சொற்ப இருக்கைகளே நிரம்பியிருந்த பெங்களூர் திரையரங்கில் தங்கலான் திரைப்படத்தை நேற்று மாலை பார்த்தேன். இந்த சினிமா, இதன் அரசியல் பற்றி ஏற்கனவே நிறைய எழுதப்பட்டு விட்டது. இருந்தாலும், எனது சில அவதானிப்புகளைப் பதிவு செய்யவேண்டியுள்ளது.
19ம் நூற்றாண்டின் பின்பாதியில் கோலார் தங்கச்சுரங்கம் உருவானதும், அதில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களைச் சேர்ந்த பட்டியலின மக்கள் தொழிலாளர்களாக வேலைசெய்ததும், அதனை ஒட்டி அங்கு ஆதிதிராவிடர் சமூக உரிமை இயக்கங்கள் உருவாகி வளர்ந்ததும் தெளிவாகப் பதிவு செய்யப் பட்டுள்ள சமீபகாலத்திய வரலாறு. இந்த வரலாற்றை ஒரு காத்திரமான திரைப்படமாக எடுப்பதற்கு உதவும் வகையில் ஏராளமான தகவல்களும் பதிவுகளும் உள்ளன. ஆனால் இந்த விஷயத்தைக் கதைக் கருவாக தேர்ந்தெடுத்த இயக்குனர் பா.ரஞ்சித் மேம்போக்காக, லேசாக அதைத் தொட்டுக் கொண்டு, மற்றபடி, தான் முன்வைக்க விரும்பும் தலித் அரசியல் சித்தாந்தத்திற்கு ஆதரவாக சுவாரஸ்யமான கதையம்சத்துடன் உருவாக்கியுள்ள ஒரு பிரசாரப் படம் இது. நேரடி வரலாற்றுக்கு மாறாக, கற்பனையான தொன்மங்கள், மாய யதார்த்தம் ஆகியவற்றைக் கலந்தடித்ததற்கான காரணம் இதுதான்.
தங்கலான் தன் குழந்தைகளுக்குச் சொல்லும் நாட்டுப் புறத் தொன்மக் கதைக்கான “ஐடியா”வை சமீபத்திய வெற்றிப்படமான “காந்தாரா”விலிருந்து இயக்குனர் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கருதலாம். கானகவாசிகளின் நிலத்தையும் உரிமைகளையும் காக்கும் தர்ம நீதித் தெய்வம் என்பது அந்தத் தொன்மத்தின் ஆக்கபூர்வமான சித்தரிப்பு. அந்தக் கதை எந்த நிரந்தர எதிரிகளையும் கட்டமைப்பதில்லை. அதற்கு மாறாக, தங்கலான் சொல்லும் தொன்மக் கதையில் வரும் “முனி” புத்தரும், நாகர்களும், ஆரத்தியும் வெறுப்பரசியல் சாதனங்களாகவே எஞ்சி விடுகின்றனர். காந்தாராவில் தெய்வத்தின் ஆணையால் மன்னன் மனமுவந்து நிலத்தை கானக மக்களுக்கு உரிமையாக்குகிறான். ஆனால் தங்கலானின் முப்பாட்டன் வர்ணாசிரமத்தால் அடிமையாக்கப் பட்டதாகவும், நிலம் தங்களிடமிருந்து பிடுங்கி மேல் வர்ணத்தினருக்கு கொடுக்கப் பட்டதாகவும் நம்புகிறான். அதனால் உருவான வெறுப்பை தனது ரத்தத்திலேயே கலந்து தலைமுறைகளுக்கு கடத்துகிறான். கானக மண்ணிலேயே இயல்பாக உருவான காந்தாராவின் தொன்மம் போல அல்லாமல், அயோத்திதாசர் (1845-1914) என்பவரின் கட்டற்ற கற்பனையில் எழுந்த இனவாத கட்டுமானம் கொண்ட டுமீல் புராணங்களிலிருந்து பா.ரஞ்சித் உருவாக்கியுள்ளது தங்கலானின் தொன்மம். இந்த வேறுபாடு முக்கியமானது.
கதை நடைபெறும் காலகட்டத்தில், பிரிட்டிஷார் உருவாக்கிய செயற்கைப் பஞ்சங்களாலும், வரிச்சுமையாலும், பாரம்பரிய விவசாயம், நெசவு முதலான பல சுதேசித் தொழில்கள் அழிந்ததாலும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் பிழைப்புத் தேடி கூட்டம் கூட்டமாக புலம்பெயர்ந்து கொண்டே இருந்தனர். தமிழ்நாட்டிலிருந்தே இலங்கை , பர்மா, ஃபிஜித்தீவுகள், மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா, போன்ற தூரதேசங்களுக்குப் புலம் பெயர்ந்து, கரும்பு, தேயிலை, ரப்பர் தோட்டங்களிலும், சுரங்கங்களிலும் கடும் உடலுழைப்பைக் கோரும் வேலைகளைச் செய்யும் நிலைக்கும், அடிமைத் தனமான வாழ்க்கைச் சூழலுக்கும் தள்ளப் பட்டனர். இவர்களில் கணிசமானவர்கள் கிறிஸ்தவ மதமாற்றத்திற்கும் ஆட்படுத்தப் பட்டனர். இதில் பல சாதிகளைச் சேர்ந்தவர்களும் இருந்தனர் என்பதே உண்மை. ஏற்கனவே சமூகத்தின் கீழ்த்தட்டில் இருந்த பட்டியல் சாதியினர் எண்ணிக்கையில் சற்று அதிகம் என்று வேண்டுமானால் கூறலாம். இவ்வாறு தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யச் சென்றவர்கள் சந்தித்த கொடுமைகளையும், அவலங்களையும் உணர்ச்சிகரமாக சித்தரித்த பரதேசி திரைப்படம் நினைவிருக்கலாம்.
மேற்கூறப்பட்ட பொருளாதார நசிவு தான் இதற்கான முதன்மையான காரணமே அன்றி, சாதிக் கொடுமைகள் அல்ல என்பது கவனிக்க வேண்டியது. ஆனால், இவ்வாறு புலம்பெயர்ந்த பட்டியல் சாதியினர் கிராமப்புற சாதி அடக்குமுறையிலிருந்து மீண்டதும், கல்வி வாய்ப்புகளைப் பெற்றதும் இதன் பக்க விளைவாக நிகழ்ந்தது என்பதும் உண்மை. ஆனால், கிராமத்து பண்ணையார்களின் அடிமைத் தளையில் இருந்து தப்புவதற்காகவே பட்டியல் சமுதாயத்தினர் ஊர்களை விட்டு வெளியேறினர் என்பதற்கான சான்றுகள் இல்லை. கோலார் தங்கவயலுக்கு பிழைப்பு தேடிச்சென்ற தமிழர்களும் அவ்வாறு வரவில்லை. எனவே, படத்தில் காண்பிக்கப் படும் இத்தகைய சித்தரிப்பு ஆதாரபூர்வமானதல்ல.
ஆரம்பகட்ட விபத்துக்கள், பிரசினைகளுக்குப் பிறகு கோலார் தங்கச்சுரங்கம் நிறுவப்பட்டு அங்கு பட்டியல் சமுதாயத்தினரின் தொழிலாளர் குடியிருப்புகள் பெருக ஆரம்பித்தன. கிறிஸ்தவ மிஷனரிகள், ஹிந்து சீர்திருத்தவாதிகள் குறிப்பாக வைணவர்கள் (மதுரைப்பிள்ளை), ஆல்காட் போன்ற ஐரோப்பியர்களால் மீள்-கட்டமைக்கப்பட்டுவந்த நவீன பௌத்தமதத்தின் பிரசாரகர்கள் (அயோத்திதாசர்) ஆகிய மூன்று தரப்பினரும் தங்கள் மதக் கருத்துக்களை தொழிலாளர்களிடையே பிரசாரம் செய்தனர். கல்வி, சமூகப் பணிகளிலும் ஈடுபட்டனர். இவர்களிடையே ஒருவிதமான போட்டியும் நிலவியது. ஒட்டுமொத்தமாக இதனால் அங்குள்ள தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டது என்றே கருதலாம். மூன்று தரப்பினருமே முழுமையான பிரிட்டிஷ் ஆட்சி ஆதரவாளர்களாகவே இருந்தனர். ஆயினும் இந்த மூன்று தரப்பினரில், கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு பிரிட்டிஷாரின் அதிகபட்ச நேரடி உதவிகளும் ஆதரவும் கிடைத்தன. அதற்கடுத்து பௌத்த பிரசாரகர்களுக்கும் பிரிட்டிஷ் ஆதரவு இருந்தது. ஆனால் ஹிந்து சீர்திருத்தவாதிகளுக்கு எந்த அரசு ஆதரவும் இல்லை. மதுரைப்பிள்ளை தனது சொந்த உழைப்பாலும், தொழில் திறமையாலும் வர்த்தகத்தில் வெற்றிபெற்று, அதனால் ஈட்டிய செல்வத்தை வைத்து தனது சமூகப் பணிகளை செய்தார். ஒப்பீட்டில் மிக அதிகமாக சமூகப் பங்களிப்பு செய்த தரப்பு அவருடையதே.
தங்கலான் படத்தில் இந்த மூன்று தரப்பினரையும் குறியீட்டு ரீதியாக இயக்குனர் காட்ட முயற்சித்திருக்கிறார். பௌத்தம் பட்டியல் சமுதாயத்தினரின் பூர்வமதமாக தொன்மத்தில் உள்ளது. கிராமத்தில் தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்து வைத்துள்ள நாமம், பூணூல் தரித்த வைணவர் ஒருவித கோமாளித்தனத்துடன் வருகிறார். கிறிஸ்தவ மத பிரதிநிதியான பிரிட்டிஷ்காரர் முதலில் ரட்சகர், பின்பு பேராசை பிடித்த, கொல்லப்படவேண்டிய ஆக்கிரமிப்புக் காரர் என்று இரு கோணங்களிலும் காட்டப் படுகிறார். இயக்குனரின் அரசியல் தெளிவாக இந்துவெறுப்பு தன்மை கொண்ட அயோத்திதாசர் பாணி பௌத்தத்தின் பக்கம் சார்ந்துள்ளது. இந்துப் பண்பாட்டு அம்சங்களை இயக்குனர் திட்டமிட்டு விலக்க விரும்பினாலும், நாகர்கள் அகோரிகள் போன்று தெரிவதைத் தவிர்க்க முடியவில்லை. தங்கத்தைக் காக்கும் தொன்மக் குடித்தலைவர்களுக்கு பொன்னன், பொன்னி, கனகம்மா, நாகம்மா, நாகவல்லி, மானஸா என்றெல்லாம் பெயர் வைத்திருக்கலாம். ஆனால் லத்தீன் மொழியில் பொன்னைக் குறிக்கும் சொல்லிலிருந்து எடுத்து ஆரன், ஆரத்தி என்று வைத்துள்ளதாக படத்தின் வசனகர்த்தா கூறியுள்ளார். இந்த மண்ணின் மைந்தர்களை இந்த மண்ணின் இந்துப் பண்பாட்டிலிருந்து அன்னியப் படுத்துவதை எவ்வளவு நுட்பமாக சிந்தித்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
மற்றபடி, ஒரு சினிமாவாக தங்கலான் நல்ல திரைப்படம் என்றே மதிப்பிடப் படும். “ஒவ்வொரு காட்சியும் கவனத்துடனும், நேர்த்தியுடனும் செதுக்கப் பட்டுள்ளது. பார்ப்பவர்கள் மனதில் சரியான அளவில் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளன” என்று Aravindan Neelakandan ஸ்வராஜ்யாவில் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிடுவது மிகச்சரி என்பதைப் படத்தை கூர்ந்து பார்ப்பவர்கள் உணரமுடியும். விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் அனைத்து நடிகர்களும் அருமையாக நடித்துள்ளனர். கிராமத்துச் சேரி, வயல், மலை, காடு, மக்கள் பேசும் வட்டார வழக்கு மொழி எல்லாம் கலாபூர்வமாக, சிறப்பாக காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. பின்னணி இசையும் நன்றாக உள்ளது. தங்கலான் அவ்வப்போது “சன்னதம்” வந்து பேசும் வசனங்கள் மந்திர உச்சாடனம் போல கவித்துவமாக உள்ளன. தமிழ் சினிமாக்களின் சராசரி பார்வையாளர்களுக்கு இது புரியும், ரசிக்கப் படும் என்ற இயக்குனரின் நம்பிக்கை பாராட்டுக்குரியது. ஆனால், காட்டுக்குள் தங்கம் தேட வழிகாட்டிச் செல்லும்போது “சாத்தன்” என்று தமிழில் தங்கலான் கூறுவது Satan என்று ஆங்கில சப்டைட்டில்களில் வருவதைப் பார்த்து இதுகுறித்து சந்தேகம் ஏற்படுகிறது. போதாக் குறைக்கு கிளமெண்ட் துரை கூட வரும் கிறிஸ்தவ ஆசாமி வேறு தங்கலானை Satan என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார் (சாத்தன் என்பது புத்தரின் பெயர்களில் ஒன்று. சம்ஸ்கிருத அகராதியான அமரகோசத்திலும், தமிழ் இலக்கியங்களிலும் புத்தரைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது).
இந்தப் படத்தின் அரசியல் வெறுப்பு ரீதியானது, இது முன்வைக்கும் வரலாற்றுக் கதையாடல் பொய்யானது என்பதை நிறுவுவது கடினமல்ல. அதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. மதுரைப்பிள்ளை, சுவாமி சகஜானந்தர், இரட்டைமலை சீனிவாசனார், எம்.சி.ராஜா முதலான தலித் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் உள்ளன.
அதுபோக, தலித்களுக்கென்றே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மாபெரும் சான்றோர்களும் உண்டு. உதாரணமாக, கோபிசெட்டிபாளையத்தில் 600 ஏக்கர்களுக்கு மேல் சொத்து கொண்ட பெரும் நிலக்கிழாராகப் பிறந்து, அத்தனையையும் ஹரினங்களின் கல்வி, மேம்பாடு, உரிமை மீட்பு ஆகிய பணிகளுக்காகவே அர்ப்பணித்து, சாகும்போது ஒரு செண்ட் நிலம் கூட இல்லாமல் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியர் ஜி.எஸ்.லட்சுமண ஐயரின் வாழ்க்கை ஒரு தியாக காவியம். ஐயரின் வீட்டில் ஹரிஜனங்கள் சமையலறை வரை சகஜமாக சென்று வருவதைக் கண்டு துணுக்குற்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர், ஐயரைக் கடிந்து கொண்டு எங்களது வீடுகளில் இப்படி நடப்பதைக் கற்பனை கூட செய்ய முடியாது என்றாராம். இதற்காக உள்ளூர் புரோகிதர்களால் பகிஷ்கரிக்கப் பட்ட ஐயர், அதற்காக தன் மதத்தை வெறுக்கவில்லை. தஞ்சையிலிருந்து தன் நன்மனத்தை மதிக்கும் புரோகிதர்களை வரவழைத்து தர்ப்பணங்களையும் சிராத்தத்தையும் நடத்தியிருக்கிறார். ஐயர் வீட்டில் அட்டகாசமான உபசரிப்பைப் பெற்று லோட்டா முழுக்க காபியை ரசித்துக் குடித்துவிட்டு அன்று மாலையே பொதுக்கூட்டத்தில் பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்று பேசிய ஈ.வே.ராவையும் கூட அன்புடன் அரவணைத்தவர் ஐயர். ஈவேராவின் சிலைகள் ஊருக்கு ஊர் நின்றுகொண்டிருக்க, சமீபத்தில் 2022 வரை தமிழ்நாட்டில் ஐயருக்கு ஒரு சிலை கூட இல்லை.
இவர்களின் வரலாறுகளை எல்லாம் நாம் திரைப்படமாக்காத வரை தங்கலான்கள் தான் திரையில் கோலோச்சுவார்கள். அதற்கான தீர்வு உண்மை வரலாற்றை உரக்க எடுத்துச் சொல்வதில் உள்ளது. பா.ரஞ்சித்களையும் மாரி செல்வராஜ்களையும் திட்டுவதிலும் வசைபாடுவதிலும் அல்ல.