ஏப்ரல் 6, 1778ல் மார்குவெஸ்-டி-பொம்பால் என்கிற மனிதாபிமானமிக்க மந்திரியின் பேச்சினைக் கேட்டு கோவாவில் கிறிஸ்தவ மதவிசாரணைகளை நிறுத்த போர்ச்சுகீசிய அரசன் டி. ஜோஸெ, முடிவெடுத்தான். அந்த அரசாணை கிடைத்தவுடன் பிப்ரவரி 8, 1774-ஆம் வருடம் கோவாவில் இன்குசிஷன் விசாரணைகள் நிறுத்தப்படுவதாகவும், சிறையில் இருக்கும் ஹிந்துக்களையும் கிறிஸ்தவர்களல்லாத பிறமதத்தினர் அனைவரையும் விடுதலைசெய்ய இன்குசிஷன் விசாரணை நடத்தும் தலைமைப் பாதிரி உத்தரவிட்டான்.
விசாரணை நடந்துமுடியாதவர்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் ஒரு பெட்டியில் வைத்து உடனடியாக அடுத்த கப்பலில் போர்ச்சுக்கலில் இருக்கும் கவுன்சிலர் ஜெனரலுக்கு அனுப்பிவைக்க வேண்டுமெனவும், கையிருப்பில் இருக்கும் அத்தனை பணத்தையும் அரசாங்க கஜானாவுக்கும், நிலங்கள் மற்றும் பிறசொத்துக்களை கோவா கவர்னர் வசம் ஒப்படைக்கவேண்டுமெனவும், அந்தத் தகவல்கள் அனைத்தும் ரகசிய காப்பகங்களில் சேர்க்கப்படவேண்டும் எனவும் அந்த உத்தரவு சொன்னது.
பிப்ரவரி 10, 1774-அன்று மார்க்குவெஸ் பொம்பால் அரசனின் உத்தரவை மீண்டும் உறுதிசெய்து இன்குசிஷன் ஜெனரலுக்கும், கோவா கவர்னருக்கும் கடிதங்கள் அனுப்பினார். அரசனின் உத்தரவு எந்த தாமதமும் இல்லாமல் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என அந்தக் கடிதம் வலியுறுத்தியது.
அரசன் டி.ஜோஸே 1778-ஆம் வருடம் மரணமடைய, அவனைத் தொடர்ந்து முதலாம் மரியா என்பவள் பதவியேற்றாள். உடனடியாக மார்க்குவெஸ் பொம்பாலின் மந்திரி பதவியைப் பிடுங்கி அவரைத் துரத்தியடித்தாள். இதையறிந்த — கோவா இன்குசிஷனை நிறுத்தவேண்டும் எனக் கேட்ட அதே இன்குசிட்டர் ஜெனரல் குன்ஹா — இந்தியாவில் கிறிஸ்தவமதம் பெரும் அழிவில் இருப்பதால் மீண்டும் கோவாவில் இன்குசிஷனைக் கொண்டுவரவேண்டும் எனக் கேட்க ஆரம்பித்தார்.
கோவாவில் இன்குசிஷன் நீக்கப்பட்டவுடன் ஹிந்துக்களும், மதம் மாற்றப்பட்ட கிறிஸ்தவர்களும் மீண்டும் ஹிந்துப் பண்டிகைகளையும், ஆலயத் திருவிழாக்களையும் வெளிப்படையாகக் கொண்டாடிக் கொண்டிருந்ததனைக் காரணம் காட்டினார் குன்ஹா. புதிதாக ஹிந்து ஆலயங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அதன் காரணமாக ஏற்கனவே மதம்மாறிய கிறிஸ்தவர்கள் கூட்டம் கூட்டமாக மீண்டும் ஹிந்துமதத்திற்கே திரும்பிச் செல்லும் ஆபத்து இருப்பதாகவும், இதனைத் தடுப்பது மிகவும் கடினம் எனவும் காரணங்களை அடுக்கினார்.
“மக்கள் இப்போது போர்ச்சுகீசிய மொழியைப் பேசுவதில்லை. இதன் காரணமாக கிறிஸ்தவமதத்தின் மேன்மையைக் குறித்து அவர்கள் அறியாதவர்களாக மாறியதல்லாமல், போர்ச்சுகீசிய கலாச்சாரம், அரசு, மதத்தின் இவற்றின்மீது எந்தவிதமான மரியாதையும் இல்லாதவர்களாக மாறிவிட்டார்கள்; ஆகவே, உடனடியாக கிறிஸ்தவமதத்தைப் பரப்புகிற பள்ளிகளைத் துவங்கி, கிறிஸ்துவின் மேன்மையைப் பரப்ப முயலவேண்டும். ஹிந்துக்கள் மீதான இன்குசிஷன் விசாரணைகள் ஒருபோதும் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கவேண்டும்.
“ஹிந்துக்களுடன் இத்தனை நாள் ஒளிந்து கிடந்த மோசமான கிறிஸ்தவர்களும் வெளியே வந்து அந்த பொய்க்கடவுள்களை வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். கோவா மட்டுமல்லாமல் அதன் அருகாமைப் பகுதியைஸ் சார்ந்த ஹிந்துக்களும் கோவாவிற்குள் வந்து அங்கு ஒரு குளத்தினுள் மறைந்திருப்பதாகக் கருதப்படுகிறதொரு புகழ்பெற்ற ஹிந்து ஆலயத்தில் கூட்டமாகப் பிரார்த்தனைகள் செய்ய ஆரம்பித்திருக்கிறாரகள். இந்த ஆலயம் ஒரு நீர்வீழ்ச்சிக்கருகிலிருக்கும் ஒரு தென்னந்தோப்பினுள், டிரினிடி சர்ச்சிற்கு அருகில், பூமியிலிருந்து மிக ஆழத்தில் இருக்கிறது. இங்கு பிரார்த்தனைகள் செய்யவரும் ஹிந்துக்கள் உச்சரிக்கும் மந்திர சத்தங்களினாலும், இசையாலும் கோவா நகரமே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
“எல்லா அதிகாரங்களும் கொண்ட புனித பாதிரிகளை உள்ளடக்கிய, கைது செய்யவும், தண்டனைகள் வழங்கவும் அதிகாரமிருக்கும் ஒரு டிரிபியூனல் மட்டுமே இவர்களை அடக்குவதற்கு ஏதுவாக இருக்கும். அந்த அதிகாரமில்லாத டிரிபியூனல்களினால் பிரயோஜனம் எதுவுமில்லை.”
மானுவெல் மார்க்குவெஸ்-டி-அஸவிடோ என்னும் முன்னாள் இன்குசிஷன் அதிகாரியும் மீண்டும் கோவாவில் இன்குசிஷனைக் கொண்டுவரவேண்டும் என்பதில் முனைப்பாய் இருந்தார். இக்கூப்பாடு போர்ச்சுகலிலும், கோவாவிலும் உயர்ந்து ஒலிக்க ஆரம்பித்தது.
ஏப்ரல் 1779-ஆம் வருடம் கோவாவில் மீண்டும் இன்குசிஷன் விசாரணைகள் துவங்கின. முன்பைப் போல கொடூரமான தண்டனைகளைக் கொடுக்காமல் ஹிந்துக்களிடம் நைச்சியமாகப் பேசி அவர்களின் மனதை மயக்கிக் கிறிஸ்தவ மதமாற்றம் செய்வதினைப்பற்றி யோசிக்க வேண்டும் என்னும் குரல்களும் ஒலித்தன.
இன்குசிஷன் டிரிபியூனல் மேலும் முப்பது வருடங்கள் கோவா வாழ் ஹிந்துக்களைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது. இருப்பினும் முதலாவது விசாரணைகளைப் போல இல்லாமல் தண்டனைகள் மிதமாகவே இருந்தன. கிறிஸ்தவ பாதிரிகளின் மென்மையான அணுகுமுறைகளால் அருகாமைப் பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் கோவாவிற்குள் வந்து குடியேற ஆரம்பித்திருப்பதாகவும், தனது 19 ஆண்டுகால ஆட்சியில் கடுமையான முறையில் தண்டிக்கப்பட்ட எந்த கோவா ஹிந்துவையும் தான் காணவில்லையென்றும் மே 2, 1801-ஆம் வருடம் கோவா கவர்னர் எழுதிய கடிதொமொன்று கூறுகிறது. எனவே இன்குசிஷன் விசாரணைகளை மொத்தமாக நிறுத்திவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார் கவர்னர்.
பிப்ரவரி 19, 1810-ஆம் வருடம் பிரிட்டனுடன் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தின்படி கோவாவில் பிறமதங்களையும் அனுமதித்து, சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்வதாக போர்ச்சுகீசிய அரசாங்கம் ஒப்புக்கொண்டது. அதன்படி, ஜூன் 16, 1812-ஆம் வருடம் போர்ச்சுகீசிய இளவரசர், கோவாவின் வைசிராய் கோண்டெ-டி-சர்செடாஸுக்கு கோவாவில் கிறிஸ்துவின் பெயரால் நடந்த கொடும் இன்குசிஷன் விசாரணைகளை நிறுத்தி, எல்லா மத, இன மக்களை அனுமதிக்க உத்தரவிட்டார்.
வரலாற்றாசிரியர் குன்ஹா ரெவெரா, “புனித விசாரணை என்கிற பெயரில் கட்டாயப்படுத்தி ஒரு சமுதாயத்தின் மொழியை அழிப்பதன் மூலம், அந்தச் சமுதாயம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவைக்க இயலாது என்பதினை போர்ச்சுகீசிய பாதிரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் உணர்ந்து கொள்ளவில்லை. அதன் காரணமாக போர்ச்சுகீசிய பேரரசு இந்தியாவில் அழிவுண்டு கிடந்தது” என்கிறார்.
இந்தியாவில் இங்குசிஷன் விசாரணையால் ஏற்படப் போகும் பின்விளைவுகள் குறித்து போர்ச்சுகீசிய அறிஞர்கள் பலர் தொடர்ந்து அரசனை எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். டிசம்பர் 19, 1729 அன்று போர்ச்சுகீசிய வைசிராய் ஜெஹோவொ சல்தான்ஹா-ட-காமா அவரது அரசருக்கு எழுதிய கடிதமொன்று இதனை விளக்குகிறது.
“இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அரசாங்கத்தின் அழிவு கண்முன்னே தெரிகிறது. இதற்குக் காரணம் இங்கு தேவையான பொருளாதார நடவடிக்கைகள் இல்லாமல் போனது. கோவாவின் வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களான ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இங்குசிஷன் விசாரணைகளின் பயங்கரங்களைக் கண்டு அஞ்சி நடுங்கினார்கள். அவர்களின் மதச் சடங்குகள் கிறிஸ்துவுக்கு எதிரானவை என்று சொல்லப்பட்டன. ஹிந்துக்கள் கடுமையான தண்டனைகளுக்குப் பின்னும் மதம்மாற மறுத்து, அதற்குப் பதிலாக உணவும், தண்ணீரும் உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்து மரித்தார்கள். இவர்களிடையே இருந்த சாதி உட்பிரிவுகளும் இதனை எளிதாக்காமல் மிகவும் சிக்கலாக்கின. இந்தத் தேவையற்ற வன்முறையே கோவாவில் எந்தவொரு பொருளாதார நடவடிக்கைகளும் இயங்காமல் போனதற்கு முக்கிய காரணம் எனத் தங்களுக்கு நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.”
வைசிராய் மேலும் சொல்கையில், இந்தியாவின் பிற பகுதிகளைப் போல அல்லது போர்ச்சுகீசிய மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் இருக்கு நீதி பரிபாலங்கள் குறித்த நல்ல அபிப்ராயம் இந்த வியாபாரிகளுக்கு இருந்தாலும், கடுமையான மதத் தண்டனைகளுக்கு அஞ்சியவர்களாக இருந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார். தங்களின் மதச் சடங்குகளைச் சுதந்திரமாகப் பின்பற்ற விடாத கோவாவில் இருப்பதனைவிடவும் நீதி பரிபாலனம் சரியில்லாத பிறபகுதிகளுக்கு அல்லது ஃப்ரெஞ்சுக்காரர்கள் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் ஆளும் பகுதிகளுக்குச் செல்வதனையே அவர்கள் விரும்பினார்கள்.
அதேசமயம் அவர்கள் தங்களின் பூர்வீகமான போர்ச்சுகீசிய பகுதிகளுக்கு வருவதனை மனதளவில் விரும்பினார்கள். கிறிஸ்தவமதத்தைத் திணிக்கும் இன்குவிஷனையும் கடும் தண்டனைகளையும் நீக்கினாலன்றி அவர்கள் கோவா பகுதிக்குத் திரும்பிவருவது எளிதில்லை. அப்படியே அனுமதித்தாலும் தங்களின் மதத் திருவிழாக்களையோ அல்லது திருமணங்களையோ பொதுவெளியில் கொண்டாட இயலாமல் பூட்டிய வீட்டிற்குள் கொண்டாடுவதனையும் அவர்கள் வெறுத்துக்கொண்டிருந்தார்கள். தங்களின்மீது போலித்தனமான குற்றச்சாட்டுகளைக் கூறுபவர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் புனித விசாரணைகளின் போது அவர்களால் எடுக்க இயலாமல் துன்புற்றுக் கொண்டிருந்ததுவும் இன்னொரு காரணம்.