ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 4

ஆரிய படையெடுப்பு கோட்பாட்டில் உள்ள முக்கிய குறைபாடுகள் என்ன?

தத்துவம், கணிதம், தர்க்கம், வானியல், மருத்துவம் மற்றும் பிற விஞ்ஞானங்களுக்கு வேத உலகின் பங்களிப்புகள், மனிதகுலத்தின் பொதுவான பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதற்கான அடித்தளங்களில் ஒன்றை வழங்கியது மட்டமன்றி, வேத உலகின் பங்களிப்புகள் நன்கு அங்கீகரிக்கப்பட்டும் உள்ளன. ஆனால், வேதங்கள் கிமு 1500 க்குப் பிறகு இயற்றப்பட்டது எனக் கொள்ளப் பட்டால், ஆரிய நாகரீகம் இந்த குறுகிய காலத்துக்குள் வளர்ந்ததாகக் கொள்ள முடியாது. ஆரிய படையெடுப்பு கோட்பாட்டின் ஒரு பெரிய குறைபாடு என்னவென்றால், ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்திருந்தால், கிமு 1500 ஆண்டளவில் எழுதப்பட்டதாக சொல்லப்படும் வேத சாஸ்திரங்கள் இந்தியாவிற்கு வெளியே எந்தப் பகுதியையும் புனித ஸ்தலமாகக் குறிப்பிட்டு சொல்லவில்லை என்பதற்கான விளக்கம் ஏதும் இல்லை. மேலும், ரிக் வேதத்தில் உள்ள வானியல் குறிப்புகள் கிமு 3000 மற்றும் அதற்கு முந்தைய நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றன. இது கிமு 3000 க்கு முன்னமே வேத ஸ்லோகங்கள் நடப்பில் இருந்ததைக் குறிக்கிறது.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன், வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்கள் கலாச்சார ரீதியாக ஒருவருக்கொருவர் விரோதமாக இருந்ததில்லை. இரு பிராந்தியங்களுக்கிடையில் இடைவிடாத தொடர்புகள் மற்றும் கலாச்சார பரிமாற்றம் இருந்து வந்துள்ளது. ஆரிய மொழி என்று அழைக்கப்படும் சமஸ்கிருத மொழி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முழு சமூகத்தின் மக்களிடையே தகவல்தொடர்புக்கான வழிமுறையாகப் பயன்படுத்தப்பட்ட மொழியாகும். சங்கராச்சாரியார், மாதவாச்சாரியார், ராமானுஜாச்சாரியார், விஷ்ணுஸ்வாமி மற்றும் நிம்பர்காசாரியார் ஆகிய ஐந்து பெரிய பக்தி பரம்பரைகளின் ஆசார்யர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள். அவர்கள் வட இந்தியாவிலும் ஆசார்யகளாக மதிக்கப்படுகிறார்கள்.மேலும், எல்லா மக்களின் நலனுக்காக சமஸ்கிருதத்தில் வேத சாஸ்திரங்களுக்கு விளக்கவுரைகளை எழுதியுள்ளனர். இதைவிட , பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்து, வங்காளத்திலிருந்து கன்யாகுமாரிக்கும் பின்பு மஹாராஷ்டிரம் மற்றும் விருந்தாவனத்திற்கு பாதயாத்திரையாக சென்று கலியுகத்தின் யுகதர்மமான ஹரி நாம சங்கீர்த்தனத்தை இந்தியா முழுவதும் பரப்பினார். இதன் மூலம் இந்தியா முழுவதும் சனாதன தர்மம் வடக்கு தெற்கு என்ற பிராந்திய வேறுபாடின்றி பரவியிருந்ததை நாம் காணலாம்.

புகைப்பட ஆதாரம் : The Bhaktivedanta Book Trust

ஹரப்பாவில் வசித்தவர்களின் மதச் சடங்குகள் வேத ஆரியர்களின் மதச் சடங்குகளைப் போலவே இருந்தன என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. அவர்களின் மத உருவங்கள், தெய்வங்கள் மற்றும் பலிபீடங்கள் ஆரிய நம்பிக்கையைப் போலவே இருந்தன. இது,இப்பகுதியில் வேத நாகரிகம் செழித்து வளர்ந்ததையே காண்பிக்கிறது.

ரிக்வேதத்தில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு போர்கள், மோதல்கள் மற்றும் படையெடுப்புகள் என்பன, வெள்ளை நிற ஆரியர்களுக்கும் இருள் நிறமுள்ள பழங்குடியினருக்கும் இடையேயான படையெடுப்பு மற்றும் போர்களின் ஆதாரமாக அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகின்றன. ரிக்வேதத்தில் கூறப்படும் மோதல்கள் மற்றும் போர்கள் என்று அழைக்கப்படுபவை உயர்ந்த கிரகங்களில் உள்ள தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான போர் என்றும், இந்தப்பிராந்தியத்தில் அவ்வப்போது ஆட்சி செய்த பல்வேறு மன்னர்களுக்கு இடையிலான போர் என்றும் வகைப்படுத்தலாம். எனவே, வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள போர்கள் ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையே நடந்த போர்கள் அல்ல.

ஆரியர்கள் குதிரையில் சவாரி செய்தார்கள், போக்குவரத்திற்கு தேர்களைப் பயன்படுத்தினார்கள், மேலும் ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோவின் ஆரம்ப இடங்களில் குதிரையின் அடையாளங்கள் எதுவும் காணப்படாததால், சிந்து சமவெளியில் வசிப்பவர்கள் ஆரியர்களாக இருக்க முடியாது என்றும் வாதிடப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அகழ்வாராய்ச்சியின் போது, ​​பல தளங்களின் அகழ்வாராய்ச்சி முழுமையடையவில்லை. சிறிது காலத்தின் முன்பாக , சிந்து பள்ளத்தாக்கு மற்றும் வறண்ட சரஸ்வதி நதியை ஒட்டிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பல இடங்களில் வளர்ப்பு குதிரைகளின் எலும்புகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இது சிந்து பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள, ஆரியரல்லாதவர்கள் என்ற வாதத்தை தோற்கடிப்பதுடன், வேத கலாச்சாரத்தை சிந்து சமவெளி நாகரிகத்துடன் அடையாளப்படுத்துகிறது.

மேலும், 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டெல்லிக்கு அருகிலுள்ள சனௌலியில் ஏறக்குறைய 4,000 ஆண்டுகள் பழமையான செப்புத் தேர் கண்டுபிடிக்கப்பட்டமையானது ஏற்கனவே அந்த ரதங்கள் இந்தியாவின் நாகரிகத்தில் பயன்பாட்டில் இருந்தன என்பதைக் குறிக்கின்றது. இந்த தேர் பற்றிய கண்டுபிடிப்பு, 5500 ஆண்டுகள் பழமையான குதிரை எலும்புகள், 4500 ஆண்டுகள் பழமையான இரதங்கள் பற்றிய மத்திய இந்திய பாறைக் கலையில் உள்ள பல்வேறு கண்டுபிடிப்புகள், 1500 கி.மு காலத்தில் ஆரிய படையெடுப்பு என்று அழைக்கப்படுவதற்கு முன்பே இந்தியாவில் ரதங்களும் குதிரைகளும் பயன்படுத்தப்பட்டன என்பதைக் குறிக்கிறது.

கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் மதங்களின் புனித நூல்கள் இந்தியாவிற்கு வெளியே உள்ள இடங்களை புனித ஸ்தலங்கள் என்று அழைக்கின்றன. ஏனெனில், இந்த மதங்கள் இந்தியாவுக்கு வெளியே இருந்து வந்துள்ளன. ஆரிய இந்துக்கள் வெளியிலிருந்து வந்த மனிதர்களாக இருந்திருந்தால், இந்தியாவிற்கு வெளியே உள்ள இடங்களை அவர்களின் புனித இடங்கள் என்று ஏன் பெயரிடுவதில்லை என்ற கேள்வி எழுகிறது. வேத சாஸ்திரங்கள், இந்திய தீபகற்பம் முழுவதையும் கடந்து செல்லும் இந்தியாவின் எண்ணற்ற ஆறுகள், உயிர் கொடுக்கும் நீர்நிலைகள், மற்றும் இயற்கை வளங்களின் களஞ்சியங்களான மலைகளை ஏன் புகழ்ந்து பாட வேண்டும். அதற்கு மேலே சென்று, நதிகளுக்கு பெண் தெய்வங்கள் மற்றும் கடவுள்களின் அந்தஸ்தை கூட வழங்கியுள்ளன. ஆரியர்கள் வெளிநாட்டினராக இருந்திருந்தால், அவர்களின் பூர்வீக நிலத்தை ‘புனித பூமி’ என்று கருதாமல், ஏன் இந்தியாவை ‘புனித பூமி’ என்று கருத வேண்டும்?

மேலும், வேத சாஸ்திரங்கள் சரஸ்வதி நதி இருப்பதையும், இமயமலையில் இருந்து வருகின்ற நதிகளின் கரையோர நாகரிகம் பற்றி பேசுகின்றன. இந்த சரஸ்வதி நதி 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாகவும், பின்னர் சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு வறண்டதாகவும் நவீன ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்கிறார்கள். ஆரியப் படையெடுப்பை நிராகரிக்க சரஸ்வதி நதி இருந்தது என்ற ஆதாரம் ஒன்றே போதுமானது. சமஸ்கிருதம் ஏற்கனவே 10,000 முதல் 4,500 ஆண்டுகளுக்கு மத்தியில் வழக்கில் இருந்தபோது, 3500 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஆரியர்களின் படையெடுப்பு சமஸ்கிருதத்தை இந்தியாவிற்குள் கொண்டு வந்ததாகக் கூறப்படுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம் ஆகும்.

சனாதன தர்மத்தின் ஏழு புனித நகரங்களில் (சப்த புரி) தெற்கில் காஞ்சிபுரம், மேற்கில் துவாரகா, வடக்கில் அயோத்தியா, மதுரா, ஹரித்வார், காசி மற்றும் மத்திய இந்தியாவில் உஜ்ஜயினி ஆகியவை அடங்கும். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், ஆந்திராவில் ஸ்ரீசைலம், மகாராஷ்டிராவில் நாசிக், ஔரங்கபாத் மற்றும் பூனா , ஜார்கண்டில் வைத்திய நாத், குஜராத்தில் சோம்நாத் மற்றும் நாகேஸ்வர்,மத்ய பிரதேசத்தில் உஜ்ஜயின் மற்றும் காண்ட்வா, உத்தரகாண்டில் கேதார்நாத் மற்றும் உத்தரபிரதேசத்தில் காசி ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமே அமைந்துள்ளன. சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஆரிய நாகரீகம், இந்தியாவின் அனைத்துப் புவியியல் பகுதிகளையும் உள்ளடக்கியது. அத்துடன் சனாதன தர்மம் இந்தியாவிற்கு வெளியே எந்தப் பகுதியையும் புனித ஸ்தலங்களாகக் கருதவில்லை.

பண்டைய காலங்களில் கூட பௌதாயனர் மற்றும் ஆபஸ்தம்பர் போன்ற சிறந்த தர்மசூத்ர ஆசிரியர்கள் சிலர் தெற்கிலிருந்து வந்தவர்கள். புகழ்பெற்ற வேத ரிஷியான அகஸ்தியர், தென்னிந்தியாவிற்கு வேத சாஸ்திரங்களையும் தமிழ் மொழியையும் அறிமுகப்படுத்தியவர் என்று பரவலாகப் போற்றப்படுகிறார்.

மேலும், சிந்து சமவெளியின் பூர்வீக மக்களை கூட்டமாக இடம் பெயர வைப்பதற்கு முன்பு தென்னிந்தியா மக்கள் வசிக்காத பகுதியாக இருந்ததா ? இல்லை என்றால், தென்னிந்தியாவின் பூர்வீக குடிகள் யார் ? , புதியவர்களை எந்த விரோதமும் சண்டையும் இல்லாமல் ஏற்றுக்கொண்டவர்களா? இவற்றுக்கெல்லாம், என்ன பதில்? ஆரிய படையெடுப்பு கோட்பாட்டில் இவற்றுக்கெல்லாம் பதில் இல்லை.

சனாதன தர்மத்தின் ஏழு புனித நதிகள் இந்தியாவின் பவித்ர பூமி முழுவதையும் உள்ளடக்கியது. சிந்து மற்றும் சரஸ்வதி (இப்போது அழிந்துவிட்டது) இமயமலையில் இருந்து தோன்றி மேற்கு மற்றும் தெற்கு நோக்கி மேற்கு கடலுக்குள் செல்கின்றன. கங்கை மற்றும் யமுனை இமயமலையில் தொடங்கி கிழக்கு நோக்கி வடகிழக்கு கடலுக்குள் செல்கிறது. நர்மதை மத்திய இந்தியாவில் தொடங்குகிறது, மற்றும் கோதாவரி மேற்கு இந்தியாவில் தொடங்குகிறது. அதே சமயம் காவேரி தென்னிந்தியா வழியாக வளைந்து சென்று தெற்கு கடலுக்குள் செல்கிறது.

துவாபர யுகத்தில், கிருஷ்ணர் துவாரகா நகரத்தில் இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தார். கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு வெளியேறி கோலோக பிருந்தாவனம் சென்ற பின்பு இந்த நகரம் நீரில் மூழ்கியது. நீருக்கடியில் உள்ள இந்த நகரம் இப்போது கண்டுபிடிக்கப்பட்டதுடன், துவாரகா மற்றும் அத்துடன் தொடர்புடைய மகா பாரத காவியத்தின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகிறது. இந் நகரம் கிமு 3000 க்கு முந்தையது. ஆகவே, ஆரிய படையெடுப்பு நடைபெற்றதாகக் கூறப்படும் கிமு 1500 க்கு முன்பாகவே இந்த நகரம் இருந்துள்ளதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆரியர் இந்தியாவின் மீது படையெடுத்து இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தனர் என்பது வெறும் கட்டுக்கதை என்பதை மேற்கூறிய ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவைக் கைப்பற்றி மக்களைப் பிளவுபடுத்துவதற்காக ஜெர்மானிய அறிஞர் மாக்ஸ் முல்லர் மற்றும் பிறரால் உருவாக்கப்பட்ட பொய்ப் பிரச்சாரமே இந்த ஆரியப் படையெடுப்பு கோட்பாடு. முடிவில், ஆரியப் படையெடுப்பு கோட்பாடானது, அறிவார்ந்த நேர்மையின்மை, உண்மைகளை வேண்டுமென்றே பொய்யாக்குதல் மற்றும் பிரித்தாளும் தந்திரங்களால் இந்திய மக்களைக் கைப்பற்றும் நோக்கத்துடன் புனையப்பட்டதாகும்.

இந்திய வேத நாகரிகத்திற்கான காலவரையறை என்ன?

ஸ்ரீமத் பாகவத காண்டம் 3 அத்தியாயம் 11 ன் படி, பிரம்மாவின் ஒரு நாள் கல்பம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு கல்பத்தில் ஆயிரம் சதுர் யுகங்களும், ஒரு சதுர் யுகத்தில் சத்ய, துவாபர, திரேதா மற்றும் கலி ஆகிய நான்கு யுகங்களும் அடங்கி உள்ளன. மனித வருஷங்களின் அடிப்படையில், கீழே காட்டப்பட்டுள்ளபடி ஒவ்வொரு யுகமும் பல ஆயிரம் வருஷங்கள் நீடிக்கும். இந்த கல்பம் ஸ்வேத வராஹ கல்பம் என்றும், மனுவின் காலம் வைவஸ்வதம் என்றும் அழைக்கப்படுகிறது. பிரம்மாவின் ஒரு நாளில் பதினான்கு மனுக்கள் உள்ளனர். இப்போதுள்ள பூலோகத்தை ஆளும் மனு ஏழாவது மனுவாகும்.

ஒரு சதுர் யுகத்தில் நான்கு யுகங்கள் உள்ளன. அவையாவன , கலியுகம் – 432,000 வருஷம் , துவாபர யுகம் – 864,000 வருஷம், திரேதா யுகம் – 1,296,000 வருஷம் மற்றும் சத்திய யுகம் – 1,728,000 வருஷம் – மொத்தம் 4,320,000 வருஷங்கள். பிரம்மாவின் ஒரு நாளில் 1000 சதுர் யுகங்கள் உள்ளன. இந்த ஆயிரம் சதுர் யுகங்களில் மொத்தமாக 4,320,000,000 வருஷங்கள் இருக்கின்றன. பிறகு பிரம்மாவின் இரவுக்கு இதேயளவு நேரம் உள்ளது. பிரம்மா தனது வருஷக்கணக்கில் 100 வருஷங்கள் வாழ்கிறார், அதாவது மொத்தம் 311 லட்சம் கோடி (டிரில்லியன்) மனித வருஷங்கள். தற்போது பிரம்ம தேவர் 50 ஆண்டுகளை கடந்து 51 வது ஆண்டை தொடங்கி ஐம்பத்தியொராவது ஆண்டின் முதல் நாளைக் கடந்து கொண்டு இருக்கின்றார்.

ஸ்ரீமத் பாகவதத்தின்படி, நமது பிரபஞ்சம் தற்போது 155.5 லட்சம் கோடி (டிரில்லியன்) ஆண்டுகள் பழமையானது. யுக சுழற்சி காலங்களில் ஏற்படும் பல்வேறு அழிவுகளால் உலகங்கள் அழிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகின்றன. மிக சமீபத்திய அழிவுக்குப் பிறகு, நமது பூமியானது வைவஸ்வத மனுவின் தற்போதைய (மனுவின் மொத்தக் காலமாகிய 71 சதுர் யுகங்களில் 28 சதுர் யுகங்கள் கழிந்து விட்டன) காலகட்டத்தில் சுமார் 1205 லட்சம் (120.5 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் உருவாக்கப்பட்டது. எனவே, மனித நாகரிகங்கள் இந்த பூமியில் குறைந்தது 1205 லட்சம் (120.5 மில்லியன்) ஆண்டுகளாக உள்ளன. அத்துடன், 1205 லட்சம் (120.5 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு இருந்து சமஸ்கிருதம் வழக்கில் இருந்து வருகிறது. ஏனெனில், வேத நூல்கள் சமஸ்கிருத மொழியில் சொல்லப்பட்டுள்ளன. எனவே, இந்த வேத ஆதாரங்களின் அடிப்படையில், 3500 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டவர்களால் சமஸ்கிருதம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது என்ற ஆரியப் படையெடுப்பின் வாதத்தை எளிதில் தோற்கடிக்க முடியும்.

வேத அறிவானது வாய்மொழியாக சிஷ்ய பரம்பரை மூலமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 5100 ஆண்டுகளுக்கு முன்பு, கலியுகத்தின் தொடக்கத்தில் வியாச தேவரால் ஓலைச்சுவடிகளில் வேத சாஸ்திரங்கள் எழுதப்பட்டன. சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு “இந்தோ-ஆரியர்கள்” வருகைக்குப் பிறகுதான் இந்தியாவில் சமஸ்கிருத மொழி உருவாக்கப்பட்டு வேதங்கள் இயற்றப்பட்டன என்று ஆரியப் படையெடுப்பு கோட்பாடு கூறுகிறது. இந்த காலவரையானது எந்த ஆதாரமும் இல்லாது மொழியியலாளர்களின் ஒரு யூகத்தினால் அனுமானிக்கப் பட்டதாகும். ஆனால், வேதங்களும் புராணங்களும் வியாச தேவரால் சமஸ்கிருதத்தில் எப்போது தொகுக்கப்பட்டன என்று ஸ்ரீமத் பாகவதம் விளக்கமாக கூறுகிறது. எனவே, 5100 ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து வேதங்களும் மக்கள் எளிதில் மனப்பாடம் செய்வதற்காக எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டன. இந்த காலகட்டமானது ஆரிய படையெடுப்பு கோட்பாட்டிற்கு 1500 ஆண்டுகளுக்கு முந்தையது ஆகும். இந்த காலகட்ட வித்தியாசமானது இந்தியாவையும், ஏராளமான வேத சாஸ்திரங்களையும் இழிவுபடுத்துவதற்காக ஐரோப்பியர்களால் பரப்பப்பட்ட ஒரு கட்டுக்கதைதான் ஆரியப் படையெடுப்பு என்று தெளிவு படுத்துகிறது.

தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில், ஐஹோல் என்ற பண்டைய நகரம் உள்ளது, அங்கு கி.பி 634 ஆம் ஆண்டிலிருந்து இரண்டாம் புலிகேசினின் கல்வெட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டில் மகாபாரதப் போருக்குப் பிறகு எத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதைக் குறிப்பிடும் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டிலிருந்து, மகாபாரதம் 5100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், மஹாபாரத காலத்தை கி.மு. 3102 என்றும் கணிக்க முடிகிறது.

(தொடரும்)

Series Navigation<< ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 3<< ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 2ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 5 >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *