- ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 1
- ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 2
- ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 3
- ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 4
- ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 5
முகப்பு
ஆரிய படையெடுப்பு என்ற கோட்பாட்டை, கிழக்கிந்திய நிறுவனத்தில் வேலை செய்த மாக்ஸ் முல்லர் முதலில் எடுத்துரைத்தார். அதன் பின்னர் பல மேலை நாட்டு அறிஞர்கள், பல்வேறு மொழியியலாளர்கள் மற்றும் இந்தியவியலாளர்கள் ஆகியோர், ஒரு பொய்யை திரும்ப திரும்பக்கூறினால் அதை மக்கள் நம்பிவிடுவார்கள் என்பதற்கிணங்க, பல நூறு வருடங்களாக இந்த கோட்பாட்டை கட்டுக்கதையாகப் தொடர்ந்து பரப்பிவருகின்றார்கள். இதை உண்மையென்று நம்பிய பல இந்திய அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும், இந்திய நாட்டில் மக்களிடையே ஆரிய திராவிட பிரிவினைக்கருத்தை தூவி, மக்களிடையே தவறான கருத்துக்களை வளர்த்து வருகின்றனர். இந்த பிரிவினைக்கருத்தை முறியடிக்கும் நோக்கத்துடன், கேள்வி பதிலாக இந்தக்கட்டுரை வரையப்பட்டுள்ளது.
ஆரிய படையெடுப்பு கோட்பாடு (AIT) என்றால் என்ன?
இந்தக் கோட்பாட்டின்படி, கிமு 1500 ம் ஆண்டளவில் வட இந்தியாவானது, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவின் எல்லைப் பகுதியில் நாடோடிகளாகத் திரிந்து கொண்டிருந்த வெளிர் தோலுடைய ‘ஆரியர்கள்’ என்ற இனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. இந்த படையெடுப்பானது, ஏற்கனவே வட இந்தியாவில் வாழ்ந்து வந்த மேம்பட்ட நாகரிகத்தை அழித்து, அவர்கள் மீது ஆரியர்களின் கலாச்சாரம் மற்றும் மொழியை திணித்தது. அத்துடன் ஹைபர் கணவாயூடாக இந்தியாவிற்குள் வந்தார்களென்றும், சிந்து சமவெளியில் வாழ்ந்த திராவிட மக்களை தென்னிந்தியாவிற்கு இடம் பெயர வைத்தார்களென்றும் இந்தக் கட்டுக்கதை சொல்லப்பட்டது.
ஆரிய படையெடுப்பு என்ற கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது : “ஆரியர்” என்பது ஒரு இனக்குழு, அவர்களின் படையெடுப்பு, அவர்கள் நாடோடிகள், வெளிர் தோல் உடையவர்கள், அவர்களுடைய வசிப்பிடம் இந்தியாவுக்கு வெளியே இருந்தது, அவர்களின் படையெடுப்பு கிட்டத்தட்ட கிமு 1500 இல் நிகழ்ந்தது, ரதங்கள் மற்றும் குதிரைகளுடன் வந்து, அவர்கள் சிந்து நதி பள்ளத்தாக்கை மூழ்கடித்து கைப்பற்றி சிந்து சமவெளியில் வாழ்ந்து வந்த மக்களின் மேம்பட்ட நாகரீகத்தை அழித்தார்கள். ஆரிய படையெடுப்பு என்ற கோட்பாட்டின் வாதத்தை முன்வைப்போர் கற்பனையின் அடிப்படையிலான, நற்சிந்தனை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாத முடிவுகளுக்கு ஆதரவாக பின்வரும் வாதங்களை முன்வைக்கின்றனர் :-
- படையெடுப்பு: வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள பலவிதமான போர்கள் மற்றும் மோதல்கள், மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் தோண்டப்பட்ட இடங்களில் கண்டறியப்பற்ற எலும்புக்கூடுகள்
- நாடோடி, வெளிர் நிறமுள்ள மக்கள்: இது வேத துதிகளின் தவறான விளக்கம் மற்றும் முற்றிலும் அனுமானத்தின் அடிப்படையிலானது.
- சிந்து நாகரிகத்தின் ஆரியர் அல்லாத/திராவிட இயல்பு: ஹரப்பன் தளங்களின் ஆரம்பகால அகழ்வாராய்ச்சியின் போது குதிரை இல்லாதது, சிவபெருமானின் சின்னம் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் அதனால் சிவனை வழிபடுபவர்களாக கருதுவது போன்றவை.
- படையெடுப்பு நடந்த வருஷம்- கிமு 1500 : இது ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த காலத்தைப் பற்றிய தன்னிச்சையான ஊகத்தின் அடிப்படையிலான மதிப்பீடு ஆகும்.
- ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்-முல்லர், ஆரியர்களின் பூர்வீகம் காஸ்பியன் கடலுக்கு அருகில் எங்கோ இருப்பதாக நினைத்தார். ஆரியர்களின் ஒரு குழு அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்ந்தது என்றும், மேலும் இரண்டு குழுக்கள் பேர்சியாவிற்கும் இந்தியாவிற்கும் வந்ததாகவும் கூறினார். இந்தியாவிற்கு குடிபெயர்ந்த ஆரியர்கள் “இந்தோ-ஆரியர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், கி.மு. 1,500 இல், காஸ்பியன் கடலுக்கு அருகில் இருந்து வந்த ஆரியர்கள் தென்னிந்தியாவிற்கு திராவிடர்களை விரட்டியடித்து, இந்தியாவை ஆக்கிரமித்தார்கள் என்று ஆரிய படையெடுப்பு கோட்பாடு கூறுகிறது. இந்த ஆரியர்கள் சமஸ்கிருத மொழியின் தாய் என்று கருதப்படும் புரோட்டோ இந்தோ ஐரோப்பிய (P.I.E) என்ற மொழியைப் பேசுவதாகக் கருதப்பட்டது. பின்னர் அவர்கள் P.I.E இலிருந்து சமஸ்கிருத மொழியை உருவாக்கி வேத சாஸ்திரங்களை இயற்றினார்கள். எவ்வாறாயினும், ஆரிய படையெடுப்பு என்ற கோட்பாடு ஆனது இந்தியாவின் ஒற்றுமை உணர்வைக் குலைக்க வேண்டும், இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப வழி வகுக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கங்களைக் கொண்டு பரப்பப்பட்ட பொய்ச்செய்தியாகும்.
ஆரிய படையெடுப்பு கோட்பாட்டை பரப்பியவர் யார்?
ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற இந்தியவியலாளரான மாக்ஸ் முல்லர், 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆரிய இனக் கோட்பாட்டை பிரபலப்படுத்தியவர் ஆவார். அவர் 1840 களில் கிழக்கிந்திய நிறுவனத்தில் பணிபுரிந்தார். 1847 இல், அவர் வேதங்களின் மொழிபெயர்ப்புகளை இந்துக்கள் நம்பிக்கை இழக்கும் வகையில் இழிவான முறையில் எழுதினார். அவரது தனிப்பட்ட கடிதங்கள் இந்த உண்மையை வெளிப்படுத்துகின்றன. அவர் தனது மனைவி, தாய் மற்றும் பிறருக்கு எழுதிய கடிதங்கள், இந்துக்களின் மதம் அழிந்துபோக வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவத்தை இந்தியாவிற்குள் கொண்டு வர வேண்டும் என்று அவர் தீர்மானமாக இருந்தார் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது.
ஆரியப் படையெடுப்பு கோட்பாட்டை தொடக்கிவைத்த மாக்ஸ் முல்லர் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறுகிறார் :- “ ஆப்பிரிக்கா முழுவதையும் கிறிஸ்தவமயமாக்க 200 ஆண்டுகள் மட்டுமே ஆனது, ஆனால் 400 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவை கிறிஸ்தவமயமாக்க நம்மால் முடியவில்லை. சமஸ்கிருதம்தான் இந்தியாவைச் கிறிஸ்தவமயமாக்க விடாமல் செய்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். இந்தியாவின் ஆன்மா சமஸ்கிருதத்தில் இருப்பதால் அதை உடைக்க நான் சமஸ்கிருதம் கற்க முடிவு செய்துள்ளேன்” .
மாக்ஸ் முல்லர் தனது மற்றுமொரு கடிதம் ஒன்றில், “இந்திய சமய குருமாருடைய புராதன வழிபாட்டு முறைகளை அகற்றி, எளிய கிறிஸ்தவ போதனையின் நுழைவுக்கான வழியைத் திறந்துவிடக்கூடிய ஒரு வேலையில் நான் பங்குகொள்ளத் தகுதியுள்ளவனா என்பதையும் பார்க்கவுள்ளேன். இந்தியாவில் எது வேரூன்றுகிறதோ அது விரைவில் முழு ஆசியாவிலும் பரவிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று கூறியுள்ளார்.
பின்னாளில், சமஸ்கிருத சாஸ்திரங்களில் எங்கும் ஆர்யா என்ற சொல் ஒரு இன மக்களைக் குறிக்கவில்லை என்ற கருத்து வலுப்பெற்று, சமஸ்கிருத அறிஞராக மாக்ஸ் முல்லரின் நற்பெயருக்குச் சேதம் ஏற்பட்டு, அவரது சகாக்கள் அவர்மீது சவால் விடப்பட்டனர். அப்போது, மாக்ஸ் முல்லர் சமஸ்கிருத சாஸ்திரங்களில் எங்கும் ஆர்யா என்ற சொல் ஒரு இன மக்களைக் குறிக்கவில்லை, ஆரியம் என்பது மொழிவழிக் குடும்பத்தை மட்டுமே குறிக்கும் என்றும் ஒரு இனத்திற்குப் பொருந்தாது என்றும் மறுத்து உச்சரித்தார். ஆனால் அவருடைய நற்பெயருக்கு ஏற்கனவே களங்கம் ஏற்பட்டுவிட்டது.
ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அரசியல் மற்றும் தேசியவாதக் குழுக்கள் வெள்ளையர்கள் ஆரிய இனமென்ற மேலாதிக்கத்தைப் பிரச்சாரம் செய்வதற்காக இந்த இனவாத நிகழ்வைப் பயன்படுத்திக் கொண்டன. மாக்ஸ் முல்லர் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தின்படி, இந்துக்கள் நம்பிக்கை இழக்கும் வகையில் வேதங்களை மொழிபெயர்ப்பதில் அவர் குறிப்பாக பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த திட்டமிட்ட பிரசாரத்தின் தொடர்ச்சியாக, இந்தியாவின் ஆளும் சுப்ரீம் கவுன்சிலின் உறுப்பினரான லார்ட் மெக்காலே, பிரிட்டிஷ் கல்வி முறையைப் பின்பற்றி இந்தியாவில் ஒரு கல்வி முறையை அமைப்பதன் மூலம் பிற்கால தலைமுறையினர் தங்கள் வேதங்கள் சார்ந்த கல்வி முறைகளிகளுடைய வேர்களிலிருந்து வெற்றிகரமாக துண்டிக்கப்படுவதற்கு வித்திட்டார்.
இப்படி ஒரு கட்டுக்கதையை உருவாக்கியதன் நோக்கம் என்ன?
பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளில் சில ஒற்றுமைகள் இருந்தன. சமஸ்கிருதம் கற்கும் வரை ஐரோப்பியர்களுக்கு எப்படி இந்த ஒற்றுமைகள் வந்தன என்று தெரியவில்லை. சமஸ்கிருத மொழியைப் படித்த பின்புதான், அவர்கள் தங்கள் மொழி சமஸ்கிருதத்துடன் தொடர்புடையது என்பதை உணர்ந்து கொண்டனர். அத்துடன் சமஸ்கிருதத்தை அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் மூத்த சகோதரியாக உள்ளதை உணர்ந்து கொண்டனர். இத்தகைய சொற்களஞ்சியம் மற்றும் இலக்கணத்துடன் நன்கு வளர்ந்த மொழி இந்தியாவில் தோன்றியிருக்கலாம் என்ற உண்மையை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, அவர்கள் சமஸ்கிருதத்திற்கு முன்னோடியாக புரோட்டோ-இந்தோ-ஐரோப்பிய என்ற ஒரு மொழியிருப்பதாகவும், இந்த மொழியை ஆரிய இனம் பேசுவதாகவும் ஒரு கருதுகோளை உருவாக்கி, இந்த மொழியானது ஐரோப்பாவில் தோன்றி பின்னர் ஆரிய படையெடுப்பு கோட்பாட்டுடன் இந்தியாவிற்கு பரவியதாக ஒரு செய்தியைப் பரப்பினார்கள்.
மேலும், பிரித்து ஆளும் கொள்கையுடன் இந்தியாவை ஆள நினைத்தவர்கள், இந்திய மக்களைப் பிரித்து பிரிவினையை உருவாக்க ஆரிய-திராவிடக் கட்டுக்கதையை உருவாக்கினார்கள். ஆரியர்கள், திராவிடர்களை தென்னிந்தியாவிற்கு விரட்டிய பின், ரிக் வேதம் மற்றும் பிற வேத சாஸ்திரங்களை இயற்றுவதற்காக வடமேற்கு இந்தியாவின் ஆறுகள் மற்றும் காடுகளுக்கு இடையே அமைதியான கிராமப்புற வாழ்க்கைக்கு குடியேறினார்கள் என்பதாக இந்த கட்டுக்கதை சொல்லப்ப்பட்டது.
வேத சாஸ்திரங்களின்படி ஆரியர் யார்?
வேத சாஸ்திரங்களின்படி “ஆர்யா” என்ற சொல் வேதங்கள் மற்றும் வேத சாஸ்திரங்களின் மரபுகளை தவறாமல் பின்பற்றும் மக்களைக் குறிக்கின்றது. ஆரியர்களின் நாகரிகத்தின் முற்போக்கான வளர்ச்சிதான் வேதகால வாழ்க்கை முறையாகும். அந்தஸ்து மற்றும் சமூக ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் மனிதகுலத்தின் கடமைகள் நாகரிக மனிதர்களால் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதற்காக நிறுவப்பட்டது. பாரம்பரியமாக இந்தக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் ஆரியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மேலும், வேத சாஸ்திரங்களின் வழியை பின்பற்றி யாகங்கள்,ஹோமங்கள் வளர்ப்பது , வேதங்களைப் படிப்பது மற்றும் நல்ல நடத்தைகளைப் பயிற்சி செய்வது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர். எனவே, ஆரியர்கள் என்றால் வேதநாகரீகத்தை பின்பற்றுபவர்களும், வேத சடங்குகளின்படி ஒழுங்குபடுத்தப்பட்ட பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பவர்களும் ஆவார்கள்.
ஸ்ரீமத் பாகவத காண்டம் 6 அத்தியாயம் 16 ஸ்லோகம் 43 பின்வருமாறு கூறுகிறது: இறைவனின் மேற்பார்வையின் கீழ் தங்கள் தொழில் கடமைகளைப் பின்பற்றுபவர்கள், அனைத்து உயிரினங்களையும் சமமாக நடத்துபவர்கள், உயர்வு மற்றும் தாழ்வு என்ற பேதமை பாராமல் வாழ்பவர்கள் ஆரியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். வேத சாஸ்திரங்களின் மரபுகளின்படி தங்கள் வாழ்க்கையின் உயரிய இலட்சியங்களையும் பிறவிப்பயனையும் அடைவதற்காக, அத்தகைய ஆரியர்கள் இறைவனை வணங்குகிறார்கள்.
“ஆர்யா” என்று நாம் கூறும்போது, அது ஒரு இனக்குழு மக்களைக் குறிக்கவில்லை. வால்மீகி ராமாயணத்தில், ராமர் பின்வரும் வார்த்தைகளில் ஒரு ஆரியராக விவரிக்கப்படுகிறார்: ஆரியர் – அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவபர். அத்துடன் அனைவருக்கும் பிரியமானவர். இத்தகைய மரபுகளைப் பின்பற்றாதவர்கள் வேத சாஸ்திரங்களில் “அனார்யா” அல்லது “அனிந்திரன்” என்ற எதிர்ச் சொற்களால் விவரிக்கப்பட்டுள்ளனர். இது “சூரா” மற்றும் “அசுர” என்று அழைப்பதைப் போன்றது.
ஆரியனுக்கு எதிர்ச்சொல் – அனார்யன்
ஆரியனுக்கு எதிர்ச்சொல் அனார்யன் ஆகும். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறியது போல் அனாரியன்கள் பின்வரும் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். பகவத் கீதை அத்தியாயம் 7 ஸ்லோகம் 15 ல் சொல்லியதுபோல், மிகவும் அறிவு குறைந்தவர்களாகவும் , மனித குலத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களும் , மாயையால் ஞானம் இழந்தவர்களும் , அசுரர்களின் நாஸ்திக குணத்திலுள்ளவர்களும் பகவான் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை.
பொருளாதார முன்னேற்றமென்ற போர்வையில் நவீன நாகரீகம், மிகப்பெரிய சாலைகள், வீடுகள், ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மகத்தான ஏற்பாடுகளை செய்கிறது. இதையே நாகரிகத்தின் முன்னேற்றம் என்று மனிதர்கள் கருதுகிறார்கள். ஆனால், அவர்களுடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப, எந்த நேரத்திலும் அவர்களுடைய ஆத்மா இந்த உலகை விட்டு நீங்கி, இந்த மகத்தான வீடுகள், அரண்மனைகள், சாலைகள் மற்றும் வாகனங்களுடன் எந்த தொடர்பும் இல்லாத சரீரங்களை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடும் என்பது அவர்களுக்குத் தெரியாது.
எனவே, அர்ஜுனன் தனது உறவினர்களுடனான சொந்த பந்தங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தபோது, கிருஷ்ணர் உடனடியாக அவரைத் கண்டித்து பகவத் கீதை அத்தியாயம் 2 ஸ்லோகம் 2 ல் பின்வருமாறு தெரிவித்தார்.
“அர்ஜுனா, உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் மற்றும் இவ்வுள்ளச் சோர்வு இந்நெருக்கடியில் எங்கிருந்து வந்தன? அறிவில் முன்னேறாத ஆரியர் அல்லாத அனார்யர்களுக்கே இந்த உடல் சார்ந்த வாழ்க்கைக் கருத்துகள் பொருந்தும். இவை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்வதில்லை, ஆனால் அவமானத்தையே கொடுக்கின்றன.”
பரம புருஷ பகவானின் முன்னிலையில், அர்ஜுனன் தன் உறவினர்களுக்காக புலம்புவது நிச்சயமாக பொருத்தமற்றது. எனவே கிருஷ்ணர் “எங்கிருந்து” என்ற வார்த்தையால் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். ஆரியர்கள் எனப்படும் நாகரீக வர்க்கத்தைச் சேர்ந்த ஷத்திரியர் ஒருவரிடமிருந்து இதுபோன்ற உணர்வுகளை பகவான் கிருஷ்ணர் எதிர்பார்க்கவே இல்லை. ஆரியர் என்ற சொல், வாழ்க்கையின் தத்துவத்தை அறிந்தவர்களுக்கும் ஆன்மீக அனுஸ்டானம் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தின் அடிப்படையிலான வாழ்க்கை முறையைக் கைக்கொண்டவர்களுக்குமே பொருத்தமானது ஆகும்.
லௌகீக வாழ்க்கையில் இந்திரியப் பிரீதியே முக்கியம் என்ற கருத்தாக்கத்தால் வழிநடத்தப்படுபவர்கள், வாழ்க்கையின் முக்கிய நோக்கம் பகவான் கிருஷ்ணரை உணர்ந்து கொள்வது என்பது தெரியாமல் இருக்கிறார்கள். மேலும், அவர்கள் லௌகீக வாழ்க்கையின் வெளிப்புற அம்சங்களால் கவரப்படுகிறார்கள், எனவே அவர்களுக்கு முக்தி என்றால் என்னவென்று தெரியாது. இந்த லௌகீக பந்தத்திலிருந்து விடுபடும் அறிவு இல்லாதவர்கள் ஆரியரல்லாதவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். எனவே, புனரபி ஜனனம் புனரபி மரணம் என்று சங்கராச்சாரியர் கூறியபடி அவர்கள் இந்த சம்சார பந்தத்தில் சிக்கித் தவிக்கிறார்கள்.
(தொடரும்)