றுமையோ, மொழி, இன வேறுபாடுகளோ, தலைவன் – தொண்டன் என்ற இடைவெளியோ இல்லை. சங்கநாதமும் தாளலயமும் இணைந்த வீர முழக்கத்துடன, ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ். தொண்டனும் இந்த தேசத்தின் காவலன் என்ற பெருமித சிந்தனையுடன் நடை பயில்வதே அணிவகுப்பு அளிக்கும் உத்வேகம். இவையெல்லாம், சங்கத்தைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் முட்டாள்கள் அறியாதவை.
நாடு முழுவதிலும் – காஷ்மீரிலும் கூட நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். பேரணியை தமிழகத்தில் நடத்தவிடக் கூடாது என்று இங்கு சில சுயநல அரசியல்வாதிகள் பிரசனை எழுப்பி நீதிமன்ற உத்தரவால் ஓய்ந்திருக்கிறது. அரசும், திமுக கூட்டணிக் கட்சிகளும் நடத்திய பித்தலாட்ட நாடகத்துக்கு உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது.
இந்த ஆண்டு விஜயதசமி அக். 5இல் வருகிறது. அதையொட்டி, அக்.2-இல் ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதாலும், மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு நிறைவை ஒட்டியும் நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். சீருடைப் பேரணியை நடத்துகிறது. அதுபோலவே தமிழகத்தில் 52 இடங்களில் அணிவகுப்பு நடத்தத் திட்டமிட்டு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே காவல் துறையிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் மூன்றாவது வாரம் வரை அதனை அரசு பரிசீலிக்கவில்லை. எனவே, தங்கள் பேரணிக்கு அனுமதி அளிக்க உத்தரவிடுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் அணுகினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிபந்தனைகளுடன் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு செப்.22இல் உத்தரவிட்டது.
இதனிடையே,, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்த உயர் நீதிமன்றத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் விமர்சனம் செய்ததோடு, அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். திருமாவளவன் ஒருபடி மேலே போய், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் திருமாவளவனின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி, நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதில் மூக்குடைபட்ட திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட திமுக ஆதரவுக் கட்சியினரைக் கூட்டி, அக். 2-இல் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்குப் போட்டியாக மாநிலம் முழுவதும் நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்தப்படும் என அறிவித்தார்.
இவர்கள் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை எதிர்க்க என்ன காரணம்? தேசபக்தர்களின் படையணி, தேசவிரோதிகளுக்கு அச்சமூட்டுவது இயல்பு தானே? ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பால் இந்த அமைப்பின் வலிமையை தமிழகம் உணர்ந்துவிட்டால், இனிமேலும் ‘சொறியார் மண்’ என்று கதைக்க முடியாதல்லவா?
இந்த நேரத்தில் (செப். 27) நாடு முழுவதும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்த பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. அதையடுத்து நாட்டில் வேறெங்கும் நிகழாத வகையில் தமிழகத்தில் மட்டும் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகள் பலரது வீடுகள், கடைகள் பிஎஃப்ஐ அமைப்பினரால் தாக்கப்பட்டன. இதையே காரணம் காட்டி, பதற்றமான சூழல் நிலவுவதாகக் கூறி, தற்போதைய சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணமாகக் கூறி, காவல் துறை ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுத்தது (செப். 29).
“தற்போதைய சட்டம் ஒழுங்கு சூழலில், மத்திய அரசால் ‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன. மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள அன்று சமய நல்லிணக்கப் பேரணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊர்வலம், மனிதச் சங்கிலி போன்றவற்றை நடத்த அனுமதி கோரியுள்ளது. இந்தச் சூழலில், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது” என தமிழக அரசு தெரிவித்தது.
நீதிமன்ற உத்தரவை மீறும் வகையிலான தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் செப். 30இல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, மாநில அரசு சார்பில் மழுப்பலான விளக்கங்கள் அளிக்கப்பட்டதை நீதிபதி ஏற்கவில்லை. எனினும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வேறு நாளில் அணிவகுப்பை நடத்த ஆர்.எஸ்.எஸ். தயாரா என்று நீதிபதி கேட்டார். சங்க நிர்வாகிகளும் அதற்கு உடன்பட்டனர். அதையடுத்து, ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு வருகிற நவம்பர் 6-ஆம் தேதி நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இனிமேலும் அரசு அனுமதி வழங்க மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டார். ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அக்டோபர் 31-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் பல முறை ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடைபெற்றிருக்கிறது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதல்வராக இருந்த காலங்களிலும் இந்நிகழ்வு தடையின்றி நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் எந்த எதிர்ப்பும் எழுந்ததில்லை. 2000ஆம் ஆண்டு கோவையில் சங்க அணிவகுப்பு நடத்த இதேபோல கடும் எதிர்ப்பு சிலரால் பிரசாரமாகவே முன்னெடுக்கபட்டது. ஆனால் அவற்றைப் புறந்தள்ளி அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார் என்பதை இங்கு நினைவுகூர வேண்டி இருக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது, அக்கட்சியின் அடிப்படை ஆதரவாளர்களான சிறுபான்மையினரால் தான். எனவே இந்த அரசு தங்கள் அரசாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நிர்பந்திக்கின்றனர். அதேபோல, திமுகவின் வெற்றிக்கு சொந்தம் கொண்டாடும் கூட்டணிக் கட்சிகளும் தங்கள் பங்கிற்கு இந்த அரசை மிரட்ட முனைகின்றனர். அதாவது, ஹிந்து விரோத சக்திகள் தங்கள் மிரட்டல் அரசியலால் ஆளும் கட்சியான திமுகவையும், மாநில அரசையும் தங்கள் கைப்பாவையாக்க முயன்றிருக்கின்றனர். அவர்களுக்கு அடிபணிந்து தவறான முடிவை எடுத்ததால் தான், மு.க.ஸ்டாலின் அரசு, நீதிமன்றத்தின் கண்டனத்தைப் பெற்றிருக்கிறது.
மத்திய அரசு ஏதேனும் சட்டம் கொண்டுவந்தால் கருத்துரிமை பேசும் போராளிகள் பலர், இப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் கருத்துரிமை இருப்பதையே ஏற்க மறுக்கின்றனர். சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை இந்தக் கிறுக்கர்கள் எப்போது உணர்வார்கள்?
ஜவஹர்லால் நேருவும் (1948) இந்திரா காந்தியும் (1975) அதிகாரத் திமிரில் தடை செய்தபோதும்கூட ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அழிக்க முடியவில்லை. அது முன்னை விட வலுவாக வளர்ந்தது. சங்கத்தின் மீது 1992இல் நரசிம்ம ராவ் தடை விதித்தபோது அது கேலிப்பொருளாகவே மாறிவிட்டது. எனவே திருமாவளவனும், சீமானும் மட்டுமல்ல, அவர்களது முப்பாட்டன்கள் வந்தாலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வளர்ச்சிக்கு தடையாக முடியாது. ஏனெனில் இது தேசபக்தர்களின் கூட்டம்; சுயநலம் பிடித்த சிறுநரிகளால் சிங்கங்களை ஏதும் செய்ய முடியாது.
We stand with RSS. Though I could not join Shakas during my younger days, I heart and soul wish to be a part of RSS.
I am 63 years old now and if some one could suggest what I can do I shall be thankful.