‘நமசிவாய’ மந்திரம் ஏழு காண்டங்கள் அடங்கிய கிருஷ்ண யஜுர்வேதத்தில் தைத்திரீய ஸம்ஹிதையில், நான்காம் காண்டத்தில், ருத்ர நமகத்தில் எட்டாவது அநுவாகத்தில் வருகிறது. ருத்திரம் நமகம், சமகம் என்று இரண்டு பிரிவுகளை உடையது. ஒவ்வொன்றிலும் பதினொன்று அநுவாகங்கள் [துதிகள்] இருக்கின்றன.
சிவபெருமானின் ஒரு அம்சமான ருத்திரனைக் குறித்து இத்துதிகள் பாடப்படுவதால் இதற்கு ருத்ரம்என்று பெயர். ருத்ரத்திற்கு குத்ரப் ப்ரஸ்’னம், சதாருத்ரீயம், ருத்ராத்யாயம் என்ற மற்ற பெயர்களும் உள்ளன.
யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகவேண்டும் என்று சிவபெருமானிடம் வரம்பெற்ற பத்மாசுரனை அழிக்க மோகினியாக வேடம்தரித்துவந்த விஷ்ணு, அந்த அரக்கனை, அவன் தன் தலையிலேயே கைவைக்கும்படி செய்து, அவனை அழித்தபின்னர், தாண்டவ நடனமாடி, உலகநன்மைக்காக ருத்ரயக்ஞம் செய்தார் என்று புராணங்கள் பறைசாற்றுகின்றன.