தமிழகத்தின் தலைசிறந்த கல்வெட்டாய்வாளர்களுள் ஒருவரான புலவர்.செ.இராசு அவர்களின் இறப்புக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 85 வயதினை நிறைவு செய்து, நிறை வாழ்வு வாழ்ந்து மறைந்துள்ள அப்பெருந்தகை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார்.
1960-61ஆம் ஆண்டளவில், ஈரோடு மாவட்டம் சென்னிமலையிலுள்ள கொமரப்பா செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தபோது அறச்சலூர் இசைக் கல்வெட்டைக் கண்டறிந்து தொல்லியல் துறைக்குத் தெரிவித்து அந்த பிராமிக் கல்வெட்டு உலகறிய வெளிப்படுத்தப்படக் காரணமாக இருந்தவர். இச்செய்தி அவரே என்னிடம் நேரில் தெரிவித்த செய்தியாகும், (மேற்குறித்த மேல்நிலைப் பள்ளியில் 1962-64ஆம் ஆண்டுகளில் 6,7ஆம் வகுப்புகளில் படித்தவன் நான் என்றாலும், எனக்கு அப்போது அவருடன் அறிமுகம் இருந்ததில்லை).
கொடுமணல் அகழாய்வுக்கு மூல காரணமாக இருந்தவர் புலவர் இராசு அவர்களே. பதிப்பிக்கப்படாமலிருந்த கொடுமணல் ஏட்டுச் சுவடி இலக்கியங்களின் பதிப்பாசிரியராக இருந்தவரும் அவரே ஆவார். 1981ஆம் ஆண்டில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையொட்டி இந்நூல் “கொடுமணல் இலக்கியங்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பதிப்பிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அவர்களின் முன்னோர் கொங்கு நாட்டிலிருந்து கேரள மாநிலத்திற்குக் குடிபெயர்ந்தவர்கள் என்ற வரலாற்று உண்மையினை ஆவண ஆதாரத்தின் அடிப்படையில் ஆராய்ந்து எழுதினார்.இந்நூல் “செந்தமிழ் வேளிர் எம்.ஜி,ஆர்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
புலவர்.இராசு அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டுத் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்தபோது தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள் , தஞ்சை மராட்டியர் செப்பேடுகள், சேதுபதி செப்பேடுகள், கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள் முதலான இவருடைய நூல்கள் வெளிவந்துள்ளன.
புலவர் இராசு அவர்களுடன் 1980ஆம் ஆண்டில் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது, அதன் பிறகு அவர்பால் எனக்கு மரியாதையுடன் கூடிய நட்பும், என் பால் அவருக்கு சுமுகமான நட்பும் தொடர்ந்தன. இது தொடர்பாகக் குறிப்பிடத்தக்க செய்தி ஒன்று உண்டு. 2008ஆம் ஆண்டில் மு.கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, தை மாதத் தொடக்கமே தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றப்பட்டது. அப்போது தினமணி நாளிதழில் “சித்திரையில் தான் புத்தாண்டு” என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை வெளிவந்ததன் விளைவாக, அரசியல் சார்ந்த கொந்தளிப்பை ஏற்படுத்தும் சர்ச்சை உருவாயிற்று. அக்கட்டுரைக்கு எதிர்வினையாக ஆதரித்தும் எதிர்த்தும் வாசகர்களின் கடிதங்கள் பல தினமணியில் வெளிவந்தன. தினமணியின் முன்னாள் ஆசிரியரும் தலைசிறந்த கல்வெட்டு ஆய்வாளருமான ஐராவதம் மகாதேவன் அவர்கள் என் கருத்துக்கு எதிராக வாதிட்டார் . புலவர் செ.இராசு அவர்கள் , என்னுடைய கருத்தை ஆதரித்து ஆணித்தரமாக எழுதியிருந்தார். இந்தச் சர்ச்சை ஓரிரு நாள்கள் நடந்து முடிந்த பின்னர் புலவர் இராசு அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். அப்போது அவர் தெரிவித்த ஒரு செய்தி நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
அப்போதைய ஈரோடு மாவட்ட ஆட்சியர் புலவர் இராசு அவர்களைத் தம் அலுவலகத்திற்கு அழைத்துத் தினமணியில் புலவர் இராசு பெயரில் வெளியான கடிதம், தம்மால் எழுதப்பட்டது அன்றென்றும் வேறு யாரோ தமது பெயரில் எழுதிவிட்டார் என்றும் ஒரு கடிதம் எழுதித் தினமணி நாளிதழுக்கு அனுப்புமாறு புலவர் இராசு அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். இராசு அவர்கள் திகைத்துப் போய் “ அந்தக் கடிதத்தை நானே தான் தினமணிக்கு எழுதியனுப்பினேன் ; சித்திரைப் புத்தாண்டு தொடர்பான இராமச்சந்திரன் அவர்களின் கருத்துடன் எனக்கு முற்றிலும் உடன்பாடு உண்டு.மேலும் சங்க காலத்தில் தமிழ்ப் புத்தாண்டு நாளான சித்திரை முதல் நாளில் தான் மதுரையில் தமிழ்ச் சங்கம் கூடிற்றென்பது கலித்தொகையால் தெரியவருகிறது. அதன் அடிப்படையில் தமிழறிஞர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க எம்.ஜி.ஆர் மதுரையில் தமிழ்ப் புத்தாண்டு நாளில் தான் தமிழ்ச் சங்கத்தை உருவாக்குவதற்குக் கால்கோளிட்டார்”. என்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மறுமொழி கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியரோ “ கலைஞர் உங்கள் மீது மிகவும் வருத்தத்திலிருக்கிறார். தினமணியில் வெளிவந்த கடிதம் உங்களால் எழுதப்படவில்லையென்றும் வேறு யாரோ உங்கள் பெயரில் எழுதி அனுப்பிவிட்டாரென்றும் நீங்களே ஒரு கடிதம் எழுதுமாறு கலைஞரே கேட்டுக்கொண்டாரென்று கலைஞரின் நேர்முக உதவியாளர் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்” என்று கூறியிருக்கிறார். புலவர்.இராசு அவர்கள் மீண்டும் தமது நிலைப்பாட்டை மென்மையாகவும், அதே நேரத்தில் உறுதிபடவும் வலியுறுத்திக் கூறிவிட்டுத் திரும்பிவிட்டார். ஒரு சலனப் படக் காட்சியைப் போன்று .இந்த நிகழ்வு குறித்து இராசு அவர்கள் தொலைபேசியில் விவரித்தமை என் நினைவில் ஆழமாகப் பதிந்துள்ளது.
தாம் சரியென்று மனப்பூர்வமாக நினைக்கிற ஒரு கருத்தினை வெளிப்படுத்துவதில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் உறுதியாக நிற்கிற மனிதர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே. அருகி வருகிற அத்தகைய உயர்ந்த மனிதர்களுள் புலவர் இராசு அவர்களும் ஒருவராவார். “பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளாத” இத்தகைய மனிதர்களால் தான் “உண்டாலம்ம இவ்வுலகம்” (இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது).
(கல்வெட்டு ஆய்வாளர், வரலாற்றாசிரியர் எஸ்.ராமச்சந்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).